|
|
24
பிப்ரவரி 2020 |
|
|
பொதுக்காலம்
7 ஆம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
உங்கள் உள்ளத்தில் கட்சி மனப்பான்மை
இருந்தால் அதைப்பற்றிப் பெருமை பாராட்ட வேண்டாம்.
திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து
வாசகம் 3: 13-18
அன்புக்குரியவர்களே, உங்களிடையே ஞானமும் அறிவாற்றலும் உடையவர்
யாராவது இருந்தால், ஞானம் தரும் பணிவாலும் நன்னடத்தையாலும் அவற்றைக்
காட்டட்டும். உங்கள் உள்ளத்தில் பொறாமையும் மனக்கசப்பும் கட்சி
மனப்பான்மையும் இருக்குமானால் அதைப்பற்றிப் பெருமை பாராட்ட
வேண்டாம். உண்மையை எதிர்த்துப் பொய் பேசவேண்டாம். இத்தகைய ஞானம்
விண்ணிலிருந்து வருவது அல்ல; மாறாக, மண்ணுலகைச் சார்ந்தது. அது
மனித இயல்பு சார்ந்தது; பேய்த் தன்மை வாய்ந்தது. பொறாமையும் கட்சி
மனப்பான்மையும் உள்ள இடத்தில் குழப்பமும் எல்லாக் கொடுஞ் செயல்களும்
நடக்கும். விண்ணிலிருந்து வரும் ஞானத்தின் தலையாய பண்பு அதன்
தூய்மையாகும். மேலும் அது அமைதியை நாடும்; பொறுமை கொள்ளும்;
இணங்கிப் போகும் தன்மையுடையது; இரக்கமும் நற்செயல் களும்
நிறைந்தது; நடுநிலை தவறாதது; வெளிவேடமற்றது. அமைதி ஏற்படுத்துவோர்
விதைத்த அமைதி என்னும் விதையிலிருந்து நீதியென்னும் கனி விளைகிறது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 19: 8. 9. 10. 15 (பல்லவி: 8a)
Mp3
=================================================================================
பதிலுரைப் பாடல்
திபா 19: 8. 9. 10. 15 (பல்லவி: 8a)
பல்லவி: ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; இதயத்தை மகிழ்விப்பவை.
7ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது.
ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது.
- பல்லவி
8ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன.
ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன.
- பல்லவி
9ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும்
நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை
முற்றிலும் நீதியானவை. - பல்லவி
14என் கற்பாறையும் மீட்பருமான ஆண்டவரே! என் வாயின் சொற்கள் உமக்கு
ஏற்றவையாய் இருக்கட்டும்; என் உள்ளத்தின் எண்ணங்கள் உமக்கு உகந்தவையாய்
இருக்கட்டும். - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி (2 திமொ 1: 10)
அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து,
அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நற்செய்தி வாசகம்
நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை
நீங்க உதவும்.
✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
9: 14-29
அக்காலத்தில் பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகிய மூவரும் மற்ற சீடரிடம்
வந்தபொழுது, பெருந்திரளான மக்கள் அவர்களைச் சூழ்ந்திருப்பதையும்
மறை நூல் அறிஞர் அவர்களுடன் வாதாடுவதையும் கண்டனர். மக்கள் அனைவரும்
இயேசுவைக் கண்ட உடனே மிக வியப்புற்று அவரிடம் ஓடிப்போய் அவரை
வாழ்த்தினர். அவர் அவர்களை நோக்கி, "நீங்கள் இவர்களோடு எதைப்
பற்றி வாதாடுகிறீர்கள்?" என்று கேட்டார். அப்போது கூட்டத்திலிருந்து
ஒருவர் அவரைப் பார்த்து, "போதகரே, தீய ஆவி பிடித்துப் பேச்சிழந்த
என் மகனை உம்மிடம் கொண்டு வந்தேன். அது அவனைப் பிடித்து அந்த
இடத்திலேயே அவனைக் கீழே தள்ளுகிறது. அவன் வாயில் நுரை தள்ளிப்
பற்களை நெரிக்கிறான்; உடம்பும் விறைத்துப் போகிறது. அதை ஓட்டிவிடும்படி
நான் உம் சீடரிடம் கேட்டேன்; அவர்களால் இயலவில்லை" என்று
கூறினார். அதற்கு அவர் அவர்களிடம், "நம்பிக்கையற்ற தலைமுறையினரே,
எவ்வளவு காலம் நான் உங்களோடு இருக்க இயலும்? எவ்வளவு காலம்
நான் உங்களைப் பொறுத்துக்கொள்ள இயலும்? அவனை என்னிடம் கொண்டு
வாருங்கள்" என்று கூறினார். அவர்கள் அவனை அவரிடம் கொண்டுவந்தார்கள்.
அவரைக் கண்டவுடன் அந்த ஆவி அவனுக்கு வலிப்பு உண்டாக்க, அவன் தரையில்
விழுந்து புரண்டான்; வாயில் நுரை தள்ளியது. அவர் அவனுடைய தந்தையைப்
பார்த்து, "இது இவனுக்கு வந்து எவ்வளவு காலமாயிற்று?" என்று
கேட்டார். அதற்கு அவர், "குழந்தைப் பருவத்திலிருந்து இது இருந்து
வருகிறது. இவனை ஒழித்துவிடத் தீயிலும் தண்ணீரிலும் பல முறை அந்த
ஆவி இவனைத் தள்ளியதுண்டு. உம்மால் ஏதாவது செய்ய இயலுமானால் எங்கள்மீது
பரிவு கொண்டு எங்களுக்கு உதவி செய்யும்" என்றார். இயேசு அவரை
நோக்கி, "இயலுமானாலா? நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்" என்றார்.
உடனே அச்சிறுவனின் தந்தை, "நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை
நீங்க உதவும்" என்று கதறினார். அப்போது மக்கள் கூட்டம் தம்மிடம்
ஓடிவருவதை இயேசு கண்டு, அந்தத் தீய ஆவியை அதட்டி, "ஊமைச்
செவிட்டு ஆவியே, உனக்குக் கட்டளையிடுகிறேன்: இவனை விட்டுப் போ;
இனி இவனுள் நுழையாதே" என்றார். அது அலறி அவனுக்கு மிகுந்த வலிப்பு
உண்டாக்கி வெளியேறியது. அச்சிறுவன் செத்தவன் போலானான். ஆகவே
அவர்களுள் பலர், "அவன் இறந்துவிட்டான்" என்றனர். இயேசு அவன்
கையைப் பிடித்துத் தூக்கிவிட்டார். அவனும் எழுந்தான். அவர்
வீட்டில் நுழைந்ததும் அவருடைய சீடர் அவரிடம் தனிமையாக வந்து,
"அதை ஏன் எங்களால் ஓட்ட இயலவில்லை?" என்று கேட்டனர். அதற்கு
அவர், "இவ்வகைப் பேய் இறைவேண்டலினாலும் நோன்பினாலும் அன்றி
வேறு எதனாலும் வெளியேறாது" என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
யாக்கோபு 3: 13-18
விண்ணிலிருந்து வரும் ஞானம் இரக்கமும்
நற்செயல்களும் நிறைந்தது
நிகழ்வு
குருவானவர் ஒருவர் இருந்தார். அவர் ஒரு கிராமப்புறத்தில் பங்குத்தந்தையாகப்
பணியாற்றி வந்தார். மிகுந்த ஞானம்நிறைந்த அவருடைய வார்த்தைகளை
மக்கள் இறைவனுடைய வார்த்தைகளாகவே ஏற்று, அவருக்கு மதிப்பளித்து
வந்தார்கள்.
ஒருநாள் அவர் ஒரு தெருவின் வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தபொழுது,
ஒரு வீட்டிலிருந்து பயங்கரச் சத்தம் கேட்டது. அந்த
வீட்டிலிருந்த தாயையும் அவரது மகனையும் நன்றாகத் தெரியும் என்பதால்,
குருவானவர் அந்த வீட்டிற்குள் சென்றார். அவர் வீட்டிற்குள்
சென்ற நேரம் தாயானவள் தன் மகனைக் கடுமையாகத்
திட்டிக்கொண்டிருந்தார். பதிலுக்கு அவனும் அந்தத் தாயைக்
திட்டிக்கொண்டிருந்தான். குருவானவரைப் பார்த்ததும் அவர்கள் இருவரும்
அமைதியானார்கள்.
"உங்களுக்கு என்ன ஆயிற்று...? ஏன் இப்படிச் சத்தம்
போட்டுக்கொண்டிருக்கின்றீர்கள்...?" என்று குருவானவர் அவர்களிடம்
கேட்டதற்கு, தாயானவள் அவரிடம், "சுவாமி! இவனிடம் நான்
"பள்ளிக்கூடத்திற்கு ஒழுங்காகப் போ... நன்றாகப் படி..." என்று
சொல்லிக்கொண்டு வருகின்றேன். இவனோ பள்ளிக்கூடத்திற்கு போகமாட்டேன்
என்று அடம்பிடிக்கிறான்" என்று வருத்தத்தோடு சொல்லி
முடிந்தார். உடனே குருவானவர் சிறுவனைப் பார்த்தார். அப்பொழுது
அவன் அவரிடம், "சுவாமி! எனக்குப் படிப்பு சுத்தமாக வரமாட்டேன்
என்கிறது. அப்படியிருக்கும்பொழுது நான் நான் என்ன செய்வது?" என்றான்.
"படிப்பு வரமாட்டேன் என்கிறதா...? எந்தப் பாடமாக இருந்தாலும்,
அதைக் கருத்தூன்றிப் படித்தால் நிச்சயம் உன்னால் நன்றாகப் படிக்க
முடியும்... எதிர்காலத்தில் நன்றாக இருக்கமுடியும். தந்தையில்லாத
பிள்ளை என்பதால்தானே உன்னுடைய தாய் இவ்வளவு கடினமாக உழைத்து உன்னைப்
படிக்க வைக்கின்றார். நீ இப்படிச் செய்தால், அவர் என்ன
செய்வார்?" குருவானவர். அவர் இவ்வாறெல்லாம் அறிவுரை சொன்னபோதும்,
சிறுவன் தன்னுடைய பிடியில் மிகவும் உறுதியாக இருந்தான்.
அப்பொழுது குருவானவர், சிறுவனுடைய விலையுயர்ந்த ஆடை அருகில் கிடப்பதைக்
கண்டு, அதை எடுத்து இரண்டாகக் கிழித்தார். இதைப்
பார்த்துவிட்டு சிறுவன் ஒருவினாடி அதிர்ந்துபோனான். "அதை ஏன்
கிழித்தீர்கள்...? அது எவ்வளவு விலையுயர்ந்த ஆடை என்று உங்களுக்குத்
தெரியாதா...?" என்று கத்தினான். அதற்குக் குருவானவர் அவரிடம்,
"தம்பி! உன்னுடைய இந்த விலையுயர்ந்த ஆடையைக் கிழித்துவிட்டேன்
என்பதற்காக இந்தக் கத்துக் கத்துகிறாயே! உன்னுடைய விலைமதிக்கப்
பெறாத எதிர்கால வாழ்வு பாழாய்போய்விடும் என்று உன்னுடைய தாய்
எவ்வளவு புத்திமதி சொல்கிறார். அது ஏன் உன்னுடைய காதில் விழமாட்டேன்
என்கிறது" என்றார். சிறுவனுக்கு அப்பொழுதுதான் அவனுடைய தவறு
தெரிந்தது. அதற்குப் பின்பு அவன் தன்னுடைய தாயின் அறிவுறுத்தலின்
பேரில் ஒழுங்காகப் பள்ளிக்கூடம்சென்று படிக்கத் தொடங்கினான்.
இந்த நிகழ்வில் வருகின்ற குருவானவர் தன்னுடைய ஞானம் நிறைந்த
பேச்சால் பள்ளிக்கூடம் போகவே மாட்டேன் என்று அடம் பிடித்த சிறுவனை
நல்வழிக்குக் கொண்டுவந்தது, புனித யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து
எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் வருகின்ற
"விண்ணிலிருந்து வரும் ஞானம் இரக்கமும் நற்செயல்களும் நிறைந்தது"
என்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் தருகின்றது.
ஆம், இன்றைய முதல் வாசகம் விண்ணிலிருந்து வரும் ஞானம், மனிதரிடமிருந்து
வரும் ஞானம் ஆகிய இரண்டையும் குறித்து எடுத்துச் சொல்கின்றது.
நாம் அவற்றைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
மண்ணக, விண்ணக ஞானம்
இன்றைய முதல் வாசகத்தில் புனித யாக்கோபு மண்ணக மற்றும் விண்ணக
ஞானத்தைக் குறித்துப் பேசுகின்றார். முதலில் மண்ணக ஞானம் எப்படிப்பட்டதாக
இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்வோம். மண்ணக ஞானம் பொறாமையும்
மனக்கசப்பும் கட்சி மனப்பான்மையோடும் இருக்கும். இதற்கு மிகச்
சிறந்த எடுத்துக்காட்டாக பாபேல் கோபுரத்தைச் சொல்லலாம் (தொநூ
11: 1-9). பாபேல் கோபுரமானது மனிதர்கள் தங்களுடைய பெயர் விளங்கக்
கட்டினார்கள். இதனால் அது .ஒன்றுமில்லாமல் போனது. ஆம், தான் என்ற
ஆணவத்தை வெளிப்படுத்துவதற்காகச் செய்யப்படும் எதுவும் மண்ணக ஞானமாகத்தான்
இருக்கும்
மண்ணக ஞானம் தன் முனைப்பைக் காட்டுவதாக இருக்கும்பொழுது விண்ணக
ஞானமோ தூய்மையானதாகவும் அமைதியை நாடுவதாகவும் இரக்கமும் நற்செயல்களும்
நிறைந்ததாகவும் இருக்கும் என்கிறார் புனித யாக்கோபு. இத்தகைய
ஞானத்தை நாம் பெறுவதற்கு சாலமோன் அரசரைப் போன்று இறைவனிடம்
வேண்டவேண்டும் (யாக் 1:5). மேலும் அவ்வாறு அருளப்படும் ஞானத்தை
இறைவனின் அதிமிக மகிமைக்காகப் பயன்படுத்த வேண்டும். அப்பொழுதுதான்
அது உண்மையில் விண்ணகத்திலிருந்து வந்த ஞானமாக இருக்கும்.
சிந்தனை
"ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்; ஞானத்தையும்
நற்பயிற்சியையும் மூடரே அவமதிப்பர்" (நீமொ 1:7) என்கிறது
நீதிமொழிகள் நூல். ஆகவே, நாம் இறையச்சத்தோடு வாழ்ந்து, அவர் அளிக்கும்
ஞானத்தைப் பெறுவோம். அத்ன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மாற்கு 9: 14-29
"நான் நம்புகிறேன்"
நிகழ்வு
1961 ஆம் ஆண்டு, தன்னை ஒருவர் தகாத வார்த்தைகளால்
திட்டிவிட்டார் என்பதற்காக இளைஞன் ஒருவன் அவருடைய வீட்டையே
தீயிட்டுக் கொழுத்திவிட்டான். இதனால் அந்த இளைஞனுக்குப் பன்னிரண்டு
ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சிறைச்சாலையை விட்டு வெளியே
வந்த இளைஞன், எல்லாமே மாறியிருப்பதைக் கண்டு குழம்பிப் போனான்.
ஒருசிலரிடம் அவன் வேலை கேட்டபொழுது, அவர்கள் அவனுடைய கடந்த கால
வாழ்வைச் சுட்டிக்காட்டி வேலை தரமுடியாது என்று சொல்லி வெளியே
துரத்தினார்கள். இன்னும் ஒருசிலர் அவனிடம் கடுஞ்சொற்களைச்
சொல்லிக் காயப்படுத்தினார்கள். இதனால் மிகுந்த வேதனையடைந்த அவன்
சிறைச்சாலைக்கே திரும்பிச் சென்றுவிடலாம் என்று முடிவு
செய்தான்.
இந்நிலையில் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் அவன்மீது முழுமையான
நம்பிக்கை வைத்து, அவனுக்குத் தன்னுடைய வீட்டில் ஒரு வேலை
போட்டுக் கொடுத்தார். அவனும் அதற்கு நம்பிக்கைக்குரியவனாய் இருந்து,
வாழ்க்கையில் படிப்படியாக உயர்ந்தான். பின்னாளில் அவன் சமூகத்தில்
ஓர் உயர்ந்த இடத்தை அடைந்தபொழுது கடந்த காலத்தை நினைத்துப்
பார்த்தான். "ஒருவேளை அந்தக் கல்லூரிப் பேராசியர் மட்டும் என்மீது
நம்பிக்கை வைக்காமல் இருந்திருந்தால், என்னுடைய வாழ்க்கையே
சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் சீரழிந்திருக்கும். அவர் என்மீது
நம்பிக்கை வைத்தார். அந்த நம்பிக்கைதான் என்னை இந்தளவுக்கு உயர்த்தியிருக்கின்றது"
என்று எண்ணிப் பெருமைகொண்டான்.
ஆம், நம்பிக்கை என்பது சாதாரண ஒரு சொல்லல்ல; அது ஒருவருடைய
வாழ்வே மாற்றிப்போடும் மந்திரச் சொல். அதற்குச் சான்றாக இருப்பதுதான்
மேலே உள்ள நிகழ்வு. இன்றைய நற்செய்தி வாசகம் நம்பிக்கையின்
முக்கியத்துவத்தை எடுத்துக்கூறுகின்றது. நாம் அதைக் குறித்து
இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
சீடர்களால் பேயை ஓட்ட முடியாமல் போதல்
ஆண்டவர் இயேசு, தோற்றமாற்ற நிகழ்விற்குப் பிறகு மலையிலிருந்து
கீழே இறங்கிவருகின்றார். அப்பொழுது சீடர்களோடு சிலர் வாக்குவாதம்
செய்துகொண்டிருப்பதைக் கண்டு, என்ன என்று கேட்கின்றார்.
அப்பொழுது பேய்பிடித்துப் பேச்சிழந்த சிறுவனின் தந்தை
இயேசுவிடம் வந்து நடந்ததைச் சொல்கின்றார்.
இயேசுவின் சீடர்களோடு மறைநூல் அறிஞர்கள் எதைக் குறித்து
வாதாடியிருப்பார்கள் என்பதை நம்மால் யூகிக்க முடிகின்றது.
பேய்பிடித்துப் பேச்சிழந்த சிறுவனை, அவனுடைய தந்தை இயேசுவின்
சீடரிடம் கொண்டுவந்திருக்கவேண்டும். அவர்களால் அந்தச்
சிறுவனிடமிருந்து பேயை ஓட்ட முடியாமல் போனதால், அங்கு வருகின்ற
மறைநூல் அறிஞர் சீடர்களின் அதிகாரத்தையும் ஆற்றலையும்
கேள்விக்கு உட்படுத்தியிருக்கவேண்டும். இதுதான்
நடந்திருக்கும்.
இங்கு ஒரு கேள்வி எழலாம். அது என்ன கேள்வி எனில், சீடர்கள்தான்
பேய்களை ஓட்டியதாக இதற்கு முன்பு (மாற் 6: 7,13)
வாசித்தோமே...! பிறகு ஏன் அவர்களால் இந்தச் சிறுவனிடமிருந்து
பேயை ஓட்ட முடியவில்லை என்பதாகும். இதற்கு முக்கியமான காரணம்,
அவர்கள் இறைவனுடைய வல்லமையில் நம்பிக்கை வைக்காமல், தங்களுடைய
வல்லமையில் நம்பிக்கை வைத்ததுதான். இதை "அதை ஏன் எங்களால் ஓட்ட
இயலவில்லை?" என்ற சீடர்களின் கேள்வியிலிருந்து
அறிந்துகொள்ளலாம். மேலும் அவர்கள் இறைவனோடு இறைவேண்டலிலும்
நோன்பிலும் நிலைத்திருக்கவில்லை. இதனாலும் அவர்களால் பேயை ஓட்ட
முடியாமல் போகிறது.
சிறுவனின் தந்தையின் நம்பிக்கை
சீடர்களால் சிறுவனிடமிருந்து பேயை ஒட்டமுடியாமல் போகிற
நேரத்தில்தான் இயேசு மலையிலிருந்து கீழே இறங்கி வருகின்றார்.
அவரிடம் சிறுவனின் தந்தை நிகழ்ந்தவற்றைச் சொல்லி, "உம்மால்
ஏதாவது செய்ய இயலுமானால் எங்கள்மீது பரிவுகொண்டு எங்களுக்கு
உதவி செய்யும்" என்கிறார். அதற்கு இயேசு அவரிடம், "இயலுமானாலா?
நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்" என்று சொல்ல, சிறுவனின்
தந்தை, "நான் நம்புகிறேன்..." என்று கூறுகின்றார். உடனே இயேசு
அந்தச் சிறுவனிடமிருந்து பேயை ஓட்டுகின்றார்.
இங்கு இயேசு, சிறுவனின் தந்தை தன்னிடம் "நான் நம்புகிறேன்"
என்று சொன்னபின்னரே, சிறுவனிடமிருந்து பேயை ஓட்டுவதாக
வாசிக்கின்றோம். அப்படியானால், நாம் இறைவனிடமிருந்து நலமும்
வளமும் பெறுவதற்கு, அவரிடம் நம்பிக்கை கொண்டு வாழ்வது மிகவும்
இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றது. பல நேரங்களில் நாம்
இறைவனிடமும் நம்மிடமும் நம்பிக்கையின்றி இருக்கின்றோம்.
இதனாலேயே நம்முடைய வாழ்வில் எந்தவோர் அதிசயமும் நிகழாமல்
இருக்கின்றது. ஆகையால், நாம் இறைவனிடம் ஆழமான நம்பிக்கை கொண்டு
வாழும்மக்களாக இருக்க முயற்சி செய்வோம்.
சிந்தனை
"ஆண்டவரை நம்புங்கள்" (திபா 4:5) என்கிறார் திருப்பாடல்
ஆசிரியர். ஆகையால், நாம் ஆண்டவரை நம்புவோம்; அதன்படி நடப்போம்.
அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|