Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      27  பெப்ரவரி 2018  
                                                     தவக்காலம் 2ம் ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள், நீதியை நாடித் தேடுங்கள்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 1: 10, 16-20


எருசலேமே, உன்னை ஆளுகிறவர்களும் உன் மக்களும், சோதோம் கொமோராவைப் போன்றவர்களாய் இருக்கின்றனர்; நம் ஆண்டவரின் அறிவுரையைக் கேளுங்கள்; அவர்தம் கட்டளைக்குச் செவிசாயுங்கள்.

உங்களைக் கழுவித் தூய்மைப்படுத்துங்கள்; உங்கள் தீச்செயலை என் திருமுன்னிருந்து அகற்றுங்கள்; தீமை செய்தலை விட்டொழியுங்கள்; நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்; நீதியை நாடித் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள்; திக்கற்றோருக்கு நீதி வழங்குங்கள்; கைம் பெண்ணுக்காக வழக்காடுங்கள்.

"வாருங்கள், இப்பொழுது நாம் வழக்காடுவோம்'' என்கிறார் ஆண்டவர்; " உங்கள் பாவங்கள் கடுஞ்சிவப்பாய் இருக்கின்றன; எனினும் உறைந்த பனிபோல அவை வெண்மையாகும்; இரத்த நிறமாய் அவை சிவந்திருக்கின்றன; எனினும் பஞ்சைப்போல் அவை வெண்மையாகும். மனமுவந்து நீங்கள் எனக்கு இணங்கி நடந்தால், நாட்டின் நற்கனிகளை உண்பீர்கள்.

மாறாக, இணங்க மறுத்து எனக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தால், திண்ணமாய் வாளுக்கு இரையாவீர்கள்; ஏனெனில் ஆண்டவர்தாமே இதைக் கூறினார்."


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்  திபா 50: 8-9. 16bஉ-17. 21, 23
=================================================================================
 
பல்லவி: தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுளின் மீட்பைக் கண்டடைவர்.

8 நீங்கள் கொண்டுவரும் பலிகளை முன்னிட்டு நான் உங்களைக் கண்டிக்கவில்லை; உங்கள் எரிபலிகள் எப்போதும் என் முன்னிலையில் உள்ளன. 9 உங்கள் வீட்டின் காளைகளையோ, உங்கள் தொழுவத்தின் ஆட்டுக்கிடாய்களையோ நான் ஏற்றுக்கொள்வதில்லை. பல்லவி

16bஉ என் விதிமுறைகளை ஓதுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி? என் உடன்படிக்கை பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை? 17 நீங்களோ ஒழுங்குமுறையை வெறுக்கின்றீர்கள்; என் கட்டளைகளைத் தூக்கியெறிந்து விடுகின்றீர்கள். பல்லவி

21 இவ்வாறெல்லாம் நீங்கள் செய்தும், நான் மௌனமாய் இருந்தேன்; நானும் உங்களைப் போன்றவர் என எண்ணிக்கொண்டீர்கள்; ஆனால், இப்பொழுது உங்களைக் கண்டிக்கின்றேன்; உங்கள் குற்றங்களை உங்கள் கண்முன் ஒவ்வொன்றாய் எடுத்துரைக் கின்றேன். 23 நன்றிப்பலி செலுத்துவோர் என்னை மேன்மைப்படுத்துவர். தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுளாம் நான் அருளும் மீட்பைக் கண்டடைவர். பல்லவி



=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
எனக்கு எதிராக நீங்கள் இழைத்த குற்றங்கள் அனைத்தையும் விட்டுவிடுங்கள். புதிய இதயத்தையும், புதிய மனத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்டமாட்டார்கள்.

தூயமத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 1-12

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தையும் தம் சீடரையும் பார்த்துக் கூறியது: "மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர். ஆகவே அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள்.

ஆனால் அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்டமாட்டார்கள். சுமத்தற்கரிய பளுவான சுமைகளைக் கட்டி மக்களின் தோளில் அவர்கள் வைக்கிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் விரலால் தொட்டு அசைக்கக்கூட முன்வரமாட்டார்கள். தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்க்க வேண்டும் என்றே அவர்கள் செய்கிறார்கள்; தங்கள் மறைநூல் வாசகப்பட்டைகளை அகலமாக்குகிறார்கள்; அங்கியின் குஞ்சங்களைப் பெரிதாக்குகிறார்கள்.

விருந்துகளில் முதன்மையான இடங்களையும் தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விரும்புகின்றார்கள்; சந்தைவெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் ரபி என அழைப்பதையும் விரும்புகிறார்கள்.

ஆனால் நீங்கள் "ரபி" என அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் உங்களுக்குப் போதகர் ஒருவரே. நீங்கள் யாவரும் சகோதரர் சகோதரிகள். இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார். நீங்கள் ஆசிரியர் எனவும் அழைக்கப்படவேண்டாம். ஏனெனில் கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர். உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும். தம்மைத் தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத் தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
சுமையை ஏற்றுபவர்களாக அல்லாமல், சுமைதாங்கிகளாக வாழ்வோம்

சென்ற நூற்றாண்டில் வங்கத்தில் வாழ்ந்தவர் வித்யாசாகர் என்பவர். மிகப்பெரிய பணக்காரராக இருந்தாலும், அதையெல்லாம் வெளியே காட்டிகொள்ளாமல், மிகவும் எளிமையாக வாழ்ந்தவர். இரக்ககுணம் கொண்டவர்.

ஒருநாள் அதிகாலை நேரம். வித்யாசாகர் சாலைவழியாக நடந்துசென்று கொண்டிருக்கும்போது ஓர் ஏழைத் தொழிலாளி சுமக்கமுடியாமல் ஒரு மூட்டையை சுமந்துகொண்டு வந்தார். இதைப்பார்த்த வித்யாசாகர் ஓடோடிச் சென்று, அந்த ஏழைத் தொழிலாளியிடம் "மூட்டையை என்னிடம் கொடுங்கள், உங்களுக்காக நான் சுமந்து வருகிறேன்" என்று சொல்லி, அதை வாங்கிக்கொண்டு தொழிலாளியின் வீடு வரைக்கும் சுமந்து கொண்டுவந்தார்.

பொழுது இன்னும் புலராமல் இருந்ததால் தனக்கு உதவிசெய்கிறவர் இன்னாரென்று தொழிலாளியால் அறிந்துகொள்ள முடியவில்லை. தொழிலாளியின் வீடு வந்ததும், வித்யாசாகர் தான் சுமந்து வந்த மூட்டையை இறக்கிவைத்துவிட்டு, கொஞ்சம் பணமும் அவரிடம் கொடுத்து "நலமோடு இரும்" என்று ஆசிர்வதித்தார்.

இப்போது பொழுது நன்றாகப் புலர்ந்திருந்ததால் அந்த ஏழைத் தொழிலாளி தனக்கு உதவிசெய்வது வித்யாசாகர் தான் என்பதை அறிந்துகொண்டார். உடனே தொழிலாளி வித்யாசாகரின் காலில் விழுந்து, அவரிடம் "நீங்கள்போய் முட்டையைச் சுமந்துவந்திருக்கிறீர்களே!, இப்படித் தெரிந்தால் உங்களை நான் சுமக்க விட்டிருக்கமாட்டேன்" என்றார். அதற்கு வித்யாசாகர், "உங்களைப் போன்ற ஏழை எளியவருக்கு உதவி செய்வதை நான் மிகப்பெரிய பாக்கியமாகக் கருதுகிறேன். மேலும் நான் செய்த உதவியை வேறு யாரிடமும் சொல்லக்கூடாது" என்று வாக்குறுதி வாங்கிவிட்டு அவ்விடத்திலிருந்து நகர்ந்தார்.

எந்த ஒரு விளம்பரம் இல்லாமல் ஒருவரின் சுமைகளைத் தாங்குவதும், அவருக்கு உதவுவதும்தான் உண்மையான உதவி. அப்படிப்பட்ட மனிதரே உயர்ந்த மனிதர் என்பதை இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துக் கூறுகிறது.

ஆனால் இன்றைய நற்செய்தி வாசகத்தில் இதற்கெல்லாம் முற்றிலும் மாறாக வாழ்ந்த ஒருசில மக்களையும், அவர்களை ஆண்டவர் இயேசு கடுமையாகச் சாடுவதையும் படிக்கக் கேட்கின்றோம். இயேசு சாடும் அவர்கள் வேறு யாருமல்ல மறைநூல் அறிகர்களும், பரிசேயருமே.

இவர்கள் சுமக்கமுடியாத சுமைகளை (சட்டங்கள், ஒழுக்க நெறிகள் இன்ன பிற காரியங்கள்) மக்கள்மீது சுமத்தினார்கள். மக்களுக்கு முன்பாக தாங்கள் ஒழுக்கசீலர்கள், பெரியவர்கள் என்று வேடம் போட்டார்கள். இப்படி வெளிவேடத்தனமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்ததனால்தான் ஆண்டவர் இயேசு அவர்களைக் கடிந்துகொள்கிறார்.

பலநேரங்களில் நாமும்கூட மக்கள் நம்மைப் பாராட்டவேண்டும், புகழவேண்டும் என்பற்காக பல்வேறு காரியங்களைச் செய்கிறோம். இன்னும் சட்டங்களை நுணுக்கமாகக் கடைபிடிக்கிறேன் பேர்வழி என்ற ரீதியில் சாதாரண மக்களை ஒடுக்குகின்றோம். இந்நிலை மாறவேண்டும்.

"கன்பூசியஸ் என்ற ஞானி ஒருமுறை இவ்வாறு குறிப்பிட்டார், "அதிகம் பேசாதவரை உலகம் அதிகம் விரும்புகிறது; அளந்து பேசுபவரை அதிகம் மதிக்கிறது; அதிகம் செயல்படுபவரையோ கையெடுத்துக் கும்பிடுகின்றது" என்று. ஆகவே நாம் ஒவ்வொருவரும் வெற்றுப் பேச்சாளர்களாக அல்லாமல், செயல்வீரர்களாக வாழுவோம். பிறரின் சுமக்கும் சுமைதாங்கிகளாக வாழ்வோம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.

"ஒருவர் மற்றவரின் சுமையைத் தாங்கிக்கொள்ளுங்கள், இவ்வாறு கிறிஸ்துவின் சட்டத்தை நிறைவேற்றுங்கள்" (கலாத்தியர் 6;2)


Fr. Maria Antonyraj, Palayamkottai. 2017.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
தம்மைத்தாமே தாழ்த்துகிறவர் யாவரும் உயர்த்தப்படுவர்

ஒரு கற்பனைக் கதை.

பெத்லகேமில் உள்ள மாட்டுத் தொழுவத்தில் குழந்தை இயேசு பிறப்பதற்கு முன்பாக வானதூதர் ஒருவர், எந்த விலங்கை குழந்தை இயேசுவுக்கு அருகிலே அமர்த்துவது என்று தீவிரமாக யோசித்தார். உடனே அவர் எல்லா விலங்குகளையும், பறவையினங்களையும் தம்மிடம் வரவழைத்து அவற்றிடம், "உங்களை மாட்டுக் தொழுவத்தில் பிறக்க இருக்கும் குழந்தை இயேசுவுக்கு முன்பாக அமர்த்தினால் நீங்கள் என்ன செய்வீர்கள், குழந்தை இயேசுவை எப்படி பாதுக்காபீர்கள்?" என்று கேட்டார். அதற்கு காட்டு இராஜாவான சிங்கம், "நான்தான் விலங்குகள் அனைத்திற்கும் அரசன். எனவே, என்னை நீங்கள் குழந்தை இயேசுவுக்கு முன்பாக அமர்த்தினால், அதற்கு எந்தத் தீங்கும் நேரிடாமல் காத்திடுவேன்" என்றது. உடனே வானதூதர் அதனிடம், "ஆணவம் கொண்டோர் ஆண்டவருக்கு முன்பாக நிற்கக்கூடாது" என்று சொல்லி அதனை அனுப்பி விட்டார்.

அதற்கு அடுத்து நரி வானதூதரிடம் வந்து, "வானதூதர் அவர்களே!, நான் மட்டும் குழந்தை இயேசுவுக்கு முன்பாக இருந்தால், மிகவும் தந்திரமாகச் செயல்பட்டு எங்கெல்லாமோ கிடைக்கும் பொருட்களை எடுத்து வந்து, அதனை குழந்தை இயேசுவுக்குத் தருவேன்" என்றது. வானதூதரோ அதனிடம், "தந்திரமானவர்கள் குழந்தை இயேசுவுக்கு முன்பாக நிற்க அருகதை அற்றவர்கள்" என்று சொல்லி அதனை அனுப்பிவிட்டார். அதன்பின்னர் மயில் வந்து, "நான் குழந்தை இயேசுவுக்கு முன்பாக நின்றால் என்னுடைய அழகான தோகையை விரித்து அவரை மகிழ்விப்பேன்" என்றது. அதற்கு வானதூதர் அதனிடம், "அழகு எப்போதும் நிலையானது அல்ல, நீ உன் அழகைக் குறித்து பெருமைகொள்கிறாய், ஆதலால் நீயும் ஆண்டவர் இயேசுவின் முன்பாக நிற்கத் தகுதி இல்லாது போனாய்" என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

இப்படி நிறைய விலங்குகள், பறவையினங்கள் வானதூதரிடம் வந்து, தங்களுடைய நிலையை எடுத்துச் சொல்லி, தாங்கள் குழந்தை இயேசுவுக்கு முன்பாக் நிற்கிறோம் என்று சொன்னார்கள். அவர்கள் அனைவரையும் வானதூதர் தகுதியற்றவர்கள் என்று சொல்லி, அனுப்பிவிட்டார்.

அது வரை வந்த விலங்குகளில் கன்றும், கழுதையும் வரவில்லை. எனவே வானதூதர் தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த அவற்றிடம் சென்று, நீங்கள் ஏன் வரவில்லை?, உங்களுக்கு குழந்தை இயேசுவுக்கு முன்பாக நிற்க ஆசையில்லையா? என்று கேட்டார். அதற்கு கழுதை வானதூதரிடம், "நான் என்றும் அவ்வளவு பெரிய ஆளில்லை. எப்போதும் மனிதர் என்மீது சுமத்தும் சுமைகளைச் சுமக்கிற வேலையை மட்டுமே செய்கிறேன். நான் எப்படி குழந்தை இயேசுவுக்கு முன்பாக நிற்பது" என்று மிக வருத்தத்தோடு சொன்னது, கழுதையைத் தொடர்ந்து கன்று, "நானும் பெரிய ஆளில்லை, என்னுடைய வாலை வைத்துக்கொண்டு குழந்தை இயேசுவுக்கு அருகே வரக்கூடிய பூச்சி இனங்களை விரட்டுவதைத் தவிர வேறு என்ன வேலையைச் செய்துவிட முடியும்" என்றது.

கழுதை மற்றும் கன்றினது பேச்சைக் கேட்ட வானதூதர் மிகவும் மகிழ்ந்து போனார். இவர்கள் இவ்வளவு தாழ்ச்சியாக இருக்கிறார்களோ என்று சொல்லி, அவர்கள் இருவரையும் குழந்தை இயேசுவுக்கு முன்பாக பாதுகாவலுக்கு அமர்த்தினார்.

ஆணவத்தோடு இருப்பவர் அப்புறப்படுத்தபடுவார், தாழ்ச்சியோடு இருப்பவரோ என்றென்றைக்கும் உயர்த்தப்படுவார் என்று உண்மையை இந்த கற்பனைக் கதையானது மிக அருமையாக எடுத்துக்கூறுகின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு "தம்மைத் தாமே உயர்த்துகிறவர் யாவரும் தாழ்த்தப்படுவார், தம்மைத்தாமே தாழ்த்துகிறவர் யாவரும் உயர்த்தப்படுவார்" என்கிறார். இயேசு இப்படிச் சொல்வதற்கு முன்பாக என்ன நடந்தது என்று அறிந்துகொண்டோமானால் அவருடைய வார்த்தைகளில் இருக்கும் உண்மையை இன்னும் சிறப்பாகப் புரிந்துகொள்ளலாம். பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி, சாதாரண மக்களை வதைத்தார்கள். அதிகதிமான சுமைகளை மக்கள்மீது சுமத்தினார்கள். அதோடு மட்டுமல்லாமல் அவர்கள் போதிப்பது ஒன்றும், வாழ்வது ஒன்றுமாய் இருந்தது. அதனால்தான் இயேசு அவர்களுடைய வெளிவேடத்தை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறார். அவர்களைக் கடுமையான வார்த்தைகளால் சாடுகிறார். அதன்பின்னர் மேலே சொல்ல வார்த்தைகளைச் சொல்லுகிறார்கள்.

ஆகையால், நாம் பொறுப்பில் இருப்பவர்களாகவோ, வேறு எந்த நிலையில் இருப்பவர்களாக இருந்தாலும் தாழ்ச்சியை ஆடையாக அணிந்துகொண்டு வாழவேண்டும். என்றைக்கு நாம் ஆணவத்தோடும் அகங்காரத்தோடும் செயல்படுகின்றோமோ அன்றைக்கு நாம் அழிந்து போவது உறுதி.

எனவே, நம்முடைய உள்ளத்தில் தாழ்ச்சியை, பணிவை தாங்கி வாழ்வோம், வெளிவேடத்தை, அகங்காரத்தை நம்மிடமிருந்து அகற்றி வாழ்வோம், அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai. 2017.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
"உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்கட்டும்"

இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற ஆளுமை ஆல்பர்ட் சுவைட்சர் (Albert Schweitzer). இறையியல், மெய்யியல், இசை போன்ற மூன்று துறைகளில் முனைவர் பட்டம் பெற்று, ஜெர்மனியில் இருக்கின்ற ஸ்ட்ராஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வந்த ஒரு கல்லூரியில் பேராசியராகப் பணிபுரிந்து வந்தார்.

ஒருநாள் அவர் தன்னுடைய அறையிலே இருக்கும்போது சிந்தனை வயப்பட்டார். அப்போது அவருக்கு ஒரு யோசனை வந்தது. "இத்தனை ஆண்டுகளும் நான் எனக்காகத்தானே வாழ்ந்திருக்கின்றேன். ஏன் இறைவனுக்காகவும் அவருடைய மக்களாகிய துன்புறும் ஏழைகளுக்காகவும் வாழக்கூடாது" என்பதுதான் யோசனை. உடனே அவர் வேறு எதையும் யோசிக்காமல், தான் செய்துவந்த பேராசியர் பணியை விட்டுவிட்டு, ஆப்ரிக்கா கண்டத்தில் போதிய மருத்துவ வசதிகள் இருக்கின்ற கறுப்பின மக்களுக்கு மத்தியில் சேவை செய்யலாம் என்று முடிவு செய்தார். மருத்துவ சேவை செய்ய, மருத்துவம் தெரிந்திருக்கவேண்டும் அல்லவா, எனவே அவர் மருத்துவம் கற்று, அதில் நான்காவது முனைவர் பட்டமும் பெற்றார். அப்போது அவருக்கு வயது 32.

ஆல்பர்ட் சுவைட்சர் தன்னுடைய 32 ஆவது வயதில் ஆப்ரிக்கக் கண்டத்திற்குப் பயணமானார். அங்கே இருந்த ஏழை எளிய மக்களுக்கு நல்ல விதமாய் மருத்துவ சேவை செய்துவந்தார். தனக்கு ஓய்வு நேரம் கிடைக்கின்றபோதேல்லாம் காட்டிற்குச் சென்று, மரங்களை வெட்டி, அதனைக் கொண்டு ஒரு மருத்துவமனை கட்டி வந்தார். ஒருநாள் அவர் இப்படி காட்டிற்குச் சென்று, மரத்தை வெட்டி, பாரமான ஒரு கட்டையை தன்னுடைய தலையில் வைத்து சுமந்துகொண்டு வந்தபோது, அவரால் அதனை சுமக்க முடியவில்லை. அப்போது அந்த வழியாக ஒரு இளைஞர் வந்தார். அவர் கறுப்பினத்தைச் சேர்ந்த இளைஞர். ஆல்பர்ட் சுவைட்சர் அவரிடம், "தம்பி! இந்தக் கட்டையை என்னால் சுமக்க முடியவில்லை, இன்னும் கொஞ்ச தூரத்தில் நான் தங்கியிருக்கக்கூடிய இடம் வந்துவிடும். அதுவரை நான் இந்த கட்டையைச் சுமக்க எனக்கு ஒத்தாசை செய்ய முடியுமா? என்று கேட்டார். அதற்கு அந்த இளைஞர், "நான் படித்தவன், என்னால் இதுபோன்ற வேலைகளை எல்லாம் செய்ய முடியாது" என்றார். இதைக் கேட்ட அவருக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. உடனே அவர் அந்த இளைஞரிடம், "உங்களிடம் அப்படிக் கேட்டதற்கு என்னை மன்னிக்க வேண்டும் தம்பி, நான் "படிக்காதவன்" ஏதோ தெரியாமல் கேட்டுவிட்டேன்" என்று தாழ்ச்சியோடு பதில் சொல்லிவிட்டு பாரமான அந்தக் கட்டையை கஷ்டப்பட்டு தூக்கிக்கொண்டு போனார்.

ஆல்பர்ட் சுவைட்சர், நான்கு துறைகளில் முனைவர் பட்டம் பெற்று, மக்கள் மத்தியில் மிகப் பெரிய அறிவாளி என்று அறியப்பட்டாலும் "தான் படிக்காதவன்" என்று மிகவும் தாழ்சியோடும் பணிவோடும் பணிசெய்தது ஒரு தலைவன் எப்படி இருக்கவேண்டும் என்பதை நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, அன்றைய காலத்தில் மக்கள் தலைவர்கள் என்று அறியப்பட்ட பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்களுக்கு எதிரான தன்னுடைய கண்டனக் குரலைப் பதிவுசெய்கிறார். அப்படி அவர் பதிவு செய்கின்றபோது சொல்கின்ற வார்த்தைகள்தான் "உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும்" என்பதாகும். இந்த உலகத்தில் இருக்கின்ற எல்லாருமே மற்றவரைவிடப் பெரியவராக இருக்கவேண்டும் என்றுதான் விரும்புகின்றோம். ஆனால், அந்தப் "பெரியவர்" எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இயேசு சொல்லக்கூடிய வரையறைதான் நமது சிந்தனைக்குரியதாக இருக்கின்றது.

பெரியவர் என்றால், மற்றவர் அவருக்கு சேவை செய்யவேண்டும், தொண்டு செய்யவேண்டும் என்பதுதான் உலக நியதியாக இருக்கின்றது. ஆனால், ஆண்டவர் இயேசுவோ பெரியவர் என்பவர், மற்றவருக்கு சேவை செய்யவேண்டும், தொண்டாற்றவேண்டும் என்று சொல்கின்றார். இதனை அவர் தன்னுடைய வாழ்வில் வாழ்ந்து காட்டவும் செய்தார். பாதங்களைக் கழுவுவது அடிமைகள் செய்யக்கூடிய வேலை. அத்தகைய வேலையை இயேசு தன்னுடைய சீடர்களுக்குச் செய்து தன்னுடைய வாழ்வையே ஆகச் சிறந்த எடுத்துக்காட்டாக மக்களுக்கு காட்டுகின்றார் (யோவா 13).

இயேசு, பெரியவர் என்று யாராரெல்லாம் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றார்களோ அவர்களெல்லாம் தொண்டராக இருக்கவேண்டும் என்று சொல்வதன் நோக்கம், அவர்கள் தங்களிடம் பதவி இருக்கின்றது என்ற ஆணவத்தில் செயல்படாமல் தாழ்ச்சியோடு பணிசெய்யவேண்டும் என்பதாகும். அப்படித் தாழ்ச்சியோடு பணி செய்பவர்கள் இறைவனால் மேலும் மேலும் உயர்த்தப்படுவார்கள் என்பது உறுதி.

ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம், நமக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரத்தை மற்றவரை அடக்கி ஆளப் பயன்படுத்தாமல், தாழ்ச்சியோடு பயன்படுத்தக் கற்றுக்கொள்வோம். தாழ்சியுள்ளவர்களாக வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Maria Antonyraj, Palayamkottai.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
தம்மைத் தாழ்த்துவோர் உயர்த்தப்படுவர்

ஒருமுறை ஒரு குரு தன்னுடைய சீடர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார்.

அப்போது அவர் ஒரு சீடனைப் பார்த்து, "இங்கே இருக்கும் சீடர்களில் யார் சொர்க்கத்திற்குப் போவார்" என்று ஒவ்வொரு சீடராகச் சுட்டிக் காட்டிக் கேட்டார். ஆனால் அவர் யாரையும் குறிப்பிடவில்லை. குருவுக்கு ஆச்சர்யமாக இருந்தது. பின்னர் குரு தன்னைச் சுட்டிக்காட்டி, "சரி நானாவது சொர்க்கத்திற்கு போவேனா" என்று கேட்டார். அப்போதும் அவர் இல்லை என்றே பதிலளித்தார்.

"நீயாவது சொர்க்கத்திற்கு போவாயா? என்று குரு கேட்டதற்கு, சீடன், "நான்" போனால் போவேன்" என்றான். இதைக் கேட்ட மற்ற சீடர்களுக்கு சரியான கோபம். "இவன் எவ்வளவு பெரிய ஆணவக்காரனாக இருப்பான், நாமெல்லாம் போகமாட்டோம், இவன் மட்டும் போவேன் என்று சொல்கிறானே என்று அவர்கள் முணுமுணுத்தனர். அப்போது குரு மீண்டுமாக அவனிடம், "உன்னுடைய பதிலுக்கு கொஞ்சம் விளக்கம் தா" என்றார். அதற்கு அந்த சீடன், "நான்" போனால் போவேன்" என்றேன். "நான்" என்ற அகந்தை, ஆணவம், போனால் சொர்க்கம் போவேன் என்று சொன்னேன்" என்றான். குருவும் மற்ற சீடர்களும் இதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

நம்முடைய வாழ்க்கையிலே நான் தான் பெரியவன், எல்லாம் தெரிந்தவன் என்று ஆணவத்தோடு வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்த நான் என்ற ஆணவத்தை களையும்போது நாம் விண்ணகத்தை அடையலாம்.

நற்செய்தி வாசகத்தில் இயேசு, "தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப் படுவர், தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் படுவர்" என்கிறார். யாராரெல்லாம் தம்மைப் பெரியவனாகக் காட்டிகொள்கிரார்களோ அவர்கள் அழிவது உறுதி. பழைய ஏற்பாட்டில் உலகின் மிகப் பெரிய கோபுரம் கட்ட நினைத்த பாபேல் நகர மக்கள் சிதைந்து போனார்கள் என்பதை இங்கே நாம் நினைவு படுத்திக் கொள்ளவும். அதே வேளையில் யாராரெல்லாம் தம்மை எல்லாரையும்விட கடையவராக, எல்லாருக்கும் பணியாளராக நினைத்து வாழ்கிறார்களோ அவர்கள் கடவுளால் உயர்த்தப் படுவார்கள்.

ஒருமுறை சீடர்கள் தங்களுக்குள் யார் பெரியவர் என்று வாக்குவாதம் செய்தபோது இயேசு ஒரு சிறு பிள்ளையை அழைத்து, "இச்சிறு பிள்ளையைப் போல தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் பெரியவராகக் கருதப் படுவார்" என்கிறார் (மத் 18: 4).

நாம் சிறு குழந்தைகள் போல் ஆணவம் இல்லாது, எளிய மனதினராக வாழ்வோம். இறை அரசை உரித்தாக்குவோம்.

"கர்வம் கொள்வோர் கடவுளை இழக்கிறார்" - பொன்மொழி

Fr. Maria Antonyraj, Palayamkottai. 2017.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

நற்செய்தி (மத் 23:1-12)

மக்கள் பார்க்க வேண்டும்

சின்னக் குழந்தை தட்டுத்தடுமாறி நடந்து வருவதைப் பார்த்திருப்போம்.

அது தட்டுத்தடுமாறி வரும்போது தானாக கீழே விழுந்துவிட்டால் தடவித் தடவி எழுந்து சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு தொடர்ந்து நடக்கத் தொடங்கிவிடும். ஆனால், ஒருவேளை, தான் விழுந்ததை அடுத்தவர் பார்த்துவிட்டார் எனத் தெரிந்தால் உடனே அழத் தொடங்கிவிடும். மற்றவர்முன் தன் தோல்வியை ஏற்றுக்கொள்ளமுடியாமல் எழும் கதறலே அது.

ஆக, அடுத்தவர் நம்மைப் பார்ப்பது நம்மை அறியாமலேயே நம்முள் நேர்முக மற்றும் எதிர்மறை உணர்வுகளை எழுப்புகிறது.

நமக்குப் பிடித்தவருக்கு பிடித்த கலர் அணிவது.

ஒரே மாதிரி யூனிஃபார்ம் சேலை அணிந்து சென்று கல்யாண வீட்டில் எல்லாரையும் உசுப்பேற்றிவிடுவது.

இப்படியாக அடுத்தவர் பார்க்க வேண்டும் என நாம் நிறையச் செய்கிறோம்.

"தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்க்கவேண்டும் என்றே அவர்கள் செய்கிறார்கள்" - இப்படியாக தன் சமகாலத்து மறைநூல் அறிஞர்களைச் சாடுகின்றார் இயேசு.

நாம் கண்ணாடி முன் நிற்கும்போது கூட அந்த பிம்பத்தை நம் கண்கள் வழியாக இரசிப்பது ஒரு மூன்றாம் நபர்தான். அடுத்தவர் பார்க்க நாம் நிறைய காரியங்களைச் செய்கிறோம். மேலும், அடுத்தவர் பார்க்கச் செய்யும் வேலைகள் நிறைய வளர்ச்சிதருவனவாகவும் இருக்கின்றன.

ஹாஸ்டலில் வார்டன் பார்க்கிறார் என்பதற்காக படிக்கும் மாணவர்கள்.

அதிபர் பார்க்கிறார் என்பதற்காக ஆலயத்திற்கு வரும் குருமாணவர்கள்.

தன் வீட்டுக்காரர் பார்க்கிறார் என்பதற்தாக தலையை நிமிர்ந்து பார்க்கும் மனைவி.

இப்படி நிறைய இடங்களில் அடுத்தவரின் பார்த்தல் நம் வாழ்வில் ஒரு மேன்மை உணர்வை உருவாக்கவே செய்கிறது. இயேசு இந்த உணர்வுக்குக் கடிவாளம் இட அழைக்கின்றார். ஏனெனில், "மக்கள் பார்க்க வேண்டும்" என்று நாம் செய்யும் செயல்கள் அனைத்திற்குமான பலனை நாம் அடுத்தவருக்குக் கொடுத்துவிடுகின்றோம். அமைதி காக்கின்றோம். மாறாக, தன்னை அறிதலும், தன்னம்பிக்கை உடையவரும் மக்களின் பார்த்தலை பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை.

இந்த நிலைக்கு அழைக்கிறது நாளைய நற்செய்தி வாசகம்.

Fr. Yesu Karunanidhi
Madurai

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!