Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      05  பெப்ரவரி 2018  
                                        ஆண்டின் பொதுக்காலம் 5ஆம் ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
உடன்படிக்கைப் பேழையைத் திருத்தூயகத்தில் வைத்தனர்; ஆண்டவரின் மாட்சி கோவிலை நிரப்பிற்று.

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 8: 1-7, 9-13

அந்நாள்களில் சாலமோன் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைத் தாவீதின் நகர் சீயோனினின்று கொண்டுவர விரும்பினார். அதற்காக அவர் இஸ்ரயேலின் பெரியோரையும் எல்லாக் குலத்தலைவர்களையும் இஸ்ரயேல் மக்களின் மூதாதையர் வீட்டுத் தலைவர்களையும் எருசலேமிற்குத் தம்மிடம் வரும்படி அழைத்தார்.

அதற்கிணங்க, அவர்கள் அனைவரும் ஏழாம் மாதமாகிய ஏத்தானிம் மாதத்தின் பண்டிகையின்போது, அரசர் சாலமோன் முன் கூடினர். இஸ்ரயேலின் பெரியோர் அனைவரும் வந்தனர். குருக்கள் பேழையைத் தூக்கிக் கொண்டனர். ஆண்டவரின் பேழை, சந்திப்புக் கூடாரம், கூடாரத்தின் தூய கலன்கள் அனைத்தையும் குருக்களும் லேவியரும் சுமந்துசென்றனர். அரசர் சாலமோனும், அவரிடம் வந்து குழுமிய இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும், எண்ணவோ கணக்கிடவோ முடியாத அளவு திரளான ஆடுகளையும் மாடுகளையும் பேழைக்கு முன்னால் பலியிட்டனர்.

பின்னர், குருக்கள் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைக் கோவில் கருவறையாகிய திருத்தூயகத்தில் அதற்குரிய இடத்தில் கெருபுகளின் இறக்கைகளின் கீழே கொண்டு வந்து வைத்தனர். அக்கெருபுகள் பேழை இருக்கும் இடத்தில் தங்கள் இரண்டு இறக்கைகளையும் விரித்து, பேழையையும், அதன் தண்டுகளையும் மூடியவாறு இருந்தன. இரு கற்பலகைகளைத் தவிர வேறொன்றும் பேழைக்குள் இல்லை. இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிய பொழுது அவர்களோடு உடன்படிக்கை செய்துகொண்ட ஓரேபு மலையில் மோசே அதற்குள் வைத்தவை அவை.

குருக்கள் தூயகத்தினின்று வெளியே வருகையில் ஒரு மேகம் ஆண்டவரின் இல்லத்தை நிரப்பிற்று. அம்மேகத் தின் பொருட்டு குருக்கள் திருப்பணி புரிய அங்கு நிற்க இயலவில்லை. ஏனெனில் ஆண்டவரின் மாட்சி அவர் இல்லத்தை நிரப்பிற்று. அப்பொழுது சாலமோன், "ஆண்டவரே! நீர் கரிய மேகத்தில் உறைவதாகக் கூறினீர். நீர் என்றென்றும் தங்கி வாழ உயர் இல்லம் ஒன்றை உமக்காக நான் கட்டியுள்ளேன்" என்றார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்   திபா: 132: 6-7. 8-10 (பல்லவி: 8 )
=================================================================================
பல்லவி: ஆண்டவரே! உம் உறைவிடத்திற்கு வல்லமையோடு எழுந்தருளும்.

6 திருப்பேழை எப்ராத்தாவில் இருப்பதாய்க் கேள்விப்பட்டோம்; வனவெளியில் அதைக் கண்டுபிடித்தோம். 7 "அவரது உறைவிடத்திற்குச் செல்வோம்! வாருங்கள்; அவரது திருவடிதாங்கிமுன் வீழ்ந்து பணிவோம்!"" பல்லவி

8 ஆண்டவரே! நீர் உமது வல்லமை விளங்கும் பேழையுடன் உமது உறைவிடத்திற்கு எழுந்தருள்வீராக! 9 உம் குருக்கள் நீதியை ஆடையென அணிவார்களாக! உம் அன்பர்கள் அக்களிப்பார்களாக! 10 நீர் திருப்பொழிவு செய்த அரசரை, உம் ஊழியராகிய தாவீதின் பொருட்டுப் புறக்கணியாதேயும். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
மத் 4: 23

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இயேசுவைத் தொட்ட அனைவரும் நலமடைந்தனர்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 53-56

இயேசுவும் அவருடைய சீடர்களும் மறு கரைக்குச் சென்று கெனசரேத்துப் பகுதியை அடைந்து படகைக் கட்டி நிறுத்தினார்கள். அவர்கள் படகை விட்டு இறங்கிய உடனே, மக்கள் இயேசுவை இன்னார் என்று கண்டுணர்ந்து, அச்சுற்றுப்பகுதி எங்கும் ஓடிச் சென்று, அவர் இருப்பதாகக் கேள்விப்பட்ட இடங்களுக்கெல்லாம் நோயாளர்களைப் படுக்கையில் கொண்டு வரத் தொடங்கினார்கள்.

மேலும் அவர் சென்ற ஊர்கள், நகர்கள், பட்டிகள் அனைத்திலும் உடல் நலம் குன்றியோரைப் பொது இடங்களில் கிடத்தி, அவருடைய மேலுடையின் ஓரத்தையாவது அவர்கள் தொட அனுமதிக்குமாறு அவரை வேண்டினார்கள். அவரைத் தொட்ட அனைவரும் நலமடைந்தனர்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.





சிந்தனை

தொடுகை அற்புதமானதும், நலம் தரக் கூடியதும். இதனை உணர்ந்தவர்கள் ஊருக்கு நல்லது செய்வது இயல்பானது.

இந்த தொடுகையை தவறாக உணர்ந்து கொண்டு பயன்படுத்துவோரால், பல காயங்கள் ஏற்படுவதும் உண்டு.

நம்முடைய மனநிலையே இதனை உயர்வாகவும், உத்தமாகவும் ஆக்கிட முடியும்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
தொடுதலில் வெளிப்படும் இறைவல்லமை!

ஆப்ரிக்காவில் உள்ள ஒரு குட்டி நாடு ஜைரே (Zaire). இங்கே கருப்பினத்தவரும் வெள்ளையினத்தவரும் சேர்ந்தே வாழ்கின்றனர்.

ஜைரேயில் பண்ணை நிலங்கள் அதிகம் உண்டு. அங்கே இருந்த ஒரு பண்ணை நிலத்தில் இசபெல் என்ற பத்து வயதுச் சிறுமி தன்னுடைய பெற்றோர்களோடு வாழ்ந்து வந்தாள். அவளோடு சேர்ந்து விளையாடுவதற்கோ, அவளோடு சேர்ந்து நேரத்தைச் செலவழிக்கவோ அவளுடைய வயதை ஒத்த சிறுவர் சிறுமியர் யாருமே அங்கு இல்லாததால், அவள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தாள்.

இதற்கிடையில் இசபெல் இருந்த பண்ணை வீட்டிற்குப் பின்பக்கத்தில் ஒரு கறுப்பின சிறுவன் வந்து தங்கினான். அவன் பெற்றோர் இல்லாத அனாதை. அவன், இசபெல்லின் பண்ணைவீட்டுப் பின்பக்கச் சுவற்றில் சாய்ந்துகொண்டு அவ்வப்போது ஏதாவது ஒரு பாடல் பாடுவான். அவன் பாடும் பாடல் இசபெல்லுக்கு மிகவும் பிடித்திருந்தது. இவ்வளவு அற்புதமான குரல்வளம் கொண்ட அந்த சிறுவனுடைய முகத்தைப் பார்க்கவேண்டும் என்று அவள் ஆவல் கொண்டாள். ஆனால், அவளுடைய வீட்டுக்குப் பின்பக்கம் ஜன்னலோ கதவோ இல்லாததினால் அவளால் அவனுடைய முகத்தைக் காணமுடியாமல் போய்க்கொண்டிருந்தது.

இப்படி நாட்கள் நகர்ந்துகொண்டிருந்தபோது ஒருநாள், இசபெல் தன்னுடைய வீட்டுப் பின்பக்கச் சுவற்றில் துளை ஒன்று இருப்பதைக் கண்டாள். அந்தத் துளையானது அவளுடைய கை போகுமளவுக்கு இருந்தது. எனவே, அவள் அத்துளை வழியாக தனது கையை நீட்டுவதும் எடுப்பதுமாக இருந்தாள். அச்சமயம் பார்த்து, சிறுவன் பாடல் பாடத் தொடங்கினான். உடனே இசபெல் தன்னுடைய கையை துளையின் வழியாக நீட்டி அவனை தன் பக்கம் அழைத்தாள். திடீரென்று சுவற்றில் கையைப் பார்த்ததும் அந்தச் சிறுவன் கொஞ்சம் பயந்தாலும் அந்த கையின் அருகே சென்றான். அந்தக் கை அவனை வாஞ்சையோடு வருடிக் கொடுத்தது. அவனும் பதிலுக்கு தனது கையை அந்தத் துளையின் வழியாக விட்டு மறுபக்கம் இருந்த இசபெல்லை வருடிக்கொடுத்தான். இதனால் இரண்டு பேருக்கும் இடையில் நல்ல நட்பு மலர்ந்து. நாட்கள் செல்லச் செல்ல, இரண்டுபேரும் எப்போதெல்லாம் தனிமையை உணர்ந்தார்களோ அப்போதெல்லாம் துளையின் வழியாக தங்களது கைகளை வாஞ்சையோடு நீட்டி ஒருவரோடு ஒருவர் அன்பைப் பகிர்ந்துகொண்டார்கள்.

ரோஜர் ஸ்கூட்ஸ் (Roger Schutz, Director of Taize, the world- famous ecumanical Monastery in France) சொல்லக்கூடிய இந்த நிகழ்வு தொடுதலின் வழியாக எத்துணை அற்புதங்களும் உறவுப் பரிமாற்றங்களும் நிகழ்கின்றன என்பதை நமக்குத் தெளிவாக எடுத்துச் சொல்கின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கெனசரேத்துப் பகுதிச் சென்றபோது, சுற்றுப்புறமெங்கும் இருந்து மக்கள் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவரைத் தேடி வருகிறார்கள். மட்டுமல்லாமல் நோயாளிகளை அவர் சென்ற பாதையோரங்களில் கிடத்தி, அவருடைய மேலுடையின் ஓரத்தையாவது தொட செய்கிறார்கள். அவ்வாறு அவரைத் தொட்டவர்கள் நலமடைகின்றார்கள். (நம்பிக்கையோடு) தொடுவதால் விளைகின்ற நன்மைகள் எத்தகையது என்பதை இந்த நிகழ்வின் வழியாக நாம் அறிந்துகொள்ளலாம்.

இயேசு தொட்டதினால் பார்வையற்றவர்களும் முடக்குவாதமுற்றவர்களும் ஏன் தொழுநோயளர்களும்கூட குணம் பெற்றதாக நற்செய்தியின் பல இடங்களில் நாம் வாசிக்கின்றோம். ஆனால், இங்கே இயேசுவை, அவருடைய ஆடையின் ஓரத்தை தொட்டவர்கள் நலமடைந்தார்கள் என்று படிக்கின்றோம். பொதுவாக கெனசரேத்துப் பகுதியில் இருந்தவர்கள் ஆண்டவர் இயேசுவின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தார்கள் என்பதை நற்செய்தி நூல் நமக்குத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றது. பனிரெண்டு ஆண்டுகளாக இரத்தத்தைப் போக்கினால் பாதிக்கப்பட்டு, பிறகு ஆண்டவர் இயேசுவின் ஆடையைத் தொட்டதினால் நலமடைந்த பெண்மணி இப்பகுதியைச் சார்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது (மாற் 5: 25- 34). இதுபோன்று பலர் ஆண்டவர் இயேசுவின் மீது கொண்ட நம்பிக்கையினால் குணம் பெற்றார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

இங்கே ஆண்டவர் இயேசுவை, அவருடைய ஆடையின் ஓரத்தைத் தொட்டவர்கள் குணமடைந்தார்கள் என்று படிக்கின்றோம். அப்படியானால் ஆண்டவர் இயேசு எத்துணை வல்லமை மிகுந்தவர், அவரைத் தொட்டவர்கள் எப்படி நம்பிக்கையோடு தொட்டிருப்பார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இன்றைய அறிவியல் தொடுதலின் வழியாக ஆற்றலும் சக்தியும் ஒருவரிடமிருந்து ஒருவருக்குக் கடத்தப்படுகின்றது என்ற உண்மையை ஒத்துக்கொள்கின்றது. இயேசு மக்களைத் தொட்டபோதும் இயேசுவை மக்கள் தொட்டபோதும் இத்தகைய அற்புதம் நிகழ்ந்திருக்கின்றது என்பதை நம்மால் உணர முடிகின்றது.

ஆகவே, இயேசுவை நம்பிக்கையோடு நாடிச் செல்வோம். வாஞ்சையோடு தொடுதலின் வழியாக நம்முடைய அன்பை பிறருக்குக் கொடுப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
இயேசுவைத் தொட்டவர்கள் நலமடைந்தனர்

ஒரு வீடு. அந்த வீட்டில் இருந்த தாய் தன்னுடைய ஒரு வயதுக் குழந்தையை மூத்த மகளிடம் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுமாறு சொல்லிவிட்டு கடைக்குச் சென்றாள்.

அவள் வெளியே சென்ற சில மணித்துளிகளில் குழந்தை வீறிட்டு அழுதது. உடனே மூத்த மகள் அக்குழந்தையை சாந்தப்படுத்த முயன்றாள். அவள் எவ்வளவோ முயன்றும் அவளால் அக்குழந்தையை சாந்தப்படுத்த முடியவில்லை. குழந்தையின் அழுகைச் சத்தத்தைக் கேட்டு, உள்வீட்டுக்குள் இருந்து ஓடிவந்த தந்தையும் எவ்வளவோ முயன்று பார்த்தார். ஆனால் அவராலும் அக்குழந்தையின் அழுகையை நிறுத்த முடியவில்லை. பக்கத்து வீட்டில் இருந்த பாட்டியும் தன் பங்குக்கு முயன்று பார்த்தாள். ஆனால் எல்லாம் வீணாய்ப் போனது.

அப்போது கடைக்குப் போன தாய் வீடு திரும்பி வந்தாள். தன்னுடைய குழந்தை இப்படி அழுவதைப் பார்த்த அவள் ஒரு நிமிடம் கண்கலங்கிப் போனாள். பின்னர் அவள் குழந்தையை அள்ளி, மார்போடு அணைத்துக்கொண்டு தன்னுடைய கைகளால் அதனுடைய உடலில் வருடிக் கொடுத்தாள். அடுத்த சில நொடிகளிலே குழந்தை அழுகையை நிறுத்தி அமைதியானது.

எவ்வளவு பேர் முயன்றும் நிறுத்தமுடியாத குழந்தையின் அழுகையை தாயின் அன்பு வழியும் தொடுதல் நிறுத்தியது; அக்குழந்தையை அமைதியாய் தூங்கச் செய்தது.

ஆம், அன்போடு தொடுகின்றபோது அதற்கு நிறைய சக்திகள் இருக்கின்றது என்பதை இந்த நிகழ்வானது நமக்குத் தெளிவாக விளக்குகின்றது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசுவின் ஆடையின் விளிம்பைத் தொட்டவர்கள்கூட நலம்பெறுவதை படிக்கக் கேட்கின்றோம். அந்தளவுக்கு இயேசுவிடம் இறையருள் நிரம்ப இருந்தது.

பொதுவாக மனிதர்களாகிய நமது தொடுதலுக்கு ஆற்றல் அதிகம் உண்டு என்பதை மருத்துவ உலகம் ஏற்றுக்கொள்ளும். சாதாரண மனிதர்களின் தொடுதலுக்கே ஆற்றல் அதிகம் என்று சொன்னால் கடவுளின் தொடுதலுக்கு எத்தகைய ஆற்றல் இருக்கும் என்பதை நாம் இங்கே புரிந்துகொள்ளவேண்டும். தொடக்க நூல் 2:7 ல் வாசிக்கின்றோம், "ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர்மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான்" என்று. ஆக, கடவுள் தொட்டபோது சாதாரண களிமண்ணே மனிதனானது என்று சொன்னால் கடவுளின் தொடுதலில் எப்படிப்பட்ட ஆற்றல் இருக்கிறது என்பதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.

நற்செய்தி வாசகத்தில் இயேசு தொட்ட மனிதர்கள் மட்டுமல்ல, இயேசுவைத் தொட்ட மனிதர்களும் நலம்பெற்றார்கள். பனிரெண்டு ஆண்டுகளாக இரத்தப்போக்கினால் பாதிக்கப்பட்ட பெண்மணி இதற்கு ஓர் சான்று. "நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்" (மாற் 5:28) என்று அவள் நம்பித் தொடுகிறாள். நலம் பெறுகிறாள். நாமும் நம்பிக்கையோடு ஆண்டவரை அணுகி வருகின்றபோது, அவரைத் தொடுகின்றபோது குணம் பெறுவோம் என்பதுதான் இங்கே குறித்துக்காட்டப்படும் செய்தியாக இருக்கின்றது.

ஆதலால் நலமளிக்கும் ஆண்டவரை (அவரது உடலை, இறைவார்த்தையை நம்பிக்கையோடு தொடுவோம். அதன்வழியாக நலமும், வளமும் பெற்று நிறைவான வாழ்வு வாழ்வோம்.

Fr. Maria Antony, Palayamkottai.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
அவர் இன்னாரென்று கண்டுணர்ந்து

நாளைய நற்செய்தியில் கரைக்கு அந்தப்பறம் இயேசு சென்றபோது நடந்த நிகழ்வை வர்ணிக்கின்றார் மாற்கு.

"இயேசு இன்னாரென்று கண்டுணர்ந்து" மக்கள் அவரிடம் ஓடி வருகின்றனர். தொட அனுமதிக்குமாறு அவரை வேண்டுகின்றனர். கொத்து கொத்தாக மக்கள் அவரைத் தேடுகின்றனர்.

இயேசுவின் வெளிப்புற அடையாளமா?

அல்லது

அவர்களின் தனிப்பட்ட அனுபவமா?

எதை வைத்து அவர்கள் இயேசுவை அடையாளம் கண்டனர்?

இயேசுவின் சமகாலத்தில் இயேசுவைப் போலவே நிறைய போதகர்கள் இருந்திருக்க வாய்ப்புண்டு. "இவர்தான் இயேசு!" என அவரிடம் எதை தனியாக அடையாளம் காட்டியது?

"இவர்தான் இயேசு" என்பதை ஒரு சிலர் மட்டுமே கண்டிருக்க முடியும்.

மற்றவர்கள் இவர்களிடமிருந்து இதைக் கேட்டிருக்க முடியும். ஆனால் இதில் என்ன ஆச்சர்யம் என்றால், மற்றவர்களிடமிருந்து கேட்டவர்கள் எல்லாம் அனைத்தையும் அப்படியே நம்புகிறார்கள்.

இங்கே இரண்டு பொறுப்புணர்வு இருக்கின்றது:

ஒன்று, இயேசு இவர்தான் என அனுபவித்தவர்கள் அந்த அனுபவத்;தை மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும்.

இரண்டு, அனுபவத்தை சொல்லக் கேள்விப்பட்டவர்கள் அப்படியே நம்பி ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இயேசுவை இன்னாரென்று அறிவது என்பது நிறைவேறிவிட்ட ஒரு அனுபவம் என்று சொல்லிவிட முடியாது. அது ஏற்கனவே நிகழ்ந்திருந்தாலும் ஒவ்வொரு பொழுதும் நிறைவேறக்கூடியது.

ஓஷோ கடவுள் அனுபவம் பற்றிப் பேசும்போது இரண்டு உருவகங்களை பயன்படுத்துகின்றார்: (அ) மியூஸியத்தில் உள்ள எலும்புக்கூடு. இதை எவ்வளவு வருடங்களுக்கு விட்டாலும் அது அப்படியே, இருக்கின்ற இடத்தில்தான் இருக்கும். (ஆ) குழந்தை. இதன் ஓட்டத்தை, அமர்வை, எழுதலை நாம் எந்த நொடியும் கணிக்க முடியாது.

முதல்வகை இறையனுபவம்தான் மற்றவர்கள் நமக்குச் சொல்கின்ற, அல்லது சமயங்கள் நமக்குக் கற்பிக்கின்ற அனுபவம். இதை கூட்டவோ, குறைக்கவோ, மாற்றவோ முடியாது.

இரண்டாம் வகை அனுபவம்தான், நம் தனிப்பட்ட அனுபவம். இது எப்போதும் மாறக்கூடியது. சில நேரங்களில் நமக்கு கடவுள் நம்பிக்கை நிறைய இருக்கும். சில நேரங்களில் "கடவுள் இருக்கிறாரா?" என்ற ஐயம் எழும். சில நேரங்களில் "கடவுள் இல்லவே இல்லை" என்று நினைக்கத் தோன்றும். இந்தப் போராட்டத்தின் இறுதியில் அனுபவம் பிறக்கும் என்று சொல்லக்கூடாது. இந்த போராட்டமே அனுபவம்தான்.

மேலும், எப்படியாவது இயேசுவைக் காண வேண்டும் என்ற தேடல் வெறியோடு இருக்கிறார்கள் கெனசரேத் மக்கள்.

என்னிடம் வெறி இல்லை என்றாலும், கொஞ்சம் ஆர்வமாவது இருக்கிறதா?

"தேடுங்கள். கண்டடைவீர்கள்" என்பது விவிலிய வாக்கு.

Fr. Yesu Karunanidhi
Madurai

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!