Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   25 பிப்ரவரி 2020  
    பொதுக்காலம் 7 ஆம் வாரம்
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 நீங்கள் தீய எண்ணத்தோடு கேட்கிறீர்கள்; எனவே நீங்கள் கேட்டாலும் அடைவதில்லை.

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-10

சகோதரர் சகோதரிகளே, உங்களிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படக் காரணம் என்ன? உங்களுக்குள்ளே போராடிக்கொண்டிருக்கும் சிற்றின்ப நாட்டங்கள் அல்லவா? நீங்கள் ஆசைப்படுவது கிடைக்காததால் கொலை செய்கிறீர்கள்; பேராசை கொள்கிறீர்கள்; அதைப் பெற முடியாததால் சண்டை சச்சரவு உண்டாக்குகிறீர்கள். அதை நீங்கள் ஏன் பெற முடிவதில்லை? நீங்கள் கடவுளிடம் கேட்பதில்லை. நீங்கள் கேட்டாலும் ஏன் அடைவதில்லை? ஏனெனில் நீங்கள் தீய எண்ணத்தோடு கேட்கிறீர்கள்; சிற்றின்ப நாட்டங்களை நிறைவேற்றவே கேட்கிறீர்கள். விபசாரர் போல செயல்படுவோரே, உலகத்தோடு நட்புக் கொள்வது கடவுளைப் பகைப்பது என்பது உங்களுக்குத் தெரியாதா? உலகுக்கு நண்பராக விரும்பும் எவரும் கடவுளைப் பகைப்பவர் ஆவார். அல்லது "மனித உள்ளத்திற்காகக் கடவுள் பேராவலோடு ஏங்குகிறார். அதற்கு அவர் அளிக்கும் அருளோ மேலானது" என மறைநூல் சொல்வது வீண் என நினைக்கிறீர்களா? ஆகவே, "செருக்குற்றோரை அவர் இகழ்ச்சியுடன் நோக்குகிறார். தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார்" என்று மறைநூல் உரைக்கிறது. எனவே கடவுளுக்குப் பணிந்து வாழுங்கள்; அலகையை எதிர்த்து நில்லுங்கள். அப்பொழுது அது உங்களிடமிருந்து ஓடிப்போகும். கடவுளை அணுகிச் செல்லுங்கள்; அவரும் உங்களை அணுகி வருவார். பாவிகளே, உங்கள் கைகளைத் தூய்மையாக்குங்கள். இருமனத்தோரே, உங்கள் உள்ளங்களைத் தூய்மைப்படுத்துங்கள். உங்கள் நிலையை அறிந்து, துயருற்றுப் புலம்பி அழுங்கள். உங்கள் சிரிப்பு புலம்பலாகவும், மகிழ்ச்சி ஆழ் துயரமாகவும் மாறட்டும். ஆண்டவர்முன் உங்களைத் தாழ்த்துங்கள்; அவர் உங்களை உயர்த்துவார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 55: 7-8. 9-10a. 10b-11a. 23 (பல்லவி: 22a) Mp3
=================================================================================
பல்லவி: கவலையை ஆண்டவர்மேல் போட்டுவிடு; அவரே உனக்கு ஆதரவு.
6 நான் சொல்கின்றேன்: "புறாவுக்கு உள்ளது போன்ற சிறகுகள் எனக்கு யார் அளிப்பார்? நான் பறந்து சென்று இளைப்பாறுவேனே!
7 இதோ! நெடுந்தொலை சென்று, பாலை நிலத்தில் தஞ்சம் புகுந்திருப்பேனே! - பல்லவி

8 பெருங் காற்றினின்றும் புயலினின்றும் தப்பிக்கப் புகலிடம் தேட விரைந்திருப்பேனே!
9a என் தலைவரே! அவர்களின் திட்டங்களைக் குலைத்துவிடும்; அவர்களது பேச்சில் குழப்பத்தை உண்டாக்கும். - பல்லவி

9b ஏனெனில், நகரில் வன்முறையையும் கலகத்தையும் காண்கின்றேன்."
10a இரவும் பகலும் அவர்கள் அதன் மதில்கள் மேல் ஏறி அதைச் சுற்றி வருகின்றனர். - பல்லவி

22ஆண்டவர் மேல் உன் கவலையைப் போட்டுவிடு; அவர் உனக்கு ஆதரவளிப்பார்; அவர் நேர்மையாளரை ஒருபோதும் வீழ்ச்சியுற விடமாட்டார். - பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
(கலா 6: 14)

அல்லேலூயா, அல்லேலூயா! நானோ நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப்பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்டமாட்டேன். அதன் வழியாகவே, உலகம் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. நானும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால், அவர் அனைவரிலும் கடையராக இருக்கட்டும்.

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 30-37

அக்காலத்தில் இயேசுவும் அவருடைய சீடர்களும் மலையை விட்டுப் புறப்பட்டுக் கலிலேயா வழியாகச் சென்றார்கள். அது யாருக்கும் தெரியக்கூடாது என்று இயேசு விரும்பினார். ஏனெனில், "மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார்; அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள். கொல்லப்பட்ட மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார்" என்று அவர் தம் சீடருக்குக் கற்பித்துக் கொண்டிருந்தார். அவர் சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை. அவரிடம் விளக்கம் கேட்கவும் அவர்கள் அஞ்சினார்கள். அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்தார்கள். அவர்கள் வீட்டில் இருந்தபொழுது இயேசு, "வழியில் நீங்கள் எதைப்பற்றி வாதாடிக் கொண்டிருந்தீர்கள்?" என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள் பேசாதிருந்தார்கள். ஏனெனில் தங்களுள் பெரியவர் யார் என்பதைப்பற்றி வழியில் ஒருவரோடு ஒருவர் வாதாடிக்கொண்டு வந்தார்கள். அப்பொழுது அவர் அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம், "ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்" என்றார். பிறகு அவர் ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு, "இத்தகைய சிறு பிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக் கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை மட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார்" என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 யாக்கோபு 4: 1-10

நாம் கேட்டாலும் ஏன் அடைவதில்லை?

நிகழ்வு


சிறுவன் ஒருவன் இருந்தான். ஒருநாள் அவன் தன்னுடைய பெற்றோரோடு கோயிலுக்குச் சென்றான். அன்றைய நாளில் குருவானவர் தன்னுடைய மறையுரையில், நீங்கள் இறைவனிடம் எதைக் கேட்டாலும், அதை நம்பிக்கையோடு கேட்டால், நிச்சயம் அவர் உங்களுக்குத் தருவார் என்று சொன்னார். இதைக் கேட்டு அவன் உற்சாகமடைந்தான்.

வீட்டுக்கு வந்த சிறுவன் அதே சிந்தனையோடு இருந்தான். இரவில் தூங்குவதற்கு முன்பாக தன்னுடைய அறையில் முழந்தாள்படியிட்டு, "டோக்யோ, டோக்யோ, டோக்யோ" என்று உரக்கச் சொல்லி வேண்டினான். இதை அந்த வழியாகக் கடந்தசென்ற அவனுடைய தந்தை கவனித்தார். இருந்தாலும் எதுவும் கேட்காமல், காலையில் கேட்டுக்கொள்ளலாம் என்று கடந்து போய்விட்டார்.

மறுநாள் காலையில் தந்தை தன்னுடைய மகனை அழைத்து, "மகனே! நேற்று இரவு நீ ஏன் டோக்யோ, டோக்யோ என்று உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தாய்...? உனக்கு என்னாயிற்று?" என்று கேட்டார். அதற்கு மகன் அவரிடம், "அது வேறொன்றுமில்லை. தேர்வில் "அமெரிக்காவின் தலைநகர் என்ன?" என்று கேட்டிருந்தார்கள். நானோ டோக்யோ என்று எழுதி வைத்துவிட்டேன். இந்நிலையில், நேற்று குருவானவர் தன்னுடைய மறையுரையில் "இறைவனிடம் நீங்கள் எதைக் கேட்டாலும், அதை நம்பிக்கையோடு கேட்டால், நிச்சயம் அவர் உங்களுக்குத் தருவார்" என்று சொல்லக் கேட்டேன். அதனால்தான் நான் அவ்வாறு உரக்கவேண்டினேன்" என்றான்.

"தன்னிடம் நம்பிக்கையோடு கேட்பவற்றை இறைவன் தருவார்தான்; ஆனால், அதை நல்ல எண்ணத்தோடு கேட்கவேண்டும். உன்னை மாதிரி தவறான நோக்கத்திற்காகக் கேட்டால், அவர் அதைத் தரவே மாட்டார்" என்றார் தந்தை.

இறைவன் தன்னிடம் கேட்போருக்குத் தருவார். அதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், அதை நாம் நல்ல எண்ணத்தோடு, நல்ல நோக்கத்திற்காகக் கேட்கவேண்டும். அதைத்தான் இந்த நிகழ்வும் இன்றைய முதல் வாசகமும் நமக்கு எடுத்துக்கூறுகின்றன. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

தீய எண்ணத்தோடு கேட்கப்படுபவை கிடைக்காது

ஒருசிலருக்கு இறைவன்மீது எப்பொழுதும் ஒரு வருத்தமுண்டு. அது என்ன வருத்தமெனில், இறைவனிடத்தில் தாங்கள் கேட்பது கிடைக்கவில்லை?" என்பதுதான். இஸ்ரயேல் மக்களுக்கும் இதே மாதிரியான வருத்தம் இருந்தது. இறைவன் அதற்கான பதிலை இறைவாக்கினர் எசாயா வழியாகத் தருவார் (எசா 58). இன்றைய முதல் வாசகத்தில், புனித யாக்கோபு இறைவனிடம் ஒருவர் எழுப்புகின்ற மன்றாட்டு கேட்கப்படாமல் போவதற்குக் காரணமென்ன என்பதற்கு மிகத் தெளிவான பதிலைக் கீழ்க்காணும் வார்த்தைகளில் தருகின்றார்: "நீங்கள் கேட்டாலும் ஏன் அடைவதில்லை? ஏனெனில், நீங்கள் தீய எண்ணத்தோடு கேட்கிறீர்கள்; சிற்றின்ப நாட்டத்தை நிறைவேற்றவே கேட்கிறீர்கள்."

புனித யாக்கோபு சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளிலிருந்து நமக்கு ஓர் உண்மை தெரிய வருகின்றது. அது என்னவெனில், எப்பொழுதெல்லாம் நாம் தீய எண்ணத்தோடு அல்லது சிற்றின்ப நாட்டத்தை நிறைவேற்ற இறைவனிடம் மன்றாடுகின்றோமோ, அப்பொழுதுதெல்லாம் நம்முடைய மன்றாட்டு கேட்கப்படாது என்பது உறுதி.

எப்பொழுது நம்முடைய மன்றாட்டு கேட்கப்படும்

எப்பொழுதெல்லாம் நம்முடைய மன்றாட்டு கேட்கப்படாது என்பதை அறிந்துகொண்ட நாம், எப்பொழுது நம்முடைய மன்றாட்டு கேட்கப்படும் எனத் தெரிந்துகொள்வது நல்லது.

ஆண்டவராகிய இயேசு, "கேளுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும்" (மத் 7:7) என்று சொன்னாரே, அப்படியிருக்கையில், நாம் கேட்பது அனைத்தும் கிடைப்பதில்லையே என்ற கேள்வி நமக்கு எழலாம். இதற்கான பதிலை மேலே சிந்தித்துப் பார்த்தோம். இப்பொழுது நம்முடைய மன்றாட்டு கேட்கப்படுவதற்கு நாம் என்ன செய்யவேண்டும்? அல்லது எப்பொழுது நம்முடைய மன்றாட்டு கேட்கப்படும் எனத் தெரிந்துகொள்வோம்.

திருத்தூதரான புனித யோவான் தன்னுடைய முதல் திருமுகத்தில் இவ்வாறு கூறுவார்: "நாம் கேட்பது கடவுளுடைய திருவுளத்திற்கு ஏற்ப அமைந்திருப்பின், அவர் நமக்குச் செவிசாய்க்கிறார்." (1 யோவா 5: 14). ஆம். நாம் கேட்பது இறைவனின் திருவுளத்திற்கு ஏற்ப அமைந்திருக்கவேண்டும். அப்படியில்லாமல், நம்முடைய விருப்பத்தின்படியோ அல்லது தீய எண்ணத்தின்படியோ அமைந்திருப்பின் அந்த மன்றாட்டு இறைவனால் கேட்கப்படாமல் என்பது திண்ணம்.

ஆகையால், நம்முடைய மன்றாட்டு இறைவனின் திருவுளத்திற்கு ஏற்ப இருக்குமாறு பார்த்துக்கொள்வோம்.

சிந்தனை

"உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல, மண்ணுலகிலும் நிறைவேறுக" என்று இயேசு, தந்தையிடம் வேண்டச் சொல்வார். நாம் கடவுளின் திருவுளம் இம்மண்ணுலகில் நிறைவேற மன்றாடுவோம். அப்பொழுது நம்முடைய மன்றாட்டு கேட்கப்படும். அதன்மூலம் இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
மாற்கு 9: 30-37

யார் பெரியவர்? யார் சிறியவர்?

நிகழ்வு


நம்முடைய இந்தியத் திருநாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன். ஒருமுறை இவர் வெளிநாட்டிற்குச் சென்றிருந்தபொழுது, பலர் இவரிடம் வந்து பேசினார்கள். அப்பொழுது ஒருவர் இவரிடம், "எங்களுடைய நாட்டில் இருக்கின்ற எல்லாரும் ஒரே மாதிரி அதாவது, ஒரே நிறத்தில் இருக்கின்றார்கள். உங்களுடைய நாட்டில்தான் வேறு வேறு நிறத்தில் இருக்கின்றார்கள். அப்படியானால், உங்களை விட நாங்கள்தானே பெரியவர்கள், உயர்ந்தவர்கள்" என்று ஆணவத்தோடு பேசினார்.

இதற்கு இராதாகிருஷ்ணன் அவரிடம், "கழுதைகள் ஒரே நிறத்தில் இருக்கின்றன. குதிரைகள்தான் வேறு வேறு நிறத்தில் இருக்கும். கழுதைகள் ஒரே நிறத்தில் இருக்கின்றன என்பதற்காக அவை குதிரைகளை விடப் பெரியவை ஆகிவிடுமா?" என்றார். கேள்வி கேட்டவரால் எதுவும் பேச முடியவில்லை.

இன்றைக்கு மனித சமூகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் மிகப்பெரிய நோய் யார் பெரியவர்? யார் உயர்ந்தவர்? என்ற ஆணவம்தான். இயேசுவின் சீடர்கள் நடுவிலும் இப்படியொரு வாதம் ஏற்படுகின்றது. இதற்கு இயேசு என்ன மறுமொழி கூறினார்? உண்மையில் யார் பெரியவர்? ஆகிய கேள்விகளுக்கான விடைகளை இப்பொழுது நாம் தெரிந்துகொள்வோம்.

யார் பெரியவர் என்று வாதித்துக்கொண்ட சீடர்கள்

இன்றைய நற்செய்தி வாசகம் இரு பகுதிகளாக இருக்கின்றது. முதல் பகுதி இயேசு தன்னுடைய பாடுகளை முன்னறிவிப்பதாகவும் இரண்டாவது பகுதி சீடர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்திற்கு இயேசு பதில்கூறுவதாகவும் இருக்கின்றது.

இயேசு தன்னுடைய சீடர்களிடம், மானிடமகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கின்றார்... அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள்... கொல்லப்பட்ட மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயர்த்தெழுவார்..." என்று சொல்கின்றார். இயேசு இவ்வாறு சொன்னது சீடர்களுக்கு நிச்சயமாகப் புரிந்திருக்காது; ஆனால், இது குறித்துச் சீடர்கள் இயேசுவிடம் எந்தவொரு கேள்வியையும் கேட்கவில்லை. கேட்கத் துணியவும் இல்லை. மாறாக, தங்களுக்குள் யார் பெரியவர் என்று வாதாடத் தொடங்குகின்றார்கள்.

இயேசுவின் சீடர்களுக்குள், தங்களுக்குள் யார் பெரியவர் என்ற வாக்குவாதம் எதனால் ஏற்பட்டிருக்கும் என்று நாம் சிந்தித்துப் பார்த்தோமெனில், இயேசு பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் மலைக்குக் கூட்டிச் சென்றதுதான் காரணமாக அமையும். ஆம், இயேசு மூன்று சீடர்களையும் மலைக்குக் கூட்டிச் சென்றது, மற்ற சீடர்களின் உள்ளத்தில் பொறாமையை ஏற்படுத்தியிருக்கும். அதே நேரத்தில் அது அவர்களுக்குள் யார் பெரியவர் என்ற விவாதத்தை ஏற்படுத்தியிருக்கும். இது குறித்து அறியவரும் இயேசு நிச்சயம் வேதனையடைந்த வேண்டும். "நாமோ நம்முடைய பாடுகளைக் குறித்து அறிவித்துக் கொண்டிருக்கும்பொழுது, இவர்கள் இப்படித் தங்களுக்குள் யார் பெரியவர் என்ற வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றார்களே!" என்று இயேசு வேதனையடைந்தாலும், அதனை அவர் வெளியே காட்டிக்கொள்ளாமல், உண்மையில் யார் பெரியவர் என்பதற்கு விளக்கம் தருகின்றார்.

பணிவிடை செய்பவர் பெரியவர்

இயேசுவின் சீடர்களாக இருக்கட்டும், யாராகவும் இருக்கட்டும், ஏன், நாமாகக்கூட இருக்கட்டும். அதிகாரத்திலும் உயர் பதவிகளிலும் இருந்துகொண்டு மக்களை அடக்கியாள்பவர்தான் பெரியவர் என்ற எண்ணமானது எல்லாரிடத்திலும் இருக்கின்றது; ஆனால், ஆண்டவர் இயேசு இந்த எண்ணத்தை மாற்றி புரிய சிந்தனையைத் தருகின்றார். பெரியவர் என்பவர் உயர் பதவியில் இருப்பவர் அல்லர்; மாறாக எந்த நிலையில் இருந்தாலும் மக்களுக்குத் தொண்டுகளும் சேவைகளும் செய்பவர் என்று யார் பெரியவர் என்பதற்கான விளக்கத்தினைத் தருகின்றார் இயேசு.

இதனை இயேசு பேச்சு வாக்கில் சொல்லிவிட்டுக் கடந்துபோய்விடவில்லை. மாறாக, வாழ்ந்து காட்டினார். அடிமைகள் செய்யக்கூடிய பணியாகிய பாதங்களைக் கழுவுகின்ற பணியைத் தன்னுடைய சீடர்களுக்குச் செய்து அவர்களும் அவ்வாறு இருக்கச் சொன்னார்.

சிறுபிள்ளையை ஏற்றுக்கொள்பவர் இயேசுவை ஏற்றுக்கொள்கின்றார்

இயேசு தான் சொல்லவந்த செய்தியை இன்னும் தெளிவாக்கும் விதமாக, ஒரு சிறு பிள்ளையைத் தம் கையில் எடுத்து, இச்சிறு பிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கின்றார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கின்றார் என்கின்றார்.

சிறுபிள்ளைகள், "நான்தான் பெரியவன்" என்ற இறுமாப்பில் ஆடுவதில்லை; அவை கள்ளம் கபடற்ற உள்ளத்தினராய் இருக்கும். இப்படிப்பட்ட சிறுபிள்ளைகளைப் போன்று இருப்பவர்கள் பெரியவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களாகவும் இருக்கின்றார்கள். மேலும் இயேசுவை ஏற்றுக்கொள்வதன் மூலம் அவரை அனுப்பிய இறைவனையே ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களாகவும் இருக்கின்றார்கள். ஆகையால், உள்ளத்தில் தாழ்த்தியோடு இருந்து, மற்றவர்களுக்குப் பணிவிடை செய்கின்றபொழுது நாம் இறைவனுக்கு முன்பாகப் பெரியவராக இருப்போம் என்பது உறுதி.

சிந்தனை

"மனித உள்ளத்தில் மறைந்திருக்கும் பண்புகளாகிய பணிவும் அமைதியுமே அழியாத அலங்காரமாய் இருக்கட்டும்" (1 பேது 3:4) என்பார் புனித பேதுரு. ஆகையால், நாம் உள்ளத்தில் பணிவும் தாழ்ச்சியும் அமைதியும் கொண்டு வாழ்ந்து, மக்களுக்குப் பணிவிடை செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
 

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!