Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      26  பெப்ரவரி 2018  
                                                     தவக்காலம் 2ம் ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நாங்கள் பாவம் செய்தோம்; வழி தவறி நடந்தோம்.

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 9: 4b-11a

என் தலைவரே! நீர் மாட்சிமிக்க அஞ்சுதற்குரிய இறைவன். உம்மீது அன்புகொண்டு உம் கட்டளைகளின்படி நடப்பவர்களுடன் நீர் செய்துகொண்ட உடன்படிக்கையைக் காத்து அவர்களுக்குப் பேரன்பு காட்டுகின்றீர்! நாங்கள் பாவம் செய்தோம்; வழி தவறி நடந்தோம்; பொல்லாதவர்களாய் வாழ்ந்து உம்மை எதிர்த்து நின்றோம். உம் கட்டளைகளையும் நீதி நெறிகளையும் கைவிட்டோம்.

எங்களுடைய அரசர்கள், தலைவர்கள், தந்தையர்கள், நாட்டிலுள்ள மக்கள் அனைவருக்கும் இறைவாக்கினர்களாகிய உம் ஊழியர்கள் உமது பெயரால் பேசியதற்கு நாங்கள் செவிகொடுக்கவில்லை. என் தலைவரே! நீதி உமக்கு உரியது; எமக்கோ இன்று வரை கிடைத்துள்ளது அவமானமே.

ஏனெனில், யூதாவின் ஆண்களும் எருசலேம்வாழ் மக்களும், இஸ்ரயேலைச் சார்ந்த யாவரும் ஆகிய நாங்கள், உமக்கு எதிராகச் செய்த துரோகத்தின் பொருட்டு, அருகிலோ தொலையிலோ உள்ள எல்லா நாடுகளுக்கும் உம்மால் இன்றுவரை விரட்டப்பட்டுள்ளோம்.

ஆம், ஆண்டவரே! அவமானமே எங்களுக்கும் எங்கள் அரசர்களுக்கும் தலைவர்களுக்கும் தந்தையர்களுக்கும் கிடைத்துள்ளது. ஏனெனில், நாங்கள் உமக்கு எதிராகப் பாவம் செய்தோம். எங்கள் தலைவரும் கடவுளுமாகிய உம்மிடத்தில் இரக்கமும் மன்னிப்பும் உண்டு. நாங்களோ உம்மை எதிர்த்து நின்றோம்.

எங்கள் கடவுளாகிய ஆண்டவர் தம் ஊழியர்களான இறைவாக்கினர் மூலம் தம் திருச்சட்டங்களை அளித்து அவற்றின் வழியில் நடக்குமாறு பணித்தார். நாங்களோ அவரது குரலொலியை ஏற்கவில்லை.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்  திபா 79: 8. 9. 11. 13
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, எம் பாவங்களுக்கு ஏற்றபடி எம்மை நடத்தாதேயும்.

8 எம் மூதாதையரின் குற்றங்களை எம்மீது சுமத்தாதேயும்! உம் இரக்கம் எமக்கு விரைவில் கிடைப்பதாக! நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்டிருக்கின்றோம். பல்லவி

9 எங்கள் மீட்பராகிய கடவுளே! உமது பெயரின் மாட்சியை முன்னிட்டு எங்களுக்கு உதவி செய்தருளும்; உமது பெயரை முன்னிட்டு எங்களை விடுவித்தருளும்; எங்கள் பாவங்களை மன்னித்தருளும். பல்லவி

11 சிறைப்பட்டோரின் பெருமூச்சு உம் திருமுன் வருவதாக! கொலைத் தீர்ப்புப் பெற்றோரை உம் புயவலிமை காப்பதாக. பல்லவி

13 அப்பொழுது உம் மக்களும், உமது மேய்ச்சலின் மந்தையுமான நாங்கள் என்றென்றும் உம்மைப் போற்றிடுவோம்! தலைமுறை தோறும் உமது புகழை எடுத்துரைப்போம். பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================


அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, நீர் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன; நிலைவாழ்வும் அளிக்கின்றன.அல்லேலூயா.


=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள்.

தூயலூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 36-38

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்.

பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாகமாட்டீர்கள். மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள்; அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள்.

மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள். கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"உங்கள் விண்ணகத் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கமுள்ளவராய் இருங்கள்"

நம்முடைய இந்தியத் திருநாட்டில் தர்மவீரர் என்றொரு மகான் இருந்தார். அவர் இறைவன் மீது மிகுந்த பக்தியும் சக மனிதர்களிடம் அளவுகடந்த அன்பும் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தார். ஒருநாள் அவர் தூங்கிக்கொண்டிருக்கும்போது சொர்க்கம் மற்றும் நரகம் பற்றிய காட்சி கண்டார். சொர்க்கத்தில் இறைவன் அரியணையில் அமர்ந்திருக்க, அவரைச் சூழ்ந்து வானதூதர்களும் மண்ணுலகில் நல்லதொரு வாழ்க்கை வாழ்ந்த மக்களும் இருந்தார்கள். நரகத்திலோ அணையா நெருப்பில் பாவ வாழ்க்கை வாழ்ந்த மக்கள் வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். நரகத்தில் மக்கள் படுகின்ற வேதனையைக் கண்டு, அவர் மிகவும் கலக்கமுற்றார். இதனால் தூக்கத்திலிருந்து உடனே விழித்தெழுந்தார்.

தூக்கத்திலிருந்து விழித்தெழுந்த அவர் உடனே இறைவனை நோக்கி மன்றாடத் தொடங்கினார், "இறைவா! நரகத்தில் மக்கள் படுகின்ற வேதனையைக் கண்ணுற்றேன். அது மிகவும் வேதனையைத் தருகின்றது. அதனால் இந்த மண்ணுலகத்தில் நான் செய்த புண்ணியங்களை அனைத்தையும் எடுத்துக்கொண்டு, அவற்றை நகரத்தில் வேதனையுறும் மக்களின் ஈடேற்றத்திற்காகப் பயன்படுத்தி, அவர்களை நரகத்திலிருந்து சொர்கத்திற்கு இட்டுச் செல்லும்" என்று வேண்டினார். இத்தகைய ஜெபத்தினை அவர் தனக்கு நேரம் கிடைக்கின்ற போதெல்லாம் சொல்லி வந்தார்.

சில ஆண்டுகள் கழித்து தரம்வீரருக்கு வயதாகி இறந்து போனார். அவர் இறப்பதற்கு முன்பாக, "நான் செய்த புண்ணியங்கள் அனைத்தும் நரகத்தில் வேதனையுறும் ஆன்மாக்களின் ஈடேற்றத்திற்காகப் பயன்படுத்தியாயிற்று. ஆதலால், நான் இறந்த பிறகு நரகத்திற்குத்தான் செல்வேன்" என்று நினைத்தார். ஆனால், அவர் நினைத்ததற்கு மாறாக, அவர் இறந்த பின்பு சொர்க்கத்தில் போய் நின்றார். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. அப்போது அங்கிருந்த வானதூதர் ஒருவரை அழைத்து, "ஐயா! என் பெயர் தர்மவீரர். நான் என் வாழ்நாளில் செய்த புண்ணியங்கள் அனைத்தையும் நகரத்தில் வேதனையுறும் ஆன்மாக்களின் ஈடேற்றத்திற்காகக் கொடுத்துவிட்டேன். அப்படியானால் என் கணக்கில் புண்ணியங்கள் ஏதும் இருக்காதுதானே, ஆனால், நான் நரகத்திற்குச் செல்லாமல், சொர்க்கத்திற்கு வந்திருக்கிறேனே, அது எப்படி?" என்று கேட்டார். அதற்கு வானதூதர் அவரிடம், "மண்ணுலகில் நீங்கள் செய்த புண்ணியங்கள் அனைத்தையும் நரகத்தில் வேதனையுறும் ஆன்மாக்களின் ஈடேற்றத்திற்காக கொடுத்துவிட்டது உண்மைதான். ஆனால், உங்களுடைய புண்ணியத்தால் சொர்கத்திற்கு வந்த ஆன்மாக்கள் சும்மா இருக்கவில்லை, அவர்கள் இங்கே வந்து இறைவனிடம், "எங்களுடைய ஈடேற்றத்திற்காக தன்னுடைய புண்ணியங்கள் அனைத்தையும் தியாகம் செய்தாரே, அந்த மகான் எப்படியும் சொர்க்கத்திற்கு வரவேண்டும் என்று இறைவனிடத்தில் ஓயாது வேண்டினார்கள். அதனால்தான் நீங்கள் சொர்கத்திற்கு வந்திருக்கிறீர்கள்" என்றார்.

தர்மவீரர் தன் வாழ்நாள் முழுக்க அடுத்தவர் மட்டில், ஏன் நரகத்தில் வேதனையுற்ற ஆன்மாக்களின் மீதுகூட இரக்கத்தோடு நடந்துகொண்டார். அதனால் இறைவனும் அவர்மீது இரக்கம்கொண்டு அவரை சொர்க்கத்தில் - விண்ணகத்தில் - சேர்த்துக்கொண்டார்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு மக்களுக்கு பலவற்றைக் குறித்துப் போதிக்கின்றார். அதில் ஒன்றுதான் "உங்கள் விண்ணகத் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாய் இருங்கள்" என்பது. விவிலியம் முழுமைக்கும் நாம் படித்துப் பார்க்கின்றபோது இறைவன் எந்தளவுக்கு இரக்கமுள்ளவராய் இருந்திருக்கின்றார் என்பது நமக்குப் புலப்படும். இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் பாரவோனின் ஆட்சியில் அடிமைகளாக இருந்து கொடிய வேதனைகளை அனுபவித்தபோது, ஆண்டவராகிய கடவுள் அவர்கள்மீது இரக்கம்கொண்டு அவர்களை மீட்டு பாலும் தேனும் பொழியக்கூடிய கானான் தேசத்தை வழங்கினார். மட்டுமல்லாமல், அவர்கள் தன்னை மறந்து வேற்று தெய்வத்தை வழிபட்டபோதும் அதன் காரணமாக நாடுகடத்தப்பட்ட போதும் அவர்கள்மீது இரக்கம்கொண்டு, அவர்களை அவர்களுடைய சொந்த நாட்டிற்குக் கூட்டிக்கொண்டு வந்தார். இவ்வாறு தான் இரக்கமுள்ள இறைவன் என்பதை நிரூபித்துக் காட்டினார். இத்தகைய இரக்கமுள்ள இறைவனைப் போன்று நாம் ஒவ்வொருவரும் இருக்கவேண்டும் என்பதுதான் இயேசு நம்மிடத்தில் சொல்லக்கூடிய செய்தியாக இருக்கின்றது.

நாம் விண்ணகத் தந்தையைப் போன்று இரக்கமுள்ளவர்களாய் இருக்கின்றபோது எத்தகைய ஆசிரைப் பெறுகின்றோம் என்பதை இயேசு நமக்கு சுட்டிக்காட்டத் தவறவில்ல. மத்தேயு நற்செய்தி 5: 7 ல் வாசிக்கின்றோம், "இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்" என்று. ஆம், நாம் இரக்கமுள்ளவர்களாய் இருக்கின்றபோது, இறைவனிடத்தில் இரக்கத்தையே கொடையாகப் பெறுகின்றோம்.

ஆகவே, நாம் இயேசு கூறுவதைப் போன்று விண்ணகத் தந்தையைப் போன்று இரக்கமுள்ளவர்களாய் இருப்போம், அதன்வழியாக இறைவன் தரக்கூடிய ஆசிரை நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai. 2017.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!