Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      09  பெப்ரவரி 2018  
                                        ஆண்டின் பொதுக்காலம் 5ஆம் ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
தாவீதின் குடும்பத்திலிருந்து இஸ்ரயேல் குலம் பிரிக்கப்பட்டது.

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 11: 29-32; 12: 19



ஒரு நாள் எரொபவாம் எருசலேமிலிருந்து வெளியே போனபோது, சீலோவைச் சார்ந்த அகியா என்ற இறைவாக்கினர், அவனை வழியில் கண்டார். அவர் புதுச் சால்வை ஒன்று அணிந்திருந்தார். இருவரும் வயல் வெளியே தனித்திருந்தனர்.

அப்பொழுது அகியா தாம் போர்த்தியிருந்த புதுச் சால்வையை எடுத்து அதைப் பன்னிரு துண்டுகளாய்க் கிழித்தார். பிறகு அவர் எரொபவாமை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: "இவற்றில் பத்துத் துண்டுகளை உனக்கென எடுத்துக்கொள். ஏனெனில் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு இவ்வாறு கூறுகிறார்: இதோ, நான் சாலமோன் கையினின்று அரசைப் பறித்து, பத்துக் குலங்களை உனக்கு அளிக்கப் போகிறேன்.

ஆயினும் என் ஊழியன் தாவீதை முன்னிட்டும், இஸ்ரயேலரின் நகர்கள் அனைத்திலிருந்தும் நான் தேர்ந்துகொண்ட எருசலேம் நகரை முன்னிட்டும் ஒரு குலம் மட்டும் அவன் கையில் இருக்கும்.' " தாவீதின் குடும்பத்துக்கு எதிராக அன்று கிளர்ந்தெழுந்த இஸ்ரயேலர் இன்றுவரை அவ்வாறே இருக்கின்றனர்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்   திபா: 81: 9-10a. 11-12. 13-14 (பல்லவி: 10a, 8c)
=================================================================================

பல்லவி: கடவுளாகிய ஆண்டவர் நானே; நீங்கள் எனக்குச் செவிசாய்ப்பீர்.

9 உங்களிடையே வேற்றுத் தெய்வம் இருத்தலாகாது; நீங்கள் அன்னிய தெய்வத்தைத் தொழலாகாது. 10ய உங்களை எகிப்து நாட்டினின்று அழைத்து வந்த கடவுளாகிய ஆண்டவர் நானே. பல்லவி

11 ஆனால் என் மக்கள் என் குரலுக்குச் செவிசாய்க்கவில்லை; இஸ்ரயேலர் எனக்குப் பணியவில்லை. 12 எனவே, அவர்கள் தங்கள் எண்ணங்களின்படியே நடக்குமாறு, அவர்களின் கடின இதயங்களிடமும் அவர்களை விட்டு விட்டேன். பல்லவி

13 என் மக்கள் எனக்குச் செவிசாய்த்திருந்தால், இஸ்ரயேலர் நான் காட்டிய வழியில் நடந்திருந்தால், எவ்வளவோ நலமாயிருந்திருக்கும். 14 நான் விரைவில் அவர்கள் எதிரிகளை அடக்குவேன், என் கை அவர்களின் பகைவருக்கு எதிராகத் திரும்பும். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
திப 16: 14b

அல்லேலூயா, அல்லேலூயா! உம் திருமகனின் சொற்களை எங்கள் மனத்தில் இருத்தும்படி ஆண்டவரே, எங்கள் இதயத்தைத் திறந்தருளும். அல்லேலூயா.


=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
காது கேளாதோர் கேட்கவும், பேச்சற்றோர் பேசவும், ஆண்டவர் செய்கிறார்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 31-37

இயேசு தீர் பகுதியை விட்டு, சீதோன் வழியாகச் சென்று தெக்கப்பொலி பகுதி நடுவே வந்து, கலிலேயக் கடலை அடைந்தார்.

காது கேளாதவரும் திக்கிப் பேசுபவருமான ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்து, அவர்மீது கை வைத்துக் குணமாக்குமாறு அவரை வேண்டிக்கொண்டனர்.

இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ் நீரால் அவர் நாவைத் தொட்டார்; பிறகு வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி, "எப்பத்தா" அதாவது "திறக்கப்படு" என்றார்.

உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன; நாவும் கட்டவிழ்ந்தது. அவர் தெளிவாகப் பேசினார். இதை எவருக்கும் சொல்ல வேண்டாமென்று அவர்களுக்கு அவர் கட்டளையிட்டார்.

அவரது கட்டளைக்கு நேர்மாறாக இன்னும் மிகுதியாய் அவர்கள் அதை அறிவித்து வந்தார்கள்.

அவர்கள் அளவு கடந்த வியப்பில் ஆழ்ந்தவர்களாய், "இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகிறார்! காது கேளாதோர் கேட்கவும் பேச்சற்றோர் பேசவும் செய்கிறாரே!" என்று பேசிக்கொண்டார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
எளியவர், வறியவர் மட்டில், மாற்றுத் திறனாளிகள் வெளிப்படும் இயேசுவின் பரிவு

தனது பள்ளிப் பருவ ஆசான், தன் மகளின் திருமணத்திற்கு நேரில் வந்து அழைத்தபோது, கறாராய் மறுத்துவிட்ட தமிழகத்தின் அன்றைய முதலமைச்சர், முகூர்த்த நேரத்திச் சரியாய் போய் மணமக்களை ஆசிர்வத்தித்தார். அவருடைய வருகையை சிறிதும் எதிர்பார்த்திராத அந்த ஆசான் அவரிடம், "நீங்கள் வருவது தெரிந்திருந்தால், சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கலாமே!" என்று ஆனந்தக் கண்ணீரோடு நின்றார். உடனே அந்த முதலமைச்சர், "கடன் வாங்கி கல்யாணம் முடிக்கும் தங்களுக்கு, இன்னும் அதிகச் செலவு வேண்டாம் என்றுதான் அப்படிச் செய்தேன்" என்றார்.

இப்படி எளியவர் மட்டில் மிகுந்த அன்பும் நேசமும் கொண்ட அந்த முதலமைச்சார் வேறு யாருமல்ல கர்ம வீரர் காமராஜர் அவர்களே.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு காது கேளாதவரும் திக்கிப் பேசுபவருமான ஒருவரைக் குணப்படுத்துகின்றார். இயேசு அம்மனிதரைக் குணப்படுத்திய விதம் அவர் உடல் ஊனமுற்றோர், வறியவர் மட்டில் எந்தளவுக்கு பரிவுகொண்டிருந்தார் என்பதை நமக்கு மிகத் எடுத்துக்கூறுகின்றது. புறவினத்தார் அதிகமாக வாழக்கூடிய தீர், சீதோன், தெக்கப்போலி வழியாக கலிலேயாக் கடலை அடைகின்ற இயேசுவிடம் சிலர் காதுகேளாதவரும் திக்கிப் பேசுபவருமான ஒருவரைக் கொண்டுவந்து, அவர்மீது இயேசு கைவைத்துக் குணமாக்குமாறு கேட்கின்றார்கள். இயேசு அம்மனிதரை வழக்கமாகக் குணப்படுத்துவது போன்று குணப்படுத்தவில்லை. மாறாக, அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துக் கொண்டுபோய் குணப்படுத்துகின்றார். காரணம் காதுகேளாத அம்மனிதரை இயேசு எல்லாருக்கும் முன்பாக வைத்துக் குணப்படுத்தும் பட்சத்தில் மக்கள் அவரை இழிவாகப் பார்ப்பார்கள் என்பதால், இயேசு அவரைத் தனியே அழைத்துக்கொண்டு போய் குணப்படுத்துகின்றார்.

இன்னும் சொல்லவேண்டும் என்று சொன்னால், காதுகேளாதவர்களின் பிரச்சனை மிகவும் நுட்பமானது. அவர்களின் பிரச்சனை கண்தெரியாதவர்கள் மற்றும் கால் ஊனமுற்றோர்களின் பிரச்னையை விட மிகக்கொடியது. கண் தெரியாதவர்களைப் பார்த்தும், கால் ஊனமுற்ற மனிதர்களைப் பார்த்தும் இரக்கப்படும் இந்த சமூகம் காதுகேளாதவர்களைப் பார்த்து இரக்கம் கொள்ளாது, மாறாக அவர்களை நகைக்குப்புரிவர்களாகவே பார்க்கும். இத்தகைய பிரச்சனைகள் காது கேளாதவர்களுக்கு உள்ளபடியால், இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துக்கொண்டு போகின்றார்.

காதுகேளாத அந்த மனிதரை கூட்டத்திலிருந்து தனியே அழைத்துக்கொண்டு போன பின்பு, இயேசு அம்மனிதருடைய காதுகளில் தன்னுடைய விரலையிட்டு, உமிழ்நீரால் அவருடைய நாவினைத் தொடுக்கின்றார். இயேசு உமிழ்நீரால் அவருடைய நாவினைத் தொட்டு குணப்படுத்துவது என்பது, இயேசு அசாதாரமானவற்றை மிகவும் சாதாரணமாக செய்யக்கூடியவர் என்பதை நமக்கு எடுத்துக் கூறுகின்றது. காது கேளாதவரை கேட்கச் செய்தது என்பது மிகவும் அசாதாரணமான ஒன்று. ஆனால், இயேசு அதனை உமிழ்நீரால் மிகவும் சாதாரணமாகச் செய்தது என்பதுதான் நம்முடைய கவனத்திற்கு உரியதாக இருக்கின்றது.

இயேசு காதுகேளாத அம்மனிதரைக் குணப்படுத்தியபோது செய்த இன்னொரு செயலும் நமது சிந்தனைக்குரியதாக இருக்கின்றது. அதுதான் அவர் வானத்தை அண்ணார்ந்து பார்த்து வேண்டியது. காதுகேளாத மனிதரை இயேசு குணப்படுத்தியது மாயமோ மந்திரமோ அல்ல, மாறாக அது எல்லாம் வல்ல இறைவனின் துணையால்தான் என்பதை இந்நிகழ்வின் வழியாக அறிந்துகொள்ளலாம். இதன் மூலம் ஆண்டவர் இயேசு, பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் அவருக்கு எதிராக முன்வைத்த "இயேசு பேய்களின் தலைவனாகிய பெயல்சபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகின்றார்" என்ற பொய்யான வாதத்திற்கு சரியான பதில் கொடுக்கின்றார். இறுதியாக இயேசு அந்த மனிதரைக் குணப்படுத்தும் போது பயன்படுத்துகின்ற "எப்பத்தா" என்ற வார்த்தையும் நமது கவனத்திற்கு உரியதாக இருக்கின்றது. அரமேய மொழியில் இருக்கின்ற இவ்வார்த்தை திறக்கப்படு என்ற பொருளில் இருக்கின்றது. இயேசு இவ்வார்த்தைகளைச் சொன்ன உடனே காது கேளாதவருடைய காது கேட்கின்றது, அவருடைய நா கட்டவிழ்கின்றது.

இயேசு இவ்வாறு காது கேளாதவரும் திக்கி பேசுபவருமான மனிதரைக் குணப்படுத்தியதைப் பார்க்கும் மக்கள் கூட்டம், "இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகிறார்! காது கேளாதோர் கேட்கவும் பேச்சற்றவர் பேசவும் செய்கின்றாரே!" என்று பேசிக்கொள்கின்றார். இயேசு செய்த இவ்வருமடையாளத்தைக் கண்டு மக்கள் பேசுகின்ற வார்த்தைகள், படைப்பில் தொடக்கத்தில் ஆண்டவராகிய கடவுள் எல்லாவற்றையும் படைத்து முடித்தபின்பு சொல்கின்ற, எல்லாம் நன்றாக இருக்கின்றது" என்ற வார்த்தைகளை நினைவுபடுத்துவதாக இருக்கின்றது. இன்னொரு பக்கம் இருக்க, இயேசு செய்த இவ்வருமடையாளத்தின் மூலம் மெசியாவின் வருகை இவ்வுலகில் நிகழ்ந்துவிட்டது என்பதை நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றது.

ஆகவே, இயேசுவை போன்று மாற்றுத் திறனாளிகள், எளியவர், வறியவர் மீது உண்மையான பரிவுடன் வாழ்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!