Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                         12 ஜூன 2019  
                        பாஸ்கா காலம் 10ம் வாரம்  - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
புதிய உடன்படிக்கையின் பணியாளராகும் தகுதியைக் கடவுள் எங்களுக்குத் தந்தார்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 4-11

சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்துவின் வழியாய் நாங்கள் கடவுள்மேல் வைத்துள்ள உறுதியான நம்பிக்கையால்தான் இவ்வாறு சொல்லுகிறோம். நாங்களே செய்ததாக எதன்மேலும் உரிமை பாராட்டிக்கொள்ள எங்களுக்குத் தகுதி இல்லை. எங்கள் தகுதி கடவுளிடம் இருந்தே வருகிறது. அவரே புதிய உடன்படிக்கையின் பணியாளராகும் தகுதியை எங்களுக்குத் தந்தார்.

அவ்வுடன்படிக்கை, எழுதப்பட்ட சட்டத்தைச் சார்ந்ததல்ல; தூய ஆவியையே சார்ந்தது. ஏனெனில் எழுதப்பட்ட சட்டத்தால் விளைவது சாவு; தூய ஆவியால் விளைவது வாழ்வு. கற்களில் பொறிக்கப்பட்ட அச்சட்டம் சார்ந்த திருப்பணி சாவை விளைவிப்பதாய் இருந்தும் அது மாட்சியுடன் அருளப்பட்டது. விரைவில் மறையவேண்டியதாய் இருந்த அம்மாட்சி மோசேயின் முகத்தில் இஸ்ரயேல் மக்கள் பார்க்க முடியாத அளவுக்கு ஒளி வீசியது. அதுவே அப்படியிருந்தது என்றால் தூய ஆவி சார்ந்த திருப்பணி எத்துணை மாட்சி பொருந்தியதாய் இருக்கும்! தண்டனைத் தீர்ப்பு அளிக்கும் திருப்பணியே இத்துணை மாட்சி பொருந்தியதாய் இருந்தது என்றால் விடுதலைத் தீர்ப்பு அளிக்கும் திருப்பணி எத்துணை மாட்சி நிறைந்ததாய் இருக்கும்! அன்றைய மாட்சியை ஒப்புயர்வற்ற இன்றைய மாட்சியோடு ஒப்பிட்டால் அது மாட்சியே அல்ல. மறையப் போவது மாட்சி உடையதாய் இருந்தால் நிலையாக இருப்பது எத்துணை மாட்சி மிகுந்ததாய் இருக்கும்!

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 99: 5. 6. 7. 8. 9 (பல்லவி: 9c)
=================================================================================
பல்லவி: நம் கடவுளாகிய ஆண்டவரே தூயவர்.

5 நம் கடவுளாகிய ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது அரியணைமுன் தாள் பணிந்து வணங்குங்கள்; அவரே தூயவர்! பல்லவி

6 மோசேயும் ஆரோனும் அவர்தம் குருக்கள்; அவரது பெயரால் மன்றாடுவோருள் சாமுவேலும் ஒருவர்; அவர்கள் ஆண்டவரை நோக்கி மன்றாடினர்; அவரும் அவர்களுக்குச் செவிசாய்த்தார். பல்லவி

7 மேகத் தூணிலிருந்து அவர்களோடு பேசினார்; அவர்கள் அவருடைய ஒழுங்கு முறைகளையும் அவர் அவர்களுக்குத் தந்த நியமங்களையும் கடைப்பிடித்தார்கள். பல்லவி

8 எங்கள் கடவுளாகிய ஆண்டவரே! நீர் அவர்களுக்குச் செவிசாய்த்தீர்; மன்னிக்கும் கடவுளாக உம்மை வெளிப்படுத்தினீர்; ஆயினும், அவர்களுடைய தீச்செயல்களுக்காய் நீர் அவர்களைத் தண்டித்தீர். பல்லவி

9 நம் கடவுளாகிய ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது திருமலையில் அவரைத் தொழுங்கள். ஏனெனில், நம் கடவுளாகிய ஆண்டவரே தூயவர். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
திபா 25: 4c,5a

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்; உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 17-19

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.

விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.

எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார்.

இவை அனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



சிந்தனை

நிறைவேற்றவே வந்தேன்.

எழுதப்படுகின்ற சட்டங்களுக்கும், ஆவியால் இயக்கப்படுவதற்கும் வேறுபாடு உண்டு.

எழுதப்படுகின்ற சட்டங்கள் மனித விருப்பு வெறுப்புக்குள்ளானதாக அமைகின்றது.

ஆவியானவர் சத்தியத்தில் இயக்குகின்றார். சத்தியம் பிளவுபடாத ஒன்றாகும். அங்கு விருப்பு வெறுப்புக்கு இடமில்லை.

எழுதப்படுகின்ற சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டவர்களானாலும், ஆவியினால் இயக்கப்படுகின்ற போது, அதன் தன்மையே மாறுபடுகின்றது.

இறைமகன் மனித வாழ்வில் சட்டதிட்டங்களுக்கேற்ப நடந்து கொண்டாலும், ஆவியினால் ஆட்கொள்ளப்பட்டவராக செயல்படுகின்றார். அதனால் மனிதர்கள் வெறுத்தாலும், இதுவே இறைதிருவுளம் என்றுச் சொல்லி தன்னையே சாவும் கையளிக்கின்றார். நிறைவேற்றினார்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 சகாகுன் நகர தூய யோவான் (ஜூன் 12)

"நீதி வெள்ளமெனப் பொங்கி வருக! நேர்மை வற்றாத ஆறாகப் பாய்ந்து வருக" (ஆமோ 5: 24)


வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் யோவான், ஸ்பெயின் நாட்டில் உள்ள சகாகுன் நகரில் 1430 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் சகாகுன் நகரில் பிறந்ததால், சகாகுன் நகர யோவான் என அழைக்கப்படுகின்றார். யோவான் தன்னுடைய தொடக்கக் கல்வியை சகாகுன் நகரில் இருந்த தூய ஆசிர்வாதப்பர் சபைத் துறவிகளால் நடத்தப்பட்டு வந்த பள்ளியில் கற்றார். அதன்பிறகு ஆயர் அல்போன்சோ அவர்களுடைய கண்காணிப்பில் வளர்ந்த இவர், 1445 ஆம் ஆண்டு குருவாக அருட்பொழிவு செய்யப்பட்டார். குருவாக மாறிய பின்பு நற்செய்தி அறிவிப்பதில் மிக ஆர்வமாகச் செயல்பட்டார்.

அந்நேரத்தில் இவர், இன்னும் ஒருசிலவற்றைக் கற்றுக்கொண்டால், நற்செய்தி அறிவிப்பை இன்னும் சிறப்பாகச் செய்யலாமே என்று சல்மான்கா பல்கலைக்கழகத்திற்குச் சென்று, நான்கு ஆண்டுகள் கல்வி கற்றார். அவர் பெற்ற இந்த கல்வியினால் ஓரளவு மனநிறைவு அடைந்தார். பின்னர் தூய செபஸ்தியார் பங்கிற்குச் சென்று மறைப்பணியை செய்யத் தொடங்கினார்.

யோவான் அன்னை மரியாவிடத்திலும் நற்கருணை ஆண்டவரிடத்திலும் அளவுகடந்த பக்தி கொண்டிருந்தார். சமயங்களில் திருப்பலியை நிறைவேற்றும்போது நற்கருணையில் உண்மையாகவே ஆண்டவர் இயேசு வருவதை உணர்ந்தார். யோவானுக்கு மக்களுடைய உள்ளங்களை ஊடுருவிப் பார்க்கக்கூடிய சக்தி இருந்தது. அதனால் இவரிடத்தில் ஒப்புரவு அருட்சாதனத்திற்கு வரும் யாரும் பொய் பேசுவதற்கு அஞ்சினார்கள். அப்படியே அவர்கள் பொய் பேசினால் அதனை அந்த இடத்திலேயே இவர் சுட்டிக்காட்டவும் தவறவில்லை.

தன் கண்முன்னாலே நடக்கும் தவறுகளை, சமூக அநீதிகளை அஞ்ச நெஞ்சத்தோடு எடுத்துரைப்பதற்கும் யோவான் தவறியதில்லை. அதற்காக அவர் நிறைய எதிர்வினைகளைச் சந்திக்கவேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கும் உள்ளாகவேண்டி வந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் இவர் உண்மையை எடுத்துரைப்பதற்குத் தயங்கியதில்லை.

இப்படி ஆண்டவரின் வார்த்தையை மனவுறுதியோடும் அஞ்சா நெஞ்சத்தோடும் எடுத்தரைத்த யோவான் 1479 ஆம் ஆண்டு. பெண் ஒருவரால் விஷம் வைத்துக் கொல்லப்பட்டார். இவருக்கு 1601 ஆம் ஆண்டு அருளாளர் பட்டமும் 1690 ஆம் ஆண்டு புனிதர் பட்டமும் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

சகாகுன் நகரத் தூய யோவானின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. உண்மையை உரக்கச் சொல்லுவோம்

தூய யோவானின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கும்போது, அவர் உண்மையை உரக்கச் சொன்னதுதான் நம்முடைய நினைவுக்கு வந்துபோகிறது. யோவானைப் போன்று நாம் உண்மையை உரக்கச் சொல்கின்றோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இந்த இடத்தில் ஒரு பத்திரிக்கையாளராக இருந்து உண்மையை உரக்கச் சொன்ன இலங்கைத் தமிழரான திசநாயகத்தைக் குறித்து நாம் சொல்லியாக வேண்டும்.

திசநாயகம் தனது நாட்டில் (இலங்கை) தன்னுடைய இனத்தை சேர்ந்த மக்களுக்கு எதிராக நடக்கும் இன ஒதுக்கல் மற்றும் இனப்படுகொலைகளை நேரிடையாக பார்க்கிறான். ஒரு பத்திர்கையாளனின் கடமை என்னவென்பதை நன்கறிந்து இருந்தாலும் தான் வாழும் நாட்டில் பத்திரிகை சுதந்திரம் கேலிக்கூத்தான ஒன்று என்பதை நன்றாகவே அறிந்திருந்தான். அதே நேரத்தில் தனது எழுத்துக்களால் சொல்லன்னா துயர்களை தான் அடையவேண்டியிருக்கும் என்பதும் அவனுக்கு தெரிந்திருந்தது. இருந்தாலும் தனது சிறுபான்மை இனத்திற்காகவும் தனது பத்திரிகை தொழிலின் நேர்மையின் பொருட்டும் உண்மைகளை எழுதுவது என்று தீர்மானித்தான். தொடர்ந்து எழுதினான் மிரட்டல்கள் தொடர்ந்தது இருந்தும் எழுதினான். அரசு கடுமையான சட்டத்தின் மூலம் சுமார் 425 நாட்கள் சிறையில் அடைத்தது. நீதிமன்றமோ இருபது ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை என்று தீர்ப்பளித்து இருக்கிறது.

நியூயார்க்கைச் சேர்ந்த 'பத்திரிகையாளர் பாதுகாப்பு குழு' என்ற அமைப்பு ஆண்டிற்கான 'பன்னாட்டு ஊடக சுதந்திர விருது' அளித்திருக்கிருக்கிறது. இருந்தும் இந்த பத்திரிக்கையாளர் இன்றைக்கு சிறைக்கம்பிகளுக்கு பின்னே கடுங்காவலுக்கு மத்தியில் சிறைத்தண்டனை அனுபவித்து கொண்டிருக்கிறார்.

தாம் மேற்கொண்ட ஊடகவியல் தொழிலின் பொருட்டு ஒருகணமும் தமது நேர்மையில் பின்வாங்காமல் இருந்து பெரும் துயருக்கு ஆளான திச நாயகம் நமக்கெல்லாம் ஒரு முன்மாதிரி. இயேசுவின் வழியில் நடக்கும் ஒவ்வொருவரும் இப்படித்தான் எத்தகைய இடர்வரினும் உண்மையை உரக்கச் சொல்பவர்களாக இருக்கவேண்டும்.

ஆகவே, சகாகுன் நகரத் தூய யோவானின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரை போன்று உண்மையை உரக்கச் சொல்லி, இயேசுவுக்கு சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 5: 17-19

திருச்சட்டத்தையும் இறைவாக்கையும் நிறைவேற்ற வந்த இயேசு

நிகழ்வு

முன்பொரு காலத்தில் ஒரு விறகுவெட்டி இருந்தார். அவர் தன்னுடைய ஊர்க்கும் பக்கத்து ஊர்க்கும் இடையே ஓடிக்கொண்டிருந்த ஆற்றினை மக்கள் அனைவரும் எளிதாகக் கடக்கும் வகையில் மரப்பாலம் ஒன்றைக் கட்டிக்கொண்டிருந்தார். அதற்கு நிறையப் பலகைகள் தேவைப்பட்டன. அதனால் அவரும் அவருடைய மகனும் சேர்ந்து ஊர்க்கு வெளியே இருந்த காட்டிற்குச் சென்று, பெரிய பெரிய மரங்களை வெட்டத் தொடங்கினர். இப்படியே மரப்பால வேலைகள் மெல்ல நடந்தன.

ஒருநாள் அவரும் அவருடைய மகனும் காட்டிற்குச் சென்று, சற்றுத் தள்ளித் தள்ளி மரங்களை வெட்டிக்கொண்டிருந்தபோது, ஒரு பெரிய மரத்தின் கிளை ஒன்று முறிந்து விறகுவெட்டியின் காலில் விழுந்தது. இதனால் அவர் பயங்கர சத்தம்போட்டுக் கீழே விழுந்தார். 'தன்னுடைய தந்தைக்கு ஏதோ ஆயிற்று' என்று அலறியடித்துக் கொண்டு ஓடிவந்த அந்த விறகுவெட்டியின் மகன் அவருடைய காலில் பெரியதொரு மரக்கிளை கிடப்பதைக் கண்டு, அதைத் தன்னால் முடிந்த மட்டும் நகர்த்திப் பார்த்தான். அவன் எவ்வளவோ முயன்றும் அவனால் ஒரு சிறு அடிகூட மரத்தை நகர்த்த முடியவில்லை.

இந்நிலையில் விறகுவெட்டி தன்னுடைய மகனிடம், "தம்பி! இதோ ஒரு வழித்தடம் தெரிகிறது அல்லவா. இந்த வழித்தடத்தில் அப்படியே நடந்துபோய்க்கொண்டிருந்தால் ஓர் ஊர் வரும். அந்த ஊரின் நுழைவாயிலருகே ஒரு வீடு இருக்கும். அந்த வீட்டில் பயில்வான் ஒருவர் இருப்பார். அவரிடம் எனக்கு ஏற்பட்டிருக்கின்ற இந்த நிலைமையைச் சொல்லி, அவரை விரைவாக அழைத்துக் கொண்டு வா" என்றார். அவனும் வேகமாகச் சென்று, ஊரின் நுழைவாயிலின் அருகில் இருந்த வீட்டினுள்ளே சென்று, அங்கிருந்த பயில்வானிடம் நடந்ததை எல்லாம் சொன்னான். பயில்வான் அந்த விறகுவெட்டியின் மகன் சொன்னதைக் கேட்டு ஒருநிமிடம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். பின்னர் அவர் அவனிடம், "தம்பி உன்னிடத்தில் நான் ஓர் உண்மையைச் சொல்லிக்கொள்ள விழைகிறேன். எங்கள் ஊரில் திருவிழா தொடங்கிவிட்டார்கள். எனவே, திருவிழா நடைபெறும் இந்தப் பத்து நாட்கட்கு யாரும் ஊரைவிட்டு வெளியே செல்லக்கூடாது. மீறி யாராவது ஊரை விட்டு வெளியே சென்றால், அவர்களை ஊரைவிட்டே தள்ளி வைத்துவிடுவார்கள்" என்றார்.

இப்படிச் சொல்லிவிட்டு அவர் தொடர்ந்து பேசினார்: "தம்பி ஊர்க்கட்டுப்பாடு ஒருபக்கம் இருக்கட்டும். ஆபத்தில் மாட்டிக்கொண்டிருக்கும் உன் தந்தையை நான் காப்பாற்ற வருகிறேன்" என்று சொல்லிவிட்டு அவர் விறகுவெட்டியின் மகனுக்குப் பின்னாலேயே சென்று, மரக்கிளை காலில் விழுந்து கிடந்த நிலையில் வலியால் துடித்துக்கொண்டிருந்த விறகுவெட்டியின் அருகே சென்றார். பின்னர் அவர் விறகுவெட்டியிடம், "நான் இந்த மரக்கிளையைச் சற்றுத் தூக்கிப் பிடிக்கின்ற இடைவெளியில் நீ உன்னுடைய காலை எடுத்துவிடு" என்றார். அவரும் அதற்குச் சரியென்று சொல்ல, பயில்வான் மரக்கிளையை சற்றுத் தூக்கிப்பிடித்தார். இந்த இடைவெளியில் விறகுவேட்டி மரக்கிளைக்கு அடியில் மாட்டிக்கொண்டிருந்த தன்னுடைய காலை வெளியே எடுத்தார். அவர் காலை வெளியே எடுத்ததுதான் தாமதம், மரக்கிளையின் பாரம் தாங்காமல் பயில்வான் அதைத் தன் கால்களிலேயே போட்டுக்கொண்டார். இதனால் அவருடைய கால்கள் முறிந்துபோயின.

'நமக்கு உதவ வந்தவர்க்கு இப்படியொரு நிலைமையா?' என்று விறகுவெட்டி மிகவும் பதறினார். உடனே அவரும் அவருடைய மகனும் அருகாமையில் இருந்த வைத்திய சாலைக்கு அவரைத் தூக்கிக்கொண்டு ஓடினர். அங்கு பயில்வானுடைய கால்களைச் சோதித்துப் பார்த்த வைத்தியர், கால்களை சரிசெய்ய முடியாது என்று கைவிரித்துவிட, பயில்வான் கால்கள் முறிந்த நிலையில் அவருடைய வீட்டிலேயே இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கிடையில் பயில்வான் ஊர்க்கட்டுப்பாட்டை மீறி திருவிழா நாட்களில் ஊரைவிட்டு வெளியே சென்றதால், ஊர்நிர்வாகம் அவரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தது. இதனால் அவர் தனியாக வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

செய்தி அறிந்த விறகுவெட்டி தன்னால் மிகவும் பாதிப்புக்குள்ளான பயில்வானைப் பார்க்கவந்தார். அப்பொழுது பயில்வான் விறகுவெட்டியிடம், "நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். இப்பொழுது நான் தனிமையை அதிகமாக உணர்கிறேன். அதனால் நீ உனக்கு நேரம் கிடைக்கின்றபோதெல்லாம் என்னப் பார்க்க வருவாயா?" என்றார். விறகுவெட்டியும் அதற்குச் சரியென்று சொல்லி, தனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவரைப் பார்க்க வந்தார்.

திருவிழா நாட்களில் ஊரைவிட்டு போகக்கூடாது என்று கட்டுப்பாடு இருந்தாலும், ஆபத்தில் இருந்த விறகுவெட்டிக்கு உதவச் சென்ற அந்தப் பயில்வான், ஓய்வுநாள் என்றெல்லாம் பாராது நோய்வாய்ப்பட்டுக் கிடந்த பலரையும் குணப்படுத்திய இயேசுவை நமக்கு நினைவுபடுத்துகின்றார்.

திருச்சட்டத்தை நிறைவேற்ற வந்த இயேசு

நற்செய்தியில் இயேசு மக்கள் கூட்டத்தைப் பார்த்து, "திருச்சட்டத்தை அழிப்பதற்கு அல்ல, அதை நிறைவேற்றவே வந்தேன்" என்கின்றார். இயேசு வாழ்ந்த காலத்தில் பலரும் அதிலும் குறிப்பாக பரிசேயக்கூட்டம் அவர்மீது வைத்த குற்றச்சாட்டு, இயேசு ஓய்வுநாள் சட்டத்தை மீறுகிறார் என்பதாகும். உண்மையில் இயேசு திருச்சட்டத்தை மீறவில்லை, மாறாக அதை நிறைவேற்றவே செய்தார் (கலா 4:4-5).

அப்படியானால் பரிசேயர்கள் சொல்வது போன்று இயேசு சட்டத்தை மீறவில்லையா என்றால், நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இயேசு மீறியதெல்லாம் மனிதர்கள் உருவாக்கிய அறிவுக்கு ஒவ்வாத, நடைமுறைக்குச் சாத்தியப்படாத சட்டங்களே ஆகும். இன்னும் சொல்லப்போனால் இயேசு திருச்சட்டத்தின் நிறைவாகிய அன்பை (கலா 5:14) எல்லார்க்கும் வழங்கி அதை நிறைவேற்றினார். இவ்வாறு அவர் திருச்சட்டத்தையும் இறைவாக்குகளையும் நிறைவேற்றுபவர் ஆனார்.

சிந்தனை

'உன்மீது நீ அன்புகூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வயாக' என்னும் இந்த ஒரே கட்டளையில் திருச்சட்டம் முழுவதும் நிறைவுபெறுகின்றது' (கலா 5:14) என்பார் பவுல். ஆண்டவர் இயேசுவும் அன்பை மட்டும்தான் எல்லார்க்கும் காட்டி திருச்சட்டத்தை நிறைவேற்றினார். நாமும் அவர் வழியில் நடந்து அன்புக் கட்டளையைக் கடைப்பிடித்து வாழ்வோம்; அறிவுக்கு ஒவ்வாக சாத்திர சம்பிரதாயங்களைப் புறக்கணிப்போம். இறைவனுக்கு உகந்த வழியில் நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
 2 கொரிந்தியர் 3: 4-11

"எங்கட்கு தகுதி கடவுளிடமிருந்தே வருகின்றது"

நிகழ்வு

காட்டில் சிலந்தி ஒன்று வாழ்ந்துவந்தது. அதற்குத் தான் அழகாக வலை பின்னுகிறோம் என்ற கர்வமும் தன்னைப் போன்று யாராலும் வலை பின்னமுடியாது என்ற எண்ணமும் இருந்தது.

ஒரு கோடைகாலத்தில் அந்த சிலந்தி ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்திற்கு வலை பின்னத் தொடங்கியது. ஏறக்குறைய ஒருமணி நேரக் கடின உழைப்பிற்குப் பின், அது ஓர் அற்புதமான வலையைப் பின்னி முடித்தது. வலையைப் பின்னி முடித்ததும், 'ப்பா... நம்மைப் போன்று வலை பின்னுவதற்கு இந்த உலகத்தில் யாருமே இல்லை' என்று தற்பெருமை பேசத் தொடங்கியது.

இவ்வாறு அது தான் பின்னிய வலையைக் குறித்துத் தற்பெருமை பேசிக்கொண்டிருக்கும்போது, அதனுடைய கண்ணில் முதல் மரத்திலிருந்து வலையைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருந்த இழையைக் கண்டது. அது தான் பின்னிய வலைக்கு இனிமேலும் தேவையில்லை என்பதை உணர்ந்து. எனவே, அது மரத்திலிருந்து வந்த இழையைத் துண்டித்தது. அது மரத்திலிருந்து வந்த இழையைத் துண்டித்த மறுகணம், கீழே விழுந்தது. 'அது கீழே விழும். பிடித்து உண்ணலாம்' என்று கீழே காத்துக்கொண்டிருந்த பல்லியானது, சிலந்தி கீழே விழுந்ததும் பாய்ந்துசென்று, இரையாக்கிக் கொண்டது.

இந்த நிகழ்வில் வரும் சிலந்தி, எப்படி தான் பின்னிய வலையைத் தாங்கிக்பிடித்துக்கொண்டிருந்த இழையைத் தேவையில்லை என்று துண்டித்ததால், கீழே விழுந்து அழிவைச் சந்தித்தோ, அதுபோன்று பலரும், 'எல்லாம் தங்களால்தான் ஆனது, ஆகிறது' என்று நினைத்துக்கொண்டு கடவுளோடு உள்ள உறவைத் துண்டிக்கொள்கின்றார்கள். எப்போது அவர்கள் தங்களால்தான் எல்லாம் ஆகிறது என்று நினைத்துக்கொண்டு கடவுளோடு உள்ள உறவுத் துண்டித்துக் கொள்கிறார்களோ, அன்றைக்கே அவர்கள் தங்களுடைய ஆணவத்தால் அழிந்து, கடைசியில் ஒன்றுமில்லாமல் போய்விடுகின்றார்கள்.

இத்தகைய ஆணவப் போக்கிற்கு முற்றிலும் எதிராக, எல்லாம் கடவுளால் நடக்கின்றது, தன்னிடம் இருக்கும் எல்லாமும் கடவுள் தந்தது என்ற எண்ணத்தோடு வாழ்ந்த ஒருவரைக் குறித்து இன்றைய முதல் வாசகம் எடுத்துச் சொல்கின்றது. நாம் அவரைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே என்ற உணர்வோடு வாழ்ந்த பவுல்

இன்றைய முதல் வாசகத்தில் பவுல் கொரிந்து நகர மக்கட்கு இவ்வாறு கூறுகின்றார்; "நாங்களே செய்ததாக எதன்மேலும் உரிமை பாராட்டிக்கொள்ள எங்கட்குத் தகுதி இல்லை. எங்கள் தகுதி கடவுளிடமிருந்தே வருகின்றது."

பவுலின் இவ்வார்த்தைகள் ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கப்பட வேண்டியவையாக இருக்கின்றன. தமஸ்கு நகர் நோக்கிச் சென்ற பவுலை ஆண்டவர் இயேசு தடுத்தாடக்கொண்டு, தன்னுடைய பணிக்காகத் தேர்ந்துகொண்ட பிறகு, அவர் பலர்க்கும் அதிலும் குறிப்பாக புறவினத்தார்க்கு ஆண்டவரின் நற்செய்தியை மிக வல்லமையோடு அறிவித்தார். இன்னும் பல வல்ல செயல்களைச் செய்தார். இதற்கான பேரையும் பெருமையையும் தனக்குக் சொந்தமானது என்று பவுல் ஒருபோதும் உரிமை கொண்டாடவில்லை. மாறாக, இன்றைய முதல் வாசகத்தில் கூறுவதுபோல், "எங்கள் தகுதி கடவுளிடமிருந்தே வருகிறது" என்ற எண்ணத்தோடு வாழ்ந்துவந்தார். இக்கூற்றினை வைத்துப் பார்த்துபோது, 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்ற எண்ணத்தோடு அவர் வாழ்ந்து வந்தார் என்று உறுதியாக நாம் சொல்லலாம்.

தாழ்ச்சிக்கு இலக்கணமாக வாழ்ந்து வந்த பவுல்

இன்றைக்கு ஒருசிலர் இருக்கின்றார்கள். அவர்கள் மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் சிலந்தியைப் போன்று எல்லாமும் தங்களால்தான் ஆனது என்ற மமதையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். இவர்களுடைய அழிவுக் காலம் வெகுதொலையில் என்பதை நாம் உறுதியாகச் சொல்லலாம். ஆனால், பவுல் இதற்கு முற்றிலும் மாறாக 'எங்கள் தகுதி கடவுளிடமிருந்து வருகிறது' என்ற தாழ்த்தியான உள்ளத்தோடு வாழ்ந்து வந்தார். அதனால் அவர் கடவுளால் மேலும் உயர்த்தப்பட்டார். நாமும் கடவுளால்தான் எல்லாமும் ஆகிறது. அவருடைய ஆற்றலையும் வல்லமையையும் வெளிபடுத்த நாமெல்லாம் கருவிகள் என்ற எண்ணத்தோடு வாழ்கின்றபோது, நாம் கடவுளால் மேலும் மேலும் உயர்த்தப்படுவோம் என்பது உறுதி.

பவுல் இக்கருத்தை இன்னும் அழகாக கொரிந்தியர்க்கு எழுதிய முதல் திருமுகத்தில், பதினைந்தாம் அதிகாரத்தில் இவ்வாறு கூறுவார், "இப்போது நான் இந்த நிலையில் இருப்பது கடவுளின் அருளால்தான்." (1 கொரி 15:10). எவ்வளவு முதிர்ச்சியான வார்த்தைகள் இவை. நாமும் கடவுளின் அருளால்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்ற எண்ணத்தோடு தாழ்ச்சியோடு வாழ்ந்தோமெனில், கடவுளின் அருள் நமக்கு மேலும் மேலும் கிடைக்கும் என்பது உறுதி.

சிந்தனை

'மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்தினேன். எங்கிருந்து எனக்கு உதவி வரும். விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்தே எனக்கு உதவி வரும்' (திபா 121: 1-2) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், கடவுளிடமிருந்துதான் நமக்கு எல்லாமும் வருகின்றது என்ற உணர்வோடு தாழ்ச்சியோடு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 
சிற்றெழுத்து

'சாமுவேல் வளர்ந்தான். ஆண்டவர் அவனோடு இருந்தார். சாமுவேலது வார்த்தை எதையும் அவர் தரையில் விழ விடவில்லை' (காண். 1 சாமு 3:19)

'தரையில் விழுவது' என்றால் வீணாவது என்பது பொருள். தொடக்கநூலில் யூதா, தாமார் நிகழ்வில், 'அந்த மரபு தனக்குரியதாய் இராதென்று அறிந்து, ஓனான் தாமாரோடு உடலுறவு கொள்கையில், தன் சகோதரனுக்கு வழி மரபு தோன்றாதவாறு தன் விந்தை தரையில் சிந்தி வந்தான்' (காண். தொநூ 38:8) என்ற இறைவார்த்தைப் பகுதியில் இப்பொருள் தெளிவாகிறது.

தரையில் விழும் அல்லது கீழே விழும் எதுவும் வீணாகிறது என்பது விவிலியப் புரிதல்.

நாம் பழக்கடைக்குச் செல்கிறோம் என வைத்துக்கொள்வோம். ஒரு கிலோ மாம்பழம் வாங்குகிறோம். வாங்கும்போது கடைக்காரர், 'இப்பழங்கள் நன்கு இனிக்கும்' என்கிறார். வீட்டிற்கு வந்து அவற்றை அறுத்துச் சாப்பிட்டால், அது ரொம்பவே புளிக்கின்றது. உடனடியாக, கடைக்காரர் நம்மை ஏமாற்றிவிட்டார் என்கிறோம். கடைக்காரர் சொன்ன சொற்கள் வெற்றுச் சொற்களாக இருக்கின்றன.

ஆக, சொற்கள் தாங்கள் எவற்றைக் குறிக்கின்றனவோ அவற்றை நிறைவேற்றவில்லை என்றால் அவை வெற்றுச் சொற்கள் அல்லது பொய்ச் சொற்கள் ஆகின்றன.

நான் நான்கு மணிக்கு பேருந்து நிலையத்திற்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு, நான் நான்கு மணிக்கு வரவில்லை என்றால் என் சொற்கள் தரையில் விழுந்த சொற்கள் ஆகிவிடுகின்றன.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு. திருச்சட்டத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து வார்த்தைகளும் தம்மில் நிறைவேறுவதாகச் சொல்கின்றார். மேலும், 'அயோட்டா' என்று அழைக்கப்படுகின்ற கிரேக்க சிற்றெழுத்து-புள்ளி கூட அழிக்கப்படாது என்கிறார்.

'நிறைவேறுவது' என்றால் 'செயல்வடிவம் பெறுவது.'

நான் ஒரு கட்டுரை எழுதவேண்டும் எனச் சொல்கிறேன் என்றால், அந்தக் கட்டுரை எழுதி முடிக்கும்போதுதான் அது செயல்வடிவம் பெறுகின்றது.

இன்று நாம் நம்முடைய சொற்களாலேயே அறியப்படுகின்றோம். நம்முடைய இதயத்தின் நீட்சியே சொற்கள். சொற்களை இலாவகமாகக் கையாள ஒரு வழி சிரிப்பும், அமைதியும். சில இடங்களில் சொற்களை உதிர்க்காமலேயே வெறும் புன்முறுவலால், அல்லது வெறும் அமைதியால் நாம் பதில் கூறிவிட முடியும். நாம் இன்று எப்படிப்பட்ட சொற்களைப் பேசுகிறோம்? அல்லது எழுதுகிறோம்? எவ்வளவு சொற்கள் நிறைவு பெறுகின்றன? எவ்வளவு பொருள்கள் தரையில் சிந்தப்படுகின்றன?

மலைப்பொழிவின் ஒவ்வொரு போதனையும் புனிதத்தையும் மகிழ்ச்சியையும் நோக்கமாகக் கொண்டதாக இருக்கிறது. என்னுடைய வார்த்தைகள் என்னுடைய புனிதத்திற்கும் மகிழ்ச்சிக்கும் ஊற்றாக இருக்கின்றனவா?

சிற்றெழுத்து தானே, சின்ன வார்த்தை தானே என வார்த்தைகளை வீணடிக்க வேண்டாம். நிறைவேறாத வார்த்தைகள் எல்லாம் வீணான வார்த்தைகளே. அவை பிறக்காமலேயே இருந்திருந்தால், பேசுபவருக்கு நலமாய் இருந்திருக்கும்!


Rev. Fr. Yesu Karunanidhi

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 5
=================================================================================


 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!