Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                         11 ஜூன 2019  
                         பொதுக்காலம் பத்தாம் வாரம்  - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம்  - புனித பர்னபா - திருத்தூதர் நினைவு
=================================================================================
பர்னபா தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு நம்பிக்கை நிறைந்தவராய் பெருந்திரளான மக்களை ஆண்டவரிடம் சேர்த்தார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 11: 21b-26; 13: 1-3


அந்நாள்களில் பெருந் தொகையான மக்கள் நம்பிக்கை கொண்டு ஆண்டவரிடம் திரும்பினர். இந்தச் செய்தி எருசலேம் திருச்சபையினரின் காதில் விழவே அவர்கள் பர்னபாவை அந்தியோக்கியா வரை சென்று வர அனுப்பி வைத்தார்கள். அவர் அங்குச் சென்றபோது, கடவுளின் அருள்செயலைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார்; மேலும் உறுதியான உள்ளத்தோடு ஆண்டவரைச் சார்ந்திருக்குமாறு அனைவரையும் ஊக்கப்படுத்தினார். அவர் நல்லவர்; தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு நம்பிக்கை நிறைந்தவராய்ப் பெருந்திரளான மக்களை ஆண்டவரிடம் சேர்த்தார்.

பின்பு சவுலைத் தேடி அவர் தர்சு நகர் சென்றார்; அவரைக் கண்டு, அந்தியோக்கியாவுக்கு அழைத்துவந்தார். அவர்கள் ஓராண்டு முழுவதும் அந்தச் சபையாரோடு கூடவே இருந்து பெருந்திரளான மக்களுக்குக் கற்பித்து வந்தார்கள். அந்தியோக்கியாவில்தான் முதல் முறையாகச் சீடர்கள் கிறிஸ்தவர்கள் என்னும் பெயரைப் பெற்றார்கள்.

அந்தியோக்கியத் திருச்சபையில் பர்னபா, நீகர் எனப்படும் சிமியோன், சிரேன் ஊரானாகிய லூக்கியு, குறுநில மன்னன் ஏரோதுவுடன் வளர்ந்த மனாயீன், சவுல் ஆகியோர் இறைவாக்கினராகவும், போதகராகவும் இருந்தனர்.

அவர்கள் நோன்பிருந்து ஆண்டவரை வழிபடும்போது தூய ஆவியார் அவர்களிடம், "பர்னபாவையும் சவுலையும் ஒரு தனிப்பட்ட பணிக்கென நான் அழைத்திருக்கிறேன். அந்தப் பணிக்காக அவர்களை ஒதுக்கி வையுங்கள்" என்று கூறினார். அவர்கள் நோன்பிருந்து இறைவனிடம் வேண்டினார்கள்; தங்கள் கைகளை அவ்விருவர் மீது வைத்துத் திருப்பணியில் அமர்த்தி அவர்களை அனுப்பி வைத்தார்கள்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 98: 1. 2-3. 4. 5-6 (பல்லவி: 2b)
=================================================================================
பல்லவி: பிற இனத்தார் கண்முன்னே ஆண்டவர் நீதியை வெளிப்படுத்தினார்.

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி

2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண் முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். 3 இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். பல்லவி

4 உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். பல்லவி

5 யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்; யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள். 6 ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கி கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
மத் 28: 19a,20b

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
'விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது' எனப் பறைசாற்றுங்கள்.

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 7-13

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: "நீங்கள் செல்லும்போது 'விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது' எனப் பறைசாற்றுங்கள். நலம் குன்றியவர்களைக் குணமாக்குங்கள்; இறந்தோரை உயிர்பெற்றெழச் செய்யுங்கள்; தொழுநோயாளரை நலமாக்குங்கள்; பேய்களை ஓட்டுங்கள்; கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள். பொன், வெள்ளி, செப்புக் காசு எதையும் உங்கள் இடைக் கச்சைகளில் வைத்துக்கொள்ள வேண்டாம். பயணத்திற்காகப் பையோ, இரண்டு அங்கிகளோ, மிதியடிகளோ, கைத்தடியோ எடுத்துக்கொண்டு போக வேண்டாம். ஏனெனில் வேலையாள் தம் உணவுக்கு உரிமை உடையவரே.

நீங்கள் எந்த நகருக்கோ ஊருக்கோ சென்றாலும் அங்கே உங்களை ஏற்கத் தகுதியுடையவர் யாரெனக் கேட்டறியுங்கள். அங்கிருந்து புறப்படும் வரை அவரோடு தங்கியிருங்கள். அந்த வீட்டுக்குள் செல்லும்பொழுதே, வீட்டாருக்கு வாழ்த்துக் கூறுங்கள். வீட்டார் தகுதி உள்ளவராய் இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவர்கள் மேல் தங்கட்டும்; அவர்கள் தகுதியற்றவர்களாய் இருந்தால் அது உங்களிடமே திரும்பி வரட்டும்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
இன்று திருச்சபையானது தூய பர்னபாவின் விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. தூய பர்னபா திருத்தூதர்களின் அணியில் இடம்பெறாவிட்டாலும், ஒரு திருத்தூதரைப் போன்று தொடக்கத் திருச்சபையில் பற்பல பணிகளை ஆற்றியவர்; மக்களிடத்தில் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தவர்.

தூய பர்னபாவைக் குறித்து வாசிக்கும்போது "இவர் நல்லவர், தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு, நம்பிக்கை நிறைந்தவராய் பெருந்திரளான மக்களை ஆண்டவரிடம் சேர்த்தார்" என்று அறிகின்றோம். (திப 11:24), அதேபோன்று அந்தியோக்கு நகரில் இயேசுவைப் பின்பற்றக்கூடியவர்களின் எண்ணிக்கை பெருகியபோது பர்னபாதான் அங்கு சென்று, இறைமக்களைத் தேற்றுக்கிறார்; அவர்களை ஊக்கப்படுத்துகிறார்.

முன்னதாக இவர் தன்னுடைய நிலத்தை விற்று, அதிலிருந்து வந்த வருமானத்தை திருதூதர்களின் காலடியில் வைத்தார், திருதூதர்கள் அந்த பணத்தை தேவையில் இருந்தோருக்குப் பகிர்ந்தளித்தார் என்றும் வாசிக்கின்றோம் (திப 4: 36-37). மேலும் இவர் இயேசுவின் எழுபத்தி இரண்டு சீடர்களில் ஒருவராக இருந்திருக்கலாம் என்பது வரலாற்று ஆசிரியர்கள் சொல்லும் செய்தியாக இருக்கின்றது.

தூய பர்னபா ஆற்றிய நற்செய்திப் பணிகள் ஏராளம். இவர்தான் சவுலாக இருந்த பவுலை திருதூதர்களிடமும், இறைமக்கள் கூட்டத்திடமும் அறிமுகப்படுத்தினார் என்று சொன்னால் அது மிகையாது. அதன்பின்னர் பவுலோடு பல இடங்களுக்குச் சென்று நற்செய்தி அறிவிப்பதில் உறுதுணையாக இருந்தார்; அவரோடு எல்லா துன்பங்களையும், வேதனைகளையும் அனுபவித்தார்.

வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி இவர் கி.பி. 61 ஆம் ஆண்டு உரோமைக்குச் சென்று, அங்கே நற்செய்தி அறிவிக்கும்போது யூதர்களால் கொல்லப்பட்டார் என்றும், கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில்தான் இவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் அறிகின்றோம். இவ்வாறு அவர் ஆண்டவர் இயேசு சொன்னதுபோன்று உலகெங்கும் சென்று, படைப்பிற்கெல்லாம் நற்செய்தி அறிவித்து, கிறிஸ்துவின் உண்மையான ஊழியனாகத் திகழ்ந்தார்.

தூய பர்னபாவின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்லநாளில் இவரது விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன? என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம். தொடக்கத்திலே சொன்னோம் பர்னபா தன்னுடைய நிலத்தை விற்று அதிலிருந்து வந்த தொகையை திருதூதர்களின் காலடியில் வைக்க, அதை அவர்கள் தேவையில் இருப்போருக்கு பகிர்ந்தளித்தார்கள் என்று. இன்றைய நற்செய்தி வாசகத்திலும் ஆண்டவர் இயேசு கொடுங்கள், அப்போது உங்களுக்குக் கொடுக்கப்படும் என்கிறார். ஆகவே, நம்மிடத்தில் கொடுக்கக்கூடிய மனநிலை அதுவும் தேவையில் இருப்போருக்குக் கொடுக்கக்கூடிய மனநிலை இருக்கிறதா? என்று சிந்தித்துப் பார்த்து, அதன்படி வாழ முயல்வதுதான் தூய பர்னபாவின் விழா நமக்கு எடுத்துரைக்கும் செய்தியாக இருக்கும் என நம்பலாம்.


இன்றைக்கு நம்மிடத்தில் கொடுக்கக்கூடிய மனநிலை இருக்கிறதா? என்று சிந்தித்துப் பார்ப்பது மிகவும் பொருத்தமாகும். ஏதோ இயற்கைப் பேரிடர் என்றால் உதவ முன்வருகின்றோம். ஆனால் மற்ற நேரங்களில் நம்மிடம் பிறருக்குக் கொடுக்கும் மனநிலை அடியோடு மறைந்துபோய்விடுகிறது. எல்லாச் சூழ்நிலையிலும் கொடுப்பதுதான் மிகச் சிறந்த கொடையாகும்.

அமெரிக்காவில் வாழ்ந்த மிகப்பெரிய வள்ளல் ராக்பெல்லர். அவர் பெரிய கோடிஸ்வரர், ஸ்டாண்டர்ட் ஆயில் கார்பரேசன் நிறுவத்தின் உரிமையாளர். அவர் தன்னுடைய நண்பர்கள், ஊழியர்களிடத்தில் அடிக்கடி சொல்வார். "மக்கள் நம்மிடத்தில் எண்ணெய் வாங்கி, வாங்கி நம்மை கோடிஸ்வரராக்கி விட்டார்கள். அவர்கள் எப்போது நம்மைப் போன்று கோடிஸ்வரர் ஆவது" என்று.

மக்களுக்கு எப்படியாவது உதவவேண்டும் என்ற எண்ணம் அவரிடம் அதிகமாக இருந்தது. அதனால் அவர் பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு உதவினார்; ஏழை எளிய மக்களுக்கு உதவி வந்தார்.

ஒருநாள் அவரைச் சந்திக்க அவருடைய நெருங்கிய நண்பர் வந்திருந்தார். அவர் ஒரு மருத்துவர். அவர் தான் எழுதிய ஒரு புத்தகத்தைக் கொண்டுவந்து, அதை அவரிடம் பரிசாகக் கொடுத்தார். அந்த புத்தகத்தில் நூற்றுக்கணக்கான நோய்களுக்கு மருத்துவக் குறிப்புகள், மருத்துவ ஆய்வுக் கட்டுரைகள் இருந்தன. அதைப் பார்த்த ராக்பெல்லர் தன்னுடைய நண்பரிடம், "இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் மருந்துகளை வாங்குவதற்கும், மருத்துவம் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் எல்லா உதவிகளை செய்கிறேன்" என்று வாக்களித்து, உடனே 2 லட்சம் பவுண்டுகளை அவர்களிடம் கொடுத்தார்.

தேவையில் இருக்கும் மனிதர்களுக்கு நம்மாலான உதவிகளைச் செய்யவேண்டும் என்பதில் ராக்பெல்லர் எப்போதும் கண்ணும் கருத்துமாய் இருந்தார்.

ஆகவே தூய பர்னபாவின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று தேவையில் இருப்பவருக்கு உதவுவோம். தளர்ந்திருப்போரை ஊக்கப்படுத்துவோம், இயேசுவின் நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவிப்போம். இயேசுவின் உண்மையான ஊழியனாக இருந்து அவருக்குச் சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.



- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
நிகழ்வு

லிஸ்திராவில் பர்னபாவும் பவுலும் போதித்துக்கொண்டிருக்கும்போது அங்கே பிறவிலேயே கால் ஊனமுற்ற ஒருவர் இருந்தார். அவரிடம் நலம்பெறுவதற்கான நம்பிக்கை இருந்ததால் பவுல் அவரிடம், "நீர் எழுந்து காலூன்றி நேராக நில்லும்" என்றார். உடனே அவர் துள்ளி எழுந்து நடக்கத் தொடங்கினார். பவுல் செய்வதைப் பார்த்த மக்கள் கூட்டத்தினர் தங்களுடைய மொழியில், "தெய்வங்கள் மனித உருவில் நம்மிடம் இறங்கி வந்திருக்கின்றன" என்று குரலெழுப்பிக் கூறினார்கள். அதோடு மட்டுமல்லாமல் நகருக்கு வெளியே இருந்த சேயுசு கோவில் அர்ச்சகர் காளைகளையும் பூமாலைகளையும் கோவில் வாயிலுக்குக் கொண்டுவந்து கூட்டத்தினருடன் சேர்ந்து பலியிட விருப்பினார். அப்போது பர்னபா அவர்களுக்கு முன்பாகத் தோன்றி, "மனிதர்களே!, ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப் போன்ற மனிதர்கள்தாம்; நீங்கள் இந்த பயனற்ற பொருட்களை விட்டுவிட்டு, விண்ணையும் மண்ணையும் கடலையும் அவற்றிலுள்ள அனைத்தையும் உண்டாக்கிய வாழும் கடவுளிடம் திரும்புங்கள் என்ற நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கின்றோம்" என்றார்.

அந்நேரத்தில் அந்தியோக்கியாவிலிருந்தும் இக்கோனியாவிலிருந்தும் யூதர்கள் வந்து மக்களைத் தூண்டிவிட்டு பவுல் மற்றும் பர்னபாவின் மீது கல்லெறியத் தொடங்கினார்கள். ஆனால் அவர்கள் இறைவனின் கருணையால் உதிர் தப்பினார்கள். எல்லா புகழும் மாட்சியும் இறைவனுக்கே உரியது என்று செயல்பட்ட பர்னபா மற்றும் பவுலின் வாழ்வு நமது சிந்தினைக்குரியதாக இருக்கின்றது

வாழ்க்கை வரலாறு

பர்னபா சைப்ரசை சேர்ந்த ஒரு லேவியர். இவருக்கு யோசேப்பு என்ற இன்னொரு பெயரும் உண்டு, ஊக்குவிக்கும் பண்பு கொண்டவர் என்றும் அழைக்கப்படுகின்றார். திருதூதர்கள் அணியில் இவர் இடம்பெறாவிட்டாலும் தொடக்கத் திருச்சபையில் இவர் திருத்தூதருக்கு இணையாக வைத்துப் பார்க்கப்பட்டார். இவர் இயேசு அனுப்பிய எழுபத்தி இரண்டு சீடர்களில் ஒருவர் எனவும் சொல்லப்படுகின்றது. அதேபோல் இவர் நல்லவர், தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவர், நம்பிக்கை நிறைந்தவர் என்றும் விவிலியம் நமக்கு எடுத்துச் சொல்கிறது (திப 11:24).

விவிலியத்தில் இவர் அறிமுகமாகும் இடம் திருத்தூதர் பணிகள் நூல் 4 ஆம் அதிகாரம் ஆகும். அங்கே இவர் தன்னுடைய நிலபுலன்களை எல்லாம் விற்று அதிலிருந்து வந்த பணத்தை திருதூதர்களின் காலடியில் கொண்டுபோய் வைக்கிறார். அவர்கள் இறைமக்களின் தேவைக்கு ஏற்ப ஒவ்வொருவருக்கும் பகிர்ந்துகொடுக்கிறார்கள் (திப 4: 36-37). அடுத்ததாக இவர் வரக்கூடிய இடம் திருத்தூதர் பணிகள் நூல் 9 வது அதிகாரம் ஆகும். அங்கே இவர் கிறிஸ்தவர்களை கொடுமைப்படுத்திய பவுல் மனமாற்றம் பெற்று மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கச் சென்றபோது மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளாத நிலை ஏற்பட்டபோது பர்னபாதான் பவுலைக் குறித்து நல்லவிதமாய் பேசி, இறைமக்கள் கூட்டத்தில் அவரை அறிமுகம் செய்துவைக்கிறார் (திப 9: 26-28)

பர்னபா திருதூதர்கள் மற்றும் மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றிருந்தார். அதனால்தான் அந்தியோக்கியாவில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பெருகியபோது திருதூதர்கள் பர்னபாவை அவர்களுக்கு மத்தியில் அனுப்பி வைத்து, அவரை நற்செய்தி அறிவிக்கச் செய்தார்கள் (திப 11: 22-23). கிபி.45 ஆம் ஆண்டு எருசலேமில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டபோது இவர்தான் அந்தியோக்கு நகருக்குச் சென்று, அங்கிருந்த மக்களிடமிருந்து நிதி திரட்டி வந்து, அதனை எருசலேமில் இருந்த இறைமக்களுக்குக் கொடுத்து அவர்களின் பசியைப் போக்கினார் (திப 14: 18-20). 51 ஆம் ஆண்டு எருசலேமில் நடைபெற்ற முதல் பொதுச் சங்கத்தில் இவர் பவுலடியார் சார்பாக இருந்து தன்னுடைய பங்களிப்பைச் செய்தார்.

பர்னபா பவுலோடு சேர்ந்து ஆற்றிய நற்செய்திப் பணிகள் ஏராளம். அதற்காக அவர் பயணம் செய்த தூரம் ஏராளம். பர்னபா பவுலின் முதல் திருத்தூது பயணத்தில் உடன்சென்றார். இரண்டாவது திருத்தூது பயணத்தின் போதுதான் பவுல் தன்னோடு ஜான் மாற்கை கூட்டிச்செல்ல மறுத்தபோது, பர்னபா அவரை தன்னோடு கூட்டிக்கொண்டு நற்செய்தி அறிவிக்கச் செல்கிறார். பதிலுக்கு பவுல் தன்னோடு சீலாவைக் கூட்டிக்கொண்டு நற்செய்தி அறிவிக்கச் செல்கிறார். பர்னபா பவுலை விட்டுப் பிரிந்துசென்றபிறகு அவர் மிலன் நகருக்குச் சென்று நற்செய்தி அறிவித்ததாகச் சொல்லப்படுகின்றது. இன்னும் ஒருசிலர் இவர் சைப்பிரசுக்குச் சென்று நற்செய்தி அறிவித்தபோது அங்கே இருந்தவர்கள் 61 ஆம் ஆண்டு இவரைக் கல்லால் எறிந்துகொன்றார்கள் என்றும் சொல்கிறார்கள். இவருடைய உடல் 477 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டது, இவருடைய உடலோடு மத்தேயு நற்செய்தியின் பிரதி ஒன்றும் இருந்ததாகச் சொல்லப்படுகின்றது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய பர்னபாவின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. இருப்பதை பிறரோடு பகிர்ந்து வாழ்தல்

தூய பர்னபா தன்னிடம் இருப்பதை பிறரோடு பகிர்ந்து வாழும் தாராள உள்ளத்தினராய் வாழ்ந்தார் என்று சொன்னால் அது மிகையாகது. அதனால்தான் அவர் தன்னுடைய உடமைகளை விற்று, அந்தப் பணத்தை திருத்தூதர்களின் காலடியில் கொண்டுபோய் வைக்கிறார். பர்னபாவிடம் இருந்த தன்னிடம் இருப்பதை பிறருக்கு, கடவுளுக்குக் கொடுக்கும் நல்ல மனநிலை நம்மிடத்தில் இருக்கின்றதா என சிந்தித்துப் பார்ப்பது மிகவும் சிறப்பாகும். ஆனால் இன்றைக்கு, தான் சம்பாதித்தை யாருக்கும் கொடுக்காமல் தானே அனுபவிக்கும் குறுகிய மனநிலை நம்மிடத்தில் இருப்பது மிகவும் வேதனையளிக்கிறது.

ஒருமுறை கோடீஸ்வரன் ஒருவன் கப்பலில் பயணம் சென்றான். திடீரென புயலடிக்க ஆரம்பித்தது. கப்பல் மூழ்கிவிடும்நிலை ஏற்பட பயணிகள் எல்லோரும் இறைவனிடம் ஜெபிக்கத் தொடங்கினார்கள். இந்தக் கோடீஸ்வரன் சிறுது நேரம் எதுவும் செய்யாது அமைதியாகத் தான் இருந்தான். ஆனால் புயலின் வேகம் அதிகரித்துக்கொண்டே சென்றதைப் பார்த்து இறந்துவிடுவோமோ என்ற பயம் அவனைத் தொற்றிக்கொண்டது. உடனே அவனும் "இறைவா! எங்களைக் காப்பாற்று. நீர் மட்டும் என்னைக் காப்பாற்றிக் கரை சேர்த்துவிட்டால் என் விலை உயர்ந்த மாளிகையை விற்று அந்தப் பணத்தை எல்லாம் ஏழைகளுக்கு தர்மம் செய்து விடுகிறேன்" என்று உரக்க சொன்னான். எல்லார் காதிலும் அது விழுந்தது.

சற்று நேரத்தில் புயல் ஓய்ந்தது. எல்லோருக்கும் எல்லையில்லாத மகிழ்ச்சி. இவனுக்கு மட்டும் மிகவும் கவலையாகி விட்டது. "அடடா... அவசரப் பட்டுவிட்டோமே, கொஞ்சம் பொறுத்திருந்தால் எப்படியும் புயல் அமைதியாகி இருக்கும். வீணாக எல்லார் காதிலும் விழும்படியாக நேர்த்தி செய்துவிட்டோமே என்று கண் கலங்கினான். வேறு வழியின்றி அவன் தன் மாளிகையை விற்பது என்று முடிவுக்கு வந்தான். ஒரு கோடி ரூபாய் பெறுமானமுள்ள அந்த மாளிகையை விற்க அவன் வித்தியாசமானதொரு விளம்பரம் செய்தான். அந்த மாளிகையில் ஒரு பூனையைக் கட்டிவைத்தான் அந்தப் பூனையின் விலை ஒரு கோடி ரூபாய். அந்த மாளிகையின் விலை ஒரு ரூபாய். ஆனால் இரண்டையும் சேர்த்துத்தான் வாங்க வேண்டும் இது நிபந்தனை.

ஏன் இந்த பைத்தியக்காரத்தனம் என்று யாருக்கும் கேட்கவில்லை. ஒரு கோடியே ஒரு ரூபாய்க்கு ஒரு மாளிகையும் ஒரு பூனையும் கிடைக்கிறது என்று சொல்லி ஊரில் இருந்த ஒருவன் அவற்றை விலை கொடுத்து வாங்கிக்கொண்டான். அதன்பிறகு அந்தக் கோடீஸ்வரன் பூனையின் விலையான ஒரு கோடி ரூபாயை தன் பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டு மாளிகையின் விலையான ஒரு ரூபாயை வேண்டுதலின் படி ஏழைகளுக்கு தர்மம் செய்தான்.

இத கோடிஸ்வரனைப் போன்றுதான் நிறையப் பேர் தங்களிடம் இருப்பதை யாருக்கும் கொடுக்கக்கூடாது என்ற மனநிலையில் வாழ்ந்து வருகிறார்கள். இத்தகைய மனநிலை நம்மிடத்திலிருந்து மாறவேண்டும். இருப்பதை பிறருக்குக் கொடுக்கும் நல்ல மனப்பான்மை நம்மிடத்தில் உருவாகவேண்டும்.

2. பிறர் வளர்ச்சியில் மகிழ்தல்

அந்தியோக்கு நகரில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பெருகியபோது திருத்தூதர் தங்களுடைய பிரதிநிதியாக பர்னபாபைத் தான் அனுப்பி வைக்கிறார்கள். அவர் அங்கு சென்று பார்த்தபோது அவர்களுடைய வளர்ச்சியைக் கண்டு மகிழ்ந்தார் என்று படிக்கின்றோம் (திப 11: 22-23). பிறருடைய வளர்ச்சியைக் கண்டு பொறாமைப் படாமல், அவர்களைக் குறித்து தவறாகப் பேசாமல் மகிழ்ந்திருக்கவேண்டும் என்பதே இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. நம்மோடு வாழக்கூடிய ஒருவர் பணத்திலும் பதவியிலும் உயர்கிறபோது நாம் தூய பர்ணபாவைப் போன்று அவரைக் கண்டு மகிழ்கிறோமா? அல்லது பொறாமைப்படுகின்றோமா? என்பது சிந்தனைக்கு உட்படுத்திப் பார்ப்போம்.

3. நற்செய்தி அறிவிப்பில் ஆர்வம்

தூய பர்னபா ஆர்வமிக்க நற்செய்திப் பணியாளராக இருந்து செயல்பட்டார் என்று சொன்னால் அது மிகையாகாது. அவர் தூய பவுலோடு இருந்தபோதும் சரி, தனியாக இருந்தபோதும் சரி நற்செய்தியை எல்லா மக்களுக்கும் எடுத்துரைப்பதில் ஆர்வம்கொண்டிருந்தார். அதற்காகத் தன்னுடைய உயிரையும் கொடுத்தார். அவருடைய விழாவைக் கொண்டாடும் நமக்கு அத்தகைய ஆர்வமும் பற்றும் இருக்கிறதா என சிந்தித்துப் பார்ப்போம். நற்செய்தியில் இயேசு கூறுவார், "உலகெங்கும் சென்று, படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை அறிவியுங்கள்" (மாற் 16:15) என்று. இயேசு சொன்ன கட்டளையை தூய பர்னபா வாழ்வாக்கினார், நாமும் அவரைப் போன்று நற்செய்திப் பணியாளர்களாய் வாழ்வோம்.

ஆகவே, தூய பர்னபாவின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் நாமும் அவரைப் போன்று இருப்பதை பிறரோடு பகிர்ந்து வாழ்வோம், பிறரின் வளர்ச்சியில் மகிழ்ச்சி காண்போம், ஆர்வமுள்ள நற்செய்திப் பணியாளர்களாய் வாழ்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
 

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 புனித பர்னபாவின் திருநாளைக் கொண்டாடுகிறோம். பவுலின் நுகத்தடித் தோழராக, உடனுழைப்பாளராக இவர் அறியப்பட்டாலும், பவுலின் வாழ்வில் இன்னும் ஒரு முக்கியமான இடத்தை பெறுகின்றார்.

பவுலைப் பொறுத்தவரையில் அவர் இறைவனின் அழைப்பு மூன்று நிலைகளில் பெறுகின்றார்: ஒன்று, தாயின் கருவறையிலிருந்தே தன்னை இறைவன் அழைத்ததாகப் பதிவு செய்கிறார். இரண்டு, தமஸ்கு நகர் போகும் வழியில் இறைவனால் தடுத்தாட்கொள்ளப்படுகின்றார். மூன்று, அவருடைய பணி ஏற்கப்படாமல், துவண்டு போய்க் கிடக்க, அவரை திருத்தூதர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றார் பர்னபா.

பர்னபா வழியாக தன்னுடைய இறையழைத்தலை மூன்றாம் முறையாகக் கண்டுகொள்கின்றார் பவுல்.
சரியான நபரை இனங்கண்டு சரியா இடத்தில் அவருக்குரியவற்றைக் கொடுக்க முன்வருவதற்கு நிறைய தாராள உள்ளம் தேவை. இதை பர்னபா கொண்டிருந்தார். இவரின் தாராள உள்ளத்திற்குக் கடவுளும் நல்ல பரிசைத் தருகின்றார். இவரைத் தன்னுடைய சிறப்புப் பணிக்கென ஒதுக்கிவைத்துக்கொள்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 5:13-16) 'உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க!' என்கிறார் இயேசு. ஆக, ஒளியின் நிறைவு அல்லது நோக்கம் அதன் பயன்பாட்டில்தான் இருக்கிறது. மனித வாழ்வின் நோக்கமும் நிறைவும் அதுவே என்பதை பர்னபா உணர்ந்திருந்தார்.

இதை நாமும் கற்றுக்கொள்ளலாமே!



Rev . Fr. Yesu Karunanidhi

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 5
=================================================================================


 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!