|
|
01 ஜூன் 2019 |
|
|
பாஸ்கா காலம்
7ம் வாரம் - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
'இயேசுவே மெசியா' என அப்பொல்லோ மறைநூல்களின்மூலம் எடுத்துக்காட்டினார்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 18: 23-28
பவுல் சிறிது காலம் அந்தியோக்கியாவில் செலவிட்டபின் அங்கிருந்து
புறப்பட்டு ஒன்றன்பின் ஒன்றாகக் கலாத்தியா, பிரிகியாப் பகுதிகள்
வழியாகச் சென்று சீடர்கள் அனைவரையும் உறுதிப்படுத்தினார்.
அலக்சாந்திரியாவில் பிறந்த அப்பொல்லோ எனும் பெயருடைய யூதர் ஒருவர்
எபேசு வந்தடைந்தார். அவர் சொல்வன்மை மிக்கவர்; மறைநூல்களில் புலமை
வாய்ந்தவர். ஆண்டவரின் நெறிகளைக் கற்றறிந்தவர்; ஆர்வம்மிக்க உள்ளத்தோடு
இயேசுவைப் பற்றிய செய்தியைப் பிழையற அறிவித்தும் கற்பித்தும்
வந்தார்.
ஆனால் அவர் யோவான் கொடுத்த திருமுழுக்கை மட்டுமே அறிந்திருந்தார்.
அவர் தொழுகைக்கூடத்தில் துணிவுடன் பேசத் தொடங்கினார். அவர்
பேசியதைக் கேட்ட பிரிஸ்கில்லாவும் அக்கில்லாவும் அவரை அழைத்துக்
கொண்டுபோய், கடவுளின் நெறியைத் திட்டவட்டமாக விளக்கினர். அவர்
அக்காயாவுக்குப் போக விரும்பியபோது சகோதரர் சகோதரிகள் அவரை ஊக்கப்படுத்தி,
அவரை ஏற்றுக்கொள்ளுமாறு சீடருக்குக் கடிதம் எழுதினார்கள். அவர்
அங்கே சென்றபோது இறையருளால் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டிருந்தவர்களுக்குப்
பெரிதும் துணையாய் இருந்தார். ஏனெனில் அவர் வெளிப்படையாகவும்
சிறப்பாகவும் யூதர்களிடம்
வாதாடி, 'இயேசுவே மெசியா' என மறைநூல்களின்மூலம்
எடுத்துக் காட்டினார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா
47: 1-2. 7-8. 9 (பல்லவி: 7a)
=================================================================================
பல்லவி: கடவுளே, அனைத்து உலகின் வேந்தர் நீரே. அல்லது: அல்லேலூயா.
1 மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப்
புகழ்ந்து பாடுங்கள். 2 ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு
உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே. பல்லவி
7 ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்; அருட்பா தொடுத்துப்
புகழ் பாடுங்கள். 8 கடவுள் பிற இனத்தார்மீது ஆட்சி
செய்கின்றார்; அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார். பல்லவி
9 மக்களினங்களின் தலைவர்கள் ஆபிரகாமின் கடவுளுடைய மக்களோடு ஒன்றுகூடுவர்;
ஏனெனில், மண்ணுலகின் மன்னர் அனைவரும் கடவுளின் கொற்றத்திற்கு
உட்பட்டவர்; கடவுளே அனைத்திற்கும் மேலானவர். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யோவா 16: 28
அல்லேலூயா, அல்லேலூயா! நான் தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தேன்.
இப்போது உலகை விட்டுத் தந்தையிடம் செல்கிறேன். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
தந்தையே
உங்கள்மீது அன்புகொண்டுள்ளார். நீங்கள் என்மீது அன்புகொண்டு,
நம்பினீர்கள்.
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 23b-28
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "நீங்கள் என்
பெயரால் தந்தையிடம் கேட்பதை எல்லாம் அவர் உங்களுக்குத் தருவார்
என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இதுவரை நீங்கள் என் பெயரால்
எதையும் கேட்டதில்லை. கேளுங்கள்; பெற்றுக்கொள்வீர்கள். அப்போது
உங்கள் மகிழ்ச்சியும் நிறைவடையும்.
நான் உங்களிடம் உருவகமாகவே பேசிவந்துள்ளேன். ஆனால் காலம் வருகிறது.
அப்போது உருவகங்கள் வாயிலாய்ப் பேசாமல், தந்தையைப் பற்றி
வெளிப்படையாய் எடுத்துரைப்பேன். அந்நாளில் நீங்கள் என் பெயரால்
வேண்டுவீர்கள்.
அப்போது 'உங்களுக்காகத் தந்தையிடம் கேட்கிறேன்' என நான் சொல்லமாட்டேன்.
ஏனெனில் தந்தையே உங்கள்மீது அன்பு கொண்டுள்ளார்.
நீங்கள் என்மீது அன்பு கொண்டு, நான் கடவுளிடமிருந்து வந்தேன்
என்று நம்புவதால்தான் தந்தையும் உங்கள்மீது அன்பு
கொண்டுள்ளார். நான் தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தேன். இப்போது
உலகைவிட்டுத் தந்தையிடம் செல்கிறேன்."
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
சிந்தனை
அலக்சாந்திரியாவில் பிறந்த அப்பொல்லோ எனும் பெயருடைய யூதர் ஒருவர்
எபேசு வந்தடைந்தார். அவர் சொல்வன்மை மிக்கவர்; மறைநூல்களில் புலமை
வாய்ந்தவர். ஆண்டவரின் நெறிகளைக் கற்றறிந்தவர்; ஆர்வம்மிக்க உள்ளத்தோடு
இயேசுவைப் பற்றிய செய்தியைப் பிழையற அறிவித்தும் கற்பித்தும்
வந்தார்.
இறைவா உமக்கு நன்றி!
இன்றைய காலக்கட்டத்திலும் இத்தகைய அன்பர்கள் பலரை இறைவன் ஆசீர்வதித்து
வருகின்றார் என்பதுவே உண்மை. புலமை வாய்ந்தவர்கள். சொல்வன்மை
மிக்கவர்கள். கற்றறிந்தவர்கள். ஈடுபாடு கொண்டவர்கள் என பலர் உண்டு
இன்றும்.
இவற்றையெல்லாம் செய்பவர் இறைவன் தாமே என்பதுவே உண்மை.
இறைவா உமக்கு நன்றி என்று சொல்லி அவரை வணங்குவோம்.
வழிபாடுவோம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
கேளுங்கள், பெற்றுக்கொள்வீர்கள்
பிரபல ஆங்கில எழுத்தாளர் சாமுவேல் ஜீவ்மர் (Samuel Zwemer). இதுவரைக்கும்
இவர் நாற்பத்து ஏழு புத்தகங்களுக்கும் மேல் எழுதியிருக்கின்றார்.
அதோடு நிறையக் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். அப்படி அவர் எழுதிய
புத்தகங்களில் மிகவும் பிரபலமானது "Do You Pray?" (Neengalநீங்கள்
ஜெபிக்கிறீர்களா?) enbஎன்ற புத்தகம்.
இப்புத்தகத்தை அவர் கைரோ (CairoCairo) என்ற இடத்தில் வைத்து எழுதினார்.
இது மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்குப் பெற்றது. எந்தளவுக்கு
என்றால், சாமுவேல் ஜீவ்மர் தெருக்களில் நடந்துபோகின்றபோது மக்கள்
அவரை, "இதோ போகிறார் 'Do You Pray' என்று அவர் எழுதிய புத்தகத்தின்
பெயரைக்கொண்டு அழைப்பார்களாம். அந்தளவுக்கு மக்கள் அவர் எழுதிய
புத்தகத்தையும், அவரையும் ஒன்றாகவே பார்த்தார்கள்.
நம்மைப் பார்க்கிறவர்கள் நம்மை ஜெப வீரர்களாக பார்க்கிறார்களா
என்று நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களைப்
பார்த்து, "நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதை எல்லாம்,
அவர் உங்களுக்குத் தருவார் என உறுதியாக உங்களுக்குச்
சொல்கிறேன்" என்கிறார். இயேசுவின் இத்தகைய வார்த்தைகளை நாம் சற்று
ஆழமாக சிந்தித்துப் பார்க்கவேண்டும். உண்மையிலே நாம்
ஜெபிக்கின்றபோது இயேசுவின் பெயரைச் சொல்லி ஜெபிக்கிறோமா? என்பதை
நமது சிந்தனைக்கு உட்படுத்தவேண்டும்.
பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம் அதிகாரம் 2, iraiiraivairaஇறைவார்த்தை
10 ல் இவ்வாறு வாசிக்கின்றோம், "இயேசுவின் பெயருக்கு விண்ணவர்,
மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்" என்று. ஆம், இயேசுவின்
பெயர் இந்த உலகத்தில் உள்ள எல்லாப் பெயர்களையும் விட உயர்ந்தது.
அதேபோன்று திருத்தூதர் பணிகள் நூல் அதிகாரம் மூன்றில் பேதுரு
இயேசுவின் பெயரைச் சொல்லி, கால் ஊனமுற்ற ஒருவனை எழுந்து நடக்கச்
செய்ததையும் வாசிக்கின்றோம். இவையெல்லாம் இயேசுவின் பெயருக்கு
எந்தளவுக்கு ஆற்றலும், வல்லமையும் இருக்கிறது என்பதை நமக்கு எடுத்துரைக்கிறது.
இத்தகைய வல்லமைமிக்க இயேசுவின் பெயரை நாம் நமது வாழ்வில்
பொருள் உணர்ந்து பயன்படுத்துகிறோமா? அல்லது இயேசுவின் பெயரைச்
சொல்லி ஜெபிக்கிறோமா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.
நற்செய்தியில் இயேசு கூறுவார், "இதுவரை நீங்கள் என் பெயரால் எதையும்
கேட்டதில்லை. கேளுங்கள், பெற்றுக்கொள்வீர்கள்" என்று. ஆகவே,
நாம் இயேசுவின் பெயரைச் சொல்லி இறைவனிடத்தில் ஜெபிக்கவேண்டும்.
பெண் ஒருத்தி காம்ப்பெல் மோர்கன் (Campbell Morgan) என்ற மறைபோதகரிடம்,
"நான் என்னுடைய வாழ்வில் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளுக்கு
எல்லாம் கடவுளிடம் போய் முறையிடவும் மாட்டேன், அவரிடம் ஜெபிக்கவும்
மாட்டன்" என்றாள். அதற்கு மோர்கன் அவர்கள் அவளிடம், "கடவுளுடைய
பார்வையில் பெரிய பிரச்சனைகள் என்று ஏதாவது இருக்கிறதா? அவருக்கு
எல்லாமே சிறிய பிரச்சனைகள்தான்" என்றார். இதைக் கேட்டதும் அந்தப்
பெண்மணி தன்னுடைய எண்ணத்தை மாற்றிக்கொண்டார்.
மேலே சொல்லப்பட்ட இந்த நிகழ்வில் வரும் பெண்மணியைப் போன்றுதான்
நாமும், 'இதையெல்லாம் போய் கடவுளிடம் முறையிடுவதா? அல்லது இதற்காகவா
இறைவனிடம் போய் ஜெபிப்பது? என்று தயங்குகிறோம். இப்படிப்பட்ட
ஒரு நிலையை கருத்தில் கொண்டுதான் இயேசு நீங்கள் கேட்டதில்லை,
அதனால்தான் பெற்றதில்லை. முதலில் கேளுங்கள் பெற்றுக்கொள்வீர்கள்"
என்கிறார்.
நாமும் நமது அன்றாட வாழ்வில் எத்தனை முறை இறைவனிடன்
ஜெபிக்கிறோம். அப்படி ஜெபிக்கும்போதெல்லாம் இயேசுவின் பெயரைச்
சொல்லி ஜெபிப்போம். அப்போது இறைவன் நமது வேண்டுதல்களைக் கேட்டு
நமக்கு ஆசிர்வழங்குவார். நம்மைத் தன் திருக்கரத்தால் வழி நடத்துவார்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
நம்மை அன்பு செய்யும் இறைவன்
முன்பொரு காலத்தில் நண்பர்கள் இருவர் பிழைப்பு தேடி பட்டணத்திற்குப்
புறப்பட்டார்கள். அவர்களில் ஒருவர் இறைப்பற்றாளர், இன்னொருவரோ
கடவுள்மீது நம்பிக்கை இல்லாதவர். இருவரும் போகும்போது தங்களுடைய
துணிமணிகளை சுமந்துகொண்டு செல்வதற்காக ஒரு கழுதையையும் தங்களோடு
கூட்டிக்கொண்டு சென்றார்கள். வழித்துணைக்கு கையில் ஒரு தீப்பந்தத்தையும்
வைத்துக்கொண்டார்கள்.
அவர்கள் இருவரும் பட்டணத்தை அடைந்ததும் தங்குவதற்கு இடம் தேடி
அலைந்தார்கள். ஆனால், அந்த இரவில் யாருமே அவர்களுக்குத் தங்குவதற்கு
இடம் தரவில்லை, அப்போது கடவுள்மீது நம்பிக்கை இல்லாதவர் இறைபற்றாளரிடம்,
"நீ அடிக்கடி சொல்வதுபோல கடவுள் அன்பானவர், நல்லவர் என்றால்
அவர் நமக்கு தங்குவதற்கு இடம் கிடைக்க வழி செய்திருப்பார் அல்லவா?,
அப்படி ஒன்றும் செய்யவில்லையே" என்று குறைபட்டுக்கொண்டார். அதற்கு
இறைபற்றாளர் அவரிடம், "நல்லதுக்காகத்தான் கடவுள் இவ்வாறு
செய்திருக்கின்றார்" என்று அவரை சமாதானப்படுத்திக் கொண்டு, ஊருக்கு
வெளியே இருந்த ஒரு பெரிய மரத்துக்கு அடியில் கூடாரம் ஒன்று அமைத்து,
இரவில் அதில் தங்கிக்கொண்டார்கள். தங்களோடு கூட்டி வந்திருந்த
கழுதையை கூடாரத்திற்கு வெளியே கொஞ்சம் தள்ளி கட்டி
வைத்துவிட்டு தூங்கப் போனார்கள். தீப்பந்தம் கூடாரத்திற்கு
வெளியே எரிந்துகொண்டே இருந்தது.
அவர்கள் இருவரும் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தபோது பயங்கர சத்தம்
கேட்டு, விழித்தெழுந்து, வெளியே வந்து பார்த்தபோது, சிங்கமொன்று
அவர்கள் வெளியே கட்டி வைத்திருந்த கழுதையை அடித்து இழுத்துப்
போய்க்கொண்டிருந்தது. இதைப் பார்த்து பயந்து போன, இறைவன்மீது
நம்பிக்கையில்லாத நபர் தன்னுடைய நண்பரிடம், "இப்போதும் நீ கடவுள்
அன்பானவர், நல்லவர் என்று சொல்வாயா?" என்று கேட்டார். அதற்கு
இறைபற்றாளர் அவரிடம், "ஒருவேளை சிங்கம் கழுதையை அடிக்கவில்லை
என்றால், நம்மையல்லவா அடித்துச் சாப்பிட்டிருக்கும், அதனால்
கடவுள் எல்லாவற்றையும் நல்லதுக்காகாத்தான் செய்வார், இதை
நினைத்து நீ ஒன்றும் கவலைப்படாதே" என்று சொல்லிவிட்டுத் தூங்கப்
பொன்னார். கடவுள்மீது நம்பிக்கை இல்லாதவருக்கோ தூங்குவதற்குப்
பயம், அதனால் தூங்காமல் விழித்துக்கொண்டே இருந்தார்.
சிறிது நேரத்தில் அவர்கள் இருந்த கூடாரத்திற்கு முன்பாக எரிந்துகொண்டிருந்த
தீப்பந்தம், பெரிய காற்று வீசி அணைந்துபோனது. இதைப் பார்த்தும்
இறைநம்பிக்கை இல்லாதவர் தன்னுடைய நண்பரை எழுப்பி, "இப்போதும்
அன்பானவர், நல்லவர் என்று சொல்கிறாயா? என்று கேட்டார். அதற்கு
இறைபற்றாளர், "கடவுள் எல்லாவற்றையும் நல்லதற்காகவே செய்வார்,
பேசாமல் நீ தூங்கு" என்று சொல்லிவிட்டு அவர் தூங்கிவிட்டார்.
சிறிது நேரத்தில் இறைவன்மீது நம்பிக்கை இல்லாதவரும்
தூங்கிவிட்டார்.
மறுநாள் பொழுது விடிந்ததும் அவர்கள் இருவரும் பட்டணத்திற்கு உள்ளே
சென்றார்கள். அப்போது பட்டணத்தில் இருந்த நிறையப் பேர் ஓலமிட்டு
அழுதுகொண்டிருந்தார்கள். இறைநம்பிக்கை இல்லாதவர் அவ்வாறு அழுதுகொண்டிருந்த
ஒருவரிடம் அதற்கான காரணத்தைக் கேட்டபோது, "நேற்று இரவு இந்த பட்டணத்திற்குள்
கொள்ளைக் கூட்டத்தினர் புகுந்து எல்லாருடைய உடமைகளையும்,
விலையுயர்ந்த பொருட்களையும் அபகரித்துக்கொண்டு போய்விட்டார்கள்,
என்னுடைய வீட்டில் இருந்த பொருட்களையும் அவர்கள் அபகரித்துக்கொண்டு
போய்விட்டார்கள். அதனால்தான் எல்லாரும் ஓலமிட்டு அழுதுகொண்டிருக்கிறார்கள்"
என்று அவர் சொன்னார்.
அதைக் கேட்டதும் இறைப்பற்றாளர் தன்னுடைய நண்பரிடம், "நேற்று
இரவு தீப்பந்தம் அணைந்து போனதற்காக பெரிதாக வருத்தப்பட்டாயே,
ஒருவேளை அந்தத் தீப்பந்தம் எரிந்துகொண்டிருந்தால், கொள்ளைக்
கூட்டத்தவர் நம்முடைய இடத்திற்கும் வந்து, நம்மிடம் இருப்பதையும்
அபகரித்துக்கொண்டிருப்பார்கள் அல்லாவா.. இப்போது புரிகிறதா,
கடவுள் எவ்வளவு அன்பானவர், நல்லவர்" என்று. இறைப்பற்றாளர் இவ்வாறு
பேசுவதைப் பார்த்த அவருடைய நண்பரால் ஒன்றும் பேசமுடியவில்லை.
கடவுள் அன்பானவர், அவர் தன்னுடைய மக்களுக்கு எப்போதும் நல்லதை
மட்டுமே செய்வார் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களிடம் இந்த
உலகத்தை விட்டுப் பிரிந்து போவதற்கு முன்பாக ஒருசில அறிவுரைகளைக்
கூறுகின்றார். அதில் ஒன்று தான், கடவுள் உங்கள்மீது (உலகின்மீது)
அன்புகொண்டுள்ளார்" என்பதாகும். கடவுளின் இத்தகைய அன்பு, நாம்
இயேசுவைத் தந்தைக் கடவுளிடமிருந்து வந்தவர் என்று நம்புவதால்
ஏற்படுவதாக இருக்கின்றது. பழைய ஏற்பாட்டுக் காலத்தில் இஸ்ரயேல்
மக்கள் கடவுளை தண்டிப்பவராகப் பார்த்தார்கள். ஆனால் ஆண்டவர் இயேசுவோ
அவரை அன்பு மிக்கவராக உலகத்தவருக்குக் காட்டுகின்றார். ஆகையால்
கடவுள் மிகவும் அன்பானவர் என நாம் உணர்வது மிகவும் சிறப்பாகும்.
எனவே, நாம் இயேசுவின் நம்பிக்கைமீது வைப்போம், அவரை முழுமையாய்
அன்பு செய்வோம், அதன்வழியாக இறைவனின் அன்பையும் ஆசிரியும்
கொடையாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
திருத்தூதர் பணிகள் 18: 23-28
ஒருவரையொருவர் ஊக்கமூட்டுவோம்
நிகழ்வு
இளைஞன் ஒருவன் இருந்தான். ஒருநாள் அவன் ஒரு கனவு கண்டான். அந்தக்
கனவில் அவன் விண்ணகம் செல்வது மாதிரியும் அங்கிருந்த வானதூதர்
ஒருவர் அவனை எல்லா இடங்கட்கும் கூட்டிச் செல்வது மாதிரியும் இருக்கக்
கண்டான்.
வானதூதர் அவனை விண்ணகத்திலிருந்த எல்லா இடங்கட்கும் கூட்டிச்
சென்றபிறகு, "விண்ணகம் எப்படி இருக்கின்றது?" என்று அவனிடம்
கேட்டார். "ஏதோவொரு கனவு தேசத்திற்குள் போவது மாதிரியும் எந்தவொரு
கவலையும் இல்லாமல், மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது மாதிரியும்
இருக்கின்றது" என்றான் அந்த இளைஞன். பின்னர் வானதூதர் அவனிடம்
தன்னுடைய விரலை கீழே சுட்டிக்காட்டி, "அங்கு என்ன தெரிகின்றது?"
என்று கேட்டார். "ஏதோவோர் இருண்ட பிரதேசம் போன்று இருக்கின்றது.
ஆனால், அது என்னவென்றுதான் எனக்குத் தெரியவில்லை" என்றான் அவன்.
"அது என்னவென்று உனக்குத் தெயர்யவில்லையா? நன்றாக உற்றுப்பார்.
அப்பொழுது உனக்குத் தெளிவாகத் தெரியும்" என்று வானதூதர் அவனிடம்
சொல்ல, அவன் நன்றாக உற்றுப் பார்த்தான். அதன்பிறகுதான் அது,
தான் இத்தனை ஆண்டுகளும் வாழ்ந்த பூமி என்பதை உணர்ந்துகொண்டான்.
"இங்கிருந்து பூமியைப் பார்த்தாயே! பூமியில் உள்ள மனிதர்களெல்லாம்
எப்படி இருக்கிறார்கள்?" என்று கேட்டார் வானதூதர். "பூமியில்
உள்ள மனிதர்களைப் பார்ப்பதற்கு மிகவும் பரிதாபமாக இருக்கின்றது.
நிறையப் பேர், தாங்கள் ஏன்தான் வாழ்கிறோம் என்றுகூடத் தெரியாமல்
வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்... இன்னும் ஒருசிலர் நம்பிக்கையில்லாமலும்
தளர்வாகவும் இருக்கிறார்கள்" என்றான் அந்த இளைஞன். உடனே வானதூதர்
அவனிடம், "இப்பொழுது உனக்கு ஒரு வாய்ப்புக் கொடுக்கப்போகிறேன்.
நீ இங்கேயே மகிழ்ச்சியாக இருக்கப்போகிறாயா? அல்லது மண்ணுலகிற்குச்
சென்று அங்குள்ள மனிதர்கட்கு ஊக்கமூட்டப் போகிறாயா? எது உன்
விரும்பம்" என்று கேட்டார். அதற்கு அந்த இளைஞன், "நான் இங்கே
மகிழ்ச்சியாக இருப்பதை விடவும் மண்ணுலகிற்குச் சென்று அவநம்பிக்கையோடு
இருக்கின்ற மக்கட்கு ஊக்கமூட்டி, அவர்களை நம்பிக்கையில் வளர்த்தெடுக்கப்
போகிறேன்" என்றான்.
அவன் இவ்வாறு சொன்னதும், அவனுக்கு முழிப்புத் தட்டியது. உடனே
அவன் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து, கனவில் தான் வானதூதரிடம்
சொன்னதுபோன்று அவநம்பிக்கையோடும் தளர்வுற்றும் இருந்த மக்களை
நம்பிக்கை நிறைந்த வார்த்தைகளால் ஊக்கமூட்டி, அவர்களை நல்வழிக்குக்
கொண்டு வந்தான்.
நாம் வாழும் இவ்வுலகில் தளர்வுற்று இருக்கும் மக்களை ஊக்கமூட்டுவது
எவ்வளவு முதன்மையான பனி என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துரைக்கின்றது.
இன்றைய முதல் வாசகமும்கூட, பவுலும் அப்பொல்லோவும்
பிரிஸ்கில்லாவும் அக்கில்லாவும் திருஅவையில் இருந்தவர்களை ஊக்கமூட்டுவதைக்
குறித்து எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது
சிந்தித்துப் பார்ப்போம்.
திருஅவையினரை ஊக்கமூட்டிய பவுல்
திருத்தூதர் பணிகள் நூலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்
வாசகம், மூன்று பகுதிகளை கொண்டிருக்கின்றது. இதன் முதல் பகுதி
பவுலைக் குறித்துப் பேசுகின்றது. பவுல் அந்தியோக்கியாவில் சில
காலம் செலவிட்டபின், கலாத்தியா, பிரிகியா போன்ற பகுதிகள்
வழியாகச் சென்று, அங்கிருந்த சீடர்களை அதாவது திருஅவையினரை
ஊக்கமூட்டி, நம்பிக்கையில் உறுதிப்படுத்துகின்றார். பவுல் மேலே
சொன்ன பகுதிகளில் இருந்த மக்களை ஊக்கமூட்டுவதன் வழியாக அவர்கள்
தங்களுடைய நம்பிக்கையில் உறுதியாக நிலைத்திருப்பதற்குக்
காரணமாக இருக்கின்றார் என்று சொன்னால் அது மிகையாகாது.
கிறிஸ்தவ வாழ்க்கை என்பது ஒரு தொடர் ஓட்டம். இதில்
பிரச்சினைகளும் சவால்களும் வந்துகொண்டுதான் இருக்கும்,
இப்படிப்பட்ட நிலையில் பவுலைப் போன்று ஊக்கமூட்டும்
இறைப்பணியாளர்கள் கட்டாயம் தேவைப்படுகின்றார்.
அப்பொல்லோவை ஊக்கமூட்டிய பிரிஸ்கில்லாவும் அக்கில்லாவும்
பவுல் எபேசு நகரைவிட்டுப் போனபின்பு அலக்சாந்திரியா நகரைச்
சார்ந்த சொல்வன்மையும் மறைநூல்களில் புலமையும் ஆண்டவரின்
நெறிகளைக் கற்றறிந்த அப்பொல்லோ வந்து ஆண்டவர் இயேசுவைப் பற்றி
கற்பித்து வந்தார். ஆனால், அவர் யோவான் கொடுத்த திருமுழுக்கை
மட்டுமே அறிந்திருந்தார். இப்படிப்பட்ட நிலையில்
பிரிஸ்கில்லாவும் அக்கில்லாவும் அப்பொல்லோவைத் தங்களுடைய
இல்லத்திற்கு அழைத்துக்கொண்டு போய், அவரை ஊக்கமூட்டி, கடவுளின்
நெறியைத் திட்டவட்டமாய் எடுத்துக்கூறுகின்றனர். இதற்குப்
பின்பு அப்பொல்லோ அக்காயாவிற்குப் போக விரும்பியபோது, சகோதரர்
சகோதரிகள் அவரை ஊக்கப்படுத்துகின்றார்கள். இதனால் அப்பொல்லோ
ஆண்டவருடைய நற்செய்தியை வல்லமையோடு எடுத்துரைக்கின்றார்.
அதுமட்டுமல்லாமல் 'இயேசுவே ஆண்டவர்' என்றும்
அறிக்கையிடுகின்றார்.
ஒருவர் மற்றவரை ஊக்கமூட்டுகின்றபோது அவர் இன்னொருவரை
ஊக்கமூட்டுவார் என்பதை அப்பொல்லோவின் வழியாக நாம் கண்டு
கொள்ளலாம். பிரிஸ்கில்லாவும் அக்கில்லாவும் அப்பொல்லோவை
ஊக்கமூட்ட, அவர் அக்காயாவில் உள்ளவர்களை ஊக்கமூட்டி,
நம்பிக்கையில் உறுதியூட்டுகின்றார். இவ்வாறு ஊக்கமூட்டும்
படலம் சென்றுகொண்டே இருக்கின்றது.
சிந்தனை
'சோர்ந்துபோய்க் கிடக்கும் இன்றைய உலகில் கிறிஸ்தவர்கட்கு
இருக்கின்ற மிக முக்கியமான கடமை, ஒருவர் மற்றவரை
ஊக்கமூட்டுவதுதான்' என்பார் வில்லியம் பார்க்லே என்ற விவிலிய
அறிஞர். ஆகவே, நாம் பவுலைப் போன்று, அப்பொல்லோவைப் போன்று
தளர்ந்து போயிருக்கும் மக்களை ஊக்கமூட்டி, அவர்களை
நம்பிக்கையில் உறுதியூட்டுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
யோவான் 16: 23-28
கேளுங்கள்; பெற்றுக்கொள்வீர்கள்
நிகழ்வு
அது ஒரு நகர்ப்புறப் பங்கு. அந்தப் பங்கில் இருந்த
பங்குத்தந்தையின் இல்லத்திற்கு ஓர் அதிகாலை வேளையில் இளம்பெண்
ஒருவர் வந்தார். அவர் பங்குத்தந்தையிடம், நோய்வாய்ப்பட்டுப்
படுக்கையில் கிடக்கின்ற தன்னுடைய தந்தைக்காக வீட்டுக்கு வந்து
இறைவனிடம் வேண்டுமாறு கேட்டார். பங்குத்தந்தையும் அதற்கு
மறுப்பேதும் சொல்லாமல், அவருடைய இல்லத்திற்குச் சென்றார்.
இல்லத்தில் அந்த இளம்பெண்ணின் தந்தை படுக்கையில் கிடந்தார்.
அவர் பங்குத்தந்தையைப் பார்த்ததும், படுக்கையில் இருந்தவாறே
அவர்க்கு வணக்கம் தெரிவித்தார். பின்னர் அவர் தன்னுடைய மகளை
அருகில் அழைத்து, அவருடைய காதில், "நான் பங்குத்தந்தையோடு
தனியாக சிறிதுநேரம் பேசவேண்டும்" என்று சொன்னதும், அவர்
சரியென்று சொல்லிவிட்டு, அந்த அறையை விட்டு வெளியேறினார்.
அதன்பிறகு பெரியவர் பங்குத்தந்தையோடு பேசத் தொடங்கினார்.
அந்தப் பெரியவர் பேசிமுடித்ததும் பங்குத்தந்தையிடம்,
"உங்களிடம் நான் ஒன்றைக் கேட்கவேண்டும். உங்கள்
தலைமாட்டிற்குப் பக்கத்தில் ஓர் இருக்கை (Chair) போடப்
பட்டிருக்கின்றதே, அது யார்க்காக? நான்
அமர்ந்துகொள்வதற்காகவா?" என்றார். "இல்லை, அது என்னுடைய நண்பர்
ஒருவர்க்காக?" என்றார்.
"யார் உங்கள் நண்பர்? அவரைப் பற்றி என்னிடம் சொல்லமுடியுமா?"
என்று பங்குத்தந்தை கேட்டதும், பெரியவர், "சொல்கிறேன்" என்று
சொல்லிவிட்டுத் தொடர்ந்தார்: "சில மாதங்களுக்கு முன்பாக, நான்
நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் கிடக்கிறேன் என்ற செய்தியைக்
கேள்விப்பட்டு என்னுடைய உறவினர் ஒருவர் வந்தார். அவர்
என்னிடம், இனிமேல் நீங்கள் பெரும்பாலான நேரத்தைத் தனியாகத்தான்
செலவழிக்கவேண்டிவரும். அதனால் நீங்கள் உங்களுடைய தலைமாட்டில்
ஓர் இருக்கையைப் போட்டுவைத்து, அதில் இயேசு
அமர்ந்திருக்கின்றார் என்ற நம்பிக்கையோடு அவரிடம் பேசுங்கள்.
நிச்சயம் அவர் இங்கு வந்து அமர்ந்து, உங்களோடு பேசுவார்."
பெரியவர் இவ்வாறு சொன்னதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்த
பங்குத்தந்தை அவர்க்கு நோயில்பூசுதல் அருளடையாளத்தை
நிறைவேற்றிவிட்டு, அங்கிருந்து திரும்பிச் சென்றார்.
இது நடந்து இரண்டு நாட்கள் கழித்து, அந்தப் பெரியவரின் மகள்
பங்குத்தந்தையைப் பார்க்கக் கவலைதோய்ந்த முகத்தோடு வந்தார்.
அவர் பங்குத்தந்தையிடம் தன்னுடைய தந்தை இறந்த செய்தியைச்
சொன்னார். அதைக் கேட்டு ஒருகணம் அதிர்ந்துபோன பங்குத்தந்தை
அவரிடம், "உங்களுடைய தந்தை இறக்கும்போது எவ்வாறு இருந்தார்?"
என்று கேட்டார். அதற்கு அவர், "அவர் இறப்பதற்கு ஒரு
மணிநேரத்திற்கு முன்னம் எப்போதும் படுத்துக்கிடப்பது போல்
படுத்துக்கிடந்தார். ஒரு மணிநேரத்திற்குப் பின்பு அவரை நான்
போய்ப் பார்த்தபோது, அவருடைய தலை அவரது தலைமாட்டில் இருந்த
இருக்கையில் இருந்தது. அவரது முகம் அவ்வளவு சாந்தமாக இருந்தது"
என்றார். அப்பொழுதுதான் பங்குத்தந்தைக்கு உண்மை புரிந்தது,
அந்தப் பெரியவர் இயேசுவிடம் மடியில் சாய்ந்து தன்னுடைய ஆவியை
ஒப்படைத்திருக்கின்றார் என்று.
டோனி டி மெல்லோ சொல்லக்கூடிய நிகழ்வு, கடவுளிடம் நாம் ஒன்றைக்
கேட்கும்போது, அவர் அதைத் தருவார் என்ற செய்தியை மிக அழகாக
எடுத்துரைக்கூறுகின்றது. பெரியவர், இயேசு தன்னோடு
இருக்கவேண்டும், தன்னோடு பேசவேண்டும் என்று வேண்டினார். அதனால்
இயேசு அவரோடு இருந்தார், அவரோடு பேசினார். நாமும் இயேசுவிடம்
வேண்டினால், அவர் நம்முடைய வேண்டுதலைக் கேட்டு நமக்கு ஆசி
வழங்குவார் என்பது உறுதி.
நம்முடைய மகிழ்ச்சியை நிறைவடையச் செய்யும் இயேசு
இயேசு இவ்வுலகை விட்டுப் போவதற்கு முன்னம், தன்னுடைய
சீடர்கட்குப் பலவற்றைக் குறித்துப் போதித்தார். அவற்றுள்
முதன்மையான ஒரு விடயம்தான், இறைவேண்டலாகும். இதற்கு முன்னம்
இறைவேண்டலின் முக்கியத்துவத்தைக் குறித்து இயேசு
பேசியிருந்தாலும் (யோவா 14: 12-14; 15:7), இன்றைய
நற்செய்தியில் அவர் இன்னும் ஆழமாக, அதுவும் ஒருவர் தன்னுடைய
பெயரைச் சொல்லி வேண்டுவதன் முக்கியத்துவத்தைக் குறித்துப்
பேசுகின்றார்.
"நீங்கள் என் பெயரால் எதையும் கேட்டதில்லை. கேளுங்கள்;
பெற்றுக்கொள்வீர்கள்" என்று சொல்லும் இயேசு, அப்படிச்
செய்வதால் "மகிழ்ச்சி நிறைவடையும்" என்று சொல்கின்றார்.
ஆகையால், ஒருவருடைய மகிழ்ச்சி நிறைவடைவதற்கு அவர் இயேசுவின்
பெயரைச் சொல்லி மன்றாடுவது தேவையான ஒன்றாக இருக்கின்றது.
ஏனெனில் அவருடைய பெயர் விண்ணவர், மண்ணவர் என யாவரும்
மண்டியிடும் ஒரு பெயராகும் (பிலி 2:10)
சிந்தனை
'நீங்கள் என் பெயரால் எதைக் கேட்டாலும் செய்வேன்' (யோவா 14:14)
என்பார் இயேசு. ஆகவே, இறைவனிடம் மன்றாடும்போது இயேசுவின்
பெயரைச் சொல்லி மன்றாடுவோம். அதே நேரத்தில் நம்முடைய மன்றாட்டு
கேட்கப்பட இயேசுவின்மீது நம்பிக்கை வைத்து வாழ்வோம்.
அதன்வழியாக இறையருள் நிறைவாகப் பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
5
=================================================================================
|
|