Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      21  பெப்ரவரி 2018  
                                                     தவக்காலம் 1ம் ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நினிவே மக்கள் தங்கள் தீய வழிகளை விட்டு விலகினார்கள்.

இறைவாக்கினர் யோனா நூலிலிருந்து வாசகம் 3:1-10

இரண்டாம் முறையாக யோனாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அவர், "நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய், நான் உன்னிடம் சொல்லும் செய்தியை அங்குள்ளோருக்கு அறிவி'' என்றார்.

அவ்வாறே யோனா புறப்பட்டு ஆண்டவரது கட்டளைப்படி நினிவேக்குச் சென்றார். நினிவே ஒரு மாபெரும் நகர். அதைக் கடக்க மூன்று நாள் ஆகும். யோனா நகருக்குள் சென்று, ஒரு நாள் முழுதும் நடந்த பின், உரத்தகுரலில், "இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும்'' என்று அறிவித்தார்.

நினிவே நகர மக்கள் கடவுளின் செய்தியை நம்பி, எல்லாரும் நோன்பிருக்க முடிவு செய்தார்கள். பெரியோர் சிறியோர் அனைவரும் சாக்கு உடை உடுத்திக்கொண்டனர். இந்தச் செய்தி நினிவே அரசனுக்கு எட்டியது. அவன் தன் அரியணையை விட்டிறங்கி, அரச உடையைக் களைந்துவிட்டு, சாக்கு உடை உடுத்திக்கொண்டு, சாம்பல் மீது உட்கார்ந்தான். மேலும் அவன் ஓர் ஆணை பிறப்பித்து, அதை நினிவே முழுதும் பறைசாற்றச் செய்தான்.

"இதனால் அரசரும் அரச அவையினரும் மக்கள் அனைவருக்கும் அறிவிப்பதாவது: எந்த மனிதரும் உணவைச் சுவைத்துக்கூடப் பார்க்கக்கூடாது. ஆடு, மாடு முதலிய விலங்குகளும் தீனி தின்னவோ தண்ணீர் குடிக்கவோ கூடாது. மனிதரும் விலங்குகளும் சாக்கு உடை உடுத்திக்கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொருவரும் கடவுளை நோக்கி மன்றாட வேண்டும்; தம் தீய வழிகளையும், தாம் செய்துவரும் கொடுஞ்செயல்களையும் விட்டொழிக்க வேண்டும். இவ்வாறு செய்தால், கடவுள் ஒருவேளை தம் மனத்தை மாற்றிக்கொள்வார்; அவரது கடுஞ்சினமும் தணியும்; நமக்கு அழிவு வராது.''

கடவுள் அவர்கள் செய்தது அனைத்தையும் பார்த்தார். அவர்கள் தீய வழிகளினின்று விலகியதை அவர் கண்டு, தம் மனத்தை மாற்றிக் கொண்டார்; தாம் அவர்கள்மீது அனுப்புவதாகச் சொல்லியிருந்த தண்டனையை அனுப்பவில்லை.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்  திபா 51: 1-2. 10-11. 16-17 (பல்லவி: 17b)
=================================================================================
பல்லவி: நொறுங்கிய உள்ளத்தை இறைவா, நீர் அவமதிப்பதில்லை.

1 கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். 2 என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். பல்லவி

10 கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும். 11 உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். பல்லவி

16 ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது; நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை. 17 கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உள்ளத்தை நீர் அவமதிப்பதில்லை. பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவே 2: 12-13

அல்லேலூயா, அல்லேலூயா! இப்பொழுதாவது உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள். ஏனெனில் நாம் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 இத்தீய தலைமுறையினர்க்கு யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது.

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 29-32

அக்காலத்தில் மக்கள் வந்து கூடக்கூட இயேசு கூறியது: இந்தத் தீய தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். இவர்களுக்கு யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது.

யோனா நினிவே மக்களுக்கு அடையாளமாய் இருந்ததைப் போன்று மானிடமகனும் இந்தத் தலைமுறையினருக்கு அடையாளமாய் இருப்பார். தீர்ப்பு நாளில் தென்னாட்டு அரசி இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார்.

ஏனெனில் அவர் சாலமோனின் ஞானத்தைக் கேட்க உலகின் கடைக்கோடியிலிருந்து வந்தவர். ஆனால் இங்கிருப்பவர் சாலமோனிலும் பெரியவர் அல்லவா! தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார்கள். ஏனெனில் யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு அவர்கள் மனம் மாறியவர்கள். ஆனால் இங்கிருப்பவர் யோனாவைவிடப் பெரியவர் அல்லவா!

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



சிந்தனை:



அடையாளத்தை கண்டா அல்லாது, போதனையை கேட்டா நினிவே மக்கள் மனம் மாறினார்கள்?

கடவுளின் செய்தியை கேட்டு நம்பி மனமாறினார்கள் என்றே குறிப்பிடுகின்றார்.

இன்றைக்கு இந்த நம்பிக்கை ஏன் நம்மிலே மனமாற்றத்தை உருவாக்கவில்லை?

கேட்டுப் பார்க்கவே இறைவார்த்தை நம்மை அழைக்கின்றது.

கேட்பதை உள்வாங்கவில்லையா?

கேட்பதை கேட்டு விட்டு, சொன்னவரை பற்றி விவாதித்து, வார்த்தை நம்மிலே கருவாக விடாமல் இருக்கின்றோமா?

கேட்க இயலாத அளவுக்கு நாம் இன்று பலவற்றில் கவனத்தை திசை திருப்பியிருக்கின்றோமா?

கேட்பதை கேட்டாலும், அடையாளங்களை தேடி அலைபவராக இருக்கின்றோமா?

போதனை வெறும் வார்த்தையில் மட்டுமே இருப்பதால், வாழ்வு வேறுபட்டு இருப்பதால், சாட்சிய போதனையில்லாததால், வார்த்தை மலடாகிப் போனதோ?

சொல்லுவதை கேளுங்கள், செய்வது போல செய்யாதீர்கள்.

யாருக்கு கூடுதலாக கொடுக்கப்பட்ட தோ அவர்களிடம் கூடுதலாக கேட்கப்படும்.

தியானிப்போம். கேட்டு, உள்வாங்கி, அசைப் போட்டு, வாழ்வாக்குவோம். நம்பிக்கையில் வளர்வோம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
நம்மோடு இருக்கும் கடவுளின் பிரசன்னத்தை உணர்வோம்

முதல் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவன் தெயுதஸ் (Theusdas) என்பவன். தான்தான் உலகிற்கு வரவிருந்த உண்மையான என்று மக்களிடையே அறிவித்துக் கொண்டவன்.

கி.பி.45 ஆம் ஆண்டு இவன் மக்களிடத்தில், தான் யோர்தான் ஆற்றை இரண்டாகக் கிழித்து, அதன் நடுவே பாதை அமைக்கப் போவதாகச் சொன்னான். மக்களும் அவனுடைய பேச்சைக் கேட்டு, யோர்தான் ஆற்றங்கரையில் கூடி வந்தார்கள். மக்கள் அனைவரும் கூடி வந்த பிறகு அவன் தன்னுடைய மந்திர சக்தியால் யோர்தான் ஆற்றை இரண்டாகப் பிரிக்க முயன்றான். அவனால் முடியவில்லை, மீண்டுமாக முயற்சி செய்தான், அப்போதும் அவனால் முடியவில்லை. இதைப் பார்த்து மக்கள் பொறுமை இழந்தார்கள்.

அதற்குள் இச்செய்தி உரோமை அரசாங்கத்திற்குத் தெரிய வர, உரோமை இராணுவம் தெயுதசைப் பிடித்துக்கொண்டு போய் அடித்துக் கொன்றது. அதன்பிறகு போலியாக தன்னை மெசியா என்று சொல்லிக் கொள்பவருக்கு மத்தியில் ஒரு விதமான பய உணர்வு ஏற்பட்டது. அதன்பிறகு யாரும் அப்படி கிளம்பி வரவில்லை.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் யூதர்கள் இயேசுவிடத்தில் அடையாளம் ஒன்று கேட்கிறார்கள். அடையாளம் என்று சொல்கிறபோது மேலே சொல்லப்பட நிகழ்வில் வரும் தெயுதஸ் எப்படி யோர்தான் ஆற்றை இரண்டாக கிழித்து, பாதை அமைப்பதாக சொன்னானோ அதுபோன்று இயேசுவும் தான் மெசியா என்பதை நிரூபிக்க அடையாளங்களைச் செய்யவேண்டும் என்று கேட்கிறார்கள் யூதர்கள். ஆனால் ஆண்டவர் இயேசுவோ அவர்களிடம், யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு எந்த அடையாளமும் தரப்படமாட்டாது என்று சொல்லி, கடுமையாகப் பேசிவிடுகின்றார்.

யோனாவை எதற்கு இயேசு யூதர்களுக்கு அடையாளமாகக் காண்பிக்கின்றார் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். யோனா புறவினத்தார் வாழ்ந்துவந்த நினிவே நகரிலே ஆண்டவரின் செய்தியை அறிவித்தார். அவர்கள் பாவத்தில் வீழ்ந்துபோய் கிடந்தார்கள். ஆண்டவராகிய கடவுள் யோனாவை அழைத்து, அவர்களுக்கு நற்செய்தி அறிவிக்கச் சொன்னபோது முதலில் அவர் மறுத்தாலும், அதன்பின்னர் யோனா தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டு அவர்களுக்கு ஆண்டவரின் செய்தியை அறிவிக்கின்றார். யோனாவின் செய்தியைக் கேட்ட மக்கள் மனம் மாறுகிறார்கள்; சாக்கு உடை உடுத்துக்கொண்டு சாம்பலில் உட்கார்ந்து தங்களுடைய பாவங்களுக்காக மனம்வருந்தி இறைவனிடம் மன்னிப்புக் கேட்கிறார்கள். இதனால் கடவுள் அவர்கள்மீது இரக்கம் கொண்டு அவர்களை மன்னிக்கிறார். இப்படி யோனாவின் செய்தியைக் கேட்ட மக்கள், அதுவும் புறவினத்து மக்கள் தங்களுடைய பாவங்களை உணர்ந்து மனம் மாறுகிறார்கள். ஆனால் இயேசுவோ யோனாவை விடப் பெரியவர், இறைவாக்கினருக்கு எல்லாம் பெரிய இறைவாக்கினர். அப்படி இருக்கும்போது தன்னுடைய செய்தியைக் கேட்டு மனம்மாறாதவர்களுக்கு எத்தகைய தண்டனை கிடைக்கும் என்பதைத்தான் இயேசு இங்கே எடுத்துரைக்கின்றார்.

யூதர்கள் செய்த தவறு சாதாரண தவறு கிடையாது, மிகப்பெரிய தவறு. அவர்கள் தங்களைத் தேடி வந்த இயேசுவையே - மெசியாவையே - ஏற்றுக்கொள்ளவில்லை (யோவா 1:11). அதனால்தான் இயேசு யூதர்களிடத்தில், தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார்கள். ஏனெனில் யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு அவர்கள் மனம் மாறினார்கள். ஆனால் இங்கிருப்பவர் யோனாவைவிடப் பெரியவர் என்கிறார்.

இயேசு கிறிஸ்து தான் செய்து வந்த பல்வேறு அரும் அடையாளங்கள், புதுமைகள் வழியாகவும் போதனைகள் வழியாகவும் தான் இறைவன் என்றும் மெசியா என்றும் யூதர்களுக்கு எடுத்துரைத்து வந்தார். ஆனால் அதைப் புரிந்துகொள்ளாத கடின உள்ளத்தினராகவே யூதர்கள் இருந்தார்கள். அதனால் இயேசு அவர்கள் அடைய இருக்கும் தண்டனையை எடுத்துரைத்தார்.

பல நேரங்களில் யூதர்களை போன்று நாமும்கூட கடவுளின் பிரசன்னம் பல்வேறு வழிகளில் வெளிப்பட்டாலும் கூட, அதனை உணர்ந்துகொள்ளாமல் பெரிதாக அடையாளத்தைத் தேடி அலைகின்றோம். இதனால் எளிய நிகழ்வுகளில் கடவுளின் பிரசன்னத்தைக் கண்டுகொள்ள மறந்துவிடுகின்றோம். ஆகவே, இத்தகைய நிலை மாறவேண்டும். எல்லாவற்றிலும் கடவுளின் பிரசன்னத்தைக் கண்டு கொள்ள வேண்டும். ஒரு குழந்தையின் சிரிப்பிலும், மலரின் அசைவிலும், காற்றின் ஓசையிலும், யாரோ ஒருவர் வறிய ஒருவருக்கு உதவுவதிலும், பாவிகளின் மனம் திரும்புவதிலும் கூட கடவுளின் பிரசன்னத்தைக் கண்டுகொள்ளலாம். எனவே, கடவுளின் பிரசன்னத்தை பெரிய பெரிய நிகழ்வுகளில் தேடி அலையாமல், அன்றாட நிகழ்வுகளில் கண்டுகொள்ள முயற்சி செய்வோம். கடவுள் மீது முழுமையான நம்பிக்கை கொள்வோம். அதனை நம்முடைய வாழ்வில் வாழ்வாக்க முயல்வோம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!