Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருநீற்றுப் புதன் வாசகம்

                     14  பெப்ரவரி 2018  
                                      ஆண்டின் பொதுக்காலம் 6ஆம் ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
 நீங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக்கொள்ளுங்கள்.

இறைவாக்கினர் யோவேல் நூலிலிருந்து வாசகம் 2: 12-18

ஆண்டவர் கூறுகிறார்: இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக்கொண்டு, உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்; நீங்கள் உங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக்கொண்டு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள். அவர் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்; நீடிய பொறுமையுள்ளவர், பேரன்பு மிக்கவர்; செய்யக் கருதிய தீங்கைக் குறித்து மனம் மாறுகின்றவர். ஒருவேளை அவர் தம் மனத்தை மாற்றிக்கொண்டு, உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு தானியப் படையலையும் நீர்மப் படையலையும் நீங்கள் அளிக்குமாறு உங்களுக்கு ஆசி வழங்குவார். இதை யார் அறிவார்?

சீயோனில் எக்காளம் ஊதி எச்சரியுங்கள்; புனிதமான உண்ணா நோன்புக்கென நாள் குறியுங்கள்; வழிபாட்டுப் பேரணியைத் திரட்டுங்கள். மக்களைத் திரண்டு வரச்செய்யுங்கள்; புனித கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்; முதியோரைக் கூடிவரச் செய்யுங்கள், பிள்ளைகளையும் பால் குடிக்கும் குழந்தைகளையும் ஒருசேரக் கூட்டுங்கள்; மணமகன் தன் அறையை விட்டு வெளியேறட்டும்; மணமகள் தன் மஞ்சத்தை விட்டுப் புறப்படட்டும்.

ஆண்டவரின் ஊழியர்களாகிய குருக்கள் கோவில் மண்டபத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையே நின்று அழுதவண்ணம், "ஆண்டவரே, உம் மக்கள்மீது இரக்கம் கொள்ளும்; உமது உரிமைச் சொத்தை வேற்றினத்தார் நடுவில் நிந்தைக்கும் பழிச்சொல்லுக்கும் ஆளாக்காதீர்" எனச் சொல்வார்களாக! "அவர்களுடைய கடவுள் எங்கே?" என வேற்றினத்தார் கூறவும் வேண்டுமோ? அப்பொழுது ஆண்டவர் தம் நாட்டின்மேல் பேரார்வம் கொண்டு தம் மக்கள் மீது கருணை காட்டினார்.


- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
 
பதிலுரைப் பாடல்திபா 51: 1-2. 3-4a. 10-11. 12,15 (பல்லவி: 1a)
=================================================================================

பல்லவி: ஆண்டவரே! இரக்கமாயிரும்; ஏனெனில் நாங்கள் பாவம் செய்தோம்.

1 கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். 2 என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். பல்லவி

3 ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்; என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது. 4ய உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்; உம் பார்வையில் தீயது செய்தேன். பல்லவி

10 கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதி தரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும். 11 உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். பல்லவி

12 உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும். 15 என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்; அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும். பல்லவி


================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
 கடவுளோடு ஒப்புரவாகுங்கள்; இதுவே தகுந்த காலம்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 20-6: 2

சகோதரர் சகோதரிகளே, நாங்கள் கிறிஸ்துவின் தூதுவர்களாய் இருக்கிறோம். கடவுளே எங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுக்கிறார். ஆகவே கடவுளோடு ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவின் சார்பில் நாங்கள் மன்றாடுகிறோம். நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்தார்.

நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட அருளை வீணாக்க வேண்டாம் என அவரோடு இணைந்து உழைக்கும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

"தகுந்த வேளையில் நான் உமக்குப் பதிலளித்தேன்; விடுதலை நாளில் உமக்குத் துணையாய் இருந்தேன்" எனக் கடவுள் கூறுகிறார். இதுவே தகுந்த காலம்! இன்றே மீட்பு நாள்!


- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
திபா 95: 8a, 7b

உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக்கொள்ளாதீர்கள்; மாறாக ஆண்டவரின் குரலைக் கேட்பீர்களாக. இவ்வாறு ஒவ்வொரு நாளும் தந்துள்ள வசனத்திற்குப் பதிலாக, தவக்காலம் ஐந்தாம் வாரத்திற்குப் பின் வரும் வசனங்களிலிருந்து ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தலாம். (காண்க: பக்கம் 349)
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-6,16-18

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள் முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள். இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். இல்லையென்றால் உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது.

நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப்பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள். வெளிவேடக்காரர் மக்கள் புகழ வேண்டுமென்று தொழுகைக்கூடங்களிலும் சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும். அப்பொழுது நீங்கள் செய்யும் தர்மம் மறைவாயிருக்கும்; மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.

நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது வெளிவேடக்காரரைப் போல் இருக்க வேண்டாம். அவர்கள் தொழுகைக்கூடங்களிலும் வீதியோரங்களிலும் நின்றுகொண்டு மக்கள் பார்க்கவேண்டுமென இறைவேண்டல் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

ஆனால் நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது உங்கள் உள்ளறைக்குச் சென்று, கதவை அடைத்துக்கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.

மேலும் நீங்கள் நோன்பு இருக்கும்போது வெளிவேடக்காரரைப் போல முகவாட்டமாய் இருக்க வேண்டாம். தாங்கள் நோன்பு இருப்பதை மக்கள் பார்க்க வேண்டுமென்றே அவர்கள் தங்கள் முகங்களை விகாரப் படுத்திக்கொள்கிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

நீங்கள் நோன்பு இருக்கும்போது உங்கள் தலையில் எண்ணெய் தேய்த்து, முகத்தைக் கழுவுங்கள். அப்பொழுது நீங்கள் நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாது; மாறாக, மறைவாய் இருக்கிற உங்கள் தந்தைக்கு மட்டும் தெரியும். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்கு ஏற்ற கைம்மாறு அளிப்பார்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
மறைவாய் உள்ளதை காணும் உங்களது தந்தை விரதி பலன் கொடுப்பார்.

மறைவாய் உள்ள யாவற்றையும் ஊடுறுவி காண்கிறவர் படைத்தவர்.

நல்லதும் அவருக்கு தெரியும் பாவமும் அவருக்கு தெரியும்.

அவருடைய பார்வையில் இருந்து எதுவும் மறைந்து போவதில்லை.

அவரை கேலி செய்யவோ, ஏமாற்றவோ யாராலும் இயலாது.

நல்ல காரியங்களுக்கு பிரதி பலன் கொடுப்பார் என்றால், தீமையான பாவ செயலுக்கு தண்டனை கொடுக்கவும் செய்வார் என்பதுவே உண்மை.

ஆனால் நல்லவற்றிற்கு கைம்மாறு வாழும் காலத்திலேயே கொடுக்கின்றவர், தண்டனையை காலம் தாழ்த்தி மனமாற்றத்திற்கான காலம் தந்து பொறுமையோடு காத்திருந்து செய்வார் என்பது தான் உண்மை.

அந்த ஏற்புடைய காலம் இதுவே.

அவருடைய மன்னிப்பின் காலம் இதுவே.

இந்த அற்புதமான அருளின் காலம் நிறைந்த பலன் தந்து, வாழ்வை சீராக்கட்டும், செம்மைப்படுத்தட்டும்.

நல்வாழ்த்துக்கள். செபங்கள். ஆசீர்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
உங்கள் முழு இதயத்தோடு ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள், அவரோடு எப்போதும் இணைந்திருங்கள்!

நகர்புறமிருந்த ஒரு பங்கில் பணியாற்றிய வந்த குருவானவர், ஒருநாள் இல்லங்களை சந்திக்க புறப்பட்டுச் சென்றார். ஒரு வீட்டிற்கு அவர் சென்றபோது, அங்கிருந்த வீட்டுத்தலைவர் ஆலயத்திற்கே வருவதில்லை என்பதும் அவர் அவ்வூரில் இருந்த பிரபல ரவுடி என்பதும் தெரியவந்தது. உடனே குருவானவர் அம்மனிதரிடம், "நீங்கள் ஆலயத்திற்கெல்லாம் வருவதுண்டா, ஏனென்றால், உங்களை நான் ஆலயத்தில் வைத்துப் பார்த்ததே கிடையாது" என்றார். அதற்கு அம்மனிதர், "எனக்கு ஆலயத்திற்கு வந்து ஜெபிப்பதில் எல்லாம் நம்பிக்கை இல்லை, நான் என்னுடைய இல்லத்திலேயே இருந்து ஜெபம் செய்துகொள்வேன் என்று மழுப்பலான பதிலைச் சொன்னார். உடன் குருவானவருக்கு, அந்த மனிதரிடம் ஆலயத்திற்கு வந்து ஆண்டவரோடு இணைந்து ஜெபிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவேண்டும் என்ற எண்ணம் பிறந்தது.

அந்நேரத்தில் குருவானருக்கு, அம்மனிதருடைய வீட்டில் சமையலுக்காக எரிந்துகொண்டிருந்த விறகு அடுப்பு கண்ணில் பட்டது. உடனே குருவானவர் அவரை அழைத்துக்கொண்டு போய் அந்த விறகு அடுப்பின் முன்பாக நிறுத்தினார். பின்னர் குருவானவர் அந்த அடுப்பிலிருந்து, ஒரு குறட்டினால் கொஞ்சம் கங்குகளை வெளியே எடுத்துப்போட்டார். அவை சிறிது நேரத்திலே வெப்பம் தணிந்து சாம்பலாக மாறியது. இவையெல்லாவற்றையும் அந்த மனிதர் கவனித்துக் கொண்டே இருந்தார். சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு குருவானவர் அவரிடத்தில் பேசத் தொடங்கினார், "இதோ பார், இந்த கங்குகள், எரிகின்ற நெருப்போடு இருந்தபோது பிரகாசமாக இருந்தன. எப்போது இவை நெருப்பிலிருந்து எடுக்கப்பட்டு, தனியாக வைக்கப்பட்டனவோ, அப்போதே இவை வெப்பம் தணிந்து சாம்பலாகிப் போயின" இவ்வாறு குருவானவர் அவரிடம் சொல்லிவிட்டு, தொடர்ந்து பேசினார். "இப்போது நான் உனக்குச் சொல்லக்கூடியவை புரியும் என்று நினைக்கிறேன். கங்குகள் நெருப்போடு இருந்தபோது பிரகாசமாக இருந்தது போன்று, நீயும் ஆலயத்திற்கு வந்து, ஆண்டவரோடு ஜெபத்திலும் தவத்திலும் இணைந்திருந்தால் உன்னுடைய வாழ்க்கை பிரகாசமாக இருக்கும். அதைவிடுத்து, ஆண்டவரை விட்டுப்பிரிந்து தனித்திருந்தால், நெருப்பிலிருந்து எடுக்கப்பட்ட இந்த கங்குகள் எப்படி, வெப்பம் தணிந்து சாம்பலாகியதோ, அது போன்று உன்னுடைய வாழ்க்கையும் சாம்பலாகிவிடும்".

குருவானவர் இவ்வாறு சொன்னது, அம்மனிதருக்குப் புரிந்தது. அன்றைக்கே அவர் தன்னுடைய வாழ்வை சுய ஆய்வுக்கு உட்படுத்தி, ஆலயத்திற்கு சென்று, ஆண்டவரோடு இணைந்திருக்கத் தீர்மானித்தார். என்றைக்கு அவர் ஆலயத்திற்கு சென்று, ஆண்டவரிடம் ஜெபிக்கத் தொடங்கினாரோ, அன்றைக்கே அவருடைய வாழ்க்கையில் மாற்றம் பிறந்தது. அப்போதிலிருந்தே அவர் புதிய மனிதராக வாழத் தொடங்கினார்.

ஆண்டவரோடு ஜெபத்திலும் தவத்திலும் இணைந்திருப்பதால், ஒருவருடைய வாழ்வில் எத்தகைய மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதை இந்த நிகழ்வானது நமக்கு அருமையாக எடுத்துக் கூறுகின்றது. இன்று தவக்காலத்தைத் தொடங்குகின்றோம். சாம்பல் புதனான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் நாம் ஆண்டவரோடு ஒப்புரவாகவேண்டும், அவரோடு இணைந்திருக்கவேண்டும் என்னும் செய்தியைத் தருகின்றன. நாம் எப்படி ஆண்டவரோடு ஒப்புரவாகி, அவரோடு இணைந்திருப்பது என்பதை வாசிக்கக்கேட்ட வாசகங்களின் வழியாக சிந்தித்துப் பார்ப்போம்.

இறைவாக்கினர் யோவேல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் "உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் வாருங்கள்" என்று சொல்வதாக நாம் வாசிக்கின்றோம். ஆம், நாம் ஒவ்வொருவரும் நம்முடைய குற்றம் குறைகளை உணர்ந்து திருந்தி, ஆண்டவரிடம் திரும்பவேண்டும். திரும்பி வருவதோடு மட்டுமட்டுமல்லாமல், இரண்டாம் வாசகத்தில் பவுலடியார் சொல்வது போன்று ஆண்டவரோடு ஒப்புரவாக வேண்டும், அவரோடு என்றும் இணைந்திருக்கவேண்டும். இதுதான் இந்தத் தவக்காலம் நமக்குச் சொல்கின்ற மேலான செய்தியாக இருக்கின்றது. இறைவனிடம் திரும்பி வரவேண்டும், அவரோடு ஒப்புரவாக வேண்டும் என்று சிந்திப்போம். இந்த ஒப்புரவுக்கு ஆண்டவர் இயேசு சொல்கின்ற மிகச் சிறந்த வழிமுறைதான் ஜெபமாகும்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு மூன்று முதன்மையான காரியங்களைக் குறித்துப் பேசுகின்றார். இம்மூன்று காரியங்களும் யூத மறையின் மூன்று முக்கியமான தூண்கள் ஆகும். இதில் இரண்டாவது வரக்கூடியது இறைவேண்டுதல் ஆகும். இறைவேண்டல், நம்மை இறைவனோடு ஒப்புரவாக்கி, அவரோடு நாம் என்றும் இணைந்திருப்பதற்கு இயேசு கிறிஸ்து சொல்கின்ற மிகச் சிறந்த வழிமுறையாகும் (அறச் செயல்கள் அயலாரோடும் நோன்பு நம்மோடு இணைந்திருப்பதற்கும் உதவி புரிகின்றன). இந்த தவக்காலத்தில் இறைவேண்டலுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்து, ஆண்டவரோடு இணைந்திருக்கின்றபோது, நாம் அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய ஆசிர் மிகுதியாகும்.

ஆகவே, இந்த தவக்காலத்தில் இறைவேண்டல் வழியாக இறைவனோடு எப்போதும் இணைந்திருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Maria Antonyraj, Palayamkottai.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
சாம்பற்புதன்

ஒவ்வொரு மனிதருக்குள்ளாக கடவுளின் சாயல், கடவுளின் உருவம் மறைந்து கிடக்கிறது. தொடக்க மனிதன் ஆதாமின் கீழ்ப்படியாமையால் நமது சாயலை, உருவத்தை இழந்துவிட்டோம். அந்த சாயல் நமக்குள்ளாக புதைந்து கிடக்கிறது. மறைந்துகிடக்கிறது. நமக்குள்ளாக புதைந்து கிடக்கிற, இந்த தெய்வீக பிரசன்னத்தை வெளிக்கொண்டு வருவதுதான், நம் வாழ்வின் இலட்சியமாக இருக்கிறது. இந்த புனித இலட்சியத்தை அடைய, விவிலியம் நமக்கு மூன்று வழிகளைக் கற்றுத்தருகிறது. செபம், தவம் மற்றும் தர்மம் என்கிற மூன்று வழிகள் மூலமாக, இந்த புனித இலட்சியத்தை நாம் அடையலாம். இதில் தான், இந்த தவக்காலத்தில் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும்.

தொடக்க காலத்தில், தலையான பாவங்கள் செய்தவர்கள், கடினமான ஒறத்தல் முயற்சியை தவக்காலத்தின் தொடக்கத்திலேயே ஆரம்பிக்க வேண்டும். இந்த ஒறுத்தல் முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கென்று நோன்பு உடை கொடுத்து, சாம்பல் தெளித்து, திருச்சபையிலிருந்து விலக்கிவைக்கும் வழக்கம் இருந்தது. இந்த நோன்பு உடை மற்றும் சாம்பல் தெளிக்கும் வழக்கமானது, பழைய ஏற்பாட்டு யோனா புத்தகத்தைச் சார்ந்ததாக இருக்கிறது. மனமாற்றம் தான், இந்த தவக்காலம் நமக்கு விடுக்கக்கூடிய அழைப்பு. நமது வாழ்வை மாற்றுவதற்காக இந்த நாட்களிலே சிந்திப்போம். நாம் செயல்படுத்த வேண்டிய, மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய வழிமுறைகளை யோசிப்போம். அதனை செயல்படுத்துவோம்.

ஒவ்வொரு தவக்காலமும் வெறும் சடங்கு, சம்பிரதாயமாக இருக்கக்கூடிய நிலைமை மாற வேண்டும். தவக்காலங்களில் மட்டும் கடின நோன்பு இருப்பதும், ஒறுத்தல் முயற்சி செய்வதும், தவக்காலம் முடிந்ததும், பழைய வாழ்வே கதி என்று கிடக்கக்கூடிய காலம் மாற வேண்டும். அந்த மாற்றத்திற்காக, நாம் பாடுபடுவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-------------------------------------------------------

பக்தி முயற்சிகள்

நோன்பு என்பது உன்னதமான ஒன்று. கடவுளோடு இணைந்திருக்க நம்மையே அடக்கி ஆள்வதற்கு உந்துசக்தியாக இருக்கிறது. நோன்பு என்பது பக்தியின் அடையாளம். அது வெளிவேடமாக, பக்தியின் பெயரால் நடத்தப்படும் நாடகமாக்கப்படுவதை இன்றைய நற்செய்தியில் இயேசு கண்டிக்கிறார். ஆண்டிற்கு ஒருமுறை பாவக்கழுவாய் நாளன்று, அனைத்து யூதர்களும் நோன்பிருக்க கட்டாயப்படுத்தப்பட்டனர். இது தவிர, சில பாரம்பரிய யூதர்கள் வாரத்திற்கு இரண்டுமுறை, திங்களும், வியாழனும் நோன்பிருந்தனர். இந்த இரண்டு நாட்களும்தான் சந்தை கூடும் நாள். எனவே, கிராமங்களிலிருந்தும், நகரங்களிலிருந்தும் யெருசலேமுக்கு மக்கள் அனைவரும் கூடும் நாட்கள், இந்த இரண்டு நாட்களாகும். பக்தியின் பெயரால் பகல் வேடம் போடும், ஒரு சில யூதர்கள் இந்த நாட்களை தங்களின் பக்தியை தம்பட்டம் அடிப்பதற்கு இந்த நாட்களை பயன்படுத்த ஆரம்பித்தனர். மற்றவர்கள் முன்னிலையில் தாங்கள் நோன்பிருக்கக்கூடியவர்கள் என்பதையும், அதனால் தாங்கள் உயர்ந்தவர்கள் என்பதையும் அவர்கள் பெருமைப்பாராட்டிக்கொண்டனர்.

தாங்கள் நோன்பிருப்பது மற்றவர்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக, தங்களது தலைமுடியை சீவாமல் வாட்டமாக முகத்தை வைத்துக்கொண்டனர். அழுக்கடைந்த ஆடைகளை உடுத்தினர். தாங்கள் சோகமாக இருக்கிறோம் என்பதைக் காட்டிக்கொள்ள முகத்தில் வெள்ளை வண்ணம் பூசிக்கொண்டனர். இது அப்பட்டமான பக்தியின் வெளிவேடம். நோன்பு என்பது ஒறுத்தல் முயற்சி. தற்பெருமைக்காக அல்ல, மாறாக, உணர்வுகளை அடக்கி ஆளவும், அதன் வழியாக கடவுளோடு நெருங்கி வரவும்தான். தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளவும், தங்களை முன்னிறுத்தவும், தங்களை பெருமைப்பாராட்டிக்கொள்ளவும் செய்கின்ற அனைத்துமே, அது வெளிப்புறத்தில் மக்களால் பாராட்டப்பட்டாலும், கடவுள் முன்னிலையில் அருவருக்கத்தக்கவை.

இன்றைய நவீன உலகில், ஒவ்வொருவருமே தங்களது பெருமைபாராட்டுகின்ற செயல்பாடுகளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் தருகின்றனர். ஆண்டவரின் மகிமையைப் பறைசாற்றவும், கடவுளோடு நெருங்கி வரவும் நாம் எடுக்கும் முயற்சிகள் மிகவும் சொற்பமாக இருக்கின்றன. கடவுளைப் புகழ்ந்தேத்துவதும், அவரோடு நெருங்கிவரவும், நமது பக்தி முயற்சிகள் உதவியாக இருக்கட்டும்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

எதிர்பார்ப்பு இல்லாத உதவி

இயேசு கைம்மாறு, வெகுமதி பற்றி பேசும்போது, இந்த உலகம் சார்ந்த பொருட்செல்வத்தைப்பற்றிப் பேசவில்லை. பழைய ஏற்பாட்டில், செல்வமும், வெகுமதியும் பெற்றவர்கள், நல்லவர்களாகக் கருதப்பட்டனர். அதிகமான குழந்தைச் செல்வத்தைப் பெற்றவர்கள், அறுவடை நிறைவாகப் பெற்றவர்கள் அனைவருமே, கடவுளின் ஆசீரைப் பெற்றவர்களாக மக்கள் நினைத்தனர். யோபு புத்தகத்திலும், இந்த கருத்துதான் மீண்டும், மீண்டும் வலிறுத்தப்படுகிறது. யோபு தான் தவறு செய்யவில்லை என்று தன்னுடைய நண்பர்களிடத்தில் சொன்னாலும், அவருடைய நண்பர்கள் அந்த கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால், நல்லவர்கள் என்றுமே கடவுளின் அருளைப்பெற்று வாழ்வர் என்பது அவருடைய நண்பர்களின் வாதம். இயேசு அப்படிப்பட்ட கருத்தை நிச்சயம் சொல்லியிருக்க மாட்டார். ஏனென்றால், ஏழைகளோடு, ஒடுக்கப்பட்டவர்களோடு, அடிமைப்படுத்தப்பட்டவர்களோடு நெருங்கிப்பழகியவர் இயேசு கிறிஸ்து.

அப்படியானால், இயேசு சொன்ன செய்தியின் பொருள் என்ன? இயேசு கைம்மாறு என்று எதனைக் குறிப்பிடுகிறார்? மக்கள் எதையும், நாம் இப்போது கொடுத்தால், பிற்காலத்தில் கடவுள் நமக்குக் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்போடு கொடுத்தால், அவர்களுக்குரிய கைம்மாறு ஏற்கெனவே கிடைத்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். மாறாக, கொடுப்பதை வாழ்வு அனுபவமாக, அன்பு அனுபவமாக எதையும் எதிர்பாராமல் கொடுப்பவர்களுக்கு நிச்சயம் கடவுள் ஏராளமானவற்றைக் கொடுப்பார். கொடுத்தால் நமக்கு கிடைக்கும் என்ற எண்ணத்தோடு நாம் கொடுக்கக்கூடாது. எதையும் எதிர்பாராமல் கொடுப்பவர்களுக்கு கடவுள் நிச்சயம் கொடுப்பார்.

இந்த உலகத்தில் கொடுக்கிறவர்கள் அனைவருமே எதையாவது எதிர்பார்த்துதான் கொடுக்கிறார்கள். பிள்ளைகள் முதல் பெற்றோர் வரை இத்தகைய மனநிலை தான் நீடித்துவருகிறது. எப்போது எதிர்பார்க்காமல் கொடுக்கக்கூடிய மனநிலை வருகிறதோ, அப்போதுதான் கடவுளின் ஆசீர் நமக்கு நிறைவாகக் கிடைக்கும்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

கைம்மாறு காணாத வாழ்வு

கைம்மாறு என்கிற வார்த்தைக்கு இயேசுவின் போதனையில் என்ன இடம்? துன்பப்படுவதும், விழுமியங்களுக்காக, நல்லவற்றிற்காக குரல் கொடுப்பது வெறும் கைம்மாறு பெறுவதற்காகத்தானா? என்ற கேள்வி நமக்குள்ளாக எழலாம். மத்தேயு 5: 12 சொல்கிறது: "விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்". மத்தேயு 10: 42 "இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்". மத்தேயு 25 வத அதிகாரத்திலும், கைம்மாறு பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. இயேசு சொன்னதன் அர்த்தம் தான் என்ன?

இயேசு நிச்சயம் கைம்மாறு பெறுவதற்காக நல்ல வாழ்வு வாழ சொல்லியிருக்க மாட்டார். ஒன்றை எதிர்பார்த்து செய்வது நிச்சயம் சரியானதாக இருக்காது. கைம்மாறு எதிர்பார்க்காமல் செய்வது தான் இயேசு விடுக்கும் அழைப்பு. வாழ்வில் துன்பங்களும் துயரங்களும் வந்தாலும், அதற்கு பயந்துவிடாமல், கைம்மாறு கிடைக்கிறதோ இல்லையோ, அதைப்பற்றி எதிர்பார்க்காமல், வாழ்வை நிறைவோடு வாழ்வதுதான் சரியான பார்வையாக இருக்க முடியும் என்பது இயேசு தரும் பாடம். கைம்மாறு எதிர்பார்த்து வாழ்வது உண்மையான கிறிஸ்தவ வாழ்வு அல்ல. எதையும் எதிர்பார்க்காது, வாழ்வை நேர்மையோடு, துணிவோடு, உண்மைக்கு குரல் கொடுக்கும் நல்ல மனச்சான்றோடு வாழ்வதுதான் சரியான பார்வை.

இந்த உலகம் எதிர்பார்க்கும் உலகம். எதையும் எதிர்பார்த்துதான் எதையும் செய்யும். கைம்மாறு இல்லையென்றால் மற்றவரை ஒதுக்கிவிடும். இத்தகைய உலகத்தில் வாழும் நாம் எப்படி, கைம்மாறு கருதாத வாழ்வு வாழப்போகிறோம். சிந்திப்போம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்
=======================

2 அர 2: 1, 6-14
மத் 6: 1-6, 16-18

வெளிவேடம் தவிர்ப்போம்!


இறைவேண்டல், தர்மம் செய்தல் போன்ற அன்பு, அறப் பணிகள், நோன்பிருத்தல்... இவை மூன்றும் அனைத்து சமயங்களிலும் முதன்மை பெற்ற ஆன்மீகச் செயல்பாடுகளாக அமைந்திருக்கின்றன. ஆண்டவர் இயேசுவும் தம் சீடர்களிடமும், தம்மைப் பின்பற்றும் மக்கள் கூட்டத்திடமும் இவற்றை வலியுறுத்துகிறார்.

ஆனால், முகாமையான ஒரு வன்கட்டோடு, அதாவது நிபந்தனையோடு... வேண்டுதல், தர்மம், நோன்பு - மூன்றும் வெளிவேடமின்றி நிகழவேண்டும். பிறர் பார்க்க வேண்டும், பிறரின் பாராட்டைப் பெறவேண்டும், நல்ல பெயர் வாங்கவேண்டும் என்னும் நோக்கத்தோடு இவற்றைச் செய்யும்போது, அங்கே வெளிவேடம் புகுந்துவிடுகிறது. உள்நோக்கம் நுழைந்துவிடுகிறது. பாராட்டும், நற்பெயரும் கிடைக்கும்போது, உள்நோக்கம் நிறைவேறிவிடுகிறது. எனவே, இறையாசி தவறிவிடுகிறது.

எனவே, இவை மூன்றையும் மறைவாக, பிறருக்குத் தெரியாமல், இறைவனுக்கு மட்டுமே உணர்கின்ற வகையில் ஆற்றுவோம். இறைவனின் பாராட்டை, ஆசிகளைப் பரிசாகப் பெறுவோம்.

மன்றாடுவோமாக: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். வெளிவேடமற்ற, உள்நோக்கமற்ற நேர்மையான உள்ளத்தை எங்களுக்குத் தாரும். எங்கள் செபம், செயல், ஆன்மீகம் அனைத்தும் உமக்கு மட்டுமே புகழ் தரும் செயல்களாக அமைவனவாக, ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

---------------------------------

கைம்மாறு

மத்தேயு நற்செய்தியாளர் "கைம்மாறு" என்கிற வார்த்தையை இன்றைய நற்செய்தியில் பலமுறை பயன்படுத்துகிறார். நாம் செய்கிற அறச்செயல்கள் ஒவ்வொன்றிற்கும் ஏற்ப இறைவன் கைம்மாறு தருவார் என்பதுதான் இங்கே கொடுக்கப்படுகிற செய்தி. தன்னுடைய நற்செய்தியிலே "கைம்மாறு" என்கிற வார்த்தைக்கு, மத்தேயு அதிக அழுத்தும் கொடுப்பதையும் ஆங்காங்கே நாம் பார்க்க முடிகிறது. மத்தேயு5: 11 12 "என்பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து துன்புறுத்தி, உங்களைப்பற்றி இல்லாதவை பொல்லாதவை எல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்". மத்தேயு10: 42 "இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார்". மத்தேயு 25 வது அதிகாரத்தில் இறுதித்தீர்ப்பிலும், தேவையில் இருப்பவர்களுக்கு உதவுகின்ற உள்ளங்களுக்கு, கடவுள் கைம்மாறு தருவார் என்கிற செய்தி அழுத்தமாகச் சொல்லப்பட்டுள்ளது. கைம்மாறு என்றால் என்ன? கிறிஸ்தவ வாழ்வு வெறும் கைம்மாறு பெறுவதற்கான வாழ்வுதானா? இந்த உலகவாழ்வில் மக்கள் செய்கிற செயலுக்கு கைம்மாறு எதிர்பார்க்கிறார்கள். இறைவனும் இந்த உலக நியதியைத்தான் பின்பற்றுகிறாரா? என்ற கேள்விகள் நம் மனதில் எழாமல் இல்லை. இயேசு கூறுகிற "கைம்மாறு" என்கிற வார்த்தையின் உண்மையான அர்த்தத்தை கிறிஸ்தவ மனநிலையோடு நாம் புரிந்துகொண்டால் இந்தக்கேள்விகளுக்கு நம்மால் பதில் தரமுடியும்.

பொதுவாக, கைம்மாறு என்றால் "பிரதிபலன், பதில்உதவி, நன்றிக்கடன்" என்று பொருள்படுத்தலாம். அதாவது ஒருவர் செய்த உதவிக்கு, அதாவது அவர் செய்த உதவியை ஊக்கப்படுத்தும்விதமாக பணமோ, பதவியோ, பொருளோ அல்லது தேவையான ஏதாவது ஒன்றோ கொடுப்பதின் பெயர் தான் கைம்மாறு. இங்கே நற்செய்தியிலே சொல்லப்படுகிற கைம்மாறு, உலகக்கண்ணோட்டம் தொடர்பான பணமோ, பதவியோ, பொருளோ அல்ல. மாறாக, மனநிறைவு. ஏழைகளுக்காக, எளியவர்களுக்காக, அடிமைப்பட்டு நொறுக்கப்படுகிற மக்களுக்காக உழைக்கிற ஒவ்வொரு மனிதருக்கும் இயேசு தருவது இத்தகைய மனநிறைவான வாழ்க்கையைத்தான். அதுதான் நிம்மதியான வாழ்க்கை.

நம்முடைய அன்றாடவாழ்வில் மனநிறைவை பணத்திலும், பதவியிலும், பொருட்களிலும் தேடிக்கொண்டிருக்கிறோம். எனவேதான், வாழ்வில் நிம்மதியின்றி அலைந்துகொண்டிருக்கிறோம். தர்மம், இறைவேண்டல், நோன்பு மூலமாக இறைவன் தரும் கைம்மாறான மனநிறைவைப்பெறுவதற்கு முயற்சி எடுப்போம். நிம்மதியான வாழ்வு வாழ இறையருள் மன்றாடுவோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

-------------------------------------------------------------

"வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும்"

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

இன்று சாம்பல் புதன். "மனிதனே நீ மண்ணாய் இருக்கிறாய் மண்ணுக்கே திரும்புவாய்" என்பதை நினைவுபடுத்ததும் நாள். இவ்வுலகில் நாம் செய்யும் ஆர்பாட்டங்கள் ஏராளம். ஒரு நொடிப்பொழுது நாம் நினைத்துப்பார்த்தால் நாம் செய்யும் ஆர்பாட்டங்கள் தேவையற்றது என உணரலாம். தவக்காலம் அருளின் காலம். இந்த நாற்பது நாட்களும் கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழாவிற்காக நம்மைத் தயரிக்க கொடுக்கப்பட்டிருக்கும் காலம். நம் வாழ்வைச் சீர்தூக்கிப்பார்த்து தீயவைகளை புறம் தள்ளவும் நல்லவைகளை நாடிச்செல்லவும் அழைக்கும் காலம். நமது ஜெபத்தாலும் தவமுயற்சிகளாலும், அருள்வாழ்வாலும் நம்மை இறைவனோடும் பிறரோடும் ஒப்புறவாக்கிக்கொள்ளும் காலம்.

நற்செயல்கள் தவக்காலத்தில் மட்டுமல்ல எப்பொழுதும் செய்ய வேண்டும். அந்த நற்செயல்களும் விளம்பரத்திற்காகவோ அல்லது பிறர் போற்றவேண்டும் என்பதற்காகவோ புகழுக்காகவோ செய்வது ஏற்புடையதல்ல. ஆலயங்களில் சிலர் குளல் விளக்குகள் (டியுப் லைட்) வாங்கிவைப்பார்கள். விளக்கை விட அதில் பெயர்கள் பெரிதாகப் பொறிக்கப்பட்டிருக்கும். இன்றய நற்செய்தி இவர்களைப் போன்றோருக்கு இயேசு கொடுக்கும் சாட்டையடி.

அறம் செய்வோம். நற்செயல்கள் செய்வோம். தர்மம் செய்வோம். பலனை எதிர்பார்த்து அல்ல, நற்பெயருக்காக அல்ல, புகழுக்காக அல்ல. கடவுளின் மாட்சிக்காக, இறையரசு மண்ணில் மலர.

இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

:--பணி மரியதாஸ்



திருநீற்றுப் புதன் - தவக்காலத்தைத் தொடங்குவோம் ... !

இன்று தவக்காலம் தொடங்குகிறது. நோன்பு, அறச் செயல்கள், இறைவேண்டல் என்னும் முப்பெரும் தவச் செயல்களில் ஈடுபட இன்றைய வாசகங்கள், குறிப்பாக நற்செய்தி வாசகம் அழைப்பு விடுக்கிறது.

அதே வேளையில், இந்த தவச் செயல்கள் வெளிவேடமாக மாறிவிடக் கூடாது என்று எச்சரிக்கிறார் ஆண்டவர் இயேசு. காரணம், இவற்றின் வழியாக பிறரின் பாராட்டையும், மதிப்பையும் பெற்றுவிட்டால், அதுவே இத்தவச் செயல்களின் பலன்களை வீழ்த்திவிடுகிறது. பரிசேயர்கள் இவ்வாறுதான் இறையருளை இழந்தனர் எனச் சுட்டிக்காட்டுகிறார் இயேசு.

மறைவாய் உள்ள வானகத் தந்தைக்குத் தெரியும் வண்ணம் மட்டும் நமது தவச் செயல்கள் அமையட்டும். அத்துடன், இத்தவச் செயல்கள் தம்மிலே நிறைவுதரக் கூடியவை அல்ல. நமது மனமாற்றத்தின், இறைவனிடம் திரும்பி வருவதன் அடையாளமாகவே இச்செயல்களை நாம் செய்கின்றோம். எனவே, நமது வாழ்விலும், நடத்தையிலும் மாற்றம் இல்லாமல், வெறுமனே இத்தவச் செயல்களை நாம் செய்வோமானால், அச்செயல்களுக்குரிய கைம்மாறு மட்டுமே நமக்குக் கிடைக்கும். இறைவனின் பேரன்பும், இரக்கமும், ஆசியும் நமக்குக் கிடைக்காது.

எனவே, இத்தவக்காலத்தை நல்ல மனநிலையுடன் தொடங்குவோம். இன்று உண்ணாநோன்பிருந்து, இறைவேண்டுதல் செய்து, அன்புச் செயல்களில் ஈடுபட்டு, தந்தை இறைவனை நெருங்கி வருவோமாக.

மன்றாடுவோம்: இரக்கமும், பேரன்பும் நிறைந்த இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். நாங்கள் இன்று தொடங்கும் தவக்காலம் உமது அருளின் காலமாக அமையட்டும். இந்நாள்களில் நாங்கள் உமது இரக்கத்தையும், மன்னிப்பையும் நிறைவாகப் பெற்று, தந்தை இறைவனின் திருவுளத்திற்குப் பணிந்து வாழும் வரத்தைத் தந்தருளும்! உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா



இணையதள உறவுகளே

இன்று தவக்காலத்தை தொடங்குகிறோம். இறைவனின் அன்பையும் இரக்கத்தையும் எண்ணிப்பார்க்கும் காலம். உலகில் நடைபெறும் பாவச்செயல்களையும் குற்றங்களையும் நினைத்து மனம் வருந்தும் காலம். கொஞ்ச நேரம் கண்ணை ழூடி, இன்று உலகில் நடைபெறும், நடைபெற்ற பாவங்கள், குற்றங்கள், திட்டமிட்ட தவறுகள் இவைகளை நினைத்துப் பாருங்கள். கணக்கிட முடியாது. கற்பனை செய்ய முடியாது. அவ்வளவு பயங்கரம். அவ்வளவு கொடூரம். அவ்வளவு அயோக்கியத்தனம்.

ஒவ்வொரு தனி மனிதனும் சிறிது பெரிதாக செய்கின்ற தவறுகள் ஏராளம் ஏராளம். நீங்கள் உங்களுக்கு எதிராக, கணவன் மனைவி மக்களுக்கு எதிராக இன்றைக்குச் செய்த மிகச் சிறிய தவறுகள் குற்றங்கள் எத்தனை. இப்படி உலகம் எங்கும் எத்தனை ஒவ்வொரு நாளும் நடந்துகொண்டு இருக்கின்றன.

இந்த நாற்பது நாட்களும் இந்த தவறுகளைத் தவிர்த்து, புனிதமான சிந்தனையும் செயலும் நம்மில் அதிகமாக்கிட வேண்டும். ஆண்வரோடு உள்ள உறவை அதிகமாக்க, செபம், கோயில், வழிபாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். கூடுதலாக சில அன்புச் செயல்கள். தான தர்மங்கள், ஏழைகளுக்கு உதவுதல் செய்யுங்கள். உங்களின் சில ஆசைகளை அடக்கி, தேவைகளைக் குறைத்து, நோன்பிருந்து அந்த சேமிப்பை உங்களது நலத்திட்டமாக உதவுங்கள். தவக்காலம் அருளின் காலமாக உங்களுக்கு அமையும்.

-ஜோசப் லீயோன்

-------------------------

மனந்திரும்பும் காலம் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இன்று சாம்பல் புதன். தவக்காலத்தின் தொடக்கம். நம் நெற்றியில் சாம்பல் பூசப்பட்டு நாம் மண்ணுக்குரியவர்கள் என நினைவூட்டப்படும் நாள். தவக்காலம் என்பது மகிழ்வின் காலமா, துயரத்தின் காலமா? இரண்டும் கலந்த காலம். நமது வாழ்வை ஆய்வு செய்து, தீமைகள், தவறுகள், பாவங்களை இனம் கண்டு, அதற்காக வருந்தும் காலம். எனவே, நாம் சில தவ முயற்சிகளைச் செய்ய அழைக்கப்படுகிறோம். குறிப்பாக, நோன்பிருந்து, நம்மையே ஒறுத்து, வாழ்வின் இன்பங்கள் சிலவற்றை இழக்க முன்வர அறைகூவல் விடப்படுகிறது. ஆனால், அதே நேரத்தில் தவக்காலம் என்பது மகிழ்வின் காலம், காரணம் அது அருளின் காலம், ஆண்டவரின் இரக்கத்தின் காலம். இறைவன் நம்மீது சிறப்பான பரிவு கொண்டு, நம் வாழ்வை அவருக்கேற்றதாக மாற்ற, சிறப்பான அருள்வரங்களைப் பொழியும் காலம் இத்தவக்காலம். எனவே, நாம் மகிழ்வோம். மீட்பின் காலம் இதுவே, அருளின் காலம் இதுவே. இத்தவக்காலத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்போம். நாற்பது நாள்களையும் அருளின் நாள்களாக செலவழிக்க உறுதிபூணுவோம்.

மன்றாடுவோம்: இரக்கத்தின் நாயகனே ஆண்டவரே, இத்தவக்காலம் என்னும் கொடைக்காக உமக்கு நன்றி கூறுகிறோம். இந்த நாள்களில் நீர் எங்கள்மீது பொழியவிருக்கிற சிறப்பான பேரன்புக்காக, இரக்கத்துக்காக நன்றி கூறுகிறோம். இறைவா, இந்த நாள்களை நாங்கள் பலனுள்ள விதத்தில் செலவழிக்க உமது அருளை, ஆற்றலை எங்களுக்குத் தாரும். உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருள்தந்தை குமார்ராஜா

---------------------------------

"இயேசு, "நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப் பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள்.
வெளிவேடக்காரர் மக்கள் புகழ வேண்டுமென்று தொழுகைக் கூடங்களிலும்
சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர்" என்றார்" (மத்தேயு 6:2)

சிந்தனை
-- மத்தேயு நற்செய்தியில் இயேசு வழங்கிய "மலைப் பொழிவு" மைய இடம் பெறுகிறது (மத் 5:1-7:29). முற்காலத்தில் மோசே இஸ்ரயேல் மக்களுக்குக் கடவுளின் திருச்சட்டத்தை அறிவித்ததுபோல, இயேசு உலக மக்கள் அனைவருக்கும் இறையாட்சி பற்றிய நற்செய்தியை "அதிகாரத்தோடு" அறிவித்தார் (மத் 7:29). இயேசுவை நம்பி ஏற்போரிடத்தில் துலங்க வேண்டிய பண்புகள் யாவை? யூத சமயத்தில் முக்கியமான அறநெறியாகக் கருதப்பட்ட நோன்பு, இறைவேண்டல், ஈகை ஆகியவை எத்தகைய மனநிலையோடு செய்யப்பட வேண்டும்? இக்கேள்விகளுக்கு இயேசு "மலைப் பொழிவின்" போது பதில் வழங்கினார். இயேசு வாழ்ந்த காலத்தில் ஏழை மக்கள் பலர் இருந்தார்கள். ஆனால் அவர்களது தேவையை நிறைவேற்ற அரசு திட்டங்கள் இருக்கவில்லை; இலவச மருத்துவ வசதி, சத்துணவுத் திட்டம், தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டுத் திட்டம் போன்றவை நடைமுறையில் இல்லை. நிலைமை இவ்வாறிருந்ததால் பல மக்கள் பிறரிடம் கையேந்தி உதவிபெற்றுத்தான் வாழ வேண்டியிருந்தது. எனவே, தர்மம் செய்வது உயர்ந்த பண்பு எனவும், தர்மம் செய்யாதிருப்பது தவறு எனவும் திருச்சட்டம் இஸ்ரயேலருக்கு உணர்த்தியது.

-- இப்பின்னணியில்தான் இயேசு மக்கள் எவ்வாறு தர்மம் செய்ய வேண்டும் என எடுத்துக் கூறுகிறார். பிறருக்கு நான் தாராள உள்ளத்தோடு உதவினாலும் அதனால் பிறர் என்னைப் புகழ்ந்து பாராட்ட வேண்டும் என நான் விரும்பி அவ்வாறு செய்தால் எனக்குக் கைம்மாறு ஏற்கெனவே கிடைத்துவிட்டது. அவ்வாறு நான் செய்யும் உதவி வெறும் "வெளிவேடம்" என இயேசு கூறுகிறார். தர்மம் செய்வது தன்னிலேயே நல்ல செயல்தான். ஆனால் எந்த நோக்கத்தோடு அதைச் செய்கிறோம் என நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பிறர் நம்மைப் புகழ வேண்டும் என்பது நமது நோக்கமாக இராமல் கடவுள் நம் செயலைப் பார்க்கிறார், அதுவே நமக்குப் போதும் என நாம் செயல்பட வேண்டும். அப்போது கடவுள் நமக்குக் கைம்மாறு வழங்குவார். அவரது கைம்மாறு கிடைக்கும் என்பதற்காகவன்றி, நாம் செய்யும் தர்மம் கடவுளுக்கு உகந்தது எனவும் பிறருக்கு நலம் பயப்பது எனவும் நமக்குத் தெரிந்தால் அதுவே போதும் என இயேசு நமக்குக் கற்பிக்கிறார்.

இறைவாக்கு
இறைவா, பிறருக்கு உதவும் வேளையில் நாங்கள் தன்னலம் நாடாது செயல்பட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

------------

"இயேசு, "மக்கள் பார்க்கவேண்டுமென்று அவர்கள்முன்
உங்கள் அறச்செயல்களைச் செய்யாதீர்கள்" என்றார்" (மத்தேயு 6:1)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- நோன்பு இருத்தல், இறைவேண்டலில் ஈடுபடுதல், தர்மம் செய்தல் ஆகியவை தலைசிறந்த அறச்செயல்களாகக் கருதப்பட்டன. இயேசு இச்செயல்களின் மதிப்பையோ தேவையையோ சிறப்பையோ மறுத்துக் கூறவில்லை. அன்றுபோல இன்றும் நோன்பு, இறைவேண்டல், ஈகை ஆகிய நற்செயல்கள் மனிதருக்குத் தேவையே. ஆனால் இயேசு அறச்செயல்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்ற அதே நேரத்தில் நாம் அச்செயல்களைச் செய்து பிறருடைய பாராட்டுதலையும் புகழ்ச்சியையும் எதிர்பார்க்கின்ற மனநிலை கொண்டிருப்பது சரியல்ல என உணர்த்துகின்றார். நோன்பிருப்போர் பிற மனிதரின் பசியைப் போக்கும் எண்ணம் கொண்டுள்ளனரா? இறைவேண்டல் செய்வோர் பிறருக்காகக் கடவுளை மன்றாடுகின்றனரா? தர்மம் செய்வோர் பிறருக்கு உதவுகின்ற மனநிலை கொண்டிருக்கிறார்களா? இக்கேள்விகளுக்கு நாம் "ஆம்" எனப் பதில் இறுக்க முடிந்தால் அறச்செயல்கள் நமக்கு நன்மை கொணரும்; கடவுளின் அருளை நாம் அடைந்திட வழியாகும்.

-- இதற்கு நேர்மாறாக, நாம் புரிகின்ற "அறச்செயல்கள்" வெளிவேடமாக இருந்தால் அவற்றால் ஒருவேளை பிறர் நலமடைந்தாலும் நாம் நலமடையப் போவதில்லை. கடவுள் நம் உள்ளத்தில் உறைபவர்; அவர் நம் உள்ளத்தைத் துருவி அறிபவர். எனவே கடவுளின் பார்வையில் நாம் நல்ல மனிதராக இருந்திட வேண்டும் என்றால் நம் உள்ளத்தில் தூய்மையும் நேர்மையும் ஓங்கி விளங்க வேண்டும். அதே நேரத்தில் நாம் புரிகின்ற அறச்செயல்கள் பிறருடைய நன்மைக்காகக் செய்யப்பட வேண்டும். அப்போது நாம் தொடங்குகின்ற தவக்காலம் நமக்குக் கடவுளின் அருளைப் பெற்றுத் தருகின்ற தருணமாக இருக்கும்.

மன்றாட்டு
இறைவா, தூய உள்ளத்தை எங்களுக்குத் தந்தருளும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்


"ஆண்டவரே இரக்கமாயிரும்"

கடவுளுடைய இரக்கத்திற்காக திருப்பாடல் ஆசிரியர் இறைவனிடம் கெஞ்சி மன்றாடுகிறார். இந்த திருப்பாடலின் பிண்ணனி அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். பத்சேபாவுடனான தன்னுடைய தவறான செயல், இறைவாக்கினர் வழியாக உணர்த்தப்பட்டபோது, தாவீது உள்ளம் நொந்து வேதனையில், தன்னுடைய பாவக்கறைகளை மன்னிப்பதற்காக உருகிய பாடல் தான் இந்த திருப்பாடல். தன்னுடைய பலவீனத்திற்காக, தான் செய்த தவறுக்காக மன்னிப்பு வேண்டுகிறார். உண்மையான, உள்ளார்ந்த மனமாற்றத்தோடு இறைவனை நாடுகிறபோது, நிச்சயம் இறைவன் மனமிரங்குவார் என்கிற நம்பிக்கையை வெளிப்படுத்தக்கூடிய திருப்பாடல் இந்த திருப்பாடல்.

இன்றைய நாளில் இந்த திருப்பாடலை நாம் சிந்திப்பது மிகவும் பொருத்தமான ஒன்று. ஏனென்றால், இன்று தவக்காலத்தை தொடங்குகிறோம். நமது வாழ்வை மாற்றுவதற்கான முயற்சியாக இந்த தவக்காலத்தைப் பயன்படுத்திக்கொள்ள அன்னையாம் திருச்சபை நமக்கு அழைப்புவிடுக்கிறது. இன்றைய நற்செய்தி வாசகமும் ஒட்டுமொத்த நமது வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்பதை நமக்கு வலியுறுத்திக்கூறுகிறது. தவக்காலம் என்பது "ஏதோ நாற்பது நாட்கள் நோன்பிருந்தோம். அத்தோடு நமது கடமை முடிந்து விட்டது" என்ற, கடமைக்காக செய்யப்படக்கூடிய ஒறுத்தல் முயற்சிகளுக்கான காலம் அல்ல. அது நமது வாழ்வை மாற்றுவதற்கான முயற்சிகள் எடுக்கிற காலம். நம்மை பக்குவப்படுத்துவதற்கான முயற்சிகள் நிறைந்த காலம். நம்மை கடவுள்பால் ஈர்க்க வைப்பதற்கான உறுதியான காலம். அதற்கு நமது உள்ளார்ந்த தூய்மை மிகவும் அவசியமானதாக இருக்கிறது. அதைத்தான் இந்த திருப்பாடல் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. அந்த உள்ளார்ந்த தூய்மையை நாம் இந்த தவக்காலத்தில் நமது ஒறுத்தல் முயற்சிகள் வாயிலாக வெளிப்படுத்துவோம்.

தாவீது அரசர் தான் செய்த தவறுக்காக, மனம் வருந்தி, உள்ளார்ந்த மனமாற்றத்தைப் பெற்றுக்கொண்டு, கடவுளின் இரக்கத்திற்காக மன்றாடினாரோ, அதேபோல இந்த தவக்காலமானது வெறும் சடங்கு, கடமைக்கானதாக அல்லாமல், இந்த நாற்பது நாட்களும், நம்மை சிறப்பான மனிதனாக மாற்றிட உறுதுணையாக இருக்கிற காலமாக அமைந்திட இறைவனிடம் மன்றாடுவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------
"உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்"

உள்ளத்தைக் கடினப்படுத்துவது என்றால் என்ன? செய்வது தவறு என்பது தெரிந்தாலும், அதனையே மீண்டும், மீண்டுமாகச் செய்வது தான் கடினப்படுத்திக்கொள்வது ஆகும். பழைய ஏற்பாட்டில், இஸ்ரயேலின் மீட்பின் வரலாற்றில் எகிப்தை ஆண்ட பார்வோன் மன்னன் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. பார்வோன் மன்னன் கடவுள் செய்த வல்ல செயல்களைக் கண்டு, அதனால் அவன் சந்தித்த இழப்புக்களை நினைத்து, இஸ்ரயேல் மக்களை திரும்பிப்போக பணித்தான். ஆனால், நிலைமை சரியான உடனே, அவர்கள் செல்வதற்கு தடைவிதித்தான். அவனுடைய இதயத்தைக் கடினப்படுத்திக் கொண்டான். தான் செய்வது தவறு என்பது அவனுக்குத் தெரியும். ஆனாலும், அதனைச் செய்யாமலிருக்க அவனால் முடியவில்லை. அதனால் வரக்கூடிய விளைவுகளுக்கும் அவன் தான் பொறுப்பேற்க வேண்டும். இஸ்ரயேல் மக்களும் இதே தவறைச் செய்தார்கள். தங்களை இந்த உலகத்தில் ஒரு நாடாக அடையாளப்படுத்தியவர் கடவுள் என்பது அவர்களுக்குத்தெரியும். இஸ்ரயேல் மக்களின் எழுச்சிக்கும், மாட்சிமைக்கும் உற்ற துணைவராக இருந்தது கடவுள் தான் என்பது அவர்கள் அனுபவித்த ஒன்று. அந்த கடவுளை விட்டுச் செல்வது என்பது அவர்களாகவே அழிவைத் தேடிக் கொள்வதற்கு சமம் என்பது அவர்களது அறிவிற்கும், அனுபவத்திற்கும் எட்டிய ஒன்று. ஆனாலும், அவர்கள் கடவுளை விட்டு விலகிச்சென்றார்கள். அதுதான் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்வது. இதனால் அவர்கள் சந்தித்த இழப்புக்களும், வாய்ப்புக்களும் அதிகம். நமது இதயத்தைக் கடினப்படுத்திக்கொள்ளாத நல்ல மனம் வேண்டுமென்று மன்றாட, திருப்பாடல் ஆசிரியர் அழைப்புவிடுக்கிறார்.

இதயம் என்பது அன்பிற்கு அடித்தளமாக ஒப்பிடப்படுவது. அந்த இதயத்தில் கனிவும், அன்பும், பாசமும் இருக்க வேண்டுமே தவிர, வெறுப்பும், வைராக்கியமும் இருக்கக்கூடாது. அது நமது வாழ்வையே அழித்துவிடும். அந்த அழிவிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள கடவுள் அருள் வேண்டுவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------

கிறிஸ்தவ ஆன்மீகம்

கிறிஸ்தவ ஆன்மீகத்தின் சாராம்சத்தை இன்றைய நற்செய்தி வாசகம் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு ஆன்மீகம் இருக்கிறது. கிறிஸ்தவம் என்பது பக்தியோடு நின்றுவிடுவது கிடையாது. மாறாக, செயல்பாடுகளுக்கும் முக்கியத்துவத்தைக் கொடுக்கிறது. இன்றைக்கு வழிபாடா? செயல்பாடா? என்று, மக்கள் மத்தியிலும், அருட்பணியாளர்கள் மத்தியிலும் மிகப்பெரிய விவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சிலர் வழிபாட்டில் நிறைவு காண்கிறார்கள். மற்றும் சிலர், செயல்பாடே சரியான பாதை என்று, அதில் மகிழ்ச்சி காண்கிறார்கள். இவையிரண்டையும் ஒருபோதும் பிரிக்க முடியாது என்பதை, இயேசுவின் போதனையும், அவரது வாழ்வும் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

செபம், தவம் மற்றும் தர்மம் என்கிற, இந்த மூன்றையும் இணைத்து, புரட்சிகரமான ஆன்மீகத்தைத் தருவதுதான் கிறிஸ்தவ ஆன்மீகம். செபம் நம்மை செயல்பாட்டிற்கு உந்துசக்தியாக இருக்கும் வகையில் வழிநடத்த வேண்டும். அதேபோல, செயல்பாடு சிறப்பாக அமைய நமது செபவாழ்வு சிறப்பாக அமைய வேண்டும். ஒன்று மற்றொன்றிற்கு இணையானதாக, இயல்பானதாக வழிநடத்த வேண்டும். இயேசு இந்த இரண்டையும் தனது வாழ்க்கையில் ஒருசேர இருக்குமாறு பார்த்துக்கொண்டார். செபிப்பதை அவர் விட்டுவிடவில்லை. அதேபோல, அவருடைய செயல்பாடும் அதற்கு இணையானதாக இருந்தது.

நமது கிறிஸ்தவ வாழ்க்கை பல சமயங்களில் வழிபாட்டோடு முடங்கிப்போவதாக இருக்கிறது. வாழ்வைத்தொடாத வழிபாடுகள் தான், நம் மத்தியில் ஏராளம். இன்றைக்கு வழிபாட்டின் மீதான ஈர்ப்பும் குறைந்து வருவது வேதனையிலும் வேதனை. ஆனாலும் உண்மை. இந்த வேறுபாடுகள் மறைந்து, இணைந்த ஓர் ஆன்மீக வாழ்வை நாம் முன்னெடுப்போம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

=================================================================================
திருநீற்றுப் புதன் - திருப்பலி முன்னுரை
=================================================================================
இரக்கத்தின் சிறப்பு காலமாகிய தவக்காலத்தை தொடங்குகின்றோம்.

இந்த நாளும் இனிவரும் நாட்களும் கடவுளின் இரக்கத்தையும், மன்னிப்பையும், அன்பையும் அதிகம் உணரும் காலமாகவும், அதனையே பிறரோடு பரிமாறிக் கொண்டு சாட்சிய வாழ்வு வாழும் காலமாக இருந்திட மனதார அன்புடனே வாழ்த்தி வரவேற்கின்றேன்.

இயற்கை ஒரு பாடத்தை அற்புதமாக கற்றுத் தருகின்றது. மரத்தின் இலைகள் எல்லாம் உதிர்ந்து, மொட்டை மரங்களாக காட்சி தந்து, இலையுதிர் காலம் என்று சொல்லிக் காட்டுகின்றது.

ஆனால் இந்த மரங்கள் மொட்டை மரங்களாகவே இருந்து போவதில்லை. தளிர் விட்டு, பசுமையோடு மரம் முழுவதும் இலைகளோடு, அடுத்து, பூக்களோடு, காயோடு, கனியோடு, மிகுந்த பலன் கொடுக்க உள்ளது.

ஆண்டுக்கு ஒருமுறை, தன்னிடம் உள்ள தேவையில்லாத பழுப்பேறிய பழைய இலைகளையெல்லாம் உதிர்த்து விட்டு, புதிய தளிர் விட்டு, பூத்து குலுங்கி, காண்போருக்கு பசுமையான காட்சியையும், இதமான குளிரான நிழலையும், காய் கனி தந்து தன் இருப்பின் பலனை பிறருக்கு பகிர்ந்து கொடுத்து பாடம் சொல்லி தருகின்றது.

நாமும் நம்மிடம் உள்ள பழுப்பேறிய பழைய தேவையில்லாத பாவ பழக்க வழக்கங்களையெல்லாம், இச்சையோடு கூடிய நாட்டங்களையெல்லாம் விட்டு ஓழித்து விட்டு, புதிய தளிரை, கிறிஸ்து என்கின்ற தளிரை நம்மிலே வளர விட்டு, பலன் தந்து வாழும் போது, நம்முடைய பிறப்பின் பலன் காண்போம் என்பதுவே உண்மை.
கிறிஸ்து என்ற தளிர் நம்மிலே வளர இடமளிக்க, அவருக்கு ஓவ்வாத பழைய பாவ வாழ்க்கையையெல்லாம் உதறிவிட ஏற்றகாலமே இந்த தவக்காலம்.

இதனையே இன்று, உங்களது உள்ளங்களை தூய்மையாக்குங்கள் என்ற அறைகூவலோடும், ஓப்புரவாகுங்கள் என்ற பவுலின் வேண்டுகோளோடு, தவம், செபம், தான தர்மங்கள் வழியாக கிறிஸ்துவுக்கு ஏற்புடைய வாழ்வு வாழ இறைவார்த்தை நம்மை அழைக்கின்றது.

பலியிலே பங்கேற்று, நெற்றியிலே இடப்படும் சாம்பலின் அறிகுறி சொல்லும் மண்ணிலிருந்து உருவான நாம் மண்ணுக்கே திரும்ப உள்ளோம் என்ற உணர்வோடு நீட்டித்து தரும் காலத்தை பயனள்ளதாக்க உறுதியெடுப்போம்.

திருப்பலி முன்னுரை

இறைத்திருமகன் இயேசுக் கிறிஸ்துவில் அன்பு கொண்டுள்ள அருட்தந்தை! அருட்தந்தையர்களே) இறைமக்களே! உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்தைக் கூறிக்கொள்வதில் பெரிதும் மகிழ்கிறேன். தவத்தின் அடையாளங்களை அணிந்து நோன்பு நாட்களைத் தொடங்கியிருக்கிற உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறேன்.

நோன்பு, அறச் செயல்கள், இறைவேண்டல் என்னும் முப்பெரும் தவச் செயல்களில் ஈடுபட இன்றைய வாசகங்கள், குறிப்பாக நற்செய்தி வாசகம் அழைப்பு விடுக்கிறது. அதே வேளையில், இந்த தவச் செயல்கள் வெளிவேடமாக மாறிவிடக் கூடாது என்று எச்சரிக்கிறார் ஆண்டவர் இயேசு. காரணம், இவற்றின் வழியாக பிறரின் பாராட்டையும், மதிப்பையும் பெற்றுவிட்டால், அதுவே இத்தவச் செயல்களின் பலன்களை வீழ்த்திவிடுகிறது. பரிசேயர்கள் இவ்வாறுதான் இறையருளை இழந்தனர் எனச் சுட்டிக்காட்டுகிறார் இயேசு.

உலகில் நடைபெறும் பாவச்செயல்களையும் குற்றங்களையும் நினைத்து மனம் வருந்தும் காலம். கொஞ்ச நேரம் கண்ணை ழூடி, இன்று உலகில் நடைபெறும், நடைபெற்ற பாவங்கள், குற்றங்கள், திட்டமிட்ட தவறுகள் இவைகளை நினைத்துப் பாருங்கள். கணக்கிட முடியாது. கற்பனை செய்ய முடியாது. அவ்வளவு பயங்கரம். அவ்வளவு கொடூரம். அவ்வளவு அயோக்கியத்தனம்.

ஒவ்வொரு தனி மனிதனும் சிறிது பெரிதாக செய்கின்ற தவறுகள் ஏராளம் ஏராளம். நீங்கள் உங்களுக்கு எதிராக, கணவன் மனைவி மக்களுக்கு எதிராக இன்றைக்குச் செய்த மிகச் சிறிய தவறுகள் குற்றங்கள் எத்தனை. இப்படி உலகம் எங்கும் எத்தனை ஒவ்வொரு நாளும் நடந்துகொண்டு இருக்கின்றன.

இந்த நாற்பது நாட்களும் இந்த தவறுகளைத் தவிர்த்து, புனிதமான சிந்தனையும் செயலும் நம்மில் அதிகமாக்கிட வேண்டும். ஆண்வரோடு உள்ள உறவை அதிகமாக்க, செபம், கோயில், வழிபாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்போம்.

கூடுதலாக சில அன்புச் செயல்கள். தான தர்மங்கள், ஏழைகளுக்கு உதவுதல் செய்யுங்கள். உங்களின் சில ஆசைகளை அடக்கி, தேவைகளைக் குறைத்து, நோன்பிருந்து அந்த சேமிப்பை உங்களது நலத்திட்டமாக உதவுங்கள். தவக்காலம் அருளின் காலமாக உங்களுக்கு அமையும். வரம் கேட்டு தொடரும் இத்திருப்பலியில் இறைஞ்சி மன்றாடுவோம். இறையாசீர் பெற்றுக் கொள்வோம்.


மன்றாட்டுக்கள்:

இரக்கத்தின் தலைவா! இரக்கத்தின் காலமாகிய இந்த நாட்களில் எம்மை வழிநடத்தும் பொறுப்பேற்றுள்ள திருஅவை பொறுப்பாளர்கள், தங்களிடையே ஒற்றுமையை உறுதி செய்து, உம்மை அணுகிவரும் அவர்கள், தங்களை தூய்மையாக்கி கொண்டு, அர்ப்பணத்தில் என்றும் உறுதியாய் இருந்திட, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இரக்கத்தின் தலைவா! உலக தலைவர்களும், அதிகாரிகளும், பொறுப்பாளர்களும், தங்களிடம் ஓப்படைக்கப்பட்ட மக்களை நேரிய உண்மையான பாதையில் வழிநடத்தி, ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்ப, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இரக்கத்தின் தலைவா! செபம் தவம் தான தர்மங்களில் ஈடுபடும் நாங்கள் எங்களது பெருமையையும், புகழையும், மரியாதையையும், மதிப்பையும் தேடாமல், மறைவாகயுள்ள உமக்கு தெரியும் பொருட்டு, நீர் தரும் கைம்மாறு போதும் என்ற மனநிலையும் பெற்று வாழ, நாங்கள் தெளிவு பெற்றிட, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இரக்கத்தின் தலைவா! வெளிப்புற அடையாளங்களில் நாங்கள் அதிக கவனம் செலுத்தி, எங்களது ஆன்மாவை தொலைத்து விடாமல், ஆன்மாவை புதுப்பித்து கொண்டு, அதனை உயிருள்ள உண்மையான நீர் தங்கும் உறைவிடமாக்கிக் கொள்ள, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இரக்கத்தின் தலைவா! பிறரோடு ஓப்புரவாவதிலும், பாவத்திற்கு மன்னிப்பு கேட்டு, ஓப்புரவை தேடுவதிலும், ஓப்புக்கு நடந்து கொள்ளாமல், அதனின் முழு பலனையும் தெரிந்து அறிந்து, உணர்ந்து, நாடிட ஆவியின் தூண்டுதலையும், துணையையும் தந்திட, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

விசுவாசிகள் மன்றாட்டுகள்:

ஞானத்தின் ஊற்றே எம் இறைவா!
நீர் கொடையாகக் கொடுத்துள்ள திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள்: இன்றைய சவால்கள் நிறைந்த உலகின் நடுவே தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கும் உமது அழைப்பை சரியான முறையில் அடையாளம் கண்டு, நீர் அவர்களிடம் ஒப்படைத்துள்ள இறைமக்களை நிறையுண்மையை நோக்கி வழிநடாத்திச் செயல்படவும், உமது திருவுளம் நிறைவேற்றுவதில் அவர்கள் மகிழ்ச்சியடையவும் அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இரக்கத்தின் நாயகனே ஆண்டவரே,
இத்தவக்காலம் என்னும் கொடைக்காக உமக்கு நன்றி கூறுகிறோம். இந்த நாள்களில் நீர் எங்கள்மீது பொழியவிருக்கிற சிறப்பான பேரன்புக்காக, இரக்கத்துக்காக நன்றி கூறுகிறோம். இறைவா, இந்த நாள்களை நாங்கள் பலனுள்ள விதத்தில் செலவழிக்க உமது அருளை, ஆற்றலை எங்களுக்குத் தர வரம் அருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருப்பானாக என்ற ஆசீரோடு குடும்ப உறவை உருவாக்கிய அன்புத் தந்தையே இறைவா!
எமது குடும்பங்களுக்காக உம்மிடம் வருகின்றோம். இன்றைய நாட்களில் குடும்ப உறவுக்கும் ஒற்றுமைக்கும் மகிழ்ச்சிக்கும் தடையாக இருக்கும் அனைத்துத் தீமைகளையும் உமது இரக்கத்தால் தகர்த்தெறிந்து குடும்பங்களில் அமைதியும் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

தூய ஆவியின் வல்லமையைக் கொண்டவரான இயேசுவே,
இறைவா, பிறருக்கு உதவும் வேளையில் நாங்கள் தன்னலம் நாடாது செயல்பட அருள் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

வழிகாட்டும் இறைவா!
நாங்கள் ஒவ்வொரும் நீர் ஏற்படுத்திய திருச்சபை வழியாக நீர் வெளிப்படுத்தும் பாதைகளையும், கற்பிக்கும் உண்மை நெறிகளையும் அறிந்து அவற்றைப் பின்பற்றி, எம் ஆன்மீக வாழ்விற்கெதிராக வரும் சோதனைகளை வென்று அர்த்தமுள்ள வாழ்வு வாழ அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எமக்கு ஆதரவளிக்கும் இறைவா!
கடின நோய்களினால் பாதிக்கப்பட்டு வீடுகளிலும், மருத்துவ மனைகளிலிருந்தும் வேதனைப்படும் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். மக்களை வாட்டி வதைக்கும் எல்லா நோய்களும் அகன்று, அவர்கள் சுகமடையவும், அவர்களுடைய வேதனைகளைத் தணித்தருளவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


நல்வாழ்த்துக்கள். செபங்கள். ஆசீர்.
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!