Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                         13 ஜூன 2019  
                        பாஸ்கா காலம் 10ம் வாரம்  - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
கடவுளே எங்கள் உள்ளங்களில் அவரது ஒளியை வீசச் செய்தார்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 15 - 4: 1,3-6

சகோதரர் சகோதரிகளே, இன்றுவரை மோசேயின் திருச்சட்டம் வாசிக்கப்படும் போதெல்லாம் அவர்களின் உள்ளத்தை ஒரு திரை மூடி இருக்கிறது. ஆனால் ஆண்டவர்பால் திரும்பினால் அந்தத் திரை அகற்றப்படும். இங்கே ஆண்டவர் என்பது தூய ஆவியாரைக் குறிக்கிறது.

ஆண்டவரின் ஆவியார் இருக்குமிடத்தில் விடுதலை உண்டு. இப்போது நாம் அனைவரும் முக்காடு இல்லா முகத்தினராய் ஆண்டவரின் மாட்சியைப் பிரதிபலிக்கிறோம். இவ்வாறு மேன்மேலும் மாட்சி பெற்று, அவர் சாயலாக மாற்றமடைகிறோம். இவையெல்லாம் ஆவியாம் ஆண்டவரின் செயலே. கடவுளின் இரக்கத்தால் நாங்கள் இத்திருப்பணியைப் பெற்றிருக்கிறோம்.

ஆகையால் மனந்தளராமல் இருக்கிறோம். நாங்கள் அறிவிக்கும் நற்செய்தி அழிவுறுவோருக்கே அன்றி வேறு எவருக்கும் மறைக்கப்பட்டிருக்கவில்லை. இவ்வுலகின் தெய்வம் நம்பிக்கை கொண்டிராதோரின் அறிவுக் கண்களைக் குருடாக்கிவிட்டது. எனவே அவர்கள் கடவுளின் சாயலாய் விளங்கும் கிறிஸ்துவின் மாட்சி பொருந்திய நற்செய்தி ஒளியைக் காண முடிவதில்லை. நாங்கள் எங்களைப் பற்றி அல்ல, இயேசு கிறிஸ்துவைப் பற்றியே அறிவிக்கிறோம்; அவரே ஆண்டவர் எனப் பறைசாற்றி வருகிறோம். நாங்கள் இயேசுவின் பொருட்டு வந்த உங்கள் பணியாளர்களே. 'இருளிலிருந்து ஒளி தோன்றுக!" என்று சொன்ன கடவுளே எங்கள் உள்ளங்களில் அவரது ஒளியை வீசச் செய்தார். அது கிறிஸ்துவின் திருமுகத்தில் வீசும் கடவுளின் மாட்சியாகிய அறிவொளியே.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா: 85: 8ab-9. 10-11. 12-13 (பல்லவி: 9b)
=================================================================================

பல்லவி: நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும்.

8யb ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்; தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார். 9 அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி; நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். பல்லவி

10 பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும். 11 மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். பல்லவி

12 நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம் நாடு நல்கும். 13 நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 13: 34

அல்லேலூயா, அல்லேலூயா! புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================

தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 20-26

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: 'மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்கிறேன். 'கொலை செய்யாதே; கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர்' என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.

ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்; தம் சகோதரரையோ சகோதரியையோ 'முட்டாளே' என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்; 'அறிவிலியே' என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார்.

ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலி பீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.

உங்கள் எதிரி உங்களை நீதி மன்றத்துக்குக் கூட்டிச் செல்லும்போது வழியிலேயே அவருடன் விரைவாக உடன்பாடு செய்துகொள்ளுங்கள். இல்லையேல் உங்கள் எதிரி நடுவரிடம் உங்களை ஒப்படைப்பார். நடுவர் காவலரிடம் ஒப்படைக்க, நீங்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள். கடைசிக் காசு வரை திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 
2 கொரிந்தியர் 3: 15-4: 1,3-6

"கடவுளின் இரக்கத்தால் நாங்கள் இத்திருப்பணியைப் பெற்றிருக்கின்றோம்"

நிகழ்வு

          புதிதாகக் கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொண்டு, நற்செய்திப் பணியாளராக மாறியிருந்த ஒருவரிடம் சிலர், 'நீங்கள் இயேசுவின் அருளை/ இரக்கத்தை எப்படிப் பெற்றுக்கொண்டீர்கள்" என்று கேட்டனர்.

அதற்கு அவர் தன்னுடைய காலுக்கு அருகில் ஓடிக்கொண்டிருந்த ஒரு பூச்சியைப் பிடித்து, அதை தன் ஒரு கையில் வைத்துக்கொண்டு, இன்னொரு கையால் அருகில் கிடந்த சருகுகளில் தீயை மூட்டினார். பின்னர் அவர் தன்னுடைய கையில் பிடித்துவைத்திருந்த பூச்சியை தீயிற்கு அருகில் விட்டார். தீயைக் கண்டதும் பூச்சி வேறு எங்கும் ஓடாமல் அங்கேயே இருந்தது.


இதற்கிடையில் புதிதாகக் கிறிஸ்துவ மதத்திற்கு மாறியிருந்தவரிடம் கேள்வி கேட்டவர்கள், பூச்சிக்கு என்ன ஆகப்போகிறதோ என்று கூர்ந்து கவனித்தார்கள். தீயானது பூச்சியை நெருங்கி வந்ததும்,  கிறிஸ்தவர் அந்தப் பூச்சியை டக்கென்று எடுத்துவிட்டார். பின்னர் அவர் அவர்களிடம், "இந்தப் பூச்சிதான் நான். தீதான் இவ்வுலகின் பாவங்கள். என்னுடைய கைதான் கடவுள். பாவம் என்னும் தீ என்னை விழுங்கிவிட நினைத்தபோது, ஆண்டவர் வந்து என்னைக் காப்பாற்றினார். இவ்வாறுதான் நான் ஆண்டவரின் அருளை உணர்ந்தேன். அதனால்தான் நான் என்னை அழிவிலிருந்து காப்பாற்றிய ஆண்டவர்க்கு நன்று செலுத்தும் பொருட்டு, என்னுடைய வாழ்வையே அவருடையே பணிக்காக அர்ப்பணித்தேன்" என்றார்.

மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் கிறிஸ்தவர் எப்படி கடவுளின் அருளையும் இரக்கத்தையும் பெற்றுக்கொண்டாரோ, அதுபோன்றுதான் பவுலும் அவரோடு இருந்தவர்களும் கடவுளுடைய அருளைபயும் இரக்கத்தையும் பெற்றுக்கொண்டார்கள். அவருடைய அருளையும் இரக்கத்தையும் பெற்றுக்கொண்ட அவர்கள் அதிலும் குறிப்பாக பவுல் எப்படி ஆண்டவருடைய பணியைச் செய்தார் என்பதை இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

கடவுளின் இரக்கத்தால் திருப்பணியைப் பெற்றுக்கொண்ட பவுல்

          இன்றைய முதல் வாசகத்தில் பவுல், கொரிந்து நகர மக்களிடம், தானும் தன்னுடைய இருந்தவர்களும் தங்களது சொந்த வல்லமையினால் அல்ல, கடவுளின் இரக்கத்தினால் திருப்பணியைப் பெற்றிருப்பதாக் கூறுகின்றார்.

பவுல் சொல்லும் இவ்வார்த்தைகளை நாம் நமது சிந்தனைக்கு உட்படுத்திப் பார்க்கின்றபோது, ஒருவர் கடவுளின் அழைப்பைப் பெறுவது அவருடைய சொந்த வல்லமையினால் அல்ல, கடவுளின் வல்லமையினால்தான் என்பது தெளிவாகின்றது. இதைதான் பவுல் உரோமையர்க்கு எழுதிய மடலில், "கடவுள் தாம் முன்குறித்து வைத்தோரை அழைத்திருக்கின்றார்; தாம் அழைத்தோரைத் தமக்கு ஏற்புடையோராக்கி இருக்கிறார்; தனக்கு ஏற்புடையோரைத் தம் மாட்சியில் பங்கு பெறச் செய்தார் (உரோ 8: 30) என்று கூறுகின்றார். பவுலின் இக்கூற்றினை அவருடைய வாழ்க்கையிலிருந்தும் மிகத் தெளிவாக அறிந்துகொள்ளலாம்.


பவுல், யூத சமயத்தின்மீதுகொண்ட பற்றினால் கிறிஸ்தவர்களைக் கொடுமைப்படுத்தியும் சிறையில் அடைத்துச்  சித்ரவதை செய்தும் வந்தார். இப்படிப்பட்ட சமயத்தில்தான், அவர் தமஸ்கு நகர்க்குப் போகும் வழியில் ஆண்டவர் இயேசுவால் தொடப்பட்டு, அவருடைய பணியைச் செய்யத் தயாரானார். இவ்வாறு பவுல் யாருடைய மக்களைக் கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தாரோ அவர்க்காவும் அவருடைய மக்கட்காகவும் தன்னுடைய வாழ்வையே தரத் துணிந்தார் என்றால், அங்குதான் கடவுளின் இரக்கம் பவுல் வாழ்வில் மிக அதிகமாகச் செயல்பட்டது என்று சொல்ல முடிகின்றது.


கடவுளால் அழைக்கப்பட்டு, அவருடைய பணியைச் செய்துவந்த பவுல்

          கடவுளின் இரக்கத்தால், அவருடைய பணிக்காக அழைக்கப்பட்டேன் என்று இன்றைய முதல் வாசகத்தின் முதல் பகுதியில் சொல்லும் பவுல், இன்றைய முதன் வாசகத்தின் இரண்டாவது பகுதியில் அவ்வாறு அழைக்கப்பட்டபின், தன்னுடைய பணியை அல்ல, கடவுளுடைய பணியைச் செய்வதாகவும் இயேசுவே ஆண்டவர் என்று அறிக்கையிடுவதாகவும் கூறுகின்றார்.

இன்றைக்குப் பலர் கடவுளில் அருளால் அல்லது இரக்கத்தால், அவருடைய பணியைச் செய்ய அழைக்கப்பட்டிருக்கின்றார்கள். அப்படிப்பட்டவர்கள் அவருடைய நற்செய்தியை மக்கட்கு அறிவிக்கவேண்டுமே ஒழிய, தங்களுடைய சுய வெறுப்புகளை நாடக்கூடாது. அப்படி நாடுவதும் தன்னலத்தை மட்டுமே பிரதான நோக்கமாகக் கொண்டு வாழ்வதும் சீடத்துவத்திற்கு அழகாக இருக்காது. இதை இறைப்பணியில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொருவரும் தங்களுடைய கவனத்தில் கொள்வது நல்லது. இயேசுவும் இதைத்தான், "என்னைப் பின்பற்றும் எவரும் தன்னலம் துறந்து, தன் சிலுவையைத் தூக்கிக்கொண்டு, என்னைப் பின்பற்றட்டும் (மத் 16:25) என்று கூறுகின்றார்.

சிந்தனை


'என் தலைவரே! நீரோ இரக்கமிகு இறைவன்; அருள் மிகுந்தவர்' (திபா 86:15) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நாம் கடவுளின் மேலான இரக்கத்தையும் அருளையும் உணர்ந்தவர்களாய், அவருடைய பணியைச் செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 5: 20-26

சினம் கொள்வது கொலைக்குச் சமம்

நிகழ்வு

          ஜோ என்றொரு வாகன ஓட்டி இருந்தான். அவன் கடுமையான முன்கோபக்காரன். யாராவது ஒருசிறு தவறுசெய்தாலும்கூட, அவர்களை அவன் தன்னுடைய கடுஞ்சொற்களால் எரித்துவிடுவான்.

ஒருநாள் அவன் வாகன நிறுத்தத்தில் இருந்தபோது, பெரியவர் ஒருவர் வந்தார். அவர் ஜோவிடம், "தம்பி! அவசரமாக வானூர்தி நிலையத்திற்குச் செல்லவேண்டும். வரமுடியுமா?" என்று கேட்டார். அவனும் அதற்குச் சரியென்று ஒப்புக்கொண்டு, வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்றான். இதற்கிடையில் ஜோவினுடைய வண்டியை முந்திக்கொண்டு சென்ற ஓர் இளைஞன் அவனுடைய வண்டியை மெல்ல உரசி விட்டுச் சென்றான். இத்தனைக்கும் அந்த இளைஞன் ஜோவினுடைய வண்டியில் ஏற்படுத்திய உராய்வு கண்ணுக்குத் தெரியாததுதான். ஆனாலும், ஜோவிற்கு கடுமையான கோபம் வந்தது. எனவே அவன், தன்னுடைய வண்டியை உரசிவிட்டுச் சென்ற இளைஞனுடைய வண்டியை விரட்டிப் பிடித்து, அவனை ஓரங்கட்டினான்.


போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் ஜோ அந்த இளைஞனைப் பிடித்துவைத்து வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டத் தொடங்கியதால், சிறிதுநேரத்தில் அங்கு கூட்டம் கூடத் தொடங்கியது. அதைக் காவல்துறை வந்துதான் சரி சரிசெய்தது. அதற்குள் ஜோ தன்னுடைய வண்டியில் ஏற்றிவந்த பெரியவர், 'இந்தாளுடைய வாகனத்தில் பயணம் செய்தால், குறிப்பிட்ட நேரத்தில் வானூதி நிலையத்தை அடையமுடியாது' என்று வேறொருவருடைய வண்டியில் ஏறிப் போய்விட்டார். பிரச்சினை முடிந்து ஜோ தன்னுடைய வண்டியைப் பார்த்தபோதுதான், அதில் பெரியவர் இல்லை என்பதை உணர்ந்தான். "ஒரு நல்ல சவாரியை நம்முடைய சினத்தால் இப்படி இழந்துவிட்டோமே' என்று அவன் மிகவும் வருத்தப்பட்டான்.


இந்த நிகழ்வில் வருகின்ற ஜோவைப் போன்றுதான் பலரும் 'அநியாயத்திற்கு'ச் சினம் கொள்வதால் அனைத்தையும் இழந்து நிற்கின்றார்கள். இத்தகைய சூழ்நிலையில் இன்றைய இறைவார்த்தை அழிவுக்குக் காரணமாக இருக்கும் சினத்தை எப்படித் தவிர்ப்பது, அதற்கு மாற்றாக ஒருவர் என்ன செய்வது போன்ற செய்திகளை எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

சினம் கொலைக்கு இட்டுச் செல்வதோடு மட்டுமல்லாமல், சினமே கொலையாக இருக்கின்றது

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு 'கொலை செய்யாதே' (விப 20:13) என்ற பழைய ஏற்பாட்டுக் கட்டளைக்கு புதிய விளக்கம் தருகின்றார். பழைய ஏற்பாட்டுக் காலத்தில் கொலை செய்வது மிகப்பெரிய குற்றமாகப் பார்க்கப்பட்டது. ஆனால், ஆண்டவர் இயேசுவோ அந்தக் கொலைக் காரணமாக இருக்கும் சினத்தை மிகப்பெரிய குற்றமாக சுட்டிக்காட்டுகின்றார்.


இயேசு கிறிஸ்து, சினத்தை ஏன் மிகப்பெரிய குற்றமாகச் சுட்டிக்காட்டுகின்றார் எனில், உள்ளத்தில் தேக்கி வைக்கப்படக்கூடிய சினம் அப்படியே சீழ்படிந்து 'முட்டாள்'  'அறிவிலி' போன்ற கடுமையான சொற்களில் வெளிப்பட்டு, கடைசியில் கொலையில் போய் முடிகின்றது. அதனால்தான் இயேசு சினத்தை பெரிய குற்றமாகச் சொல்கின்றார். இதனால்தான் கொலை செய்வது மட்டுமல்ல, அந்தக் கொலைக்குக் காரணமாக இருக்கும் சினத்தை இயேசு பெரிய குற்றமாகச் சொல்கின்றார். இயேசுவின் காலத்திற்கு முன்பாக ஒருவருடைய வெளித்தோற்றம் அல்லது செயல்கள் நன்றாக இருந்தால்போதும் அவர் நல்லவர் என்ற எண்ணமானது இருந்துகொண்டிருந்தது. ஆனால், ஆண்டவர் இயேசு அதைத் திருத்தி, ஒருவருடைய வெளித்தோற்றம் மட்டுமல்ல, உள்ளமும் தூய்மையாக இருக்கவேண்டும் என்ற சிந்தனையைத் தருகின்றார். ஆதலால், நம்முடைய செயல்கள் மட்டுமல்ல நம்முடைய எண்ணங்களும் நல்லவையாக இருக்கவேண்டும்.


சினத்திற்குத் தீர்வு என்ன?

          ஆண்டவர் இயேசு சினம் கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார் என்று சொல்வதோடு மட்டுமல்லாமல், அந்த சினத்திற்கான தீர்வினையும் சொல்கின்றார். அது என்ன தீர்வு என்றால், சமரசம் அல்லது நல்லுறவு ஆகும். அதைத்தான் அவர் நல்லுறவு செய்துவிட்டுக் காணிக்கை செலுத்துங்கள் என்கின்றார்.

உண்மையில் கடவுள் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது நல்லுறவுப் பணிகளைத்தானே அன்றி வேறொன்றும் இல்லை. ஆனால், இன்றைக்குப் பலர் உள்ளத்தில் சினத்தையும் வெறுப்பையும் வைராக்கியத்தையும் வைத்துக்கொண்டு, பலிசெலுத்துவதைக் காணமுடிகின்றது. இத்தகைய பலிகள் கடவுட்கு ஒருநாளும் ஏற்புடையதாக இருக்காது. பவுலடியாரும் கூட, 'சினமுற்றாலும் பாவம் செய்யாதீர்கள். பொழுது சாய்வதற்குள் உங்கள் சினம் தணியட்டும்' (எபே 4:26) என்றே கூறுகின்றார். ஆகவே, பல்வேறு தீமைகட்கும் அழிவுக்கும் காரணமாக இருக்கும் சினத்தை நம்முடைய வாழ்விலிருந்து அப்புறப்படுத்திவிட்டு, நல்லுறவோடு வாழ்வது மிகவும் இன்றியமையாதது.


சிந்தனை

          'தம் சகோதர சகோதரிகளை வெறுப்போர் அனைவரும் கொலையாளிகள்' (1 யோவா 3:15)  என்பார் யோவான். ஆகவே, நாம் சினத்தோடும் வெறுப்போடும் இருந்து, கொலையாளிகளாக மாறுவதற்குப் பதில்,  நல்லுறவோடு வாழ்வு இயேசுவின் உண்மையான சீடர்களாய் வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

 
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
 


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 5
=================================================================================


 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!