Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   28 பிப்ரவரி 2020  
    பொதுக்காலம் 7 ஆம் வாரம்
=================================================================================
முதல் வாசகம்    திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் வெள்ளி
=================================================================================
உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக்கொள்ளாதிருப்பது அன்றோ நாம் விரும்பும் நோன்பு!

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 58: 1-9a

இறைவனாகிய ஆண்டவர் கூறுகிறார்:

பேரொலி எழுப்பிக் கூப்பிடு, நிறுத்திவிடாதே; எக்காளம் முழங்குவதுபோல் உன் குரலை உயர்த்து; என் மக்களுக்கு அவர்களின் வன்செயல்களையும், யாக்கோபின் குடும்பத்தாருக்கு அவர்களின் பாவத்தையும் எடுத்துக்கூறு. அவர்கள், நேர்மையானவற்றைச் செய்யும் மக்களினம்போலும், தங்கள் கடவுளின் கட்டளையைக் கடைப்பிடிப்போர் போலும் நாள்தோறும் என்னைத் தேடுகின்றார்கள்; என் நெறிமுறைகள் பற்றிய அறிவை நாடுகின்றார்கள்; நேர்மையான நீதித்தீர்ப்புகளை என்னிடம் வேண்டுகின்றார்கள்; கடவுளை அணுகிவர விழைகின்றார்கள். "நாங்கள் உண்ணா நோன்பிருந்த பொழுது, நீர் எங்களை நோக்காதது ஏன்? நாங்கள் எங்களைத் தாழ்த்திக்கொண்டபோது நீர் எங்களைக் கவனியாதது ஏன்?" என்கின்றார்கள்.

நீங்கள் நோன்பிருக்கும் நாளில் உங்கள் ஆதாயத்தையே நாடுகின்றீர்கள்; உங்கள் வேலையாள்கள் அனைவரையும் ஒடுக்குகின்றீர்கள். இதோ, வழக்காடவும், வீண் சண்டையிடவும், கொடும் கையால் தாக்கவுமே நீங்கள் நோன்பிருக்கிறீர்கள்! இன்றுபோல் நீங்கள் உண்ணா நோன்பிருந்தால் உங்கள் குரல் உன்னதத்தில் கேட்கப்படாது.

ஒருவன் தன்னை ஒடுக்கிக்கொள்ளும் நாளையா நான் உண்ணா நோன்பின் நாளாகத் தெரிந்துகொள்வது? ஒருவன் நாணலைப்போல் தன் தலையைத் தாழ்த்திச் சாக்கு உடையையும் சாம்பலையும் அணிந்து கொள்வதா எனக்கு ஏற்ற நோன்பு? இதையா நீங்கள் நோன்பு என்றும் ஆண்டவருக்கு உகந்த நாள் என்றும் அழைக்கின்றீர்கள்?

கொடுமைத் தளைகளை அவிழ்ப்பதும், நுகத்தின் பிணையல்களை அறுப்பதும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவதும், எவ்வகை நுகத்தையும் உடைப்பதும் அன்றோ நான் தேர்ந்துகொள்ளும் நோன்பு!

பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்துகொடுப்பதும், தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும், உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக்கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு!

அப்பொழுது உன் ஒளி விடியல் போல் எழும்; விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்; உன் நேர்மை உனக்கு முன் செல்லும்; ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின் சென்று காக்கும். அப்போது நீ ஆண்டவரை மன்றாடுவாய்; அவர் உனக்குப் பதிலளிப்பார்; நீ கூக்குரல் இடுவாய்; அவர் "இதோ! நான்" என மறுமொழி தருவார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 51: 1-2. 3-4a. 16-17 (பல்லவி: திபா 51:17b) Mp3
=================================================================================
பல்லவி: நொறுங்கிய உள்ளத்தை இறைவா, நீர் அவமதிப்பதில்லை.
1கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும். உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்.
2என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். - பல்லவி

3ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்; என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது.
4aஉமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்; உம் பார்வையில் தீயது செய்தேன். - பல்லவி

16ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது; நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை.
17கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றம் உணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை. - பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 (ஆமோ 5: 14)

நன்மையை நாடுங்கள், தீமையைத் தேடாதீர்கள்; அப்பொழுது படைகளின் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடு இருப்பார்.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 14-15


அக்காலத்தில்

யோவானின் சீடர் இயேசுவிடம் வந்து, "நாங்களும் பரிசேயரும் அதிகமாக நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?" என்றனர்.

அதற்கு இயேசு அவர்களை நோக்கி, "மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா? மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்."


ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 எசாயா 58: 1-9a

கடவுள் விரும்பும் நோன்பு

நிகழ்வு

நாட்டில் பஞ்சம் ஏற்பட்டு மக்களெல்லாம் பெரிதும் துன்பப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இதற்கு நடுவில் பஞ்ச நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வந்த சுவாமி விவேகானந்தரோ, 'பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட எல்லா மக்களுக்கும் என்னால் உதவிசெய்ய முடியவில்லையே' என்ற வருத்தத்தோடு இருந்தார்.

இந்நிலையில் சுவாமி விவேகானந்தரைச் சந்திக்க பெரியவர் ஒருவர் வந்தார். அவரை அன்போடு வரவேற்ற சுவாமி விவேகானந்தர், "தாங்கள் வந்ததன் நோக்கம் என்ன என்று தெரிந்து கொள்ளலாமா?"என்று கேட்டார். அதற்கு பண்டிதர் அவரிடம், "உங்களோடு சிறிதுநேரம் மறைநூலைக் குறித்துத் தர்க்கம் செய்யலாம் என்று இருக்கிறேன்" என்றார். "என்ன! இந்த நேரத்தில் மறைநூலைக் குறித்து என்னோடு தர்க்கம் செய்யப் போகிறீர்களா...? மக்கள் உணவின்றிப் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கின்றார்கள்‌. அவர்களுடைய அழுகுரல் உங்கள் காதில் விழவில்லையா...? மக்களுக்கு இந்த நேரத்தில் நம்மால் இயன்ற உதவிகளைச் செய்வதுதான் முறை. மேலும், மறைநூலின் மையச் சிந்தனையையே அன்புதான். முடியுமானால், நீங்களும் இந்த நிவாரணப் பணியில் என்னோடு சேர்ந்து கொள்ளுங்கள்" என்றார்.

பண்டிதரால் எதுவும் பேசமுடியவில்லை. அவர் வந்த வழியில் வேகமாகத் திரும்பிச் சென்று விட்டார்.

உண்மையான வழிபாடு அல்லது உண்மையான நோன்பு எப்படி இருக்கவேண்டும் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. இன்றைய முதல் வாசகமானது உண்மையான நோன்பு எப்படியிருக்கவேண்டும் என்ற கேள்விக்கு விடையாக இருக்கின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

தங்களுடைய மன்றாட்டு கேட்கப்படவில்லை என இஸ்ரயேல் மக்கள் முறையிடல்

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்கள் இறைவனை நோக்கி, "நாங்கள் உண்ணா நோன்பிருந்தபொழுது, நீர் எங்களை நோக்காதது ஏன்? நாங்கள் எங்களைத் தாழ்த்திக்கொண்டபோது நீர் எங்களைக் கவனியாதது ஏன்?" என்று முறையிடுகிறார்கள். இஸ்ரயேல் மக்கள் இவ்வாறு முறையிட்டபொழுது ஆண்டவராகிய கடவுள் அவர்களிடம், "நீங்கள் நோன்பிருக்கும் நாளில் உங்கள் ஆதாயத்தையே நாடுகிறீர்கள். உங்கள் வேலையாள்கள் அனைவரையும் ஒடுக்குகின்றீர்கள்" என்கிறார்.

இஸ்ரேயல் மக்கள் வெளிப்பார்வைக்கு நோன்பிருப்பது போன்று காட்டிக்கொண்டார்கள். உண்மையில் அவர்கள் நோன்பிருக்கும் நாளில் ஆதாயத்தைத் தேடுகின்றவர்களாகவும் தங்களோடு இருந்த வறியவர்களை ஒடுக்குகின்றவர்களாகவும் இருந்தார்கள். இப்படி இருந்துகொண்டு நோன்பிருந்தால், உங்களுடைய வேண்டுதல் எப்படிக் கேட்கப்படும் என்பதுதான் இறைவாக்கினர் எசாயா வழியாக இறைவன் எழுப்புகின்ற கேள்வியாக இருக்கின்றது.

உண்மையான நோன்பு வறியோரின் தேவைகளைப் பூர்த்தி செய்வது

எதெல்லாம் நோன்பு கிடையாது என்று குறிப்பிட்ட ஆண்டவராகிய கடவுள், உண்மையான நோன்பு எப்படி இருக்கவேண்டும் என்பதை மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றார். கொடுமைத் தளைகளை அவிழ்ப்பதும்... பசித்தோர்க்கு உணவைப் பகிர்ந்துகொடுப்பதும்... தங்க இடமில்லா வறியோரை இல்லத்திற்கு அழைத்து வருவதும்... இதுபோன்ற இரக்கச் செயல்களைச் செய்வதும்தான் உண்மையான நோன்பு என்று கூறுகின்றார் ஆண்டவர்.

இந்த இடத்தில் புனித யாக்கோபு நூலில் இடம்பெறுகின்ற, "செயலற்ற நம்பிக்கை பயனற்றது" (யாக் 2: 20) என்ற இறைவார்த்தையை இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. இஸ்ரயேல் மக்கள் நோன்பிருந்தாலும், அது மேம்போக்காக அல்லது போலியானதாக இருந்தது. அதனால்தான் ஆண்டவர் அவருடைய நோன்பு உண்மையானதாக, செயல் வடிவம் பெறுகின்ற ஒன்றாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறார்.

உன் ஒளி விடியல்போல் எழும்

உண்மையான நோன்பு எப்படி இருக்கவேண்டும் என்று சொன்ன கடவுள், அதன்படி நோன்பினை மேற்கொள்ளும்பொழுது என்னென்ன ஆசி கிடைக்கும் என்பதையும் எடுத்துக்கூறுகின்றார். ஆம், ஒருவர் உண்மையான நோன்பினை மேற்கொள்ளும்பொழுது அவருடைய ஒளி விடியல் போல் எழும்; நலமான வாழ்வு துளிர்க்கும்... இவை எல்லாவற்றிற்கும் மேலாக வேண்டுதலுக்குப் பதிலளிக்கப்படும்.

ஆகையால் நாம் இறைவனிடமிருந்து இத்தகைய ஆசிகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்றால், உண்மையான நோன்பினை மேற்கொள்ளவேண்டியது தேவையான ஒன்றாக இருக்கின்றது. நாம் எத்தகைய நோன்பினை மேற்கொள்கின்றோம்? சிந்தித்துப் பார்ப்போம்.

சிந்தனை

"சுயநலப்போக்கும் பாராமுகமும் அடுத்தவர்மீதான அக்கறையின்மையும் மிகுதியாகும்போது, தீமையும் மிகுதியாகும்" என்பார் திருத்தந்தை பிரான்சிஸ். ஆகையால், இவ்வுலகில் தீமை அல்ல, நன்மை பெருக பிறர்நலத்தோடும் அடுத்தவர்மீதான அக்கறையோடும் அன்போடும் வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 மத்தேயு 9: 14-15

அன்பே தவம்

நிகழ்வு

இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் அவனுடைய தாய்க்கு ஒரே மகன். ஒருநாள் அவன் தன் தாயிடம், "அம்மா! நான் கடவுளைத் தரிசிக்கலாம் என்று இருக்கின்றேன். அதனால் நான் காட்டிற்குச் சென்று கடுந்தவம் புரியப்போகிறேன்" என்றான். மகன் இவ்வாறு சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போனாள். அவனை அவள் வீட்டிலேயே இருக்குமாறு எவ்வளவோ கெஞ்சிக்கேட்டாள், அவன் முடியவே முடியாது என்று முரண்டு பிடித்ததால், அவனை அவனுடைய வழியிலேயே போகவிட்டுவிட்டாள்.

இதற்குக்குப் பின் அந்த இளைஞன் காட்டிற்குச் சென்று கடுந்தவம் இருக்கத் தொடங்கினான். ஆண்டுகள் பல கடந்து சென்றனவே ஒழிய, அவனால் கடவுளைத் தரிசிக்க முடியவில்லை. இப்படியிருக்கையில் ஒருநாள் அவன் இருந்த காட்டுப்பகுதி வழியாகப் பெரியவர் ஒருவர் வந்தார். அவரிடம் அவன் தன்னுடைய உள்ளத்து விருப்பத்தைச் சொல்லி, "கடவுளை எங்கே தரிசிக்கலாம்...? அவரைத் தரிசிக்க நான் என்ன செய்யவேண்டும்...?" என்றான். அதற்குப் பெரியவர் அவனிடம், "கடவுளைக் காட்டில் எல்லாம் தரிசிக்க முடியாது. அவரை நீ தரிசிக்க வேண்டுமென்றால் இங்கிருந்து கிளம்பிப் போ. போகிற வழியில், யார் தன்னுடைய காலில் செருப்பை மாற்றிப் போட்டிருக்கின்றாரோ, அவரே கடவுள்" என்றார்.

பெரியவர் சொன்ன வார்த்தைளைக் காதில் போட்டுக்கொண்ட இளைஞன் காட்டிவிட்டு வீட்டை நோக்கி நடந்து சென்றான். போகிற வழியில் ஒவ்வொருவருடைய காலடிகளையும் பார்த்துக் கொண்டே சென்றான். எவரும் செருப்பு மாற்றி அணிந்திருக்கவில்லை; எல்லாரும் செருப்பைச் சரியாகவே அணிந்திருந்தார்கள். அவனுக்குப் பெருத்த ஏமாற்றமாய் இருந்தது. அவன் தன்னுடைய வீட்டை அடைந்தபொழுது கதவு பூட்டப்பட்டிருந்தது, தட்டிப் பார்த்தான். உள்ளிருந்து அவனுடைய அம்மா வேகமாக ஓடிவந்து கதவைத் திறந்தார்.

எதிரில் தன்னுடைய மகன் இருப்பதைக் கண்டு அப்படியே மெய்ம்மறந்து நின்றார். இதற்கிடையில் இளைஞன் தற்செயலாகத் தன்னுடைய தாயின் கால்களைப் பார்த்தான். தாய் செருப்பை மாற்றி அணிந்திருப்பதைக் கண்டு, "கண்முன்னாலேயே கடவுள் தரிசனம் தருகின்றபொழுது, கடவுளைத் தரிசிக்கவேண்டும் என்று காட்டிற்குச் சென்று கடுந்தவம் புரிந்து இத்தனை ஆண்டுகளையும் வீணடித்துவிட்டேனே!" என்று மிகவும் வருத்தப்பட்டான். பின்னர் அவர் தாயை - கடவுளைத் தரிசித்த மகிழ்ச்சியில், அவருக்குத் தன்னுடைய வாழ்நாள் முழுக்க பணிவிடை செய்யத் தொடங்கினான்.

தவம் அல்லது நோன்பு என்பது காட்டிற்குச் சென்று உண்ணாமல், உறங்காமல் உடலை வருத்திக்கொள்வது அல்ல, அது நம்மோடு வாழக்கூடியவர்களிடம் கடவுளின் சாயலைக் கண்டு, அவர்களுக்குப் பணிவிடை புரிவது என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. நற்செய்தியில் யோவானின் சீடர்கள், நோன்பு குறித்த கேள்வியை எழுப்புகின்றார்கள். இதற்கு இயேசு என்ன பதில் கூறினார்? நோன்பு குறித்து அவருடைய நிலைப்பாடு என்ன? ஆகியவற்றைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

நோன்பு குறித்த கேள்வி

நற்செய்தியில் யோவானின் சீடர்கள் இயேசுவிடம், "நாங்களும் பரிசேயர்களும் மிகுதியாக நோன்பிருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் இருப்பதில்லை?" என்று கேட்கின்றார்கள். யோவானின் சீடர்கள் இக்கேள்வியைக் கேட்கின்றபொழுது, யோவான் சிறையில் இருந்தார் என்பதையும் அவர்கள் பரிசேயர்களோடு இணைந்து இருந்தார்கள் என்பதையும் முதலில் நமது கவனத்தில் கொள்வது நல்லது. அடுத்ததாக, ஆண்டுக்கொரு முறை நோன்பிருந்தாலே போதுமானதாக இருந்தது (லேவி 16:29). ஒருசில முக்கியமான காரணங்களுக்காக மக்கள் நோன்பிருந்திருக்கின்றார்கள் என்று திருவிவிலியம் நமக்குச் சான்று பகர்கின்றது. ஆனால் யோவானின் சீடர்களும் பரிசேயர்களும் வாரத்திற்கு திங்கள், வியாழன் என்று இருமுறை நோன்பிருந்தார்கள் (லூக் 18:12). அவர்கள் இப்படி நோன்பிருந்ததைக்கூட விட்டுவிடலாம், இயேசுவின் சீடர்களும் அவ்வாறு நோன்பிருக்கவேண்டும் என்று எதிர்பார்த்ததுதான் ஏற்றுக்கூடிய ஒன்றாக இல்லை. அப்பொழுதுதான் இயேசு அவர்களுக்கு நோன்பின் பொருளை விளக்கிக் கூறுகின்றார்.

மணமகனாகிய இயேசு (எசா 54: 5-6; ஓசே 2: 16-20) மணவீட்டாரோடு இருக்கும்பொழுது, அவர்கள் மகிழ்ந்திருக்கவேண்டும். அந்நேரத்தில் அவர்கள் துக்கம் கொண்டாட முடியுமா? மணமகன் அவர்களைவிட்டுப் பிரிய வேண்டிய காலம் வரும் அப்பொழுது அவர்கள் நோன்பிருப்பார்கள் என்று சொல்லி, எந்த நேரத்தில் நோன்பிருக்கவேண்டும். எதற்காக நோன்பிருக்கவேண்டும் என்பதை அவர் அவர்களுக்கு எடுத்துக் கூறுகின்றார்.

நாம் யோவானின் சீடர்களைப் போன்றும் பரிசேயர்களைப் போன்றும் பெயருக்காவும் மக்கள் நம்மைப் பார்க்கவேண்டும் என்பதற்காகவும் நோன்பிருக்கின்றோமா? அல்லது நோன்பு நமக்கு உணர்த்தும் பிறரன்பையும் இறையன்பையும் நம்முடைய வாழ்வில் உணர்ந்து நோன்பிருக்கின்றோமா? சிந்தித்துப் பார்ப்போம்.

சிந்தனை

"பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும் தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும்... அன்றோ நான் விரும்பும் நோன்பு" (எசா 58:7) என்பார் ஆண்டவர். ஆகையால், நோன்பின் உண்மையான பொருளை உணர்ந்து நோன்பிருப்போம். நம்மோடு இருப்பவர்களையும் இறைவனையும் அன்பு செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!