|
|
15 ஜூன் 2019 |
|
|
பாஸ்கா காலம்
10ம் வாரம் - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
பாவம் அறியாத கிறிஸ்துவைப் பாவநிலை ஏற்கச் செய்தார்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து
வாசகம் 5: 14-21
சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்துவின் பேரன்பே எங்களை ஆட்கொள்கிறது.
ஏனெனில் ஒருவர் அனைவருக்காகவும் இறந்தார். அனைவரும் அவரோடு இறந்தனர்.
இது நமக்குத் தெரியும். வாழ்வோர் இனி தங்களுக்கென வாழாமல் தங்களுக்காக
இறந்து உயிர்பெற்றெழுந்தவருக்காக வாழ வேண்டும் என்பதற்காகவே
அவர் அனைவருக்காகவும் இறந்தார்.
ஆகவே இனிமேல் நாங்கள் எவரையும் மனித முறைப்படி மதிப்பிடுவது இல்லை;
முன்பு நாங்கள் கிறிஸ்துவையும் மனித முறைப்படிதான் மதிப்பிட்டோம்.
ஆனால் இப்போது அவ்வாறு செய்வதில்லை. எனவே ஒருவர் கிறிஸ்துவோடு
இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப் பட்டவராய் இருக்கிறார்.
பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ! இவை யாவும் கடவுளின் செயலே.
அவரே கிறிஸ்துவின் வாயிலாக நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்;
ஒப்புரவாக்கும் திருப்பணியையும் நமக்குத் தந்துள்ளார். உலகினரின்
குற்றங்களைப் பொருட்படுத்தாமல் கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக
அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை
எங்களிடம் ஒப்படைத்தார். எனவே நாங்கள் கிறிஸ்துவின் தூதுவர்களாய்
இருக்கிறோம். கடவுளே எங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுக்கிறார்.
ஆகவே கடவுளோடு ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவின் சார்பில்
நாங்கள் மன்றாடுகிறோம். நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு
கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்தார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா
103: 1-2. 3-4. 8-9. 11-12 (பல்லவி: 8a)
=================================================================================
பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.
1 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது
திருப்பெயரை ஏத்திடு! 2 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய
கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! பல்லவி
3 அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம்
குணமாக்குகின்றார். 4 அவர் உன் உயிரைப் படுகுழியினின்று
மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச்
சூட்டுகின்றார். பல்லவி
8 ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும்
உள்ளவர். 9 அவர் எப்பொழுதும் கடிந்துகொள்பவரல்லர்; என்றென்றும்
சினங்கொள்பவரல்லர். பல்லவி
11 அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று
விண்ணளவு போன்று உயர்ந்தது. 12 மேற்கினின்று கிழக்கு எத்துணைத்
தொலைவில் உள்ளதோ; அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து
அவர் அகற்றுகின்றார். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
திபா 119: 36a,29b
அல்லேலூயா, அல்லேலூயா! உம் ஒழுங்குமுறைகளில் என் இதயம் நாட்டங்கொள்ளச்
செய்யும்; உமது திருச்சட்டத்தை எனக்குக் கற்றுத்தாரும். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ஆணையிடவே வேண்டாம்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 33-37
அக்காலத்தில் இயேசு கூறியது:
"பொய்யாணை இடாதீர். ஆணையிட்டு
நேர்ந்து கொண்டதை ஆண்டவருக்குச்
செலுத்துவீர்" என்று முற்காலத்தவர்க்குக்
கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ஆணையிடவே வேண்டாம்.
விண்ணுலகின் மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனென்றால் அது கடவுளின்
அரியணை. மண்ணுலகின் மேலும் வேண்டாம்; ஏனெனில் அது அவரின் கால்மணை.
எருசலேம் மேலும் வேண்டாம்; ஏனெனில் அது பேரரசரின் நகரம். உங்கள்
தலைமுடியின் மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனெனில் உங்கள் தலைமுடி
ஒன்றையேனும் வெள்ளையாக்கவோ கறுப்பாக்கவோ உங்களால் இயலாது.
ஆகவே நீங்கள்
பேசும் போது "ஆம்' என்றால் "ஆம்' எனவும் `இல்லை'
என்றால் "இல்லை' எனவும் சொல்லுங்கள். இதைவிட மிகுதியாகச் சொல்வது
எதுவும் தீயோனிடத்திலிருந்து வருகிறது."
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
2
கொரிந்தியர் 5: 14-21
இயேசு நமக்காக? நாம் யார்க்காக?
நிகழ்வு
ஒருசமயம் கர்ம வீரர் காமராசரைச்
சந்திக்க மாவட்ட ஆட்சியர் ஒருவர் வந்திருந்தார். அவர் வந்ததும்
காமராசர் தன்னுடைய உதவியாளரைக் கூப்பிட்டு அவரிடம், ஒரு தேநீர்
கொண்டுவருமாறு கேட்டுகொண்டார். அவரும் சூடாகத் தேநீரைக் கொண்டுவந்து,
மாவட்ட ஆட்சியர்க்கு முன்பாக வைத்துவிட்டுப்போனார்.
மாவட்ட ஆட்சியர் தனக்கு முன்பாக வைக்கப்பட்ட தேநீரைக் குடிக்காமல்,
காமராசரைப் பார்ப்பதும் தேநீர் குவளையைப் பார்ப்பதுமாக இருந்தார்.
இதைக் கண்ட காமராசர் அவரிடம், "நீங்கள் ஏன் உங்கட்கு முன்பாக
வைக்கப்பட்டிருக்கும் தேநீரைக் குடிக்காமல் என்னைப் பார்ப்பதும்
தேநீர் குவளையைப் பார்ப்பதுமாக இருக்கின்றீர்கள். என்னவாயிற்று?"
என்று கேட்டார். உடனே மாவட்ட ஆட்சியர் அவரிடம், "அது ஒன்றுமில்லை...
தேநீரில் ஈ
ஒன்று கிடக்கின்றது. அதனால்தான் தேநீரைக் குடிக்காமல்
பார்த்துக்கொண்டிருக்கின்றேன்" என்றார்.
உடனே காமராசர், மாவட்ட ஆட்சியர்க்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த
தேநீர்க் குவளையைப் பார்த்தார். அதில் ஓர் ஈயானது
துடித்துக்கொண்டிருந்தது. உடனே அவர் அந்த ஈயைத் தன் விரலால் எடுத்துப்
பறக்கவிட்டார். பின்னர் அவர் அந்த மாவட்ட ஆட்சியரிடம்,
"தேநீரில் ஈ கிடக்கின்றது என்று உங்கள் பக்கமிருந்து
யோசித்துக்கொண்டிருக்கும் நீங்கள், அந்த ஈயைக் காப்பாற்றவேண்டும்
என்று அதனுடைய பக்கமிருந்து யோசிக்கவில்லையா... இப்படியே நீங்கள்
உங்களைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தால், என்றைக்குக் நீங்கள்
மக்களைப் பற்றி யோசிக்கப் போகிறீர்கள்? முதலில் உங்களைப் பற்றி
யோசிப்பதையும் கவலைப்படுவதையும் நிறுத்திவிட்டு, மக்களை பற்றிக்
கவலைப்படுங்கள். அதுதான் ஒரு மக்கள் தலைவனுக்கு அழகு" என்றார்.
இந்த நிகழ்வில் வரும் மாவட்ட ஆட்சியரைப் போன்றுதான், இவ்வுலகில்
இருக்கின்ற பலரும் தங்களைக் குறித்து மட்டும் யோசித்துக்
கொண்டிருக்கின்றார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒருவர் பிறரைக்
குறித்தும் கடவுளைக் குறித்தும் யோசித்து, கடவுட்குப் பெருமை
சேர்க்கக்கூடிய வாழ்க்கை வாழ்வது மிகவும் தேவையானதாக இருக்கின்றது.
இதைக் குறித்து இன்றைய வாசகம் மிக அழகாக எடுத்துச் சொல்கின்றது.
நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவு
செய்வோம்.
நமக்காக இறந்த இயேசு
இன்றைய முதல் வாசகத்தில் பவுல்,
கொரிந்து நகர மக்களிடம், இயேசு நமக்காக இறந்தார் என்று
குறிப்பிடுப்பிடுகின்றார். இப்படிக் குறிப்பிட்டுவிட்டுத் தொடர்ந்து
அவர்களிடம், வாழ்வோர் இனி, தங்கட்கென்று வாழாமல், தங்கட்காக
இறந்து உயிர்த்தெழுந்தவர்க்காக வாழவேண்டும் என்றும்
குறிப்பிடுகின்றார்.
பவுல் கூறுகின்ற இவ்வார்த்தைகளில் இரண்டு உண்மைகள் அடங்கியிருகின்றன.
ஒன்று, இயேசு நமக்காக இறந்தது. இது இறைவாக்கினர் எசாயா நூலில்
வருகின்ற, "அவரோ நம் குற்றங்கட்காகக் காயமடைந்தார்; நம் தீச்செயல்கட்காக
நொறுக்கப்பட்டார்" (எசா 53: 5) என்ற வார்த்தைகளை நினைவுபடுத்துவதாக
இருக்கின்றது. உண்மையில் இயேசு நமக்காகவே இறந்தார்.
பவுல் கூறுகின்ற இவ்வார்த்தைகளில் வெளிப்படும் இரண்டாவது உண்மை,
இயேசு நமக்காக வாழ்ந்தார் எனில், நாம் அனைவரும் அவர்க்காக வாழவேண்டும்
என்பதாகும். அவர்க்காக வாழவேண்டும் என்பதை அவருடைய விழுமியங்கட்காக
வாழவேண்டும் என்று எடுத்துக்கொள்ளலாம். ஆகையால், யார்
யாரெல்லாம் இயேசுவின் சீடர்களாக இருக்கின்றார்களோ, அவர்களெல்லாம்
இயேசுவுக்காகவும் அவருடைய விழுமியங்கட்காகவும் வாழ்வது மிகவும்
இன்றியமையாததாகும். இன்றைக்குப் பலர் தானுண்டு, தன்னுடைய
குடும்பம் உண்டு என்று சுயநலத்தோடு வாழ்வதைப் பார்க்க முடிகின்றது.
இத்தகையோர் இன்றைய முதல் வாசகம் சொல்லக்கூடிய செய்திகளைக் மனதில்
வாங்கிக்கொள்வது நல்லது.
கிறிஸ்துவோடு இணைந்த ஒவ்வொருவரும் புதுப்படைப்பு
ஆகிறார்கள்
இயேசுவின் சீடர்களாக இருக்கும் ஒவ்வொருவரும் தங்கட்காக வாழாமல்,
இயேசுவுக்காக வாழவேண்டும் என்று சொன்ன பவுல், இக்கருத்திற்கு
வலுசேர்க்கும் வகையில், "கிறிஸ்துவோடு இணைத்துள்ள ஒவ்வொருவரும்
புதிதாகப் படைக்கப்பட்டவர்கள் ஆகிறார்கள்" என்கின்றார்.
தன் குடும்பம், தன் இனம் என்று பழைய மனித இயல்போடு வாழும் மனிதர்கள்,
ககிறிஸ்துவோடு இணைவதன்மூலம் புதுப்படைப்பாகிறார்கள். அப்படிப்பட்டவர்கள்
தங்கட்காக வாழாமல், தங்கட்காக வாழ்ந்து இறந்த கிறிஸ்துவுக்காக
வாழபவர்கள் ஆகிறார்கள். நாமும் இறைவேண்டலின் வழியாகவும் அருளடையாளங்களின்
வழியாகவும் இணைந்திருக்கின்றோம் என்றால், நாம் நமக்காக வாழாமல்,
கிறிஸ்துவுக்காக வாழ்வது மிகவும் இன்றியமையாததாக இருக்கின்றது.
சிந்தனை
'இனி வாழ்பவன் நான் அல்ல;
கிறிஸ்துவே என்னுள் வாழ்கின்றார்' (கலா 2:20) என்பார் பவுல்.
ஆகவே, நாமும் பவுலைப் போன்று கிறிஸ்து நமக்குள்
வாழ்ந்துகொண்டிருக்கின்றார் என்ற உணர்வோடு அவர்க்காவும் அவருடைய
விழுமியங்கட்காகவும் வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 5: 33-37
"நீங்கள் பேசும்போது 'ஆம்'
என்றால் 'ஆம்' எனவும் 'இல்லை' என்றால்
'இல்லை' எனவும் சொல்லுங்கள்"
நிகழ்வு
ஓரூரில் புதிதாய் ஒரு பாலம்
கட்டியிருந்தார்கள். அந்தப் பாலத்தின் திறப்புவிழாவை மிகப் பிரமாண்டமாக
நடத்த ஏற்பாடு செய்தார்கள். எனவே விழாக்குழுவினர் பாலத்தின் திறப்புவிழாவை
முன்னிட்டு கார்ப்பந்தயப் போட்டி நடத்துவதென்றும் அதற்கு மாவட்ட
ஆட்சியர், வட்டாட்சியர், காவல்துறை ஆய்வாளர் போன்ற பெரிய பெரிய
ஆட்களைச் சிறப்பு விருந்தினர்களாக அழைப்பது என்றும் முடிவு
செய்தார்கள். பாலம் திறக்கப்படும் நாளும் வந்தது. அழைப்புப்
பெற்ற எல்லாச் சிறப்பு விருந்தினர்களும் வருகை புரிந்திருந்தனர்.
குறிப்பிட்ட நேரத்தில் பாலம் திறக்கப்பட்டது. எல்லாருடைய முகத்திலும்
மகிழ்ச்சி கரை புரண்டு ஓடியது.
பாலம் திறக்கப்பட்டதையடுத்து, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போன்று
கார் பந்தயப் போட்டி தொடங்கியது. போட்டியை விழாவிற்கு வருகை
புரிந்திருந்த வட்டாட்சியர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
முன்னதாக போட்டியில் நூறாவது இடத்தில் வரும் கார்க்கு பத்தாயிரம்
ரூபாய் பரிசு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே
போட்டியில் கலந்துகொண்ட எல்லாரும் காரை மெதுவாக ஓட்டினர். நேரம்
ஆக ஆக ஒவ்வொரு காராக இலக்கை நோக்கி வந்தது. பத்தாவது கார், ஐம்பதாவது
கார் வரிசையில் தொண்ணூற்று ஒன்பதாவது காரை அடுத்து நூறாவது
கார் வந்தபோது சூழ்ந்திருந்த எல்லாரும் அந்தக்காரை ஒட்டிக்கொண்டு
வந்த நபரை வாழ்த்தி வரவேற்றனர்.
இதையடுத்து போட்டியில் நூறாவது இடத்தைப் பிடித்தவர்க்குப் பரிசு
வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பரிசினை விழாவிற்கு வந்திருந்த
காவல்துறை ஆய்வாளர்தான் வழங்கினார். அவர் பரிசு பெற்ற நபரிடம்
மிகவும் உற்சாகமாக, "தம்பி! இந்தப் பத்தாயிரம் உரூபாயை வைத்து
என்ன செய்யப்போகிறாய்?" என்று கேட்டார். "ம்ம்ம்... இந்தப் பத்தாயிரம்
ரூபாயை வைத்து ஓட்டுநர் உரிமம் - லைசென்ஸ் - எடுக்கப்
போகிறேன்" என்றான் அவன். "என்னது லைசென்ஸ் இல்லாமல்தான் வண்டியை
ஓட்டிக்கொண்டு வந்தாயா! இப்போதே நட காவல்நிலையத்திற்கு" என்றார்
காவல்துறை ஆய்வாளர்.
இதை அந்த ஓட்டுநரோடு வண்டியில் வந்த அவருடைய நண்பர்
கேட்டுவிட்டு, "ஐயா! இவன் குடிபோதையில் உளறுகிறான்.
விட்டுவிடுங்கள்" என்றான். "ஓ! ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வண்டி
ஓட்டுவதே பெரிய குற்றம். இதில் குடித்துவிட்டு வேறு வண்டியை ஓட்டுகிறாயா...
ஒழுங்கு மாதிரியாய் காவல் நிலையத்திற்கு நட" என்றார் காவல்துறை
ஆய்வாளர். இதைக்கேட்ட அந்த ஓட்டுநரோடு வண்டியில் வந்த அவருடைய
இன்னொரு நண்பர்க்குத் திக்கென்று ஆகிவிட்டது. எனவே அவன் காவல்துறை
ஆய்வாளரிடம் சென்று, "ஐயா! என் நண்பன் இவனிடம் 'சாலையில் உள்ள
காரைத் திருடாதடா, திருடாதடா' என்று படித்துப் படித்துச்
சென்னான். நான் சொன்னதை எங்கே கேட்டான்!. இப்போது உங்களிடம்
மாட்டிக் கொண்டு முழிக்கிறான்" என்றான்.
மூன்றாவது ஆள் சொன்னதைக் கேட்டு காவல்துறை ஆய்வாளர்க்கு ஒரு
கணம் நெஞ்சே வெடித்து விட்டது. இருந்தாலும் சுய நினைவு பெற்று
அவர், அந்த ஓட்டுநரிடம், "ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வண்டியை ஓட்டியது
முதல் குற்றம். குடித்து விட்டு வண்டியை ஓட்டியது இரண்டாவது
குற்றம். இவற்றைக் கூடப் பொறுத்துக் கொள்ளலாம். அடுத்தவருடைய
வண்டியை திருடியிருக்கிறாயே அது மிகப்பெரிய குற்றம். அதனால்
உனக்கு மன்னிப்பே கிடையாது" என்று சொல்லி அவர் அவனைக் காவல
நிலையத்திற்கு இழுத்துக் கொண்டு போனார்.
அர்த்தமற்ற பேச்சு ஆபத்தில்தான் கொண்டு போய்ச்சேர்க்கும் என்ற
உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு, நற்செய்தியில் இயேசு
கூறும் "உங்கள் பேச்சு ஆம் என்றால் எனவும் இல்லை என்றால் இல்லை
என்று இருக்கட்டும்" என்ற வார்த்தைக்கு அர்த்தம் சேர்ப்பதாக இருக்கின்றது
தீயோனிடத்திலிருந்துதான் மிகுதியானவை வரும்
நற்செய்தியில் இயேசு,
'பொய்யானை இடாதீர்' (இச 23:33) என்ற பழைய ஏற்பாட்டுக் கட்டளையைக்
குறித்துப் பேசும்போது, எதன்மீதும் அது விண்ணோ, மண்ணோ, எருசலமோ,
தலைமுடியோ எதுவாக இருந்தாலும் அதின்மீது ஆணையிட வேண்டாம் என்று
சொல்கின்றார். அதற்கு அவர் இரண்டு காரணங்களைச் சொல்கின்றார்.
முதலவாது காரணம் மனிதர்க்கு எதன்மீதும் அதிகாரம் கிடையாது என்பதாகும்.
எல்லாவற்றின்மீதும் கடவுட்குத்தான் அதிகாரம் இருக்கின்றது, அதற்கடுத்து
இயேசுவுக்குத்தான் அந்த அதிகாரம் இருக்கின்றது. ஆகவே, மனிதர்கள்
எதன்மீதும் ஆணையிடுவதற்குத் தகுதியில்லாதவர்கள்.
மனிதர்கள் எதன்மீதும் ஆணையிடக்கூடாது என்பதற்கு இரண்டாவது காரணம்,
நேர்மை, உண்மையை விடுத்து மிகுதியாக வருவதெல்லாம் தீயோனிடமிருந்துதான்
வரும் என்பதாகும். அதனால் அவர்கள் எதன்மீதும்
ஆணையிடுவதற்கு அதிகாரம் இல்லாமல் இருக்கின்றார்கள். அப்படியானால்
மனிதர்கள் செய்ய வேண்டியது என்ன என்ற கேள்வி எழலாம். அவர்கள்
செய்யவேண்டியதெல்லாம் ஆம் என்றால் ஆம் எனவும் இல்லையென்றால் இல்லை
எனவும் சொல்வதுதான். இதை ஒருவர் தன்னுடைய வாழ்வில் கடைப்பிடித்து
வாழும் பட்சத்தில் அவர் ஆணையிடுவதற்கு வழியே இல்லை.
சிந்தனை
'மண்ணுலகும் அதில்
நிறைந்துள்ள அனைத்தையும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும்
அவர்க்கே சொந்தம்' (திபா 24:1) என்பார் திருப்பாடல் ஆசிரியர்.
இப்படி இருக்கையில் நம்மால் எதன்மீதும் ஆணையிட முடியாது என்பதுதான்
உண்மை. எனவே, நாம் எதன்மீதும் ஆணையிட்டுக் கொண்டு, ஆண்டவரை
இழிவு படுத்தாமல், சிந்தனையில் தெளிவும் பேச்சில் உண்மையும்
கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
✞ ஆம் - இல்லை ✞
✞ இன்றைய நற்செய்தி ✞
(ஜூன் 15, 2019)
✞ மத்தேயு 5:33-37 ✞
நேற்று மாலை சூப்பர் மார்க்கெட் ஒன்றிற்குச் சென்றிருந்தேன்.
தேவையான சோப்புக்களை எடுத்துக்கொண்டு திரும்பும்போது இடைமறித்த
இளவல் ஒருவர், 'சார், ஹேர் ஆயில் செக்ஷனுக்கு வாங்க! க்ரே ஹேர்
நிறைய இருக்கு! இதைப் போட்டா சரியாயிடும்!' என்றார். உடனே
எனக்கு ஆங்கில எழுத்தாளரின் வார்த்தைகள்தாம் நினைவிற்கு வந்தன:
'க்ரே ஹேருக்கு ஒரே ஒரு தீர்வுதான் உண்டு. அதன் பெயர்
கில்லட்டின். அது பிரெஞ்சு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது.'
ஆக, தலையை வெட்டுவதைத் தவிர வேறு வழியில்லை.
கறுப்பாக்க, வெள்ளையாக்க நாம் செய்யும் முயற்சிகள் எல்லாம்
நம்முடைய வீணான போராட்டமே.
இதை இன்றைய நற்செய்தியில் இயேசுவே சொல்கிறார்.
நேற்றைய நற்செய்தி வாசகத்தில் பார்வையில் இருக்க வேண்டிய
தூய்மை பற்றிப் பேசிய இயேசு, இன்றைய நற்செய்தி வாசகத்தில்,
வார்த்தையில் இருக்க வேண்டிய தூய்மை பற்றிப் பேசுகின்றார்:
அ. பொய்யாணை இட வேண்டாம்.
ஆ. ஆம்-இல்லை என்பதைவிட மிகுதியாகப் பேச வேண்டாம்.
'இன்று நடப்பதே உனக்குத் தெரியாது. நாளை நடப்பதை அறிந்தவன் போல
பேசாதே' என்று நீதிமொழிகள் நம்மை எச்சரிக்கிறது. அதாவது,
எல்லாம் என் கையில் இருப்பதுபோல நினைத்து ஆணையிடக் கூடாது.
ரொம்ப உன்னிப்பாக இதைச் செய்தால் நாம், 'நாளைக்குத்
திருமணத்திற்கு வருகிறேன்' என்று கூட யாரிடமும் சொல்ல
முடியாது. ஏனெனில், நாளைவரை நாம் உயிரோடிருப்பது நம் கைகளில்
இல்லையே.
தன்னுடைய சீடர்கள் மிகக் குறைவான அளவில் வார்த்தைகளைப்
பயன்படுத்த வேண்டும் என்று இயேசு விரும்பினார்.
தேவையற்ற வார்த்தைகளைத் தவிர்த்தலும், 'ஆம் என்றால் ஆம், இல்லை
என்றால் இல்லை' என்பது தவிர, வார்த்தைகளைக் கூட்டாமல்
இருப்பதும் நம் உடலுக்கும் மனத்திற்கும் நலம்.
இன்றைய முதல் வாசகத்தில் (காண். 2 கொரி 5:14-21), பவுல்,
இதையொத்த கருத்து ஒன்றைப் பகிர்கிறார்: 'நாங்கள் எவரையும் மனித
முறைப்படி மதிப்பிடுவதில்லை'
'மதிப்பிடுவது' (to evaluate)
'மனிதர்களை ஒருபோதும் மதிப்பிடக் கூடாது' என்று என்னுடைய பாஸ்
அருள்பணி. விமி சார்லி அடிக்கடி சொல்வார். மனிதர்களை
மதிப்பிட்டால் அவர்களை அன்பு செய்ய முடியாது. மனிதர்கள்
தங்களுக்கென ஒரு விதியை வகுத்துக்கொள்பவர்கள். தாங்கள்
செய்யும் எச்செயலையும் நியாயப்படுத்தக் கூடியவர்கள். அவர்களை
மதிப்பிட்டால் நமக்குத்தான் விரக்தி ஏற்படும்.
நாம் மதிப்பிடும்போது தேவையற்ற வார்த்தைகளைக் கொண்டு ஒருவரை
அளக்கிறோம். அளவுகோலுக்கு மேல் போகிறோம்.
தேவையற்றதை வைத்துகொண்டே இருப்பது, கூட்டிக்கொண்டே இருப்பது -
நமக்கு, நம் அலமாரிக்கு, நம் வீட்டின் உள்ளறைக்கு, நம்
உள்ளத்திற்கு, நம் உடலுக்கு எதுவும் அழகல்ல.
'ஆம்' என்றால் 'ஆம்.' 'இல்லை' என்றால் 'இல்லை.'
'வேண்டும்' என்றால் 'வேண்டும்.' 'வேண்டாம்' என்றால்
'வேண்டாம்.'
(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanithi)
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
5
=================================================================================
|
|