Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      07  பெப்ரவரி 2018  
                                        ஆண்டின் பொதுக்காலம் 5ஆம் ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
சேபா நாட்டு அரசி சாலமோனின் ஞானத்தைப் பற்றிக் கேள்வியுற்றார்.

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 10: 1-10

அந்நாள்களில் ஆண்டவரின் பெயரை முன்னிட்டு, சாலமோன் அடைந்திருந்த புகழைப் பற்றிச் சேபா நாட்டு அரசி கேள்வியுற்றுக் கடினமான கேள்விகள் மூலம் அவரைச் சோதிக்க வந்தார். அவர் பரிவாரங்களோடும், நறுமணப் பொருள், மிகுதியான பொன், விலையுயர்ந்த கற்கள் ஆகியவற்றைச் சுமந்துவந்த ஒட்டகங்களோடும் எருசலேமுக்கு வந்து சேர்ந்தார்.

அவர் சாலமோனிடம் தம் மனத்திலிருந்த கேள்விகள் அனைத்தையும் வெளிப்படுத்தினார். சாலமோன் அவருடைய கேள்விகளுக்கெல்லாம் விடை கூறினார். அவர் கேட்டவற்றுள் பதிலளிக்க இயலாதபடி எதுவும் அரசருக்குப் புதிராகத் தோன்றவில்லை. சேபாவின் அரசி, சாலமோனுக்கு இருந்த பல்வகை ஞானம், அவர் கட்டியிருந்த அரண்மனை, அவர் உண்டு வந்த உணவு வகைகள், அவருடைய அலுவலரின் வரிசைகள், பணியாளர்களின் சுறுசுறுப்பு, அவர்களுடைய சீருடை, பானம் பரிமாறுவோரின் திறமை, ஆண்டவரின் இல்லத்தில் அவர் செலுத்திய எரிபலிகள் ஆகியவற்றைக் கண்டு பேச்சற்றுப் போனார். அவர் அரசரை நோக்கிக் கூறியது: "உம்முடைய செயல்களையும் ஞானத்தையும் பற்றி என் நாட்டில் நான் கேள்விப்பட்டது உண்மையே எனத் தெரிகிறது. நான் இங்கு வந்து அவற்றை நேரில் காணும் வரை, அச்செய்திகளை நம்பவில்லை. இப்பொழுதோ, இங்குள்ளவற்றுள் பாதியைக் கூட அவர்கள் எனக்குச் சொல்லவில்லை என அறிகிறேன். உண்மையில் நான் கேள்விப்பட்டதை விட, உம் ஞானமும் செல்வமும் மிகுதியாய் இருக்கின்றன. உம்முடைய மனைவியர் நற்பேறு பெற்றோர்! எப்போதும் உமக்குப் பணிபுரிந்து உம்முடைய ஞானம் நிறைந்த மொழிகளைக் கேட்கும் உம்முடைய பணியாளரும் நற்பேறு பெற்றவரே! உம்மீது பரிவு கொண்டு உம்மை இஸ்ரயேலின் அரியணையில் அமர்த்திய உம் கடவுளாகிய ஆண்டவர் போற்றி! போற்றி! ஆண்டவர் இஸ்ரயேலின் மீது என்றென்றும் அன்பு கொண்டுள்ளதால், அவர்களுக்கு நீதி நியாயம் வழங்க உம்மை அரசராக ஏற்படுத்தியுள்ளார்." அவர் ஏறத்தாழ நாலாயிரத்து எண்ணூறு கிலோ பொன், ஏராளமான நறுமணப் பொருள்கள், விலையுயர்ந்த கற்கள் ஆகியவற்றை அரசருக்கு அளித்தார். சேபாவின் அரசியிடமிருந்து வந்தது போல, அத்துணை நறுமணப் பொருள்கள் அரசர் சாலமோனுக்கு அதன் பிறகு வந்ததே இல்லை.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்   திபா: 37: 5-6. 30-31. 39-40 (பல்லவி: 30a)
=================================================================================
பல்லவி: நேர்மையாளரின் வாய் ஞானத்தை அறிவிக்கும்.

5 உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு; அவரையே நம்பியிரு; அவரே உன் சார்பில் செயலாற்றுவார். 6 உன் நேர்மையைக் கதிரொளி போலும், உன் நாணயத்தை நண்பகல் போலும் அவர் விளங்கச் செய்வார். பல்லவி

30 நேர்மையாளரின் வாய் ஞானத்தை அறிவிக்கும்; அவர்கள் நா நீதிநெறியை எடுத்துரைக்கும். 31 கடவுளின் திருச்சட்டம் அவர்களது உள்ளத்தில் இருக்கின்றது; அவர்களின் கால்கள் சறுக்குவதில்லை. பல்லவி

39 நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்து வருகின்றது, நெருக்கடியான நேரத்தில்அவர்களுக்கு வலிமையும் அவரே. 40 ஆண்டவர் துணைநின்று அவர்களை விடுவிக்கின்றார்; பொல்லாரிடமிருந்து அவர்களை விடுவிக்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகுந்ததால், அவர்களை மீட்கின்றார். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 17: 17ab

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். உமது வார்த்தையே உண்மை. அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================

மனிதரின் உள்ளத்திலிருந்து வருவதே அவரைத் தீட்டுப்படுத்தும்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 14-23


அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தை மீண்டும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை நோக்கி, "நான் சொல்வதை அனைவரும் கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள். வெளியேயிருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை. மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப்படுத்தும். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்" என்று கூறினார். அவர் மக்கள் கூட்டத்தை விட்டு வீட்டிற்குள் வந்தபோது அவருடைய சீடர் அவரிடம் இந்த உவமையைப் பற்றிக் கேட்க, அவர் அவர்களிடம், "நீங்களுமா இந்த அளவுக்குப் புரிந்துகொள்ளாமல் இருக்கிறீர்கள்? வெளியேயிருந்து மனிதருக்குள்ளே செல்லும் எதுவும் அவர்களைத் தீட்டுப்படுத்த முடியாது என உங்களுக்குத் தெரியாதா? ஏனென்றால், அது அவர்களுடைய உள்ளத்தில் நுழையாமல் வயிற்றுக்குச் சென்று கழிப்பிடத்திற்குப் போய்விடுகிறது" என்றார். இவ்வாறு அவர் எல்லா உணவுப் பொருள்களும் தூயன என்று குறிப்பிட்டார். மேலும், "மனிதருக்கு உள்ளேயிருந்து வருவதே அவர்களைத் தீட்டுப்படுத்தும். ஏனெனில் மனித உள்ளத்திலிருந்தே பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் வெளிவருகின்றன. தீயனவாகிய இவை அனைத்தும் உள்ளத்திலிருந்து வந்து மனிதரைத் தீட்டுப்படுத்துகின்றன" என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

வெளியேயிருந்து செல்லும் எந்த எண்ணத்தையும்; மனிதன் அசைப் போட்டு தனதாக்காத வரை பயனற்றதாகவே இருக்கும்.

மனிதன் உள்ளே பெற்றுக் கொள்ளும் எதனையும் தனதாக்கிக் கொள்ள முற்படும் போது தான், அவன் நல்லதையோ, கெட்டதையோ பெற்றெடுக்கின்றான்.

மனிதனின் வாழ்வும் எதிர்காலமும் அவன் பெற்றெடுப்பதைப் பொருத்தே உள்ளது.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
தூயவன் வாழும் இல்லத்தை தூய்மையாக வைத்திருப்போம்!

பெரியவர் ஒருவர் மருத்துவரிடம் சென்று, "டாக்டர் என்னுடைய உடலெல்லாம் ஒரே வலி. எங்கு தொட்டாலும் துடிக்கிறேன்" என்றார்.

அந்தப் பெரியவர் சொன்னதைக் கேட்டு மருத்துவருக்கு ஆச்சரியமாக இருந்தது. இருந்தாலும் அவர் சொன்னதற்கு இணங்கி, அவரைச் சோதித்துப் பார்த்தார். சோதித்துப் பார்த்த பின்தான் தெரிந்தது அந்தப் பெரியவரின் உடம்பில் நோய்க்கான சுவடே இல்லை என்பது. மருத்துவருக்கு ஒரே குழப்பமாக இருந்தது. ஏதோ யோசித்தவராய், சட்டென அவர் பெரியவரின் சுட்டுவிரலை உற்றுப்பார்த்தார். அப்போதுதான் தெரிந்தது அதில் காயம் இருப்பது. அதன்பிறகு அவர் அந்தப் பெரியவரின் சுட்டிவிரலில் மருந்து தடவி, கட்டுப்போட்டு அனுப்பிய பிறகுதான் உடலில் வலியல்ல, சுட்டிவிரலில்தான் வலி என்ற உண்மை அந்தப் பெரியவருக்குத் தெரியவந்தது.

சுட்டிவிரலில் காயத்தை வைத்துக்கொண்டு உடல் முழுவதும் வலிப்பதாய் உணர்ந்த பெரியவரைப் போன்றுதான் நாமும் மனதில் வெறுப்பையும், கெட்ட எண்ணத்தையும், பொறாமையையும் வைத்துக்கொண்டு புறக்காரணிகளால்தான் நான் கெட்டுப்போனேன் என்று பிதற்றிக்கொண்டிருக்கின்றோம். முதலில் நம் மனதை சீர்செய்தால், மற்றவையெல்லாம் தானாகவே சீராகும் என்பதுதான் நிதர்சனம்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு மக்களைத் தம்மிடம் வரவழைத்து, அவர்களிடம் "வெளியேயிருந்து மனிதருக்கு உள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக்கூடியது ஒன்றுமில்லை. மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப்படுத்தும்" என்கின்றார். இயேசுவின் இவ்வார்த்தைகள் ஆழமாக சிந்தித்துப் பார்க்கப்பட வேண்டியவையாக இருக்கின்றன. "முதலில் வெளியேயிருந்து மனிதருக்கு உள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக்கூடியது ஒன்றுமில்லை" என்ற வார்த்தைகளைச் சிந்தித்துப் பார்ப்போம்.

படைப்பின் தொடக்கத்தில், ஆண்டவராகிய கடவுள் இவ்வுலகினைப் படைத்தபோது, தான் படைத்த அனைத்தும் நல்லதாகவே கண்டார். ஆனால், யூதர்கள் இவை இவையெல்லாம் உண்ணத் தக்கவை, இவை இவை எல்லாம் தீட்டானவை என்று வகை பிரித்து, கடவுளின் படைப்பையே கொச்சைப்படுத்தினார்கள், அது மட்டுமல்லாமல் தாங்கள் தீட்டானவை என்று கருதிய உணவு வகைகளை உண்டு வந்த மக்களையும் தீட்டானவர்கள் என்று பார்க்கத் தொடங்கினார்கள். இந்த பின்னணியில்தான் ஆண்டவர் இயேசு வெளியே இருந்து மாந்தருக்கு உள்ளே வந்து அவர்களைத் தீட்டுப்படுத்தக்கூடியது ஒன்றுமில்லை என்கின்றார். அப்படியானால், கடவுள் படைப்பில் எதுவும் தாழ்ந்தவையோ, தீட்டானவையோ கிடையாது என்பதுதான் உண்மை.

அடுத்ததாக, "மனிதருக்கு உள்ளே இருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப்படுத்தும்" என்ற வார்த்தைகளைச் சிந்தித்துப் பார்ப்போம். செயலின் ஆதிமூலம் சிந்தனை அல்லது எண்ணம் என்று சொல்வார்கள். அந்த சிந்தனையின் ஆதிமூலமாக இருப்பது ஒருவருடைய மனமே. ஆகையால், மனம்தான் எல்லாவற்றிற்கும் மூல காரணமாக இருக்கின்றது. ஒருவருடைய மனதில் பொதிந்திருக்கின்ற எண்ணங்களே செயல்வடிவம் பெறுகின்றன. மனதில் புதைந்துகின்ற கோபம், வெறுப்பு, பகைமை, தீய எண்ணங்கள், பொறாமை, கட்சி மனப்பான்மை இவையெல்லாம் வெடித்துத்தான் மண்ணுலகை மன்னாக்கிப் போட்டுவிடுகின்றன. அதனால்தான் இயேசு மனிதருக்கு உள்ளே இருந்து வருபவையே அவனைத் தீட்டுப் படுத்துகின்றது என்கிறார்.

இந்த இடத்தில் நம்முடைய மனதை அல்லது உள்ளத்தை எப்படி மாசில்லாமல், தூய்மையாக வைத்திருப்பது என்பது குறித்து நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். நம்முடைய உள்ளத்தை தூய்மையாக வைத்திருக்க நாம் வேறொன்றும் செய்யத் தேவையில்லை, அதற்கு நம்முடைய உள்ளத்தில் நல்ல எண்ணங்களை, நேர்மறைச் சிந்தனைகளைக் கொண்டு வைத்தாலே போதுமானது. எப்படி விளக்கை ஏற்றி வைக்கும்போது சுற்றிலுமுள்ள இருள் தானாக விலகுகின்றதோ, அதுபோன்று நம்முடைய உள்ளத்தில் நல்ல எண்ணங்களை வளர்த்தெடுத்தால், தீய எண்ணங்கள் தானாகவே விலகிவிடும். அப்போது நம் உள்ளம் இறைவன் வாழும் இல்லமாக மாறிவிடும்.

வீடுகளில் தேவையில்லாத பொருட்களை தூக்கி எறிவதற்கென்றே ஒரு இடமோ அறையோ இருக்கும். அதில் நாம் ஒன்றுக்கும் உதவாத பொருட்களைத் தூக்கி எறிவோம். அது போன்றே வாழ்க்கையில் ஒன்றுக்குமே உதவாத தீய என்னங்களை எல்லாம், நம்முடைய மனதில்தான் தூக்கி எறிகின்றோம். அவை அங்கேயே கிடந்து, சீல்படிந்து, நம்முடைய ஒட்டுமொத்த உடலையையும் பாழ்படுத்திவிடுகின்றது. ஆகவே, நம்மைப் பாழ்படுத்தும் தீய எண்ணங்களை நம்மிடமிருந்து அப்புறப்படுத்திவிட்டு, நம்மைச் சீர்படுத்தும் நல்ல எண்ணங்களை நம்முடைய உள்ளத்தில் விதைப்போம், இறைவார்த்தையின் விளைநிலமாக நம்முடைய உள்ளத்தை மாற்றி அமைப்போம். அப்போது நம்முடைய உள்ளம் இறைவன் தங்கும் இல்லமாக இருக்கும் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது.

ஆகவே, எல்லாவற்றையும் நல்லதாகப் பார்ப்போம். உள்ளத்தைத் தூய்மையாக வைத்திருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!