Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                         08 ஜூன 2019  
                        பாஸ்கா காலம் 7ம் வாரம்  - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
பவுல் உரோமையில் தங்கி, இறையாட்சியைக் குறித்துப் பறைசாற்றி வந்தார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 28: 16-20. 30-31

உரோமையில் தனி வீட்டில் தங்கியிருக்க பவுல் அனுமதி பெற்றுக்கொண்டார். ஆனால் படைவீரர் ஒருவர் அவரைக் காவல் காத்து வந்தார். மூன்று நாள்களுக்குப் பின்பு பவுல் யூத முதன்மைக் குடிமக்களைத் தம்மிடம் வரவழைத்தார்.

அவர்கள் வந்து கூடியபின் அவர்களை நோக்கி, "சகோதரரே, நான் நம்முடைய மக்களுக்கு எதிராகவோ, மூதாதையரின் மரபுகளுக்கு எதிராகவோ எதுவும் செய்யவில்லை. எனினும் எருசலேமில் நான் கைதுசெய்யப்பட்டு உரோமையரிடம் ஒப்புவிக்கப்பட்டேன். அவர்கள் என்னை விசாரித்தபோது மரண தண்டனைக்குரிய குற்றம் எதுவும் என்னிடம் காணாததால் என்னை விடுதலை செய்ய விரும்பினார்கள்.

யூதர்கள் அதனை எதிர்த்துப் பேசியபோது நான், "சீசரே என்னை விசாரிக்கவேண்டும்" என்று கேட்கவேண்டிய கட்டாயத்துக்குள்ளானேன். ஆனால் என் இனத்தவர்க்கு எதிரான குற்றச்சாட்டு எதுவும் என்னிடமில்லை. இதனால்தான் நான் உங்களைக் கண்டு பேசுவதற்காக அழைத்தேன். இஸ்ரயேல் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையின் பொருட்டு நான் விலங்கிடப்பட்டுள்ளேன" என்றார்.

பவுல் அங்கு இரண்டு ஆண்டுகள் முழுவதும் தாம் வாடகைக்கு எடுத்த வீட்டில் தங்கியிருந்தார். தம்மிடம் வந்த அனைவரையும் வரவேற்று இறையாட்சியைக் குறித்துப் பறைசாற்றி வந்தார். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப்பற்றி முழுத் துணிவோடு தடை ஏதுமின்றிக் கற்பித்துக் கொண்டிருந்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 11: 4. 5,7. (பல்லவி: 7b)
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, நேர்மையாளர் உமது திருமுகத்தைக் காண்பார்கள்.

அல்லது: அல்லேலூயா.

4 ஆண்டவர் தம் தூய கோவிலில் இருக்கின்றார்; அவரது அரியணை விண்ணுலகில் இருக்கின்றது; அவர் கண்கள் உற்று நோக்குகின்றன; அவர் விழிகள் மானிடரைச் சோதித்தறிகின்றன. பல்லவி

5 ஆண்டவர் நேர்மையாளரையும் பொல்லாரையும் சோதித்தறிகின்றார்; வன்முறையில் நாட்டங்கொள்வோரை அவர் வெறுக்கின்றார். 7 ஏனெனில், நீதியுள்ள ஆண்டவர் நேரிய செயல்களை விரும்புகின்றார்; அவர்தம் திருமுகத்தை நேர்மையாளர் காண்பர். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 16: 7,13

அல்லேலூயா, அல்லேலூயா! துணையாளரை உங்களிடம் அனுப்புவேன். உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
யோவான் இவற்றை எழுதி வைத்தார். இவரது சான்று உண்மையானது.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 20-25

அக்காலத்தில் பேதுரு திரும்பிப் பார்த்தபோது, இயேசுவின் அன்புச் சீடரும் பின்தொடர்கிறார் என்று கண்டார். இவரே இரவு உணவின்போது இயேசுவின் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்துகொண்டு, "ஆண்டவரே உம்மைக் காட்டிக் கொடுப்பவன் எவன்?" என்று கேட்டவர்.

அவரைக் கண்ட பேதுரு இயேசுவிடம், "ஆண்டவரே, இவருக்கு என்ன ஆகும்?" என்று கேட்டார். இயேசு அவரிடம், "நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால் உனக்கு என்ன? நீ என்னைப் பின்தொடர்ந்து வா" என்றார்.

ஆகையால் அந்தச் சீடர் இறக்கமாட்டார் என்னும் பேச்சு சகோதரர் சகோதரிகளிடையே பரவியது. ஆனால் இவர் இறக்கமாட்டார் என இயேசு கூறவில்லை.

மாறாக, "நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால், உனக்கு என்ன?" என்றுதான் கூறினார். இந்தச் சீடரே இவற்றிற்குச் சாட்சி.

இவரே இவற்றை எழுதி வைத்தவர். இவரது சான்று உண்மையானது என நமக்குத் தெரியும். இயேசு செய்தவை வேறு பலவும் உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுதப்படும் நூல்களை உலகமே கொள்ளாது எனக் கருதுகிறேன்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

இன்றோடு பாஸ்கா காலம் நிறைவுக்கு வருகின்றது.

இதுவரை திருதூதர் பணியும், யோவானின் நற்செய்தியும் வாசிக்க கேட்டோம்.

அதனுடைய நிறைவுப்பகுதி இன்றைக்கு தரப்பட்டுள்ளது.

பவுல் முழு நிறைவோடு துணிவோடு கற்பித்து வந்தார். யோவான் எழுதாமல் விட்ட காரியங்களை எழுதினால், உலகமே கொள்ளாது.

பவுலிடம் இருந்த துணிவும், முழு நிறைவோடு போதிக்கும் மனநிலையும், வரும் தலைமுறையினருக்கு நடந்தவைகளை எழுதி வைக்கும் ஆர்வமும் நமதாக ஆவியின் அருள் வேண்டுவோம்.

தூய ஆவியின் பெருவிழா நல்வாழ்த்துக்கள்.

ஓருவர் ஓருவருக்காக மன்றாடுவோம்.



இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 
யோவான் 21: 20-25

"நீ என்னைப் பின்தொடர்ந்து வா"

நிகழ்வு

ஒருசமயம் ஒரு குருவானவரிடம் வந்த பெரியவர் ஒருவர், "தந்தையே! திருநிலைப்படுத்துதல் (Consecration) என்றால் என்ன என்று எனக்குச் சொல்ல முடியுமா?" என்று கேட்டார். அதற்குக் குருவானவர் சிறிதும் தாமதியாமல், "நீங்கள் ஒரு வெள்ளைக் காகிதத்தை எடுத்துக்கொண்டு, அதன் அடியில் உங்களுடைய கையொப்பத்தை மட்டும் போட்டுவிட்டு, மேலே உள்ள பகுதியில் கடவுளை என்னவேண்டுமானாலும் எழுத அனுமதிப்பது" என்றார்.

"தந்தையே! நீங்கள் சொன்னதை இன்னும் விளக்கிச் சொன்னால் நன்றாக இருக்கும்" என்று பெரியவர் சொன்னதும், குருவானார் சொன்னார்: "திருநிலைப்படுத்துதல் என்பது வோன்றுமில்லை. கடவுளின் விரும்பத்தை உணர்ந்து, அவர் விரும்பியதைச் செய்ய, அவரைப் பின்தொடர்ந்து செல்வது."

மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் குருவானவர், திருநிலைப்படுத்துதலுக்குக் குறித்துச் சொன்ன வார்த்தைகள் அப்படியே சீடத்துவம் என்றால் என்ன என்பதற்குப் பொருந்தி வருகின்றது. உண்மைத்தான். கடவுளின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, அவரைப் பின்தொடர்ந்து செல்வதே உண்மையான சீடத்துவமாகும். இன்றைய நற்செய்தி வாசகமும் சீடத்துவ வாழ்வு என்பது எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு மிகச் சிறப்பான விளக்கத்தைத் தருகின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

சீடத்துவ வாழ்வு என்பது துன்பங்களை ஏற்கத் துணிவது

இயேசு தாம் இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த பின்பு, தம் சீடர்கட்கு மூன்றாம் முறையாகத் திபேரியக் கடலருகே தோன்றும்போது, பேதுருவிடம் அவர் எவ்வாறு இறப்பார் என்பதைச் சொல்வார். இதைச் சொல்லிவிட்டு இயேசு பேதுருவிடம், "என்னைப் பின்தொடர்" என்பார். இதையடுத்து பேதுரு இயேசுவைப் பின்தொடர்ந்து செல்வார்.

இந்நிகழ்வை, இயேசு தன்னுடைய பாடுகளை முதன்முறை எடுத்துரைத்த நிகழ்வோடு ஒப்பிட்டுப் பார்ப்பது இன்னும் சிறப்பாக இருக்கும். இயேசு தன்னுடைய பாடுகளை முதன்முறையாகத் தன்னுடைய சீடர்களிடம் எடுத்துச் சொன்னபோது, பேதுரு, "ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது" (மத் 16:21- 22) என்று அவரைத் தடுக்கப் பார்ப்பார். இயேசுவைப் படைவீரர்கள் கைது செய்யவரும்போதும் படைவீரர்களுள் ஒருவருடைய வலக்காதைத் துண்டிப்பார். இவ்வாறு அவர் துன்பமே வேண்டாம் என்று இருப்பார். இப்படிப்பட்ட பேதுரு, இயேசு உயிர்த்தெழுந்தபின்பு அவர் எப்படி இறப்பார் என்று சொன்னதை மிகவும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கின்றார். இறுதியில் இயேசுவுக்காக சிலுவையில் தலைகீழாக அறைந்து கொல்லப்படுகின்றார். இது பேதுருவின் வாழ்வில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம் என்றுதான் சொல்லவேண்டும். துன்பமே வேண்டாம் என்று இருந்தவர், துன்பத்தை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வது என்பது மிகப்பெரிய மாற்றம்தானே!.

இயேசுவின் முதன்மைச் சீடராக இருந்த பேதுரு, இயேசுவின் பொருட்டுத் துன்பங்களை ஏற்கத் துணிந்தார் எனில், அவருடைய எடுத்துக்காட்டைப் பின்பற்றி நடக்கும் நாம் ஒவ்வொருவரும் இயேசுவின் பொருட்டுத் துன்பங்களை ஏற்பது தேவையான ஒன்று.

சீடத்துவ வாழ்வு என்பது இயேசுவின்மீது மட்டுமே பார்வையைப் பதிய வைத்து வாழ்வது

சீடத்துவ வாழ்வு என்பது இயேசுவின் பொருட்டுத் துன்பங்களை ஏற்றுக்கொள்வது மட்டும் கிடையாது. இயேசுவின்மீது (மட்டுமே) நம்முடைய கண்களைப் பதிய வைத்தும் வாழ்வது.

இன்றைய நற்செய்தியில் பேதுரு இயேசுவைப் பின்தொடர்ந்து சென்றுகொண்டிருக்கும்போது, திடீரென்று திரும்பிப் பார்க்க, அங்கு யோவானும் பின்தொடர்ந்து வருகின்றார். இது அவருடைய கவனத்தைத் திசை திருப்புவதாக இருக்கின்றது. அதனால்தான் அவர், "ஆண்டவரே இவர்க்கு என்ன ஆகும்?" என்று கேட்கின்றார். இயேசுவின் சீடர் என்பவர் அவர்மீது மட்டுமே கண்களைப் பதியவைத்து அவருடைய வழியில் நடக்கவேண்டும். அதற்கு மாறாக, அவரிடமிர்ந்து ர்வையை எடுத்துவிட்டு, வேறோர் ஆள்மேல்மீது கண்களை அல்லது கவனத்தைப் பதிவைத்தால், அவரால் இயேசுவின் சீடராக இருக்கவே முடியாது. இதைத்தான் இயேசு தன்னைப் பின்தொடர்ந்து வந்த ஒருவரிடம், "கலப்பையில் கைவைத்த பின் திரும்பிப் பார்ப்பவர் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல" (லூக் 9: 62) என்கின்றார்.

ஆதலால், இயேசுவைப் பின்பற்றி நடக்கின்ற அவருடைய சீடர்கள் யாவரும் வேறு எதன்மீதும் அல்ல, இயேசுவின் மட்டும் கண்களைப் பதியவைத்து வாழ்வது மிகவும் முக்கியமானது.

சிந்தனை

'நம்பிக்கைத் தொடங்கி வழி நடத்துபவரும் அதை நிறைவுசெய்பவருமான இயேசுவின் மீது கண்களைப் பதிய வைப்போம்' (எபி 12: 2) என்பார் எபிரேயர்த் திருமுகத்தின் ஆசிரியர். ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கின்ற நாம், அவர்மீது நம்முடைய கண்களைப் பதிய வைத்து, சீடத்துவ வாழ்வில் வரும் துன்பங்களைத் துணிவோடு ஏற்க அணியமாகுவோம் (தயாராகுவோம்). அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
திருத்தூதர் பணிகள் 28: 16-20, 30-31

இறையாட்சியைக் குறித்து முழுத் துணிவோடு பறைசாற்றி வந்த பவுல்

நிகழ்வு

அந்த ஆலயத்தில் ஒவ்வொரு வாரமும் நடைபெற்றுவந்த ஞாயிறு மறைக்கல்வி வகுப்பிற்கு எல்லாரும் விலையுயர்ந்த ஆடை அணிந்து வந்தபோது, ஒரு சிறுவன் மட்டும் மிகவும் பழைய அதுவும் கிழந்துபோன ஆடையை அணிந்துவந்தான். இதைக் கவனித்த அவ்வாலயத்தில் இருந்த பங்குக் குருவானவர் அவனுக்கு நல்லதோர் ஆடையை வாங்கிக்கொடுத்தார். இதற்கு பின்பு அச்சிறுவன் மறைக்கல்வி வகுப்பிற்குத் தவறாது வரத் தொடங்கினான்.

ஐந்தாறு ஞாயிற்றுக் கிழமைகள் கழித்து, மாணவர்கட்கு மறைக்கல்வி கற்றுக் கொடுத்துவந்த ஆசிரியை, மறைக்கல்வி வகுப்பிற்கு எல்லா மாணவர்களும் வந்திருக்கிறார்களா? என்று சரிபார்த்தபோது, முன்பு கிழிந்த ஆடையோடு வந்த அந்த மாணவன் மட்டும் வராதிருந்தான். அவனுக்கு என்னவாயிற்று என்று மறைக்கல்வி ஆசிரியை அவனுடைய வீட்டிற்குத் தேடிச் சென்றபோது, அவனுடைய ஆடை கிழிந்து போயிருந்தது தெரியவந்தது. இச்செய்தியை மறைக்கல்வி ஆசிரியை பங்குக் குருவானவரிடம் சொன்னபோது, அவர் அவனுக்கு இன்னொரு புதிய ஆடையை வாங்கிக் கொடுத்தார். இதனால் மறைக்கல்வி வகுப்பிற்கு வராத அச்சிறுவன் மீண்டுமாக வரத் தொடங்கினான்.

இரண்டு மூன்று மாதங்கள் உருண்டோடின. இடையில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் குறிப்பிட்ட அச்சிறுவன் மறைக்கல்வி வகுப்பிற்கு வராமல் இருந்தான். மீண்டுமாக மறைக்கல்வி ஆசிரியை அவனைத் தேடிச் சென்றபோது, முன்புபோல் அவனுக்கு ஆடை கிழிந்துபோனதால்தான் மறைக்கல்வி வகுப்பிற்கு வரவில்லை என்று சொன்னான். சேதி அறிந்த பங்குக் குருவானவர் அவனுக்கு இன்னோர் ஆடை வாங்கித் தர முற்பட்டபோது, மறைக்கல்வி ஆசிரியை அவரைத் தடுத்து நிறுத்தி, "மீண்டுமாக அவனுக்கு ஆடை வாங்கித் தராதீர்கள். அவன் மறைக்கல்வி வகுப்பிற்கு வந்தால் வரட்டும், வராவிட்டால் போகட்டும்" என்றார். அவர் இவ்வாறு பேசிக்கொண்டு இருக்கும்போதே, அவரை இடைமறித்த பங்குக் குருவானவர், "அப்படியெல்லாம் சொல்லாதீர்கள்... அந்தச் சிறுவன் மறைக்கல்வி வருவதற்காக நான் எத்தனை ஆடைகள் வேண்டுமானாலும் வாங்கித் தருகிறேன்" என்றார். பின்னர் அவர் தான் சொன்னது போன்றே அச் சிறுவனுக்குப் போதுமான ஆடைகள் வாங்கிக் கொடுத்தார்.

இதற்குப் பின்பு அச்சிறுவன் ஒரு ஞாயிற்றுக்கிழமைகூடத் தவறாமல் மறைக்கல்வி வகுப்பிற்கு வந்தான்; நல்ல முறையில் படித்து ஓர் ஆசிரியராகி, நற்செய்தியின்மீது கொண்ட தாகத்தினால் சீனாவிற்கு நற்செய்தி அறிவிக்கச் சென்றான். அங்கு அவன் விவிலியத்தைச் சீனமொழியில் மொழிபெயர்த்து, சீனாவில் உள்ள ஆயிரக்கணக்கானோர் ஆண்டவர் இயேசுவைப் பற்றி அறிந்துகொண்டு, அவரைப் பின்பற்றக் காரணமானான். அந்தச் சிறுவன்தான் சீன மண்ணில் மறைபரப்புப் பணியைச் செய்தவர்களுள் முன்னோடியாக விளங்கும் ராபர்ட் மோரிசன் (1782- 1834) என்பவர் ஆவார். இன்றைக்குச் சீனாவில் கிறிஸ்தவ நம்பிக்கை வேரூன்றி இருக்கிறது என்றால், அதற்கு அடித்தளம் போட்டவர் இவர் என்று சொன்னால், அது மிகையாகாது.

எப்படி வசதி குறைவினால் மறைக்கல்வி வகுப்பிற்கே வராமல் இருந்த ராபர்ட் மோரிசன் சீன மக்கள் ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை அறிந்து கொள்ளக் காராணமாக இருந்தாரோ அதுபோன்று யூத மறையின் மீது கொண்டிருந்த பற்றினால் ஆண்டவரின் திருஅவையைத் துன்புறுத்திய பவுல், ஆண்டவர் இயேசுவை பற்றிய/ இறையாட்சி பற்றிய நற்செய்தியை புறவினத்து மக்கள் அறிந்துகொள்ளக் காரணமானார். இன்றைய முதல் வாசகம் பவுல் இறையாட்சி பற்றிய நற்செய்தியைத் துணிவோடு அறிவித்ததைக் குறித்துச் சொல்கிறது. நாம் அதைக் குறித்து இப்போது சிந்தித்து பார்த்து நிறைவு செய்வோம்.

பவுலின் இறையாட்சி அறிவிப்புப் பணி

கடவுள் நினைத்தால் யார் வழியாகவும் நற்செய்தியை அறிவிக்கலாம் என்பதற்குப் பவுல் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. இன்றைய முதல் வாசகத்தின் தொடக்கத்தில் பவுல், யூத முதன்மைக் குடிமக்களைத் தம்மிடம் வரவழைத்து, அவர்களிடம் "நான் நம்முடைய மக்கட்கு எதிராகவோ முதாததையரின் மரபுக்கெதிராகவோ எதுவும் செய்யவில்லை. அப்படியிருந்தும் எருசலேமில் கைதுசெய்யப்பட்டு. உரோமையரிடம் ஒப்புவிக்கப்பட்டேன்" என்கின்றார். பின்னர் அவர் அவர்களை அனுப்பிவிட்டு இறையாட்சி பற்றிய நற்செய்தியையும் ஆண்டவர் இயேசுவைப் பற்றியும் முழுத் துணிவோடு அறிவித்து வந்தார்.

பவுலோடு உடனிருந்த இயேசு

இன்றைய முதல் வாசகத்தின் இறுதியில் பவுல் முழுத் துணிவோடு இயேசுவைப் பற்றிய நற்செய்தி அறிவித்து வந்தார் என்று வாசிக்கிறோம். அவர் அவ்வாறு அறிவிக்க ஆண்டவர் அவரோடு இருந்தார் என்று உறுதியாகச் சொல்லலாம். அதனால் தான் அவர், "எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய ஆற்றல் உண்டு" என்கிறார் (பிலி 4:13). நாமும் பவுலைப் போன்று ஆண்டவரின் நற்செய்தியை அறிவித்து வந்தால், ஆண்டவருடைய துணை நமக்கு எப்போதும் உண்டு என்பது உறுதி.

சிந்தனை

'அவர்கள் முன் கலக்கமுறாதே! ஏனெனில் உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்' (எரே1: 17,19) என்று இறைவாக்கினர் எரேமியாவைப் பார்த்து கடவுள் கூறுவார். ஆகவே கடவுள் நமக்குத் துணையிருக்கிறார் என்ற நம்பிக்கையோடு பவுலைப் போன்று துணிவோடு ஆண்டவர் இயேசுவைப் பற்றி நற்செய்தியை அறிவிப்போம். அதன் வழியாக இறையருள் நினைவாகப் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
 இயேசு செய்தவை வேறு பலவும் உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் நூல்களை உலகமே கொள்ளாது

வில்லியம் பார்க்லே என்ற விவிலிய அறிஞர் இயேசு கிறிஸ்துவைப் பற்றி சொல்லப்படுவதாக சொல்கின்ற ஒரு தொன்மம்.

குழந்தை இயேசுவைக் கொல்வதற்கு ஏரோது மன்னன் திட்டம் தீட்டியபோது அதனை வானதூதர் யோசேப்புக்கு கனவின் வழியாக வெளிப்படுத்தியபோது அவர் மரியாவையும் குழந்தை இயேசுவையும் தூக்கிக்கொண்டு எகிப்துக்கு ஓடினார்.

அப்போது ஒரு கொள்ளைக்கூட்டம் எகிப்து நோக்கிச் சென்று கொண்டிருந்த திருக்குடும்பத்தினைக் கொன்றுபோட்டு, அதனிடமிருந்த பொருட்களைக் களவாட நினைத்தது. ஆனால், அந்தக் கொள்ளக்கூட்டத்தில் இருந்த திஸ்மாஸ் என்ற திருடன் குழந்தை இயேசுவின் திருமுகத்தைப் பார்த்து கவரப்பட்டவனாய், "இந்தக் குழந்தை சாதராண குழந்தை கிடையாது, இது அற்புதக் குழந்தை. இந்தக் குழந்தையையும் அதன் பெற்றோரையும் நாம் கொன்றுபோட்டு, அவர்களிடமிருந்து பொருட்களைக் கவர்ந்தோம் என்றால், அது நமக்குத்தான் மிகப்பெரிய சாபத்தைக் கொண்டுவந்து சேர்க்கும்... அதனால் இந்தக் குழ்னதையையும் அதன் பெற்றோரையும் ஒன்றும் செய்யாமல் விட்டுவிடுவோம்" என்று தன்னுடைய குழுவில் இருந்த ஏனையோரைப் பார்த்துக் கேட்டுக்கொண்டான். திஸ்மாஸ் சொன்னதற்கிணங்க அவர்கள் குழந்த்தையையும் அதன் பெற்றோரையும் ஒன்றும் செய்யாமல் அவர்கள் வழியில் விட்டுவிட்டனர்.

அவர்கள் சிறிது தூரம் போனபின்பு, ஏதோ நினைத்தவனாய் அவர்கள் பின்னால் ஓடிச் சென்ற திஸ்மாஸ் குழந்தை இயேசுவைப் பார்த்து, "அற்புதக் குழந்தை இயேசுவே! நாம் மீண்டுமாக ஒருமுறை சந்திக்க நேர்ந்தால், நான் உமக்குச் செய்த நன்மையின் பொருட்டு, நீர் என்னை மன்னிக்கவேண்டும்" என்றான். குழந்தையும் அதற்கு சம்மதம் தெரிவிப்பது போல் கைகளை ஆட்டியது.

இது நடந்து முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு திஸ்மாஸ் (நல்ல கள்வன்) ஆண்டவர் இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்டான். அவன் ஆண்டவர் இயேசுவிடம், முன்பு நடந்ததை எடுத்துச் சொல்லி, தன்னுடைய குற்றங்களுக்காக மன்னிப்புக் கேட்டான். ஆண்டவர் இயேசுவும் அவனுடைய குற்றங்களை மன்னித்து திஸ்மாசை பேரின்ப வீட்டினில் ஏற்றுக்கொண்டார்.

இயேசுவில் வாழ்வில் நடந்ததாகச் சொல்லப்படும் இந்த நிகழ்வு திருச்சபையால் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகின்றது.

இந்த நிகழ்வினைப் போன்று விவிலியத்தில் இடம்பெறாத பல நிகழ்வுகள் இயேசுவின் வாழ்வில் நடந்ததாகச் சொல்லப்படுகின்றது. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது இன்றைய நற்செய்தி வாசகத்தில் நற்செய்தியாளர் யோவான் கூறுகின்ற, "இயேசு செய்தவை வேறு பலவும் உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுதப்படும் நூல்களை உலகமே கொள்ளாது" என்ற வார்த்தைகள் எவ்வளவு உண்மை என்று புரிந்துவிடும்.

இதன்வழியாக நாம் கற்றுக் கொள்ளக்கூடிய உண்மை, 'விவிலியம் என்பது ஒரு வரலாற்று ஆவணமோ, புத்தகமோ கிடையாது. மாறாக அது ஒரு நம்பிக்கை ஏடு. நம்பிக்கை கண்கொண்டு அதனை வாசிக்கின்றபோதுதான் அதில் உள்ளவை எந்தளவுக்கு அர்த்தம் நிறைந்தவை என நாம் புரிந்துகொள்ளலாம்.

மத்தேயு நற்செய்தி 11: 20-24 வரை உள்ள பகுதியில் ஆண்டவர் இயேசு திருந்த மறுத்த நகரங்களான கொராசின், பெத்சாய்தா, கப்பர்நாகும் போன்ற நகரங்களைக் கடுமையாகச் சாடுவார். அது மட்டுமல்லாமல், அந்த நகரங்களில் செய்யப்பட்ட வல்ல செயல்கள் தீர், சீதோனில் செய்யப்பட்டிருந்தால் என்றைக்கோ அவர்கள் மனம்மாறி சாக்கு உடை உடுத்தி, சாம்பலில் உட்கார்ந்து மனமாறியிருப்பார்கள் என்பார். இயேசு கொராசின், பெத்சாய்தா நகரங்களில் அற்புதங்கள், அதிசயங்கள் செய்ததாக எந்தவிதக் குறிப்பும் இல்லை. இதனையும் வைத்துப் பார்க்கின்றபோது இயேசு செய்த நிறைய செயல்கள், அற்புதங்கள், புதுமைகள் ஆற்றிய போதனைகள் விவிலியத்தில் இடம்பெற வில்லை என்றே சொல்லலாம். அப்படியானால், விவிலியத்தை எத்தகைய கண்ணோட்டத்தோடு, எத்தகைய மனநிலையோடு நாம் வாசிக்கவேண்டும் என்பதுதான் நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்றாக இருகின்றது.

யோவான் நற்செய்தி 20:29 ல் இயேசு தோமாவிடம் கூறுவதாக வாசிக்கின்றோம், "நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்" என்று. ஆம், இயேசுவின் வார்த்தைகளை, விவிலியத்தை நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்றுக்கொள்கின்றபோதுதான் அது நமக்கு நிறைந்த அர்த்தத்தைக் கொடுப்பதாக இருக்கும். அதைவிடுத்து, விவிலியத்தை ஒரு வரலாற்று ஆவணமாக எடுத்துக்கொண்டோம் என்றால் நாம் தவறு இழைப்பவர்களாகிவிடுவோம்.

எனவே, விவிலியத்தை நம்பிக்கையின் கண்கொண்டு வாசிப்போம். இயேசுவே மெசியா என்று ஏற்றுக்கொண்டு, அவர் வாழ்ந்துகாட்டிய பாதையில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.



- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 என்னைப் பின்தொடர்ந்து வா

சில நூற்றாண்டுகளுக்கு முன்பாக நம்முடைய இந்தியத் திருநாட்டில் வாஸ்வானி என்றொரு துறவி இருந்தார். அவர் எப்படித் துறவியானார் என்பது தொடர்பான நிகழ்வு இது.

வாஸ்வானிக்கு சிறுவயது முதலே துறவியாக வேண்டும் என்றொரு ஆசை. ஆனால் அவருடைய தாயாரோ, அதெல்லாம் முடியாது என்று அவரிடத்தில் சொல்லி வந்தார்.

ஒருநாள் அவர் ஆற்றங்கரையில் குளித்துக்கொண்டிருந்தார். அவருடைய தாயார் ஆற்றங்கரையின் ஓரமாக அமர்ந்து துணிதுவைத்துக் கொண்டிருந்தார். சிறுவன் வாஸ்வானி மெய்மறந்து குளித்துக்கொண்டிருந்தபோது, முதலை ஒன்று அவருடைய காலைப் பிடித்து உள்ளே இழுத்துக்கொண்டு போனது. வாஸ்வானியோ சத்தம்போட்டு அலறினார். ஆனாலும் சுதாரித்துக்கொண்டு, "அம்மா! முதலையொன்று என்னுடைய காலைப் பிடித்துக்கொண்டு உள்ளே இழுத்துக்கொண்டு போகிறது. இப்போதாவது நான் துறவியாக மாறுவதற்கான சம்மதம் தாருங்கள்" என்றார். அவருடைய தாயாரும் வேறு வழியில்லாமல் அவர் துறவறம் போக சம்மதம் தெரிவித்தார்.

உடனே வாஸ்வானி வானத்தை அண்ணார்ந்து பார்த்து, "கடவுளே! என்னுடைய காலை இப்போது ஒரு முதலை பிடித்து, இழுத்துக்கொண்டு போகிறது. நீர் மட்டும் என்னைக் காப்பாற்றினால், நான் என்னுடைய வாழ்வு முழுவதையும் உமக்கு அர்ப்பணிப்பேன்" என்று சொல்லி ஜெபித்தார். அவர் இறைவனிடம் ஜெபித்தது போன்றே, முதலை அவருடைய காலை விட்டுவிட்டு அகன்று போனது. ஆற்றிலிருந்து வெளியே வந்த வாஸ்வானி தாயின் காலடியில் விழுந்து, "அம்மா! இப்போதே நான் துறவுகோலம் மேற்கொள்ள என்னை ஆசிர்வதியுங்கள்" என்றார். அவருடைய தாயாரும் அவரை ஆசிர்வதித்து, துறவற வாழ்வுக்கு அவரை அனுப்பி வைத்தார்.

சிறுவயதிலே கடவுளைத் தேடிச் செல்ல வேண்டும், துறவற வாழ்க்கை வாழவேண்டும் என்றிருந்த வாஸ்வானி உண்மையிலே நம்முடைய பாராட்டுக்குரியவர்.

நற்செய்தி வாசகத்தில் உயிர்த்த ஆண்டவர் இயேசு சீடர்களுக்குத் தோன்றுகின்றபோது பேதுரு யோவானைச் சுட்டிக்காட்டி, "ஆண்டவரே இவருக்கு என்ன ஆகும்?" என்று கேட்கின்றார். அதற்கு இயேசு அவரிடம், "நான் வரும்வரை இவன் இருக்கவேண்டும் என நான் விரும்பினால் உமக்கு என்ன? நீ என்னைப் பின்தொடர்ந்து வா" என்கிறார். இயேசு பேதுருவுக்குச் சொன்ன, "என்னைப் பின்தொடர்ந்து வா" என்ற வார்த்தைகளை மட்டும் நம்முடைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

தொடக்கத் திருச்சபையில் பவுல், பேதுரு, யோவான் ஆகிய மூவரும் மிக முக்கியமான ஆளுமைகளாக (Personalities) விளங்கினார்கள்.. பவுலை ஆண்டவர் புறவினத்தாருக்கு நற்செய்தியாளராக ஏற்படுத்தினார். பேதுருவையோ ஆண்டவர் திருச்சபையின் தலைவராக இருந்து வழிநடத்துமாறு செய்தார். அந்த வகையில் யோவானை ஆண்டவர் நீண்ட நாட்கள் வாழுமாறு செய்கின்றார். அதனால்தான் இயேசு பேதுருவிடம், "நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால் உனக்கு என்ன? நீ என்னைப் பின்தொடர்ந்து வா" என்கிறார். அதாவது ஆண்டவராகிய இயேசு, ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதத்திலும் ஆசிர்வதிப்பது என்னுடைய உரிமை, உன்னுடைய பணியென்ன, என்னைப் பின்தொடர்வதே என்கிறார். ஆகையால், நாம் அடுத்தவரைக் கடவுள் இவ்வாறு ஆசிர்வதித்திருக்கிறாரே, இவரைக் கடவுள் அவ்வாறு ஆசிர்வதித்திருக்கிறாரே என்று கவலை கொள்ளாமல், ஆண்டவரைப் பின்தொடர்ந்து செல்வதுதான் நம்முடைய தலையாயக் கடமை என்று உணர்ந்து செயல்படவேண்டும்.

நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் இறைவனை, இயேசுவைப் பின்தொடர்ந்து செல்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். இயேசுவைப் பின்தொடர்ந்து செல்லுதல் என்பது வெறுமனே அவரை வழிபடுவது மட்டும் கிடையாது, அவருடைய போதனைகளை நம்முடைய வாழ்க்கையில் கடைப்பிடிப்பதாகும். இயேசு சொல்வார், "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்" (மத் 16:24) என்று. ஆகவே, இயேசுவின் சீடர்கள் யாவருமே தன்னலத்தை முதலில் துறந்து, பொது நலத்தை கண்முன்னால் கொண்டு செயல்படவேண்டும். அதுதான் உண்மையான சீடத்துவ வாழ்க்கையாகும். ஆனால் இன்றைக்கு மக்கள் ஒருசிலர் இயேசுவைப் பின்பற்றுகிறேன், கிறிஸ்தவனாக இருக்கின்றேன் சொல்லிக்கொண்டு , தானுண்டு, தன்னுடைய குடும்பம் உண்டு என்று வாழ்வது மிகவும் வேடிக்கையாக இருக்கின்றது. கிறிஸ்தவம் என்பது எல்லாரையும் தன்னகத்தே உள்ளடக்கியது; எல்லாரையும் குறித்து சிந்தித்துப் பார்ப்பது. நாம் கிறிஸ்தவர்களாக இருந்துகொண்டு சுயநலத்தோடு இருப்பது வேடிக்கையாக இருக்கின்றது.

ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கின்ற நாம் பிறரைக் குறித்து பொறாமை கொள்ளாமல், அக்கறையோடு வாழ்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். Fr. Maria Antonyraj, Palayamkottai. 2017.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 5
=================================================================================
முதல் வாசகம் (திப 28:16-20, 30-31)

வாடகை வீடு

வாடகை வீட்டில் நீங்கள் வசிக்கிறீர்களா? அல்லது வசித்திருக்கிறீர்களா?

சாலைகளில் சில சமயங்களில் மக்கள் வீடு மாறிச் செல்லும்போது வாகனங்களில் பொருள்களைச் சுமந்து செல்வதைப் பார்த்திருக்கிறேன். வாடகை வீடு நமக்கு ஒரு இரண்டாங்கெட்டான் உணர்வைத் தரும். நாம் இருக்கும் இடம் நமக்குச் சொந்தம். ஏனெனில், நாம் வாடகை கொடுக்கிறோம். அதே இடம் நமக்குச் சொந்தமல்ல. ஏனெனில், அது வேறொருவருடையது. 'இருப்பவனுக்கு ஒரு வீடு. இல்லாதவனுக்கு ஊரெல்லாம் வீடு' என்பது வாடகை வீட்டில் குடியிருப்பவர்களின் நேர்முகமான உணர்வைக் காட்டுகிறது. இன்றைய காலகட்டத்தில் சொந்த வீடு கட்டுவதை விட வாடகைவீட்டில் வாழ்வதையே மக்கள் விரும்புகிறார்கள். பணி, படிப்பு என்று புலம்பெயர்தல் நடக்கும் போது சொந்த வீட்டைவிட வாடகை வீட சௌகரியமானது.

வாடகை வீட்டில் சில அசௌகரியங்கள் இருந்தாலும், வாடகை வீடு நமக்கு பெரிய வாழ்க்கைப் பாடத்தைச் சொல்கிறது.

நம் ஆன்மா குடியிருக்கும் வாடகை வீடுதான் நம்முடைய உடல். உயிரை இரவல் கொடுத்தவன் அதை எடுத்தவுடன், உடலை வாடகைக்குக் கொடுத்த மண் அதை தனக்கென எடுத்துக்கொள்கிறது.

நம் தாயின் கருவறை நாம் தங்கியிருந்த வாடகை வீடுதான். அருட்சாதனம் வரை தங்கும் பிறந்த வீடு, அருட்சாதனம் முடிந்தவுடன் தங்கும் மாமியார் வீடு, வேலைக்காக வெளிநாட்டில் தங்கியிருக்கும் வீடு, விடுதி, படிக்கும்போது, பணியிடத்தில் தங்கியிருக்க என நாம் தற்காலிகமாக வைத்திருக்கும் அனைத்துமே வாடகை வீடுகளே.

நம்முடைய உறவுகளும் வாடகை உறவுகளே. நாம் எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் உறவுகள் வாடகை உறவுகளே. உறவுகள் - இரத்த, திருமண, உடன்படிக்கை - அனைத்துமே நமக்கு உடைமை அல்ல. பாதியில் வந்த அனைத்தும் பாதியில் செல்ல வேண்டும், ஒன்றுமில்லாமல் வந்தவன் ஒன்றுமில்லாமலேயே செல்ல வேண்டும் என்பதே வாழ்வியில் நியதி.

ஆனால், பாதியில் வந்த உறவு என்றாலும் உறைவிடம் என்றாலும் உயிர் என்றாலும் உடல் என்றாலும் அதை நாம் எப்படிப் பயன்படுத்தி நம்மையே நிறைவாக்கிக்கொள்கிறோம் என்பதுதான் வாழ்க்கையின் இரகசியம்.

இன்றைய முதல் வாசகத்தில், 'பவுல் தனி வீட்டில் தங்கியிருந்தார்,' 'பவுல் இரண்டு ஆண்டுகள் வாடகை வீட்டில் தங்கியிருந்தார்' என பதிவு செய்கிறார் லூக்கா. பவுல் தன்னுடைய பழகும் திறன் மற்றும் உறவைப் பயன்படுத்தி, சிறையிலிருந்து வெளியேறி வீட்டுச் சிறைக்குச் செல்கின்றார். தனி வீடு. ஆனால், காவலாளிகள் இருப்பர்.

அங்கே பவுல் ஞானம் பெறுகிறார்.

தன்னை அழிக்கத் துடிக்க நினைத்த யூதர்களை அழைத்துப் பேசுகிறார்.

'யூதர்களை எதிரிகள் என்றும், உறுப்பு சிதைப்பவர்கள் என்றும், வயிறே அவர்கள் தெய்வம் என்றும், மானக்கேடே அவர்களுடைய வாழ்க்கை' என்றும் சாபமிட்டவர், அவர்களை வரவழைத்துப் பேசுகின்றார். அதாவது, தன் வாழ்நாள் குறுகியது. இனி சண்டையிட்டு என்ன பயன்? என எண்ணுகின்ற பவுல், அவர்களை அழைத்து மிகவும் சாந்தமாக, 'என் இனத்தாருக்கு எதிரான குற்றச்சாட்டு எதுவும் என்னிடமில்லை. இதனால்தான் நான் உங்களைக் கண்டு பேச அழைத்தேன். நம்பிக்கையின் பொருட்டு நான் விலங்கிடப்பட்டுள்ளேன்' என்கிறார். அவருடைய பேச்சில் வெறுப்போ, கோபமோ இல்லை.

வாடகை வீடு தந்த வாழ்க்கைப்பாடம்தான் இது.

வாடகை வீட்டில் இருக்கிறோம் என்ற நினைப்பு நம்மை அடுத்தவர்களோடு அட்ஜஸ்ட் செய்துகொள்ள நம்மைப் பழக்கும். 'இது நிரந்தரமல்ல' என்ற உணர்வு இருப்பதால் நாம் யாரையும் கண்டிக்கவோ, வெறுக்கவோ மாட்டோம்.

'ஒன்றும் ஒன்றும் ஐந்து என்று என்னிடம் யாராவது சொன்னால், அப்படியா என்று கேட்டுவிட்டு நகரும் மனப்பான்மை' தருவதுதான் வாடகை வீடு. 'இல்லை. அது இரண்டு' என்று வாதிடுவது நேரத்தையும், ஆற்றலையும் வீணாக்கும் செயலாகும்.

நிரந்தரமான இறைவனை விட, நிரந்தரமற்ற வாடகை வீடும் நமக்கு வாழ்க்கைப்பாடங்களைக் கற்றுத்தரும் - பவுலுக்குப் போல!


Rev. Fr. Yesu Karunanidhi

 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!