Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      24  பெப்ரவரி 2018  
                                                     தவக்காலம் 1ம் ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
உன் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினமாய் நீ இருப்பாய்.

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 26: 16-19

மோசே மக்களை நோக்கிக் கூறியது: இந்த முறைமைகளையும் நியமங்களையும் நீ நிறைவேற்றுமாறு உன் கடவுளாகிய ஆண்டவர் இன்று உனக்குக் கட்டளையிட்டுள்ளார். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் அவற்றை நிறைவேற்றுவதில் கருத்தாயிரு.

ஆண்டவரை உன் கடவுளாய் ஏற்பதாகவும், உனக்குக் கடவுளாக இருப்பார் என்றும், அவருடைய வழிகளில் நடப்பதாகவும், அவருடைய நியமங்களையும் கட்டளைகளையும் முறைமைகளையும் கடைப்பிடிப்பதாக வும், அவர் குரலுக்குச் செவிகொடுப்பதாகவும் இன்று நீ அவருக்கு வாக்களித்துள்ளாய்.

நீ அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிருந்தால், அவர் கூறியபடியே நீ அவருக்குச் சொந்தமான மக்களினமாய் இருப்பாய் என்றும், அவர் உருவாக்கிய எல்லா மக்களினங்களிலும், புகழிலும், பெயரிலும், மாட்சியிலும் உன்னையே உயர்த்துவார் என்றும், அதனால் உன் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினமாய் நீ இருப்பாய் என்றும் ஆண்டவர் இன்று உனக்கு வாக்களித்துள்ளார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்  திபா: 119: 1-2. 4-5. 7-8 (பல்லவி: 1b)
=================================================================================
பல்லவி: ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.

1 மாசற்ற வழியில் நடப்போர் பேறுபெற்றோர்; ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர். 2 அவர் தந்த ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிப்போர் பேறு பெற்றோர்; முழுமனத்தோடு அவரைத் தேடுவோர் பேறுபெற்றோர். பல்லவி

4 ஆண்டவரே! நீர் உம் நியமங்களைத் தந்தீர்; அவற்றை நாங்கள் முழுமையாய்க் கடைப்பிடிக்க வேண்டும் என்றீர். 5 உம்முடைய விதிமுறைகளை நான் கடைப்பிடிக்க, என் நடத்தை உறதியுள்ளதாய் இருந்தால் எவ்வளவோ நலம்! பல்லவி 7 உம் நீதி நெறிகளை நான் கற்றுக்கொண்டு நேரிய உள்ளத்தோடு உம்மைப் புகழ்வேன். 8 உம் விதிமுறைகளை நான் கடைப்பிடிப்பேன்; என்னை ஒருபோதும் கைவிட்டுவிடாதேயும். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
2 கொரி 6: 2b

அல்லேலூயா, அல்லேலூயா! இதுவே தகுந்த காலம்! இன்றே மீட்பு நாள்!அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 43-48

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக", "பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக" எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள்.

ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.

இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள்.

ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார்.

உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர்களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? வரிதண்டுவோரும் இவ்வாறு செய்வதில்லையா?

நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மட்டும் வாழ்த்துக் கூறுவீர்களானால் நீங்கள் மற்றவருக்கும் மேலாகச் செய்துவிடுவதென்ன? பிற இனத்தவரும் இவ்வாறு செய்வதில்லையா?

ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
இயேசு, ''உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக, பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக" எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்" என்றார் (மத் 5: 43-44)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- ''அன்பு'' என இங்கே குறிக்கப்படுவது வெறும் உணர்ச்சியல்ல. மாறாக, அன்பு என்பது கடவுள் தம் மக்களோடு செய்துகொண்ட உடன்படிக்கையைப் பிரமாணிக்கமாகக் கடைப்பிடிப்பதில் அடங்கும். இப்பொருளில் ''உனக்கு அடுத்திருப்போர்மீது அன்புகூர்வாயாக'' என்னும் கட்டளை பழைய ஏற்பாட்டில் உண்டு (லேவி 19:18). ஆனால், பகைவரை வெறுக்க வேண்டும் என்றொரு கட்டளை பழைய ஏற்பாட்டில் இல்லை. ஆயினும் ''அடுத்திருப்போர்'' என்னும் சொல்லுக்குப் பொதுவாக வழங்கப்பட்ட பொருள் இஸ்ரயேலர் உடன்படிக்கைக் குழுவைச் சார்ந்த மக்களாகிய தம் குலத்தவர் மட்டில் அக்கறை கொண்டிருக்கவேண்டும் என்பதே. இந்த உடன்படிக்கைக் குழுவுக்குப் புறம்பே இருந்தவர்கள் ''அடுத்திருப்போர்'' என அறியப்படாததால், அவர்களை அன்புசெய்யவேண்டும் என்பது கட்டளையாக இருக்கவில்லை.

-- ''வெறுத்தல்'' என்பதற்குக் ''குறைவாக அன்புசெய்தல்'' என்னும் பொருள் உண்டு (காண்க: மத் 6:24). இயேசு மேற்கூறிய விளக்கம் சரியல்ல எனக் காட்டுகிறார். உடன்படிக்கைக் குழுவைச் சார்ந்தவர்களானாலும் சரி அதற்குப் புறம்பே உள்ளவர்களானாலும் சரி, எல்லார் மட்டிலும் அன்பு காட்ட வேண்டும் என்பதே இயேசுவின் போதனை. சீடர்கள் தம்மைத் துன்புறுத்துவோருக்காக இறைவனை வேண்டக் கடமைப்பட்டிருக்கிறார்கள் (காண்க: மத் 10:23; 23:34). பிறரை வாழ்த்துதல் என்பதற்கு, பிறர் வாழ வேண்டும் எனவும் நலம்பெற்றுச் சிறக்க வேண்டும் எனவும் விரும்புவதைக் குறிக்கும் (மத் 5:47). பகைவரையும் நாம் அன்புசெய்ய வேண்டும் என்பதற்கு இயேசு தருகின்ற காரணம் கருதத்தக்கது. நம் வானகத் தந்தை மனிதர் நல்லவர் கெட்டவர் என வேறுபாடு பார்க்காமல் அனைவருக்கும் நன்மை செய்கிறார் (மத் 5: 45). அதுபோலவே, இயேசுவின் சீடர்களும் தம் நண்பர்களுக்கும் பகைவர்களுக்கும் அன்புகாட்ட அழைக்கப்படுகிறார்கள். நாம் இவ்வாறு செய்தால் ''நிறைவுள்ளவர்களாய்'' இருப்போம் (மத் 5:48). இங்கே நிறைவு என்பது முழுமை என்னும் பொருளில் வருகிறது. நம் தந்தையாம் கடவுள் எல்லையற்ற அன்போடு நம்மை ஏற்பது போல நாமும் பிறர் மட்டில் காட்டுகின்ற அன்புக்கு எல்லைகள் இடாதிருக்க வேண்டும்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 
அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!