Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      13  பெப்ரவரி 2018  
                                        ஆண்டின் பொதுக்காலம் 6ஆம் ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
கடவுள் எவரையும் சோதிப்பதில்லை.

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 12-18

அன்பிற்குரியவர்களே, சோதனையை மனவுறுதியுடன் தாங்குவோர் பேறுபெற்றோர். ஏனெனில், அவர்களது தகுதி மெய்ப்பிக்கப்படும்போது, தம்மீது அன்பு கொள்வோருக்குக் கடவுள் வாக்களித்த வாழ்வாகிய வெற்றி வாகையினை அவர்கள் பெறுவார்கள்.

சோதனை வரும்போது, "இச்சோதனை கடவுளிடமிருந்தே வருகிறது" என்று யாரும் சொல்லக் கூடாது. ஏனெனில் கடவுள் தீமையின் தூண்டுதலுக்கு உள்ளாவதில்லை. அவரும் எவரையும் சோதிப்பதில்லை.

ஒவ்வொருவரும் தம் சொந்தத் தீய நாட்டத்தினாலே சோதிக்கப் படுகின்றனர். அது அவர்களைக் கவர்ந்து மயக்கித் தன் வயப்படுத்துகிறது. பின்னர் தீய நாட்டம் கருக்கொண்டு பாவத்தைப் பெற்றெடுக்கிறது. பாவம் முழு வளர்ச்சியடைந்து சாவை விளைவிக்கிறது.

என் அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே, ஏமாந்துபோக வேண்டாம். நல்ல கொடைகள் அனைத்தும், நிறைவான வரம் எல்லாம், ஒளியின் பிறப்பிடமான விண்ணகத் தந்தையிடமிருந்தே வருகின்றன. அவரிடம் எவ்வகையான மாற்றமும் இல்லை; அவர் மாறிக்கொண்டிருக்கும் நிழல் அல்ல. தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகளாகும்படி உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர் விரும்பினார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்  திபா 94: 12-13a. 14-15. 18-19 (பல்லவி: 12a)
=================================================================================
பல்லவி: ஆண்டவரே! நீர் கண்டித்து பயிற்றுவிப்போர் பேறுபெற்றோர்.

12 ஆண்டவரே! நீர் கண்டித்து உம் திருச்சட்டத்தைப் பயிற்றுவிக்கும் மனிதர் பேறுபெற்றோர்; 13ய அவர்களின் துன்ப நாள்களில் அவர்களுக்கு அமைதி அளிப்பீர். பல்லவி

14 ஆண்டவர் தம் மக்களைத் தள்ளிவிடார்; தம் உரிமைச் சொத்தாம் அவர்களைக் கைவிடார். 15 தீர்ப்பு வழங்கும் முறையில் மீண்டும் நீதி நிலவும்; நேரிய மனத்தினர் அதன் வழி நடப்பர். பல்லவி

18 `என் அடி சறுக்குகின்றது' என்று நான் சொன்னபோது, ஆண்டவரே! உமது பேரன்பு என்னைத் தாங்கிற்று. 19 என் மனத்தில் கவலைகள் பெருகும்போது, என் உள்ளத்தை உமது ஆறுதல் மகிழ்விக்கின்றது. பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 14: 23

அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்புகொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 பரிசேயர், ஏரோதியர் ஆகியோரது புளிப்பு மாவைக் குறித்து மிகவும் கவனமாயிருங்கள்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 14-21

அக்காலத்தில் சீடர்கள் தங்களுக்குத் தேவையான அப்பங்களை எடுத்துச்செல்ல மறந்துவிட்டார்கள். படகில் அவர்களிடம் ஓர் அப்பம் மட்டுமே இருந்தது.

அப்பொழுது இயேசு, "பரிசேயர், ஏரோதியர் ஆகியோரது புளிப்பு மாவைக் குறித்து மிகவும் கவனமாயிருங்கள்'' என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

அவர்களோ தங்களிடம் அப்பம் இல்லையே என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருந்தார்கள்.

இதை அறிந்த இயேசு அவர்களை நோக்கி, "நீங்கள் உங்களிடம் அப்பம் இல்லை என ஏன் பேசிக்கொள்கிறீர்கள்? இன்னுமா உணராமலும் புரிந்துகொள்ளாமலும் இருக்கிறீர்கள்? உங்கள் உள்ளம் மழுங்கியா போயிற்று? கண்ணிருந்தும் நீங்கள் காண்பதில்லையா? காதிருந்தும் நீங்கள் கேட்பதில்லையா? ஏன், உங்களுக்கு நினைவில்லையா?

ஐந்து அப்பங்களை நான் ஐயாயிரம் பேருக்குப் பிட்டு அளித்தபோது, மீதியான துண்டுகளை எத்தனை கூடைகள் நிறைய எடுத்தீர்கள்?'' என்று அவர் கேட்க, அவர்கள், "பன்னிரண்டு'' என்றார்கள்.

"ஏழு அப்பங்களை நான் நாலாயிரம் பேருக்குப் பிட்டு அளித்தபோது மீதித் துண்டுகளை எத்தனை கூடைகள் நிறைய எடுத்தீர்கள்?'' என்று கேட்க, அவர்கள், "ஏழு'' என்றார்கள்.

மேலும் அவர் அவர்களை நோக்கி, "இன்னும் உங்களுக்குப் புரியவில்லையா?'' என்று கேட்டார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



சிந்தனை



பரிசேயர், ஏரோதியர் ஆகியோரது புளிப்பு மாவைக் குறித்து மிகவும் கவனமாயிருங்கள்.

அது என்ன புளிப்பு மாவு?

அவர்களுடைய எண்ணத்தைத் தான் இப்படி கூறிப்பிட்டு கூறுகிறாரோ என எண்ணத் தோன்றுகின்றது.

எண்ணங்கள் விதைக்கப்படுகின்ற போது, புளிப்பு மாவு எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துமோ அத்தகைய மாற்றத்தை எண்ணங்களும் ஏற்படுத்த கூடிய சக்தி உண்டு.

கணனியில் எகிப்தில் எப்பொழுது ஜனநாயகம் மலரும் என்ற எண்ணம் விளைத்த விளைவு தான், மக்களின் புரட்சிக்கு காரணமாக அமைந்தது என பார்க்கின்றோம்.

நல்ல எண்ணங்கள் நல்ல விளைவுகளையும், தீய எண்ணங்கள் தீய விளைவுகளையும் விளைவிக்கும் என்பதாலேயே, எச்சரிக்கின்றார்.

பரிசேயர்இ ஏரோதியர் எண்ணங்கள் நல்லதாக இல்லை என்பதால், எச்சரிக்கை கொடுக்கின்றார். உள்வாங்கி அசை போட்டு உங்களிடமிருந்து தீமைகளை கருவாக்கி உருவாக்காது எச்சரிக்கையாக இருங்கள் என்கின்றார்.

நாமும் இன்றைக்கு எல்லா கருத்துக்களும் நல்லது தான் என்று இல்லாமல் எதையுமே கேள்வி கேட்டு பார்ப்பது நல்லது. இன்றைக்கு கசப்பான மருந்துக்கு இனிப்பு தடவி கொடுப்பது போல பல தீமையான எண்ணங்கள் பிரித்து பார்த்து புரிந்து கொள்ள மடியாத அளவுக்கு சுவையுடனே கொடுத்து அது நம்மிலே பல தீமைகளை விளைவிக்க செய்கிறார்கள். எச்சரிக்கையாக இரந்து நம்மை காத்துக் கொள்வது நம்முடைய பொறுப்புத் தான்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
இன்னும் உங்களுக்குப் புரியவில்லையா?

ஒரு ஞாயிறு மறைக்கல்வி வகுப்பில் ஆசிரியர் மாணவர்களிடம், எக்காலம் முழங்க, மக்கள் ஆர்ப்பரிக்க எரிக்கோ மதில் சுவர் எப்படி விழுந்து தரைமட்டமானது பற்றி பாடம் நடத்திக்கொண்டிருந்தார். வகுப்பில் இருந்த எல்லா மாணவர்களும் மிக ஆர்வமாகப் பாடத்தைக் கவனித்துக் கொண்டிருக்க, ஓர் ஓரமாய் அமர்ந்திருந்த ஜானி மட்டும் எங்கேயோ பார்த்து கனவு கண்டுகொண்டிருந்தான். அவனைக் கவனித்த ஆசிரியர் அவனிடம், "ஜானி, எரிக்கோ மதில்சுவர் எப்படி விழுந்தது, அதை உடைத்தது யார்?" என்று கேட்டார். அவனோ பேந்தப் பேந்த முழித்துவிட்டு, "நானில்லை, நானில்லை" என்று சொல்லிக்கொண்டே, வகுப்பறையிலிருந்து ஒரே ஓட்டமாய் ஓடிப்போனான். இதைப் பார்த்து ஆசிரியருக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.

அன்று மாலையில் ஆசிரியர் கடைத் தெருவுக்குச் சென்றபோது, ஜானியின் அம்மாவை அங்கு கண்டார். உடனே அவர் அவரிடம் சென்று, அன்று காலை ஞாயிறு மறைக்கல்வி வகுப்பில் நடந்ததையும், தான் கேள்வி கேட்டதற்கு, ஜானி நானில்லை, நானில்லை என்று சொல்லிக்கொண்டு வகுப்பை விட்டே ஓடிப்போனதையும் சொன்னார். இதைக் கேட்டு பதற்றமடைந்த ஜானியின் அம்மா, "என் மகன் அதை செய்யவில்லை என்று சொன்னால், அவன் கட்டாயம் செய்திருக்க மாட்டான். ஏனென்றால், நான் அவனை எப்போதும் உண்மை பேசவேண்டும் என்று சொல்லியே வளர்த்திருக்கிறேன்" என்று சொல்லிவிட்டு அவர் வழியில் போய்விட்டார். அவர் சொன்னதைக் கேட்டு ஆசிரியருக்கு ஏதோ போல் ஆகிவிட்டது.

இது நடந்து ஓரிரு நாட்கள் இருக்கும். ஞாயிறு மறைக்கல்வி ஆசிரியர் பூங்கா ஒன்றில் நடந்துகொண்டிருந்தபோது எதிரே வந்த ஜானியின் தந்தையைச் சந்தித்தார். உடனே அவர் அவரிடம், நடந்த அனைத்தையும் சொன்னார். அதைக் கேட்டு அவர், "ஜானி விளையாட்டுப் பையன், ஏதோ தெரியாமல் எரிக்கோ மதில் சுவரை உடைத்திருப்பான். இழப்பீட்டுத் தொகை எவ்வளவு என்று சொல்லுங்கள், நான் அதற்கான காசோலையை உங்களுக்குத் தந்துவிடுகிறேன்" என்றார். இதைக் கேட்டு ஆசிரியருக்கு சிரிப்பதா? அழுவதா? என்றாகிவிட்டது.

கிறிஸ்தவர்களாக இருந்தும் விவிலியத்தைப் பற்றி அறியாத ஜானியின் குடும்பத்தைப் போன்றுதான், இயேசுவோடு இருந்தும் அவர் செய்த அற்புதங்களைக் கண்ணால் கண்டும், அவர் யார் என அறிந்துகொள்ளாத சீடர்களின் நிலை மிகவும் வேதனையாக இருக்கின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, "பரிசேயர் ஏரோதியர் ஆகியோரது புளிப்பு மாவைக் குறித்து கவனமாக இருங்கள்" என்று சொல்கின்றபோது, சீடர்களோ, தங்களிடம் அப்பம் இல்லையே என்று பேசிக்கொள்கின்றார்கள். இயேசு சீடர்களிடம் சட்டத்தை மட்டுமே உயர்வாகத் தூக்கிப் பிடித்துக்கொண்டிருக்கின்ற பரிசேயர்களைக் குறித்தும் பணம், பெயர், புகழ் இவைகள்தான் முக்கியம் என்று வாழ்ந்துகொண்டிருக்கின்ற ஏரோது மற்றும் அவனோடு இருந்த ஆட்களைக் குறித்தும் கவனமாக இருங்கள் என்று சொல்ல வந்தார். ஆனால் சீடர்களோ தங்களிடம் அப்பம் இல்லாததைப் பற்றிப் பேசிக்கொள்கின்றார்கள்.

சீடர்கள் தங்களிடம் அப்பம் இல்லையே என்று பேசி, கவலைகொள்வதை அறிந்த இயேசு அவர்களிடம், "ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து ஐயாயிரம் பேருக்குக் கொடுத்தபோது எத்தனைக் கூடைகள் மீதம் இருந்தன?, ஏழு அப்பங்களையும் சில மீன்களையும் எடுத்து நான்காயிரம் பேருக்குக் கொடுத்த பின்பு எத்தனைக் கூடைகள் மீதம் இருந்தன?" என்று கேட்க, அவர்கள் முறையே பன்னிரெண்டு, ஏழு பதில் சொல்கின்றார்கள். அப்போது இயேசு அவரிடம், "இன்னும் உங்களுக்குப் புரியவில்லையா" என்று கேட்கின்றார். அதாவது மிகக் குறைந்த அளவு அப்பங்களையும் மீன்களையும் வைத்துக்கொண்டு முதலில் யூதர்களுக்கும் அதன்பிறகு புறவினத்தாருக்கும் உணவளித்த தன்னால், ஒன்றுமில்லாமையிலிருந்து உணவளிக்க முடியாதா?, இதனை உங்களால் புரிந்துகொள்ள முடியாதா? என்பதுதான் சீடர்களின் மீதான இயேசுவின் ஆதங்கமாக இருக்கின்றது.

இயேசுவின் சீடர்கள் அவரோடு மூன்று ஆண்டுகள் கூடவே இருந்தார்கள். அவர் செய்த பல அருமடையாளங்களைக் கண்ணால் கண்டார்கள். அப்படியிருந்தும் அவர்கள் இயேசு எப்படிப்பட்டவர் என்பதை உணராமல் இருந்ததுதான் மிகவும் வேடிக்கையாக இருக்கின்றது. இயேசுவின் சீடர்களைப் போன்றுதான் நாமும் பல நேரங்களில் இயேசுவின் வல்லமையையும் அவருடைய ஆற்றலையும் உணராமல் அவ நம்பிக்கையோடு வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இத்தகைய சூழலில் நாம் இயேசுவின் மீது ஆழமான நம்பிக்கை வைப்பதுத்தான் காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது.

ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம், அவர் எப்படிப்பட்டவர் என்பதை உணர்ந்து, அவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!