Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      10  பெப்ரவரி 2018  
                                        ஆண்டின் பொதுக்காலம் 5ஆம் ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
எரொபவாம் இரு பொன் கன்றுக் குட்டிகளைச் செய்தான்.

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 12: 26-32; 13: 33-34

அந்நாள்களில் "இப்போதுள்ள நிலை நீடித்தால் அரசு தாவீதின் வீட்டுக்கே திரும்பிச் சென்றுவிடும். ஏனெனில், இம்மக்கள் எருசலேமில் உள்ள ஆண்டவரின் இல்லத்தில் பலிசெலுத்த இனிமேலும் போவார்களானால், அவர்களது உள்ளம் யூதாவின் அரசன் ரெகபெயாம் என்ற தங்கள் தலைவனை நாடும்; என்னைக் கொலை செய்துவிட்டு யூதாவின் அரசன் ரெகபெயாம் பக்கம் சேர்ந்து கொள்வார்கள்" என்று தன் இதயத்தில் எரொபவாம் சொல்லிக் கொண்டான்.

இதைப் பற்றித் தீரச் சிந்தித்து, அவன் பொன்னால் இரு கன்றுக் குட்டிகளைச் செய்தான். மக்களை நோக்கி, "நீங்கள் எருசலேமுக்குப் போய் வருவது பெருந்தொல்லை அல்லவா! இஸ்ரயேலரே! இதோ, உங்களை எகிப்து நாட்டிலிருந்து மீட்டுவந்த உங்கள் தெய்வங்கள்!" என்றான்.

இவற்றுள் ஒன்றைப் பெத்தேலிலும் மற்றொன்றைத் தாணிலும் வைத்தான். இச்செயல் பாவத்துக்குக் காரணமாயிற்று. ஏனெனில் மக்கள் கன்றுக் குட்டியை வணங்கத் தாண் வரையிலும் செல்லத் தொடங்கினர். மேலும் அவன் தொழுகை மேட்டுக் கோவில்கள் கட்டி, லேவியரல்லாத சாதாரண மக்களை அவற்றில் குருக்களாக நியமித்தான். அதுவுமின்றி, யூதாவின் விழாவுக்கு இணையாக, எட்டாம் மாதம் பதினைந்தாம் நாள் எரொபவாம் ஒரு விழாவை எற்படுத்திப் பலிபீடத்தின் மேல் பலியிட்டான். அவ்வாறே பெத்தேலிலும் தான் செய்து வைத்த கன்றுக் குட்டிகளுக்குப் பலியிட்டான். மேலும் தான் அமைத்திருந்த தொழுகை மேடுகளின் குருக்களைப் பெத்தேலில் பணி செய்யும்படி அமர்த்தினான். இவற்றின் பின்னும் எரொபவாம் தன் தீய வழியை விட்டு விலகாமல் சாதாரண மக்களைத் தொழுகை மேட்டுக் குருக்களாக அமர்த்தினான். யார் விரும்பினார்களோ, அவர்களை அவன் திருநிலைப்படுத்த, அவர்கள் தொழுகை மேட்டுக் குருக்கள் ஆயினர். இச்செயல் எரொபவாமின் வீடு பாவத்திற்கு உள்ளாவதற்கும் மண்ணிலிருந்து அழிந்தொழிந்து போவதற்கும் காரணமாயிற்று.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்   திபா: 106: 6-7a. 19-20. 21-22 (பல்லவி: 4a )
=================================================================================
பல்லவி: ஆண்டவரே! உம் மக்கள்மீது இரக்கம் காட்டி என்னை நினைவுகூரும்.

6 எங்கள் மூதாதையரின் வழிநடந்து, நாங்களும் பாவம் செய்தோம்; குற்றம் புரிந்தோம்; தீமை செய்தோம். 7a எங்கள் மூதாதையர் எகிப்தில் நீர் செய்த வியத்தகு செயல்களைப் பற்றிச் சிந்திக்கவில்லை. பல்லவி

19 அவர்கள் ஓரேபில் ஒரு கன்றுக்குட்டியைச் செய்துகொண்டனர்; வார்ப்புச் சிலையை விழுந்து வணங்கினர்; 20 தங்கள் "மாட்சி"க்குப் பதிலாக, புல் தின்னும் காளையின் உருவத்தைச் செய்துகொண்டனர். பல்லவி

21 தங்களை விடுவித்த இறைவனை மறந்தனர்; எகிப்தில் பெரியன புரிந்தவரை மறந்தனர்; 22 காம் நாட்டில் அவர் செய்த வியத்தகு செயல்களை மறந்தனர்; செங்கடலில் அவர் செய்த அச்சுறுத்தும் செயல்களையும் மறந்தனர். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
மத் 4: 4

அல்லேலூயா, அல்லேலூயா! மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
திரளான மக்கள் வயிறார உண்டார்கள்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 1-10

அக்காலத்தில் மீண்டும் பெருந்திரளான மக்கள் கூடியிருந்தார்கள். உண்பதற்கு அவர்களிடம் ஒன்றுமில்லை.

இயேசு தம் சீடரை வரவழைத்து அவர்களிடம், "நான் இம்மக்கள் கூட்டத்தின்மீது பரிவு கொள்கிறேன். ஏற்கெனவே மூன்று நாள்களாக இவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். உண்பதற்கும் இவர்களிடம் எதுவுமில்லை. நான் இவர்களைப் பட்டினியாக வீட்டிற்கு அனுப்பி விட்டால் வழியில் தளர்ச்சி அடைவார்கள். இவர்களுள் சிலர் நெடுந்தொலையிலிருந்து வந்துள்ளனர்'' என்று கூறினார்.

அதற்கு அவருடைய சீடர்கள், "இப்பாலைநிலத்தில் இவர்களுக்குப் போதுமான உணவு அளிப்பது எப்படி?'' என்று கேட்டார்கள்.

அப்போது அவர் அவர்களைப் பார்த்து, "உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன?'' என்று கேட்டார்.

அவர்கள் "ஏழு'' என்றார்கள். தரையில் அமர மக்களுக்கு அவர் கட்டளையிட்டார்; பின்பு அந்த ஏழு அப்பங்களையும் எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, பிட்டு, பரிமாறும்படி தம் சீடர்களிடம் கொடுக்க, அவர்களும் மக்களுக்கு அளித்தார்கள். சிறு மீன்கள் சிலவும் அவர்களிடம் இருந்தன. அவற்றின்மீது அவர் ஆசி கூறிப் பரிமாறச் சொன்னார்.

அவர்கள் வயிறார உண்டார்கள்; மீதியாய் இருந்த துண்டுகளை ஏழு கூடைகள் நிறைய எடுத்தார்கள். அங்கு இருந்தவர்கள் ஏறக்குறைய நாலாயிரம் பேர். பின்பு அவர் அவர்களை அனுப்பிவிட்டார்; உடனடியாகத் தம் சீடருடன் படகேறித் தல்மனுத்தா பகுதிக்குச் சென்றார்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம்!

முன்பொரு காலத்தில் அரசன் ஒருவன் இருந்தான். அவன் தனது அரசபையில் இருந்த குருக்களுக்கு பெரிய விருந்தொன்று படைத்தான். குருக்களுக்கு விருந்து கொடுப்பதால் புண்ணியம் வந்து சேரும் என்று யாரோ சொன்னதால், அவன் அப்படிச் செய்தான்.

விருந்துக்கான ஏற்பாடுகள் எல்லாம் தடபுடலாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது விருந்து நடைபெற இருந்த இடத்தின் வழியாக பேசும் கீரிப்பிள்ளை ஒன்று சென்றது. அது அங்கே நின்றுகொண்டிருந்த குருக்கள் ஒருசிலரிடம், "இன்றைக்கு இங்கு என்ன விஷேசம்? குருக்கள் அனைவரும் இங்கே வந்திருக்கின்றனரே?" என்று கேட்டது. அதற்கு அங்கிருந்த குருக்களில் ஒருவர், "உனக்கு ஒன்றும் தெரியாதா... நம் மன்னர் குருக்களாகிய எங்களுக்கு விருந்து கொடுக்க இருக்கின்றார். அதனால்தான் நாங்கள் அனைவரும் இங்கே வந்திருக்கின்றோம்" என்றார். "அப்படியா சங்கதி... உங்களுக்கு விருந்து கொடுப்பதன் மூலம், அவர் தனக்கு புண்ணியத்தை சேர்த்துக்கொள்ளப் போகிறாரா... இந்த அரசன் தருகின்ற விருந்தைவிடவும் பெரிய விருந்தொன்றைக் கண்டேன். என்னைப் பொறுத்தளவில் அதுவே பெரிய விருந்து" என்றது. இதைக் கேட்ட குரு, "அரசன் தரக்கூடிய விருந்தைவிடவும் பெரிய விருந்தைக் கண்டாயா? எங்கே, எப்போது கண்டாய்?" என்று கேட்டார்.

"சில நாட்களுக்கு முன்பாக தன்னுடைய மனைவி மற்றும் பிள்ளையோடு வாழ்ந்து வந்த ஏழை ஒருவர், தான் வாழ்ந்து வந்த இடத்தில், உணவுக்கே வழியில்லாது போனதால் மனைவி மற்றும் பிள்ளையோடு பட்டணத்திற்கு பஞ்சம் பிழைக்கப்போனார். ஏற்கனவே இரண்டு நாட்கள் சாப்பிடாததால், அவரால் தொடர்ந்து நடக்க முடியாமல் சோர்வுற்று ஒரு மரத்தடியில் போய் அமர்ந்தார். அந்த மரத்தடியில் பறவைகள் கொண்டு வந்து போட்ட நெல்மணிகள் சிறிது கிடந்தன. எனவே, அவற்றை அள்ளி, தான் வைத்திருந்த உரலில் போட்டுக் குத்தி அரிசியாக்கி, உணவாக்கி மனைவி பிள்ளையோடு சாப்பிடத் தொடங்கினார். அந்நேரம் பார்த்து முனிவர் ஒருவர் அங்கு வந்தார். அவரைப் பார்த்தபோது சாப்பிட்டு பல நாட்கள் ஆனது போன்று தெரிந்தது. உடனே அந்த ஏழை, தன்னுடைய உணவை எடுத்து அவருக்குக் கொடுத்தார். அவர் கொடுத்த உணவை சாப்பிட்டபோதும் அவருக்குப் பசி அடங்கியதாகத் தெரியவில்லை, எனவே, அவர் தன்னுடைய மனைவியின் உணவை வாங்கி அவருக்கு சாப்பிடக் கொடுத்தார். அப்போதும் அவருக்குப் பசியடங்கியதாகத் தெரியவில்லை. இறுதியாக அந்த ஏழை தன்னுடைய மகனுடைய உணவை வாங்கி அவருக்கு சாப்பிடக் கொடுத்தார். அதனைச் சாப்பிட்ட பிறகுதான் அந்த முனிவருக்குப் பசியடங்கியது. அவர் தனக்கு உணவு கொடுத்த அந்த ஏழையையும் அவருடைய மனைவி மற்றும் பிள்ளையை கைகூப்பி வணங்கிவிட்டு, அவ்விடத்தை விட்டுச் சென்றார்.

இந்த நேரத்தில் நான் அங்கு சென்றேன். அப்போது என்ன நடந்தது என்று தெரியவில்லை என் உடல் முழுவதும் தங்க நிறமாக மாறியது. அப்போது நினைத்துக்கொண்டேன் தாங்கள் பசியாக இருந்ததபோதும் தங்களை நாடி வந்த முனிவருக்கு உணவு கொடுத்த இவர்கள் சாதாரணமானவர்கள் கிடையாது; இந்த இடமும் சாதாரணமான இடம் கிடையாது" என்று.

பேசும் கீரிப்பிள்ளை இவ்வாறு சொல்லிவிட்டு அந்த குருவிடத்தில் தொடர்ந்து சொன்னது, "தன்னுடைய வறிய நிலையிலும் தன்னை நாடி வந்தவருக்கு உணவு கொடுத்ததினால்தான் அரசரின் விருந்தைவிடவும் அந்த ஏழையின் விருந்தே பெரியது என்றேன்" என்று. மகாபாரதத்தில் இடம்பெறும் இந்த நிகழ்வு, நம்முடைய வறிய நிலையிலும் நம்மிடம் இருப்பதைப் பிறருக்குப் பகிர்ந்து கொடுக்கின்றபோது அதுவே தலைசிறந்த விருந்து என்னும் உண்மையை நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, ஏழு அப்பங்களையும், சிறிது மீன்களையும் கொண்டு நான்காயிரம் பேருக்கு உணவு கொடுக்கின்ற நிகழ்வை வாசிக்கின்றோம். இயேசு புரிந்த இந்த அற்புதச் செயல் நடைபெறுவதற்கு ஒருவர் மனமுவந்து கொடுத்த ஏழு அப்பங்களும், சில மீன்களும் காரணமாக இருகின்றது. அவரைப் பார்த்து மற்றவர்களும் தங்களிடம் இருப்பதைப் பகிர்ந்துகொள்ள முன்வருகின்றார்கள். இதனால் ஆண்டவர் இயேசுவால் அற்புதமாக நான்காயிரம் பேருக்கு உணவு கொடுக்க முடிகின்றது. இந்நிகழ்வு புறவினத்தார் வாழுகின்ற பகுதியில் நடைபெறுகின்றது. இதன்மூலம் அவர்களும் ஆண்டவரின் ஆசியை பெற்றுக்கொள்வார்கள் என்னும் உண்மை உணர்த்தப்படுகின்றது. அதே நேரத்தில் நாம் நம்மிடத்தில் இருப்பதை பிறருக்குப் பகிர்ந்து கொடுக்க முன்வருகின்றபோது இல்லாமை என்பது இல்லாமல் போகும் என்னும் உண்மையும் வலியுறுத்தப்படுகின்றது.

ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம், நம்மிடம் இருப்பதை இல்லாதவர்களுக்குப் பகிர்ந்துகொடுப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!