|
|
11 ஜூன் 2019 |
|
|
பாஸ்கா காலம்
10ம் வாரம் - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இயேசு
கிறிஸ்து 'ஆம்' என உண்மையையே பேசுபவர்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து
வாசகம் 1: 18-22
சகோதரர் சகோதரிகளே, நான் ஒரே நேரத்தில் 'ஆம்' என்றும் 'இல்லை'
என்றும் உங்களிடம் பேசுவதில்லை. கடவுள் உண்மையுள்ளவராய் இருப்பதுபோல்
நான் சொல்வதும் உண்மையே. நானும் சில்வானும் திமொத்தேயுவும் உங்களிடையே
இருந்தபோது நாங்கள் அறிவித்த இறைமகன் இயேசு கிறிஸ்து ஒரே நேரத்தில்
'ஆம்' என்றும் 'இல்லை' என்றும் பேசுபவர் அல்ல.
மாறாக அவர் 'ஆம்' என உண்மையையே பேசுபவர். அவர் சொல்லும் 'ஆம்'
வழியாக, கடவுள் அருளும் எல்லா வாக்குறுதிகளும் நிறைவேறுகின்றன.
அதனால்தான் நாம் கடவுளைப் போற்றிப் புகழும்போது அவர் வழியாக 'ஆமென்'
எனச் சொல்லுகிறோம்.
கடவுளே எங்களை உங்களோடு சேர்த்துள்ளார்; இவ்வாறு கிறிஸ்துவோடு
நமக்கு இருக்கும் உறவை அவர் உறுதிப்படுத்துகிறார். அவரே நமக்கு
அருள்பொழிவு செய்துள்ளார். அவரே நம் மீட்பை உறுதிப்படுத்தும்
அடையாளமாகத் தூய ஆவியை நம் உள்ளத்தில் பொழிந்து நம்மீது தம்
முத்திரையைப் பதித்தார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா
119: 129-130. 131-132. 133,135
(பல்லவி: 135a)
=================================================================================
பல்லவி: உம் ஊழியன்மீது உமது முக ஒளி வீசச் செய்யும்!
129 உம் ஒழுங்குமுறைகள் வியப்புக்குரியவை; ஆகவே, நான் அவற்றைக்
கடைப்பிடித்து வருகின்றேன். 130 உம் சொற்களைப் பற்றிய விளக்கம்
ஒளி தருகின்றது; அது பேதைகளுக்கு நுண்ணறிவு ஊட்டுகிறது. பல்லவி
131 வாயை 'ஆ'வெனத் திறக்கின்றேன்; பெருமூச்சு விடுகின்றேன்; ஏனெனில்,
உம் கட்டளைகளுக்காக ஏங்குகின்றேன். 132 உம் பெயரின்மீது பற்றுக்கொண்டோருக்கு
நீர் வழக்கமாய்ச் செய்வதுபோல், என் பக்கம் திரும்பி எனக்கும்
இரங்கும்! பல்லவி
133 உமது வாக்கில் என் காலடிகளை நிலைப்படுத்தும்! தீயது எதுவும்
என்னை மேற்கொள்ள விடாதேயும்! 135 உம் ஊழியன்மீது உமது முக ஒளி
வீசச் செய்யும்! உம் விதிமுறைகளை எனக்குக் கற்பித்தருளும். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
மத் 5: 16
அல்லேலூயா, அல்லேலூயா! உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது
மக்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப்
போற்றிப் புகழ்வார்கள். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 13-16
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: 'நீங்கள் மண்ணுலகிற்கு
உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக்
கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு
மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது.
நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும்
நகர் மறைவாயிருக்க முடியாது. எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள்
வைப்பதில்லை; மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான்
அது வீட்டில் உள்ள அனைவருக்கும் ஒளி தரும். இவ்வாறே உங்கள் ஒளி
மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு
உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்."
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
சிந்தனை:
ஓளி, உப்பு இரண்டையும் சிறிய எளிய உவமையாக ஆண்டவர் கற்றுக்
கொடுப்பதைப் பார்க்கின்றோம்.
இரண்டும் அன்றாட வாழ்வில் பயன்பட்டில் உள்ளவையே.
பாவத்தில் வாழ்பவரே இருளை நாடுவார்கள்.
கடவுளின் மக்கள் இருளை அல்ல, ஓளியைத் தேடுவார்கள்.
உலகிலே ஓளி விடும் சுடர் தீபங்களாக வாழ அழைக்கப்பட்டு இருக்கின்றோம்
என பவுல் பிலிப்பியருக்கு எமுதிய மடலில் கூறுகின்றார்.
ஓளி தன்பால் அனைவரையும் ஈர்க்க கூடியது.
உப்பில்லாத பண்டம் குப்பையிலே. உப்பு சுவையூட்டக் கூடியது.
நம் வாழ்வும் பிறர் வாழ்வுக்கு சுவையூட்டக் கூடியதாக இருந்திடல்
வேண்டும்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
மத்தேயு 5: 13-16
"நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள்"
நிகழ்வு
பத்தொன்பதாம் நூற்றாண்டில் அமெரிக்காவில் ஒரு வழக்குரைஞர் இருந்தார்.
ஒருநாள் அவர் தன்னுடைய நண்பர்கள் ஒருசிலரோடு பக்கத்து ஊர்க்கு
ஒரு முக்கியமான விடயமாகப் போனார். போகிற வழியில் ஒரு மரத்திலிருந்து
இரண்டு ராபின் பறவைக் குஞ்சுகள் கீழே விழுந்து கத்திக்கொண்டிருந்தன.
அந்த இரண்டு குஞ்சுப் பறவைகளையும் கூட்டிற்குத் தூக்கிச் செல்ல
முடியாமல் தாய் பறவை மிகுந்த வேதனையோடு அங்கும் இங்கும் பறந்துகொண்டிருந்தது.
இக்காட்சிப் பார்த்த அந்த வழக்குரைஞர் பயணத்தைத் தொடராமல் அப்படியே
நின்றார். அவரோடு இருந்த நண்பர்களோ எதுவும் நடக்காததுபோல் அவர்கள்
விருப்பத்திற்கு ஏற்ப நடந்துபோனார்கள். அந்த வழக்குரைஞரோ கீழே
விழுந்துகிடந்த அந்த இரண்டு குஞ்சுப் பறவைகளையும்
தூக்கிக்கொண்டுபோய் மரத்தின்மேல் இருந்த கூட்டின்மீது
வைத்துவிட்டு இறங்கினார். இதனால் அவர் அணிந்திருந்த ஆடை அழுக்கானது.
'ஆடை அழுக்கானது பற்றிக் கவலையில்லை. ஒரு நல்ல காரியம்
செய்திருக்கிறோமே' என்ற மகிழ்ச்சியில் அவர் கண்களை ஏறெடுத்துப்
பார்த்தபோது, அவருடைய நண்பர்கள் வெகுதொலைவில் சென்றிருந்தார்கள்.
எனவே, அவர் வேகமாக ஓடி நண்பர்களை அடைந்தார்.
அவருடைய நண்பர்கள் அவருடைய அழுக்கான ஆடைகளைப் பார்த்துவிட்டு,
"உனக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை... நாங்களும்தான் அந்த
குஞ்சுப் பறவைகள் கீழே விழுந்து கிடந்ததைக் கண்டும் காணாததுபோல்
எங்களுடைய வழியில் வரவில்லையா? அதுபோன்று நீயும் வந்திருக்கவேண்டியதுதானே!"
என்றார்கள். அதற்கு அந்த வழக்குரைஞர், "உங்களைப் போன்று நானும்
அந்த இரண்டு குஞ்சுப் பறவைகளைக் கண்டும் காணாமல் வந்திருக்கலாம்தான்.
ஒருவேளை நான் அப்படி வந்திருந்தால், இன்று இரவு என்னால் சரியாகத்
தூங்க முடியாது.
'கீழே விழுந்து கிடந்த குஞ்சுப் பறவைகளைக் கண்டும்
காணாமல் போய்விட்டேனே' என்ற குற்ற உணர்வு என்னை வருத்திக்கொண்டே
இருக்கும். அதனால்தான் நான் அப்படிச் செய்தேன்" என்றார். அவர்
இவ்வாறு சொன்னதைக் கேட்டு அவருடைய நண்பர்கள் ஏதும் பேசாது அமைதியானார்கள்.
இந்த நிகழ்வில் வரும் வழக்குரைஞர் யாரென்று உங்களுக்கு நினைவு
வருகின்றதா?. இளம்வயதிலேயே உயிர்களிடத்தில் அன்பும் சக மனிதர்களிடத்தில்
அக்கறையும் கொண்டிருந்த அந்த வழக்குரைஞர் வேறு யாருமல்ல.
முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் அவர்களே. அவர்தான்
உயிர்களிடத்தில் அன்பும் சக மனிதர்களிடத்தில் அக்கறையும்
கொண்டு இந்த உலகிற்கு உப்பாகத் திகழ்ந்தார். இன்றைய நற்செய்தியில்
இயேசு, "நீங்கள் இந்த உலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள்" என்கின்றார்.
நாம் எப்படி உலகிற்கு உப்பாக இருப்பது என்று இப்பொழுது
சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
உப்பு உணவிற்கு சுவையூட்டும்
நற்செய்தியில் இயேசு, மக்களைப் பார்த்து, "நீங்கள் மண்ணுலகிற்கு
உப்பாய் இருக்கிறீர்கள்" என்பதைக் காரணமின்றிச் சொல்லவில்லை.
ஏனென்றால் பழங்காலத்திலும் சரி, இக்காலத்திலும் சரி உப்பானது
மனிதர்களின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்று (சீரா 39: 26). மேலும்
அதற்குப் பல்வேறு சிறப்புப் பண்புகள் உண்டு. அவற்றுள் முதன்மையான
பண்பு, அது சுவையூட்டக் கூடியதாக இருக்கும் (யோபு 6:6) என்பதாகும்.
இது உண்மை என்பதால்தான் 'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்று
சொல்கின்றோம். எப்படி இந்த உப்பு உணவிற்குச் சுவையூட்டுகின்றதோ,
அதைப் போன்று இயேசுவின் சீடர்கள் யாவரும் தங்களுடைய வாழ்வால்
இவ்வுலகிற்கு சுவையூட்டவேண்டும்.
உப்பு தூய்மைப்படுத்தும்
உப்பு உணவிற்குச் சுவையூட்டுவதோடு அல்லாமல், அது தண்ணீரைத்
தூய்மைப்படுத்துவதாக இருக்கின்றது. அரசர்கள் இரண்டாம் நூல்,
இரண்டாம் அதிகாரத்தில் வருகின்ற நிகழ்வு (2 அர 2: 19 23) இதற்குச்
சான்று பகர்கின்றது. இங்கு இறைவாக்கினர் எலிசாவிடம் வருகின்ற
ஒருசிலர் தங்களுடைய பகுதியில் நல்ல தண்ணீர் இல்லை, நிலமும் நற்பலன்
தருவதில்லை என்று சொல்கின்றபோது, அவர் அவர்களிடம் ஒரு கிண்ணத்தில்
உப்பைக் கொண்டுவரச் சொல்லி, அதை அங்கு கொட்ட நல்ல தண்ணீர்
கிடைக்கின்றது. இவ்வாறு உப்பு தண்ணீரைத் தூய்மைப்படுத்துவதாக
இருக்கின்றது. இயேசுவின் வழியில் நடக்கின்ற அவருடைய சீடர்கள்
யாவரும் உப்பைப் போன்று இந்த சமூகத்தைத் தூய்மைப் படுத்தும் பணியினைச்
செய்யவேண்டும் என்றுதான் இயேசு அவ்வாறு கூறுகின்றார்.
உப்பு தன்னையே இழந்து பயன்தரும்
உப்பு உணவுக்குச் சுவையூட்டுகின்றது, தண்ணீரைத் தூய்மைப் படுத்துகின்றது
என்பது போக, அது தன்னையே இழந்து பலன்தருகின்றது. எப்படி மெழுகு
தன்னையே கரைத்துக்கொண்டு மற்றவர்க்கு ஒளிதருகின்றதோ, அதுபோன்று
உப்பும் தன்னையே இழந்து உணவுக்குச் சுவையும் தண்ணீர்க்குத்
தூய்மையும் தருகின்றது. இயேசுவின் சீடர்கள் யாவரும் உப்பைப்
போன்று தன்னையே இழந்து இந்த சமூகத்திற்குப் பலன் கொடுக்கவேண்டும்
என்பதுதான் இயேசுவின் விருப்பமாக இருக்கின்றது. அப்படியில்லை
என்றால், நாம் சாரமற்ற உப்பாகிவிடுவோம்.
சிந்தனை
உப்பு சாரத்தோடு இருக்கின்றபோதுதான் அது எல்லார்க்கும் பயன்படும்.
மனிதர்களும் அப்படிச் சாரத்தோடு இருக்கின்றபோதுதான் எல்லார்க்கும்
பயன்தரமுடியும். நாம் சாரமுள்ள உப்பாக இருப்போம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
2 கொரிந்தியர் 1: 18-22
"கடவுள் உண்மையுள்ளவராயிருப்பது போல் நான் சொல்வதும் உண்மையே"
நிகழ்வு
'நானூறு ரூபாய் போதும்... வாழ்நாள் முழுக்க உட்கார்ந்தே சாப்பிடலாம்'
- இந்த விளம்பரம்தான் அந்த நகரில் இருந்த எல்லாருடைய
பேசுபொருளாக இருந்தது. 'நானூறு உரூபாய் இருந்தால், வாழ்நாள்
முழுக்க உட்கார்ந்து சாப்பிடலாமா? இது என்ன புதுவகையான அறிவிப்பாக
இருக்கிறதே? ஒருவேளை மக்களை ஏமாற்றத்தான் இப்படியோர் அறிவிப்பை
வெளியிட்டுக்கிறார்களோ? இது பொய்யாக இருக்குமோ?' என்று நகரில்
இருந்த ஒவ்வொருவரும் இது குறித்தே பேசிக் கொண்டிருந்தார்கள்.
இந்த விளம்பரம் வெளிவந்த ஒருவாரம் கழித்து, இன்னொரு விளம்பரமும்
வந்தது. அந்த விளம்பரத்தில், குறிப்பிட்ட தேதியில்,
குறிப்பிட்ட இடத்திற்கு வருவோர்க்கு, நானூறு உரூபாயில்,
வாழ்நாள் முழுக்க உட்கார்ந்தே சாப்பிடுவதற்கான வழிவகைகள்
சொல்லிக் கொடுக்கப்படும் என்று இருந்தது.
இதைத் தொடர்ந்து நகரில் இருந்த மக்கள் அனைவரும் குறிப்பிட்ட
தேதியில், குறிப்பிட்ட இடத்தில் கூட்டம் கூட்டமாய்க் கூடினார்.
அப்பொழுது கூட்டத்திலிருந்த ஒருவர், தனக்குப் பக்கத்திலிருந்த
இன்னொருவரைப் பார்த்து, "இவர்கள் நானூறு உரூபாய்க்கு, வாழ்நாள்
முழுக்க உட்கார்ந்து சாப்பிடுவதற்கு வழிவகை செய்யப்போகிறார்கள்
என்றால், இது மிகப்பெரிய ஏமாற்று வேலையாகத்தான் இருக்கும் என்று
எனக்குத் தோன்றுகிறது. இருந்தாலும் மக்கள் எல்லாரும் வந்திருப்பதால்
நானும் வந்திருக்கிறேன்" என்றார். அதற்கு அவர் இவரிடம்,
"ஒருவேளை நானூறு உரூபாய் என்று சொன்னதை, நான்காயிரம் என்றும்
நாற்பதாயிரம் என்றும் சொல்லப்போகிறார்களோ என்னவோ...
பொறுத்திருந்து பார்ப்போம்" என்றார்.
கூட்டத்திலிருந்து ஒவ்வொருவராக விளம்பரம் கொடுக்கப்பட்ட அலுவலகத்திற்குள்
நுழைத்தார்கள். உள்ளே நுழைந்த ஒவ்வொர்வர்க்கும் அதிர்ச்சி
காத்திருந்தது. ஏனென்றால், அங்கிருந்த ஒருவர் தனக்கு முன்பாக
வைக்கப்பட்டிருந்த இருக்கையைச் (Chair) சுட்டிக்காட்டி, "இந்த
இருக்கையின் விலை நானூறு உரூபாய்தான், இதை நீங்கள் வாங்கி உங்களுடைய
வீட்டிற்குக் கொண்டுசென்றால், வாழ்நாள் முழுக்க உட்கார்ந்தே
சாப்பிடலாம்" என்று சொல்லிக்கொண்டிருந்தார். அவர் சொன்னதைக்
கேட்டுவிட்டு, உள்ளே நுழைந்த அத்தனை பேரும், 'நானூறு உரூபாய்க்கு,
வாழ்நாள் முழுக்க உட்கார்ந்து சாப்பிடுவது என்பது இதுதானோ' என்று
தலையில் அடித்துகொண்டு வெளியே ஓடிவந்தார்கள்.
இந்த நிகழ்வில் வரும் விளம்பரதாரர்க்ளைப் போன்றுதான் பலரும்
சொல்வது ஒன்றும் செய்வது வேறோன்றுமாய் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட
சூழ்நிலையில், உண்மையை மட்டுமே போதித்து, அதை வாழ்ந்துகாட்டிய
இயேசுவைக் குறித்தும் அவருடைய அடியார் பவுலைக் குறித்தும்
சிந்தித்துப் பார்ப்பது மிகவும் இன்றியமையாததாகும்.
உண்மையை உரக்கச் சொன்ன பவுல்
இன்றைய முதல் வாசகத்தில் பவுல், கொரிந்து நகர மக்களிடம்,
"கடவுள் உண்மையுள்ளவராய் இருப்பதுபோல் நான் சொல்வதும் உண்மையே"
என்கின்றார். பவுலின் இவ்வார்த்தைகள் ஆழமாக சிந்தித்துப்
பார்க்கப்பட வேண்டியவையாக இருக்கின்றன.
பவுல் கொரிந்து நகர மக்களிடம் கட்டுக்கதைகளையோ அல்லது பொய்யான
தகவல்களையோ எடுத்துச் சொல்லவில்லை. மாறாக வழியும் உண்மையும்
வாழ்வுமாய் (யோவா 14:6) இருக்கின்றவரும் சொன்னபடியே உயிர்த்தெழுந்தவருமான
இயேசு கிறிஸ்துவைப் பற்றி எடுத்துச் சொன்னார். இதைத் தான் அவர்,
"கடவுள் உண்மையாயிருப்பதுபோல் நான் சொல்வது உண்மை" என்கின்றார்.
இவ்வார்த்தைகள் மேலும் ஒருசில உண்மைகளை நமக்கு எடுத்துக்
கூறுகின்றன. அவற்றைக் குறித்து தொடர்ந்து சிந்தித்துப்
பார்ப்போம்.
வாக்குறுதி மாறாக இறைவன்
நான் சொல்வது உண்மையே என்பதை நிரூபிப்பதற்காகப் பவுல், கடவுள்
உண்மையாயிருக்கின்றார் என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றார்.
கடவுள் உண்மையாய் இருக்கின்றார் என்பதை வேறு விதமாகச் சொல்லவேண்டும்
என்றால், அவர் தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுபவராக இருக்கின்றார்
என்று சொல்லலாம். கடவுள், தொடக்கத்தில் தோன்றிய சாத்தானிடம்,
"உனக்கும் பெண்ணும் உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை
உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ
அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்" (தொநூ 3:15) என்பார். அவர்
இவ்வாறு சொன்னது இயேசுவின் பிறப்பின்மூலம் நிறைவேறுகிறது. இதன்மூலம்
இறைவன் வாக்குறுதி மாறாதவர் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். இறைவன்
வாக்குறுதி மாறாதவர் என்றால், நாமும் அவ்வாறு இருக்கவேண்டியது
மிகவும் இன்றியமையாதது.
சிந்தனை
'உம் வாக்குறுதி முற்றிலும் உண்மை சரியென மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
உம் ஊழியன் அதன்மீது பற்றுக்கொண்டுள்ளான்' (திபா 119: 140) என்பார்
திருப்பாடல் ஆசிரியர். ஆகவே, கடவுள் தான் கொடுத்த
வாக்குறுதிக்கு உண்மையுள்ளவராய் இருப்பது போல், நாம் நம்முடைய
வார்த்தைக்கு உண்மையுள்ளவர்களாய் இருப்போம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
5
=================================================================================
|
|