Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      28  பெப்ரவரி 2018  
                                                     தவக்காலம் 2ம் ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
( சிரியா நாட்டின் அமைதி மற்று சிறாரா்களுக்காக செபம் செய்வோம்)

வாருங்கள், எரேமியா மீது குற்றம் சாட்டுவோம்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 18: 18-20

யூதா நாட்டினரும் எருசலேம்வாழ் மக்களும் "வாருங்கள், எரேமியாவுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்வோம். குருக்களிடமிருந்து சட்டமும், ஞானிகளிடமிருந்து அறிவுரையும், இறைவாக்கினரிடமிருந்து இறைவாக்கும் எடுபடாது. எனவே அவர்மீது குற்றம் சாட்டுவோம். அவர் சொல்வதைக் கேட்கவேண்டாம்'' என்றனர்.

ஆண்டவரே, என்னைக் கவனியும்; என் எதிரிகள் சொல்வதைக் கேளும். நன்மைக்குக் கைம்மாறு தீமையா? என் உயிரைப் போக்கக் குழி பறித்திருக்கின்றார்கள்; அவர்கள்மேல் உமக்கிருந்த சினத்தைப் போக்குவதற்காக அவர்களைக் குறித்து நல்லதை எடுத்துச் சொல்வதற்கு நான் உம்முன் வந்து நின்றதை நினைவுகூரும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்  திபா 31: 4-5. 13. 14-15 (பல்லவி: 16b)
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, உமது பேரன்பால் என்னை விடுவித்தருளும்.

4 அவர்கள் எனக்கென விரித்து வைத்துள்ள வலையிலிருந்து என்னை விடுவித்தருளும்; ஏனெனில், நீரே எனக்கு அடைக்கலம். 5 உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்; வாக்குப் பிறழாத இறைவனாகிய ஆண்டவரே, நீர் என்னை மீட்டருளினீர். பல்லவி

13 பலர் என்மீது பழிசுமத்தியது என் காதில் விழுந்தது; எப்பக்கமும் பேரச்சம் சூழ்ந்தது. அவர்கள் ஒன்றுகூடி எனக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்தார்கள்; என் உயிரைப் பறிக்கத் திட்டம் தீட்டினார்கள். பல்லவி

14 ஆண்டவரே, நான் உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன்; "நீரே என் கடவுள்' என்று சொன்னேன். 15 என் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் உமது கையில் உள்ளது; என் எதிரிகளின் கையினின்றும், என்னைத் துன்புறுத்துவோரின் கையினின்றும் என்னை விடுவித்தருளும். பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 8: 12b
அல்லேலூயா, அல்லேலூயா! "உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்," என்கிறார் ஆண்டவர்.அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 அவருக்கு மரண தண்டனை விதிப்பார்கள்.

தூயமத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 17-28

அக்காலத்தில் இயேசு எருசலேமை நோக்கிச் செல்லும் வழியில் பன்னிரு சீடரையும் தனியே அழைத்து, "இப்பொழுது நாம் எருசலேமுக்குச் செல்கிறோம். மானிடமகன் தலைமைக் குருக்களிடமும், மறைநூல் அறிஞர்களிடமும் ஒப்புவிக்கப்படுவார். அவர்கள் அவருக்கு மரண தண்டனை விதிப்பார்கள். அவர்கள் அவரை ஏளனம் செய்து, சாட்டையால் அடித்து, சிலுவையில் அறையும்படி பிற இனத்தவரிடம் ஒப்புவிப்பார்கள்.

ஆனால் அவர் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படுவார்'' என்று அவர்களிடம் கூறினார். பின்பு செபதேயுவின் மனைவி தம் மக்களோடு ஒரு வேண்டுகோள் விடுக்குமாறு இயேசுவிடம் வந்து பணிந்து நின்றார். "உமக்கு என்ன வேண்டும்?'' என்று இயேசு அவரிடம் கேட்டார்.

அவர், "நீர் ஆட்சி புரியும்போது என் மக்களாகிய இவர்கள் இருவருள் ஒருவன் உமது அரியணையின் வலப்புறமும் இன்னொருவன் இடப்புறமும் அமரச் செய்யும்'' என்று வேண்டினார்.

அதற்கு இயேசு, "நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கப்போகும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா?'' என்று கேட்டார். அவர்கள் "எங்களால் இயலும்'' என்றார்கள்.

அவர் அவர்களை நோக்கி, "ஆம், என் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவதோ எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்களை என் தந்தை யாருக்கு ஏற்பாடு செய்திருக்கிறாரோ அவர்களுக்கே அவை அருளப்படும்'' என்றார்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப்பேரும் அச்சகோதரர் இருவர்மீதும் கோபங் கொண்டனர்.

இயேசு அவர்களை வரவழைத்து, "பிற இனத்தவரின் தலைவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். உயர்குடிமக்கள் அவர்கள்மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள்; இதை நீங்கள் அறிவீர்கள். உங்களிடையே அப்படி இருக்கக்கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும். இவ்வாறே மானிடமகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்'' என்று கூறினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
பணிவு: இறையடியாருக்கு இருக்கவேண்டிய முதன்மையான பண்பு

ஒருமுறை அசோக சக்கரவர்த்தி தன் ரதத்தில் சாலையோரமாகப் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிரே ஒரு துறவி வந்து கொண்டிருப்பதைக் கவனித்ததும் ரதத்திலிருந்து இறங்கி வந்து, அவர் காலில் விழுந்தார். அதைக் கவனித்த அவரது தளபதிக்கு மாமன்னர் ஒரு பரதேசியின் - துறவியின் - காலில் விழுவதா? என்று வருத்தம் ஏற்பட்டது. அதை அரண்மனைக்கு வந்ததும் மன்னரிடமே வெளிப்படுத்தினார். மன்னரோ அவரது வினாவுக்கு விடையளிக்காமல், ஒரு ஆட்டுத்தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத் தலை மூன்றும் உடனே வேண்டும் என ஒரு வினோதமான ஆணையிட்டார்.

மூன்று தலைகளும் கொண்டு வரப்பட்டன. மன்னர் மூன்றையும் சந்தையில் விற்றுவரச் சொன்னார். ஆட்டுத்தலை உடனே விலை போயிற்று. புலித்தலையை வாங்கப் பலரும் யோசித்தனர். இறுதியில் ஒரு வேட்டைக்காரர் தன் வீட்டு சுவற்றில் பாடம்பண்ணி தொங்கவிட வாங்கிச் சென்றார்.

ஆனால் மனிதத் தலையைக் கண்டு எல்லோரும் அஞ்சிப் பின்வாங்கினர்; முகம் சுழித்து ஓடினர். ஒரு காசுக்குக் கூட யாரும் வாங்க முன்வரவில்லை. விபரங்களை மன்னரிடம் சொன்னபோது மனிதத் தலையை யாருக்காவது இலவசமாகக் கொடுத்துவிட சொன்னார். "இலவசமாக வாங்கக்கூட யாரும் தயாராயில்லை" என்றார் தளபதி. இப்போது அசோகா மன்னர் சொன்னார், "தளபதியே, மனிதன் இறந்து விட்டால் அவன் உடல் ஒரு காசு கூடப் பெறாது. இருந்தும் இந்த உடல் உயிர் உள்ளபோது என்ன ஆட்டம் போடுகிறது? இறந்த பிறகு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்கு தெரிகிறது. ஆதலால், உடலில் உயிர் இருக்கும்போதே, தம்மிடம் எதுவும் இல்லை என்று உணர்ந்த ஞானிகளின் பாதத்தில் தாழ்ந்து விழுந்து வணங்குவதில் என்ன தவறு இருக்க முடியும்?, அவர்களைத் தாழ்ந்து பணிந்து வணங்கினால் நமக்குத் தான் ஆசிர்".

தளபதிக்கு இப்போது உண்மை புரிந்தது மன்னர் ஏன் துறவியின் காலில் விழுந்து வணங்கினார் என்று.

மனிதன் தாழ்ச்சியோடு வாழும்போது மேலும் மேலும் அசிர்வதிக்கப்படுவான் என்பதை இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னுடைய சாவை சீடர்களிடத்தில் எடுத்துரைக்கிறார். ஆனால், அதைப் புரிந்துகொள்ளாத சீடர்களோ தங்களுக்குள் யார் பெரியவராவது என்ற விவாதத்தில் இறங்கிவிடுகிறார்கள். குறிப்பாக யாக்கோபு மற்றும் யோவானின் தாயோ இயேசுவிடம் வந்து, "நீர் ஆட்சிபுரியும்போது என் மக்களாகிய இவர்கள் இருவருள் ஒருவன் உமது அரியணையின் வலப்புறமும் இன்னொருவன் இடப்புறமும் அமரச் செய்யும்" என்கிறார். நாமோ பாடுகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது "இவர்கள் இப்படி அதிகாரம் பெறுவதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்களே" என்று இயேசு கவலைப்பட்டிருக்கக்கூடும். ஆனாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் அவர்களிடத்தில், "நான் குடிக்கும் கிண்ணத்தில் (துன்பக் கிண்ணத்தில்) நீங்கள் குடிப்பீர்கள், ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவதோ எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்களை என் தந்தை யாருக்கு ஏற்பாடு செய்திருக்கிறாரோ அவர்களுக்கே அவை அருளப்படும்" என்கிறார்.

இவ்வாறு சொல்லிவிட்டு இயேசு தொடர்ந்து சொல்கிறார், "உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும்" என்கிறார். அதாவது தன்னுடைய சீடர்கள் அதிகாரம் செலுத்துபவர்களாக அல்லாமல், தாழ்ச்சியோடும், பணியோடும் தன்னைப் போன்று தொண்டு செய்யட்டும் என்கிறார். இயேசுவைப் பொறுத்தளவில் அதிகாரம் அல்லது பதவி என்பது தாழ்ச்சியோடும் பணிவோடும் பணிவிடை செய்யவேண்டும் என்பதாக இருக்கின்றது.

இயேசுவிடம் சீடர்களாக, அவருடைய வழியில் நடக்கும் நாம் பணிவோடும் தாழ்ச்சியோடும் வாழ்கிறோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம் அதிகாரம் என்றால் பிறரை அடக்கி ஆளத்தான் என்று தவறாகப் புரிந்துகொண்டு நமக்குக் கீழே இருப்பவர்களை அடக்கி ஆள நினைக்கிறோம். இது தவறான போக்கு. அதிகாரத்தை, நமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பை எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்பதற்கு இயேசுவே முன்மாதிரியாக இருக்கின்றார். அவர் இறைமகன், எல்லாம் வல்லவர். அப்படி இருந்தும் அவர் பிறர் தனக்குத் தொண்டு செய்து வாழவேண்டும் என்று எண்ணாமல், தாமாவே முன்வந்து தொண்டு செய்தார். ஆகையால், நாம் ஒவ்வொருவரும் இயேசுவைப் போன்று அதிகாரத்தை வைத்துக்கொண்டு அடுத்தவரை அடக்கி ஆள நினைக்காமல், தாழ்ச்சியோடு நம்மோடு வாழ்வோருக்கு பணிவிடை செய்யக்கற்றுக்கொள்வோம்.

எனவே, இயேசுவின் சீடர்களாகிய நாம், நமது பணித்தலங்களில், நாம் இருக்கும் இடங்களில் பணிவோடும், தாழ்சியோடும் பணிவிடை செய்ய, தொண்டு செய்ய கற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- Fr. Maria Antonyraj, Palayamkottai.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
''இயேசு, "மானிட மகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் 
பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்" என்று கூறினார்'' (மத்தேயு 20:28)


-- இயேசு துன்பங்கள் அனுபவித்து, சாவுக்குக் கையளிக்கப்பட்டார். தமக்கு என்ன நேரப்போகிறது என்பதை அவர் தம் சீடருக்குப் பலமுறை எடுத்துரைத்தது உண்டு. ஆனால் அவருடைய சீடர்களோ இயேசு கூறியதைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் இயேசுவை ஒரு மெசியா-அரசர் என்று பார்த்தார்கள். அவர் துன்புறும் மெசியா என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் துன்பத்தின் வழியாகவே நிறைவாழ்வை நாம் பெற முடியும் என்பதை இயேசு தம் வாழ்விலும் சாவிலும் தெளிவாகக் காட்டினார். அவருடைய வாழ்நாட்களில் அவருக்கு ஏற்பட்ட துன்பங்கள் பல உண்டு. அவற்றில் எல்லாம் மிகப்பெரிய துன்பம் அவருடைய உடலுக்கு ஏற்பட்ட வேதனை அல்ல, மாறாக, அவருடைய உள்ளத்தையும் இதயத்தையும் ஊடுருவிய துன்பங்களே அவை. இயேசுவின் உள்ளம் துயரத்தால் சோர்ந்திருந்ததை கெத்சமனித் தோட்டத்தில் ''இயேசு துயரமும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார்'' (மத் 26:37) எனக் குறிப்பிடுகிறார் மத்தேயு.

-- இவ்வாறு துன்புற்று, சாவுக்குக் கையளிக்கப்பட்டு இயேசு இறந்தாலும் கடவுள் அவரைச் சாவிலிருந்து விடுவித்தார்; இயேசுவைப் புத்துயிர் பெற்றவராக உயிர்பெற்றெழவும் செய்தார். இயேசுவைப் பின்செல்வோரும் அவரைப் போல மக்களுக்குப் பணிசெய்வதில் ஈடுபடும்போது மக்கள் கடவுளின் அன்பை அனுபவித்து உணர்ந்து அறிந்துகொள்வார்கள். எனவே, இறையாட்சியில் நாம் முக்கிய இடத்தைப் பிடித்துக்கொள்ளவேண்டும் என்னும் முறையற்ற வேண்டுகோளை இயேசுவிடம் கொண்டுசெல்வதே முறையல்ல என்பதை இயேசுவின் சொற்கள் காட்டுகின்றன. இயேசுவைப் பின்பற்றுவோர் தொண்டு ஆற்றுவதிலும் பிறருக்கு அன்புகாட்டி வாழ்வதிலும் நிலைத்திருக்க அழைக்கப்படுகிறார்கள்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
அடக்கி ஆள்வதல்ல, அன்புப்பணி செய்வதே உண்மையான சீடத்துவ வாழ்வு

எளிமையான ஜென் துறவி அவர். மக்களிடம் சிறந்த அபிமானத்தைப் பெற்றிருந்தார். அவர் தங்கியிருந்த வீட்டைப் பார்த்தாலே அவர் பரம ஏழை என்பது தெரிந்துவிடும். மாற்று உடைகூட இல்லாமல் வறுமையில் வாடினார். இவரைப் பற்றிக் கேள்விப்பட்ட அரசன், அவரைத் தன் அரசபைக்கு அழைத்தான். ஜென் துறவியும் சென்றார். அவரைப் பார்த்ததும் மன்னர் புருவத்தை சுருக்கினார். ஜென் துறவி அணிந்திருந்த ஆடை அவர் ஏழ்மையில் இருப்பதை தெளிவாக உணர்த்தியதுதான் அதற்குக் காரணம். உடனே அரசன் கொஞ்சம் பணம் கொடுத்து, துறவியை புதிய உடுப்புகளை வாங்கிக் கொள்ளச் சொன்னார். அவரும் மனமுவந்து வாங்கிக்கொண்டார்.

இது நடந்து இரண்டு நாட்கள் கழித்து, மன்னர் துறவியை மீண்டும் சந்தித்தார். அப்போதும் துறவி பழைய உடையையே அணிந்திருந்தார். உடனே மன்னர், "புதிய உடைகள் என்னவாயிற்று?" என்று கேட்டார். "நான் அதை ஏழைகளுக்கு கொடுத்துவிட்டேன்" என்றார். இதைக் கேட்ட மன்னருக்கு ஆச்சரியமாக இருந்தது, "என்ன மனிதர் இவர், தனக்குக் கிடைத்த நல்ல உடைகளைக்கூட ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டாரே, இவரிடம் இந்த நாட்டை ஆளக்கூடிய பதவியைக் கொடுத்தால் கூட, அதை வேண்டாமென்றுதான் சொல்லி பிறருக்கு கொடுப்பார். உண்மையில் எதற்கும் ஆசைப்படாத இவரல்லவோ துறவி" என்று மன்னர் அவரை வியந்து பாராட்டினார்.

பணம், பொருள், பெயர், புகழ், அதிகாரம், அந்தஸ்து இவை எதற்கும் ஆசைப்படாத ஒருவர்தான் உண்மையான துறவியாக இருக்க முடியும் என்பதை இந்த நிகழ்வு நமக்குத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றது. நற்செய்தி வாசகத்தில் அதிகாரத்திற்கு ஆசைப்பட்ட இயேசுவின் சீடர்கள் இருவரைக் குறித்துப் படிக்கின்றோம். ஆண்டவர் இயேசு எருசலேமில் தான் பட இருந்த பாடுகளைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கின்றார். இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் யோவான் யாக்கோபுவின் தாய், தன் இரு புதல்வர்களோடு இயேசுவிடம் வந்து, "நீ ஆட்சி புரியும்போது, என் மகன்கள் இவர்கள் இருவருள் ஒருவனை உமது அரியணையின் வலப்பக்கமும் இன்னொருவனை இடப்பக்கும் அமரச் செய்யும்" என்றொரு வேண்டுகோளை வைக்கின்றார். யோவான் மற்றும் யாக்கோபு ஆகியோருடைய தாயார் இயேசுவின் முன்பாக வைத்த வேண்டுகோளை அவர்கள் இருவரும் இயேசுவின் முன்பாக வைக்கும் வேண்டுகோளாகவே நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஏனென்றால், தாங்கள் இருவரும் வைக்கும் வேண்டுகோளை இயேசு ஏற்காவிட்டாலும் தன் தாயார் வைக்கும் வேண்டுகோளை இயேசு நிச்சயம் கேட்பார் என்பதாலேயே அவர்கள் அப்படிச் செய்திருக்கக்கூடும். இயேசு தன் முன்னால் வைக்கப்பட்ட வேண்டுகோளை, அரியணையின் வலப்புறமும் இடப்புறமும் அமரச்செய்வது தன்னுடைய விரும்பம் அல்ல, அது இறை விருப்பம் என்று சொல்லி ஓரமாக வைத்துவிடுகின்றார்.

இதற்கிடையில் யோவானும் யாக்கோபும் இவ்வாறு நடந்துகொண்டதைப் பார்க்கும் மற்ற சீடர்கள் முணுமுணுக்கத் தொடங்குகிறார்கள். அப்போதுதான் இயேசு அவர்களிடம் சீடத்துவ வாழ்வு என்பது எப்படிப்பட்டது என்பதை எடுத்துரைக்கின்றார். சீடத்துவ வாழ்க்கை எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இயேசு எடுத்துரைக்கும் வார்த்தைகள் நமக்கு சிந்தனைக்கு உரியதாக இருக்கின்றன. இயேசு கூறுகின்றார், "பிற இனத்தவரின் தலைவர்கள் மக்களை அடக்கி ஆள்கிறார்கள். உயர்குடி மக்கள் அவர்கள்மீது தம் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள். உங்களிடையே அப்படி இருக்கக்கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்குத் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராய் இருக்க விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும்" என்று. ஆக, இயேசுவின் சீடராக இருக்கக்கூடியவர் அடுத்தவரை அல்லது தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களை அடக்கி ஆள்பவராக இருக்காமல், அன்பு செலுத்துபவராகும் தொண்டு ஏற்பவராக இல்லாமல், தொண்டு ஆற்றக்கூடியவராகவும் இருக்கவேண்டும் என்பதுதான் இயேசுவின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

இயேசு இத்தகைய போதனையை வெறும் போதனையாக மட்டும் நிறுத்துக்கொள்ளாமல், தன்னுடைய வாழ்வால் வெளிப்படுத்துகின்றார். சொல்லிலே சிறந்த சொல், செயல் என்பது போல இயேசு தன்னுடைய சீடர்களுக்குப் போதித்ததை தன்னுடைய வார்த்தைகளால் மட்டுமல்ல வாழ்வாலும் போதிக்கின்றார்.

ஆகையால், இயேசுவின் வழியில் நடக்கக்கூடிய நாம் ஒவ்வொருவரும் நம்மிடம் கொடுக்கப்பட்டிருகின்ற அதிகாரத்தை, பொறுப்பை மற்றவரை அடக்கி ஆளப் பயன்படுத்தாமல், அன்பு செய்வதற்கும் பிறரிடமிருந்து பணிவிடைகளைப் பெறுவதற்காக அல்லாமல், பணிவிடை செய்யப் பயன்படுத்துவோம். அதன்மூலம் இயேசுவின் உண்மையான சீடர்கள் ஆவோம், அவரது அருளை நிறைவாய் பெறுவோம்.

Maria Antonyraj, Palayamkottai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

 நற்செய்தி (மத்தேயு 20:17-28)

செபதேயுவின் மனைவி

விவிலியத்தின் நற்செய்தி நூல்களில் வரும் "செபதேயுவின் மனைவி" என்னும் இத்தாய் ஆச்சர்யத்துக்குரியவர். செபதேயுவின் மனைவி அல்லது செபதேயுவின் மக்கள் நிகழ்வு மத்தேயு (20:17-28) மற்றும் மாற்கு (10:35-45) நற்செய்தி நூல்களில் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இரண்டு நற்செய்தியாளர்களும் வௌ;வேறு விதங்களில் இதைப் பதிவு செய்கின்றனர்.

மத்தேயு: "செபதேயுவின் மனைவி"

மாற்கு: "செபதேயுவின் மக்கள்"

மத்தேயு: "கிண்ணத்தில் குடிக்க முடியுமா?"

மாற்கு: "கிண்ணத்தில் குடிக்க முடியுமா?" "திருமுழுக்கு பெற முடியுமா?"

இந்த இரண்டு வித்தியாசங்கள் தவிர மற்றபடி பதிவுகளின் அமைப்பு ஒன்றுபோலவே இருக்கிறது:

அ. இயேசுவிடம் விண்ணப்பம்

ஆ. இயேசு வைக்கும் மினி இன்டர்வியு

இ. "அதெல்லாம் முடியாது! முடியாது!" என்னும் இயேசுவின் பதில்

ஈ. மற்ற சீடர்களின் கோபம்

உ. சீடத்துவம் மற்றும் அதிகாரம் பற்றிய இயேசுவின் போதனை

சீடர்களின் முகத்தைக் காப்பாற்றுவதற்காகவே யோவான் மற்றும் யாக்கோபு ஆகியோரின் அம்மா வந்ததாக பதிவு செய்கிறார் மத்தேயு. ஓர் ஆண் எப்படி இன்னொரு ஆணிடம் விண்ணப்பம் செய்ய முடியும் என்ற எண்ணமும் மத்தேயவின் இப்பதிவுக்குப் பின்புலமாக இருந்திருக்கும்.

செபதேயுவின் மனைவியே இயேசுவிடம் வந்ததாக எடுத்துக்கொள்வோம்.

யோவான் மற்றும் யாக்கோபு ஆகியோரின் தாய் தம் பிள்ளைகளுக்காக இயேசுவிடம் விண்ணப்பம் செய்கின்றாள். ரொம்ப எளிதான விண்ணப்பம்: 'ஒருவர் வலப்புறமும் மற்றவர் இடப்புறமும் அமர வேண்டும்." எப்போது? "இயேசு ஆட்சி புரியும்போது".

நல்லதுதானே!

நல்ல கள்வன் இயேசுவை அரசுரிமை பெற்றுவருபவர் என்று சொல்வதற்கு முன்னதாகவே செபதேயுவின் மனைவி அதைச் சொல்லிவிடுகிறாள். ஆண்களைவிட பெண்களுக்கு எதிர்காலத்தை கணிக்கும் திறன் அதிகமாக உண்டு. ஒருவரைப் பார்த்த மாத்திரத்தில் அவர்களின் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் அனைத்தையும் கணக்கிட்டுவிடுவார்கள்.

செபதேயுவின் தாய் எதற்காக தன் மகன்களுக்காக விண்ணப்பிக்க வேண்டும்?

ஒருவேளை செபதேயு இறந்திருக்கலாம். தன் மகன்கள் வீட்டைக் கவனிப்பதற்குப் பதிலாக இப்படி ஒரு போதகரை நம்பி ஊர் சுற்றுகிறார்களே! என்ற கவலை வந்திருக்கலாம். "நீங்க ஏன்டா இப்படி ஊர் சுத்துறீங்க?" என்று அவர்களைக் கேட்கும்போது, "அவர் ஒன்னும் சாதாரண நபர் அல்ல. அவர்தான் மெசியா!" என்று அவர்கள் சொல்லியிருக்கலாம். எப்படியோ தன் மகன்களது எதிர்காலம் திட்டமிட்டபடி நன்றாக இருக்க வேண்டும் என்பது இந்த ஏழைத்தாயின் எளிய ஆசையாக இருக்கிறது. அரியணையின் வலப்புறம் மற்றும் இடப்புறம் தானே கேட்டாள். அரியணையையா கேட்டாள்?

செபதேயுவின் மனைவி ரொம்ப பிராக்டிக்கலா இருக்கின்றாள்.

அவளுக்கு மறுவாழ்வு, மோட்சம், நரகம் இவற்றில் எல்லாம் நம்பிக்கை இருப்பதுபோல தெரிவதில்லை. இயேசு இப்பொழுதே அரசன் ஆவார் என்றும், அரியணைக்கு அருகில் இடம் கிடைக்கும் என்ற எதார்த்தவாதியாக இருக்கின்றாள்.

இவள் துணிச்சல்காரியும் கூட.

ஆகையால்தான், "நான் குடிக்கும் கிண்ணத்தில் உங்களால் குடிக்க முடியுமா?" என்று இயேசு கேட்டபோது, "அது என்ன அப்படி ஒரு பெரிய கிண்ணம்? நாங்களும் குடிப்போம்" என்கிறாள்.

ஒருபக்கம், இயேசுவிடம் கேட்டுப் பெற்றுவிட வேண்டும் என்ற நம்பிக்கை.

இன்னொரு பக்கம், நம்பிக்கையோடு கைகோர்க்கும் துணிச்சல்.

மற்ற சீடர்களின் பொறாமை, கோபம், இயேசுவின் அறிவுரை பற்றி இவளுக்குக் கவலையில்லை. தன் மனதில் பட்டதைக் கேட்டுவிட வேண்டும். தன் மகன்கள் நன்றாக இருக்க வேண்டும். இது சுயநலம் அல்ல. மாறாக, தன் இருப்பை தன் ஆண்டவன்முன் பதிவு செய்கின்ற எளிய முயற்சி.

"அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள்?" என்று நான் எத்தனை முறை என் தயக்கத்தால் பின்வாங்கியிருக்கிறேன்?

"அடுத்தவர்கள் கோபம் அல்லது பொறாமைப்படுவார்கள்!" என்று நினைத்து நான் எத்துனை முறை என் விருப்பங்களை என் கடவுள்முன் சொல்லாமல் இருந்திருக்கிறேன்?

நம்பிக்கையும், துணிச்சலும் கலந்த நல்கலவை செபதேயுவின் மனைவி.

Fr. Yesu Karunanidhi
Madurai

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!