Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      19  பெப்ரவரி 2018  
                                                          தவக்காலம் முதல் ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
உனக்கு அடுத்து வாழ்வோர்க்கு நேர்மையுடன் நீதி வழங்கு.

லேவியர் நூலிலிருந்து வாசகம் 19: 1-2, 11-18

ஆண்டவர் மோசேயிடம் கூறியது: நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறவேண்டியது: தூயோராய் இருங்கள். ஏனெனில் உங்கள் கடவுளும் ஆண்டவருமாகிய நான் தூயவர்! களவு செய்யாமலும், பொய் சொல்லாமலும் ஒருவரை ஒருவர் வஞ்சியாமலும், என் பெயரால் பொய்யாணையிட்டு, உங்கள் கடவுளின் பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தாமலும் இருங்கள்.

நான் ஆண்டவர்! அடுத்திருப்பவரை ஒடுக்கவோ அவருக்குரியதைக் கொள்ளையிடவோ வேண்டாம்; வேலையாளின் கூலி விடியும்வரை உன்னிடம் இருத்தல் ஆகாது. காது கேளாதோரைச் சபிக்காதே! பார்வையற்றோரை இடறச் செய்யாதே! உன் கடவுளுக்கு அஞ்சி நட.

நான் ஆண்டவர்! தீர்ப்பிடுகையில், அநீதி இழைக்காதே. சிறியோர் பெரியோர் என முகம் பாராது, உனக்கு அடுத்து வாழ்வோர்க்கு நேர்மையுடன் நீதி வழங்கு. உன் இனத்தாருக்குள் புறங்கூறித் திரியாதே. உனக்கு அடுத்து வாழ்பவரின் குருதிப் பழிக்குக் காரணம் ஆகாதே!

நான் ஆண்டவர்! உன் சகோதரரை உன் உள்ளத்தில் பகைக்காதே! உனக்கு அடுத்தவர் பாவம் செய்யாதபடி அவரைக் கடிந்துகொள். பழிக்குப் பழியென உன் இனத்தார்மேல் காழ்ப்புக் கொள்ளாதே. உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக! நான் ஆண்டவர்!

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்  திபா: 19: 7. 8. 9. 14 (பல்லவி: யோவா 6: 63b)
=================================================================================
பல்லவி: ஆண்டவருடைய வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன.

7 ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. பல்லவி

8 ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன. பல்லவி

9 ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. பல்லவி

14 என் கற்பாறையும் மீட்பருமான ஆண்டவரே! என் வாயின் சொற்கள் உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும்; என் உள்ளத்தின் எண்ணங்கள் உமக்கு உகந்தவையாய் இருக்கட்டும். பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
2 கொரி 6: 2b

அல்லேலூயா, அல்லேலூயா! இதுவே தகுந்த காலம்! இன்றே மீட்பு நாள்!அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததெல்லாம் எனக்கே செய்தீர்கள்.

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 31-46

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: `"வானதூதர் அனைவரும் புடைசூழ மானிடமகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்று கூட்டப்படுவர்.

ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்துவதுபோல் அம்மக்களை அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார்.

பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, "என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள்.

ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக்கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக்கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்" என்பார்.

அதற்கு நேர்மையாளர்கள் "ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்? எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக்கொண்டோம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்? எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத் தேடி வந்தோம்?" என்று கேட்பார்கள்.

அதற்கு அரசர், "மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்" எனப் பதிலளிப்பார்.

பின்பு இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, "சபிக்கப்பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை. நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அளிக்கவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக்கொள்ளவில்லை" என்பார்.

அதற்கு அவர்கள், "ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்?" எனக் கேட்பார்கள்.

அப்பொழுது அவர், "மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்" எனப் பதிலளிப்பார்.

இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலைவாழ்வு பெறவும் செல்வார்கள்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



சிந்தனை

மண்ணுலகில் எந்தக் காரிங்களை நல்லதோ கெட்டதோ, அது இறைவனுக்கே செய்ததாகும்.

இதனையே சவுலிடம் ஆண்டவர் சொன்னார், நீ துன்புறும் இயேசு தான் நான் என்று.

தன்னை தன் மக்களோடு இணைத்துப் பார்க்கின்ற பார்வையே இறைவனது பார்வையாகும்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
எனக்கே செய்தீர்கள்

ஓர் ஓட்டப்பந்தயப் போட்டி நடைபெற்றது. அதற்கு கூட்டம் அலைமோதியது. பந்தயத்தில் ஓடக்கூடிய போட்டியாளர்கள் எல்லாம் தயாராக இருந்தார்கள். மணி ஒலிக்க எல்லாரும் ஓட ஆரம்பித்தார்கள். ஒருவன் வேகமாக முதலில் ஓடிக்கொண்டிருந்தான். அப்போது கூட்டத்திலிருந்த ஒரு பெண்மணியின் குழந்தை மைதானத்திற்குள் வந்துவிட்டது. இதைச் சற்றும் எதிர்பாராத முதலில் ஓடிய அவன் குழந்தையை அப்படியே விட்டால் போட்டியாளர்களுக்கு நடுவே மாட்டிக்கொண்டு மிதிபட்டு இறந்துவிடும் என நினைத்து அந்தக் குழந்தையை தூக்கி அதன் தாயிடம் ஒப்படைத்துவிட்டு திரும்பவும் ஓடினான். ஆனால் அதற்குள் பின்னால் ஓடிக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் முன்னால் ஓட ஆரம்பித்தார்கள். அவன் தம்பிடித்து விரைவாக ஓடி மீண்டும் எல்லாரையும் விட முன் ஓடினான். அப்போது கூட்டத்திலிருந்து ஒரு பெண்மணியின் சத்தம். அங்கே ஒரு அனாதையை "இங்கு எதற்கு வந்தாய்" என்று அடித்துக் கொண்டிருந்தார்கள். இதைப் பார்த்த அவன் அடிபட்டுக் கிடந்த அந்தப் பெண்மணியைத் தூக்கிகொண்டு ஓடி ஒரு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தான். பின்னர் அவன் அந்த மைதானத்திற்கு வந்தபோது போட்டி எல்லாம் முடிந்து எல்லாரும் கலைந்துபோய் கொண்டிருந்தார்கள். இவனைப் பார்த்த ஒரு சிலர், "பிழைக்கத் தெரியாதவன்" என்று எள்ளி நகையாடிச் சென்றனர். அவன் ரொம்ப வருத்ததோடு வீட்டுக்குச் சென்றான்.

அன்று இரவு அவன் தூங்கச் சென்றபோது அவனுக்கு ஒரு கனவு வந்தது. அந்தக் கனவில் காலையில் அவன் மைதானத்தில் காப்பாற்றிய குழந்தையும் அந்த அனாதைப் பெண்மணியும் கையில் மலர்கொத்தை எடுத்துவந்து அவனிடம் கொடுத்துசென்றனர். அப்போது ஒரு குரலும் கேட்டது, "உனக்காக வாழ்ந்தாய் என்றால் நீ மனிதன் மட்டுமே, மற்றவருக்காக வாழ்ந்ததால் நீ புனிதன்". தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தவன் தான் செய்த செயல்களை நினைத்து மகிழ்ச்சி அடைந்தான்.

இன்றைய நற்செய்தியில் இறுதி தீர்பானது நடைபெறுகிறது. இதில் ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கு ஏற்ப தீர்ப்பு வழங்கப்படுகிறது. நல்லது செய்தவர்கள் கடவுள் தரும் இளைப்பாற்றியும், தீயவர்கள் தண்டனையையும் பெறுகிறார்கள்.

நாம் நம்மோடு வாழும் மனிதர்களுக்கு, ஏழைகளுக்கு நம்மாலான உதவிகளைச் செய்வோம். கடவுள் தரும் விண்ணரசை உரிமையாக்குவோம்.

- Fr. Maria Antonyraj, Palayamkottai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
உன்மீது நீ அன்பு கூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக

ஒரு ஊரில் கடவுள் பக்தை ஒருத்தி இருந்தாள். அவள் பெரிய பணக்காரியும் கூட. எந்நேரமும் கோவில் ஒன்றே தஞ்சமெனக் கிடப்பாள். கடவுளிடம் அவள் 'எப்போது உன் திருமுக தரிசனம் எனக்குக் கிடைக்கும்" என்று அடிக்கடி வேண்டி வந்தாள்.

ஒருநாள் இரவில் அவள் தூங்கிக்கொண்டிருக்கும்போது கனவொன்று கண்டாள். அக்கனவில் கடவுள், "நாளை உன் வீட்டுக்கு நான் வர இருக்கிறேன்" என்று சொல்லிவிட்டு மறைந்தார். இதைக் கேட்டு அவள் மிகவும் மகிழ்ந்தாள்.

அடுத்த நாள் காலை அவள் அதிகாலையிலேயே எழுந்து, வீட்டைச் சுத்தம் செய்து, அறுசுவை உணவைத் தயாரித்து வைத்து கடவுளுக்காகக் காத்திருந்தார். ஆனால் கடவுள் வரவில்லை.

அந்நேரத்தில் ஒரு வயதான பெரியவர் கையில் ஊன்றுகோலை வைத்துக்கொண்டு அப்பெண்ணின் வீட்டுக்கு முன்பாக வந்து நின்றார். அவர் அப்பெண்ணிடம், "அம்மா! நான் பக்கத்திலிருக்கும் மருத்துவமனைக்குச் செல்லவேண்டும், என்னால் அதுவரை நடக்க முடியாது. ஆதலால் தயவுசெய்து நீங்கள் என்னை கைத் தாங்கலாக அங்கே கூட்டிக்கொண்டு போனால் அது எனக்கு பேருதவியாக இருக்கும்" என்றார். அதற்கு அப்பெண், "அதுவெல்லாம் என்னால் செய்ய முடியாது, ஏனென்றால் கடவுள் என்னுடைய வீட்டுக்கு வருவதாகச் சொல்லியிருக்கிறார், நான் அவரைக் கவனிக்கவேண்டும்" என்று சொல்லி அவரை அங்கிருந்து அனுப்பி விட்டார்.

சிறுது நேரத்தில் ஒரு பிச்சைக்காரன் அவளுடைய வீட்டுக்கு முன்பாக வந்து, "அம்மா! தாயே! எனக்கு ஏதாவது உணவு போடுங்கள், நான் சாப்பிட்டு ஒரு வாரம் ஆகிறது" என்றான். அதற்கு அந்தப் பெண்மணி, "இங்கே சாப்பாடு எல்லாம் போடமுடியாது, நான் கடவுளின் வருகைக்காக காத்துக்கொண்டிருக்கிறேன். வேண்டுமானால் நீ நாளைக்கு வா" என்று சொல்லி அவரை அங்கிருந்து அனுப்பினார்.

நேரம் ஆகிக்கொண்டே இருந்தது. ஆனால் கடவுள் மட்டும் வருவே இல்லை. பொழுது சாய்வதற்கு முன்பாக, ஓர் இளம்பெண் கையில் குழந்தையை வைத்துக்கொண்டு அவளிடம் வந்து, "அம்மா! நாங்கள் மிகவும் வறிய நிலையில் இருக்கிறோம். உணவுக்காக மிகவும் கஷ்டப்படுகின்றோம். ஆதலால் ஏதாவது கொஞ்சம் பணம் தந்தால் அது எங்களுக்கு பேருதவியாக இருக்கும்" என்றாள். அதற்கு அந்தப் பணக்காரப் பெண்மணி, "நானே கடவுள் இன்னும் வரவில்லையே என்று கவலையாக இருக்கிறேன். நீ வேறு இந்த நேரத்தில், இங்கு வந்து என்னைத் தொந்தரவு செய்கிறாயே" என்று சொல்லி அவளையும் அங்கிருந்து விரட்டினார்.

இரவு நீண்டநேரம் கடவுளுக்காக காத்திருந்தார். ஆனால் கடவுள் வரவே இல்லை. இப்படி நாள் முழுவதும் அவள் கடவுளுக்காக காத்திருந்ததால், மிகவும் சோர்வுற்றுப் போயிருந்தாள். அதனால் அவள் அப்படியே தூங்கிவிட்டாள்.

அன்றிரவு கடவுள் மீண்டுமாக அவளுடைய கனவில் வந்தார். அவரைப் பார்த்த அப்பெண்மணி சற்று கோபத்தோடு, "கடவுளே! நான் உன்னை வரவேற்பதற்காக நாள் முழுவதும் வாசலில் காத்திருந்தேனே! ஆனால் நீரோ வராமல் என்னை ஏமாற்றிவிட்டீர்" என்று வருத்தப்பட்டாள். அதற்கு கடவுள், "நான்தான் உன்னைக் காண்பதற்காக மூன்றுமுறை வந்தேனே, நீதான் என்னைக் கண்டுகொள்ளாமல் விரட்டிவிட்டாய்" என்றார். அப்போதுதான் அவள் உணர்ந்தாள் வயதானவர், பிச்சைக்காரர், ஏழைப் பெண் போன்றோரின் உருவில் வந்தது கடவுள் என்று. கடவுள் மனித உருவில் வருகிறார் என்பதை இக்கதையானது நமக்கு எடுத்துக்கூறுகிறது.

நற்செய்தி வாசகத்தில் இறுதித் தீர்ப்பைக் குறித்து வாசிக்கின்றோம். மத்தேயு நற்செய்தியில் மட்டுமே வரக்கூடிய இந்த இறுதித் தீர்ப்பில் ஆண்டவராகிய இயேசு, மிகச் சிறிய சகோதர, சகோதரிகளுக்கு செய்வதையெல்லாம் எனக்கே செய்வதாகச் சொல்கிறார் (மத் 25:40).

பசியாய் இருக்கிறவர்களுக்கு உணவிடுகிறபோது, தாகமாக இருப்பவர்களுக்கு தண்ணீர் தருகிறபோது, ஆடையின்றி இருப்பவரை உடுத்துகிறபோது, அந்நியனாக இருப்பவரை வீட்டில் ஏற்றுக்கொள்கிறபோது, நோயாளியைக் கவனித்துக் கொள்கிறபோது, சிறையில் இருப்போரைப் பார்க்கச் செல்கிறபோது இன்னும் இது போன்ற இரக்கச் செயல்களை நம்மோடு வாழும் சக மனிதர்களுக்குச் நாம் செய்கிறபோது கடவுளுக்கே செய்கிறோம். அதேவேளையில் இப்படிப்பட்ட இரக்கச் செயல்களை சாதாரண மனிதர்களுக்குச் செய்யாதபோது கடவுளுக்கும் செய்யாதவர்கள் ஆகிறோம்.

"எங்கெல்லாம் உயிர் இருக்கிறதோ; துடிப்பு இருக்கிறதோ; துளிர்ப்பு நிகழ்கிறதோ அங்கெல்லாம் நிச்சயம் இறைமை இருக்கிறது, ஏனென்றால் இறைமை என்பதே உயிர்ப்புதான்" என்பான் அப்துல் ரகுமான் என்ற கவிஞன்.

நாம் நம்மோடு வாழும் மனிதர்களுக்கு நம்மாலான உதவிகளைச் செய்வோம். அதன்வழியாக இறைவன் அளிக்கும் முடிவில்லா வாழ்வைப் பெறுவோம்.

- Fr. Maria Antonyraj, Palayamkottai.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
"எளியவருக்குச் செய்ததெல்லாம் எனக்கே செய்தீர்கள்" - இயேசு

தூர்ஸ் நகரைச் சேர்ந்தவர் தூய மார்டின். இவர் உரோமை இராணுவத்தில் பணியாற்றி வந்தார்.

ஒருநாள் இவர் அதிகாலை வேளையில் இறைவனை வழிபடுவதற்காக ஆலயத்திற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு பிச்சைக்காரர் ஆலயத்தின் வாசலருகே அமர்ந்துகொண்டு பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். அது குளிர்காலம் வேறு, எனவே அந்த பிச்சைக்காரர் குளிரில் நடுங்கிக்கொண்டே பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். அவர் மார்டினைப் பார்த்ததும் அவரிடத்தில் கையை நீட்டினார். ஆனால் மார்டினோ, "என்னிடத்தில் பணம் இல்லை, படைவீரனுக்கு உரிய இந்த ஆடைதான் இருக்கிறது, இதில் பாதியை வேண்டுமானால் தரட்டுமா?" என்று கேட்டார். பிச்சைக்கார் சரி என்று சொல்ல, தன்னுடைய ஆடையை இரண்டாகக் கிழித்து, அதில் பாதியை அவருக்கு உடுத்துவிட்டு, மீதியை அவர் அணிந்துகொண்டார்.

அன்றிரவு மார்டினுக்கு கனவு ஒன்று வந்தது. அந்தக் கனவில் விண்ணகத்தின் வாசல் திறக்கப்பட்டது. அப்போது வானதூதர்கள் புடைசூழ ஆண்டவர் இயேசு அரியணையில் வீற்றிருந்தார். ஆனால் அவர் பாதி உடையிலே இருந்தார். அப்போது வானதூதர்களில் ஒருவர் இயேசுவிடம், "ஆண்டவரே! எதற்காக நீர் பாதி உடையில் இருக்கிறீர், இது என்ன கோலம்?" என்று கேட்டார். அதற்கு இயேசு அவரிடத்தில், "என் அடியான் மார்டின் இன்று காலை ஒரு பிச்சைக்காரனுக்கு தான் உடுத்தியிருந்த ஆடையில் பாதியை கொடுத்தார். அந்தப் பாதி ஆடைதான் நான் இப்போது உடுத்தியிருக்கும் ஆடை" என்றார்.

இதைக் கேட்டதும் தூக்கத்திலிருந்து மார்டின் விழித்தெழுந்தார். தான் பிச்சைக்காரருக்கு செய்த உதவியின் வழியாக இயேசுவுக்கே உதவி செய்ததை நினைத்துப் பெருமிதம் கொண்டார். மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கே மேலே சொல்லப்பட்ட நிகழ்வு எவ்வளவு பொருத்தமாக இருக்கின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு விண்ணகம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை உவமையின் வாயிலாக எடுத்துக்கூறுகின்றார். விண்ணகம் நாம் கற்பனை செய்து வைத்திருப்பதை விடவும் வித்தியாசமானது என்பதை இயேசு இங்கே மிகத் தெளிவாக விளக்குகின்றார்.

விண்ணகத்தை நாம் எவ்வாறு அடையலாம், அதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்பதற்கு இயேசு சொல்லக்கூடிய வழிமுறை நம்மோடு வாழக்கூடிய ஏழை எளியவருக்கு உதவி செய்வதாகும். அதுவும் பெரிய பெரிய உதவிகள் என்றில்லை, சாதாரண உதவிகளே போதுமானது. பசித்தோருக்கு உண்ணக் கொடுப்பதும், தாகமாய் இருப்போருக்கு தண்ணீர் கொடுப்பதும், ஆடையின்றி இருப்போரை உடுத்துவதும், அன்னியரை வீட்டில் ஏற்றுக்கொள்வதும், சிறையில் இருப்போரை பார்க்கச் செல்வதும் நோயாளியைக் கவனித்துக் கொள்வதும் கூட விண்ணகத்திற்கு செல்வதற்கான வழிமுறையாகும் என்பதை இயேசு உவமையின் வாயிலாக மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றார்.

உவமையின் வாயிலாக இயேசு சொல்லக்கூடிய இரண்டாவது உண்மை அவர் எந்த வடிவிலும் இருப்பார் என்பதாகும். எந்தவொரு உதவியும் செய்யாத இன்னொரு பிரிவினர், "ஆண்டவரே நாங்கள் எப்போது உமக்கு உணவும், தண்ணீரும், ஆடையும் கொடுக்காதிருந்தோம், எப்போது உம்மை அன்னியராக, நோயுற்றவராக, சிறையில் இருக்கக்கண்டு கவனித்துக் கொள்ளாதிருந்தோம்? என்று கேட்கின்றனர். அவர்களுடைய கேள்வியின் பின்னால் ஒளிந்திருக்கும் உண்மை யாதெனில் பணக்காரராக, படித்தவராக, அதிகாரம் கொண்டவராக இயேசு இருந்திருந்தால் அவர்கள் உதவி செய்திருப்பார்கள் என்பதுதான். ஆனால் இயேசுவோ ஒருவரின் அந்தஸ்தை, வெளித் தோற்றத்தைப் பார்க்காமல் உதவி செய்யவேண்டும் என்ற உண்மையை வலியுறுத்திக்கூறுகின்றார்.

நிறைவாக இந்த மண்ணுலகத்தில் நாம் எப்படி வாழ்கின்றோமா அதற்கேற்ற கைம்மாறுதான் விண்ணகத்தில் கிடைக்கும் என்பதை இயேசு எடுத்துக்கூறுகின்றார். உதவி செய்தவர்களோ தந்தைக் கடவுள் ஏற்பாடு செய்துவைத்திற்கும் ஆட்சியைப் பெற்றுக்கொள்கிறார்கள், உதவி செய்யாதவர்களோ முடிவில்லா தண்டனை அடைய அனுப்பப்படுகிறார்கள். ஆகவே, நம்முடைய இறப்புக்குப் பின்னான வாழ்வு, இறப்புக்கு முன்பாக நாம் எப்படி வாழ்கிறோமோ அதைப் பொறுத்துதான் இருக்கிறது என்றால் அது மிகையாகாது.

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற மனிதர்களில் அது யாராக இருந்தாலும் அவர்களில் இயேசுவைக் கண்டுகொள்கிறோமா?, அல்லது அவர்களை அப்படியே புறக்கணித்து வாழ்கிறோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்; அதனை நம்முடைய வாழ்வாக மாற்றவேண்டும்.

எனவே, எளியோரில் இறைவனைக் கண்டுகொள்வோம், அவர்களுக்கு நம்மாலான உதவிகளைச் செய்வோம், அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

- Fr. Maria Antonyraj, Palayamkottai.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

"மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்"

இறைப்பற்றுள்ள இளைஞன் ஒருவன் ஒருநாள் ஒரு கனவு கண்டான். அந்தக் கனவில், விண்ணகத்தின் வாசலுக்கு முன்பாக ஏராளமான பேர் நின்றுகொண்டு கதவைத் தட்டினார்கள். கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, விண்ணகத்தை காவல்காத்துக் கொண்டிருந்த தூதர் வந்தார். அவர் அங்கே நின்றுகொண்டிருந்தவர்களிடம், "உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார். அவர்கள் அவரிடம், "நாங்கள் விண்ணகத்திற்குள் நுழையவேண்டும்" என்றார்கள். உடனே காவல்தூதர் அவர்களிடம், "விண்ணகத்திற்குள் நுழைவதற்கு ஒருசில தகுதிகள் இருக்கவேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமல்லவா. ஆதலால், தகுதியுள்ளவர் என தங்களை நினைப்பவர்கள் வரிசையில் வரலாம், நான் அவர்களுடைய மண்ணக வாழ்க்கையை ஆய்வுசெய்து பார்த்துவிட்டு, அவர்களை விண்ணகத்திற்குள் அனுப்பலாமா? வேண்டாமா? என்பதை முடிவுசெய்கின்றேன்" என்றார். காவல்தூதர் சொன்னதற்கு இணங்க எல்லாரும் வரிசையில் வந்து நின்றார்கள்.

முதலில் மெத்தப் படித்த மேதாவி ஒருவர் தூதருக்கு முன்பாகச் சென்று, "ஐயா! நான் அதிகமாகக் கற்றுத் தேர்ந்த ஓர் அறிவாளி, அதனால் என்னை விண்ணகத்திற்குள் செல்ல அனுமதியும்" என்றார். தூதர் அவர் சொன்னத்தைப் பொறுமையாகக் கேட்டுவிட்டு, அவருடைய மண்ணக வாழ்வை ஒருகணம் ஆய்வுசெய்து பார்த்தார். பின்னர் அவர் அந்த மேதாவியிடம், "நீர் அதிகமாகக் கற்றுத் தேர்ந்திருக்கலாம். ஆனால், நீர் கற்றுக் கொண்டதை வைத்து மக்களுக்குச் சேவை செய்யாமல், உம்முடைய பெருமையைத்தான் எல்லாருக்கும் தெரியும்படி செய்தீர். ஆதலால், உம்மைப் போன்ற ஆணவக்காரர்களுக்கு விண்ணகத்தில் இடமில்லை, நீர் சற்று ஓரமாகப் போய் நில்லும்" என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

அறிவாளிக்குப் பிறகு முனிவர் ஒருவர் தூதரிடத்தில் வந்தார். அவர் தூதரிடம், "ஐயா! நான் ஒரு முனிவர்; மண்ணகத்தில் வாழ்ந்தபோது அதிகமான தவமுயற்சிகளை செய்தவன். அதன்பொருட்டு என்னை விண்ணகத்தில் அனுமதியும்" என்றார். தூதர் அவர் சொன்னதையும் பொறுமையாகக் கேட்டுவிட்டு, மண்ணகத்தில் அவர் வாழ்ந்த வாழ்க்கையை ஒருகணம் ஆய்வுசெய்து பார்த்தார். பின்னர் அவர் அவரிடத்தில், "மண்ணகத்தில் நீர் வாழ்ந்தபோது அதிகமான தவ முயற்சிகளைச் செய்திருக்கலாம். ஆனால், நீர் செய்த தவமுயற்சிகள் அனைத்தும், மக்களுடைய நலனுக்காக அல்லாமல், உம்முடைய பெயர் விளங்கவே செய்திருக்கின்றீர். ஆதலால் உமக்கும் விண்ணகத்தில் இடமில்லை, நீர் போகலாம்" என்று சொல்லி, அவரை அனுப்பி வைத்தார்.

முனிவருக்குப் பிறகு ஏழை ஒருவர் தூதருக்கு முன்பாக வந்தார். அவர் அவரிடம், "ஐயா! நான் ஒரு சாதாரண ஏழை. இருந்தாலும் நான் என்னுடைய அண்டை வீட்டில் இருந்த உடல் ஊனமுற்ற மனிதருக்கு என்னால் இயன்ற உதவிகளைச் செய்வேன். நடக்கமுடியாத அவரை குளிப்பாட்டி, அவருக்கு உணவு செய்து தருவேன், மட்டுமல்லாமல் அவருடைய அறையைச் கூட்டிப் பெருக்கி சுத்தமாக வைத்திருப்பேன். இப்படிப்பட்ட எனக்கு விண்ணகத்தில் நுழைய வாய்ப்பிருக்கின்றதா?" என்றார். தூதர் ஒரு சொன்னதை பொறுமையாகக் கேட்டுக் கொண்டுவிட்டு, அவருடைய மண்ணக வாழ்வை ஆய்வுசெய்து பார்த்தார். பின்னர் அவர் அவரிடம், "மண்ணகத்தில் நீ செய்துவந்த உதவி சாதாரணமாக இருந்தாலும், அது உள்ளன்போடு செய்யப்பட்ட உதவியாக இருக்கின்றது, அதோடு நீ செய்த உதவி இறைவனுடைய பார்வையில் உயர்ந்ததாக இருக்கின்றது. ஆதலால், நீ விண்ணகத்திற்குள் செல்லலாம்" என்றார். இதற்கிடையில் ஏதோ ஒரு சத்தம் கேட்டு, தூக்கத்திலிருந்து விழித்தெழுந்த அந்த இளைஞன், தான் கனவில் கண்ட ஏழையைப் போன்று, சாதாரண உதவிகளையும்கூட உள்ளன்போடு செய்யத் தொடங்கினான்.

விண்ணகத்தில் நுழைய நாம் மெத்தப் படித்தவர்களாகவோ, மிகக் கடினமான ஒறுத்தல் முயற்சிகளைச் செய்பவர்களாகவோ இருக்கவேண்டும் என்ற தேவையில்லை, செய்யக்கூடிய சிறுசிறு உதவிகளையும் உள்ளன்போடு செய்தாலே போதும் விண்ணகத்தில் நுழையலாம் என்பதை இந்தக் கதையின் வழியாக நாம் அறிந்து கொள்ளலாம்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு உலக முடிவிற்குப் பிறகு நடைபெறும் இறுதித் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதை உவமை வழியாக எடுத்துச் சொல்கின்றார். இயேசு சொல்கின்ற உவமையில், யாராரெல்லாம் சாதாரண மனிதர்களில் இறைவனைக் கண்டுகொண்டு அவர்களுக்கு உதவிகள் செய்துவந்தார்களோ அவர்கள் விண்ணகத்திற்குள் நுழையும் தகுதியைப் பெற்றார்கள். ஏனையோர் விண்ணகத்திற்குள் செல்லும் தகுதியை இழந்தார்கள். நாமும் எளியவரில் இறைவனைக் கண்டுகொண்டு அவர்களுக்கு உதவிகள் செய்கின்றபோது விண்ணகத்தை சொந்தமாக்குவோம் என்பது உறுதி.

ஆகவே, நாம் எளியவரில் இறைவனைக் கண்டுகொண்டு அவர்களுக்கு உதவிகள் செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- Fr. Maria Antonyraj, Palayamkottai.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!