Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   27 பிப்ரவரி 2020  
    பொதுக்காலம் 7 ஆம் வாரம்
=================================================================================
முதல் வாசகம் திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் வியாழன்
=================================================================================
இதோ இன்று நான் ஆசியையும் சாபத்தையும் உங்களுக்கு முன் வைக்கிறேன்.

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 30: 15-20

மோசே மக்களைப் பார்த்துக் கூறியது: இதோ பார், வாழ்வையும் நன்மையையும், சாவையும் தீமையையும் இன்று நான் உனக்கு முன்பாக வைத்துள்ளேன். அது இதுதான்; இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். உன் கடவுளாகிய ஆண்டவர்மீது அன்பு பாராட்டு. அவரைப் பின்பற்றி அவரது வழியில் நட. அவரது கட்டளைகளையும், நியமங்களையும், முறைமைகளையும் கடைப்பிடி. அப்போது நீ வாழ்வாய், நீ பலுகுவாய். நீ உடைமையாகக் கொள்ளப்போகும் நாட்டில் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவார்.

ஆனால் உனது உள்ளம் விலகிச் சென்று, நீ செவிகொடாமல் கெட்டலைந்து, வேறு தெய்வங்களை வணங்கி, அவற்றுக்குப் பணிவிடை புரிந்தால், இன்று நான் உனக்கு அறிக்கையிட்டுக் கூறுகிறேன். நீ நிச்சயம் அழிந்து போவாய். நீ உரிமையாக்கிக்கொள்ளுமாறு, யோர்தானைக் கடந்து சென்றடையும் பூமியில் உன் வாழ்நாள் நீடித்திருக்காது.

உன்மேல் இன்று நான் விண்ணையும் மண்ணையும் சான்றாக அழைத்து, வாழ்வையும் சாவையும், ஆசியையும் சாபத்தையும் உனக்கு முன் வைக்கிறேன். நீயும் உனது வழித்தோன்றல்களும் வாழும்பொருட்டு வாழ்வைத் தேர்ந்துகொள். உன் கடவுளாகிய ஆண்டவர்மீது அன்பு பாராட்டு; அவரது குரலுக்குச் செவிகொடு; அவரையே பற்றிக்கொள். ஏனெனில், அவரே உனது வாழ்வு; அவரே உன் நீடிய வாழ்வு. அதனால், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்னும் உன் மூதாதையருக்குக் கொடுப்பதாக ஆண்டவர் ஆணையிட்டுக் கூறிய நாட்டில் நீ குடியேறுவாய்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 1: 1-2. 3. 4,6 (பல்லவி: திபா40:4a) Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, உம்மைப் பின்தொடர்பவர் வாழ்வின் ஒளியைக் கொண்டிருப்பார்.
1நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்;
2ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். - பல்லவி

3அவர் நீரோடை ஓரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார். - பல்லவி

4பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப்போல் ஆவர்.
6நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். - பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 (மத் 4: 17)

மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது, என்கிறார் ஆண்டவர்.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================

என் பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார்.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 22-25


அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கி, "மானிடமகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்" என்று சொன்னார்.

பின்பு அவர் அனைவரையும் நோக்கிக் கூறியது: "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில், தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவார். என்பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார். ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக்கொண்டாலும் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?"

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 இணைச்சட்டம் 30: 15-20

"அப்போது நீ வாழ்வாய்; நீ பலுகுவாய்"


நிகழ்வு

அமைச்சர் ஒருவர் இருந்தார். அவர் மிகவும் நேர்மையாகவும் உண்மையாகவும் இருந்தார். அவர் யாரிடமும் கையூட்டு வாங்குவதே இல்லை. இதனால் மக்கள் நடுவில் அவருக்கு நல்ல பெயர் இருந்தது.

ஒருநாள் அவரிடம் ஒரு பெரிய தொழிலதிபர் வந்தார். அவர் கார் தயாரிக்கும் நிறுவனம் வைத்திருந்தார். அவருக்கு அமைச்சரால் ஒரு முக்கியமான செயல் (காரியம்) நடைபெறவிருந்தது. அதனால் அவர் அமைச்சரிடம், "ஐயா! எனக்கு ஒரு சிறிய காரியத்தை மட்டும் செய்துகொடுங்கள். நான் உங்களுக்கு விலையுயர்ந்த ஒரு காரினை இலவசமாகத் தருகிறேன்" என்றார். அதற்கு அமைச்சர் அவரிடம், "நான் யாரிடம் எதையும் இலவசமாகப் பெறுவதில்லை" என்று சொல்ல "இலவசமாக எதையும் வாங்கமாட்டீர்கள் என்றால், ஒரு ரூபாய் கொடுத்து காரினை வாங்கிக்கொள்ளுங்கள்" என்றார் அந்தத் தொழிலதிபர்.

அமைச்சர் ஒரு வினாடி யோசித்தார். "ஒரு ரூபாய்க்கு ஒரு கார் தருகிறீர்கள் என்றால், உங்களிடம் பத்து ரூபாய் தருகிறேன். பத்துக் கார்கள் தாருங்கள்" என்றார். தொழிலதிபர் எதுவும் பேசமுடியாதவராய் வாயடைத்து நின்றார். பின்னர் அவர் "இனிமேல் இங்கு நின்றுகொண்டிருந்தால், அமைச்சர் இதைவிடப் பெரிதாக எதையும் கேட்டுவிடுவார்"என்று துண்டக் காணோம் துணியக் காணோம் என்று அங்கிருந்து ஓடிப்போனார்.

இவ்வாறு அமைச்சர் தொழிலதிபரிடம் உண்மையாக நடந்துகொண்ட செய்தி மக்களிடம் வேகமாகப் பரவியது. அது அவருக்கு மக்கள் நடுவில் இன்னும் செல்வாக்கைப் பெற்றுத் தந்தது. கூடிய சீக்கிரத்தில் அவருக்கு இன்னும் பெரிய பதவி கிடைத்தது.

நம்முடைய வாழ்க்கையில் நாம் நேர்மையாகவும் உண்மையாகவும் கடவுளுக்கு ஏற்ற வழியிலும் நடந்தால், அதற்கான ஆசியைப் பெற்றுக்கொள்வோம், நம்முடைய வாழ்க்கையில் உயர்ந்துகொண்டே செல்வோம் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இன்றைய முதல் வாசகம் நமக்கு முன்பாக இருக்கும் நன்மை, தீமை என்ற இரு பாதைகளில் நாம் எந்தப் பாதையைத் தேர்ந்துதெடுத்து நடக்கின்றோமோ, அதற்கேற்றாற்போல் நம்முடைய உயர்வும் தாழ்வும் இருக்கின்றது என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

கட்டளைகளைக் கடைப்படித்தால் ஆசி

இணைச்சட்ட நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகமானது, மோசே இஸ்ரயேல் மக்களுக்குக் கூறுகின்ற மூன்றாவது மற்றும் இறுதி அறிவுரையாக இருக்கின்றது. அதில் அவர் இஸ்ரயேல் மக்களிடம் வாழ்வின் பாதையையும் சாவின் பாதையையும் எடுத்துக்கூறுகின்றார். முதலில் வாழ்வின் பாதை எப்படிப்பட்டது எனத் தெரிந்துகொள்வோம்.

வாழ்வின் பாதையாக மோசே இஸ்ரயேல் மக்களிடம் கூறுவது, ஆண்டவர்மீது அன்பு கூர்ந்து, அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து நடப்பதாகும். "அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்காமல், அவரை அன்புகூரமுடியாதா?" என்ற கேள்வி எழலாம். இதற்கான பதிலை இயேசு யோவான் நற்செய்தியில் இவ்வாறு கூறுகின்றார்; "நீங்கள் என்மீது அன்புகொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள்." (யோவா 14: 15). ஆம், கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்காமல், அவரை அன்பு செய்ய முடியாது. கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடிப்போரால் மட்டுமே, அவரை அன்பு செய்ய முடியும். அப்படிக் கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடிபோர்க்கு அவர் அளப்பரிய ஆசிகளைத் தருவதாக மோசே கூறுகின்றார்.

கட்டளைகளைக் கடைபிடிக்காவிடில் தண்டனை

வாழ்வின் வழி எது எனச் சொன்ன மோசே சாவின் வழியையும் குறித்துப் பேசுகின்றார். சாவின் வழி எதுவெனில், கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடிக்காமல், அவர்மீது அன்புகூராமல், பிற தெய்வங்களை வழிபடுவதாகும்.

கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடிக்காமல், அவர்மீது அன்பு கூராமல், பிற தெய்வங்களை வழிபடுகின்றவர்களுக்கு என்ன நடக்கும் என்பதையும் மோசே கூறுகின்றார். கடவுளின் கட்டளைகளைக் கடைபிடிக்காமல், அவரை அன்பு கூராமல் இருப்போர் வாக்களிக்கப்பட்ட கானான் நாட்டில் நுழைய மாட்டார்கள் என்று மோசே மிக உறுதியாகக் கூறுகின்றார்.

அன்று மோசே இஸ்ரயேல் மக்களுக்கு முன்பாக இரண்டு பாதைகளை வைத்ததைப் போன்றுதான், இன்று இறைவன் நமக்கு முன்பாக இரண்டு பாதைகளை வைத்திருக்கின்றார். இதில் நாம் எந்தப் பாதையைத் தேர்ந்தேடுக்கின்றோமோ, அதற்கேற்றாற்போல் நம்முடைய உயர்வும் தாழ்வும் இருக்கும் என்பது உறுதி.

சிந்தனை

"ஆண்டவரைத் தேடுங்கள். நீங்கள் வாழ்வீர்கள்"(ஆமோ 5: 4) என்பார் ஆமோஸ் இறைவாக்கினர். ஆகையால், நாம் வாழ்வின் வழியான ஆண்டவரின் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 லூக்கா 9: 22-25

"இழப்பதற்குத் துணிச்சல் உள்ளவனே வெற்றி பெறுவதற்கும் தகுதியுடையவன் ஆகிறான்"

நிகழ்வு


உலகப் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகரான சார்லி சாப்ளின் இரண்டு படங்களை நடித்து முடித்திருந்த நேரத்தில், தான் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்குமாறு லெஹர்மேன் என்ற இயக்குநரிடமிருந்து சார்லி சாப்ளினுக்கு அழைத்து வந்தது. அதை அவர் மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம், "என்னிடம் ஒரு கதை இருக்கின்றது. அதை நானே இயக்கி, நானே நடிக்கப்போகிறேன். நிச்சயமாக இந்தப் படம் வெற்றி பெறும்."

சார்லி சாப்ளினின் இந்த முடிவை இயக்குநர் லெஹர்மேன் ஏற்றுக்கொண்டாலும், அந்தப் படத்தைத் தயாரிக்கவிருந்த தயாரிப்பாளர் ஏற்றுக்கொள்ளவில்லை. "நீ இயக்கி, நீயே நடித்தால் அந்தப் படத்தை யார் பார்ப்பார்கள்?. பெரிய நட்டம்தான் ஏற்படும்" என்று தயாரிப்பாளர் பின்வாங்கினார். அப்பொழுது சார்லி சாப்ளின் அவரிடம், "என்னை நம்புங்கள். நான் இயக்கி, நடிக்கும் படம் நிச்சயம் வெற்றிபெறும்" என்று உறுதியாகச் சொன்னார்.

"நீ சொல்வது போல் படம் வெற்றிபெற்றால் பரவாயில்லை. ஒருவேளை படம் தோல்வியடைந்தால் தயாரிப்புச் செலவு முழுவதையும் வட்டியோடு திருப்பித் தரவேண்டும். இதற்குச் சம்மதமா?" என்றார் தயாரிப்பாளர். "எனக்கு என்மீதும் நான் இயக்கப்போகும் படத்தின்மீதும் முழுமையான நம்பிக்கை இருக்கின்றது. ஒருவேளை படம் தோல்வியைத் தழுவினால், தயாரிப்பிற்கான முழுப் பணத்தையும் வட்டியோடு உங்களுக்குத் திருப்பித் தருவதுடன், நடிப்பதிலிருந்தே விலகிக்கொள்கின்றேன்" என்று சவால் விட்டார் சார்லி சாப்ளின்.

இதற்குப் பின்பு சார்லி சாப்ளின் "காட் இந்த த ரெயின்"என்ற படத்தை இயக்கி நடிக்கத் தொடங்கினார். படம் யாரும் எதிர்பார்த்திராத வகையில் பெரும் வெற்றியை. அது சார்லி சாப்ளினுக்குப் பெயரையும் புகழையும் சம்பாதித்துக் கொடுத்தது. அன்றிலிருந்து சார்லி சாப்ளின் தானே திரைப்படங்களை இயக்கி நடிக்கத் தொடங்கி, புகழ்பெற்ற நகைசுவை நடிகரானார்.

சார்லி சாப்ளினால் இவ்வளவு பெயரையும் புகழையும் சம்பாதிக்க முடிந்தது என்றால், அதற்கு முக்கியமான காரணம், அவர் எல்லாவற்றையும் இழக்கத் தயாராக இருந்ததுதான். நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு இழப்பதே சீடத்துவ வாழ்விற்கு அர்த்தத்தைத் தருகின்றது என்று கூறுகின்றார். அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

தன்னை இழப்பதும் சிலுவையைத் தூக்கிக்கொண்டு செல்லுதலும்

நற்செய்தி வாசகத்தின் தொடக்கத்தில் ஆண்டவர் இயேசு தன்னுடைய பாடுகளை முன்னறிவிக்கின்றார். அதை அறிவித்து முடித்தவுடன், தன்னைப் பின்பற்றி வருகின்றவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதை இயேசு எடுத்துரைக்கின்றார். இயேசு தன்னைப் பின்பற்றி வருகின்றவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதைக் குறித்துப் பேசுகின்றபொழுது, இரண்டு நிபந்தனைகளை முன் வைக்கின்றார். ஒன்று, தன்னைத் துறத்தல். இரண்டு, தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக்கொண்டு தன்னைப் பின்தொடர்தல்.

தன்னைத் துறத்தல் என்கிறபொழுது, ஒருவர் தன்னை முற்றிலுமாகத் துறந்து அல்லது இயேசுவுக்குத் தன்னுடைய வாழ்வில் முதன்மையான இடம் கொடுத்து வாழ்வதாகும். அடுத்ததாக, நாள்தோறும் சிலுவையைத் தூக்கிக்கொண்டு பின்தொடர்ந்தல் என்கிறபோது, இயேசுவுக்காக, அவர் பொருட்டு சிலுவை போன்ற மிகவும் கொடூரமான துன்பங்களையும் தாங்கிக்கொண்டு அவரைப் பின்தொடர்வதாகும். இதை ஒருவர் செய்கின்றபொழுது அவர் இயேசுவின் சீடராக மாறுகின்றார்.

இழக்கத் தயாராக இருப்போர் வாழ்வைக் காத்துக்கொள்கின்றனர்

தன் சீடராக இருப்பதற்கு இயேசு முன் வைக்கும் நிபந்தனைகளுக்கு அஞ்சி அல்லது அவற்றைக் கடைப்பிடிப்பது மிகக் கடினம் என்று ஒருவர் எதையும் இழக்கத் துணியாமலும் துன்பங்களைத் துணிவுடன் ஏற்கத் துணியாமலும் இருந்து, உலகப் போக்கின்படி வாழ்ந்தால், அவர் இந்த உலகம் தருகின்ற எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ளலாம். ஆனால், அவர் வாழ்வை இழந்துவிடுவார். மாறாக, இயேசு முன்வைக்கும் நிபந்தனைகளுக்கு பணிந்து எவர் ஒருவர் தன்னுடைய வாழ்வை இழக்கத் துணிகின்றாரோ, அவர் தன்னுடைய வாழ்வைக் காத்துக்கொள்ளக்கூடியவராக இருக்கின்றார். இதில் நாம் உலகநாட்டத்தின் படி நடந்து வாழ்வைத் தொலைக்கப் போகின்றோமா? அல்லது இயேசுவின் சீடராக இருந்து, வாழ்வைக் காத்துக்கொள்ளப் போகிறோமா? சிந்திப்போம்.

சிந்தனை

"கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும்.. அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்" (யோவா 12: 24) என்பார் இயேசு. ஆகையால், நாம் இயேசுவுக்காக, இறையாட்சியின் விழுமியங்களுக்காக நம்மையே இழக்கத் தயாராக இருந்து, இயேசுவின் உண்மையான சீடர்களாக வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!