Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      20  பெப்ரவரி 2018  
                                                            தவக்காலம் 1ம் ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
என் வாக்கு என் விருப்பத்தைச் செயல்படுத்தும்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 55: 10-11

ஆண்டவர் கூறுவது: மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன; அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு விதையையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல், அங்குத் திரும்பிச் செல்வதில்லை.

அவ்வாறே, என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும். அது என் விருப்பத்தைச் செயல்படுத்தி, எதற்காக நான் அதை அனுப்பினேனோ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்  திபா 34: 3-4. 5-6. 15-16. 17-18 (பல்லவி: 17b)
=================================================================================
 பல்லவி: நீதிமான்களை இறைவன் அனைத்துத் துன்பங்களிலிருந்தும் விடுவிக்கின்றார்.

3 என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம். 4 துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். பல்லவி

5 அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை. 6 இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். பல்லவி

15 ஆண்டவர் கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன; அவர் செவிகள் அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன. 16 ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார். பல்லவி

17 நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். 18 உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
மத் 4: 4b

அல்லேலூயா, அல்லேலூயா! மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்.அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்.

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 7-15

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது பிற இனத்தவரைப்போலப் பிதற்ற வேண்டாம்; மிகுதியான சொற்களை அடுக்கிக்கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள்.

நீங்கள் அவர்களைப்போல் இருக்க வேண்டாம். ஏனெனில் நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார்.

ஆகவே, நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்: "விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக!

இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து எங்களை விடுவியும். ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமக்கே. ஆமென்.''

மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார். மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
விண்ணகத்திலிருக்கின்ற எங்கள் தந்தையே!

ஏழைகளின் எளிய சகோதரிகள் (Little Sisters of the Poor) இல்லத்தில் ஒருநாள் இரவு நடந்த நிகழ்வு.

சகோதரிகள் நடத்தி வந்த அனாதை இல்லம் நல்லுள்ளம் கொண்ட நன்கொடையாளர்களின் உதவியினாலே இயங்கி வந்தது. நன்கொடையாளர்கள் தங்களுடைய இல்லங்களிலிருந்து கொண்டுவரக்கூடிய ரொட்டி, பருப்பு, அரசி, காய்கறிகள் இவற்றைக் கொண்டுதான் சகோதரிகள் அனாதை இல்லத்தை நடத்தி வந்தார்கள். ஒருநாள் இரவு கையில் இருந்த கொஞ்ச பணம், அரிசி, பருப்பு எல்லாம் தீர்ந்துபோனது. உணவுக்காண நேரமும் நெருங்கிக்கொண்டு வந்தது.

சமையல் வேலை பார்த்து வந்தவர்கள் இதனை தலைமை அருட்சகோதரியிடம் சொல்ல, அவர் அவர்களிடம், "கவலைப்படாதீர்கள், கடவுள் நமக்கு நிச்சயம் உணவு தருவார்" என்று சொல்லிவிட்டு, ஆலயத்தின் உள்ளே சென்று, முழந்தாள் படியிட்டு இயேசு கற்றுக்கொடுத்த ஜெபத்தினை நம்பிக்கையோடு ஜெபிக்கத் தொடங்கினார்.

சரியாக இரவு எட்டு மணியிருக்கும். அப்போது கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. உடனே தலைமை அருட்சகோதரி கதவைத் திறந்து பார்த்தார். அங்கே புதிய மனிதர் ஒருவர் சாப்பாட்டுப் பொட்டலங்களை கையில் ஏந்தியவாறு நின்றார். அவர் சகோதரியிடத்தில், "அம்மா இந்த உணவைப் பெற்றுக்கொள்ளுங்கள்" என்றார். அதற்கு சகோதரி அவரிடத்தில் "இந்த உணவை யார் கொடுத்தது?" என்று கேட்டார். வந்த ஆள், "பக்கத்து ஊரில் இருக்கும் பணக்காரர் ஒருவரின் வீட்டில் விருந்து ஏற்பாடாயிருந்தது. ஆனால் திடிரென்று அந்த பணக்காரரின் பையன் விபத்துக்குள்ளாகவே, நடைபெற இருந்த விருந்தானது தடைபட்டுப் போனது. அது மட்டுமல்லாமல் அந்த பணக்காரர், விபத்தில் சிக்கிய தன்னுடைய மகன் உயிர் பிழைக்க ஒரே வழி, ஏற்பாடாயிருக்கும் உணவை விரயமாக்காமல், சகோதரிகள் நடத்திவரும் அனாதை இல்லத்திற்குக் கொடுத்து, அவர்களை ஜெபிக்கச் சொல்லுவதுதான்" என்றார். அதனால்தான் நான் இந்த உணவை உங்களிடம் கொண்டு வந்திருக்கிறேன்" என்றார்.

இதைக் கேட்ட தலைமை அருட்சகோதரி தான் செய்த ஜெபம் வீண்போகவில்லை என்று கடவுளைப் போற்றி புகழத் தொடங்கினார்.

ஆண்டவர் இயேசு நமக்குக் கற்றுக்கொடுத்த ஜெபம் எத்துணை வலிமை வாய்ந்தது என்பதை இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் சீடர்கள் அவரிடம், "எங்களுக்கு ஜெபிக்கக் கற்றுத்தாரும்" என்று சொன்ன உடன், இயேசு அவர்களுக்கு ஜெபிக்கக் கற்றுத் தருகின்றார். அப்படி உருவானதுதான் கர்த்தர் கற்பித்த ஜெபம்.

இயேசு சீடர்களுக்கு ஜெபிக்கக் கற்றுத்தரும் முன், எவையெல்லாம் ஜெபம் கிடையாது என்பதை எடுத்துரைக்கின்றார். பிதற்றுவதோ அல்லது மிகுதியான வார்த்தைகளைப் பயன்படுத்தி ஜெபிப்பதோ ஜெபம் கிடையாது என்பதை இயேசு தெளிவாக விளக்குகின்றார். பின்னர் ஜெபம் எப்படி இருக்கவேண்டும் என்பதை எடுத்துச் சொல்கிறார்.

இயேசு கற்றுத் தரும் ஜெபத்தை இரண்டு பிரிவுகளாக பிரித்து விடலாம். முதல் பகுதி இறைவனைத் துதிப்பது, இரண்டாவது பகுதி நம்முடைய தேவைகளுக்காக இறைவனிடத்தில் மன்றாடுவது. நாம் ஜெபிக்கின்றபோது எப்போதும் இறைவனுகுக் முதலிடம் கொடுத்துவிட்டுதான் நம்முடைய தேவைகளை இறைவனிடத்தில் எடுத்து வைக்கவேண்டும் என்பது இயேசுவின் அழுத்தமான போதனையாக இருக்கின்றது.

இரண்டாவது பகுதியில் இயேசு மூன்று காரியங்களுக்காக ஜெபிக்க அழைக்கின்றார். முதலாவது நம்முடைய அன்றாட உணவிற்காக, இரண்டாவது இறைவன் நாம் செய்த பாவத்தை மன்னிக்க, மூன்றாவது தீமையிலிருந்து காப்பாற்ற. முதல் விண்ணப்பமானது நிகழ்காலம் தொடர்புடையது. எப்படியென்றால் அன்றாட உணவிற்காக நாம் ஜெபிக்கின்றோம். இந்த நிகழ்காலத்தில் இறைவன் நம்மைக் காக்கவேண்டும் என்பதற்காக இயேசு ஜெபிக்கச் சொல்கிறார். இரண்டாவது விண்ணப்பமானது இறந்தகாலம் தொடர்பானது. இதில் கடந்த காலத்தில் நாம் செய்த குற்றங்களை இறைவன் மன்னிக்குமாறு ஜெபிக்கச் சொல்கிறார். மூன்றாவது விண்ணப்பமானது எதிர்காலம் தொடர்பானது. எப்படியென்றால் சோதனையில் விழவிடாதேயும், தீமையிலிருந்து விடுவித்தருளும் என்று ஜெபிக்கின்றோம். எதிர்காலத்தில் நமக்கு எந்தவொரு சோதனையும், துன்பமும் நிகழக்கூடாது என்பதற்காக இயேசு ஜெபிக்கச் சொல்கிறார். ஆகையால் இயேசு கற்றுத் தரும் ஜெபத்தில் முக்காலத் தேவைகளும் நிறைவேறுகிறது என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

நிறைய நேரங்களில் வழக்கமாகச் சொல்வதால் அதன் மதிப்பும் மகத்துவமும் உணராமமலே ஜெபிக்கின்றோம். இத்தகைய நிலை மாறவேண்டும்.

எனவே இயேசு நமக்குக் கற்றுத் தந்திருக்கும் ஜெபத்தை பொருள் உணர்ந்து ஜெபிப்போம். நாம் நம்முடைய தேவைகளுக்காக ஜெபிப்பதற்கு முன்பாக, இறைவனுக்கு நன்றி செலுத்துவோம், அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!