Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                         10 ஜூன 2019  
                        பாஸ்கா காலம் 10ம் வாரம்  - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
நாங்களே கடவுளிடமிருந்து ஆறுதல் பெற்றுள்ளோம்; மற்றவர்க்கு ஆறுதல் அளிக்க எங்களால் முடிகிறது.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-7

கொரிந்து நகரில் உள்ள கடவுளின் திருச்சபைக்கும் அக்காயா மாநிலம் முழுவதிலும் வாழும் இறைமக்கள் அனைவருக்கும் கடவுளின் திருவுளத்தால் கிறிஸ்து இயேசுவின் திருத்தூதனாயிருக்கும் பவுலும் சகோதரராகிய திமொத்தேயுவும் எழுதுவது: நம் தந்தையாம் கடவுளிடமிருந் தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் தந்தை இரக்கம் நிறைந்த கடவுள். அவரே ஆறுதல் அனைத்துக்கும் ஊற்று; அவரைப் போற்றுவோம். கடவுள் எங்களுடைய இன்னல்கள் அனைத்திலும் எங்களுக்கு ஆறுதல் அளிக்கிறார். நாங்களே கடவுளிடமிருந்து ஆறுதல் பெற்றுள்ளதால் பல்வேறு இன்னல்களில் உழலும் மற்ற மக்களுக்கும் ஆறுதல் அளிக்க எங்களால் முடிகிறது. கிறிஸ்து நமக்காக மிகுதியாகத் துன்புற்றார்; அதுபோல அவர் வழியாக நாம் மிகுதியான ஆறுதலும் பெறுகிறோம்.

ஆகவே நாங்கள் துன்புறுகிறோம் என்றால் அது உங்கள் ஆறுதலுக்காகவும் மீட்புக்காகவும்தான்; நாங்கள் ஆறுதல் பெறுகிறோம் என்றால் அது உங்கள் ஆறுதலுக்காகவே. நாங்கள் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வதைப் போல நீங்களும் உங்கள் துன்பங்களைத் தளரா மனத்துடன் பொறுத்துக் கொள்வதற்கு இந்த ஆறுதல் ஆற்றல் அளிக்கிறது. நீங்கள் எங்கள் துன்பத்தில் பங்கெடுத்ததைப்போல் எங்களுடைய ஆறுதலிலும் பங்குபெறுவீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். நீங்கள் இவ்வாறு செய்வீர்கள் என உறுதியாக எதிர்நோக்கி இருக்கிறோம்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 34: 1-2. 3-4. 5-6. 7-8 (பல்லவி: 8a)
=================================================================================

பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.

1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். 2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். பல்லவி

3 என்னுடன் ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம். 4 துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். பல்லவி

5 அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை. 6 இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவி சாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். பல்லவி

7 ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்துநின்று காத்திடுவர். 8 ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
*மத் 5: 12a *

அல்லேலூயா, அல்லேலூயா! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அல்லேலூயா.
 அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-12

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர். அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை:

"ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.

துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர்.

கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்.

நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர்.

இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்.

தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்.

அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.

நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.

என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறு பெற்றவர்களே!

மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்."

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 2 கொரிந்தியர் 1: 1-7

ஆறுதல் அளிக்கும் இறைவன்

நிகழ்வு

கிறிஸ்துவின்மீது ஆழமான நம்பிக்கைகொண்ட கிறிஸ்துவர் ஒருவர் இருந்தார். அவர் தன்னுடைய பகுதியில் மக்கட்கு ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை மிகத் துணிச்சலாக அறிவித்து வந்தார்.

இச்செய்தி அந்நாட்டு அரசனுடைய செவிகளை எட்டியது. எனவே, அவன் தன்னுடைய படைவீரர்களை அனுப்பி, அந்தக் கிறிஸ்துவரைப் பிடித்துக் காவலில் வைக்கச் சொன்னான். படைவீரர்களும் அரசனுடைய உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து, கிறிஸ்தவரைப் பிடித்துக்கொண்டு வந்து காவலில் வைத்தார்கள். மறுநாள் சிறையில் இருந்த கிறிஸ்தவரைப் பார்க்க வந்த அரசன் அவரிடம், "நீ கிறிஸ்துவை மறுதலித்தாய் என்றால் உன்னை விட்டுவிடுகிறேன். இல்லையென்றால் நாளைக் காலையில் எரிகின்ற தீயில் தூக்கி வீசப்படுவாய்" என்றான். அரசன் இவ்வாறு சொன்னதைக் கேட்டு அவர் தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. மாறாக, தன்னுடைய கொள்கையில் மிக உறுதியாக இருந்தார். இதைக் கண்டு மிரண்டுபோன அரசன், "நீ கிறிஸ்துவின்,மீது கொண்ட நம்பிக்கையில் மிக உறுதியாக இருப்பதால், நாளைக் காலையில் தீயில் எரிந்து சாம்பலாவதற்குத் தயாராக இரு" என்று சொல்லிவிட்டுப் போனான்.

அரசன் அங்கிருந்து போனபின்பு, கிறிஸ்தவர் தீயில் எரிவது எப்படி இருக்கும் என்று சோதித்துப் பார்க்க விரும்பினார். உடனே அவர் தன்னுடைய அறையில் எரிந்துகொண்டிருந்த விளக்கில் தன் விரலையிட்டுப் பார்த்தார். அது அவருடைய விரலைச் சுடவே, அவர் படக்கெனத் தன்னுடைய விரலைத் தீயிலிருந்து எடுத்துவிட்டார். 'ஒருவிரல் எரிவதே இவ்வளவு வலியைத் தருகிறது என்றால், உடல் முழுவதும் எரிந்தால் எப்படி இருக்கும்? கற்பனை செய்து பார்ப்பதற்கே மிகவும் அச்சமாக இருக்கின்றதே' என்று அவர் நினைக்கத் தொடங்கினார். அன்று இரவு அவர் தன்னுடைய அறையில் முழந்தாள்படியிட்டு மிக உருக்கமாக மன்றாடத் தொடங்கினார், "இறைவா! நாளைய நாளில் கயவர்கள் என்னைத் தீயில் தள்ளி, சுட்டெரிக்கும்போது வலிகளையும் வேதையையும் தாங்கிக்கொள்வதற்கான ஆற்றலையும் ஆறுதலையும் தாரும்." இவ்வாறு அவர் இறைவனிடம் வேண்டிவிட்டு தூங்கச் சென்றார்.

மறுநாள் காலையில், அவர் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தபோது அவர்க்குக் கடவுள் கொடுத்திருந்த ஆறுதலையும் ஆற்றலையும் உணர்ந்தார். இதனால் கயவர்கள் அவரைப் பிடித்துத் தீச்சூளையில் தள்ளியபோது, அவர் எந்தவொரு மறுப்பும் தெரிவிக்காமல், மிகவும் மகிழ்ச்சியோடு வலிகளையும் வேதனையையும் தாங்கிக் கொண்டு கிறிஸ்துவுக்குச் சான்று பகர்ந்தார். இதைப் பார்த்துவிட்டு அங்கிருந்த அரசன் உட்பட எல்லாரும் மலைத்துப் போய் நின்றனர்.

இறைவன் தன்னுடைய அடியார்க்கு ஆற்றலையும் துன்பத்தில் ஆறுதலையும் தருவார் என்பதை இந்த நிகழ்வின் வழியாக நாம் அறிந்துகொள்ளலாம். பவுலும் இறைவனிடமிருந்து இத்தகைய ஆறுதலை உணர்ந்தாக இன்றைய முதல் வாசகத்தில் எழுதுகின்றார். நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

கடவுளிடமிருந்து ஆறுதலைப் பெற்ற பவுல்

கொரிந்தியர்க்கு எழுதப்பட்ட இரண்டாம் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் பவுல் இவ்வாறு கூறுகின்றார்: "கடவுள் எங்களுடைய இன்னல்கள் அனைத்திலும் எங்கட்கு ஆறுதல் அளிக்கின்றார்."

பவுல் ஆண்டவர் இயேசுவின் பணியைச் செய்தபோது, சந்தித்த சவால்களும் எதிர்கொண்ட இன்னல்களும் ஏராளம் ஏராளம். இப்படிப்பட்ட தருணங்களில் ஆண்டவர் அவர்க்கு ஆறுதலையும் ஆற்றலையும் தந்து வழிநடத்தினார் என்று சொன்னால், அது மிகையாகாது. குறிப்பாக அவர் தன்னுடைய உடலில் தைத்த முள்ளை அகற்றுமாறு ஆண்டவரிடம் கேட்டபோது, ஆண்டவர் அவரிடம், "என் அருள் உனக்குப் போதும். வலுவின்மையில்தான் வல்லமை வெளிப்படும்" (2 கொரி 12:9) என்று சொல்லி ஆறுதல் அளித்தார். இதனால் பவுல் தனக்கு வந்த துன்பங்களைப் பொறுத்துக்கொண்டு, மனவுறுதியோடு ஆண்டவருடைய பணியைச் செய்தார்.

கடவுளிடமிருந்து பெற்ற அருளைப் பிறர்க்கு வழங்கிய பவுல்

பவுல் கடவுளிடமிருந்து பெற்ற ஆறுதலை தான் மட்டும் வைத்துக்கொண்டிருக்கவில்லை, அவர் தன்னைப் போன்று யார் யாரெல்லாம் இன்னல்களையும் அவமானங்களையும் சந்தித்து வந்தார்களோ, அவர்கட்கெல்லாம் அவர் ஆறுதல் அளித்தார். அப்படியானால், நாம் கடவுளிடமிருந்து ஆறுதலைப் பெறுகின்றோம் என்றால், அதை நமக்குள் வைத்துக்கொண்டிருக்காமல், பவுலைப் போன்று பிறர்க்கும் வழங்குவதற்குத் தயாராகவேண்டும். அதை இன்றைய இறைவார்த்தை மிக அழகாக எடுத்துக் கூறுகின்றது.

சிந்தனை

'எருசலேம். வீறுகொள். இப்பெயரை உனக்குக் கொடுத்தவரே உனக்கு ஆறுதல் வழங்குவார்' (பாரூ 4:30) என்கின்றார் பாருக்கு. ஆகவே, நமக்கு ஆறுதல் அளிக்கும் இறைவனிடம் தஞ்சம் அடைந்து, அவர் அளிக்கும் ஆறுதலைப் பிறர்க்கு வழங்குவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 5: 1- 12

ஏன் இரக்கமுடையோர் பேறுபெற்றோர்?

நிகழ்வு

ஒருசமயம் ஹாலிவுட் நடிகரான ஆண்ட்ரே (Andre) என்பவர் பிரான்ஸ் நாட்டில் உள்ள கிரநோபல் என்ற இடத்தின் வழியாக ஓடிக்கொண்டிருந்த ஓர் ஆறு வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்பொழுது யாரோ ஒருவர், "என்னை காப்பாற்றுங்கள், என்னைக் காப்பாற்றுங்கள்" என்று அலறுவது போன்று இருந்தது. உடனே அவர் சத்தம் கேட்ட திசையை நோக்கிப் பார்த்தார். அங்கு ஒரு பெண்மணி ஆற்றில் இழுத்துச் செல்லப்படுவது தெரிந்தது.

ஆண்ட்ரே ஒருகணம் யோசிக்கத் தொடங்கினார். 'நமக்குத்தான் சரியாக நீச்சல் தெரியாதே... அப்படி இருக்கும்போது ஆற்றில் இழுத்துச் செல்லப்படும் இந்தப் பெண்மணியை நாம் காப்பாற்றப்போய், அதுவே நமக்கு வினையாகிவிட்டால் என்ன செய்வது?' பின்னர் அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. வேகமாக ஓடிச்சென்று ஆற்றுக்குள் குதித்து, உயிர்க்குப் போராடிக்கொண்டிருந்த அந்தப் பெண்மணியைக் காப்பாற்றி, கரையில் கொண்டுவந்து போட்டு, அவர் தன்னுணர்வு பெற்றதும், அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றார். ஆண்ட்ரேவால் காப்பாற்றப்பட்ட அந்தப் பெண்மணியின் கணவர் அரசாங்கத்தில் மிக முக்கியமான பொறுப்பினை வகித்து வந்தார். அவரிடம் அந்தப் பெண்மணி நடந்தது அனைத்தையும் கூற, அவர், 'என் மனைவியின் உயிரைக் காப்பாற்றிய ஆண்ட்ரேவிற்கு ஏதாவது ஒன்றைச் சிறப்பாகச் செய்யவேண்டும்' என்று முடிவுசெய்தார். அதன்படி ஒருகுறிப்பிட்ட நாளில் ஆண்ட்ரேவிற்கு 'சாதனை மனிதர்' என்ற விருது கிடைக்கச் செய்தார்.

இதன்பிறகு ஆண்ட்ரேவைப் பற்றி பலர்க்கும் தெரியவந்தது. அதுவே அவர்க்கு வினையாகவும் அமைந்தது. ஆண்ட்ரே ஏதோவொரு வழக்கில் காவல்துறையால் தேடப்படும் ஒரு குற்றவாளியாக இருந்தார். விருது பெறும் நிகழ்ச்சியின் மூலமாக ஆண்ட்ரே யாரென்று காவல்துறைக்குத் தெரியவர, காவல்தறை அதிகாரிகள் அவரை நீதிமன்றத்தில் நிறுத்தி, தக்க தண்டனை வாங்கிக்கொடுக்க முடிவுசெய்தனர். குறிப்பிட்ட நாளில் ஆண்ட்ரேவின் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது அவருடைய வழக்கை விசாரித்த நீதிபதி அவரிடம், "உன்மீது தொடக்கப்பட்ட வழக்கின்படி உனக்கு ஐந்தாண்டுகள் கடுங்காவல் தண்டனை கொடுத்திருக்கவேண்டும். ஆனால், நீ ஆபத்தில் இருந்த ஒரு பெண்ணைக் காப்பாற்றியதால், உன்னை இத்தண்டனையிலிருந்து விடுவித்து, விடுதலை செய்கிறேன்" என்றார்.

ஆண்ட்ரே என்ற அந்த ஹாலிவுட் நடிகர் ஆபத்திலிருந்த ஒரு பெண்மணிக்கு இறங்கினார் அல்லது இரக்கம் காட்டினார். அதனால்தான் என்னவோ அவருடைய வழக்கை விசாரித்த நீதிபதி அவர்மீது இரக்கம்காட்டி அவரை விடுதலை செய்தார். ஒருவர் அடுத்தவர்மீது கொள்கின்ற இரக்கம் அவர்க்கு எத்தகைய ஆசியைப் பெற்றுத்தருகின்றது என்பதை இந்த நிகழ்வானது மிக அழகாக எடுத்துக்கூறுகின்றது. இன்றைய நற்செய்தியில், இயேசு கிறிஸ்து எட்டுவிதமான பேறுபெற்றவர்களைப் பட்டியலிடுகின்றார். இவர்களுள் ஒருவகையினர்தான் இரக்கமுடையவராக இருந்து பேறுபெற்றவர் பட்டியலில் இடம்பெறுபவர்கள். இன்றைய நாளில், ஒருவர் இரக்கமுடையவராக இருப்பதால் எப்படி இரக்கத்தைப் பெறமுடிகின்றது என்பதை மட்டும் சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

ஏன் இரக்கமுடையோர் பேறுபெற்றோர் என அழைக்கப்படுகின்றனர்?

இரக்கமுடையோர் பேறுபெற்றோர் என ஏன் அழைக்கப்படுகின்றனர் என்ற சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்னம், முதலில் இரக்கம் என்றால் என்ன என்று தெரிந்துகொள்வது நல்லது. இரக்கம் என்பது சாதாரண ஓர் உணர்வு கிடையாது. அது ஒருவருடைய துன்பத்தைத் தன்னுடைய துன்பமாகப் பார்த்து, அதைப் போக்க விரைவது. அதுதான் இரக்கம் என அழைக்கப்படுகின்றது. பவுல் இதைத்தான், "மகிழ்வாரோடு மகிழுங்கள். அழுவாரோடு அழுங்கள்" (உரோ 12: 15) என்கின்றார்.

இதில் இன்னொரு முக்கியமான விடயத்தையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். அது என்னவெனில், ஒருவருடைய துன்பத்தை நம்முடைய துன்பமாகப் பார்த்து, அவர்மீது இரக்கம்கொள்வதற்கு நம்மால் மட்டும் முடியாது. இறைவனின் அருளும் இரக்கமும் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீராம் தூய ஆவியாரின் துணையும் (யோவான் 7: 38) அதற்குத் தேவைப்படுக்கின்றது. அப்போதுதான் நம்மால் அடுத்தவர்மீது இரக்கம்கொள்ளமுடியும். இல்லையென்றால், நம்முடைய இரக்கம் மேம்போக்கானதாக மட்டுமே இருக்கும். இவ்வளவு விடயங்கள் இருப்பதால்தான் இரக்கமுடையோர் பேறுபெற்றோர் என அழைக்கப்படுகின்றனர்.

இரக்கமுடையோர் இரக்கம்பெறுவர்

இரக்கமுடையோர் பேறுபெற்றோர் எனச் சொன்ன இயேசு, அடுத்ததாக அவர்கள் இரக்கம் பெறுவர் என்கின்றார். இரக்கமுடையோர் எவ்வாறு இரக்கம் பெறுவார் என்பதை மத்தேயு நற்செய்தி 25-ம் அதிகாரத்தில் இடம்பெறுகின்ற இறுதித் தீர்ப்பு உவமை இதற்கு மிகப்பெரிய சான்றாக இருக்கின்றது. அதே நேரத்தில் இரக்கம் கொள்ளாதவர் அதற்கான தண்டனையையும் நிச்சயமாகப் பெறுவர் என்பதும் உண்மை. ஆதலால், இந்த இருவகையினரில் நாம் யாராக இருக்கின்றோம் என்பதை சிந்தித்துப் பார்த்துக் கொள்வோம்.

சிந்தனை


'இறைவனுடைய குணங்கள்/ஆற்றல்கள் யாவும் ஒன்றுபோல் சமமாக இருப்பினும், அவருடைய நீதியைவிட, இரக்கம் அதிகப் பிரகாசமாக விளங்குகின்றது' என்பார் செர்வாண்டிஸ் என்ற எழுத்தாளர். ஆகவே, இரக்கமே வடிவாக இருக்கும் இறைவனைப் போன்று நாமும் இரக்கத்தோடு இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
 


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 5
=================================================================================


 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!