|
|
14 ஜூன் 2019 |
|
|
பாஸ்கா காலம்
10ம் வாரம் - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இயேசுவை உயிர்த்தெழச் செய்த கடவுளே எங்களையும் உங்களையும் உயிர்த்தெழச்
செய்வார்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து
வாசகம் 4: 7-15
சகோதரர் சகோதரிகளே, இந்தச் செல்வத்தை மண்பாண்டங்கள் போன்ற நாங்கள்
கொண்டிருக் கிறோம். இந்த ஈடு இணையற்ற வல்லமை எங்களிடமிருந்து
வரவில்லை, அது கடவுளுக்கே உரியது என்பது இதிலிருந்து விளங்குகிறது.
நாங்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் இன்னலுற்றாலும் மனம் உடைந்து
போவதில்லை; குழப்பமுற்றாலும் நம்பிக்கை இழப்பதில்லை;
துன்புறுத்தப்பட்டாலும் கைவிடப்படுவதில்லை; வீழ்த்தப்பட்டாலும்
அழிந்து போவதில்லை. இயேசுவின் வாழ்வே எங்கள் உடலில் வெளிப்படுமாறு
நாங்கள் எங்குச் சென்றாலும் அவருடைய சாவுக்குரிய துன்பங்களை எங்கள்
உடலில் சுமந்து செல்கிறோம். இயேசுவின் வாழ்வு சாவுக்குரிய எங்கள்
உடலில் வெளிப்படுமாறு உயிரோடிருக்கும்போதே நாங்கள் அவரை
முன்னிட்டு எந்நேரமும் சாவின் வாயிலில் நின்று
கொண்டிருக்கிறோம். சாவின் ஆற்றல் எங்களிலும் வாழ்வின் ஆற்றல்
உங்களிலும் வெளிப்படுகிறது.
"நான் கடவுள்மீது நம்பிக்கையோடு இருந்தேன்; ஆகவே பேசினேன்''
என்று மறைநூலில் எழுதியுள்ளது. அதற்கொப்ப நம்பிக்கை மனப்பான்மை
கொண்டுள்ள நாங்களும் நம்புகிறோம்; ஆகவே பேசுகிறோம். ஆண்டவர் இயேசுவை
உயிர்த்தெழச் செய்த கடவுளே எங்களையும் அவரோடு உயிர்த்தெழச்
செய்து அவர் திருமுன் நிறுத்துவார்; உங்களையும் அவ்வாறே
நிறுத்துவார் என்பது எங்களுக்குத் தெரியும். இவையனைத்தும் உங்கள்
நன்மைக்கே நிகழ்கின்றன. இறையருள் பெறுவோரின் தொகை பெருகப்
பெருக அவர்கள் கடவுளுக்குச் செலுத்தும் நன்றியும் பெருகும்.
இதனால் கடவுள் போற்றிப் புகழப்படுவார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா
116: 10-11. 15-16. 17-18 (பல்லவி: 17a)
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்.
10 'மிகவும் துன்புறுகிறேன்!' என்று சொன்னபோதும் நான் நம்பிக்கையோடு
இருந்தேன். 11 'எந்த மனிதரையும் நம்பலாகாது' என்று என் மனக்
கலக்கத்தில் நான் சொன்னேன். பல்லவி
15 ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது.
16 ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன்; நான் உம் பணியாள்; உம்
அடியாளின் மகன்; என் கட்டுகளை நீர் அவிழ்த்து விட்டீர். பல்லவி
17 நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத்
தொழுவேன்; 18 இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே!
உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
பிலி 2: 15-16
அல்லேலூயா, அல்லேலூயா! வாழ்வின் வார்த்தையைப் பற்றிக் கொள்ளுங்கள்.
உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும்
தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
5: 27-32
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "விபசாரம்
செய்யாதே' எனக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ஒரு பெண்ணை இச்சையுடன்
நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபசாரம்
செய்தாயிற்று.
உங்கள் வலக்கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதைப்
பிடுங்கி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்தில்
எறியப் படுவதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே
நல்லது.
உங்கள் வலக்கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதையும் உங்களிடமிருந்து
வெட்டி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்திற்குச்
செல்வதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது.
'தன் மனைவியை விலக்கி விடுகிறவன் எவனும் மணவிலக்குச் சான்றிதழைக்
கொடுக்கட்டும்' எனக் கூறப்பட்டிருக்கிறது.
ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எவரும் தம் மனைவியைப் பரத்தைமைக்காக
அன்றி வேறு எந்தக் காரணத்திற்காகவும் விலக்கிவிடக் கூடாது. அப்படிச்
செய்வோர் எவரும் அவரை விபசாரத்தில் ஈடுபடச் செய்கின்றனர். விலக்கப்பட்டோரை
மணப்போரும் விபசாரம் செய்கின்றனர்."
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
முதல் வாசகம்
02 கொரிந்தியர் 4: 7-15
இன்னலுற்றாலும் மனம் உடைந்து போகவேண்டாம்
நிகழ்வு
தன்னுடைய நகைச்சுவையான நடிப்பினால் மக்களைச் சிரிக்கவும்
சிந்திக்கவும் வைத்து, உலகமெங்கிலும் உள்ள மக்களுடைய மனதில்
நீங்கா இடம் பிடித்திருப்பவர் சார்லி சாப்ளின்.
அவர் உலகப் புகழ்பெற்ற நடிகராக மாறுவதற்கு முன்னம், ஒரு திரைப்பட
நிறுவனம் புதிதாகத் தயாரிக்கப்போகும் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு
நடிகர்களைத் தேர்வுத் தேர்வுசெய்துகொண்டிருகிறது என்ற
செய்தியைக் கேள்விப்பட்டு, அந்த நிறுவனத்திற்குச் சென்றார். அங்கிருந்தவர்கள்
அவருடைய தோற்றத்தையும் நடிப்பையும் பார்த்துவிட்டு அவரை
வேண்டாம் என்று சொல்லி வெளியே அனுப்பிவிட்டார்கள்.
தன்னை அந்தத் திரைப்பட நிறுவனம் வேண்டாம் என்று வெளியே அனுப்பியதைத்
தொடர்ந்து, சார்லி சாப்ளின் அமெரிக்காவில் உள்ள சுதந்திர மாதா
சிலைக்கு அருகில் சென்று, "சுதந்திர மாதாவே! எனக்கு நடிப்பு
வரவில்லை என்று இவர்கள் வெளியே அனுப்பிவிட்டார்கள். இவர்கட்கு
முன்பாக நான் ஒரு மிகப்பெரிய நடிகனாக மாற்றிக்காட்டுகின்றேன்.
இது சத்தியம்" என்று சபதம் எடுத்துக் கொண்டு, கடுமையாக உழைத்தார்.
கடைசியில் எதை வைத்து அந்த திரைப்பட நிறுவனம் வேண்டாம் என்று
ஒதுக்கித் தள்ளியதோ, அதை வைத்தே அவர் பெரிய நடிகராக மாறினார்.
எப்படி உலகப் புகழ்பெற்ற நடிகரான சார்லி சாப்ளின், நடிப்பு வரவில்லை
என்று ஒதுக்கப்பட்டாலும், அவர்காக அவர் மனமுடைந்து போகாமல்,
மனவுறுதியோடு இருந்து வெற்றி பெற்றாரோ, அதுபோன்று பவுலும் பல்வேறு
இன்னல்களையும் சவால்களையும் சந்தித்த போதும், மனவுறுதியோடு இருந்து
இயேசுவுக்குச் சான்று பகர்ந்தார். இத்தகைய செய்தியை எடுத்துச்
சொல்லும் இன்றைய முதல் வாசகத்தைக் குறித்து இப்பொழுது
சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
இன்னலுற்றாலும் மனமுடைந்து போகாத பவுல்
தமஸ்கு நகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த பவுலை ஆண்டவர் இயேசு
தடுத்தாட்கொண்ட பிறகு, அவர் ஆண்டவருடைய நற்செய்தியை எல்லா மக்கட்கும்
அறிவிக்கத் தொடங்கினார். அப்படி அறிவிக்கும்போது அவர் சந்தித்த
இன்னல்களும் சாவால்களும் ஏராளம். பவுல் தான் சந்தித்த சவால்களையும்
இன்னல்களையும் இன்றைய முதல் வாசகம் போக மேலும் இரண்டு இடங்களில்
பதிவுசெய்கின்றார். ஒன்று 2கொரி 6: 1-10. இரண்டு, 11:16-12:10.
இந்த மூன்று இடங்களிலும் பவுல் சொல்வது போல அவர் சந்தித்த இன்னல்களும்
சவால்களும் ஏராளம். அப்படிப்பட்ட தருணங்களில் அவர் மனமுடைந்து
போகாலும் தன்னுடைய பணியைப் பாதியிலேயே விட்டுவிட்டுப் போகாமலும்
இருந்து, இறுதிவரை மனவுறுதியோடு இருந்தார். அந்த மனவுறுதியைத்தான்
நாம் ஒவ்வொருவரும் பெற்றுக்கொள்வது தேவையான ஒன்றாக இருக்கின்றது.
தாழ்ச்சியோடு பணிசெய்த பவுல்
பவுல், பல்வேறு இன்னல்கட்கு மத்தியில் பணி செய்தாலும், அவர்
மனவுறுதியோடு பணிசெய்தார் என்பதை மேலே சிந்தித்துப்
பார்த்தோம். அவர் அப்படிப்பட்ட பணியினை எத்தகைய மனநிலையோடு
செய்தார் என்பதை இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
இன்றைய முதல் வாசகத்தின் தொடக்கத்தில் பவுல், இந்தச் செல்வத்தை
மண்பாண்டங்கள் போன்ற நாங்கள் கொண்டிருகின்றோம் என்றும் ஈடு இணையற்ற
வல்லமை எங்களிடமிருந்து அல்ல, கடவுளிடமிருந்தே வருகின்றது என்றும்
கூறுகின்றார். மண்பாண்டங்கள் என்பவை மிகவும் சாதாரணமானவை. எளிதில்
உடையக்கூடியவை. அப்படிப்பட்டவற்றோடு பவுல் தன்னை ஒப்பிட்டு,
கடவுள் மிகவும் பெரியவர் என்றும் அவரைத் தாங்கி, மக்கட்கு எடுத்துரைக்கும்
தான் ஒரு சாதாரண கருவி என்றும் குறிப்பிடுகின்றார்.
இக்கருத்தினை திருத்தூதர் பணிகள் நூல் ஒன்பதாவது அதிகாரத்தில்
இன்னும் அழகாக வாசிக்கலாம். "நீ செல். அவர் பிற இனத்தவர்க்கும்
அரசர்க்கும் இஸ்ரயேல் மக்கட்கும் முன்பாக என் பெயரை எடுத்துச்
சொல்ல, நான் தேர்ந்துகொண்ட கருவியாய் இருக்கிறார்" (திப 9:15)
என்று ஆண்டவராகிய கடவுள் அனனியாவைப் பார்த்துக் கூறுவார். அப்படியானால்,
நாம் ஒவ்வொருவரும் இறைவனின் வார்த்தையை எடுத்துரைக்கும் கருவிகள்தானே
ஒழிய, நாமே இறைவனாகிவிட முடியாது. பவுல் இவ்வுண்மையை உணர்ந்துதான்,
ஆண்டவருடைய நற்செதியை பல்வேறு இன்னல்கட்கு மத்தியிலும் மனவுறுதியோடு
அறிவித்தார். நாமும் ஆண்டவருடைய கையில் ஒரு கருவி என்பதை உணர்ந்து,
இறைப்பணியை மனவுறுதியோடு செய்வது மிகவும் தேவையான ஒன்றாகும்.
சிந்தனை
'இறுதிவரை மனவுறுதியோடு இருப்பவரே, மீட்புப் பெறுவர்' (மத்
24:13) என்பார் இயேசு. ஆகவே, நாம் எத்தகைய இடர்வரினும் இறுதிவரை
மனவுறுதியோடு இருந்து, இறைவனுடைய கையில் நாம் சிறு கருவி என்பதை
உணர்ந்து, இறைப்பணியைத் தொடர்ந்து செய்வோம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 5: 27-32
மனச்சலவை
நிகழ்வு
அது ஒரு பழமையான கிராமப்புறப் பங்கு. அந்தப் பங்கில் பெரியவர்
ஒருவர் இருந்தார். அவர் பங்குக்கோவிலில் ஆட்கள் இல்லாத சமயம்
வந்து, "ஆண்டவரே என்னுடைய மனத்தில் படிந்திருக்கின்ற தூசுகளையும்
ஒட்டடைகளையும் நீர் அகற்றுவீராக" என்று சத்தம் போட்டு மன்றாடி
வந்தார்.
அந்தப் பெரியவரின் நடவடிக்கைகளைக் கவனித்த அந்தப் பங்கில் இருந்த
பங்குத்தந்தை, 'ஆலயத்தில் ஆளில்லாத நேரம் பார்த்து வருகின்ற இந்தப்
பெரியவர் அப்படி என்ன செய்கிறார்' என்று அவர் பின்னால் நின்று
பார்த்தார். அப்பொழுது பெரியவர் வழக்கம்போல், "ஆண்டவரே! என்னுடைய
உள்ளத்தில் படிந்திருக்கின்ற தூசுகளையும் ஒட்டடைகளையும் நீர்
அகற்றுவீராக" என்று சத்தம் போட்டுப் மன்றாத் தொடங்கினார். இதைப்
பின்னாலிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த பங்குத்தந்தை, "மகனே! உன்னுடைய
மனதில் படிந்திருக்க தூசுகளும் ஒட்டடைகளும் அகலவேண்டும் என்றால்,
அதற்குக் காரணமாக இருக்கும் சிலந்தி என்னும் சாத்தானை அடித்து
விரட்டவேண்டும் அல்லது கொள்ளவேண்டும்" என்றார்.
சத்தம் எங்கிருந்து வருகின்றது என்று பெரியவர் திரும்பிப்
பார்த்தபோது அவருக்குப் பின்னால் பங்குத்தந்தை இருப்பதைக் கண்டு
திடுகிட்டார். 'தான் இவ்வாறு வேண்டுவது பங்குத்தந்தைக்குத்
தெரிந்துவிட்டதே' என்ற உருவிதமான குற்றவுணர்வோடு பங்குத்தந்தையிடம்
வந்தார். பங்குத்தந்தை அவரிடம், "உங்களுடைய மனத்தில் தூசுகள்
ஒட்டடைகள் என்ற தீய எண்ணங்கள் படிகின்றது என்றால், அவற்றுக்குக்
காரணமாக இருக்கும் சிலந்தி என்ற சாத்தான் உங்களை நெருங்கவிடாது
பார்த்துக் கொள்ளவேண்டும். அதுதான் மிகவும் முக்கியம்" என்றார்.
ஒரு பிரச்சனைக்குத் தீர்வுகாணவேண்டும் என்றால், அதை
மேம்போக்காக அணுகிக்கொண்டிருந்தால்போது, அந்தப் பிரச்சினையின்
வேர் எங்கிருக்கின்றது என்பதை அறிந்து, அதைக் களைகிறபோது மட்டமே,
பிரச்சனைக்குச் சரியான தீர்வுகாண முடியும். அத்தகைய உண்மையை எடுத்துச்
சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. நற்செய்தியில்
'விபசாரம்' தொடர்பான பிரச்சினைக்கு ஆண்டவர் இயேசு இதே
பாணியைத்தான் கடைப்பிடிக்கின்றார். அவர் கடைப்பிடிக்கும் பாணி
'விபசாரம்' என்ற பிரச்னைக்கு எப்படித் தீர்வு தருகின்றது என்பதை
இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
விபசாரம் மிகப்பெரிய குற்றம்
'விபசாரம் செய்யாதே' (விப 20:14) என்பது ஆண்டவராகிய கடவுள்
மோசே வழியாக இஸ்ரயேல் மக்கட்குக் கொடுத்த கட்டளையாகும். இக்கட்டளையை
மீறி ஒருவர் விபசாரம் செய்கின்றார் என்றால், அவர் குற்றவாளியாகக்
கருதப்பட்டார். ஆனால், ஆண்டவர் இயேசுவோ ஒருபடி மேலே சென்று, விபசாரம்
மட்டுமல்ல ஒருவரை இச்சையோடு நோக்குவதுகூட பாவம் என்றும் இதற்குக்
காரணமாக இருக்கும் கண்ணை/கையைப் பிடுங்கி எறிந்துவிடுங்கள் என்றும்
கூறுகின்றார்.
பழைய ஏற்பாட்டுக் காலச் சட்டம் செயலைக் குற்றம் என்று சொன்னது
அந்த செயலுக்குக் காரணமாக இருந்த சிந்தனையை/ எண்ணத்தைக்
குறித்து, எதுவும் பேசவில்லை. இயேசுவோ செயலுக்குக் காரணமாக இருக்கும்
சிந்தனை அல்லது எண்ணமே பாவம் என்று குறிப்பிடுகின்றார். விபசாரத்தில்
ஈடுபடுவது மட்டுமல்லாமல், அதை செய்யத் தூண்டும் சிந்தனையும் பாவம்
என்று இயேசு சொல்வதற்கு இன்னொரு முக்கியமான விடயமும் இருக்கின்றது.
இதை இயேசுவே இன்னொரு பகுதியில் குறிப்பிடுகின்றார். "கொலை,
கொள்ளை, விபசாரம், பரத்தமை, களவு, பொய்ச்சான்று, பழிப்புரை ஆகியவற்றைத்
தூண்டும் ஆகியவற்றைத் தூண்டும் தீய எண்ணங்கள் உள்ளத்த்திலிருந்தே
வருகின்றன (மத் 15: 9). ஆகையால், மேலே குறிப்பிடப்பட்ட பாவங்களிருந்தும்
குறிப்பாக விபசாரத்திலிருந்தும் ஒருவர் வெளிவரவேண்டும் என்றால்,
அவர் தன்னுடைய உள்ளத்தைச் சலவை செய்து தூயதாக வைத்திருப்பது மிகவும்
இன்றிமையாதது.
திருமணத்தை உடன்படிக்கையை மேன்மைப்படுத்தும் இயேசு
இயேசு கிறிஸ்து விபசாரத்தையும் அதைச் செய்யத் தூண்டும் எண்ணங்களையும்
மிகப்பெரிய குற்றம் என்று சுட்டிக்காட்டுவதன் வழியாக திருமண
உடன்படிக்கையை மேன்மைப்படுத்துகின்றார். எவ்வாறெனில், படைப்பின்
தொடக்கத்தில் மனிதன் அதாவது ஆதாம் தன் மனைவி ஏவாவைப் பார்த்து,
"இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள்' (தொநூ
1: 23) என்று சொல்கின்றார். ஆதாம் ஏவாவைப் பார்த்துச்
சொல்கின்ற இவ்வார்த்தைகள் ஒவ்வொரு கணவன் மனைவிக்கும்
பொருந்தும். ஒவ்வொரு கணவனுக்கும் தன் மனைவி எழும்பின் எலும்பும்
சதையின் சதையும் ஆனவள்தான். அப்படியிருக்கும்போது பிறர் மனைவியையோ
அல்லது பிறர் கணவனை நோக்குவது மிகப்பெரிய தவறு. இந்த உண்மையைத்தான்
இயேசு, ஒருவரை இச்சையோடு நோக்குவது குற்றம் என்று சொல்கிறார்.
இவ்வாறு அவர் திருமண உடன்படிக்கையை மேன்மைப்படுத்துகின்றார்.
சிந்தனை
'நீங்கள் தூயோராய் இருங்கள். ஏனெனில் உங்கள் கடவுளும் ஆண்டவருமான
நான் தூயவர் (லேவி 19:2) என்பார் கடவுள். ஆகவே, நாம் கடவுளைப்
போன்று தூயோராகவும் தீய சிந்தனைகட்கு இடம்கொடாதவராகவும் வாழப்
பழகுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
மண்பாண்டம்
இன்றைய நற்செய்தி
(ஜூன் 14, 2019)
மத்தேயு 5:27-32
இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு, தன் மலைப்பொழிவின் ஒரு
பகுதியாக, 'விபச்சாரம் செய்யாதே' என்ற பழைய கட்டளையைக்
குறிப்பிட்டு, 'இச்சையுடன் நோக்குவதைத் தவிர்' என்று விபச்சார
எண்ணத்தை வேரோடு அழிக்க அழைக்கின்றார். மேலும், மணவிலக்கு
பற்றியும் பேசுகின்றார்.
இன்றைய முதல் வாசகத்தில் (காண். 2 கொரி 4:7-15) அழகான உருவகம்
ஒன்றை வாசிக்கின்றோம். தன்னுடைய திருப்பணியைப் பற்றி
எழுதுகின்ற பவுல் எப்படி எழுதுகின்றார்?
'இந்தச் செல்வத்தை மண்பாண்டங்கள் போன்றே நாங்கள்
கொண்டிருக்கிறோம். இந்த ஈடு இணையற்ற வல்லமை எங்களிடமிருந்து
வரவில்லை. அது கடவுளுக்கே உரியது.'
'மண்பாண்டம்' என்றவுடன் நாம் பழைய காலத்தில் சோறு சமைக்கும்
பானை என்றோ, தண்ணீர் சேமித்து வைக்கும் பானை என்றோ, அரிசி
சேமித்து வைக்கும் குதிர் என்றோ எண்ண வேண்டாம். பவுலின்
காலத்தில் மண்பாண்டம் மனித கழிவுகளைச் சேகரிக்கப் பயன்பட்டது.
கழிவறைகள் பொதுவாக வழக்கத்தில் இல்லாத அக்காலத்தில் மனிதக்
கழிவுகள் மண்பாண்டங்களில் சேகரிக்கப்பட்டு, அவை அடிமைகளால்
சுத்தம் செய்யப்படுத்தப்பட்டன. இப்படிப்பட்ட மண்பாண்டத்தில்
தங்கம் மற்றும் வைர நகைகளைப் போட்டு வைத்தால் எப்படி
இருக்கும்? இதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. அதே
நேரத்தில் தங்க நகைகள் உள்ள மண்பாண்டத்தை மற்றவர்கள்
பத்திரமாகப் பார்த்துக்கொள்வார்கள். மதிப்புக்குரியதொன்றாகக்
கருதுவார்கள். மண்பாண்டத்திற்கு மதிப்பு எப்படி வந்தது? அதன்
உள்ளிருக்கும் புதையலை வைத்துத்தானே.
ஆக, பவுல், ஒரு பக்கம் தன்னையே தகுதியற்ற மண்பாண்டம் என்று
சொல்கிற வேளையில், மற்றொரு பக்கம் தன்னுடைய மதிப்பு தனக்குள்
இருக்கும் கடவுளின் வல்லமையால் வருகிறது என்பதை
அறிக்கையிடுகின்றார்.
இதை அப்படியே கொஞ்சம் நற்செய்தியோடு பொருத்திப் பார்ப்போம்.
விபச்சாரம் அல்லது இச்சையான பார்வை ஏன் வருகிறது?
ஒருவர் தன் துணையை விட்டுவிட்டு ஏன் மற்றொரு இணையை நாட
வேண்டும்?
மனிதர்கள் தங்களுடைய இயல்பிலேயே பலரோடு உடலுறவு கொள்ள
விரும்புபவர்கள் என உளவியலும், சமூகவியலும் சொன்னாலும், சமூக
மற்றும் சமய வரையறைகள் இதற்குத் தடை விதிக்கின்றன. அருட்சாதனம்
என்ற நிறுவனத்திற்கு இதை ஒரு பெரிய தடைக்கல்லாகப்
பார்க்கின்றன.
ஒருவர் தன் துணையை விட்டுவிட்டு மற்றொரு இணையை நாடக் காரணம்
என்னவென்றால், அவர் தன்னுடைய துணையை வெறும் மண்பாண்டமாகப்
பார்ப்பதுதான்.
திருமணத்தின் தொடக்கத்தில் தங்கம் மட்டுமே கண்களுக்குத் தெரிய,
காலம் செல்லச் செல்ல மண்பாண்டம் தெரிய ஆரம்பிக்கிறது. அதில்
உள்ள கீறல்கள், அழுக்கு, சொரசொரப்பு தெரிய ஆரம்பிக்கிறது.
அப்போது நாம் மற்றொரு 'தங்கத்தை' நாட ஆரம்பிக்கிறோம்.
மற்றொரு பக்கம், இச்சையோடு பார்ப்பவர் அந்த மண்பாண்டத்தை
உடைத்து தங்கத்தை அள்ளிவிட நினைக்கிறார்.
விபச்சாரம் செய்பவர் தன் மனைவியின் 'தங்கத்தை' பார்க்காமல்
'மண்பாண்டத்தைப்' பார்க்கிறார். இச்சையோடு பார்ப்பவர்
'மண்பாண்டத்தை' உடைத்து 'தங்கத்தை' ('அங்கத்தை') அள்ளிக்கொள்ள
நினைக்கிறார். இரண்டுமே தவறு என்கிறார் இயேசு.
இன்றைய நாள் வாசகங்கள் இரண்டு செய்திகளை வழங்குகின்றன:
அ. நாம் ஒவ்வொருவரும் கடவுளின் வல்லமையை, சாயலைத்
தாங்கியிருக்கும் மண்பாண்டங்கள். நம்மில் தங்கமும் உண்டு,
களிமண்ணும் உண்டு. இதை அப்படியே ஏற்றுக்கொள்வது.
ஆ. நம் உறவு நிலைகளில் - துறவு மற்றும் திருமண உறவில் -
மற்றவரின் தங்கத்தை மட்டுமே பார்ப்பது.
(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
5
=================================================================================
|
|