|
|
05 ஜூன் 2019 |
|
|
பாஸ்கா காலம்
7ம் வாரம் - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
வளர்ச்சியையும் உரிமைப்பேற்றையும் உங்களுக்குத் தரவல்ல கடவுளிடம்
ஒப்படைக்கிறேன்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 20: 28-38
அந்நாள்களில் பவுல் எபேசு சபையின் மூப்பர்களிடம் கூறியது: "தமது
சொந்த இரத்தத்தால் தமதாக்கிக்கொண்ட கடவுளின் திருச்சபையை
மேய்ப்பதற்குத் தூய ஆவியார் உங்களைக் கண்காணிப்பாளராக ஏற்படுத்தியுள்ளதால்
உங்களையும், மந்தை முழுவதையும் கவனமுடன் காத்துக்கொள்ளுங்கள்.
உங்களை விட்டு நான் சென்ற பின்பு கொடிய ஓநாய்கள் உங்களுக்குள்
நுழையும் என்பது எனக்குத் தெரியும். அவை மந்தையைத் தப்பவிடாதவாறு
தாக்கும். உங்களிடமிருந்து சிலர் தோன்றி சீடர்களையும் தம்மிடம்
திசைதிருப்பும் அளவுக்கு உண்மையைத் திரித்துக் கூறுவர்.
எனவே விழிப்பாயிருங்கள்; மூன்று ஆண்டு காலமாக அல்லும் பகலும்
இடைவிடாது கண்ணீரோடு நான் உங்கள் ஒவ்வொருவருக்கும் அறிவுறுத்தி
வந்ததை நீங்கள் நினைவிற் கொள்ளுங்கள். இப்போதும் நான் உங்களைக்
கடவுளிடம் ஒப்படைக்கிறேன்; அவரது அருள் வார்த்தைக்கும் கட்டுப்படுவீர்களாக!
அவ்வார்த்தை வளர்ச்சியையும் தூயோர் அனைவருக்கும் உரிய உரிமைப்பேற்றையும்
உங்களுக்குத் தர வல்லது. எவருடைய பொன்னுக்கோ வெள்ளிக்கோ ஆடைக்கோ
நான் ஆசைப்பட்டதில்லை. என்னுடைய தேவைகளுக்காகவும் என்னோடு இருந்தவர்களுடைய
தேவைகளுக்காகவும் இந்த என் கைகளே உழைத்தன என்பதை நீங்கள் அறிவீர்கள்.
இவ்வாறு பாடுபட்டு உழைத்து நலிவுற்றோர்க்குத் துணை நிற்கவேண்டுமென்று
அனைத்திலும் உங்களுக்கு வழிகாட்டினேன்.
அதோடு, பெற்றுக்கொள்வதைவிடக் கொடுத்தலே பேறுடைமை என்று ஆண்டவர்
இயேசு கூறியதை நினைவுகூருங்கள் என்றும் கூறினேன்." இவற்றைச்
சொன்னபின் அவர் முழந்தாள்படியிட்டு, அவர்கள் எல்லாரோடும்
சேர்ந்து இறைவனிடம் வேண்டினார். பின் எல்லாரும் பவுலைக் கட்டித்
தழுவி முத்தமிட்டுக் கதறி அழுதனர். இனிமேல் நீங்கள் என் முகத்தைப்
பார்க்கப் போவதில்லை' என்று அவர் கூறியது அவர்களுக்கு மிகுந்த
வேதனை அளித்தது. பிறகு அவர்கள் கப்பல்வரைக்கும் சென்று அவரை
வழியனுப்பிவைத்தனர்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா
68: 28-29. 32-34a. 34b-35c (பல்லவி: 32a)
=================================================================================
பல்லவி: உலகிலுள்ள அரசர்களே! கடவுளைப் புகழ்ந்தேத்துங்கள். அல்லது:
அல்லேலூயா.
28 கடவுளே! உம் வல்லமையைக் காட்டியருளும்; என் சார்பாகச் செயலாற்றிய
கடவுளே! உம் வல்லமையைக் காட்டியருளும்! 29 எருசலேமில் உமது
கோவில் உள்ளது; எனவே, அங்கு அரசர் உமக்குக் காணிக்கை கொணர்வர்.
பல்லவி
32 உலகிலுள்ள அரசர்களே! கடவுளைப் புகழ்ந்தேத்துங்கள்; ஆண்டவரைப்
போற்றிப் பாடுங்கள். 33 வானங்களின் மேல், தொன்மைமிகு வானங்களின்
மேல், ஏறிவரும் அவரைப் புகழுங்கள்; இதோ! அவர் தம் குரலில், தம்
வலிமைமிகு குரலில், முழங்குகின்றார்.
34a கடவுளுக்கே ஆற்றலை உரித்தாக்குங்கள்.
பல்லவி
34b அவரது மாட்சி இஸ்ரயேல் மேலுள்ளது; அவரது வலிமை மேக மண்டலங்களில்
உள்ளது. 35c கடவுள் போற்றி! போற்றி! பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யோவா 17: 17b,a
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது வார்த்தையே உண்மை. உண்மையினால்
அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நாம் ஒன்றாய் இருப்பதுபோல், அவர்களும்
ஒன்றாய் இருப்பார்களாக.
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
17: 11b-19
இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து வேண்டியது: "தூய தந்தையே!
நாம் ஒன்றாய் இருப்பதுபோல், அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி
நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்தருளும்.
நான் அவர்களோடு இருந்தபோது நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால்
அவர்களைக் காத்து வந்தேன்; நன்கு பாதுகாத்தேன். அவர்களுள் எவரும்
அழிவுறவில்லை. மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறும் வண்ணம் அழிவுக்குரியவன்
மட்டுமே அழிவுற்றான்.
இப்போது உம்மிடம் வருகிறேன். என் மகிழ்ச்சி அவர்களுள் நிறைவாக
இருக்கும்படி நான் உலகில் இருக்கும்போதே இதைச் சொல்கிறேன். உம்
வார்த்தையை நான் அவர்களுக்கு அறிவித்தேன். நான் உலகைச் சார்ந்தவனாய்
இல்லாததுபோல், அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. ஆதலால்
உலகம் அவர்களை வெறுக்கிறது.
அவர்களை உலகிலிருந்து எடுத்துவிட வேண்டுமென்று நான் வேண்டவில்லை;
தீயோனிடமிருந்து அவர்களைக் காத்தருள வேண்டுமென்றே
வேண்டுகிறேன். நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாதது போல், அவர்களும்
உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும்.
உமது வார்த்தையே உண்மை. நீர் என்னை உலகிற்கு அனுப்பியதுபோல,
நானும் அவர்களை உலகிற்கு அனுப்புகிறேன். அவர்கள் உண்மையினால்
உமக்கு உரியவர் ஆகும்படி அவர்களுக்காக என்னையே உமக்கு அர்ப்பணமாக்குகிறேன்."
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
சிந்தனை
இறைமகனது அற்புத செபத்தை இறைவார்த்தையாக பெற்றுக்
கொள்கின்றோம்.
பவுல் அடிகளாரின் பணி அற்புதமாக இருந்தது என்பதற்கு எபேசு சபையில்
அவர் ஆற்றிய உரை சொல்லி நிற்கின்றது. அதிலே குறிப்பிடும் படியாக
பெற்றுக் கொள்வதைவிட கொடுப்பதே பேறுடைமை என்பதனை அழகாக
கூறுகின்றார்.
தீயோனிடமிருந்து தன்னிடம் ஓப்படைத்தவர்களை காத்தருளும் என மன்றாடின
மன்றாட்டு இறைவனது அற்புத மன்றாட்டு.
நாமும் கொடுப்பதிலே, (பொருளை, அன்பை, நேரத்தை, திறமையை) என
பலவற்றை கொடுத்து மற்றவர்களை உள்ளவர்களாக்குவோம். வாழ்வு பெற்றவர்களாக்குவோம்.
நம்மிடம் ஓப்படைக்கப்பட்டவர்கள் தீயவனின் கையில் இருந்து காக்கப்பட
அனுதினமும் மன்றாடுவோம்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
"அவர்களுள் எவரும் அழிவுறவில்லை"
ஒரு நகர்புறப் பங்கில் பங்குத்தந்தையாக இருந்த அந்த அருட்தந்தைக்கு
அப்படியொரு வித்தியாசமான பழக்கம் இருந்தது.
அது என்ன வித்தியாசமான பழக்கம் என்றால், பங்கைச் சார்ந்த ஏழை
எளியவர் ஒருவர் இறந்துவிட்டால், அவருக்காக சிறிதுநேரம் மட்டுமே
ஜெபம் செய்வார். அதே நேரத்தில் பங்கைச் சார்ந்த பணக்காரர் ஒருவர்
இறந்துவிட்டால், அவருக்காக நீண்ட நேரம் ஜெபிப்பார். முதலில் அந்தப்
பணக்காரருடைய வீட்டிற்குச் சென்று ஜெபிப்பார், அதன்பிறகு ஆலயத்தில்
அவருக்காகத் திருப்பலி ஒப்புக்கொடுக்கும்போது நீண்ட நேரம்
ஜெபிப்பார். அதைவிடவும் அவரைக் கல்லறையில் அடக்கம் செய்கின்றபோது
இன்னும் அதிக நேரம் ஜெபிப்பார்.
இதைப் பார்த்துவிட்டு அந்த பங்கைச் சார்ந்த ஒருவர் பங்குத்தந்தையிடம்,
"அருட்தந்தையே! பங்குமக்களிடம் ஏன் இவ்வளவு பாரபட்சம்
பார்க்கின்றீர்கள்? ஏழை ஒருவர் இறந்தால் அவருக்காக ஒருமாதிரி
ஜெபிப்பதும், பணக்காரர் ஒருவர் இறந்துவிட்டால் அவருக்காக
விழுந்து விழுந்து ஜெபிப்பதும் நல்லதற்கு இல்லையே" என்றார்.
உடனே பங்குத்தந்தை அவரிடம், "ஐயா பெரியவரே! நான் சொல்வதை கொஞ்சம்
கவனமாகக் கேளுங்கள். அப்போது புரியும் நான் ஏன் இப்படி நடந்துகிறேன்
என்று... ஏழைகள் எளிதாக விண்ணரசுக்குள் நுழைந்துவிடுவார்கள்.
அதனால் அவர்களுக்காக நீண்டநேரம் ஜெபிக்கவேண்டிய தேவையில்லை, ஆனால்
பணக்காரர்களுடைய நிலை அப்படிக் கிடையாது, அவர்களுக்காக நீண்ட
நேரம் ஜெபிக்கவேண்டும் அப்போதுதான் அவர்களும் விண்ணரசுக்குள்
நுழைய முடியும். அதனால்தான் அவர்களுக்காக நீண்ட நேரம்
ஜெபிக்கின்றேன்".
இப்படிச் சொல்லிவிட்டு பங்குத்தந்தை அந்த பெரியவரிடத்தில்,
"என்னுடைய விருப்பமெல்லாம் பங்கில் இருக்கின்ற எல்லாரும் விண்ணரசுக்குள்
நுழையவேண்டும். அதற்காகத்தான் இப்படி நடந்துகொள்கிறேன்" என்றார்.
அப்போதுதான் அந்தப் பெரியவருக்குப் புரிந்தது, பங்குத்தந்தை ஏன்
அவ்வாறு நடந்துகொள்கிறார் என்று.
அனைவரும் (அழிவுறாமல்) மீட்கப்படவேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையோடு
செயல்பட்ட அந்தப் பங்குத்தந்தை உண்மையிலே பாராட்டுக்குரியவராக
இருக்கின்றார். நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தந்தைக்
கடவுளை நோக்கி வேண்டுகின்றார். அவர் வேண்டுகின்றபோது, "நான்
அவர்களோடு இருந்தபோது நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால்
அவர்களைக் காத்து வந்தேன்; நன்கு பாதுகாத்தேன். அவர்களுள் எவரும்
அழிவுறவில்லை" என்று வேண்டுகின்றார். இயேசுவின் இத்தகைய வேண்டுதல்
நம்முடைய சிந்தனைக்குரியதாக இருக்கின்றது.
இயேசு தன்னுடைய பணிவாழ்க்கை எல்லாருக்குமானதாக அமைத்துக்கொண்டார்.
இவர் யூதர் அதனால் இவருக்குக் பணிசெய்வேன், இவருடைய
மீட்புக்காக மட்டும் நான் பாடுபடுவேன் என்று அவர் இருக்கவில்லை.
மாறாக எல்லாரும் வாழ்வுபெற வேண்டும், இறைவன் அளிக்கக்கூடிய
மீட்பினை எல்லாரும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காகப் பாடுபட்டார்.
இதனை யோவான் நற்செய்தி 10:10 ல் இடம்பெறுகின்ற "ஆடுகள்
வாழ்வுபெறும் பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும்பொருட்டு இந்த
மண்ணுலகிற்கு வந்தேன்" என்ற இயேசுவின் வார்த்தைகளில் நாம்
புரிந்துகொள்ளலாம். ஆமாம், இயேசுவின் திருவுளமே எல்லாரும்
வாழ்வு பெறவேண்டும். அதற்காகவே அவர் தந்தைக் கடவுளிடம்
மேற்சொன்ன வார்த்தைகளைச் சொல்லி ஜெபிக்கின்றார்.
தூய பவுலடியார் கூட இயேசுவின் உள்ளக் கிடக்கையை எண்ணத்தை
உணர்ந்தவராய், "எல்லா மனிதரும் மீட்புப்பெறவும் உண்மையை அறிந்துணரவும்
வேண்டுமென அவர் விரும்புகிறார்" என்று கூறுவார் (1 திமோ 2:4).
ஆகவே, இத்தகைய எண்ணத்தோடு நம்முடைய மீட்புக்காக ஜெபிக்கின்ற இயேசுவின்
பேரன்பினை உணர்ந்துகொள்வதுதான் சாலச் சிறந்த ஒரு காரியமாகும்.
இது மட்டுமல்லாமல் நம் பங்கிற்கு ஒன்றைச் செய்யவேண்டும். அதுதான்
'அழிவுக்குரிய வழியை நாடாமல், வாழ்வுக்குரிய வழியினை நாடவேண்டும்'
என்பதாகும். பல நேரங்களில் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நல்ல
ஆயனைப் போன்று நம்மை நல்வழியில் வழிநடத்திச் சென்றாலும் வழிதவறிச்
செல்லும் ஆடுகளைப் போன்று தவறான பாதையில் சென்று நாம் அழிவுக்கு
உள்ளாகின்றோம். இத்தகைய சூழ்நிலையில் நாம் இயேசு நமக்குக்
காண்பிக்கக்கூடிய வாழ்வளிக்கும் வழியில் நடப்பதுதான் மிகச் சிறப்பானது.
இயேசு நமக்காக ஜெபிக்கின்றார், நம்மை நல்வழியில் வழிநடத்துகின்றார்.
இது ஒருபக்கம் இருந்தாலும் நம்முடைய மீட்புக்கு நம்முடைய துணை
கட்டாயம் தேவை. தூய அகுஸ்தினார் இவ்வாறு குறிப்பிடுவார், "உன்
துணையின்றி உன்னைப் படைத்த கடவுள், உன் துணையின்றி உன்னை மீட்கமாட்டார்"
என்று. ஆமாம், நம்முடைய ஒத்துழைப்பு இல்லாமல் நமக்கு மீட்புக்
கிடையாது என்பதே உண்மை
ஆகவே, நம்முடைய மீட்புக்காக தந்தைக் கடவுளிடம் ஜெபிக்கும் இயேசு
ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம். அதே நேரத்தில் நாம் அழிவுக்கு
உரிய வழியில் செல்லாமல், நேரிய வழியில் செல்வோம். அதன்வழியாக
இறையருள் நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
திருத்தூதர் பணிகள் 20: 28-38
"பெற்றுக்கொள்வதைவிட கொடுத்தலே பேறுடைமை"
நிகழ்வு
பணக்காரர் ஒருவர் இருந்தார். அவர்க்கு ஒரே ஒரு மகன் இருந்தான்.
அவன் சிறுவயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்துபோனான். மகன் இறந்த
துக்கம் தாங்கமுடியாமல், பணக்காரரின் மனைவியும் சிறிதுநாட்களில்
இறந்துபோனார். இதனால் பணக்காரர் தனி மரமானார். இதற்குப் பின்பு
அவர் 'பணம் மட்டும்தான் கடைசிவரைக்கும் கூடவரும், அது மட்டும்தான்
மகிழ்ச்சியைத் தரும்' என்று பணம் சேர்ப்பதிலேயே குறியாக இருந்தார்.
யாரிடமும் அவர் அவ்வளவாகப் பேசமாட்டார். எங்கே தான்
பேசிவிட்டால், உதவி யாரும் கேட்டுவிடுவார்களோ என்ற பயத்தில்
பேச்சுக் குறைத்துக்கொண்டு வாழ்ந்து வந்தார். இப்படிப்பட்டவர்
திடீரென்று ஒருநாள் படுத்த படுக்கையானார். அவரைப் பரிசோதித்துப்
பார்த்த மருத்துவர்கள், நீண்டநாட்கட்கு வாழமாட்டார் என்று
சொல்லிவிட்டுச் சென்றார்கள். இதனால் அவர்க்கு சாவு பயம்
தொற்றிக்கொண்டது.
இதற்கிடையில் ஒருநாள் அவர் தன்னிடம் வேலைபார்த்து வந்த நம்பிக்கைக்குரிய
பணிப்பெண்ணை அழைத்து, அவளிடம் தான் அத்தனை ஆண்டுகளும் சேர்த்து
வைத்த பணம் இருந்த பீரோவின் சாவியைக் கொடுத்து, "இந்தப்
பீரோவில் நான் இத்தனை ஆண்டுகளும் சேர்த்து வைத்திருக்கின்ற பணமெல்லாம்
இருக்கின்றது. நீ செய்யவேண்டியதெல்லாம், நான் இறந்தபிறகு என்னுடைய
சவப்பெட்டிக்குள் இந்த பணத்தையெல்லாம் போட்டுப் புதைத்துவிடவேண்டும்"
என்றார். அவளும் அதற்குக் சரியென்று சொல்லிவிட்டு, அவர்
கொடுத்த சாவியை வாங்கிக்கொண்டு போனாள்.
இது நடந்து ஒருவாரம் கழித்து பணக்காரர் இறந்துபோனார். இதைத் தொடர்ந்து
அவரிடமிருந்து வேலைசெய்து வந்த பணிப்பெண், இறப்பதற்கு முன்னம்
பணக்காரர் தன்னிடம் சொன்னதுபோன்று, அவருடைய பணத்தையெல்லாம் அவருடைய
சவப்பெட்டிக்குள் வைத்துப் புதைத்தார். இதற்குப் பின்பு பணக்காரர்
விண்ணகம் சென்றார். அங்கு ஒரு பெரிய மேசை இருந்தது. அதில் அறுசுவை
உணவுகள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றுக்குப் பக்கத்தில் வானதூதர்
ஒருவர் நின்றுகொண்டிருந்தார். பணக்காரர் அந்த அறுசுவை உணவைப்
பார்த்தபோது, அவற்றைச் சுவைத்துப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வம்
ஏற்பட்டது.
உடனே அவர் அங்கே வைக்கப்பட்டிருந்த ஒரு தட்டினை எடுத்துக்கொண்டு
அறுசுவை உணவு வகைகளோடு நின்றுகொண்டிருந்த வானதூதரிடம்
சென்றார், "இந்த நெய் தோசை எவ்வளவு?" "நூறு ரூபாய்" என்றார் வானதூதர்.
"வெறும் நூறு ரூபாய்தானா?" என்று சொல்லிவிட்டு, பணக்காரர் அதை
எடுத்து தன்னுடைய தட்டில் போட்டுக்கொண்டு, "இந்த பொறித்த மீன்
எவ்வளவு?" என்றார். "அதுவும் நூறு ரூபாய்தான்" என்று வானதூதர்
சொன்னதும், அதையும் எடுத்துத் தன்னுடைய தட்டிலே
போட்டுக்கொண்டார். தொடர்ந்து அவர் வானதூதரிடம், "இந்த பழச்சாறு
எவ்வளவு?" என்று கேட்டார். "அதுவும் நூறுரூபாய்தான்" என்று வானதூதர்
சொல்ல, "ஓ! இங்கு எதை எடுத்தாலும் நூறுரூபாய்தானா? மிகவும்
விலைகுறைவாக இருக்கின்றதே" என்று சொல்லிவிட்டு, மிகவும் பெருந்தன்மையாக
பணக்காரர் ஒரு தங்க நாணயத்தை எடுத்து வானதூதரிடம் நீட்டினார்.
வானதூதர் அதைப் பார்த்துவிட்டு, "இங்கே தங்க நாணயத்தையெல்லாம்
வாங்க மாட்டோம். தங்க நாணயம் இங்கு செல்லாது" என்றார். "என்ன!
தங்க நாணயம் இங்கு செல்லாதா? அப்படியானால் எதுதான் செல்லும்"
என்று பணக்காரர் கேட்க, வானதூதர் அவரிடம், "மண்ணுலகில் நீங்கள்
எதைப் பிறர்க்குக் கொடுத்தீர்களோ, அதுதான் உங்களுடைய கணக்கில்
வரவுவைக்கப்படும். அதுதான் இங்கு செல்லுபடியாகும். மண்ணுலகில்
நீங்கள் வாழ்ந்தபோது யார்க்கும் எதையும் கொடுக்காமல் வாழ்ந்ததால்,
உங்களுடைய கணக்கில் எதுவும் வரவு வைக்கப்படவில்லை. அதனால் நீங்கள்
இங்கு எதையும் சாப்பிட முடியாது" என்றார். அப்பொழுதுதான் அந்தப்
பணக்காரர் தன்னுடைய தவற்றினை உணர்ந்து வருந்தினார்.
இந்த நிகழ்வில் வரும் பணக்காரரப் போன்றுதான் பலரும் யார்க்கும்
எதையும் கொடுக்காமல் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். இத்தகைய
சூழ்நிலையில் இன்றைய இறைவார்த்தை, 'பெறுவது அல்ல, கொடுப்பதே
பேறுடைமை' என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைக்
குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
கொடுப்பதே பேறுடைமை
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில்,
பவுல் தன்னிடம் வந்த எபேசு நகர மூப்பர்களிடம் சொல்லக்கூடிய
வார்த்தைகள்தான், "பெற்றுக்கொள்வதை விட கொடுப்பதே பேறுடைமை" என்பதாகும்.
ஆண்டவர் இயேசு சொன்னதாக பவுல், எபேசு நகர மூப்பர்களிடம் சொல்லக்கூடிய
இவ்வார்த்தைகள், நற்செய்தியில் இடம்பெறாவிட்டாலும், வாய்மொழி
வழியாக (Oral Tradition) மக்களுடைய புழக்கத்தில் இருந்தது என்று
நாம் உறுதியாகச் சொல்லலாம்.
இயேசு சொன்னதாக, பவுல் சொல்லக்கூடிய இவ்வார்த்தைகள், ஒருவருடைய
மதிப்பு அவர் எவ்வளவு சம்பாதித்து வைத்திருக்கின்றார் அல்லது
எவ்வளவு பெறுகின்றார் என்பதைப் பொறுத்து அல்ல, அவர் எவ்வளவு பிறர்க்குக்
கொடுகின்றார் என்பதைப் பொறுத்து இருக்கின்றது என்ற உண்மையை மிக
அழகாக எடுத்துச் சொல்கின்றது. இன்றைக்குப் பலர், நற்செய்தியில்
இயேசு சொல்லக்கூடிய அறிவற்ற செல்வந்தன் உவமையில் வரும் செல்வந்தனைப்
போன்று (லூக் 12: 16-31). பணம் சேர்ப்பதில்தான் மகிழ்ச்சி இருக்கின்றது
என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், உண்மையான
மகிழ்ச்சி பணத்தைச் சேர்ப்பதில் அல்ல, கொடுப்பதில் அடங்கியிருக்கின்றது.
ஆண்டவர் இயேசு செல்வராயிருந்தும் ஏழையானார் (2 கொரி 8:9). அவர்
தன்னிடமிருந்த எல்லாவற்றையும் ஏன் தன் வாழ்வையே (யோவா 10:10)
கொடுப்பதில்தான் நிறைவைக் கொண்டார். நாமும் நம்மிடம் இருப்பதைப்
பிறர்க்குக் கொடுக்கின்றபோது மட்டுமே உண்மையான மகிழ்ச்சியைக்
கண்டுகொள்ள முடியும். அப்படியில்லாமல், செல்வம் சேர்ப்பதில்தான்
மகிழ்ச்சி இருக்கின்றது என்று நினைத்து வாழ்ந்தோம் எனில், நம்மால்
ஒருபோதும் மகிழ்ச்சியாக இருக்கமுடியாது.
சிந்தனை
'கொடைகளை வழங்கும்போதெல்லாம் முகமலர்ச்சியோடு கொடு. ஆண்டவர்
உனக்கு ஏழு மடங்காகத் திருப்பித் தருவார்' (சீஞா 35: 8-10) என்பார்
சீராக்கின் ஞான நூல் ஆசிரியர். ஆகவே, பிறரிடமிருந்து பெறுவதில்
அல்ல, பிறர்க்குக் கொடுப்பதில் ஆர்வம் காட்டுவோம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
யோவான் 17: 11-19
"என் மகிழ்ச்சி அவர்களுள் நிறைவாக இருக்கும்படி நான் உலகில் இருக்கும்போதே
இதைச் சொல்கிறேன்"
நிகழ்வு
ஒருசமயம் இத்தாலி நாட்டைச் சார்ந்த பிரபலக் கவிஞரான டோர்குவாடோ
டஸோ (Torquato Tasso) அப்போது இத்தாலியை ஆண்டுவந்த ஒன்பதாம்
சார்லஸைச் சந்திக்கச் சென்றார். இருவரும் நெருங்கிய நண்பர்கள்
என்பதால் பல விடயங்களைக் குறித்து நீண்டநேரம் பேசினார்கள்.
பேச்சின் இடையில் ஒன்பதாம் சார்லஸ் கவிஞர் டசோவிடம், "நண்பா!
இந்த உலகத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கக்கூடியர் யார்?"
என்று கேட்டார். அதற்கு டசோ சிறிதும் தாமதியாமல், "இதிலென்ன சந்தேகம்!.
கடவுள்தான்' என்றார். "கடவுள் மகிழ்ச்சியாக இருக்கின்றார் என்று
எனக்குத் தெரியும்... கடவுளை அடுத்து வேறு யார் மகிழ்ச்சியாக
இருக்கின்றார்?" என்றார் அவர். டசோ ஒருகணம் யோசித்துவிட்டுச்
சொன்னார்: "கடவுளுக்கு அடுத்து மகிழ்ச்சியாக இருப்பவர், கடவுளைப்
போன்று இருப்பவர், கடவுளின் வார்த்தையைக் கடைப்பிடித்து நடப்பவர்."
கடவுளைப் போன்று இருப்பவராலும் கடவுளின் கட்டளையைக் கடைப்பிடித்து
வாழ்பவராலும் மட்டுமே இந்த உலகத்தில் மகிழ்ச்சியாக இருக்க
முடியும் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது
சிந்தனைக்குரியது. இன்றைய நற்செய்தி வாசகத்திலும் இயேசு நாம்
மகிழ்ச்சியாக இருப்பதற்கான வழியைச் சொல்கின்றார். அது என்ன என்பதை
இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
எது உண்மையான தரும்?
இன்றைய உலகில் மனிதர்கள் மகிழ்ச்சியைத் தேடி எங்கெங்கெல்லாமோ
அலைந்துகொண்டிருக்கின்றார்கள். இன்னும் ஒருசிலர் பணம், பொருள்,
இன்னபிறவற்றில் தங்களுடைய மகிழ்ச்சியைத் தேடி அலைந்துகொண்டிருக்கின்றார்.
உண்மை என்னவென்றால், இயேசு கூறுவதுபோல, மிகுதியான உடைமைகளைக்
கொண்டிருப்பதால் மட்டும் ஒருவர்க்கு வாழ்வோ அல்லது மகிழ்ச்சியோ
வந்துவிடாது (லூக் 12: 15) அப்படியானால், உண்மையான மகிழ்ச்சியை
எது தரும் என்ற கேள்வி எழுகின்றது. இதற்கான பதிலை திருவிவிலியமே
தருகின்றது. திருப்பாடல் ஆசிரியர் இவ்வாறு கூறுகின்றார்: "உம்
ஒழுங்குமுறைகளை என்றும் என் உரிமைச் சொத்தாய்க் கருதுகிறேன்.
ஆகவே, அவை என் இதயத்தை மகிழ்விக்கின்றன." (திபா 119: 11). இவ்வார்த்தைகளை
அடிப்படையாகக் கொண்டு சிந்தித்துப் பார்ப்போமேயானால், கடவுளின்
ஒழுங்குமுறைகள், அவரது கட்டளைகள்தான் ஒருவர்க்கு மகிழ்ச்சியைத்
தருகின்றன என்பது உண்மையாகின்றது.
நம் மகிழ்ச்சி நிறைவாக இருக்க வழியைச் சொல்லும் இயேசு
வேறு எதையும் விட கடவுளின் கட்டளைகள்தான் ஒருவர்க்கு உண்மையான
மகிழ்ச்யைத் தரும் என்று மேலே சிந்தித்துப் பார்த்தோம். இப்பொழுது
நம்முடைய மகிழ்ச்சி நிறைவாக இருக்க இயேசு என்ன சொல்கின்றார் என்று
சிந்தித்துப் பார்ப்போம்.
இன்றைய நற்செய்தியில் இயேசு, "என் மகிழ்ச்சி அவர்களுள் நிறைவாக
இருக்கும்படி நான் உலகில் இருக்கும்போதே இதைச் சொல்கிறேன்" என்கின்றார்.
இப்படிச் சொல்லிவிட்டு இயேசு, "உன் வார்த்தையை (கடவுளின்
வார்த்தையை) நான் அவர்கட்கு அறிவித்தேன்" என்கின்றார். அப்படியானால்,
ஒருவர் அறிவிக்கப்பட்ட கடவுளின் வார்த்தையைக் கேட்டு, அதன்படி
வாழ்ந்தால் அவருடைய வாழ்வில் மகிழ்ச்சி நிறைவாக இருக்கும் என்று
நாம் உறுதியாகச் சொல்லலாம்.
உலகம் மகிழ்ச்சி தற்காலிகமானது; கடவுள் தரும் மகிழ்ச்சியோ நிரந்தரமானது
நற்செய்தியில் இயேசு மகிழ்ச்சிக்கான வழியைச் சொல்லிவிட்டு, இன்னொரு
முக்கியமான செய்தியையும் சொல்கின்றார். அதுவும் நாம் மகிழ்ச்சியாக
இருப்பதற்கான வழிகளுள் ஒன்றாக இருக்கின்றது. அதைக் குறித்து இப்பொழுது
சிந்தித்துப் பார்ப்போம். நற்செய்தியில் இயேசு கூறுகின்றார்:
"நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாதது போல, அவர்களும் உலகைச்
சார்ந்தவர்கள் அல்ல, ஆதலால், உலகம் அவர்களை வெறுக்கிறது."
பலரும் இந்த உலகின் மாயக் கவர்ச்சிகட்கு மயங்கி, அதில்
வீழ்ந்துவிடுகிறார்கள். இப்படிப்பட்டோர் சிறிதுகாலத்திற்கு
வேண்டுமானால் மகிழ்ச்சியாக இருக்கலாம். அவர்களால் நிறைவான மகிழ்ச்சியைப்
பெற்றுக்கொள்ள முடியாது. ஆனால், எவர் ஒருவர் 'இந்த உலகம்
வெறுத்தாலும் பரவாயில்லை, மேலுலகு சார்ந்த வாழ்க்கை வாழ்வேன்'
என்று வாழ்கின்றாரோ அவர் சிறிதுகாலத்திற்கு துன்பப்பட்டாலும்,
ஒருகட்டத்தில் அவர் இயேசுவைச் சார்ந்தவர் என்பதால் நிலையான மகிழ்ச்சியைப்
பெற்றுக்கொள்வார். ஆகையால், நாம் இயேசுவைச் சார்ந்தவர்களா?
சாராதவர்களா? என்பதைப் பொறுத்தே நம்முடைய மகிழ்ச்சி இருக்கின்றது
என்று உறுதியாகச் சொல்லலாம்.
சிந்தனை
'ஆண்டவரோடு இணைந்து மகிழுங்கள். மீண்டும் கூறுகிறேன், மகிழுங்கள்"
(பிலி 4:4) என்பார் பவுல். ஆகவே, நாம் ஆண்டவருடைய கட்டளைகளைக்
கடைப்பிடித்து, அவரோடு இணைந்து மகிழ்ந்திருப்போம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4

5
=================================================================================
முதல் வாசகம் (திப 20:28-38)
எபேசு உரை
திருத்தூதர் பணிகள் நூலில் காணப்படும் உரைகளில் பவுலின் எபேசு
உரை (காண். திப 20:17-38) மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது.
திருஅவையின் கட்டமைப்பு, மூப்பர்களின் பணி, இறைவார்த்தைப்பணியின்
முக்கியத்துவம் என நிறைய கருத்துக்கள் அங்கே இடம்
பெற்றிருந்தாலும், மூன்று விடயங்களை நாம் இதிலிருந்து கற்றுக்கொள்ளலாம்.
1. 'இனிமேல் உங்களுள் எவரும் என் முகத்தைப் பார்க்கப்போவதில்லை'
எபேசின் மூப்பர்களோடு பழகி, உறவாடி, ஊக்குவித்த பவுல் அவர்களைவிட்டு
இப்படிச் சொல்லித்தான் பிரிகின்றார். பவுலின் இந்த வார்த்தைகள்
அவரின் மனப்பக்குவத்தை இரண்டு நிலைகளில் வெளிப்படுத்துகின்றன:
ஒன்று, அவர் தூய ஆவியானவரால் ஆட்கொள்ளப்பட்டு வழிநடத்தப்பட்டார்.
அந்த வழிநடத்துதலை அவர் தன் தன்னலத்திற்காக ஒருபோதும் உடைக்க
விரும்பவில்லை. இரண்டு, பவுல் வாழ்வின் எதார்த்தம் அறிந்தவராக
இருந்தார். நம் வாழ்வில் நாம் நம் நண்பர்கள் மற்றும் அறிமுகமானவர்களிடம்
பவுலைப் போல சொல்லியிருக்க மாட்டோம். ஆனால், நம் வாழ்வில்
பார்த்த, பழகிய பல நபர்களை நாம் அதற்குப் பின் பார்க்கவே இல்லை.
நாம் இனி பார்க்க மாட்டோம் என்று பழகினால் ஒருவேளை நம்மால்
முழுமையாக ஒருவரை அன்பு செய்ய முடியுமோ எனத் தோன்றுகிறது.
2. 'எவருடைய பொன்னுக்கோ வெள்ளிக்கோ ஆடைக்கோ நான் ஆசைப்பட்டதில்லை'
அதாவது, என்னுடைய ஆடம்பர தேவைக்கும் நான் ஆசைப்படவில்லை. என்
அத்தியாவசியத் தேவைக்கும் ஆசைப்படவில்லை. என்னே ஒரு உன்னதமான
பக்குவம்! எல்லாம் இழக்கும் ஒருவருக்கு எல்லாவற்றையும் விட ஆசை
இருக்கும் என்கிறது ஜென் மரபு. ஆனால், பவுல் அதையும்
வென்றெடுக்கிறார். மேலும், தன் தேவைக்கு தானே, தனது கைகளே உழைத்ததாக
பெருமிதம் கொள்கின்றார். நத்திங் ஒர்த் எவர் கம்ஸ்...
என்பார்கள். ஆக, என் கைகள், என் ஆற்றல், என் முயற்சி என வரும்
ஒன்றில் நம் மனம் மகிழ்ச்சி கொள்ளல் வேண்டும்.
3. 'பெற்றுக்கொள்வதை விட கொடுத்தலே பேறுடைமை!'
'நான் யார் பொருளுக்கும் ஆசைப்படவில்லை' என்று சொல்லி சில நேரங்களில்
நாம் ஒதுங்கிக்கொள்வதுண்டு. பவுல் இன்னும் ஒருபடி மேலே போய்,
'நான் ஆசைப்படாவிட்டாலும், அடுத்தவர்களுக்குக் கொடுக்கிறேன்'
என்கிறார். 'பெற்றுக்கொள்வதை விட கொடுத்தலே பேறுடைமை' என்று இயேசுவே
சொன்னதாக பவுல் குறிப்பிடுகிறார். இயேசுவின் இந்த வார்த்தைகள்
நற்செய்தி நூல்களில் இல்லை. ஒருவேளை ஏற்றுக்கொள்ளப்படாத நற்செய்தி
நூல்களில் இருக்கலாம். கொடுக்கும்போது நாம் நிறைய அடைகிறோம் என்பதைக்
குறிக்கவே அதை பேறுடைமை என்கிறார் பவுல்.
- Fr. Yesu Karunanidhi, Archdiocese of Madurai. +91 948 948
21 21
|
|