|
|
29
பிப்ரவரி 2020 |
|
|
பொதுக்காலம்
7 ஆம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம் திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் சனி
=================================================================================
பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை
நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 58: 9b-14
ஆண்டவர் கூறுவது:
உன்னிடையே இருக்கும் நுகத்தை அகற்றிவிட்டு, சுட்டிக்காட்டிக்
குற்றஞ்சாட்டுவதையும் பொல்லாதன பேசுவதையும் நிறுத்திவிட்டு, பசித்திருப்போருக்காக
உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள்
நடுவே உன் ஒளி உதிக்கும்; இருண்ட உன் நிலை நண்பகல் போல் ஆகும்.
ஆண்டவர் தொடர்ந்து உன்னை வழிநடத்துவார்; வறண்ட சூழலில் உனக்கு
நிறைவளிப்பார்; உன் எலும்புகளை வலிமையாக்குவார்; நீயும் நீர்
பாய்ந்த தோட்டம்போலும், ஒருபோதும் வற்றாத நீரூற்றுபோலும் இருப்பாய்.
உன் மக்கள் பண்டை நாளிலிருந்து பாழடைந்து கிடப்பவற்றைக் கட்டியெழுப்புவர்;
தலைமுறை தலைமுறையாக உள்ள அடித்தளங்களின் மேல் கட்டியெழுப்புவாய்;
தகர்ந்த மதிலைத் திரும்பக் கட்டுபவன் என்றும் குடியிருப்பதற்குத்
தெருக்களைச் சீர்படுத்துபவன் என்றும் பெயர் பெறுவாய்.
ஓய்வுநாளின் முறைமைகளினின்று விலகிச் செல்லாது, என் புனித
நாளில் உன் விருப்பம் போல் செய்யாதிருந்து, ஓய்வுநாள்
"மகிழ்ச்சியின் நாள்" என்றும் "ஆண்டவரின் மேன்மைமிகு புனித
நாள்" எனவும் சொல்லி அதற்கு மதிப்புத் தந்து, உன் சொந்த வழிகளில்
செல்லவோ உன் சொந்த ஆதாயத்தை நாடவோ வெற்றுப் பேச்சுகளைப் பேசவோ
செய்யாதிருந்தால், அப்பொழுது, ஆண்டவருக்கு ஊழியம் புரியும் மகிழ்ச்சியைப்
பெறுவாய்; நானோ, மண்ணுலகின் உயர்விடங்களில் உன்னை வலம் வரச்செய்வேன்;
உன் மூதாதையாகிய யாக்கோபின் உரிமைச் சொத்தின் மூலம் உனக்கு
உணவளிப்பேன்; ஆண்டவரின் வாய் இதை உரைத்தது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 86: 1-2. 3-4. 5-6 (பல்லவி: திபா 86:11a)
Mp3
=================================================================================
பதிலுரைப் பாடல்
திபா 86: 1-2. 3-4. 5-6 (பல்லவி: திபா 86:11a)
பல்லவி: ஆண்டவரே, உமது வழியை எனக்குக் கற்பியும்.
1ஆண்டவரே! எனக்குச் செவிசாய்த்துப் பதிலளியும்; ஏனெனில், நான்
எளியவன்; வறியவன்.
2என் உயிரைக் காத்தருளும்; ஏனெனில் நான் உம்மீது பற்றுடையவன்;
உம் ஊழியனைக் காத்தருளும்; நீரே என் கடவுள்! நான் உம்மீது நம்பிக்கை
கொண்டுள்ளேன். - பல்லவி
3என் தலைவரே! என்மேல் இரக்கமாயிரும்; ஏனெனில், நாள் முழுவதும்
உம்மை நோக்கி மன்றாடுகிறேன்.
4உம் அடியானின் மனத்தை மகிழச் செய்யும்; என் தலைவரே! உம்மை
நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன். - பல்லவி
5ஏனெனில் என் தலைவரே! நீர் நல்லவர்; மன்னிப்பவர்; உம்மை நோக்கி
மன்றாடும் அனைவருக்கும் பேரன்பு காட்டுபவர்.
6ஆண்டவரே, என் வேண்டுதலுக்குச் செவிகொடும்; உம் உதவியை நாடும்
என் குரலைக் கேட்டருளும். - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
நற்செய்திக்கு முன் வசனம் (எசே 33: 11)
"தீயோர் சாகவேண்டும் என்பது என் விருப்பமன்று; ஆனால், அத்தீயோர்
தம் வழிகளினின்று திரும்பி, வாழவேண்டும் என்பதே என் விருப்பம்,"
என்கிறார் ஆண்டவர்.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நற்செய்தி வாசகம்
நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 27-32
அக்காலத்தில்
இயேசு சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்த லேவி என்னும் பெயருடைய
வரிதண்டுபவர் ஒருவரைக் கண்டார்; அவரிடம், "என்னைப் பின்பற்றி
வா!" என்றார். அவர் அனைத்தையும் விட்டுவிட்டு எழுந்து இயேசுவைப்
பின்பற்றிச் சென்றார்.
இந்த லேவி தம் வீட்டில் அவருக்கு ஒரு பெரிய விருந்து அளித்தார்.
வரிதண்டுபவர்களும் மற்றவர்களும் பெருந்திரளாய் அவர்களோடு பந்தியில்
அமர்ந்தார்கள். பரிசேயர்களும் அவர்களைச் சேர்ந்த மறைநூல் அறிஞர்களும்
முணுமுணுத்து இயேசுவின் சீடரிடம், "வரிதண்டுபவர்க ளோடும் பாவிகளோடும்
சேர்ந்து நீங்கள் உண்பதும் குடிப்பதும் ஏன்?" என்று கேட்டனர்.
இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, "நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே
மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க
வந்தேன்" என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
எசாயா 58: 9-14
"நானோ, மண்ணுலகின் உயர்விடங்களில் உன்னை வலம் வரச் செய்வேன்"
நிகழ்வு
அமெரிக்காவில் தோன்றிய மிகப்பெரிய தொழிலதிபர் ஜான்.டி.ராக்பெல்லர்.
ஒருசில காரணங்களால் மன அமைதியை இழந்த இவர் நோய்வாய்ப்பட்டார்.
இந்நிலையில் அமெரிக்கா சென்றிருந்த சுவாமி விவேகானந்தர் இவரைச்
சந்தித்தார்.
"உங்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற இந்த நோய் உங்களை விட்டு நீங்க
வேண்டுமென்றால், நீங்கள் உங்களிடம் இருக்கின்ற செல்வத்தை ஏழைகளுக்குப்
பகிர்ந்து கொடுக்க வேண்டும்" என்றார் சுவாமி விவேகானந்தர். "என்ன!
எனது உடைமைகளை எல்லாம் ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுத்தால் என்னுடைய
நோய் நீங்கி விடுமா...? இது என்ன சுத்தப் பைத்தியக்காரத்தனமாக
இருக்கிறதே!" என்றார் ராக்பெல்லர்.
"நான் சொல்வதுபோல் செய்யுங்கள். அதன் பின்னர் என்ன நடக்கிறது
என்று பாருங்கள்" என்று சொல்லிவிட்டு, விவேகானந்தர் அங்கிருந்து
சென்றார். இதற்குப் பின்பு ராக்பெல்லர் தன்னுடைய உடைமைகளை ஏழைகளுக்குப்
பகிர்ந்து கொடுத்தார்; நிதியில்லாமல் நின்றிருந்த ஒரு கல்லூரிக்கு
நிதியுதவி செய்தார். இன்னும் இதுபோன்ற பல்வேறு உதவிகளைத்
தேவையில் உள்ள மக்களுக்குச் செய்தார். இதனால் இவருடைய உடல்நலம்
படிப்படியாக முன்னேறி, முழுமையாக நலம்பெற்றார்.
இதற்குப் பின்பு இவர் சுவாமி விவேகானந்தரைச் சந்தித்து, "உடைமைகளை
ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுங்கள் என்று நீங்கள் சொன்னபோது முதலில்
நான் நம்பவில்லை; இப்பொழுது நம்புகிறேன்" என்றார். இந்த நிகழ்விற்குப்
பிறகு ராக்பெல்லர் ஏழைகளுக்கும் தேவையில் உள்ளவர்களுக்கு உதவி
செய்வதற்கும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார்.
இந்த நிகழ்வில் வருகின்ற ராக்பெல்லர் ஏழைகளுக்கும் தேவையில் இருந்தோருக்கும்
வாரி வாரி வழங்கினார். இதனால் இவருடைய புகழ் உலகெங்கும் பரவியது.
இன்றைய முதல் வாசகம் நோன்பின் உண்மையான அர்த்தத்தை உணர்ந்து,
அதன்படி நடப்போருடைய வாழ்வு மேலும் மேலும் உயர்வடையும் என்ற
செய்தியை எடுத்துக் கூறுகிறது. நாம் அது குறித்து இப்பொழுது
சிந்தித்துப் பார்ப்போம்.
செய்யக்கூடாதவை
இன்றைய முதல் வாசகம் நேற்றைய முதல் வாசகத்தின் தொடர்ச்சியாகவே
இருக்கின்றது. நேற்றைய வாசகம் உண்மையான நோன்பு எப்படிப்பட்டதாக
இருக்கவேண்டும் என்பதைக் கூறியது. இன்றைய முதல் வாசகமோ
நோன்பிருக்கின்றபொழுது எவற்றையெல்லாம் செய்யவேண்டும்... எவற்றையெல்லாம்
செய்யக்கூடாது என்பதைப் பட்டியலிடுகின்றது. முதலில் நாம் எவற்றையெல்லாம்
செய்யக்கூடாது எனத் தெரிந்துகொள்வோம்.
நோன்பிருக்கும் நாளில் செய்யக்கூடாதவை என, குற்றம் சாற்றுதல்,
பொல்லாதவை பேசுதல், சொந்த வழிகளில் செல்லுதல், சொந்த ஆதாயத்தை
நாடுதல், வெற்றுப் பேச்சுப் பேசுதல் ஆகியவற்றைக்
குறிப்பிடுகின்றார் ஆண்டவர். நோன்பிருக்கும் நாளில் இவற்றையெல்லாம்
செய்தால், அது நோன்பிறகு அழகில்லாமல் போய்விடும் என்பதால், இவற்றையெல்லாம்
செய்யக்கூடாது எனத் தெளிவாகக் குறிப்பிடுகின்றார் ஆண்டவர்.
செய்யவேண்டியவை
நோன்பிருக்கும்பொழுது என்னென்ன செய்யக்கூடாது என்று
குறிப்பிட்ட ஆண்டவர், என்னென்ன செய்யவேண்டும் என்பதை மிகத்
தெளிவாகக் குறிப்பிடுகின்றார். அவைதான் பசித்திருப்போருக்கு நம்மையே
கையளித்தல் மற்றும் வறியோரின் தேவைகளைப் பூர்த்தி செய்தல் ஆகும்.
இங்கு வறியோர் யாரெனத் தெரிந்துகொள்வது நல்லது. வறியோர் என்றால்
ஏழைகள், அனாதைகள், கைம்பெண்கள், கைவிடப்பட்டோர்... இவர்களுடைய
தேவைகளை நாம் பூர்த்தி செய்யவேண்டும். இவற்றைச் செய்யாமல்,
நோன்பிருப்பதில் எந்தவோர் அர்த்தமுமில்லை.
உண்மையான நோன்பு இருப்பதால் கிடைக்கின்ற ஆசிகள்
நோன்பிருக்கும்பொழுது எவற்றையெல்லாம் செய்யக்கூடாது... எவற்றையெல்லாம்
செய்யவேண்டும் என்பதைக் குறித்துத் தெரிந்துகொண்ட நாம், இப்பொழுது
உண்மையான நோன்பிருக்கும்பொழுது கிடைக்கின்ற ஆசிகளை நாம்
தெரிந்துகொள்வோம்.
உண்மையான நோன்பிருக்கும்பொழுது, அதாவது பசித்திருப்போருக்கு நம்மையே
கையளித்து, வறியோரின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றபொழுது இருள்
நடுவே நம் ஒளி உதிக்கும் என்றும் இருண்ட நம் நிலை நண்பகல் போல்
ஆகும் என்றும் ஆண்டவர் நம்மை வழிநடத்துவார் என்றும் மண்ணுலகின்
உயர்விடங்களில் நம்மை வரச் செய்வார் என்றும் அறிந்துகொள்கின்றோம்.
ஆம், இறைவன் நம்மிடம் சொன்னது போன்று நாம்
நோன்பிருக்கும்பொழுது, அதனால் பெறுகின்ற ஆசிகளை வார்த்தைகளால்
விவரித்துச் சொல்ல முடியாது. அந்தளவுக்கு இறைவன் நம்மைத் தன்னுடைய
ஆசியால் நிரப்புவார். ஆதலால், நாம் நம்முடைய சொந்த ஆதாயத்தை
நாடாமல் உண்மையான முறையில் நோன்பிருப்போம். அதன்மூலம் அவர் தருகின்ற
ஆசியை நிறைவாகப் பெறுவோம்.
சிந்தனை
"உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல இரக்கத்தையே
விரும்புகிறேன்" (ஓசே 6:6) என்பார் ஆண்டவர். ஆகையால், நாம்
நோன்பின் மையமாக இருக்கும் இரக்கத்தையும் அன்பையும் நமது
வாழ்வில் கடைப்பிடித்து வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
லூக்கா 5: 27- 32
"அவர் அனைத்தையும் விட்டுவிட்டு எழுந்து இயேசுவைப் பின்பற்றிச்
சென்றார்"
நிகழ்வு
முன்பொரு காலத்தில் யாக்ஞவல்கி என்றொரு துறவி இருந்தார். இவரிடத்தில்
ஏராளமான சீடர்கள் இருந்தார்கள். இவருடைய போதனையால் ஈர்க்கப்பட்ட
ஜனகர் என்ற மன்னரும் தன்னை இவரது சீடராக இணைத்துக் கொண்டார்.
நாள்கள் மெல்ல நகர்ந்து செல்கையில், துறவியின் மற்ற சீடர்கள்,
துறவி மன்னர்மீதுதான் மிகுந்த அன்பு செலுத்துகின்றார் என்று
அவர்மீது பொறாமை கொள்ளத் தொடங்கினார்கள். இச்செய்தி துறவியின்
காதுகளுக்கு எப்படியோ வந்தது. இருந்தாலும் இவர் அதை வெளியே
காட்டிக்கொள்ளாமல், தக்க தருணத்தில் விளக்கம் அளிக்கலாம் என்று
பொறுமையோடு இருந்தார்.
இதற்கிடையில் ஒருநாள் மன்னர் துறவியிடம் வந்து, "நீங்களும்
சீடர்களும் என்னுடைய அரண்மனையில் வந்து தங்கி, நான் அளிக்கும்
விருந்தினைச் சில நாள்களுக்கு உண்டால் நான் பெரிதும்
மகிழ்வேன்" என்றார். துறவியும் அதற்குச் சரியென்று
சொல்லிவிட்டு, தன் சீடர்களோடு மன்னரின் அரண்மனையில் தங்கினார்.
துறவி தன் சீடர்களுடன் அரண்மனையில் தங்கியிருந்த நாள்களில்,
அரண்மனைக்கு முன்பு இருந்த ஒரு சிறிய கூடத்தில்தான்
எல்லாருக்கும் போதனை நடைபெற்றது.
ஒருநாள் துறவி தன்னுடைய சீடர்களுக்குப் போதித்துக்
கொண்டிருந்தார். அந்தக் கூட்டத்தில் மன்னரும் இருந்தார்.
அப்பொழுது வேகமாக அங்கு வந்த பணியாளர் ஒருவர், "அரண்மனையில்
தீப்பிடித்து விட்டது" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து
ஓடிப்போனார். இதைக் கேட்ட சீடர்கள் வேகவேகமாக அரண்மனைக்குள்
ஓடி, தாங்கள் துவைத்துக் காயப்போட்டிருந்த துறவு ஆடைகளை
எடுத்துக்கொண்டு வெளியே ஓடிவந்தனர். அவர்கள் திரும்பி
வந்தபொழுது, துறவி தன்னுடைய போதனையை நிறுத்தாமல்
போதித்துக்கொண்டிருந்தார். அவருக்கு முன்பாக மன்னர் எதுவுமே
நடக்காததுபோல், போதனையைக் கேட்டுக்கொண்டிருந்தார். இது மற்ற
சீடர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தைத் தந்தது.
அப்பொழுது துறவி அவர்களிடம், "இத்தனை நாள்களும் நான் ஏன்
மன்னர் ஜனகர் மீது மிகுந்த அன்பு செலுத்துகின்றேன் என்று
பேசிக்கொண்டிருக்கின்றீர்களே! இதற்கான காரணத்தை நான் இன்றைக்கு
உங்களுக்குச் சொல்கின்றேன்... பணியாளர், அரண்மனையில்
தீப்பிடித்துவிட்டு என்று சொன்னதும், அது உண்மையா என்றுகூட
நீங்கள் விசாரிக்கவில்லை. மட்டுமல்லாமல், தீயிலிருந்து
உங்களுடைய துறவு ஆடையை எடுக்கவேண்டும் என்று விரைந்து
சென்றீர்கள்; ஆனால், மன்னர் எது போனாலும் பரவாயில்லை என்று
என்னுடைய போதனையைப் பெரிதென நினைத்துக்
கேட்டுக்கொண்டிருந்தார். உண்மையைச் சொல்லவேண்டும் என்றால்,
நீங்கள் துறவறம் பூண்டிருந்தாலும், பொருள்களின்மீது மிகுந்த
பற்றுடையவர்களாக இருக்கின்றார்கள். இவரோ இல்லற வாழ்க்கை
வாழ்ந்தாலும், எல்லாவற்றையும் துறந்த ஒரு துறவியைப் போன்று
பற்றற்றவராக இருந்து, உண்மையான துறவியாக இருக்கின்றார்.
இதனாலேயே நான் இவர்மீது மிகுந்த அன்புகொண்டிருக்கின்றேன்"
என்றார்.
மன்னராக இருந்தாலும் ஆசைகளைத் துறந்து, எதன்மீதும்
பற்றில்லாமல் வாழ்ந்த மன்னர் ஜனவர் துறவு வாழ்வுக்கு, சீடத்துவ
வாழ்விற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கின்றார்.
நற்செய்தியில் எல்லாவற்றையும் துறந்து அல்லது விட்டுவிட்டு
இயேசுவைப் பின்பற்றிய லேவியைக் குறித்து வாசிக்கின்றோம்.
அவருடைய சீடத்துவ வாழ்வு நமக்கு எந்தளவுக்கு எடுத்துக்காட்டாக
இருக்கின்றது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப்
பார்ப்போம்.
சீடத்துவ வாழ்விற்கு மிகச் சிறந்த சான்றாக விளங்கும் மத்தேயு
நற்செய்தியில் இயேசு, சுங்கச் சாவடியில் வரிவசூலித்துக்
கொண்டிருந்த லேவியை "என்னைப் பின்பற்றி வா" என்று
அழைக்கின்றார். அவருடைய அழைப்பை ஏற்று, மத்தேயு எல்லாவற்றையும்
விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றிச் செல்கின்றார். இங்கு லேவி
அல்லது மத்தேயுவின் பின்தொடர்தல், சீடத்துவ வாழ்க்கை எப்படி
இருந்து எனத் தெரிந்துகொள்வது நல்லது.
மத்தேயு செய்துவந்த வேலையைக் சாதாரணமாகப் பெற்றுவிட முடியாது;
பணம் கொடுத்துத்தான் பெறவேண்டும். அப்படிப்பட்ட வேலையை, இயேசு
அழைத்தவுடன் விட்டுவிட்டு, அவரைப் பின்தொடர்கின்றார்.
மட்டுமல்லாமல், இயேசு சிலுவையில் அறையப்பட்டுக் கொல்லப்பட்ட
பிறகு, எல்லாம் முடிந்துவிட்டது என்று மற்றவர்கள் தங்களுடைய
வேலையை மீன்பிடித் தொழிலைப் பார்க்கச் சென்றபொழுது (யோவா
21), மத்தேயு தான் பார்த்த பழைய வேலைக்குத் திரும்பிச்
சென்றதாக எந்தவொரு குறிப்பும் இல்லை. அவர் நிச்சயம் தன்னுடைய
வேலைக்குச் சென்றிருக்கமாட்டார் என்று சொல்லலாம். அந்தளவுக்கு
மத்தேயு, இயேசுவுக்காக எல்லாவற்றையும் துறந்து, அவருக்கு
மட்டுமே தன்னுடைய வாழ்வில் முக்கியத்துவம் தந்து அவருடைய
உண்மையான சீடராக விளங்கினார்.
இயேசுவின் சீடர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நாம் உலக
செல்வத்தின்மீதான பற்றினை அகற்றி, இயேசுவின்மீது மட்டும்
பற்றுடையவர்களாக இருக்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
"என்னைப் பொறுத்தமட்டில் என் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவைப்
பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்ற செல்வம். இதன்பொருட்டு மற்ற
எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன்" (பிலி 3: 8) என்பார்
புனித பவுல். ஆகையால், நாம் இயேசுவே ஒப்பற்ற செல்வம் என்பதை
உணர்ந்து, அவரைப் பற்றிக்கொண்டு, அவரது உண்மையான சீடர்களாக
விளங்குவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|