Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      03  பெப்ரவரி 2018  
                                          பொதுக்காலத்தின் 4ஆம்  வாரம்  
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
"உம் மக்களுக்கு நீதி வழங்க ஞானத்தை எனக்குத் தந்தருளும்"" எனச் சாலமோன் செபித்தார்.

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 3: 4-13

அந்நாள்களில் சாலமோன் அரசர் பலி செலுத்துமாறு கிபயோனுக்குச் சென்றார். அங்கேதான் மிக முக்கியமான தொழுகைமேடு இருந்தது. அங்கிருந்த பலிபீடத்தின் மேல்தான் சாலமோன் ஆயிரம் எரிபலிகளைச் செலுத்தியிருந்தார். அன்றிரவு கிபயோனில் ஆண்டவர் சாலமோனுக்குக் கனவில் தோன்றினார். "உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள்!" என்று கடவுள் கேட்டார்.

அதற்குச் சாலமோன், "உம் அடியாராகிய என் தந்தை தாவீது உமது பார்வையில் உண்மையுடனும் நீதியுடனும் நேரிய உள்ளத்துடனும் நடந்து கொண்டார். அதனால் நீர் அவருக்குப் பேரன்பு காட்டினீர். அந்தப் பேரன்பை அவருக்கு என்றும் காட்டி வந்து, இன்று அவரது அரியணையில் வீற்றிருக்கும் மகனை அவருக்குத் தந்தீர். என் கடவுளாகிய ஆண்டவரே, நீர் அடியேனை என் தந்தை தாவீதுக்குப் பதிலாக அரசனாக்கியுள்ளீர். நான் செய்வதறியாத சிறு பிள்ளை. இதோ! உமக்கென நீர் தெரிந்து கொண்ட திரளான மக்களிடையே அடியேன் இருக்கிறேன். அவர்கள் எண்ணிக் கணிக்க முடியாத மாபெரும் தொகையினர். எனவே, உம் மக்களுக்கு நீதி வழங்கவும் நன்மை தீமை பகுத்தறியவும் தேவையான ஞானம் நிறைந்த உள்ளத்தை அடியேனுக்குத் தந்தருளும்,. இல்லாவிடில், உமக்குரிய இம்மாபெரும் மக்கள் இனத்திற்கு நீதி வழங்க யாரால் இயலும்?" என்று கேட்டார்.

சாலமோன் இவ்வாறு கேட்டது ஆண்டவருக்கு உகந்ததாய் இருந்தது. கடவுள் அவரிடம், "நீடிய ஆயுளையோ, செல்வத்தையோ நீ கேட்கவில்லை. உன் எதிரிகளின் சாவையும் நீ விரும்பவில்லை. மாறாக, நீதி வழங்கத் தேவையான ஞானத்தை மட்டுமே கேட்டிருக்கிறாய். இதோ! நான் இப்பொழுது நீ கேட்டபடியே செய்கிறேன். உனக்கு நிகராக, உனக்கு முன்னே எவரும் இருந்ததில்லை. உனக்குப் பின்னே இருக்கப் போவதும் இல்லை. அந்த அளவுக்கு ஞானமும் பகுத்தறிவும் நிறைந்த உள்ளத்தை உனக்கு வழங்குகிறேன். இன்னும் நீ கேளாத செல்வத்தையும் புகழையும் உனக்குத் தருவேன். ஆகையால் உன் வாழ்நாள் முழுவதிலும் உனக்கு இணையான அரசன் எவனும் இரான்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்   திபா: 119: 9. 10. 11. 12. 13. 14 (பல்லவி: 12b)
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பித்தருளும்.

9 இளைஞர் தம் நடத்தையை மாசற்றதாய்க் காத்துக் கொள்வது எவ்வாறு? உம் வாக்கைக் கடைப்பிடிப்பதால் அன்றோ? 10 முழுமனத்தோடு நான் உம்மைத் தேடுகின்றேன்; உம் கட்டளைகளை விட்டு என்னை விலக விடாதேயும். பல்லவி

11 உமக்கெதிராய் நான் பாவம் செய்யாதவாறு உமது வாக்கை என் இதயத்தில் இருத்தியுள்ளேன். 12 ஆண்டவரே, நீர் போற்றுதற்கு உரியவர்; எனக்கு உம் விதி முறைகளைக் கற்பித்தருளும். பல்லவி

13 உம் வாயினின்று வரும் நீதித் தீர்ப்புகளை எல்லாம் என் இதழால் எடுத்துரைக்கின்றேன். 14 பெருஞ்செல்வத்தில் மகிழ்ச்சி அடைவதுபோல், நான் உம் ஒழுங்குமுறைகளின்படி நடப்பதில் மகிழ்ச்சியுறுகின்றேன். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 10: 27

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மக்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்தார்கள்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 30-34

அக்காலத்தில் திருத்தூதர்கள் இயேசுவிடம் வந்து கூடித் தாங்கள் செய்தவை, கற்பித்தவை எல்லாம் அவருக்குத் தெரிவித்தார்கள். அவர் அவர்களிடம், "நீங்கள் பாலை நிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்"" என்றார்.

ஏனெனில் பலர் வருவதும் போவதுமாய் இருந்ததால், உண்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. அவ்வாறே அவர்கள் படகேறிப் பாலைநிலத்தில் உள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார்கள். அவர்கள் புறப்பட்டுப் போவதை மக்கள் பார்த்தார்கள். பலர் அவர்களை இன்னாரென்று தெரிந்துகொண்டு, எல்லா நகர்களிலிருந்தும் கால்நடையாகவே கூட்டமாய் ஓடி, அவர்களுக்கு முன் அங்கு வந்து சேர்ந்தனர். அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள்மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
பரிவன்புமிக்க கடவுள்

கடந்த நூற்றாண்டில் துக்காராம் என்றொரு மனிதர் இருந்தார். அவர், தான் இருந்த டேகு என்ற பகுதியில் வியாபாரம் செய்துவந்தார். மிக நேர்மையாகவும், நியாயமான முறையிலும் வியாபாரம் செய்து வந்ததால் மக்கள்கூட்டம் அவருடைய கடையிலே அலைமோதியது.

அவரிடம் இருந்த ஒரே ஒரு பலவீனம், அவர் அளவுக்கதிமான மனித நேயத்தோடும், அன்போடு இருந்ததுதான். அதனால் யாராவது அவருடைய கடைக்கு வந்து, தங்களுடைய கஷ்டத்தைச் சொல்லி அழுதால், உடனே அவர்களுக்கு அவர் தாராளமாக பணத்தைக் கொடுத்து உதவிசெய்துவிடுவார். சில நேரங்களில் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அதிகமான பொருளை எடுத்துவிட்டு, குறைவாகப் பணம் கொடுத்தால்கூட, அதை அப்படியே ஏற்றுக்கொள்வார்.

இதனால் அவருடைய கடையில் அளவுக்கு அதிமான நட்டம் ஏற்பட்டது. எந்தளவுக்கு என்றால் ஒரு கட்டத்தில் அவர் தன்னுடைய கடையையே இழுத்து மூடிவிடும் நிலை ஏற்பட்டது.

அந்நேரத்தில் அவருடைய மனைவி, தன்னிடம் இருந்த பணம் நகைகள் எல்லாவற்றையும் கொடுத்து வேறொரு ஊருக்குச் சென்று வியாபாரம் செய்தால் நல்ல நிலைக்கு வரலாம் என்று அறிவுறுத்த, அதன்படியே அவர் செய்தார். இதனால் அவருடைய வியாபாரம் வளர்ந்தது, அவரிடம் செல்வம் முன்பைவிட அதிகமாகப் பெருகியது.

ஒருநாள் அவர் தன்னுடைய வேலையை முடித்துவிட்டு, வீட்டுக்குத் திரும்பும்போது வழியில் ஒரு அப்பாவியை சில முரடர்கள் போட்டு அடித்துக்கொண்டிருந்தார்கள். அதைப்பார்த்து பதறிப்போன துக்காராம் அவர்களிடம் சென்று, "எதற்காக இந்த அப்பாவியை போட்டு அடித்துக்கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "இவன் எங்களிடம் நிறைய கடன் வாங்கியிருக்கிறான், இவன் எங்களிடம் வாங்கிய கடனைத் திருப்பித் தராததனால்தான் அவனை இப்படிப் போட்டு அடிக்கின்றோம்" என்றார்கள். அப்போது துக்காராமின் உள்ளத்தில் இரக்ககுணம் துளிர்விட்டது. உடனே அவர் தன்னிடம் இருந்த பணத்தை எடுத்து, அந்த முரடர்களிடம் கொடுத்து, அப்பாவி மனிதனைக் காப்பாற்றினார்.

மேலும் அந்த மனிதனுடைய உடல் முழுவதும் காயங்கள் இருந்ததால், அவர் அவனை அவனுடைய வீட்டில் கொண்டுபோய் விடுவதற்காக கூட்டிக்கொண்டு போனார்.

அவனுடைய வீட்டிலோ வறுமை நிழலாடியது. எல்லாருமே சாப்பிட்டு நிறைய நாட்கள் ஆனது போன்று தெரிந்தது. உடனே அவர் தன்னிடம் இருந்த மீதப் பணத்தையும் அவர்களிடம் கொடுத்துவிட்டு, தன்னுடைய வீட்டுக்குத் திரும்பினார்.

தன்னுடைய கணவர் இப்படி வெறுங்கையோடு வீட்டுக்குத் திரும்பி வருவதைப் பார்த்த அவருடைய மனைவி கோபத்தின் உச்சத்திக்கே சென்றார். அடுத்த நாள் காலை துக்காராமின் மனைவி அவரை பஞ்சாயத்திற்கு கூட்டிக்கொண்டுபோய் "பிழைக்கத் தெரியாத இந்த மனிதரோடு இனிமேல் சேர்ந்துவாழ விருப்பமில்லை என்று சொல்லி, தங்கள் இருவரையும் பிரித்துவிடும்படி பஞ்சாயத்தில் கேட்டுக்கொண்டார். பஞ்சாயத்தில் அவர்கள் இருவரையும் பிரித்துவைத்தனர்.

இப்படி எல்லார்மீதும் அன்பும், கரிசனையும் கொண்டு வாழ்ந்ததால், பிழைக்கத் தெரியாத மனிதர் என்று சமுதாயத்தில் முத்திரை குத்தப்பட்ட துக்காராம் தான் பிற்காலத்தில் மிகப்பெரிய இசைஞானியானர். இன்றைக்கு ஏழை, எளியவர் மீது அன்புகொண்டு அவர்கள்மீது அக்கறை செலுத்தி வாழும் துக்காராமின் சீடர்கள் ஏராளம்.

நாம் ஒவ்வொருவரும் நம்மைச் சுற்றிவாழும் மக்கள்மீது அன்பும், பரிவும்கொண்டு வாழவேண்டும் என்பதை மேலே சொன்ன நிகழ்வானது நமக்கு மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு பரிவன்புமிக்க கடவுளாக விளங்குகின்றார் எப்படி என்றால் தன்னுடைய சீடர்கள் பணிதளத்திற்குச் சென்று, பணியாற்றிவிட்டுத் திரும்பும்போது அவர்களிடம், "தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று ஓய்வெடுங்கள்" என்கிறார். அதேபோன்று மக்கள்கூட்டத்தைப் பார்க்கிறபோது அவர்கள் ஆயனில்லா ஆடுகள் போன்று இருப்பதைக் கண்டு அவர்கள்மீது பரிவுகொள்கிறார். இங்கே பரிவு என்பது பரிதாபப்படுவதல்ல, மாறாக உடன் துன்புறுவது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இயேசு மற்றவரின் துன்பத்தை தன்னுடைய துன்பமாகப் பார்த்ததனால்தான் இயேசு அவர்கள் மீது பரிவுகொண்டு, அவர்களின் துன்பத்தைப் போக்கி, இன்பமாக்க முடிந்தது.

சீராக்கின் ஞானநூல் 5:5 ல் வாசிக்கின்றோம், "ஆண்டவரின் பரிவு எல்லையற்றது" என்று. ஆதலால் நாமும் இயேசுவைப் போன்று, இறைத் தந்தையைப் போன்று பரிவுள்ளம் கொண்ட மக்களாவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

"அன்புதான் உன் பலவீனம் என்றால், உண்மையில் நீதான் மிகப்பெரிய மனிதன்" அன்னைத் தெரசா.

Fr. Maria Antony, Palayamkottai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
எல்லார்மீதும் பரிவுகொள்ளும் இயேசு!

அந்த நகருக்கு வெளியே ஒரு பூங்கா இருந்தது. அந்தப் பூங்காவில் இருந்த ஒரு சிமென்ட் பெஞ்சில் சிறுவன் ஒருவன் அமர்ந்திருந்தான். அவனுடைய கையில் சிறகு முறிந்த பறவை ஒன்று இருந்தது.

அந்த வழியாகப் போன நடுத்தர வயதுடைய பெண்ணொருத்தி, சிறுவனுடைய கையில் பறவை ஒன்று இருப்பதையும், அதன் சிறகு முறிந்துபோய் இருப்பதையும் கண்டாள். உடனே அவள் அந்த சிறுவனிடம், "மகனே! உன்னுடைய கையில் இருக்கும் இந்த சிறகு முறிந்த பறைவையை என்னிடத்தில் தருவாயா? நான் அதற்கு தக்க சிகிச்சை அளித்து மீண்டுமாக அதை உன்னிடத்தில் கொண்டு வந்து தருகிறேன்" என்றாள். அதற்கு சிறுவன், "வேண்டாமா, இந்தப் பறவையை நானே வைத்துப் பார்த்துக்கொள்கிறேன்" என்றான். அந்தப் பெண்மணி அவனிடத்தில் எவ்வளவோ வற்புறுத்திக் கேட்டபோதும் கூட அவன் அவளிடத்தில் தர மறுத்துவிட்டான். "எதற்காக இந்தச் சிறுவன் சிறகு முறிந்த இந்தப் பறவையை என்னிடத்தில் தர மறுக்கின்றான்" என்பது அவளுக்குப் புரியவே இல்லை.

சிறுது நேரம் கழித்து, அந்தச் சிறுவன் சிமென்ட் பெஞ்சிலிருந்து எழுந்தபோதுதான் தெரிந்தது, அவன் ஏன் அந்த சிறகு முறிந்த பறவையைத் தன்னிடத்தில் தர மறுத்தான் என்று. ஏனென்றால் அவனுடைய ஒருகால் போலியோவால் பாதிக்கப்பட்டிருந்தது. அப்போது அந்தப் பெண்மணி, "இந்த சிறகு முறிந்த பறவையைப் பார்த்துக்கொள்வதற்கு என்னைவிட இந்த சிறுவனே பொருத்தமான ஆள்" என்று தனக்குள் சொல்லிக்கொண்டு அவ்விடத்தை விட்டு அகன்றார்.

சிறகு முறிந்த பறவையின் துன்பத்தை, தன்னுடைய துன்பமாகப் பார்த்து, அதனைத் தன்னோடு வைத்துக்கொண்டு, சிகிச்சை அளிக்க முன்வந்த அந்த (போலியோவால்) சிறுவனின் பரிவுள்ளம் நம் நெஞ்சத்தை உருக்குவதாக இருக்கின்றது.

நற்செய்தி வாசகத்தில், பணித்தளங்களுக்குச் சென்ற திருத்தூதர்கள் ஆண்டவர் இயேசுவிடம் திரும்பி வந்து, தாங்கள் கற்பித்தவை, செய்தவை அனைத்தையும் அவரிடத்தில் சொன்னபோது, அவர் அவர்களிடம், "நீங்கள் பாலைநிலத்தில் உள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்" என்கிறார். என்னுடைய சீடர்கள்தானே, நான் இவர்களை எப்படியும் வேலை வாங்கலாம் என்று இயேசு இருக்காமல், அவர்களைத் தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுக்கச் சொன்னது, இயேசு தன்னுடைய சீடர்கள்மீது கொண்டிருந்த பரிவுள்ளத்தைக் காட்டுகின்றது.

பரிவு என்பது ஓர் அற்புதமான உணர்வு, அதனை உடல் துன்புறுதல் என்று விளக்கம் தரலாம். இங்கே ஆண்டவர் இயேசு பணிசெய்து, சோர்ந்து போய் வந்திருந்த சீடர்களின் துன்பத்தைத் துன்னுடைய துன்பமாகவே பார்த்தார். அதனால்தான் அவர் அவர்களை ஓய்வெடுக்கச் சொல்கின்றார். இந்த நிகழ்விற்குப் பிறகு இயேசுவும் அவருடைய சீடர்களும் தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று, ஓய்வெடுக்க முயன்றபோது, மக்கள் அவர்கள் இருக்கின்ற இடத்தினைத் தெரிந்துகொண்டு அங்கே வந்து கூடுகின்றார்கள். "நாமோ ஓய்வெடுக்க வந்திருக்கின்றோம், இவர்கள் இங்கேயும் வந்து நம்மைத் தொந்தரவு செய்கின்றார்கள" என்று இயேசு நினைக்கவில்லை. மாறாக அவர் அவர்கள்மீது பரிவுகொண்டு அவர்களுக்குப் பலவற்றைக் கற்பிக்கின்றார். இங்கேயும் ஆண்டவர் இயேசுவின் பரிவுள்ளம்தான் அதிகமாக வெளிப்படுகின்றது.

இயேசுவைத் தேடி, அவர் இருந்த இடத்திற்கு வந்த மக்களின் நிலை மிகவும் வேதனைக்குரியது என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால் யூத மக்கள் ஒரு பக்கம் உரோமை அரசாங்கத்திடமிருந்தும், இன்னொரு பக்கம் சட்டம் தான் முக்கியம் என்று சட்டத்தைத் தூக்கிப் பிடித்துக்கொண்டிருந்த பரிசேயர்கள் மற்றும் திருச்சட்ட அறிஞர்களிடமிருந்தும் பல விதங்களில் சித்ரவதை அனுபவித்தார்கள். மக்கள் பட்ட இத்தகைய துன்பத்தையும் வேதனையையும் இயேசு தன்னுடைய வேதனையாகவும் துன்பமாகவும்தான் பார்த்தார். அதனால்தான் இயேசு அவர்கள்மீது பரிவு கொண்டு அவர்களுக்குப் பலவற்றைக் கற்பிக்கின்றார். கற்பித்தலின் வழியாக இயேசு கிறிஸ்து அவர்களுக்கு எத்தகைய சூழலையும் எதிர்கொள்வதற்கான தெம்பினைத் தருகின்றார். இவ்வாறு இயேசு, தன்னை பரிவுள்ளம் கொண்டவராக நிரூபிக்கின்றார்.

இயேசுவிடம் இருந்த பரிவும் பிறருடைய துன்பத்தை தன்னுடைய துன்பமாகப் பார்க்கின்ற உயர்ந்த உள்ளமும் நம்மிடத்தில் இருக்கின்றதா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம், அடுத்தவரைப் பற்றி சிறிதளவுகூட அக்கறையும் பொறுப்புணர்வும் இல்லாமலே இருக்கின்றோம். இத்தகைய மனநிலை நம்மிடத்திலிருந்து களையப் படவேண்டும். இயேசுவைப் போன்று பரிவுள்ளம் கொண்டவர்களாக வாழ முயற்சிக்க வேண்டும்.

ஆகவே, நாம் ஒவ்வொருவரும் இயேசுவைப் போன்று பரிவுள்ளம் கொண்டவர்களாக வாழப் பழகுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================

இனி எல்லாம் சுகமே!
என்ன வரம்?

நேற்று இரவு தூங்கச் செல்லுமுன் மூன்று படங்களின் இறுதிக்காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன்:

அ. பூம்புகார

ஆ. ஒளவையார

இ. கந்தன் கருணை

(ஒளவையாரின் சுட்ட பழம்-சுடாத பழம் கதை தெரியுமா?

அதன் இறுதியில் அழகிய இந்தப் பாடல் வரும்:

கருங்காலிக் கட்டைக்கு நாணாக்கோ டாலி
இருங்கதலித் தண்டுக்கு நாணும் பெருங்கானில்
காரெருமை மேய்க்கின்ற காளைக்கு நான் தோற்றேன்
ஈரிரவும் துஞ்சாதென் கண்

அதாவது, பெரிய மரத்தை வெட்டும்போது வளையாத கோடரி, மெல்லிய வாழைத்தண்டை வெட்டியபோது வளைந்தது. மாடு மேய்க்கின்ற சிறுவனிடம் நான் தோற்றேன். இரண்டு இரவுகள் என் கண்கள் துயில் கொள்ளாது!)

பூம்புகாரின் கண்ணகிதான் இன்னும் என் கண்முன் நிற்கின்றாள். தன் கணவன் வஞ்சகமாய் அல்லது தவறுதலாய் கொல்லப்பட்டான் என்று கொதித்தெழுந்த கண்ணகி, பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனிடம் முறையிடுகிறாள். அவளின் முறையீட்டில் ஒரு இடத்தில், "ஞானமாக செயல்பட வேண்டிய நீர் அறிவோடு கூட செயல்படவில்லையே!" என்பாள்.

ஆக, ஞானம் வேறு. அறிவு வேறு.

நாளைய முதல் வாசகத்தில் (1 அரச 3:4-13) கடவுள் சாலமோனிடம், "என்ன வரம் வேண்டும்? கேள்!" என்கிறார்.

"என்ன வரம் வேண்டும்?" என்ற கேள்விக்கு பல இலக்கியங்களில் கண்ணீரும், செந்நீரும்தான் மிஞ்சியிருக்கிறது.

கைகேயி கேட்ட வரத்தால் ராமன் காடு செல்கிறார்.

திரௌபதி கேட்ட வரத்தால் கர்ணன் போரில் அழிகிறார்.

சலோமி கேட்ட வரத்தால் திருமுழுக்கு யோவான் கொல்லப்படுகின்றார்.

ஆனால், புத்திசாலி இளவல் சாலமோன் ஞானம் கேட்கிறார்.

"நீடிய ஆயுளையோ, செல்வத்தையோ நீ கேட்கவில்லை.
உன் எதிரிகளின் சாவையும் விரும்பவில்லை.
நீதி வழங்கத் தேவையான ஞானத்தை மட்டுமே கேட்டிருக்கிறாய்..." என ஆண்டவரும் உள்ளம் குளிர்கிறார்.

சாலமோனின் ஞானத்திற்கு உதாரணமாக இரண்டு நிகழ்வுகளை நாம் விவிலியத்தில் வாசிக்கின்றோம்: (அ) தன் முன் வைக்கப்பட்ட பூச்செடிகளில் எது உண்மையானது எனக் கண்டறிகின்றார், (ஆ) ஒரே குழந்தைக்கு இரண்டு பெண்கள் போட்டியிட்டபோது யார் உண்மையான தாய் என்பதைக் கண்டறிகின்றார்.

வாழ்த்துக்கள் சாலமோன்!

ஆக, உண்மையைக் கண்டறிவதுதான் ஞானம்.

"ஞானம் கடவுளின் கொடை" என்றும், "கடவுளே ஞானத்தின் ஊற்று!" என்றும் எல்லா நேரமும் சொல்கிறது முதல் ஏற்பாடு.

ஏனெனில் அறிவின் ஊற்று ஏதேன் தோட்டத்து பாம்பு.

ஏவாளிடம் பேசுகிற பாம்பு என்ன சொல்கிறது?

"...நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும்...நீங்கள் நன்மை-தீமை அறியும் அறிவு பெறுவீர்கள்!"

ஆக, அறிவு என்பது நன்மை-தீமையை அறிவது, ஞானம் என்பது உண்மையை அறிவது.

இன்று அறிவுக்கு நமக்கு நிறைய வாய்க்கால்கள் இருக்கின்றன. அறிவு ஆக்ச்சுவலா கொட்டி கிடக்கிறது. இதுவா, அதுவா என நாம்தான் கண்டடைய முடியாமல் தேடிக்கொண்டிருக்கிறோம். இன்று நாம் கைகளில் வைத்திருக்கும் அதிவேக இணையதள சேவைகள் நம்முன் அறிவை அள்ளிவந்து கொட்டுகின்றன.

ஆனால், நாம் தான் எதை எடுப்பது, எதை விடுப்பது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றோம். எல்லா வாக்கியங்களும் புரிந்தாலும், கதை புரியவில்லையே என்று நாம் கலங்கி நிற்கும் ஒரு காம்ப்ளிகேடட் நாவல் போல ஆகிவிட்டது வாழ்க்கை.

இந்த வாழ்க்கை ஓட்டத்தில் ஓடி மூச்சிரைக்கும் நாமும் ஒரு கட்டத்தில் பிலாத்துபோல, "உண்மையா! அது என்ன?" என வியக்கிறோம்.

இன்று நம் கல்வி, கேள்வியும் கூட நம் அறிவைத்தான் அளவிடுகின்றனவே தவிர யாரும் ஞானத்தைக் கண்டுகொள்வதாக இல்லை.

எல்லாம் இருந்து ஞானம் இல்லையென்றால் என்ன பயன்?

எதுவுமே இல்லாமல் இருந்து ஞானம் மட்டும் இருந்தால் என்ன இழப்பு?

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
பெற்றுக்கொண்டோர் பேறுபெற்றோர்

பெற்றுக்கொண்டு கொடுப்பதுதான் கிறிஸ்தவ வாழ்க்கை என்கிற விழுமியத்தை நமக்குக் கற்றுக்கொடுக்கிற அருமையான பகுதி. நாம் கடவுளிடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய செல்வங்கள் அனைத்துமே பயன்படுத்துவதற்கும், மற்றவர்களுக்கு பயன்படுவதற்கும் தான் என்பதை நாம் உணர, இன்றைய நற்செய்தி நமக்கு அழைப்புவிடுக்கிறது. இயேசு தனது சீடர்களை நற்செய்திப் பணிக்கு அனுப்புகிறார். அவர்களுக்கு தேவையான வல்லமையைக் கொடுக்கிறார். நோயாளிகளைக் குணப்படுத்துவதற்கு, தீய ஆவிகளை ஓட்டுவதற்கு, நற்செய்தியை துணிவோடு அறிவிப்பதற்கு, அவர்களை தயாரித்து அனுப்புகிறார்.

சீடர்கள் இயேசுவிடமிருந்து வல்லமையைப் பெற்றுக்கொண்டது, தாங்களே வைத்திருப்பதற்காக அல்ல, அதை மற்றவர்களுக்கு கொடுப்பதற்காகத்தான். அந்த வகையில், இயேசுவின் சீடர்கள் அதனை நிறைவாகச் செய்கிறார்கள். அதில் மகிழ்ச்சியும் அடைகிறார்கள். காரணம், பெற்றுக்கொண்டு, கொடுப்பதில் இருக்கும் மகிழ்ச்சியை அவர்கள் அனுபவித்துவிட்டார்கள். கிறிஸ்தவ வாழ்வு என்பது, கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்டு, மற்றவர்களுக்கு கொடுப்பதுதான். இன்றைக்கு இருக்கிற அரசியல்வாதிகள், அரசியலை ஒரு வியாபாரமாகப் பார்க்கிறார்கள். நான் தேர்தலில் இவ்வளவுக்கு முதலீடு செய்கிறேன். நான் எவ்வளவுக்கு வாரிச்சுருட்ட முடியுமோ, அவ்வளவுக்கு சுருட்ட வேண்டும். இதுதான் அரசியல்வாதிகளின், அதிகாரவர்க்ககத்தில் இருக்கிறவர்களின் எண்ணமாக இருக்கிறது.

இத்தகைய மனப்போக்கிலிருந்து, பெற்றுக்கொண்டதை கொடுப்பவர்களாக மாறுவோம். கடவுளின் வல்லமை யாருக்கு தரப்படுகிறதோ, அவர்கள் பேறுபெற்றவர்கள். அந்த வல்லமையை, ஆற்றலை ஏழை, எளியவர்களின் வாழ்வை உயர்த்தப் பயன்படுத்துவோர், இன்னும் அதிகம் பேறுபெற்றோர். 

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

பணிவாழ்வில் ஓய்வு

திருத்தூதர்கள் தங்களின் நற்செய்திப்பணி முடிந்து திரும்பி வருகின்றனர். இயேசு அவர்களை ஓய்வெடுப்பதற்கு பணிக்கிறார். ஏற்கெனவே களைப்பாய் இருந்தவர்கள் உண்பதற்கு கூட நேரம் இல்லாதவர்களாய் இருப்பதைப்பார்த்து, இயேசுவே அவர்களுக்கு ஓய்வு கட்டாயம் தேவை என்று எண்ணுகிறார். அவர்கள் ஓய்வுக்கு நேரம் கொடுக்கிறார். நமது கிறிஸ்தவ வாழ்வு என்பது பணியும், ஓய்வும் கலந்த வாழ்வு என்பதை இயேசு இங்கே கற்றுத்தருகிறார்.

கடவுளின் பணிக்காக முழுமையாக நம்மை அர்ப்பணித்து தொடர்ந்து உழைக்கிறோம். அதேபோல ஓய்வுக்கும் நேரம் கொடுக்க வேண்டும். இங்கே ஓய்வு என்பது உடல் சார்ந்த களைப்பிலிருந்து விடுபடக்கூடியது மட்டும் அல்ல. மாறாக, நமது அர்ப்பணத்தை இன்னும் அதிகமாக்குவதற்கான ஒரு கால அவகாசம். ஒரு சுய ஆய்வு. நமது ஆன்மீக வாழ்வை சீர்தூக்கிப்பார்ப்பதற்கான ஒரு ஆய்வு. நமது வாழ்வை கடவுளுக்கு இன்னும் ஆழமாக அர்ப்பணமாக்குவதற்கான ஒரு முயற்சி. எந்த அளவுக்கு நம்மையே வருத்தி பணிசெய்கிறோமோ, அதே அளவுக்கு கடவுள் முன்னிலையில் கடவுளின் பிரசன்னத்தில் அமைதியாக இருந்து, நமது வாழ்வை ஆராய்ந்து பார்ப்பதும் அவசியமான ஒன்று. அத்தகைய ஓய்வை இயேசு தன்னுடைய சீடர்களுக்கு கற்றுத்தருகிறார்.

சீடர்களுடைய அனுபவங்களை, உணர்வுகளை மீண்டுமாக ஆராய்ந்து பார்த்து, பணிவாழ்வு பற்றி தேர்ந்து தெளிய ஓய்வு தருகிறார். நாமும் பணிக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை சுய ஆய்வுக்குக் கொடுப்போம். நமது வாழ்வை மெருகேற்றுவோம் கடவுளின் அரசு இந்த மண்ணில் மலர உறுதுணை செய்வோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

செபத்தின் மேன்மை

செபமா? உழைப்பா? இரண்டில் எது சிறந்தது? என்ற கேள்வி ஒவ்வொரு அருட்பணியாளருக்கும் எழக்கூடிய இயல்பான கேள்வி. ஒருபுறம் செபம் தான் சிறந்தது என்று, ஆலய வழிபாடுகளோடு நிறைவு காண்கிறவர்கள். மறுபுறம், மக்கள் பணிதான் இறைவன் பணி என்று, முழுக்க, முழுக்க உழைப்பிற்கும், சமுதாயப்பணிக்கும் முன்னுரிமை கொடுக்கக்கூடியவர்கள். இரண்டுமே அவசியம் என்பது நமக்குத்தெரிந்திருந்தாலும், ஏதாவது ஒன்றினை மையப்படுத்தி நமது வாழ்வை அமைத்துக்கொள்கிறோம்.

இன்றைய நற்செய்தி, இந்த கேள்விக்கு சிறந்த பதிலைத்தருகிறது. அதாவது, கிறிஸ்தவ வாழ்வை நாம் சிறந்த முறையில் வாழ்வதற்கு, கடவுளுடனான நமது உறவுதான் சிறந்த உந்துசக்தி என்பதுதான் அந்த பதில். ஒருவர் எவ்வளவுதான் சமுதாயப்பணிகள், மக்கள் பணியில் சிறந்து விளங்கினாலும், அவர் தனது வாழ்க்கையில் கடவுளுக்கோ, செபத்திற்கோ நேரம் கொடுக்கவில்லை என்றால், அவருக்கு நிச்சயமாக நிறைவு என்பதே இருக்காது. இயேசுவின் வாழ்வில் இது உறுதியாக வெளிப்படுகிறது. இயேசு பகலெல்லாம் கால்நடையாக நடந்து, பல இடங்களுக்குச் சென்று, போதித்தாலும், அவருக்கு களைப்பு இருந்தாலும், ஓய்வு தேவை என்றாலும், செபத்தில் தந்தையோடு கொண்டிருந்த உறவை ஒருநாளும், அவர் விட்டுவிடவில்லை.

நமது வாழ்வில் செபத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். எந்த செயலைச் செய்தாலும், செபத்தோடு நாம் தொடங்க வேண்டும். செபம் நமது வாழ்வின் மையமாக இருக்க வேண்டும். நமது வாழ்வே செபமாக மாற வேண்டும். அத்தகைய அருளைப்பெற முயல்வோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

பணிவாழ்வு

யோவான் இதற்கு முந்தைய பகுதியில் தான் ஏரோது அரசனால் கொல்லப்பட்டிருக்கிறார். யோவானுடைய இறப்புச்செய்தி நிச்சயமாக இயேசுவுக்கு மிகப்பெரிய வருத்தத்தை உண்டாக்கியிருக்க வேண்டும். சீடர்களும் இயேசு கொடுத்த அறிவுரைகளின்படி நற்செய்தி அறிவித்துவிட்டு இப்போதுதான் வந்திருக்கிறார்கள். எனவே, அவர்களோடு தனிமையான இடத்திற்கு அவர் செல்ல முடிவெடுக்கிறார். அவர் தனிமையாக சென்றதற்கு பல காரணங்கள் இருக்கலாம். தன்னுடைய உறவினா;, தனது முன்னோடி யோவானுடைய இறப்பு அவருக்கு மிகப்பெரிய வருத்தத்தை உண்டாக்கியிருக்கலாம். எனவே, சற்று ஆறுதல் பெறுவதற்காக இந்த தனிமையை விரும்பியிருக்கலாம். அல்லது, ஓய்வில்லாத பணிவாழ்வில் சிறிது இளைப்பாற விரும்பியிருக்கலாம். அல்லது தனது பாடுகள் நெருங்குகின்ற வேளையில் தன் இறைத்தந்தையோடு ஒன்றித்திருக்க ஆசைப்பட்டிருக்கலாம், பணியினால் களைத்து வந்திருக்கிற தன்னுடைய சீடர்களுக்கு சற்று ஓய்வுதேவை என்று நினைத்திருக்கலாம். எது எப்படியென்றாலும், அவர் அந்த தனிமையான இடத்திற்கு செல்வதற்கு முன்பே, மக்கள் அவர் அங்கே செல்வதைக்கேள்விப்பட்டு, சென்றுவிட்டனர்.

நற்செய்தியில் இயேசு அவர்களைப்பார்த்து கோபப்படவில்லை, எரிச்சலடையவில்லை. எனக்கு ஓய்வுக்கு கூட நேரம் கொடுக்கமாட்டார்களா? என்று ஆதங்கப்படவில்லை. மாறாக, மக்கள் மீது பரிவுகொள்கிறார். ஆயரில்லா ஆடுகள் போல் அவர்கள் இருப்பதைப்பார்த்து, வேதனைப்படுகிறார். அவர்களுக்கு உதவ தனது ஓய்வைத்தியாகம் செய்கிறார்.

பணிவாழ்வு என்பது நேரத்தை அடிப்படையாகக்கொண்ட வாழ்வு அல்ல. எல்லாநேரமும் மக்களுக்காக பணியாற்ற தயாராக இருக்கக்கூடிய வாழ்வு. ஓய்வு நிச்சயம் நன்றாக பணி செய்ய தேவை. ஆனால், மக்களின் தேவைகள் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். மக்களுக்காகத்தான் நமது பணிவாழ்வு என்பதை நாம் உறுதி செய்துகொள்ள வேண்டும். அதுதான் உண்மையான இறையழைத்தல் வாழ்வு. அதை இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்வோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

------------------------------------------

 

பரிவுகொண்டு... ... கற்பித்தார்!

இன்றைய நற்செய்தி வாசகத்தின் கடைசி வாக்கியத்தை நமது சிந்தனைக்காக எடுத்துக்கொள்வோம்: பெருந்திரளான மக்களைக் கண்ட இயேசு "அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள்மீது பரிவுகொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்". சிறிது வியப்பைத் தரும் செய்தி இது.

மக்கள்மீது இரக்கம் கொண்ட இயேசு அவர்களுக்கு உணவுகொடுக்கவில்லை, நோய்களைக் குணப்படுத்தவில்லை. எந்த அருங்குறியும் செய்யவில்லை. மாறாக, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார். இயேசுவின் இச்செயல் நம் கண்களைத் திறக்க வேண்டும். "பசியாயிருப்பவனுக்கு மீனைக் கொடுப்பதைவிட, மீன் பிடிக்கக் கற்றுக்கொடு" என்னும் சீனப் பழமொழியை நாம் அறிவோம். மக்கள்மீது பரிவுகொண்ட இயேசு, அவர்களின் பசியை, பிணியை நோக்காமல், அவர்களின் பசிக்கும், பிணிக்குமான காரணத்தைப் பற்றி எடுத்துரைத்தார், அவர்களது ஆன்மீக வெறுமையைப் பற்றிப் பேசினார்;. தந்தை இறைவனின் பேரன்பையும், அருள்காவலையும் பற்றிப் பேசினார். அவர்களின் அகக் கண்களைத் திறந்தார். எம்மாவு நோக்கிச் சென்ற சீடர்களின் கண்களைத் திறந்ததுபோல, ஆயரில்லா ஆடுகள்போல் இருந்த அடித்தட்டு மக்களின் வாழ்வுச் சிக்கலையும், அதைத் தீர்ப்பதற்கான வழிகளையும் எடுத்துரைத்தார்.

இதுதான் மிகச் சிறந்த அறப்பணி. இதுதான் சிறந்த அன்புப் பணி. எளியோர்மீது பரிவுகொண்டு அவர்களுக்கு உதவி செய்தது நன்று. ஆனால், அதனினும் நன்று, அவர்களை விழிப்படையச் செய்வது. அவர்களுக்குக் கல்வி கற்பித்து, புதிய வாழ்வுக்கு வழிகாட்டுவது. அத்தகைய பரிவுச் செயல்களைச் செய்ய நாமும் முன்வருவோமாக!

மன்றாடுவோம்: மக்கள்மீது பரிவுகொண்டு அவர்களுக்குக் கற்பித்த இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்கள்மீது பரிவுகொண்டு, அவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் பணியை நாங்கள் செய்ய உமது தூய ஆவியின் ஆற்றலை எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--பணி. குமார்ராஜா

-----------------------------------------

இணையதள உறவுகளே

திருத்தூதர்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்து பணியிடைப் பயிற்சிக்கு அனுப்பிய இயேசு, இப்பொழுது அவர்கள் கற்றுக்கொடுத்தவை, செய்த செயல்கள் அனைத்தையும் கவனமுடன் கேட்கிறார். களைத்த அவர்களை ஓய்வு எடுத்துக்கொள்ளச் சொல்கிறார். அதற்காக ஓரு சிறிய இன்பப் பயணம் ஏற்பாடு செய்கிறார். தனிமையான இடத்திற்குப் போகச் சொல்கிறார். இந்த உபசரிப்பை பெற்ற உடன் இருப்பவர்கள் உறுதியாக அன்போடும் ஆர்வத்தோடும் மிகுந்த அர்ப்பணத்தோடும் பணிசெய்வார்கள். உயிரையும் கொடுப்பார்கள்.

இதுதான் நம் குடும்பங்களிலும் நிறுவனங்களிலும் கூட்டு வாழ்க்கையிலும் தலைவர்களிடம் இருக்க வேண்டிய பண்பு. கணவனும் மனைவியும், பெற்றோரும் பிள்ளைகளும், நிர்வாகியும் உடன் உழைப்பாளிகளும் அவ்வப்போது ஒரு கலந்துரையாடல், ஒரு சுற்றுலர, கடற்கரைக்கு காற்று வாங்க ஒரு நாள் என்று வைத்துக்கொண்டால் அந்த குடும்பங்கள் நிறுவனங்கள் வளரும், வாழும்.

இயேசுவின் இந்த மனிதாபிமானம் சீடர்களின் மேல் மட்டுமல்ல. மக்களிடமும் அதே மனிதாபமானத்தை எப்பொழுதும் காணலாம். அன்று மட்டுமல்ல. இன்றும் நம் இயேசு அதே மனிதாபம் உள்ளவர். நாம் நன்றாக உழைக்க வேண்டும். ஓய்வு எடுக்க வேண்டும், தனிமையில் சிந்திக்கவும் கூட உள்ளவரோடு கலந்து ஆலோசிக்கவும் வேண்டும் என விரும்புகிறார். இயேசுவோடு தனிமையில் கலந்து ஆலோசியுங்கள். எல்லாம் நன்றாக இருக்கும்.

-ஜோசப் லீயோன்

-------------------------

உழைப்பும், ஓய்வும் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

"உழைப்புதான் மானிடரின் இலக்கணம்" என்று கூறினார் கார்ல் மார்க்ஸ். "உழைக்காதவர் உண்ணலாகாது" என்றார் பவுலடியார். உழைப்புக்கு இலக்கணமாக யாவே இறைவனையே விவிலியம் எடுத்துக்காட்டாகத் தருகிறது. தொடக்க நூலின் முதல் அதிகாரங்களில் இறைவன் ஆறு நாள்களில் இந்த உலகையும், அதில் உள்ள அனைத்தையும் படைத்துவிட்டு, ஏழாம் நாளில் ஓய்வெடுத்தார் என்று வாசிக்கிறோம். ஓய்வின்றி உழைப்பதும் தவறு. உழைப்பின்றி ஓய்வெடுப்பதும் தவறு. நன்கு உழைக்க வேண்டும். உழைப்பிற்கேற்ப ஓய்வெடுக்க வேண்டும் என்பதுதான் இறைவனின் திருவுளம். அந்தத் தந்தையின் திருவுளத்திற்கேற்பவே, திருமகன் இயேசுவும் செயல்பட்டார். அதிகாலை செபத்திலிருந்து, பகல் நேர நற்செய்தி அறிவிப்பு, மாலையில் நோயாளர்களைக் குணப்படுத்துதல், இரவில் வீடுகளில் உறவை வளர்த்தல் எனப் பம்பரமாகச் சுழன்று பணியாற்றினார். தம் சீடர்களுக்கும் அந்தப் பயிற்சியை வழங்கினார். எனவேதான், சீடர்கள் திருத்தூதுப் பணியாற்றிவிட்டுத் திரும்பி வந்து, தம் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டபோது, அவர்களுக்கு ஓய்வு தேவை என்பதை உணர்ந்து "நீங்கள் பாலை நிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள் "  என்று மொழிந்தார். சற்று ஓய்வெடுங்கள் என்னும் சொல்லாடல் நம் கவனத்தை ஈர்க்கிறது. தேவையான ஓய்வு. இறைவன் நம்மீது அக்கறை உள்ளவர், நம்மைப் புரிந்துகொள்பவர் என்பதற்கு இந்த நிகழ்வு ஓர் அடையாளமாகத் திகழ்கிறதல்லவா?

மன்றாடுவோம்: ஞானத்தின் ஊற்றே ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். உமது ஞானத்திலும், பேரன்பிலும் நாங்கள் உழைக்கவும், போதுமான உடல், உள்ள, ஆன்ம ஓய்வுபெறவும் வேண்டும் எனத் திருவுளம் கொண்டீரே. உமக்கு நன்றி. நீர் மட்டுமே தர முடிகின்ற அமைதியை, இளைப்பாறுதலை, ஓய்வை எங்கள் அனைவருக்கும் தந்தருள்வீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருள்தந்தை குமார்ராஜா

 

சற்று ஓய்வெடுங்கள்!

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இயேசுவின் உளவியலும், ஞானமும் எண்ண எண்ண நம்மை மலைக்க வைக்கின்றன. இன்றைய நற்செய்தி வாசகம் அத்தகைய ஓர் அனுபவத்தை நமக்குத் தருகிறது.

இயேசுவின் சீடர்கள் நற்செய்தி அறிவிப்புப் பணியைச் செய்துவிட்டுத் திரும்பிவந்து, தாங்கள் செய்தவை, கற்பித்தவையெல்லாம் இயேசுவிடம் பகிர்ந்துகொண்டபோது, இயேசுவின் பதிலுரையைப் பாருங்கள்.

அவர்களைச் சற்றே ஓய்வெடுக்க அறிவுறுத்துகிறார். அத்துடன், தாமே அவர்களை அழைத்துக்கொண்டு ஓய்விடத்துக்கு இட்டுச் செல்கிறார். இயேசுவின் பரிவும், ஞானமும் இந்த அழைப்பில் நன்கு வெளிப்படுகின்றன.

இதே அழைப்பை இயேசு இன்றும் நமக்குத் தொடர்ந்து தருகிறார். நமது பல்வேறு பரபரப்பான பணிகளுக்கு இடையில் நமக்கு ஓய்வு தேவை. உடலுக்கும், உள்ளத்துக்கும், ஆன்மாவுக்கும்.  குறிப்பாக, இன்றைய விரைவுக் கலாசார உலகில் ஓய்வற்ற உழைப்பால் பலருக்கும் மன அழுத்தமும், பல்வேறு நோய்களும் வருகின்றன.

எனவே, நம்மை உடல், உள்ள, ஆன்ம ஓய்வெடுக்க இயேசு அழைக்கிறார். ஞாயிறு தோறும் வழக்கமான வேலைகளை விட்டுவிட்டு, வழிபாட்டில் பங்கெடுத்தல், இறைவார்த்தைக்கு செவி மடுத்தல். நற்செய்திப் பணியாற்றல், அன்புச் சேவைகள் செய்தல் போன்றவை நமக்கு இந்த மூன்று வகையான ஓய்வையும் தரும்.

இன்று ஓய்வெடுப்போமா?

மன்றாடுவோம்; அக்கறையின் திருவுருவே இயேசுவே, எங்கள்மீது நீர் கொள்ளும் பரிவுக்காக நன்றி கூறுகிறேன். இன்றைய நாளில் உடல், உள்ள, ஆன்ம ஓய்வு தருவீராக. மனதின் பாரங்கள், சோர்வுகள் அனைத்தையும் போக்கி நலம் தருவீராக. ஓய்வுநாளாகிய இன்றைய தினத்தை உமக்காகவும், உம் பிள்ளைகளுக்குப் பணியாற்றவும் நான் செலவழிப்பேனாக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி,-ஆமென்

-- அருட்தந்தை குமார்ராஜா

----------------------------

''இயேசு திருத்தூதர்களிடம், 'நீங்கள் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்' என்றார்'' (மாற்கு 6:31)

சிந்தனை
-- இயேசு நற்செய்தி அறிவிக்கும் பணியைத் திருத்தூதர்களிடம் ஒப்படைத்திருந்தார். அவர்கள் பயணம் சென்று நற்செய்தி அறித்துவிட்டுத் திரும்பி வருகிறார்கள். இக்காட்சியை மாற்கு வடிவமைத்திருக்கும் பின்னணி கருதத்தக்கது. அதாவது, எகிப்திலிருந்து விடுதலையடைந்து வந்த இஸ்ரயேல் மக்கள் பாலைநிலத்தில்தான் ஒருங்கிணைந்த மக்கள் குழுவாக, மோசேயின் தலைமையில் உருவானார்கள்; கடவுள் மோசே வழியாக வழங்கிய திருச்சட்டம் அவர்களை ஒன்றுசேர்த்தது. அதுபோலவே இயேசுவும் தம் சீடர்களைப் பாலைநிலத்தில் ஒன்றுசேர்த்து, அவர்களுக்குத் தம் போதனையை வழங்கி, அவர்களை ஒரு நிலையான குழுவாக ஏற்படுத்துகிறார். பாலைநிலத்தில் இயேசு பெருந்திரளான மக்களுக்கு அதிசயமான விதத்தில் உணவளிக்கிறார் (மாற் 6:34-44). இந்த நிகழ்ச்சி முற்காலத்தில் கடவுள் தம் மக்களுக்குப் பாலைநிலத்தில் மன்னா என்னும் அதிசய உணவை அளித்து, அவர்களுடைய பசியைப் போக்கியதை நினைவுபடுத்துகிறது.

-- பாலைநிலத்தில் கடவுள் தம் மக்களைச் சந்தித்து, அவர்களுக்குப் போதனையும் உணவும் அளித்த நிகழ்வுகள் தொடக்க காலத் திருச்சபையிலும் பிற்பட்ட வரலாற்றிலும் ஓர் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தின. இன்றும் நாம் ''பாலைநிலத்தில்'' கடவுளைச் சந்திக்க முடியும். அன்றாட வாழ்க்கையின் கவலைகளைச் சிறிது மறந்துவிட்டு, கடவுளின் பிரசன்னத்தை நம் வாழ்வில் ஆழ உணர்ந்துகொள்வதற்குப் ''பாலைநில'' அனுபவம் துணையாக அமையும். ஒவ்வொரு நாளும் கடவுளோடு உரையாட சிறிது நேரம் ஒதுக்குவது ''பாலைநில'' அனுபவம். ஆண்டுக்கு ஒருமுறை ஒருசில நாள்கள் அமைதியில் இறைவனைக் கண்டு அவரோடு உறவாட நாம் முன்வருவதும் ''பாலைநில'' அனுபவமே.

மன்றாட்டு
இறைவா, உம்மோடு உறவாட எங்களுக்கு நன்மனத்தைத் தந்தருளும்.

 

''அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப் போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவுகொண்டு, 
இயேசு அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்'' (மாற்கு 6:34)


அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- கடவுளை அரசர், தலைவர், வழிகாட்டி, போர்வீரர் என்னும் பல உருவகங்கள் வழியாக வெளிப்படுத்துகிறது திருவிவிலியம். இந்த உருவகங்களில் சிறப்பான ஒன்று ''ஆயர்'' என்பதாகும். கடவுளை ஆயர் என உருவகிக்கின்ற ஒரு சிறப்பு மிக்க பகுதி 23ஆம் திருப்பாடல் ஆகும். ''ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்...'' எனத் தொடங்குகின்ற இப்பாடலில் கடவுள் தம் மக்கள்மீது காட்டுகின்ற அருளும் அன்பும் போற்றப்படுகின்றன (திபா 23:6). ஆடுகளை மேய்த்தலும் அவற்றைப் பராமரித்தலும் இஸ்ரயேலில் சாதாரணமாக நிகழ்ந்தது. ஆயர் தம் ஆடுகளை அன்போடு பராமரிப்பது கடவுள் தம் மக்களோடு பகிர்ந்துகொள்கின்ற அன்புக்கு உருவகமாயிற்று. இயேசு இந்த உருவகத்தைத் தமக்குப் பொருத்தியுரைக்கிறார். தம்மைத் தேடி வந்த மக்களைக் கண்டு இயேசு ''பரிவுகொண்டார்'' (மாற் 6:34). இப்பரிவு எதில் அடங்கியது என நாம் சிந்திக்கலாம்.

-- ''பரிவு'' என்னும் பண்பைக் குறிக்கப் பயன்படும் சொல் ஓர் ஆழ்ந்த கருத்தை உள்ளடக்கியது. பிற மனிதர் துன்பப்படுவதைக் கண்டு அவர்களுடைய துன்பத்தில் நாமும் பங்கேற்று, நம் உள்ளத்தின் ஆழத்தில் அவர்களோடு நம்மை ஒன்றுபடுத்திக் கொண்டு, உணர்வு நிலையில் அவர்களோடு இணைவது ''பரிவு'' என்னும் சொல்லால் குறிக்கப்படுகிறது. இயேசுவின் உள்ளம் மனித துன்பத்தைக் கண்டு உருகியது. கடவுளின் அன்பை நம்மோடு பகிர்ந்துகொள்ள வந்த இயேசு நம்மைப் போல மனித உணர்வுகளைத் தம் வாழ்வில் அனுபவித்தவர். எனவே அவர் நம் துன்பங்களிலும் இன்பங்களிலும் தம்மை ஒன்றுபடுத்தத் தெரிந்தவர். இவ்வாறு மனித உணர்வுகளோடு தம் உணர்வுகளை இணைக்கத் தெரிந்த இயேசு மக்கள் கூட்டத்திற்கு அளித்த உதவி என்ன? இயேசு ''அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்'' (மாற் 6:34). இயேசு மனிதர் மீது எதையும் திணிக்க வரவில்லை. அவர் மனித சுதந்திரத்தை எப்போதும் மதிக்கிறவர். மக்கள் கடவுளிடமிருந்து வருகின்ற உண்மையைத் தெரிந்துகொள்ளவேண்டும், அவ்வாறு தெரிந்துகொண்ட உண்மையை வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும் - இதுவே இயேசு மக்களிடமிருந்து எதிர்பார்த்தது. ஆகவே, அவர் மக்களுக்குக் ''கற்பித்தார்''. இயேசுவிடமிருந்து கற்றதை நாம் வாழ்வில் கடைப்பிடிக்க அழைக்கப்படுகிறோம். அவரைப் போல நாமும் பரிவுடைய மக்களாக மாறுவதே நாம் அவருடைய சீடர்களாக வாழ்கிறோம் என்பதற்கு அடையாளம் ஆகும்.

மன்றாட்டு
இறைவா, எங்கள் உள்ளத்திலும் வாழ்விலும் பரிவு துலங்கிட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

''அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவுகொண்டு, 
இயேசு அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்'' (மாற்கு 6:34)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசு வாழ்ந்த பாலஸ்தீன நாட்டில் ஆடுமேய்த்தல் ஒரு முக்கிய தொழிலாக இருந்தது. இயேசு சொன்ன கதைகள் பலவற்றில் ஆடுகள் பற்றியும் அவற்றைக் கரிசனையோடு மேய்க்கின்ற ஆயர் பற்றியும் பல குறிப்புகள் உண்டு. இயேசு தம்மையே நல்ல ஆயருக்கு ஒப்பிட்டுப் பேசுகிறார். ஆயரில்லா ஆடுகள் வழிதவறிப் போகின்ற ஆபத்து உண்டு; அவை ஓநாய் போன்ற விலங்குகளுக்கு இரையாகிவிடுகின்ற நிலையும் ஏற்படக் கூடும். ஆனால் ஆயரின் வழிநடத்தல் இருக்கும்போது ஆடுகள் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. ஆடுகளுக்குத் தேவையான உணவை அளிக்க ஆயர் அவற்றைப் பசும்புல் தரைக்கு இட்டுச் செல்வார். நீர் அருந்துவதற்காக நீரோடைகளுக்குக் கூட்டிச்செல்வார் (காண்க: திபா 23). இவ்வாறு மக்களுக்குத் தேவையான ஆன்ம உணவை வழங்க இயேசு வந்தார். ஆனால் அவர் கண்ட மக்களோ ''ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்தார்கள்'' (மாற் 6:34).

-- இயேசு நம் ஆயர் என நாம் ஏற்கிறோம். நமக்கு உணவும் பாதுகாப்பும் தருபவர் நம் ஆயர். ''இயேசு அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்'' (மாற் 6:36) என்று மாற்கு கூறுவது இயேசு வழங்கிய இறையாட்சி பற்றிய போதனையே. கடவுளின் மதிப்பீடுகள் மனித வாழ்வுக்கு வழிகாட்ட வேண்டும் என்றும், கடவுளின் விருப்பத்தை மனிதர் செயல்படுத்த வேண்டும் என்றும் இயேசு நமக்குப் ''பலவற்றைக் கற்பிக்கிறார்''. ஆயரின் வழிநடத்தலை ஏற்காத ஆடுகள் ஆபத்துக்கு உள்ளாவதுபோல, நம் ஆயர் இயேசுவின் போதனையை நாம் ஏற்காத வேளைகளில் ஆபத்துக்கள் நம்மை அணுகிடக் கூடும். நல்ல ஆயர் நம்மீது காட்டுகின்ற அன்பு நம் இதயத்திலிருந்து எழுந்து பிறரை அரவணைக்கும் அன்பாக மாறிட வேண்டும். இதுவே நம் ஆயர் நமக்கு வழங்கும் போதனை.

மன்றாட்டு
இறைவா, எங்கள்மீது நீர் காட்டுகின்ற பரிவுக்கு நன்றி!

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!