Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      01  பெப்ரவரி 2018  
                                          பொதுக்காலத்தின் 4ஆம்  வாரம்  
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
உலகப் போக்குப்படி நானும் சாகப்போகிறேன். சாலமோனே! நீ நெஞ்சுறுதியுடன் இரு.

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 2: 1-4,10-12

தாவீதின் இறுதி நாள் நெருங்கினபோது அவர் தம் மகன் சாலமோனுக்குப் பணித்துக் கூறியது இதுவே: "அனைத்துலகும் போகும் வழியே நானும் போகிறேன். நீ நெஞ்சுறுதியும் வீரமும் கொண்டவனாய் இரு.

உன் கடவுளாகிய ஆண்டவரின் ஆணைகளைக் கடைப்பிடி. அவர் காட்டும் வழியில் நட. மோசேயின் சட்டநூலில் எழுதப்பட்டுள்ள கடவுளுடைய நியமங்கள், விதிமுறைகள், நீதிச் சட்டங்கள், ஒழுங்குமுறைகள் ஆகியவற்றைக் கடைப்பிடி. இப்படிச் செய்தால், நீ செய்யும் காரியங்களிலும் செல்லும் இடங்களிலும் வெற்றி காண்பாய்.

ஏனெனில் ஆண்டவர் என்னை நோக்கி, "உன் மைந்தர்கள் தங்கள் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் என் முன்னிலையில் உண்மையுடன் நடப்பார்களானால், இஸ்ரயேலின் அரியணையில் அமர்வதற்கேற்ற ஒருவன் அவர்களுள் இல்லாமல் போவதில்லை" என்று எனக்குக் கொடுத்த வாக்கு அப்போதுதான் நிலைத்திருக்கும்."

பின்னர் தாவீது தம் மூதாதையருடன் துயில் கொண்டு, தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டார். தாவீது இஸ்ரயேலின்மீது ஆட்சி செலுத்திய காலம் நாற்பது ஆண்டுகள். அவர் எபிரோனில் ஏழு ஆண்டுகளும் எருசலேமில் முப்பத்து மூன்று ஆண்டுகளும் ஆட்சி செலுத்தினார். சாலமோன் தம் தந்தை தாவீதின் அரியணையில் அமர்ந்தார். அவருடைய ஆட்சி உறுதியாக நிலைநாட்டப்பட்டது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்   1 குறி: 29: 10b. 11ab. 11cd-12a. 12bcd (பல்லவி: 12b)
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, அனைத்தையும் ஆள்பவர் நீரே.

10b எங்கள் மூதாதை இஸ்ரயேலின் ஆண்டவரே, நீர் என்றென்றும் வாழ்த்தப் பெறுவீராக! பல்லவி

11ab ஆண்டவரே, பெருமையும் வலிமையும் மாட்சியும் வெற்றியும் மேன்மையும் உமக்கே உரியன. ஏனெனில் விண்ணுலகிலும் மண்ணுலகிலும் இருக்கும் அனைத்தும் உம்முடையவை. பல்லவி

11cd ஆண்டவரே, ஆட்சியும் உம்முடையதே. நீர் யாவருக்கும் தலைவராய் உயர்த்தப் பெற்றுள்ளீர். 12a செல்வமும் மாட்சியும் உம்மிடமிருந்தே வருகின்றன. பல்லவி

12bcd நீரே அனைத்தையும் ஆள்பவர். ஆற்றலும் வலிமையும் உம் கையில் உள்ளன. எவரையும் பெருமைப்படுத்துவதும் வலியவராக்குவதும் உம் கையில் உள்ளன. பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
மாற் 1: 15

அல்லேலூயா, அல்லேலூயா! காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இயேசு பன்னிருவரையும் அனுப்பினார்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 7-13

அக்காலத்தில் இயேசு பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை இருவர் இருவராக அனுப்பத் தொடங்கினார். அவர்களுக்குத் தீய ஆவிகள் மீது அதிகாரமும் அளித்தார்.

மேலும், "பயணத்திற்குக் கைத்தடி தவிர உணவு, பை, இடைக்கச்சையில் செப்புக் காசு முதலிய வேறு எதையும் நீங்கள் எடுத்துக்கொண்டு போக வேண்டாம். ஆனால் மிதியடி போட்டுக்கொள்ளலாம்; அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும்'' என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

மேலும் அவர், "நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டுக்குள் சென்றால், அங்கிருந்து புறப்படும்வரை அவ்வீட்டிலேயே தங்கியிருங்கள். உங்களை எந்த ஊராவது ஏற்றுக்கொள்ளாமலோ உங்களுக்குச் செவிசாய்க்காமலோ போனால் அங்கிருந்து வெளியேறும்பொழுது, உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும்'' என்று அவர்களுக்குக் கூறினார்.

அப்படியே அவர்கள் புறப்பட்டுச் சென்று மக்கள் மனம் மாறவேண்டும் என்று பறைசாற்றினார்கள்; பல பேய்களை ஓட்டினார்கள்; உடல் நலமற்றோர் பலரை எண்ணெய் பூசிக் குணப்படுத்தினார்கள்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
எளிய வாழ்க்கையே உண்மையான சீடத்துவம்

கண்பார்வையற்ற ஒருவர் பெரிய ஒரு கோட்டைக்குள் மாட்டிக்கொண்டார். அவர் அந்தக் கோட்டையிலிருந்து வெளியேவர எவ்வளவோ முயன்றும், அவரால் வெளியே வரமுடியவில்லை.

அவர் தன்னுடைய கைகளால் தடவித் தடவி கோட்டையில் இருக்கும் கதவைத் தேடித் பார்த்தார். கதவு இருக்கும் இடம் வந்தபோது அவருடைய உடலில் திடிரென்று அரிப்பு ஏற்படவே, அவர் தன்னுடைய கைகளால் அரிப்பு ஏற்பட்ட இடத்தில் சொரியத் தொடங்கினார். அதற்குள் கதவு இருக்கும் பகுதி கடந்து போகவே, அவர் மீண்டுமாகத் கதவைத் தேடத் தொடங்கினார்.

எப்படி கண்பார்வையற்ற மனிதருக்கு உடலில் ஏற்பட்ட அரிப்பு, கதவைக் கண்டுபிடிக்கத் தடையை இருந்தது போன்று, உலக இன்பத்தின்மீது நமக்கிருக்கும் அதிகமான நாட்டம் நாம் முக்தியை - இறைநிலையை - அடையத் தடையை இருக்கின்றது.

"Less Luggage more Comfort" என்ற பொன்மொழி வழிப்பயணத்திற்கு மட்டுமல்ல, நம்முடைய வாழ்க்கைப் பயணத்திற்கும் பொருந்துவதாக இருக்கின்றது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னுடைய பன்னிரெண்டு சீடர்களை பணித்தளத்திற்கு அனுப்புகிறார். அப்படி அனுப்புகிறபோது அவர் சொல்லும் அறிவுரை "பயணத்திற்கு கைத்தடி, மிதியடி, அணிந்திருக்கும் அங்கி தவிர உணவு, பை, செப்புக்காசு என்று எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம்" என்கிறார். இதற்கு அடிப்படைக் காரணம் நாம் பொருட்களை நம்பி அல்ல, கடவுளை நம்பியே பணிசெய்ய வேண்டும் என்பது ஆகும்.

இயேசு ஆண்டவர் பயணத்திற்கு கைத்தடி எடுத்துக்கொண்டு போங்கள் என்று சொல்கிறார் என்றால் கைத்தடி என்பது (வாழ்க்கைப்) பாதையில் கிடக்கும் கற்களையும், முட்களையும் அகற்றி, பயணத்தை எளிதானதாக மாற்றுவதற்கு பேருதவியாக இருக்கும் என்பதே அவரது புரிதல். இங்கே கைத்தடி என்பதை நாம் விவிலியம் - இறைவார்த்தை - என்றுகூடப் பொருள்படுத்திக் கொள்ளலாம். ஏனென்றால் திருப்பாடல் 119:105 ல் வாசிக்கின்றோம், "என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு, என் பாதைக்கு ஒளியும் அதுவே" என்று. ஆகவே இறைவார்த்தையை நாம் நம் வாழ்க்கைப் பயணத்திற்கு கைதடியாகக் கொண்டு வாழ்ந்தால், எதிர்வரும் எப்படிப்பட்ட சவால்களையும் எளிதாக வெல்லலாம்.

அடுத்ததாக இயேசு பயணத்திற்கு உணவோ, பையோ, செப்புக்காசோ எடுத்துக்கொண்டு போகவேண்டாம் என்று சொல்கிறபோது நாம் பணத்தை நம்பி நமது வாழ்வை அமைத்துக்கொள்ளக்கூடாது என்பதே இயேசு கூறவிரும்பும் செய்தியாக இருக்கின்றது.

ஆனால் இன்றைக்கு மனிதர்கள் எது அத்தியாவசியத் தேவைகள், எது ஆடம்பரத் தேவைகள் என்று கூடத் தெரியாமல் சந்தையில் கிடைக்கும் எல்லாவற்றையும் தங்களுடைய வீட்டில் நிரப்பப் பார்க்கிறார்கள். இது மிகப்பெரிய அபத்தம். லூக் 12:15 ல் இயேசு கூறுவதுபோது மிகுதியான உடமைகளை, பொருட்களைப் பெற்றிருப்பதால் மட்டும் நமக்கு வாழ்வு வந்துவிடாது.

ஆகவே நாம் இறைவனை நம்பி நமது வாழ்வை அமைத்துக்கொள்வோம். ஏனென்றால் இந்த உலகத்தால் நமக்கு மெத்தையைத்தான் தரமுடியும், தூக்கத்தைத் தரமுடியாது, மாட மாளிகைகளைத்தான் தரமுடியும், மனநிம்மதியைத் தரமுடியாது. எனவே உணமையான அமைதியையும், மகிழ்வையும் தரும் இயேசுவின் உண்மையான் சீடர்களாவோம். இறையருளை நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antony, Palayamkottai.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
துறவு வாழ்வு என்பது யாதெனில்...

மலையடிவாரத்தில் இருந்த அந்த துறவி எப்போதும் எளிமையாய் இருப்பார். அதனால் அவரை அனைவரும் மதித்து வணங்கினர். இதைக் கண்ட செல்வந்தர் ஒருவர், "அட இந்தத் துறவிக்கு இவ்வளவு செல்வாக்கா? பெரிய செல்வந்தனாகிய எனக்குக்கூட இவ்வளவு மதிப்பில்லையே" என்று நினைத்துக் கொண்டான். வீடு வந்த செல்வந்தனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. "பேசாமல் நானும் துறவியாகி விடுகிறேன் என்று நினைத்துக்கொண்டான்.

மறுநாள், அவன் நேராக அந்தத் துறவியைக் காட்டில் சந்தித்தான். தனது விருப்பத்தை அவரிடம் கூறினான். அவரோ, "நீயோ பெரிய செல்வந்தன், ஆடம்பர வாழ்க்கையை உன்னால்விட முடியாது" என்றார். அதற்கு செல்வந்தன், "என்னால் நிச்சயமாக முடியும். நான் இன்றே சாதாரண உடைகளை அணிந்து கொள்கின்றேன். அத்துடன் எளிய உணவுமுறையை உடனே கடைப்பிடிக்கிறேன். இப்போது சொல்லுங்கள்" என்று அவசரமாக மறுத்துப் பேசினான். துறவியும், "சரி, பார்க்கலாம் நாளை என்னை வந்து பார்" என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

அடுத்தநாள், அந்தச் செல்வந்தன் எளிய ஆடைகள் அணிந்து துறவியிடம் வந்தான். அவர் இட்ட பணிகளைச் செய்தான். ஆனால் மனதிற்குள், "ச்சே! புகழுக்காக இந்த வேலைகளை எல்லாம் செய்ய வேண்டியிருக்கின்றது" என்று நினைத்துக் கொண்டான். அத்துடன் செல்வந்தன் எளிய உணவுகளை சாப்பிட்டான். மனதிற்குள், "இதுபோன்ற அற்ப உணவுகளை நான் என் வாழ்நாளில் சாப்பிட்டதே இல்லை, கொஞ்ச நாள் பொறுப்போம். அப்போதுதான் நமக்குப் பேரும் புகழும் கிடைக்கும்" என்று எண்ணிக் கொண்டான். நாட்கள் சென்றன. ஒருநாள் துறவி செல்வந்தனை அழைத்து, "உனக்கு இந்த வாழ்க்கைமுறை சரிவராது. நீ போகலாம்" என்றார். "செல்வந்தனோ, "என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்கள்? இதற்காகவா நான் எனது ஆடம்பர வாழ்க்கையைத் துறந்தேன்? இதற்காகவா சாதாரண ஆடை உடுத்தி, எளிய உணவுகளை கஷ்டப்பட்டு சாப்பிட்டேன்" என்றான்.

துறவி அதற்கு, "நான் உன்னை வேரை அறுக்கச் சொன்னேன். நீயோ, ஒருசில இலைகளையும் கிளைகளையும் துறந்துவிட்டுப் பெருமை பேசுகின்றாய்" என்றார். அப்போதுதான் செல்வந்தனுக்குப் புரிந்தது. இரட்டை மனநிலையில் செய்யும் எந்த ஒரு செயலும் முழுமை அடையாது என்று. அதன்பின் அவன் தான் துறவு வாழ்வுக்கு இலாயக்கில்லை என்று நினைத்துக்கொண்டு, துறவியை வணங்கிவிட்டு தன் வீட்டுக்குப் புறப்பட்டான்.

பொருட்களை துறப்பது மட்டும் துறவல்ல, எல்லாவற்றையும் துறந்துவிட்டோம் என்ற எண்ணத்தை துறப்பதுதான் உண்மையான துறவு ஆகும்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தனது பன்னிரு சீடர்களையும் தம்மிடம் வரவழைத்து அவர்களை இருவர் இருவராக பணித்தளத்திற்கு அனுப்புகின்றார். அப்படி அனுப்புகின்றபோது அவர்கள் என்னென்ன செய்யவேண்டும் என்பதை அறிவுரையாகக் கூறுகின்றார். "பயணத்திற்குக் கைதடி தவிர உணவு, பை, இடைக்கச்சையில் செப்புக் காசு முதலிய வேறு எதையும் (நீங்கள்) எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஆனால் மிதியடி போட்டுக்கொள்ளலாம்; அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும்" என்கின்றார். உணவு, பை, இடைக்கச்சையில் செப்புக் காசு முதலிய எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம் என்று ஆண்டவர் இயேசு சொல்வதை, இறைப்பணி செய்கின்ற ஒருவர் தன்னையோ, பொருட்களையோ நம்பிப் பணிசெய்யாமல், இறைவனை மட்டுமே நம்பிப் பணிசெய்யவேண்டும் என்ற அர்த்தத்தில் புரிந்துகொள்ளவேண்டும்.

இறைவனை நம்பிப் பணிசெய்வது எப்படி என்று சிந்தித்துப் பார்த்தோமென்றால், ஒருவர் இறைவனின் கரங்களில் தன்னை முற்றிலுமாகக் கையளித்து வாழ்வது என்று புரிந்துவிடும். அப்படி ஒருவர் இறைவனின் கரங்களில் தன்னை முற்றிலுமாகக் கையளித்து வாழ்கின்றபோது பணிவாழ்வில் வரக்கூடிய சவால்கள், பிரச்சனைகள் எல்லாம் பெரிதாகத் தெரியாது, மாறாக இறைவனின் பாதுகாப்பும் உடனிப்பும்தான் பெரிதாகத் தெரியும். பணிவாழ்வில் இறைவனின் இந்தப் பாதுகாப்பை உணர்ந்ததினால்தான் பவுலடியார், "கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கக்கூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? இடரா? எதுதான் நம்மைப் பிரிக்க முடியும்?" என்று கூறுகின்றார் (உரோ 8:35). ஆம், கிறிஸ்துவின் கரங்களில் நம்மை முழுமையாய் ஒப்படைத்துவிட்டு, நாம் அவருடைய பணியைச் செய்கின்றபோது நம்மை எதுவும் அணுகாது என்பதுதான் உண்மை.

பல நேரங்களில், பணிவாழ்வில் நாம் மிகப் பெரிய தோல்வியையும் விரக்தியையும் சந்திப்பதற்குக் காரணம் நாம் இறைவனை நம்பாமல், நம் திறமைகளையும், நம்மையே நம்புவதே ஆகும்.

ஆகவே, இறைப்பணி செய்ய அழைக்கப்பட்டிருக்கும் நாம் ஒவ்வொருவரும் துறவு வாழ்க்கை என்பது வெறுமனே பொருட்களைத் துறப்பது அல்ல, எல்லாவற்றையும் துறந்துவிட்டோம் என்ற எண்ணத்தையும் துறப்பது என்பதை உணர்வோம், இறைவனை மட்டும் நம்பிப் பணிசெய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


Fr. Maria Antonyraj, Palayamkottai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
''பன்னிருவரும் புறப்பட்டுச் சென்று மக்கள் மனம் மாற வேண்டுமென்று பறைசாற்றினார்கள்'' (மாற்கு 6:12)

இயேசு ஆற்றிய பணியைத் தொடர்வதற்கு மனிதர் தேவைப்பட்டார்கள். எனவே, இயேசு பன்னிருவரைத் தேர்ந்துகொண்டு அவர்களுக்குச் சிறப்புப் பணி கொடுக்கிறார். அவர்கள் ஆற்றவேண்டிய பணி இயேசுவின் பணிதான். அவர்கள் எடுத்துரைக்க வேண்டிய செய்தி இயேசு அறிவித்த செய்திதான். பன்னிருவரை இயேசு தேர்ந்துகொண்டது இஸ்ரயேல் மக்களின் பன்னிரு குலத்தைக் குறிப்பதற்காக. பழைய ஏற்பாட்டுக் காலத்தில் கடவுள் தமக்கென்று ஒரு மக்கள் இனத்தைத் தேர்ந்துகொண்டது போல இப்போது புதியதொரு மக்களினத்தைத் தேர்ந்துகொள்கிறார் என்பதற்குப் பன்னிருவர் அடையாளமாயினர். இப்புதிய மக்கள் குலம் இயேசுவின் பெயரால் கூடுகின்ற மக்கள் குழு. இதையே ''திருச்சபை'' என அழைக்கிறோம். இக்குழுவைச் சேர்ந்தவர்கள் இயேசுவின் சீடர்கள். இவர்கள் நடுவே இயேசுவின் போதனை செயலாக்கம் பெற வேண்டும். 

இயேசுவின் குழுவில் நாம் பங்கேற்க வேண்டும் என்றால் நாம் மனம் மாற வேண்டும். மனம் மாறுதல் என்பது வாழ்க்கையை மாற்றியமைத்தலைக் குறிக்கும். நம் உள்ளத்தின் ஆழத்தில் கடவுளை முழுமையாக ஏற்று, நம் சிந்தனைப் பாணியை வேரோட்டமான முறையில் மாற்றியமைப்பதே உண்மையான மன மாற்றம். இந்த மாற்றத்தை அனுபவிப்பவர்கள் கடவுளோடு நெருங்கிய உறவு கொள்ள முன்வருவார்கள். அவர்களுடைய வாழ்க்கை ஒரு புதிய முறையில் துலங்கும். அதில் ஏற்படுகின்ற புதுமை கடவுளின் அருளால் நிகழ்கின்ற புதிய நிலையை வெளிக்காட்டும். இவ்வாறு புதிய மன நிலை பெறுவோர் கடவுளின் மன நிலையோடு செயல்படுவர். அப்போது கடவுளின் ஆட்சி நிறைவாக அவர்கள் நடுவே மலரும்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!