|
|
03 ஜூன் 2019 |
|
|
பாஸ்கா காலம்
ஏழாம் வாரம் - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நீங்கள் நம்பிக்கை கொண்டபோது, தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டீர்களா?
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 19: 1-8
அப்பொல்லோ கொரிந்தில் இருந்தபோது பவுல் மலைப்பாங்கான பகுதி
வழியாக எபேசு வந்தார். அங்கு அவர் சில சீடர்களைக் கண்டு, அவர்களை
நோக்கி, "நீங்கள் நம்பிக்கை கொண்டபோது தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டீர்களா?"
என்று கேட்டார்.
அதற்கு அவர்கள், "தூய ஆவி என்னும் ஒன்று உண்டு என்றுகூட நாங்கள்
கேள்விப்பட்டதில்லையே" என்றார்கள். "அவ்வாறெனில் நீங்கள் எந்தத்
திருமுழுக்கைப் பெற்றீர்கள்?" எனப் பவுல் கேட்க, அவர்கள்,
"நாங்கள் யோவான் கொடுத்த திருமுழுக்கைப் பெற்றோம்" என்றார்கள்.
அப்பொழுது பவுல், "யோவான் மனம் மாறிய மக்களுக்குத்
திருமுழுக்குக் கொடுத்து, தமக்குப்பின் வரும் இயேசுவிடம் நம்பிக்கை
கொள்ளுமாறு கூறினார்" என்றார். இதைக் கேட்ட மக்கள் ஆண்டவராகிய
இயேசுவின் பெயரில் திருமுழுக்குப் பெற்றனர்.
பவுல் அவர்கள்மீது கைகளை வைத்ததும், தூய ஆவி அவர்கள்மேல் இறங்கியது.
அப்பொழுது அவர்கள் பரவசப் பேச்சுப் பேசினர்; இறைவாக்கும் உரைத்தனர்.
அங்கு ஏறக்குறைய பன்னிரண்டு பேர் இருந்தனர். பின்பு பவுல்
தொழுகைக்கூடம் சென்றார். அங்கு அவர் மூன்று மாதங்கள் இறையாட்சி
பற்றித் துணிவுடன் மக்களோடு பேசி அவர்களோடு விவாதித்து அவர்களை
நம்பச் செய்தார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா
68: 1-2. 3-4ac. 5-6ab (பல்லவி: 32a)
=================================================================================
பல்லவி: உலகிலுள்ள அரசர்களே! கடவுளைப் புகழ்ந்தேத்துங்கள். அல்லது:
அல்லேலூயா.
1 கடவுள் எழுந்தருள்வார்; அவருடைய எதிரிகள் சிதறடிக்கப் படுவார்கள்;
அவரை வெறுப்போர் அவர் முன்னிலையினின்று ஓடிப்போவர்; 2 புகை அடித்துச்
செல்லப்படுவதுபோல அடித்துச் செல்லப்படுவர்; நெருப்புமுன்
மெழுகு உருகுவது போல கடவுள்முன் பொல்லார் அழிந்தொழிவர். பல்லவி
3 நேர்மையாளரோ மகிழ்ச்சியடைவர்; கடவுள் முன்னிலையில் ஆர்ப்பரிப்பர்;
மகிழ்ந்து கொண்டாடுவர்.
4ac கடவுளைப் புகழ்ந்து பாடி அவரது பெயரைப்
போற்றுங்கள்; `ஆண்டவர்' என்பது அவர்தம் பெயராம். பல்லவி
5 திக்கற்ற பிள்ளைகளுக்குத் தந்தையாகவும் கணவனை இழந்தாளின்
காப்பாளராகவும் இருப்பவர், தூயகத்தில் உறையும் கடவுள்! 6யb தனித்திருப்போர்க்குக்
கடவுள் உறைவிடம் அமைத்துத் தருகின்றார்; சிறைப்பட்டோரை விடுதலை
வாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றார். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
கொலோ 3: 1
அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால்,
மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின்
வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது
வெற்றிகொண்டுவிட்டேன்.
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
16: 29-33
அக்காலத்தில் சீடர்கள் இயேசுவிடம், "இப்போதுதான் உருவகம் எதுவுமின்றி
வெளிப்படையாகப் பேசுகிறீர். உமக்கு அனைத்தும் தெரியும். யாரும்
உம்மிடம் கேள்வி கேட்கத் தேவையில்லை என்பது எங்களுக்கு இப்போது
புரிகிறது. இதிலிருந்து நீர் கடவுளிடமிருந்து வந்தவர் என்பதை
நம்புகிறோம்" என்றார்கள்.
இயேசு அவர்களைப் பார்த்து, "இப்போது நம்புகிறீர்களா! இதோ! காலம்
வருகிறது; ஏன், வந்தேவிட்டது. அப்போது நீங்கள் சிதறடிக்கப்பட்டு
ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்கு ஓடிப்போவீர்கள்; என்னைத் தனியே
விட்டுவிடுவீர்கள்.
ஆயினும் நான் தனியாய் இருப்பதில்லை. தந்தை என்னோடு இருக்கிறார்.
என் வழியாய் நீங்கள் அமைதி காணும்பொருட்டே நான் இவற்றை உங்களிடம்
சொன்னேன். உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு; எனினும் துணிவுடன்
இருங்கள். நான் உலகின்மீது வெற்றி கொண்டுவிட்டேன்" என்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
"உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு;
எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது
வெற்றிகொண்டுவிட்டேன்"
தூய பிரான்சிஸ் டி சேல்ஸ் எழுதிய மிகப் பிரபலமான புத்தகம்
"Introduction to the Devout life" என்பதாகும். இப்புத்தகத்தில்
அவர் சொல்கின்ற ஒரு செய்தி.
பெண்ணொருத்தி பிரான்சிஸ் டி சேல்ஸ் பணிசெய்து வந்த பகுதியில்
வசித்து வந்தார். அவர் ஒவ்வொருநாளும் தண்ணீர் எடுப்பதற்காக குடங்களைத்
தூக்கிக்கொண்டு பக்கத்தில் இருந்த ஒரு குளத்திற்குச் செல்வார்.
அந்தக் குளத்தில் இருக்கின்ற தண்ணீரோ அவ்வளவு தெளிந்ததாக இல்லாமல்,
கலங்கியதாகவே இருக்கும். இருந்தாலும் அதைவிட்டால் வேறு
வழியில்லை என்பதால், அவர் அந்தக் குளத்திலிருந்து தண்ணீர் எடுத்துக்கொண்டு
வருவார்.
குளத்திலிருந்து தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்ததும் ஒரு சிறு கட்டையை
எடுத்து அதிலே போடுவார். அந்தக் கட்டயைப் போட்ட மாத்திரத்தில்
குடத்தில் இருக்கின்ற தண்ணீர் அனைத்தும் தெளிந்ததாக
மாறிவிடும்.
இந்தச் செய்தியை குறிப்பிடும் பிரான்சிஸ் டி சேல்ஸ் தொடர்ந்து
எழுதுவார், "எப்படி அந்தப் பெண்மணி, குளத்திலிருந்து தண்ணீரைக்
கொண்டு வந்ததும், கலங்கிய நிலையில் இருக்கும் அந்தத் தண்ணீரை
நல்ல தண்ணீராக மாற்ற சிறு கட்டையை எடுத்துப் போடுகின்றாரோ, அதுபோன்று
நாமும் நம்முடைய வாழ்வில் பிரச்சனைகளையும் துன்பங்களையும் சந்திக்கின்றபோது
இயேசுவை நம்முடைய உதவிக்கு அழைத்தால் நம்முடைய துன்பமெல்லாம்
இன்பமாக மாறும் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும்
கிடையாது".
ஆமாம், இயேசுவை நம் துணையாகக் கொண்டிருக்கின்றபோது நம்
வாழ்வில் வரும் எவ்வளவு பெரிய பிரச்சனையும் தூரப் போய்விடும்
என்பது உண்மை.
ஆண்டவர் இயேசு இந்த உலகத்தினை விட்டுப் பிரிந்து செல்கின்றபோது
தன்னுடைய சீடர்களுக்குப் பல அறிவுரைக் கூறுகின்றார், அதில் ஓர்
அறிவுரைதான், "உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு; எனினும்
துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றிகொண்டுவிட்டேன்" என்பதாகும்.
இயேசு தன்னுடைய சீடர்களுக்குச் சொல்கின்ற அறிவுரையில் இரண்டு
உண்மைகள் அடங்கியிருக்கின்றன. அவற்றைக் குறித்து இப்போது
சிந்தித்துப் பார்ப்போம்.
முதலாவதாக இயேசு இந்த உலகத்தினை விட்டுப் பிரிந்து சென்றவுடன்
அவருடைய சீடர்கள் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள், துன்பங்கள்
ஏறலாம். ஏனென்றால் இயேசுவின் சீடர்களோ இந்த உலகப் போக்கிலான
வாழ்க்கையை வாழப்போவது கிடையாது, அவர்கள் இந்த உலகம்
காட்டுகின்ற நெறிகளுக்கு எதிரான வாழ்க்கையை வாழப்போகிறார்கள்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த உலகப்போக்கின்படியே வாழ்ந்து
பழக்கப்பட்டவர்கள் சீடர்களுக்கு எதிராக கட்டாயம்
செயல்படுவார்கள். அதனால்தான் இயேசு கூறுகின்றார், "உலகில்
உங்களுக்குத் துன்பம் உண்டு" என்று. இயேசு சொன்னதைப் போன்று,
இயேசுவின் வழியில் நடந்தவர்களுக்கு ஏராளமான பிரச்சனைகள்,
துன்பங்கள் வந்தன. அத்தகைய சூழ்நிலையில் இயேசுவில் சீடர்கள்
இறுதிவரை மனவுறுதியோடு இருந்தார்கள். தங்களுடைய விசுவாசத்தைக்
காத்துக்கொண்டார்கள். நாமும் நம்முடைய வாழ்வில் வரும்
துன்பங்களை துணிவோடு தாங்கிக்கொள்ள வேண்டும் என்பதுதான் இயேசு
நமக்குச் சொல்லக்கூடிய அறிவுரையாக இருக்கின்றது.
நற்செய்தி வாசகத்தில் இயேசு சொல்லக்கூடிய இரண்டாவது செய்தி,
"துணிவோடு இருங்கள். நான் உலகின்மீது வெற்றிக்கொண்டுவிட்டேன்"
என்பதாகும். இயேசுவின் வழியில் நடப்பவர்களுக்கு துன்பமும்
பிரச்சனைகளும் வந்தாலும் அவையெல்லாம் நிரந்தரமானவை கிடையாது.
அந்தத் துன்பங்கள் எல்லாம் விரைவில் காணாமல் போய்விடும்,
வாழ்வில் அமைதி பிறக்கும். ஏனென்றால் இயேசு இந்த உலகத்தின்மீது
வெற்றிக்கொண்டுவிட்டார் என்பதுதான் நாம் புரிந்துகொள்ளவேண்டிய
செய்தியாக இருக்கின்றது.
பல நேரங்களில் நாம் நினைப்பதுண்டு. இந்த உலகத்தினை தீமை
வெற்றிகொண்டுவிட்டதோ என்று, அப்படிக் கிடையாது. தீமையல்ல,
நன்மையே வெற்றிபெறும். இதைத் தான் இயேசுவின் உயர்ப்பும்
அவருடைய போதனையும் நமக்கு எடுத்துச் சொல்கின்ற செய்தியாக
இருக்கின்றது. மேலும் உலகில் நாம் அனுபவிக்கக்கூடிய
துன்பங்களும் பிரச்சனைகளும் நிரந்தரமானவை அல்ல, அவையெல்லாம்
தற்காலிகமானவையே. ஆனால், ஆண்டவர் இயேசு தரக்கூடிய அமைதியும்
இன்பமும் என்றென்றும் நிலைத்து நிற்கக்கூடியவை. தூய பவுல்
உரோமையருக்கு எழுதிய திருமடலில் இதைத்தான், "இக்காலத்தில் நாம்
படக்கூடிய துன்பங்கள் எதிர்காலத்தில் நாம் அடையக்கூடிய
மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை" என்று கூறுகின்றார்.
ஆகவே, நாம் இயேசுவின் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்து,
நம்முடைய வாழ்வில் வரும் துன்பங்கள் எல்லாம் இன்பமாக மாறப்
போகிறது என்பதையும், சோதனைகள் அனைத்தும் சாதனைகளாக
மாறப்போகிறது என்பதை உணர்வோம். இறைவனுக்கு உகந்த வழியில்
நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
யோவான் 16: 29-33
"எனினும் துணிவுடன் இருங்கள்"
நிகழ்வு
மத்திய அமெரிக்காவில் உள்ள ஒரு சிறிய நாடு எல் சால்வதோர்.
இங்குதான் அருட்தந்தை ஆஸ்கர் ரொமேரோ (Oscar Romero) 1977 ம்
ஆண்டு, பிப்ரவரித் திங்கள் 23 -ம் நாள் பேராயராகப்
பொறுப்பேற்றார். இவர் பேராயராகப் பொறுப்பெடுத்த சமயத்தில்
மிகவும் குறைந்த விழுக்காடு இருந்த பணக்காரர்கள் மற்றும் வசதி
படைத்தவர்கள் தங்களிடம் இருந்த பணம் மற்றும் பதவியைக் கொண்டு
சமூகத்தின் அடித்தட்டில் இருந்த ஏழைகளையும் விவசாயிகளையும்
சுரண்டி வந்தார்கள். இதனால் பேராயர் ஆஸ்கர் ரொமேரோ
வஞ்சிக்கப்பட்ட, சுரண்டப்பட்ட மக்கள் சார்பாகக் குரல்கொடுக்கத்
தொடங்கினார்.
இதற்கிடையில் பேராயர் ஆஸ்கர் ரொமேரோவின் நெருங்கிய நண்பரான
ருடிலியோ கிராந்தே (Rutilio Grande) என்பவர் எல் சால்வதோரில்
இருந்த விவசாயப் பெருங்குடி மக்கட்கு உதவி செய்யும் பொருட்டு,
அவர்கட்கு மத்தியில் சுயஉதவிக் குழுக்களை ஏற்படுத்தி, அவர்கள்
தங்களுடைய சொந்தக்காலில் நிற்கும்படி செய்தார். இதனால்
அங்கிருந்த பணம்படைத்தவர்கள் அவர் தங்கட்குப் மிகப் ரிய
அச்சுறுத்தலாக இருப்பார் என்று அவரை மர்ம நபர்களைக் கொண்டு
கொலைசெய்தார்கள்.
இச்செய்தியைக் கேட்டுக் கொதித்தெழுந்த பேராயர் ஆஸ்கர் ரொமேரோ
தன்னுடைய நண்பரைக் கொலைசெய்த கொலைக் குற்றவாளிகளைக்
கைதுசெய்து, தக்க தண்டனை தரவேண்டும் என்று போராட்டம் நடத்தத்
தொடங்கினார். மட்டுமல்லாமல், தனக்கு எப்போதெல்லாம் வாய்ப்புக்
கிடைத்ததோ அப்போதெல்லாம் ஆட்சியாளர்கள் மற்றும்
பணம்படைத்தவர்களின் அராஜகப் போக்கை கடுமையாகத் தாக்கிப்
பேசினார். ஒருபக்கம் அவர் சமூகத்திலுள்ள அடித்தட்டு
மக்களுக்காகப் போராட்டங்களைத் தொடர்ந்தாலும், இன்னொரு பக்கம்
தன்னுடைய நண்பரின் சாவுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று
தொடர்ந்து போராட்டம் நடத்திவந்தார். இதனால் ஆட்சியாளர்களும்
பணம்படைத்தவர்களும் அவரைக் கொல்வதற்குத் தக்க தருணத்தை
எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். 1980 ம் ஆண்டு, மார்ச்
திங்கள் 24-ம் நாள் அவர் திருப்பலி
நிறைவேற்றிக்கொண்டிருக்கையில் ஒருசில மர்ம நபர்கள்
ஆலயத்திற்குள் நுழைந்து, அவரைத் துப்பாகியால் சுட்டுக்
கொன்றுபோட்டார்கள்.
பேராயர் ஆஸ்கர் ரொமேரோவிற்கு ஆட்சியாளர்களிடமிருந்தும்
அதிகாரிகளிடமிருந்தும் தொடர்ந்து அச்சுறுத்தல்களும்
எதிர்ப்புகளும் வந்துகொண்டே இருந்தன. ஆனாலும் அவர் எதற்கும்
அஞ்சாமல் மிகவும் துணிவோடு இருந்தார். பேராயர் ஆஸ்கர்
ரொமேரோவிடம் இருந்த அதே துணிவைத்தான் நாமும் கொண்டுவாழவேண்டும்
என்று இன்றைய நற்செய்தியில் இயேசு கிறிஸ்து நமக்கு
எடுத்துரைக்கின்றார். நாம் அது குறித்து இப்பொழுது
சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
துன்பங்களுக்கு மத்தியிலும் துணிவோடு இருக்கச் சொல்லும் இயேசு
இயேசு இவ்வுலகத்தை விட்டுப்போவதற்கு முன்னம், தன்னுடைய
சீடர்கட்கு பல அறிவுரைகளைக் கூறுகின்றார். அவற்றுள் ஒன்றுதான்
'உலகில் உங்கட்குத் துன்பம் உண்டு. எனினும் துணிவோடு இருங்கள்'
என்பதாகும்.
இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு, அவற்றினை வாழ்வாக்குகின்றபோது
ஒருவர் பல்வேறு இன்னல்களையும் இடையூறுகளையும் சந்திக்க
நேரிடலாம்; ஆட்சியாளர்களால் நடுவர் மன்றத்திற்கு இழுத்துச்
சொல்லப்படலாம்; கொடூரமாகச் சித்ரவதை செய்யப்படலாம். இதுபோன்று
இன்னும் பல்வேறு துன்பங்களைச் சந்திக்க நேரிடலாம். ஏன் கொலைகூட
செய்யப்படலாம். அப்படிப்பட்ட தருணங்களில் அவர் மனம் தளர்ந்தோ
அல்லது பின்வாங்கவோ கூடாது. மாறாகத் துணிவோடு இருக்கவேண்டும்.
அதைத்தான் ஆண்டவர் இயேசு சீடர்கட்கு எடுத்துச் சொல்கின்றார்.
பல்வேறு துன்பங்கட்கு மத்தியிலும் ஒருவர் துணிவோடு
இருக்கவேண்டும் என்பதற்கான காரணத்தையும் இயேசு சொல்கின்றார்.
அது என்னவென்று தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.
உலகின்மீது வெற்றிகொண்ட இயேசு
தன் வழியில் நடக்கின்ற தனது சீடர்கள் யாவரும் துணிவோடு
இருக்கவேண்டும் என்று சொல்லும் இயேசு, தான் உலகின்மீது
வெற்றிகொண்டுவிட்டதால் அவ்வாறு இருக்கச் சொல்கிறார். இவ்வுலகம்
பாவத்திற்கும் சாவிற்கும் அடிமைப்பட்டுக் கிடந்தபோது இயேசு
தன்னுடைய சிலுவைச்சாவினால் அதை வெற்றிக்கொண்டார். இக்கருத்தினை
பவுல், கொரிந்தியர்க்கு எழுதிய முதல் திருமுகத்தில் இவ்வாறு
எடுத்துரைக்கின்றார்: "சாவே கடைசிப் பகைவன். அதுவும்
அழிக்கப்படும் (1கொரி 15:26).
ஆதலால், இவ்வுலகத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த
பாவம் அதன்வழியாக வந்த சாவை இயேசு வெற்றிகொண்டுவிட்டார் என்ற
மகிழ்ச்சியில் துன்பங்களைத் துணிவோடு தாங்கிக்கொண்டு,
இயேசுவின் உண்மைச் சீடர்களாக இருந்து, அவர்க்குச் சான்று
பகர்ந்து வாழ்வோம்.
சிந்தனை
'என் பெயரின் பொருட்டு உங்களை எல்லாரும் வெறுப்பர். இறுதிவரை
மனவுறுதியோடு இருப்போரே மீட்கப்படுவர்' (மத் 10:22) என்பார்
இயேசு. எனவே, இயேசு இவ்வுலகின்மீது வெற்றிகொண்டுவிட்டார் என்ற
நம்பிக்கையோடு இறுதிவரை மனவுறுதியோடு இருந்து இயேசுவுக்குச்
சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
திருத்தூதர் பணிகள் 19: 1-8
தூய ஆவியாரால் திருமுழுக்கு
நிகழ்வு
அது ஒரு நகர்ப்புறப் பங்கு. அந்தப் பங்கில் ஒரு
ஞாயிற்றுக்கிழமையன்று திருமுழுக்குத் திருப்பலியானது
நடைபெற்றது. திருப்பலிக்கு, திருமுழுக்குப் பெறவிருந்த
குழந்தையின் பெற்றோர், அக்குழந்தையின் ஐந்து வயது சகோதரன் போக,
உற்றார் உறவினர், நண்பர்கள், குழந்தையின் பெற்றோர்க்கு
அறிமுகமானோர் என்று ஏராளமானோர் வந்திருந்தனர். குறிப்பிட்ட
நேரத்தில் திருமுழுக்குத் திருப்பலியானது நடைபெறத் தொடங்கியது.
மறையுரைக்குப் பின்பு பங்குத்தந்தை குழந்தைக்குத்
திருமுழுக்குக் கொடுக்கத் தொடங்கினார். அவர் தன்னுடைய
பாப்பாவிற்கு திருமுழுக்குக் கொடுப்பதை, அக்குழந்தையின்
சகோதரன் வைத்த கண் வாங்காமல் பார்த்துகொண்டே இருந்தான்.
திருமுழுக்கு சடங்கு முடிந்து, திருப்பலி தொடர்ந்தபிறகு அவன்
தன்னுடைய பாப்பவைத் தொட்டுப் பார்த்தபோது, ஏதோவொரு
வித்தியாசத்தை உணர்ந்தான். இதற்குப் பின்பு திருப்பலி
நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே இடையிடையே தன்னுடைய பாப்பாவைத்
தொட்டுப் பார்ப்பதும் ஏதோவொரு வித்தியாசத்தை உணர்வதுமாய்
இருந்தான் அவன்.
திருப்பலி முடிந்தது. பங்குத்தந்தை திருமுழுக்குப் பெற்ற
அக்குழந்தையைத் தன்னுடைய கையில் வாங்கி, "திருஅவையில் புதிய
உறுப்பினராகச் சேர்ந்திருக்கும் இவரை வாழ்த்தி வரவேற்கிறேன்"
என்று இறைமக்களிடம் தூக்கிக் காட்டினார். அப்பொழுது ஏதோவொரு
வல்லமை அந்தக் குழந்தையிடமிருந்து வெளிப்படுவதை உணர்ந்தார்.
அவர் இவ்வாறு உணர்வதை அறிந்த அக்குழந்தையின் சகோதரன்,
முன்வரிசையில் இருந்த ஒரு முதியவரைக் கூப்பிட்டு, "தாத்தா!
என்னுடைய பாப்பாவைத் தொட்டுப் பார்க்க ஆசையாக இருக்கின்றதா?"
என்றான். அவர் "ஆமாம்" என்று சொன்னதும்,
பங்குத்தந்தையிடமிருந்து தன்னுடைய பாப்பாவை வாங்கிக்கொண்டு,
அவர்க்குத் தொடக் கொடுத்தான். அவர் குழந்தையைத் தொட்டதும்
குழந்தையிடமிருந்து ஏதோவொரு வல்லமை வெளிப்படுவதை உணர்ந்தார்.
பின்னர் சிறுவன் தன்னுடைய பாப்பாவை முன் வரிசையில் இருந்த
மற்றவர்கட்கும் தொடக் கொடுத்தான். தொட்ட அவர்கள் அதே வல்லமையை
உணர்ந்தார்கள்.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த பங்குத்தந்தை,
"திருமுழுக்குப் பெற்றிருக்கும் இந்தக் குழந்தையிடமிருந்து
ஏதோவொரு வல்லமை வெளிப்படுவதை உணர்கிறேன். நான் மட்டுமல்லாது,
முன்வரிசையில் இருக்கின்ற எல்லாரும் உணர்ந்ததை என்னால் உணர
முடிகின்றது. இப்பொழுது ஒன்று செய்வோம். திருமுழுக்குப் பெற்ற
இக்குழந்தையை எல்லாரும் தொட்டுக்கொண்டிருக்க முடியாது
என்பதால், யாராரெல்லாம் இக்குழந்தையைத் தொட்டிருக்கிறார்களோ
அவர்களெல்லாம் தங்கட்குப் பக்கத்தில் உள்ளவர்களின் கைகளைச்
சேர்த்துப் பிடியுங்கள். இவ்வாறு இக்குழந்தையிடமிருந்து
வெளிப்படும் வல்லமையை இங்கிருக்கும் எல்லாரும்
உணர்ந்துகொள்ளுங்கள்" என்றார்.
இதைத் தொடர்ந்து திருமுழுக்குப் பெற்ற அக்குழந்தையைத்
தொட்டவர்கள் யாவரும் தங்கட்கு அருகிலிருந்தவர்களின் கைகளை
சேர்த்துப் பிடிக்க, திருப்பலிக்கு வந்திருந்த அனைவரும்
அக்குழந்தையிடமிருந்து வெளிப்பட்ட அதே வல்லமையை
உணர்ந்தவர்களாய், என்றைக்கும் இல்லாத அளவுக்கு மிகவும்
மகிழ்ச்சியோடு தங்களுடைய இல்லம் சென்றார்கள்.
ஃபிராங் மிஹாலிக் (Frank Mihalic) என்ற எழுத்தாளர் எழுதிய 'The
Next 500 stories' என்ற நூலில் இடம்பெறுகின்ற இந்த நிகழ்வானது,
திருமுழுக்கின்போது ஒருவர்மீது பொழியப்படும் தூய ஆவியார்
அவர்க்கு வல்லமையையும் புதுப்பிறப்பையும் தருகின்றார் என்ற
செய்தியை எடுத்துச் சொல்வதாக இருக்கின்றது. இன்றைய முதல்
வாசகம்கூட, தூய ஆவியாரால் திருமுழுக்கு பெறவேண்டிய
முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்வதாக இருக்கின்றது. நாம் அதைக்
குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
தூய ஆவியாரால் திருமுழுக்குப் பெற்ற பன்னிருவர்
இன்றைய முதல் வாசகத்தில், பவுல் எபேசுக்கு வருகின்றபோது, அங்கு
பன்னிரு சீடர்கள் இருக்கக் காண்கின்றார். அவர்களிடம் அவர்,
"நீங்கள் நம்பிக்கை கொண்டபோது தூய ஆவியாரைப்
பெற்றுக்கொண்டீர்களா?" என்று கேட்க, அவர்கள் தூய ஆவியார்
யாரென்று தங்கட்குத் தெரியாது என்கிறார்கள். அப்பொழுதுதான்
பவுல், அவர்கள் யோவான் வழங்கிய திருமுழுக்கைப் பெற்றவர்கள்
என்ற உண்மையை உணர்ந்துகொள்கின்றார். பின்னர் அவர் அவர்கட்குத்
இயேசுவின் பெயரால் திருமுழுக்குக் கொடுத்து, அவர்கள்மீது கைகளை
வைக்க, தூய ஆவியார் அவர்கள்மீது இறங்கிவருகின்றார்.
புதுப்பிறப்பின் அடையாளம் தூய ஆவியார்
இன்றைய முதல்வாசகம் நமக்கு ஓர் உண்மையை மிக அருமையாக எடுத்துச்
சொல்கின்றது. அது என்னவென்றால், யோவான் வழங்கிய
திருமுழுக்கிற்கும் தூய ஆவியாரால் வழங்கப்படும்
திருமுழுக்கிற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு என்பதாகும்.
யோவான் வழங்கிய திருமுழுக்கு இயேசுவின் வருகைக்காக மக்களைத்
தயார் செய்யவும் பாவ மன்னிப்புப் பெறவும் கொடுக்கப்பட்டது.
ஆனால், தூய ஆவியாரால் திருமுழுக்கு என்பது புதுபிறப்பின்
அடையாளமாக இருக்கின்றது (உரோ 8:9; யோவா 5: 9-13). இத்தகைய
திருமுழுக்குதான் பெந்தகோஸ்து நாளில் நடந்தது. இத்தகைய
திருமுழுக்கினை சீடர்கள் பெற்றுக்கொண்ட பிறகு அவர்கள் புதிய
மனிதர்களாக, வல்லமை நிறைந்தவர்களாக மாறினார்கள். நாமும்
திருமுழுக்கின்போது தூய ஆவியாரைப் பெற்றிருக்கின்றோம். எனவே,
தூய ஆவியாரைப் பெற்றிருக்கும் நாம், அவர்க்கேற்ற வாழ்க்கை
வாழ்வது மிகவும் தேவையான ஒன்று.
சிந்தனை
'தூய ஆவியாரின் தூண்டுதலுக்கு ஏற்ப வாழுங்கள்; அப்போது
ஊனியல்பின் இச்சையை நிறைவேற்ற மாட்டர்கள்' (கலா 5:16) என்பார்
பவுல். எனவே, தூய ஆவியாரால் மறுபிறப்பு அடைந்துள்ள நாம்,
அத்தூய ஆவியாரின் தூண்டுதலுக்கு ஏற்ப வாழ்வோம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்போம்
ஒரு சமயம் தந்தையும் மகனும் ஒரு பெரிய புல்வெளியில்
விளையாடிக்கொண்டிருந்தார்கள். தந்தையானவர் புல்வெளியின் ஒரு
ஓரமாக நின்றுகொண்டு உடற்பயற்சி செய்துகொண்டிருக்க, மகனோ
புல்வெளியில் இருந்த ஒரு மரத்தில் ஏறி
விளையாடிக்கொண்டிருந்தான்.
அப்போது திடிரென்று தந்தை மகனைப் பார்த்து, "பிலிப்! சத்தம்
எதுவும் போடாமல் அப்படியே மரத்திலிருந்து வேகமாக இறங்கு" என்று
கத்தினார். அப்பா எதற்கு இப்படிக் கத்துகிறார் என்றெல்லாம்
யோசிக்காமல் பிலிப், வேகமாக மரத்திலிருந்து இறங்கினான்.
"அப்படியே அங்கிருந்து வேகமாக என்னிடத்தில் ஓடி வந்துவிடு"
என்றார் தந்தை. தந்தையின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் பிலிப்
அங்கிருந்து வேகமாக தந்தையிடத்தில் ஓடிவந்தான்.
தந்தையிடத்தில் வந்த பிலிப்பை, அப்படியே அவர் மரத்தை நோக்கி
திரும்பிப் பார்க்கச் சொன்னார். பிலிப்பும் திரும்பிப்
பார்த்தான். அவன் விளையாடிக் கொண்டிருந்த மரத்தில் பதினனைந்து
அடி உயரமுள்ள ஒரு பெரிய மலைப் பாம்பு தொங்கிக் கொண்டிருந்தது.
அதைப் பார்த்த பிலிப் ஒரு கணம் பேச்சு மூச்சு இல்லாமல்
நின்றான். "அப்பா! நீங்கள் சொன்னதை மட்டும் நான் கேளாமல் அந்த
மரத்திலேயே விளையாண்டுகொண்டிருந்தால் நான் காலிதான்" என்றான்.
பின்னர் பிலிப் தன்னுடைய தந்தையை அன்போடு கட்டியணைத்துக்
கொண்டான்.
தந்தையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு பிலிப் நடந்ததால்
ஆபத்திலிருந்து காப்பற்றப்பட்டதைப் போன்று, நாமும் தந்தைக்
கடவுளின் வார்த்தைக்குக் கீழ்படிந்து நடக்கும்போது எல்லாவிதமான
ஆபத்துகளிலிருந்தும் காப்பாற்றப்பட்டு வாழ்வினைப்
பெற்றுக்கொள்வோம் என்பது உறுதி.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு இறைவார்த்தைக்கு
செவிமடுத்து நடப்பதால் கிடைக்கின்ற நன்மைகளைக் குறித்துப்
பேசுகின்றார். அதற்காக அவர் எடுத்துக்கொள்ளும் உருவகம்தான்
இருவகையான அடித்தளங்கள். இந்த உருவகத்தின் வழியாக இயேசு
திருமறையிலும் நடைமுறை வாழ்க்கையிலும் கைதேர்ந்தவர் என்பதை
மக்களுக்குப் பறைசாற்றுகின்றார். இயேசு சொல்லக்கூடிய
உருவகத்தின் ஆதாரம் நீதிமொழிகள் நூல் 10:25 ல்
இடம்பெறுகின்றது. "சுழற் காற்றிற்குபின் பொல்லார் இராமல்
போவர்; கடவுளுக்கு அஞ்சி நடப்பவர்களோ என்றுமுள்ள அடித்தளம்
போல் இருப்பார்கள்" என்று அங்கே நாம் வாசிக்கின்றோம். ஆகையால்,
இயேசு திருநூலில் இருந்த இறைவார்த்தையை எடுத்துக்கொண்டு அதனை
அன்றாட வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பேசுவதை நாம் புரிந்துகொள்ள
வேண்டும்.
இந்த உருவகத்தின் வழியாக இயேசு நமக்கு சொல்லும் செய்தியை
இப்போது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
முதலாவதாக இறைவார்த்தைக்கு நாம் செவிமடுக்கவேண்டும். அதுதான்
ஆண்டவர் இயேசு நம்மிடமிருந்து எதிர்பார்க்கக்கூடியதாக
இருக்கின்றது. இன்றைக்கு நிறையப் பேர் இறைவார்த்தையைக் கேட்பதே
கிடையாது. எல்லாம் தங்களுக்குத் தெரியும் என்ற மமதையில்தான்
வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இத்தகையோரின் நிலை மிகவும்
பரிதாபத்துக்கு உரியதாகும்.
இரண்டாவதாக நாம் இறைவார்த்தைக்கு செவிகொடுப்பதோடு
மட்டுமல்லாமல், அதனைப்படி நம்முடைய வாழ்க்கையை
அமைத்துக்கொள்ளவேண்டும். பலர் இறைவார்த்தையைக் கேட்பார்கள்.
ஆனால் அதனை தங்களுடைய வாழ்க்கையில் கடைபிடிக்கிறார்களா என்பது
மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கின்றது. இப்படி
இறைவார்த்தையைக் கேட்டு அதனைத் தங்களுடைய வாழ்க்கையில்
கடைப்பிடித்து வாழாதோர் மணல்மீது தங்களுடைய வீட்டைக் கட்டிய
அறிவிலிகளுக்கு ஒப்பானவர்களாக இருக்கின்றார். ஆனால்
இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி தங்களுடிய வாழ்க்கையை
அமைத்துக்கொள்பவர்களின் வாழ்க்கையோ பாறையின் மீது தங்களுடைய
வீட்டைக் கட்டிய அறிவாளிகளுக்கு ஒப்பானதாக இருக்கின்றது.
அவர்களை எந்தவொரு ஆபத்தும் துன்பமும் நெருங்காது என்பதுதான்
இயேசு நமக்குச் சொல்லும் செய்தியாக இருக்கின்றது. நாம்
இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நடக்கின்றோ என்பது நம்முடைய
சிந்தனைக்குரியதாக இருக்கின்றது.
இந்த நற்செய்திப் பகுதியின் முந்தைய பகுதியில் அதாவது நேற்றைய
வாசகத்தில் (மத் 7: 15- 20) இயேசு போலி இறைவாக்கினர்களைக்
குறித்து பேசியிருப்பார். போலி இறைவாக்கினர்கள் இறைவார்த்தையை
மக்களுக்கு எடுத்துச் சொன்னார்கள், ஆனால் அதனை தங்களுடைய
வாழ்க்கையில் துளியளவும் கடைபிடிக்கவில்லை. அத்தகையோர்
மணல்மீது தங்களுடைய வீட்டைக் கட்டிய அறிவிலிகளுக்கு ஒப்பானவர்
என்கிறார். ஆகையால் நாம் இறைவார்த்தையைக் கேட்டோ அல்லது
போதித்தோ மட்டும் இருந்துவிட்டு அதன்படி நம்முடைய வாழ்க்கையை
அமைத்துக்கொள்ளாதபோது நாமும் மணல்மீது வீட்டைக் கட்டிய
அறிவிலிக்கு ஒப்போவோம் என்பதுதான் உண்மையாக இருக்கின்றது.
எனவே, நாம் ஆண்டவர் இயேசு நமக்குப் போதித்த போதனையையின் படி
வாழக் கற்றுக்கொள்வோம்; இறைவார்த்தைக்கு எப்போதும்
கீழ்ப்படிந்து நடப்போம்; உண்மையான அடித்தளமாகிய இயேசுவின்மீது
நம்முடைய வாழ்வை அமைத்துக்கொள்வோம், அதன்வழியாக இறையருள்
நிறைவாய் பெறுவோம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
5
=================================================================================
|
|