|
|
13 ஜூன் 2019 |
|
|
பாஸ்கா காலம்
10ம் வாரம் - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம் பதுவா
நகர் புனித அந்தோணியார்
=================================================================================
மறைப்பணியாளர், மறைவல்லுநர் நினைவு மேய்ப்பர் - பொது (பக்கம்
578) அல்லது மறைவல்லுநர் - பொது (பக்கம் 613) அல்லது புனிதர் -
பொது (துறவியர், பக்கம் 642).
ஆண்டவர் எனக்கு அருள்பொழிவு
செய்துள்ளார்; நற்செய்தியை அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம்
61: 1-3
ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு
அருள்பொழிவு செய்துள்ளார்; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும்,
உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு விடுதலையைப்
பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும் என்னை
அனுப்பியுள்ளார். ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழங்கவும், நம்
கடவுள் அநீதிக்குப் பழிவாங்கும் நாளை அறிவிக்கவும், துயருற்று
அழுவோர்க்கு ஆறுதல் அளிக்கவும், சீயோனில் அழுவோர்க்கு ஆவன செய்யவும்,
சாம்பலுக்குப் பதிலாக அழகுமாலை அணிவிக்கவும், புலம்பலுக்குப்
பதிலாக மகிழ்ச்சித் தைலத்தை வழங்கவும், நலிவுற்ற நெஞ்சத்திற்குப்
பதிலாகப் 'புகழ்' என்னும் ஆடையைக் கொடுக்கவும் என்னை அனுப்பியுள்ளார்.
'நேர்மையின் தேவதாருகள்' என்றும் 'தாம் மாட்சியுறுமாறு ஆண்டவர்
நட்டவை' என்றும் அவர்கள் பெயர் பெறுவர்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா
89: 1-2. 3-4. 20-21. 24,26 (பல்லவி:
1a)
=================================================================================
பல்லவி: ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்.
1 ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்; நீர் உண்மையுள்ளவர்
எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன். 2 உமது பேரன்பு என்றென்றும்
நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்; உமது உண்மை வானைப் போல் உறுதியானது.
பல்லவி
3 நீர் உரைத்தது: 'நான் தேர்ந்து கொண்டவனோடு உடன்படிக்கை
செய்துகொண்டேன்; என் ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டு நான் கூறியது:
4 உன் வழிமரபை என்றென்றும் நிலைக்கச் செய்வேன்; உன் அரியணையைத்
தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கச் செய்வேன்.' பல்லவி
20 என் ஊழியன் தாவீதைக் கண்டுபிடித்தேன்; என் திருத்தைலத்தால்
அவனுக்குத் திருப்பொழிவு செய்தேன். 21 என் கை எப்பொழுதும் அவனோடு
இருக்கும்; என் புயம் உண்மையாகவே அவனை வலிமைப்படுத்தும். பல்லவி
24 என் வாக்குப் பிறழாமையும் பேரன்பும் அவனோடு இருக்கும்; என்
பெயரால் அவனது வலிமை உயர்த்தப்படும். 26 'நீரே என் தந்தை, என்
இறைவன், என் மீட்பின் பாறை' என்று அவன் என்னை அழைப்பான். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
லூக் 4: 18-19 காண்க
அல்லேலூயா, அல்லேலூயா! ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும்
சிறைப்பட்டோர் விடுதலை அடைவர் என முழக்கமிடவும், ஆண்டவர் என்னை
அனுப்பியுள்ளார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு.
+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
10: 1-9
அக்காலத்தில் ஆண்டவர் வேறு எழுபத்திரண்டு பேரை நியமித்து, அவர்களைத்
தாம் போகவிருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு
முன்னே இருவர் இருவராக அனுப்பினார்.
அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது: "அறுவடை மிகுதி;
வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான
வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்.
புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவது
போல் உங்களை நான் அனுப்புகிறேன். பணப் பையோ வேறு பையோ மிதியடிகளோ
எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்; வழியில் எவருக்கும்
வணக்கம் செலுத்த வேண்டாம்.
நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், 'இந்த வீட்டுக்கு அமைதி
உண்டாகுக!' என முதலில் கூறுங்கள். அமைதியை விரும்புபவர் அங்கு
இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்;
இல்லா விட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும்.
அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே தங்கியிருங்கள்.
ஏனெனில் வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே.
வீடு வீடாய்ச் செல்ல வேண்டாம்.
நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொண்டால் உங்களுக்குப்
பரிமாறுவதை உண்ணுங்கள். அங்கு உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி,
இறையாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள்."
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
பதுவை நகர அந்தோனியார்
(Anthony of Padua) அல்லது லிஸ்பன் நகர அந்தோனியார் (Anthony
of Lisbon, 15 ஆகத்து 1195 13 சூன் 1231)[1] பிரான்சிஸ்கன்
சபையைச் சேர்ந்த குரு. இவர் லிஸ்பன் நகரில் பிறந்தாலும் 'பதுவைப்பதியர்'
என்றே அழைக்கப்பட்டார். இதற்குக் காரணம் இத்தாலி நாட்டிலுள்ள
பதுவை நகரில்தான் தமது கடைசி நாட்களைக் கழித்துள்ளார். அவர் மரித்ததும்
அடக்கம் செய்யப்பட்டதும் அங்குதான். ஆகவேதான் 'பதுவைப் பதியர்'
என அழைக்கப்படுகின்றார். இவரது புனித வாழ்வும், கூரிய நுண்ணறிவும்,
விவிலிய ஆர்வமும் இவர் இறந்த சில வருடங்களிலேயே புனிதர் பட்டம்
பெற வைத்தது.
இளமை
ஐரோப்பாவிலுள்ள போர்த்துக்கல் நாட்டின் தலைநகரான லிஸ்பன் மாநகரிலே
1195 ஆம் ஆண்டு ஆகத்து திங்கள் 15 ஆம் நாள் பிறந்தார். அவரது
பெற்றோர்கள் மார்டின், மேரி இவர்களுக்கு முன்றாவதாகப் பிறந்த
குழந்தையான இவருக்கு பெர்டிணாண்டு மார்ட்டின் தே பர்னாந்து என்று
பெயரிட்டனர். கூரிய நுண்ணறிவு படைத்த பெர்டிணாண்டு திறம்படக்
கல்வியில் தேர்வு பெற்றார்.
புனித அகுஸ்தீன் சபையில்
ஆன்ம குருவைக் கலந்தாலோசித்து புனித அகுஸ்தின் துறவற சபையில்
சேர்ந்தார். ஊர் உறவினரை விட்டு விலகியிருப்பதே நலம் என்று உணர்ந்த
பெர்டிணாண்டு தனது விருப்பத்திற்கிணங்க அதிபரின் அனுமதியின் படி
கொயிம்ரா என்னும் இடத்திற்குச் சென்று குருத்துவக் கல்வி பயின்றார்.
1219ம் ஆண்டில் 24 ஆம் வயதில் குருப்பட்டம் பெற்றார்.
மொராக்கோவில் வேத சாட்சிகளாக மரித்த ஐந்து பிரான்சிஸ்கன் சபையோரின்
திருப்பண்டம், பெப்ரவரி 1220-இல் கொண்டு வரப்பட்டது. இதைப் பற்றி
சிந்தித்த பெர்டிணாண்டு தாமும் அவ்வாறே கிறிஸ்துவுக்காக வேத
சாட்சியாக வேண்டும் என்று தணியாதத் தாகம் கொண்டார். எனவே
1221ஆம் ஆண்டு புனித அகுஸ்தீன் சபையை விட்டு விலகி பிரான்சிஸ்கன்
சபையில் சேர்ந்தார்.
பிரான்சிஸ்கன் சபையில்
பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தபோதுதான் பெர்ணாண்டு என்ற பெயரை
மாற்றி அந்தோனியார் மடத்தின் பெயரால் அந்தோனி என்ற புதுப் பெயர்
எடுத்துக்கொண்டார். சிறிதுகாலம் ஆப்பிரிக்காவிலுள்ள இஸ்லாமியருக்குப்
போதிக்கச் சென்றார். உடல்நிலை சரியில்லாததால் மீண்டும் இத்தாலிக்கே
திரும்பினார். போர்லி என்னுமிடத்தில் அதிபரின் வேண்டுகோளுக்கிணங்கி
அங்குள்ள பேராலயத்தில் மறையுரையாற்றினார். அன்றுமுதல் அந்தோனியார்
புகழ் பெற்ற பிரசங்கியானார். அதன்பின் பதுவை நகரில் திருமறை
சார்ந்த பணிசெய்து மறையுரையாற்றினார். அவரின் உரையை கேட்க ஆலயங்களில்
இடம் கொள்ளவில்லை. கிறிஸ்தவ கோட்பாடுகளை விளக்கியும், அந்த
நாட்களில் நிலவிய தப்பறைக் கொள்கைகளை எதிர்த்து ஆணித்தரமாகப்
போதித்தார்.
தாம் வாழ்ந்த காலத்திலும் இறப்பிற்குப் பின்னும் கடவுள் அளித்த
கொடையினால் அனேக புதுமைகள் செய்தார். இதனால் கோடி அற்புதர்
புனித அந்தோனியார் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றார்.
அந்தோனியாரின் அதிசயப் பண்புகள் மற்றும் அவர் புரிந்த புதுமைகள்
பற்றி பல நிகழ்வுகள் உள்ளன. ஒருமுறை இவர் ரீமினி என்னும் கடற்கரை
நகரில் போதித்ததைக் கேட்க சிலர் மறுத்தபோது மீன்கள் நீரின்
மேல் வந்து இவர் கூறியதைக் கேட்டுக்கொண்டிருந்தனவாம். இன்னொருமுறை
யூதர் ஒருவர் இயேசு நற்கருணையில் இருப்பதை மறுத்தாராம். ஆனால்
பட்டினி போடப்பட்ட அவரது கழுதை அதற்குமுன் போடப்பட்ட புல்லைத்
தின்னாமல் அந்தோனியாரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நற்கருணையின்
முன் மண்டியிட்டு ஆராதித்ததாம்.
மற்றுமொறு புதுமை, இவர் வாழ்ந்த காலத்தில் கடவுளுடைய
கிருபையால் இவர் செய்த புதுமைகளால் ஈர்க்கப்பெற்று இவரை நாடிவருவோர்
எண்ணிக்கை அதிகமானதால் துறவியர்கள் மடத்தில் அமைதிக்குக் குந்தகம்
ஏற்பட்டதாம். இதன் பொருட்டு மடத்தின் தலைமை குரு இவர் எண்ணிலடங்கா
புதுமைகள் செய்ய தடைவிதித்தார். நாள் ஒன்றுக்கு 13 புதுமைகள்
மட்டுமே செய்ய கட்டளையிட்டார். ஒருநாள் இவர் அன்றைக்கு செய்யகூடிய
13 புதுமைகளையும் செய்து முடித்தபின் மாலையில் வெளியே உலாவச்
சென்றார். அப்பொழுது உயரமான கட்டடத்திலிருந்து ஒருவர் தவறி
விழுந்தவேளையில் "அந்தோனியாரே என்னை காப்பாற்றும்" என்று உதவிக்குரல்
எழுப்ப இவர் அவரை வானத்திலேயே அந்தரத்தில் தொங்கவைத்ததாகவும்
அருகில் இருந்த மடத்திற்கு சென்று தலைமை குருவிடம் 14வது பதுமை
செய்ய அனுமதி பெற்று அவரை தரையில் பத்திரமாக இறக்கினாராம். மற்றொரு
புதுமையில், ஒரே நேரத்தில் அந்தோனியார் இரு இடங்களில் போதித்ததாகவும்
புதுமைகள் செய்ததாகவும் செய்தி உண்டு.
புனைவுகளை நீக்கிவிட்டு, வரலாற்று நிகழ்வுகளை மட்டுமே
பார்த்தாலும் புனித அந்தோனியார் பல புதுமைகள் செய்தார் என்பது
உண்மையே என்று அவரது அதிகாரப்பூர்வமான வரலாறு கூறுகின்றது.
இறப்பு
1231ஆம் ஆண்டு பல ஊர்களில் மறையுரை ஆற்றியதாலும், கடும் தவ முயற்சிகளாலும்
நோய்வாய்ப்பட்டார். அதே ஆண்டில் ஜீன் மாதம் 13 நாள் இறுதி திருவருட்சாதனங்களைப்
பெற்றபின் இறந்தார். அப்போது அவருக்கு வயது 36. அதன் பின் 336
ஆண்டுகளுக்குப்பின் அவருடைய கல்லறையானது தோண்டப்பட்டு அவருடைய
நாக்கு மட்டும் அழியாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த
நாக்கு இன்றும் பதுவை நகர் கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அந்தோனியார் இறந்து ஓராண்டு நிறைவதற்கு முன்னரே அவர் புனிதர்
என்று திருச்சபையால் அறிவிக்கப்பட்டார்.
1946ஆம் ஆண்டு திருத்தந்தை 12ம் பத்திநாதர் புனித அந்தோனியாரை
திருச்சபையின் மறைவல்லுநர்களில் ஒருவராக அறிவித்தார்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3

4
=================================================================================
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
5
=================================================================================
|
|