Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      12  பெப்ரவரி 2018  
                                        ஆண்டின் பொதுக்காலம் 6ஆம் ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
உங்கள் நம்பிக்கை சோதிக்கப்படும்போது, மனவுறுதி உண்டாகும். அப்போது நீங்கள் நிறைவுள்ளவர்களாய் இருப்பீர்கள்.

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-11

சிதறுண்டு வாழும் பன்னிரு குலத்தினருக்கு, கடவுளுக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் பணியாளனாகிய யாக்கோபு வாழ்த்துக் கூறி எழுதுவது: என் சகோதரர் சகோதரிகளே, பல வகையான சோதனைகளுக்கு உள்ளாகும்போது நீங்கள் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டிருங்கள்.

உங்கள் நம்பிக்கை சோதிக்கப்படும்போது மனவுறுதி உண்டாகும் என்பது உங்களுக்குத் தெரியும். உங்கள் மனவுறுதி நிறைவான செயல்களால் விளங்கட்டும். அப்பொழுது எக்குறையுமின்றி முற்றும் நிறைவுள்ளவர்களாய் இருப்பீர்கள்.

உங்களிடையே குறைவான ஞானம் கொண்டிருப்போர் கடவுளிடத்தில் கேட்கட்டும்; அப்பொழுது அவரும் ஞானத்தைக் கொடுப்பார். அவர் முகம் கோணாமல் தாராளமாய் எல்லாருக்கும் கொடுப்பவர். ஆனால் நம்பிக்கையோடு, ஐயப்பாடின்றிக் கேட்க வேண்டும்.

ஐயப்பாடு கொள்பவர்கள் காற்றினால் அலைக்கழிக்கப்படும் கடல் அலையைப் போன்றவர்கள். எனவே இத்தகைய இரு மனமுள்ள, நிலையற்ற போக்குடையவர்கள் ஆண்டவரிடம் ஏதாவது பெற முடியும் என நினைக்காதிருக்கட்டும்.

தாழ்நிலையில் உள்ள சகோதரர் சகோதரிகள் தாங்கள் உயர்வு பெறும்போது மகிழ்ச்சி அடைவார்களாக! செல்வச் செழிப்பில் இருப்பவர்கள் தாங்கள் தாழ்நிலை அடையும்போதும் மகிழ்ச்சியாய் இருப்பார்களாக!

ஏனெனில் செல்வர்கள் புல்வெளிப் பூவைப் போல மறைந்தொழிவார்கள். கதிரவன் எழ, வெயில் ஏறிப் புல் உலர்ந்துபோம். அதன் பூ வதங்கி விழும்; அதன் அழகிய தோற்றமும் அழிந்துவிடும். அவ்வாறே செல்வரும் தம் அலுவல்களில் ஈடுபடும்போதே அழிவுறுவர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்   திபா 119: 67-68. 71-72. 75-76 (பல்லவி: 77a)
=================================================================================
பல்லவி: நான் பிழைத்திருக்கும்படி உமது இரக்கம் ஆண்டவரே, கிடைப்பதாக.

67 நீர் என்னைத் தண்டிக்குமுன்பு நான் தவறிழைத்தேன்; ஆனால், இப்போது உம் வாக்கைக் கடைப்பிடிக்கின்றேன். 68 நீர் நல்லவர்! நன்மையே செய்பவர்; எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பியும். பல்லவி

71 எனக்குத் துன்பம் விளைந்தது என் நன்மைக்காகவே; அதனால், உம் விதிமுறைகளை நான் கற்றுக்கொண்டேன். 72 நீர் திருவாய் மலர்ந்த சட்டம், ஆயிரக்கணக்கான பொன், வெள்ளிக் காசுகளைவிட எனக்கு மேலானது. பல்லவி

75 ஆண்டவரே! உம் நீதித் தீர்ப்புகள் நேரியவை என அறிவேன்; நீர் என்னைச் சிறுமைப்படுத்தியது சரியே. 76 எனக்கு ஆறுதலளிக்குமாறு உமது பேரன்பு எனக்குக் கிடைக்கட்டும்; உம் ஊழியனுக்கு வாக்குறுதி அளித்தீர் அன்றோ! பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 14: 6

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இந்தத் தலைமுறையினர் அடையாளம் கேட்பதேன்?

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 11-13

அக்காலத்தில் பரிசேயர் வந்து இயேசுவோடு வாதாடத் தொடங்கினர்; வானத்திலிருந்து அடையாளம் ஒன்றைக் காட்டும்படி அவரைச் சோதித்தனர்.

அவர் பெருமூச்சுவிட்டு, "இந்தத் தலைமுறையினர் அடையாளம் கேட்பதேன்? இத்தலைமுறையினருக்கு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார்.

அவர்களை விட்டு அகன்று மீண்டும் படகேறி அவர் மறு கரைக்குச் சென்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



சிந்தனை

அடையாளம் நம்பிக்கைக்கு தரப்படுவது உண்டு.

அமைதியின் அரசர் - கன்னியின் வயிற்றில் பிறப்பார் என எசாயா நூலில் அடையாளம் கொடுக்கப்பட்டது.

மரியாளுக்கு மலடி என்ற பெயர் பெற்ற எலிசபெத்தம்மாள் அடையாளமானார்கள்.

காலம் காலமாக அடையாளம் காட்டப்பட்ட பொழுதும், தன்னை சோதித்தறிந்து பார்க்க முற்பட்ட போது சினம் கொண்டு தரப்படாது என கூறுகிறார்.

ஏற்கனவே உள்ள அடையாளங்கள் காட்டும் கடவுளை நம்பி விசுவசிப்போம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
இயேசுவை நம்ப மறுத்தவர்கள்

துருக்கி நாட்டுக் கதை இது. பாக்தாத் நகரில் மாறாத அன்புகொண்ட சகோதரர்கள் இருவர் இருந்தார்கள். இருவரும் ஒன்றாகவே கடை நடத்தினார்கள். சகோதரிகளை திருமணம் செய்துகொண்டிருந்தார்கள். ஒரே வீட்டில் ஒரே குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களின் அன்பைக் கண்டு வியக்காதவர்களே கிடையாது. சந்தையில் அவர்கள் நடந்து போகும்போது "அண்ணன், தம்பி என்றால் இப்படித்தான் வாழ வேண்டும்!" என்று அடையாளம் காட்டுவார்கள். அவ்வளவு சிறப்பான மனிதர்களாக வாழ்ந்தார்கள்.

ஒருநாள் அண்ணன் கடையை மூடும்போது தங்கக் காதணி ஒன்றைப் பார்த்தான். அது தன் மனைவியின் காதணி. இது எப்படி கடைக்குள் வந்தது என்று யோசித்தான். தம்பியிடம் இதைப் பற்றி கேட்கலாம் என நினைத்தான். ஆனால், கேட்கவில்லை. மாறாக தம்பி மீது அவநம்பிக்கையும் சந்தேகமும் கொள்ளத் தொடங்கினான். ஒவ்வொரு நாளும் தம்பி உச்சிவேளையில் யாருக்கும் தெரியாமல் வெளியே போவதும், சற்று நேரத்தில் அமைதியாக வந்து வேலையைத் தொடர்வதையும் கண்ட அண்ணனுக்கு சந்தேகம் அதிகமானது. அது போலவே ஓர் இரவு தன் மனைவியிடம் தம்பி ஏதோ பேசிக் கொண்டிருப்பதும், அவள் ரகசியமாக எதையோ தருவதையும் கண்ட அண்ணனுக்கு சந்தேகம் உறுதியானது, அன்றுமுதல் அவன் தம்பியைக் கண்டாலே எரிந்துவிழத் தொடங்கினான். மனைவியைக் காரணம் இல்லாமல் அடித்தான். தம்பியோ அண்ணனின் கோபத்தை தாங்கிக் கொண்டான். அண்ணன் ஏன் இப்படி நடந்துகொள்கிறான் எனப் புரியாமல் தவித்தான் தம்பி.

அண்ணன் தானாக கற்பனை செய்ய ஆரம்பித்தான். தம்பி தன்னை ஏமாற்றி பணம் சேர்க்கிறான். தன் மனைவியோடு கள்ளத்தனமாகப் பழகுகிறான். தனது பிள்ளைகள் அவனுக்கு பிறந்தவையாக இருக்கக்கூடும். முடிவில் ஒருநாள் தன்னை கொன்றுவிட்டு சொத்தை முழுவதுமாக அபகரிக்க தம்பி திட்டம் போடுகிறான் என அண்ணன் நினைத்தான். இந்தக் கவலை அவனை வாட்டியது. உறக்கம் இல்லாமல் தவிக்க வைத்தது. முடிவில் ஒருநாள் தான் வணிகத்தின் பொருட்டு வெளியூர் போய்வருவதாகக் கூறிவிட்டு உள்ளுரிலே ரகசியமாக தங்கிக் கொண்டான் அண்ணன். தான் இல்லாத நேரத்தில் தம்பி ரகசியமாக ஒரு வீட்டுக்குப் போய் பணம் தருவதையும், தன் மனைவி யாருக்கும் தெரியாமல் உணவு கொண்டுவந்து தருவதையும் கண்டு கொதித்துப் போனான். கடையை மூடிவிட்டு தம்பி திரும்பி வரும்போது, அவனை மறைந்திருந்து கொலை செய்துவிட்டு, தன் மனைவியைக் கொல்ல வீட்டுக்குப் போனான்.

மனைவி உறங்கிக் கொண்டிருந்தாள். அவளை வாளால் வெட்டி துண்டிக்கப்போகும்போது அவள் "ஏன் என்னைக் கொல்கிறீர்கள்? அந்தக் காரணத்தை மட்டும் சொல்லுங்கள்" எனக் கதறினாள். அண்ணன் நடந்த விஷயங்களைக் கூறினான். அதற்கு மனைவி "என் காதணியை உங்கள் சிறிய மகன்தான் எடுத்து உங்கள் சட்டைப் பையில் போட்டிருக்கிறான். அதைக் காணவில்லை என்று தேடிக் கொண்டிருந்தேன். உங்களுக்குத் தெரிந்தால் கோபம் கொள்வீர்களோ எனச் சொல்லவில்லை" என்றாள். "பொய் சொல்லாதே... என் தம்பி ரகசியமாக வெளியே போவதும், நீ அவனுடன் இரவில் பேசுவதும், அவனுக்கு சாப்பாடு தருவதும் சல்லாபம் இல்லையா?" எனக் கத்தினான்.

அதற்கு அவள் சொன்னாள்: "உங்கள் தம்பி குடற்புண்ணால் அவதிப்படுகிறார். அதற்கு வைத்தியம் பார்த்து வந்தார். இந்த விஷயம் தெரிந்தால் நீங்கள் வருத்தப்படுவீர்கள். தம்பியை ஒய்வெடுக்கச் சொல்லிவிட்டு கடைவேலையை நீங்களே பார்ப்பீர்கள் என நினைத்து அதை மறைத்துவிட்டார். மேலும் அவர் மனைவிக்கு பத்தியச் சாப்பாடு செய்யத் தெரியாது என்பதால் நான் தயாரித்துக் கொடுத்தேன். உங்கள் சந்தேகம் உங்கள் மீது மாறாத அன்பு வைத்த சகோதரனைக் கொன்றுவிட்டது. இப்போது உங்களுக்காகவே வாழ்ந்து வரும் என்னை கொல்லத் துடிக்கிறது. வாருங்கள்... என் தலையைத் துண்டியுங்கள்!" என அழுதாள். அப்போதுதான் அவனுக்கு தனது தெரிந்தது தான் செய்தது மிகப்பெரிய தவறு என்று. தனது சகோதரன் மீதான அவ நம்பிக்கையினாலும் சந்தேகத்தினாலும் அநியாயமாக அவனைக் கொன்றுபோட்டுவிட்டோமோ என்று அவன் மிகவும் வருந்தத் தொடங்கினான்.

நம் வாழ்வை சீரழித்துக்கொள்ள துளியளவு அவ நம்பிக்கையும் சந்தேகமும் போதும் என்னும் செய்தியைத்தான் மேல உள்ள கதையானது நமக்கு எடுத்துக் கூறுகின்றது.

நற்செய்தி வாசகத்தில் இயேசுவின்மீது நம்பிக்கையற்ற பரிசேயர்கள், அவரிடத்தில் அடையாளம் ஒன்றைக் கேட்கின்றார்கள். பழைய ஏற்பாட்டைப் பொறுத்தளவில் அடையாளம் கேட்பது என்பது ஆண்டவரைக் கேள்விக்கு உள்ளாக்குவதற்குச் சமமாகும் (திபா 95:8-11) இதனாலும், தந்திரத்தினாலேயே பரிசேயர்கள் தன்னிடத்தில் அடையாளம் கேட்கின்றார்கள் என்பதை அறிந்ததாலும் இயேசு அவர்களிடம் எந்த அடையாளமும் கொடுக்கப்படமாட்டாது என்று சொல்கின்றார். நேர்மையற்ற உள்ளத்தோடு வந்த பரிசேயர்களுக்கு இதைவிட வேறு என்ன கிடைக்கும்!.

திருப்பாடல் 71:5 ல் வாசிக்கின்றோம், "என் தலைவரே, நீரே என் நம்பிக்கை; ஆண்டவரே, இளமை முதல் நீரே என் நம்பிக்கை" என்று. ஆம், நாம் ஆண்டவரையே நமது நம்பிக்கையாக வைத்து வாழும்போது, அவர் தருகின்ற ஆசிர்வாதம் ஏராளம். ஆகவே, நாம் பரிசேயர்களைப் போன்று அல்லாமல், ஆண்டவரிடம் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்வோம். நம்மிடம் இருக்கும் அவ நம்பிக்கையை அறவே அகற்றுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!