Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      17  பெப்ரவரி 2018  
                                        திருநீற்றுப் புதனுக்குப் பின்வரும் சனி
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 58: 9b-14

ஆண்டவர் கூறுவது: உன்னிடையே இருக்கும் நுகத்தை அகற்றிவிட்டு, சுட்டிக்காட்டிக் குற்றஞ்சாட்டுவதையும் பொல்லாதன பேசுவதையும் நிறுத்திவிட்டு, பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்; இருண்ட உன் நிலை நண்பகல் போல் ஆகும். ஆண்டவர் தொடர்ந்து உன்னை வழிநடத்துவார்; வறண்ட சூழலில் உனக்கு நிறைவளிப்பார்; உன் எலும்புகளை வலிமையாக்குவார்; நீயும் நீர் பாய்ந்த தோட்டம்போலும், ஒருபோதும் வற்றாத நீரூற்றுபோலும் இருப்பாய். உன் மக்கள் பண்டை நாளிலிருந்து பாழடைந்து கிடப்பவற்றைக் கட்டியெழுப்புவர்; தலைமுறை தலைமுறையாக உள்ள அடித்தளங்களின் மேல் கட்டியெழுப்புவாய்; தகர்ந்த மதிலைத் திரும்பக் கட்டுபவன் என்றும் குடியிருப்பதற்குத் தெருக்களைச் சீர்படுத்துபவன் என்றும் பெயர் பெறுவாய்.

ஓய்வுநாளின் முறைமைகளினின்று விலகிச் செல்லாது, என் புனித நாளில் உன் விருப்பம் போல் செய்யாதிருந்து, ஓய்வுநாள் "மகிழ்ச்சியின் நாள்" என்றும் "ஆண்டவரின் மேன்மைமிகு புனித நாள்" எனவும் சொல்லி அதற்கு மதிப்புத் தந்து, உன் சொந்த வழிகளில் செல்லவோ உன் சொந்த ஆதாயத்தை நாடவோ வெற்றுப் பேச்சுகளைப் பேசவோ செய்யாதிருந்தால், அப்பொழுது, ஆண்டவருக்கு ஊழியம் புரியும் மகிழ்ச்சியைப் பெறுவாய்; நானோ, மண்ணுலகின் உயர்விடங்களில் உன்னை வலம் வரச்செய்வேன்; உன் மூதாதையாகிய யாக்கோபின் உரிமைச் சொத்தின் மூலம் உனக்கு உணவளிப்பேன்; ஆண்டவரின் வாய் இதை உரைத்தது.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்  திபா: 86: 1-2. 3-4. 5-6 (பல்லவி: 11a)
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, உமது வழியை எனக்குக் கற்பியும்.

1 ஆண்டவரே! எனக்குச் செவிசாய்த்துப் பதிலளியும்; ஏனெனில், நான் எளியவன்; வறியவன். 2 என் உயிரைக் காத்தருளும்; ஏனெனில் நான் உம்மீது பற்றுடையவன்; உம் ஊழியனைக் காத்தருளும்; நீரே என் கடவுள்! நான் உம்மீது நம்பிக்கை கொண்டுள்ளேன். பல்லவி

3 என் தலைவரே! என்மேல் இரக்கமாயிரும்; ஏனெனில், நாள் முழுவதும் உம்மை நோக்கி மன்றாடுகிறேன். 4 உம் அடியானின் மனத்தை மகிழச் செய்யும்; என் தலைவரே! உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன். பல்லவி

5 ஏனெனில் என் தலைவரே! நீர் நல்லவர்; மன்னிப்பவர்; உம்மை நோக்கி மன்றாடும் அனைவருக்கும் பேரன்பு காட்டுபவர். 6 ஆண்டவரே, என் வேண்டுதலுக்குச் செவிகொடும்; உம் உதவியை நாடும் என் குரலைக் கேட்டருளும். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
எசே 33: 11

அல்லேலூயா, அல்லேலூயா! "தீயோர் சாகவேண்டும் என்பது என் விருப்பம் அன்று; ஆனால், அத்தீயோர் தம் வழிகளினின்று திரும்பி, வாழவேண்டும் என்பதே என் விருப்பம்," என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன்.

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 27-32

அக்காலத்தில் இயேசு சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்த லேவி என்னும் பெயருடைய வரிதண்டுபவர் ஒருவரைக் கண்டார்; அவரிடம், "என்னைப் பின்பற்றி வா!"" என்றார். அவர் அனைத்தையும் விட்டுவிட்டு எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்.

இந்த லேவி தம் வீட்டில் அவருக்கு ஒரு பெரிய விருந்து அளித்தார். வரிதண்டுபவர்களும் மற்றவர்களும் பெருந்திரளாய் அவர்களோடு பந்தியில் அமர்ந்தார்கள்.

பரிசேயர்களும் அவர்களைச் சேர்ந்த மறைநூல் அறிஞர்களும் முணுமுணுத்து இயேசுவின் சீடரிடம், "வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து நீங்கள் உண்பதும் குடிப்பதும் ஏன்?" என்று கேட்டனர்.

இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, "நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன்" என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



சிந்தனை

நம்முடைய கவனம் யார் பக்கம்?

தவறு செய்பவர்களை, வழி மாறி நடப்பவர்களை திசை மாறி செல்பவர்களை கவனத்தோடு கருத்திலே கொண்டு அந்த ஆன்மாக்களை ஆண்டவர் பக்கம் கொண்டு வருவதுவே நம்முடைய பணியாக அமைந்திடல் வேண்டும்.

நல்ல பண்புகளை கொண்டு வாழந்து வருவோர் நங்களது ஆன்மாவை காத்து கொள்ள தெரிந்தவர்கள்.

ஆனால் பாவத்தோடு வாழ்வோர், தடுமாறி நடப்போர் இவர்களை கவனத்தில் கொண்டு, இவர்களை குற்றவாளிகளைப் போல் அல்லாமல், பொறுமையோடு, நோயாளிகளுக்கு எத்தகைய கவனம் தேவையோ அத்தகைய நிலையில் அவாகளது ஆன்மாவை காக்க பொறுப்பேற்பது என்பது அவசியமானது.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
லேவியின் மனமாற்றம்!

தென் பொலிவியாவில், பெரும்பாலான நேரங்களில் ஞாயிறு வழிபாடு ஆலயத்திற்கு வெளியே இருக்கக்கூடிய மர நிழலில்தான் நடைபெறும். ஞாயிறு வழிபாட்டின் இடையில், அதாவது காணிக்கை பவனியின் போது, கூட்டத்தில் இருந்து நான்கு இளைஞர்கள் எழுந்து, கையில் அப்பம், ரசம், மெழுகுதிரி, கல் போன்றவற்றை ஏந்தி பீடத்தை நோக்கி வருவர். அவர்கள் பீடத்தை அடைந்ததும் கல்லை தன்னுடைய கையில் ஏந்தியிருக்கக்கூடிய இளைஞர் வானத்தை அண்ணார்ந்து, "வானகத் தந்தையே இறைவா! இதோ என்னுடைய கையில் ஏந்தியிருக்கின்ற இந்தக் கல் இறைமக்களாகிய எங்களைக் குறிக்கின்றது. இந்த கல்லைப் போன்று நாங்கள் கடின மனத்தவராய் இல்லாமல், கனிவுள்ள நெஞ்சத்தினராய் வாழச் செய்யும். எங்களுடைய நெஞ்சத்தில் உண்மையான அன்பும், இரக்கமும் குடிகொள்ளச் செய்யும்" என்று சொல்லி வேண்டிவிட்டு, அவர்கள் நான்கு பேரும் திரும்பிச் சென்று அமர்ந்து கொள்வர்.

அப்பம், இரசம், மெழுகுதிரி இவற்றோடு கல்லையும் பெற்றுக்கொள்கின்ற குருவானவர் பீடத்திற்கு வந்ததும், வானத்தை அண்ணார்ந்து பார்த்து, "இரக்கம் நிறைந்த இறைவா! இறைமக்கள் கொண்டு வந்திருக்கின்ற அப்பத்தையும் இரசத்தையும் உம்முடைய திருவுடலாகவும் இரத்தமாகவும் மாற்றுகின்ற நீர், இக்கல்லை - இறைமக்களின் இதயத்தை - கனிவுள்ள நெஞ்சமாக மாற்றும்" என்று சொல்லி ஜெபித்துவிட்டு திருப்பலியைத் தொடர்ந்து நிறைவேற்றுவார்.

தென் பொலிவியா மக்கள் செய்கின்ற இச்சடங்கின் வழியாக அவர்கள் மனதில் மாற்றம் ஏற்படுவதாக நம்புகிறார்கள். நாம் ஒவ்வொருவருமே பாவத்திலிருந்து விலகி, இறைவனுக்கு உகந்த அன்பு மக்களாக மாறவேண்டும் அதுதான் இறைவனின் திருவுளமாக இருக்கின்றது. நற்செய்தியில் பாவத்திலிருந்து விலகி, இயேசுவின் திருதூதர்கள் அணியில் சேர்ந்த லேவியைக் குறித்து வாசிக்கின்றோம். லூக்கா நற்செய்தியில் லேவி என்ற பெயரில் வருகின்ற இவர் மத்தேயு தானே தவிர, வேறு யாருமில்லை.

லேவி சுங்கச் சாவடியில் அமர்ந்து வரிவசூலித்துக் கொண்டிருகின்றார். அவரை ஆண்டவர் இயேசு தடுத்தாட்கொண்டு, "என் பின்னே வா" எனப் பணிக்கின்றார். இயேசு அவரை அழைத்தவுடன் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவோடு இணைந்துகொள்கின்றார். இவ்வாறு அவர் லேவி (joined to) என்ற தன்னுடைய பெயருக்கு ஏற்ப, பாவத்திலிருந்து விலகி இயேசுவோடு இணைந்தார். லேவியின் மனமாற்றம் அல்லது அழைப்பு நமக்கு இரண்டு முக்கியமான செய்திகளை உணர்த்துவதாக இருக்கின்றது. அது என்னென்ன என்று இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

லேவியின் மனமாற்றம் நமக்குச் சொல்லக்கூடிய முதலாவது செய்தி, நாம் ஒவ்வொருவரும் நம்முடைய குற்றங்குறைகளை உணர்ந்து மனம்மாற வேண்டும் என்பதாகும். லேவி செய்துவந்த வரிவசூலிக்கும் தொழிலில் நிறைய முறைகேடுகள் நடக்கும். குறிப்பாக உரோமை அரசாங்கம் நிர்ணயிக்கம் தொகையை விடவும் அதிகமாக தொகையை வரிதண்டுவோர் வசூலித்து வந்தார்கள். லேவியும், அரசாங்கம் அதே தவற்றினைச் செய்திருக்கவேண்டும். எனவே, அவர் ஒருவிதமான குற்றவுணர்வோடு வாழ்ந்திருக்கவேண்டும். இத்தகைய சூழ்நிலையில் ஆண்டவர் இயேசு அவரை அழைக்கின்றபோது, அவர் தன்னுடைய குற்றத்தை உணர்ந்து, அதே நேரத்தில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்ந்து வருகின்றார். லேவியைப் போன்று நாம் ஒவ்வொருவரும் நம்முடைய குற்றங்களை உணர்ந்து திருந்துவதுதான் இறைவனுக்கு ஏற்ற செயலாகும். ஏனென்றால் லூக்கா நற்செய்தி 15:7 ல் வாசிப்பது போல், "மனம் மாறத் தேவையில்லாத தொண்ணூற்று ஒன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும்".

லேவியின் மனமாற்றம் நமக்கு எடுத்துரைக்கின்ற இரண்டாவது செய்தி, இயேசு இழந்து போனதைத் தேடி மீட்கவே வந்தார் என்பதாகும். இயேசு தன்னை அழைத்தவுடன், லேவி தன்னுடைய வீட்டில் விருந்தொன்று ஏற்பாடு செய்கின்றார். அதில் இயேசுவும் அவருடைய சீடர்களும் ஏனையோரும் கலந்து கொள்கின்றார்கள். அப்போது பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும், "இவர் வரிதண்டுவோரோடும் பாவிகளோடும் விருந்துண்கின்றாரே" என்று முணுமுணுக்கத் தொடங்குகின்றார்கள். உடனேதான் இயேசு, "நோயற்றவருக்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்று கூறுகின்றார். இயேசு இந்த உலகத்திற்கு வந்ததே பாவிகளாகிய நம் ஒவ்வொருவரையும் மீட்பதற்காகத் தான் (லூக் 19: 10; 1 யோவா 1: 8- 10). இந்த உண்மையை உணராமல் பரிசேயக் கூட்டம் இருந்தது வேடிக்கையாக இருக்கின்றது.

ஆகவே, பாவிகளைத் தேடி மீட்க வந்த இயேசுவின் அன்பை உணர்ந்து, நம்முடைய பாவ வாழ்க்கையிலிருந்து விலகி, இயேசுவிடம் திரும்பி வருவோம், இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Maria Antonyraj, Palayamkottai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
மனமாற்றம் பெற்றவர்களாக வாழ்வோம்

பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெர்சிய நாட்டு மன்னர் இரண்டாம் பிரட்ரிக். அவர் ஒருமுறை மாறுவேடம் அணிந்துகொண்டு ஒரு ஞானியைப் போல பெர்லின் சிறையை வலம்வந்தார். அப்போது அங்கே இருந்த சிறைக்கைதிகளிடம் பேச்சுக்கொடுத்தார். அவர்கள் எல்லாருமே, "நாங்கள் எல்லாருமே குற்றமற்றவர்கள், ஒருதவறும் செய்யாதவர்கள்" நிரபராதிகள்" என்று முறையிட்டனர். ஆனால் அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரே ஒரு கைதி மட்டும், "நான் பெரிய திருடன், நான் செய்த திருட்டுவேலைக்கு இந்த தண்டனை சரிதான்" என்று தன்னுடைய தவற்றை ஒத்துகொண்டான். அதைப் பார்த்த ஞானி தோற்றத்தில் இருந்த அரசர், "இங்கே எல்லாரும் நல்லவர்கள், ஒரு பாவமும் செய்யாதவர்கள், அப்படி இருக்கும்போது இந்தக் கூட்டத்தில் ஒரே ஒரு குற்றவாளி மட்டும் இருந்தால் அவன் இந்தக் கூட்டத்தையே பாழாக்கிவிடுவான், எனவே அவன் இங்கே இருப்பது நல்லதல்ல" என்று சொல்லி அவனை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

விழுவது தவறல்ல, ஆனால் அதிலே வீழ்ந்து கிடப்பது தான் மிகபெரிய தவறு. இந்த நிகழ்விலே எல்லாரும் தங்களை நிரபராதி என்றே சொல்லிகொண்டார்கள், ஆனால் ஒரே ஒருவன் மட்டும் "தான் குற்றவாளி" என்று தன்னுடைய தவறை உணர்ந்து ஏற்றுக்கொண்டான். அதனால் விடுதலை செய்யப்பட்டான்.

பாவிகள் மனம்மாறவேண்டும் என்று அறிவித்து வந்த இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தில் வரிதண்டுபவரான மத்தேயுவை அழைத்தபோது, அவர் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தார். யூத சமூகத்தில் வரிதண்டுவது பாவம் என்றே கருதப்பட்டது. அத்தகைய சூழலில் இயேசு மத்தேயுவை அழைத்தபோது தான் செய்து வந்த (பாவத்)தொழிலை விட்டுவந்தார். மனம்திரும்பி வாழ ஒரு வாய்ப்பு எனக்கருதி அதை ஏற்றுக்கொண்டார்.
தவக்காலத்தில் இருக்கும் நாம் நம்முடைய தவறான வழிகளிலிருந்து திருப்பிவர முயற்சிப்போம். பாவிகளையே அழைக்கவந்தேன் என்று கூறும் இயேசுவிடம் நாம் நம்முடைய குற்றங்களை ஏற்றுக்கொண்டு மனம்திரும்பி வருவோம். ஆசி பெறுவோம்.
"கடவுளுக்கு ஏற்ற பலி நொறுங்கிய உள்ளமே" (திபா 51:17).

- Fr. Maria Antonyraj, Palayamkottai.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
நேர்மையாளர்களை அல்ல, பாவிகளை அழைக்க வந்த இயேசு

அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் ஒருமுறை ஒரு கனவு கண்டார். அதில் ஒரு பெரிய மக்கள் கூட்டத்திடையே அவர் கடந்து போவது போலவும், அவர் போகக் கூட்டத்தினர் வழிவிட்டு நிற்பது போலவும் கனவு கண்டார்.

அப்போது ஒருவன், "இவர் என்ன சாமானிய மனிதன் போலவே இருக்கிறார்?" என்றான் லிங்கனைப் பார்த்துவிட்டு. அதற்கு லிங்கன் அவரிடத்தில், "நண்பரே! கடவுள் சாமானியர்களையே விரும்புகிறார். அதனால்தான் உலகில் அதிகம் பேரைச் சாமானியர்களாக உருவாக்கி இருக்கிறார். அதனால் நானும் சாமானியனாகவே இருக்க விரும்புகிறேன்" என்றார்.

கடவுள் எளியவரை, வறியவரையே அதிகம் விரும்புகிறார் என்பதை மேலே உள்ள நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

நற்செய்தி வாசகத்தில் இயேசு வரிதண்டுபவராகிய மத்தேயுவைத் தன்னுடைய சீடராக அழைக்கின்றார். யார் இந்த வரிதண்டுபவர்(கள்)?, சமுதாயத்தில் அவர்களுடைய நிலையென்ன? என்பதை சிந்தித்துப் பார்த்துவிட்டு, அதன்பிறகு இந்த நிகழ்வு (மத்தேயுவின் அழைப்பு) நமக்குத் தரும் செய்தியென்ன என்று சிந்தித்துப் பார்ப்போம். யூதர்களை ஆட்சிசெய்து வந்த உரோமையர்கள் தங்களுடைய ஆளுகைக் கீழே இருந்த மக்களிடமிருந்து வரிவசூலித்து வந்தார்கள். அதற்கு ஒருசிலரை வரிதண்டுபவர்களாக நியமித்திருந்தார்கள். இந்த வரிதண்டுபவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை பணம்கொடுத்தே பெற்றிருந்தார்கள். ஆகவே, தாங்கள் பணம் கொடுத்த பெற்ற வேலையின் மூலமாக அதிகமாக இலாபம் சம்பாதிக்க நினைத்தார்கள்.

பதினான்கிலிருந்து அறுபத்து நான்கு வயதுள்ள ஒவ்வொரு ஆணும் வரிசெலுத்த வேண்டும், அதே போன்று பனிரெண்டிலிருந்து அறுபத்து நான்கு வயது வரையுள்ள பெண்களும் வரிசெலுத்த வேண்டும். எனவே, இந்த வரியையும் நிலத்தில் விளைகின்ற பொருள்களிலிருந்து கிடைக்கின்ற திராட்சை இரசம், கோதுமை, எண்ணெய் இவற்றின் ஐந்தில் ஒரு பங்கு வரியும், சாலைகளைப் பயன்படுத்துவதற்கான வரியையும் இதுபோன்ற பல்வேறு வரிகளையும் வசூலித்து வந்தார்கள். வரிவசூலிக்கும் போது ஒரு நிர்ணயம் கிடையாது. அவர்கள் நினைத்தது போன்று வசூலித்து வந்தார்கள். இதனால் வரிதண்டுவோர் யாவரும் கொள்ளையர்கள், நாட்டைக் காட்டிக்கொடுப்பவர்கள், துரோகிகள் ஆகியோருடன் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டார்கள். இவர்கள் தொழுகைக்கூடங்களிலும் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு இருந்தார்கள்.

இப்படி ஒரு பாவமான தொழிலைச் செய்துவந்த, பாவி என்று சமுதாயத்தால் கருதப்பட்ட மத்தேயுவைத்தான் இயேசு தன்னுடைய பணிக்காக அழைக்கின்றார். இயேசு அழைத்ததும் அவர் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்கிறார்.

இயேசு மத்தேயுவைத் தன்னுடைய பணிக்காக அழைத்தவுடன் அவர் செய்கின்ற காரியம்தான் நமது சிந்தனைக்குரியதாக இருக்கின்றது. மத்தேயு இயேசுவுக்கும் அவருடைய சீடர்களுக்கும் தன்னுடைய இல்லத்தில் விருந்தளிக்கின்றார். இத்தகைய செயல் அவர் முற்றிலுமாக மனம்மாறிவிட்டார் என்பதைத்தான் நமக்குச் சுட்டிக் காட்டுகின்றது. திருமுழுக்கு யோவான் சொல்வார், "நீங்கள் மனம்மாறியர்கள் என்பதை அதற்கேற்ப செயல்களால் காட்டுங்கள்" என்று (மத் 3:8) மத்தேயு தான் முற்றிலுமாக மனம்மாறி விட்டேன் என்பதை உணர்ந்துவதற்காக இயேசுவுக்கும் அவருடைய சீடர்களுக்கும் அங்கிருந்தவர்களுக்கும் விருந்தளிக்கின்றார்.

விருந்தின்போது இயேசு பரிசேயர்களுக்கு அளிக்கக்கூடிய பதில் இன்னும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கின்றது. இயேசு கூறுகின்றார், "மருத்துவர் நோயற்றவருக்கல்ல, நோயுற்றவருக்கே தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன்" என்று. ஆகவே, இயேசு இங்கு தன்னுடைய இலக்கு மக்கள் யாரென என்பதை மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றார். அதையே தன்னுடைய வாழ்விலும் செயல்படுத்துகின்றார். எளியோருக்கு நற்செய்தி அறிவித்தார், சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட பாவிகளை அரவணைத்தார்; பெண்களையும் விளிம்பு நிலையில் இருந்த மக்களையும் அன்போடு அரவணைத்துக்கொண்டார். இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையைத்தான் இயேசு இந்த மண்ணுலகத்தில் வாழ்ந்தார். இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது இயேசுவின் அன்பும் அக்கறையும் யார்மீது இருந்தது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

எனவே பாவிகளை ஏற்றுக்கொள்ளக் கூடிய இயேசுவிடம் நாம் நம்முடைய குற்றங்குறைகளை உணர்ந்து வருகின்றோ? அல்லது பாவ நிலையில் அப்படியே இருகின்றோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும். வரிதண்டுபவரான மத்தேயுவை இயேசு என்னைப் பின்பற்றி வா" என்று அழைத்த உடனே, தான் செய்துவந்த தொழிலையும், ஏன் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தார். அவரைப் போன்று அனுதினமும் நம்மை அழைக்கும் இயேசுவின் குரலுக்கு செவி மடுத்து அவர் பின்னால் செல்ல முன்வருவோம், அவருக்கு உகந்த மக்களாய் வாழ்வோம். அதன்வழியாக இறைவன் அளிக்கும் முடிவில்லா வாழ்வைக் கொடையாகப் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

என்னைப் பின்பற்றி வா

ஓர் ஊரில் ஞானமடைந்த ஜென் துறவி ஒருவர் இருந்தார். அவரிடத்தில் இளைஞன் ஒருவன் சென்று, தானும் ஞானம் அடைய வேண்டும் என்ற தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தினான்.

அதற்கு அந்த ஜென் துறவி, "உன்னிடத்தில் ஞானம் அடைவதற்கான ஆர்வம் அதிகமாக இருக்கிறது. அதே நேரத்தில் நிறைய எதிர்பார்ப்புகளும் இருக்கின்றன. எனவே நீ போய் உன்னுடைய எதிர்பார்ப்புகளை எல்லாம் விட்டுவிட்டு வா, அதன் பிறகு நீ ஞானம் அடையலாம்" என்றார்.

அந்த இளைஞனும் துறவியிடமிருந்து விடைபெற்றுச் சென்று, பல ஆண்டுகள் கடுந்தவம் புரிந்து, எதிர்பார்ப்புகளை எல்லாம் விட்டுவிட்டு, மீண்டுமாக ஜென் துறவியிடம் வந்தான். அவன் அவரிடம், "குருவே! நான் பல ஆண்டுகள் கடுந்தவம் செய்து, எதிர்பார்ப்புகளை எல்லாம் விட்டுவிட்டு, இப்போது உங்கள் முன்பாக வெறுமையாக நிற்கின்றேன்" என்றான். அதற்கு துறவி, "முதலில் போய் அந்த வெறுமையையும் விட்டெறிந்துவிட்டு வா" என்றார்.

துறவு வாழ்வுக்கு/ ஞானம் அடைவதற்கு எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டும் என்பதை இந்த நிகழ்வானது தெளிவாக எடுத்துரைக்கிறது. "துறந்துவிட்டோம் என்ற எண்ணத்தையும் துறப்பதுதான் உண்மையான துறவு" என்பார் வெ. இறையன்பு என்ற எழுத்தாளர்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் லேவியின் (மத்தேயுவின்) அழைப்பைக் குறித்து வாசிக்கின்றோம். ஆண்டவர் இயேசு சுங்கச்சாவடியில் வரிவசூலித்துக் கொண்டிருக்கும் லேவியிடம், "என்னைப் பின்பற்றி வா" என்கிறார். உடனே அவர் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்கிறார். இவ்வாறு அவர் ஒரு சீடன் என்பவன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றார்.

லூக்கா நற்செய்தி 14 :25,26 ஆகிய வசனங்களில் இயேசு கூறுவார், "என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது. தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்கமுடியாது" என்று.

ஆக, இயேசுவின் சீடர் என்பவர் மற்ற எல்லாரையும்விட, ஏன் எல்லாவற்றையும் விட இயேசுவுக்கு முன்னுரிமை தரவேண்டும். அதனைத் தான் லேவி என்னும் மத்தேயு செய்துகாட்டினார். இயேசு அவரை அழைத்தபோது எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தார்.
இயேசுவின் சீடர்களாக இருக்கக்கூடிய நாமும் மற்ற எல்லாரையும்விட, எல்லாவற்றையும் விட இயேசுவுக்கு முன்னுரிமை தருகிறோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

ஆனால் பல நேரங்களில் நாம் ஒப்பற்ற செல்வமாகிய இயேசுவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, உலக காரியங்களுக்கு அதிகமான முக்கியத்துவம் தருகிறோம்; இந்த உலகோடு நம்முடைய வாழ்வு முடிந்துவிடபோகிறது என்ற மனநிலையில் வாழ்கிறோம். இது தவிர்க்கப்பட வேண்டிய ஒரு காரியம்.

பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம் 3: 17,18 ஆகிய வசனங்களில் பவுலடியார் கூறுவார், "கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைவர்களாய் நடப்போர் பலர் உள்ளனர். அவர்களைப் பற்றி மீண்டும் மீண்டும் உங்களிடம் கூறியுள்ளேன். இப்பொழுதும் கண்ணீரோடு சொல்கிறேன். அழிவே அவர்கள் முடிவு; வயிறே அவர்கள் தெய்வம்; மானக்கேடே அவர்கள் பெருமை; அவர்கள் எண்ணுவதெல்லாம் மண்ணுலகைச் சார்ந்தவை பற்றியே. நமக்கோ விண்ணகமே தாய்நாடு; அங்கிருந்துதான் மீட்பராம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவாரெனக் காத்திருக்கிறோம்" என்று.

ஆகவே இயேசுவின் சீடர்களாக இருக்கும் நாம் ஒவ்வொருவரும் மற்ற எல்லாவற்றையும் விட இயேசுவுக்கும், விண்ணுலகு சார்ந்த காரியங்களுக்கும் முக்கியத்துவம் தருவோம். இறைவன் தரும் முடிவில்லா வாழ்வைப் பெறுவோம்.

Palayamkottai, Fr. Maria Antonyraj.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 5
=================================================================================

வேடிக்கையான கதை ஒன்று கேள்விப்பட்டிருப்பீர்கள்.

ஒரு ஏழைக்குடியானவன் தன் பண்ணையாரின் தோட்டத்தில் விறகு பொறுக்கச் செல்கின்றான். தனக்குரிய வேலையை முடித்துவிட்டு, விறகுகளும் பொறுக்கிக்கொண்டு வீடு திரும்புகிறான். விறகுக்கட்டு அழுத்திக் கொண்டே வருகிறது. விறகுக்கட்டையின் சுமையோடு அவன் தள்ளாடவும் செய்கிறான். சற்று நேரத்தில் அவன் பின்னாலயே ஒரு டிராக்டர் வரும் சப்தம். சற்றே திரும்பிப் பார்க்க அது தன் பண்ணையாரின் டிராக்டர் என்றதும் சந்தோஷம். தன்னையும் அதில் ஏற்றுக்கொள்ளுமாறு பண்ணையாரிடம் கேட்கின்றார். பண்ணையாரும் அவனை ஏற்றிக்கொள்கின்றார். சற்று தூரம் போனதும் பண்ணையார் திரும்பிப் பார்க்க, இவன் விறகுக்கட்டைத் தலையில் வைத்தவாறே நின்று கொண்டு பயணம் செய்வதைப் பார்க்கின்றார். "ஏம்ப்பா! அதைக் கொஞ்சம் கீழே இறக்கி வைச்சுட்டு சுகமா வரலாம்ல!" என்கிறார். "இல்லயா! எனக்கு நீங்க டிராக்டர்ல இடம் கொடுத்ததே சந்தோஷம். என் சுமை என்னோட போகட்டும்! இதையும் இறக்கி வச்சி நான் உங்களுக்குக் கஷ்டம் கொடுக்க வேணாம்!" என்று பதில் சொல்கிறான்.

"உன்னிடையே இருக்கும் நுகத்தை அகற்றிவிட்டு..." (எசாயா 58:9)

நேற்றைய முதல் வாசகத்தின் தொடர்ச்சியே நாளைய முதல் வாசகமும். நேற்றைய வாசகத்திலும் "நுகத்தின் பிணையல்களை அறுப்பதும் ... ... எவ்வகை நுகத்தையும் உடைப்பதன்றோ நான் தேர்ந்துகொள்ளும் நோன்பு" (எசாயா 58:6) என்று நாம் வாசித்தோம்.

இந்த ஏழைக்குடியானவனைப் போல வாழ்க்கை என்ற டிராக்டர் பயணத்தில் நாம் இறக்கி வைக்காமல் சுமந்து கொண்டு வரும் சுமைகள் நிறையவே இருக்கின்றன.

"நுகம்!"

இந்த வார்த்தை உழவு உலகின் வார்த்தை. ஏர் பிடித்து உழும்போது ஏரை மாடுகளோடு இணைக்கும் குறுக்குக் கம்பும், மாட்டு வண்டியின் வண்டிப்பகுதியை மாடுகளின் மேல், அல்லது ஒற்றை மாட்டின் மேல் இணைக்கும் குறுக்குக் கம்பும் தான் நுகம்.

நுகம் ஒரு மரக்கட்டை. மாடுகளையும் ஏரையும், மாடுகளையும் வண்டியையும் பிணைக்கும் ஒரு இணைப்புக் கோடு. மாடுகளுக்கும், வண்டிக்கும் தொடர்பை ஏற்படுத்தக் கூடியது நுகம் தான். சமஸ்கிருத வார்த்தையான "யோகா"விற்கும் "நுகம்" என்றே பொருள். அதாவது, யோகா தான் நம் உடலில் உள்ள ஆன்மாவையும், உடலுக்கு வெளியே இருக்கும் பெரிய ஆன்மாவான "பிரம்மாவையும்" இணைக்கிறது.

இந்த மாடுகள் என்ன நினைக்குமாம்? அன்றாடம் நுகத்தை தங்கள் கழுத்தில் வாங்கி வாங்கிப் பழக்கப்பட்டு, இந்த நுகங்களும் தங்களின் கழுத்தின் ஒரு பகுதி போல என்று நினைக்குமாம்! (மாடு நினைக்கிறது உனக்கு எப்படித் தெரியும் என்று கேட்காதீங்க!) அண்மையில் டிவியில் நாய்க்கான உணவு விளம்பரம் பார்த்தேன். அந்த விளம்பரத்தின் இறுதியில் - "இன்னும் மேம்படுத்தப்பட்ட சுவையோடு!" என்று போட்டார்கள். எனக்கு நானே கேட்டுக்கொண்டேன்: "மேம்படுத்தப்பட்ட சுவைன்னு யார் டேஸ்ட் பண்ணியிருப்பா?" - அத மாதிரிதான் இதுவும்! சரியா?

மாடுகளை எஜமானன் அல்லது அதன் உரிமையாளன் அடிமைப்படுத்தித் தன் வேலைக்குப் பயன்படுத்தும் ஒரு உபகரணமே நுகம். ஆக, நுகம் என்பது அடிமைத்தனத்தின் அடையாளம். செதேக்கிய அரசன் காலத்தில் பாபிலோனியா அடிமைப்படுத்தப்படும் என்பதை எரேமியா இறைவாக்கினர் கழுத்தில் நுகத்தைச் சுமந்து கொண்டு இறைவாக்கு உரைக்கும் நிகழ்வை நாம் அறிவோம் (காண்க. எரேமியா 27).

நுகம் இணைக்கிறது அப்படின்னு சொல்றோம்! பின் எப்படி இது அடிமைத்தனம் ஆகலாம்?

இதுதான் இன்றைய சிந்தனை.

மனிதர்கள் தங்களிலே நிறைவு இல்லாதவர்கள். ஏதாவது ஒன்றோடு அவர்கள் தங்களை இணைத்துக்கொண்டிருத்தலில் தான் தங்களின் நிறைவை அவர்கள் காண்கிறார்கள். நம் உள்ளத்தில் எப்போதும் ஒரு அநாதை உணர்வும், பாதுகாப்பற்ற உணர்வும் நீங்காமல் நிலைகொண்டுள்ளது. அதனால் தான் நாம் மற்றவர்களைத் தேடுகிறோம். மற்றவைகளோடு நம்மையே இணைத்துக்கொள்ள விரும்புகிறோம்.

தாயின் கருவறையில் நம்மைத் தாயோடு இணைக்கும் தொப்புள் கொடியும் ஒரு நுகம் தான். அதாவது, அது நம்மைத் தாயோடு இணைக்கிறது. ஆனால், அந்த நுகம் இருந்து கொண்டே இருந்தால் நல்லா இருக்குமா? சரியான நேரத்தில் தொப்புள் கொடி அறுக்கப்படவில்லையென்றால் அது தாய்க்கும், சேய்க்கும் ஆபத்தாக மாறிவிடுகின்றது. இந்த இணைப்பு அறுந்து வெளியே வரும்போது நாம் முதல் பாதுகாப்பற்ற உணர்வை அனுபவிக்கின்றோம். இந்த உணர்வின் வெளிப்பாடே கண்ணீர். இந்த உலகிற்குப் பயத்தோடே நாம் வெளியே வருவதால் தான் நாம் நம் கைகளைக் கூடி இறுக்க மூடிக்கொண்டு பிறக்கின்றோம். (இது ஒரு அதிசயம் தான்! ஏனெனில் கையை விரித்துக்கொண்டு பிறந்தால் நம் பிஞ்சு நகம் நம் பிறப்பின் குழாயைச் சேதப்படுத்தும் வாய்ப்பும் உண்டு!) பிறந்தபின் கைகளை விரிக்கும் நாம் எதையாவது பற்றிக்கொள்ளவே விரும்புகிறோம் - படிப்பு, பெயர், பணம், பொருள், புகழ், பக்தி, உறவு - ஒன்றை விட்டு மற்றொன்றை நாம் பிடித்து அவற்றோடு இணைத்துக்கொள்ள விரும்புகிறோம். அப்படி இருக்கும் இணைப்பு காலப்போக்கில் அடிமைத்தனமாகவும் மாறும்போதுதான் அது ஆபத்தாகி நம் மகிழ்வைக் குலைக்க ஆரம்பிக்கிறது.

எந்த நுகம் நம்மை இணைக்கிறதோ, அதே நுகம் நம்மை அடிமைப்படுத்தவும் செய்கிறது.

இதில் பிரச்சினை என்னன்னா? எந்த நுகம் நம்மை இணைக்கிறது, எந்த நுகம் நம்மை அடிமைப்படுத்துகிறது என்று நம்மால் கண்டுபிடிக்க முடிவதில்லை. சில நேரங்களில் இணைக்கும் நுகத்தை அடிமைத்தனம் எனவும், அடிமைத்தனத்தை நல்ல நுகம் என்று கூட நாம் நினைத்துவிடத் தொடங்குகிறோம்.

நுகம் நமக்கு வெளியில் தான் இருக்க வேண்டும் என்பதல்ல. நமக்கு உள்ளேயும் இருக்கலாம். நம் உள்ளத்தில் இருக்கின்ற எதிர்மறை உணர்வுகள், பயம், சின்னச் சின்ன இன்பங்களின் பின்னால் போகும் நிலையற்ற மனப்பக்குவம் என்று நம் உள்ளுக்குள்ளும் நுகங்கள் இருக்கலாம்.

இந்த நுகங்களை நாம் அடையாளம் காணுதலே அவைகளை அகற்றுவதற்கான முதல் படி.

இப்படி இருக்கும் நுகங்களை நாம் அகற்றிவிட்டால் அதன் பலன் என்ன என்பதை தொடர்ந்து எசாயா எழுதுகின்றார்:

"இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்.
ஆண்டவர் தொடர்ந்து உன்னை வழிநடத்துவார்.
வறண்ட சூழலில் உனக்கு நிறைவளிப்பார்.
உன் எலும்புகளை வலிமையாக்குவார்.
நீயும் நீர் பாய்ந்த தோட்டம் போலும்,
ஒருபோதும் வற்றாத நீரூற்று போலும் இருப்பாய்."
(எசாயா 58:10a-11)

- Fr. Yesu Karunanidhi, Madurai.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!