|
|
22
பிப்ரவரி 2020 |
|
|
பொதுக்காலம்
6 ஆம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
திருத்தூதர் பேதுருவின் தலைமைப் பீடம் விழா
=================================================================================
நான் கிறிஸ்துவின் துன்பங்களுக்குச் சாட்சி, உங்கள் உடன்மூப்பன்.
திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம்
5: 1-4
அன்புக்குரியவர்களே, கிறிஸ்துவின் துன்பங்களுக்குச்
சாட்சியும், வெளிப்படவிருக்கும் மாட்சியில் பங்குகொள்ளப் போகிறவனுமாகிய
நான், உடன்மூப்பன் என்னும் முறையில் மூப்பர்களுக்குக் கூறும்
அறிவுரை: உங்கள் பொறுப்பிலிருக்கும் கடவுளின் மந்தையை நீங்கள்
மேய்த்துப் பேணுங்கள்; கட்டாயத்தினால் அல்ல, கடவுளுக்கேற்ப மன
உவப்புடன் மேற்பார்வை செய்யுங்கள்; ஊதியத்திற்காகச் செய்யாமல்,
விருப்போடு பணி செய்யுங்கள்.
உங்களிடம் ஒப்படைக்கப்பட்டவர்களை அடக்கி ஆளாமல் மந்தைக்கு
முன்மாதிரிகளாய் இருங்கள். தலைமை ஆயர் வெளிப்படும் போது, அழியா
மாட்சியுள்ள முடியைப் பெற்றுக்கொள்வீர்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 23: 1-3. 4. 5. 6 (பல்லவி: 1)
Mp3
=================================================================================
பதிலுரைப் பாடல்
திபா 23: 1-3. 4. 5. 6 (பல்லவி: 1)
பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
1ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
2பசும் புல்வெளி மீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான
நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.
3அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; தம் பெயர்க்கேற்ப எனை
நீதிவழி நடத்திடுவார். - பல்லவி
4சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும்,
நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம்
கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். - பல்லவி
5என்னுடைய எதிரிகளின் கண்முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு
செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது
பாத்திரம் நிரம்பி வழிகின்றது. - பல்லவி
6உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும்
என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில்
நெடுநாள் வாழ்ந்திருப்பேன். - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி (மத் 16: 18)
அல்லேலூயா, அல்லேலூயா! உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல்
என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல்
வெற்றிகொள்ளா. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 13-19
அக்காலத்தில் இயேசு, பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார்.
அவர் தம் சீடரை நோக்கி, "மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?"
என்று கேட்டார். அதற்கு அவர்கள், "சிலர் திருமுழுக்கு யோவான்
எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது
பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்" என்றார்கள்.
"ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" என்று அவர்
கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, "நீர் மெசியா, வாழும் கடவுளின்
மகன்" என்று உரைத்தார். அதற்கு இயேசு, "யோனாவின் மகனான சீமோனே,
நீ பேறுபெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை;
மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். எனவே
நான் உனக்குக் கூறுகிறேன்: உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்
மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்
மேல் வெற்றி கொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன்.
மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில்
நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்" என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
யாக்கோபு 3: 1-10
நாவடக்கம் வேண்டும்
நிகழ்வு
அது ஒரு கிராமத்துப் பங்கு. அந்தப் பங்கில் வயதான குருவானவர்
ஒருவர் பங்குத்தந்தையாக இருந்தார். அதே பங்கில் மூதாட்டி ஒருத்தி
இருந்தார். அவர் பங்குத்தந்தையிடம் அடிக்கடி வந்து, "சுவாமி!
நீங்கள் அணிந்திருக்கின்ற அங்கி உங்களுக்குப் பெரிதாக இருக்கின்றது.
அதனால் அதனைச் சற்று வெட்டித் தையுங்கள்" என்றார்.
முதலில் பங்குத்தந்தை அவர் சொன்னதைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால்,
மீண்டும் மீண்டுமாக அந்த மூதாட்டி அவரிடம் அதைச் சொல்லிவந்ததால்,
ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த பங்குத்தந்தை மூதாட்டியிடம்,
"நான் அணிந்திருக்கின்ற இந்த அங்கி பெரிதாக இருக்கின்றது... அதைப்
பார்க்கும்பொழுது உங்களுக்கு எரிச்சலாக இருக்கின்றது என்று
சொல்லி வருகின்றீர்களே...! அதனால் நீங்களே அதனைச் சரியான விதத்தில்
தைத்து என்னிடம் கொண்டு வாருங்கள்" என்று தன்னுடைய அங்கியை அவரிடம்
கொடுத்து அனுப்பினார்.
ஓரிரு வாரங்கள் கழித்து மூதாட்டி பங்குத்தந்தையின் அங்கியதைத்
தைத்துவிட்டு, அவரிடம் கொண்டுவந்து கொடுத்தார். அதைப்
பெற்றுக்கொண்ட பங்குத்தந்தை அவருக்கு நன்றி சொல்லிவிட்டு,
"அம்மா! யாராவது ஒருவர் நமக்கோர் உதவி செய்தால், அதற்குப் பதிலாக
நாம் ஓர் உதவியைச் செய்வோம்தானே...! நீங்கள் என்னுடைய அங்கியைத்
தைத்துத் தந்திருக்கிறீர்கள். இதற்குக் கைம்மாறாக நான் ஓர் உதவியை
உங்களுக்குச் செய்யவேண்டும்... ஊரில் உள்ள எல்லாரும் உங்களுக்கு
"நாக்கு நீளம்... நாக்கு நீளம்" என்று
சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள். நான்கூட அதைப் பாலதடவை கண்கூடாகப்
பார்த்திருக்கின்றேன். இதோ இருக்கின்றதே கத்திரிக்கோல்... இதை
எடுத்து உங்களுடைய நாக்கைப் பாதியாக வெட்டிவிடுங்கள்" என்றார்.
பங்குத்தந்தை இவ்வாறு சொன்னதுதான் தாமதம். மூதாட்டி அங்கிருந்து
தலைதெறிக்க ஓடிப்போனார். அதற்குப் பின்பு அவர் பங்குத்தந்தையிடம்
வந்ததே இல்லை.
நிறைய நேரங்களில் நம்முடைய நாவால் பலரைக் காயப்படுத்துகின்றோம்;
அடுத்தவரைக் குறித்து அவதூறு பரப்புகின்றோம். இத்தகைய
சூழ்நிலையில் இன்றைய முதல் வாசகம் நாவடக்கத்தைக் குறித்துப்
பேசுகின்றது. மனித வாழ்வில் நாவடக்கம் எந்தளவுக்கு முக்கியத்துவம்
வாய்ந்தது என்பதை இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
பேச்சில் தவறாதோர் நிறைவு பெற்றவராவர்
நாவடக்கத்தைக் குறித்துப் பேசுகின்றபொழுது புனித யாக்கோபு "கடிவாளம்",
"சுக்கான்", "தீப்பொறி", "தீ" போன்ற உருவகங்களைப் பயன்படுத்துகின்றார்.
இந்த உருவகங்கள் யாவும் அளவில் மிகச் சிறியவை; ஆனால், மிகப்பெரிய
தாக்கத்தை அல்லது பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. மனிதருடைய
நாவும் அப்படித்தான். அது அளவில் சிறியதாக இருந்தாலும் மிகப்பெரிய
பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால்தான் புனித யாக்கோபு, "உங்களுள்
பலர் போதகராக விரும்பவேண்டாம்" என்றும் "பேச்சில் தவறாதோர்
நிறைவு பெற்றவராவர்" என்றும் கூறுகின்றார்.
இந்த இடத்தில் திருப்பாடல் ஆசிரியர் கூறுகின்ற வார்த்தைகளையும்
நீதிமொழிகள் நூலில் இடம்பெறுகின்ற வார்த்தைகளையும் இணைத்துச்
சிந்தித்தப் பார்ப்பது நல்லது. "நான் என் நாவினால் பாவம்
செய்யாத வண்ணம் என் நடைமுறைகளைக் காத்துக்கொள்வேன்" (திபா
39:1) என்பார் திருப்பாடல் ஆசிரியர். அதே போல், "வாழ்வதும்
நாவாலே, சாவதும் நாவாலே; வாயாடுவோர் பேச்சின் பலனைத் துய்ப்பர்"
(நீமொ 18: 21) என்கிறது நீதிமொழிகள் நூல். இந்த இறைவார்த்தைகளைக்
கொண்டு நாம் பார்க்கின்றபொழுது மனித நாவிற்கு எந்தளவுக்கு வலிமை
உண்டு என்பதை நம்மால் புரிந்துகொள்ளமுடியும். ஆகையால், இத்தகைய
நாவினைக் கொண்டு நாம் தவறு செய்யாமல், நல்லதைச் செய்தால் அதனால்
நாம் நிறைவுபெற்றவர்கள் ஆவோம் என்பது உறுதி.
போற்றுதலும் தூற்றுதலும் ஒரே நாவிலிருந்து வரக்கூடாது
நாவு அளவில் சிறியதாக இருப்பினும் நம் உடல் முழுவதையும் கறைபடுத்தக்கூடியது;
அழிக்கக்கூடியது என்று குறிப்பிட்ட புனித யாக்கோபு இன்னொரு
முக்கியமான செய்தியைச் சொல்கின்றார். அது என்னவெனில் இறைவனைப்
போற்றக்கூடிய இதே நாவினைக் கொண்டு அவரையும் மற்றவரையும் தூற்றக்கூடாது
என்பதாகும்.
பலநேரங்களில் நாம் இறைவனைப் போற்றுகின்ற இதே நாவினைக் கொண்டு
அவரையும் மற்றவர்களையும் தூற்றிக்கொண்டிருக்கின்றோம். இந்த இடைவெளியை
நாம் நம்முடைய வாழ்விலிருந்து குறைக்கவேண்டும். இதற்கு நாம் என்ன
செய்யவேண்டுமெனில், நம்முடைய உள்ளத்தை நல்ல எண்ணங்களாலும் இறைவார்த்தையாலும்
நிரப்பவேண்டும். அன்னை மரியா நிகழ்ந்தவற்றை எல்லாம் தன்னுடைய
உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக்கொண்டு கடவுளுக்கு ஏற்றவராக
இருந்தார். நாமும் நம்முடைய உள்ளத்தை இறைவார்த்தையால், நல்ல எண்ணங்களால்
நிரப்பினோம் என்றால், நம்முடைய நாவிலிருந்து புறப்படும் ஒவ்வொரு
சொல்லும் நல்லதாகவே இருக்கும் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும்
இல்லை.
சிந்தனை
"நான் கூறும் வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன"
(யோவா 6: 63) என்பார் இயேசு. ஆகவே, நம்முடைய வாயிலிருந்து புறப்படும்
வார்த்தைகள் பிறருக்கு வாழ்வு கொடுக்குமாறு இருக்க, நல்ல
வார்த்தைகளைப் பேசுவோம்; நாவை அடக்கி வாழ்வோம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மாற்கு 9: 2-13
"என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவருக்குச்
செவிசாயுங்கள்"
நிகழ்வு
மிகப்பெரிய பியானோ இசைக் கலைஞரான இஞ்ஞாசி ஜான் படரெவ்ஸ்கி
(Ignacy Jan Paderewski) ஒருநாள் இசைக் கச்சேரியை
முடித்துவிட்டு, கச்சேரி நடந்த அரங்கத்திற்குப் பின்னால் மிகவும்
வருத்தத்தோடு இருந்தார். அவரை அந்த நிலையில் பார்த்து, மிகவும்
ஆச்சரியப்பட்ட அவருடைய நண்பர் ஒருவர் அவரிடம், "படரெவ்ஸ்கி! உங்களுக்குக்
என்னாயிற்று...? உடல்நிலை சரியில்லையா...? உங்களை நான் இப்படி
ஒருபோதும் பார்த்ததில்லையே...!" என்றார்.
அதற்கு படரெவ்ஸ்கி அவரிடம், "வேறொன்றுமில்லை. வழக்கமாக
என்னுடைய இசைக் கச்சேரிக்கு ஓர் இளம் தம்பதியர் வருவர்.
அவர்கள் இருவரும் நான்காவது வரிசையின் ஓரத்தில் அமர்ந்துகொண்டு
நான் மீண்டுகின்ற இசையை இரசித்து இரசித்துக் கேட்பார்கள்.
நானும் அவர்களுக்காகவே சிறப்பான இசையைத் தருவேன். இன்று
அவர்கள் அமரக்கூடிய இருக்கைகள் காலியாக இருந்தன. அதனால்
என்னால் சரியாக இசையை மீட்ட முடியவில்லை. அந்த வருத்தம்தான்"
என்றார்.
ஒரு கலைஞராக இருக்கட்டும், பேச்சாளராக இருக்கட்டும், ஏன்,
கடவுளாகக் கூட இருக்கட்டும், அவர் சொல்வதைக் கருத்தூன்றிக்
கேட்கக்கூடியவர்கள் இருந்தால்தான் பேசக்கூடிய அல்லது
சொல்லக்கூடியவருக்கு அவருக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
இல்லையென்றால், அது வருத்தத்தைத்தான் தரும். இன்றைய
நற்செய்தியில் தந்தையாம் கடவுள் தன் மகன் இயேசுவைச்
சுட்டிக்காட்டி, "என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவருக்குச்
செவிசாயுங்கள்" என்று கூறுகின்றார். தந்தைக் கடவுள் இயேசுவைப்
பார்த்துச் சொல்லும் இந்தச் சொற்கள் எத்துணை முக்கியத்துவம்
வாய்ந்தவை என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப்
பார்ப்போம்.
மூன்று சீடர்களை அழைத்துக்கொண்டு மலைக்குச் சென்ற இயேசு
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, தன்னோடு பேதுருவையும் யோவானையும்
யாக்கோபையும் கூட்டிக்கொண்டு ஓர் உயர்ந்த மலைக்குச் சென்று,
அவர்கள் முன் தோற்றம் மாறுகின்றார். இயேசு ஏன் மூவரை மட்டும்
அழைத்துக்கொண்டு மலைக்குச் சென்றார் என்ற கேள்வி எழலாம். இந்த
மூவர்தான் இயேசுவால் முதன்முதலில் அழைக்கப்பட்டவர்கள் (மாற் 1:
16-19); திருத்தூதர்களின் அட்டவனையில் இவர்கள்தான் முதலில்
இடம் பிடிக்கின்றார்கள் (மாற் 3:16). மட்டுமல்லாமல், இயேசு
செய்யக்கூடிய அருமடையாளங்களில் இவர்களே அவரோடு
இருக்கின்றார்கள் (மாற் 5:37); இயேசுவின் வாழ்வில் முக்கியமான
தருணங்களிலும் அவரோடு இவர்களே இருக்கின்றார்கள் (மாற் 14:33).
அதனாலும் இவர்கள் இயேசுவால் மலைக்கு அழைத்துச்
சொல்லப்பட்டிருக்கலாம்.
இதைவிடவும் முக்கியமான ஒரு காரணம் இருக்கின்றது. அது
என்னவெனில், இந்த நிகழ்விற்கு முன்பாக இயேசு சீடர்களிடம்
தன்னுடைய பாடுகளைக் குறித்து முன்னறிவித்திருப்பார். இதனால்
அவர்கள் இயேசு உண்மையிலேயே மெசியாதானா? என்ற ஐயத்தோடு
இருப்பார்கள். இந்நிலையில் இயேசு தோற்றம் மாறியதும், ஐயமே
இல்லாமல் இறைமகன்தான் என்று அவர்கள் நம்பத் தொடங்குவார்கள்.
அந்த விதத்தில் இயேசுவின் தோற்றமாற்றம் சீடர்களைப்
பொருத்தளவில் ஒரு முக்கியமான நிகழ்வாகும்.
மோசேயும் எலியாவும் தோன்றுதல்
இயேசு தோற்றமாற்றம் அடைந்தபொழுது, அவரோடு இருந்த மோசே மற்றும்
எலியா நம்முடைய கவனத்திற்கு உரியவர்களாக இருக்கின்றார்கள்.
மோசே இஸ்ரயேல் மக்களுக்குச் சட்டங்களை கொடுத்தவர்;
மட்டுமல்லாமல், "உங்களிடமிருந்து ஒரு பெரிய இறைவாக்கினர்
தோன்றுவார். அவருக்குச் செவிகொடுங்கள்" (இச 18:15) என்று
சொன்னவர். இறைவாக்கினார் எலியாவோ இஸ்ரயேலில் தோன்றிய பெரிய
இறைவாக்கினர், மெசியாவின் வருகைக்கு முன்பாக வருபவர் என்று
நம்பப்பட்டவர் (மலா 4:5-6). இப்படி சட்டத்திற்கும்
இறைவாக்குக்கும் பெயர்போன மோசேயும் எலியாவும் இயேசுவின்
தோற்றமாற்றத்தின்பொழுது தோன்றுகின்றார்கள்; எருசலேமில்
நிகழவிருப்பதைப் பற்றி பேசுகின்றார்கள். இதில் சிறப்பு
என்னவென்றால் இயேசு திருச்சட்டத்தின் (மோசே) இறைவாக்குகளின்
(எலியா) நிறைவாக இருப்பதுதான் (மத் 5:17). ஆகையால், இயேசுவின்
தோற்ற மாற்றத்தின்பொழுது, அவரோடு இருந்த மோசேயும் எலியாவும்
அவர் சாதாரணமானவர் அல்லர் என்பதற்குச் சான்று பகர்ற்கிறவர்களாக
இருக்கின்றார்கள்.
இயேசுவுக்குச் செவிசாய்க்க இறைவன் அழைப்பு விடுத்தல்
இயேசு இறைமகன்தான் என்பதற்கு இன்னொன்றும் சான்றாக
இருக்கின்றது. அதுதான் தந்தைக் கடவுள் மேகத்தின் வழியாக
இயேசுவைப் பார்த்துச் சொல்லக்கூடிய, "என் அன்பார்ந்த மைந்தர்
இவரே" என்பதாகும். திருவிவிலியத்தில் மேகம் கடவுளின் உடனுறைதலை
எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது (விப 13:21; 19;9, 1அர 8:10).
அந்த அடிப்படையில் இன்றைய நற்செய்தியில் மேகத்தின் வழியாகக்
கேட்கின்ற குரல், கடவுளின் உடனுறைதலை நமக்கு
எடுத்துக்கூறுகின்றது. அவர் மூன்று சீடர்களிடம், "இவருக்குச்
செவி சாயுங்கள்" என்று கூறுகின்றார். தந்தைக் கடவுள்
அவர்களிடம் கூறுகின்ற இவ்வார்த்தைகள், வேறு எந்தத் தவறான
போதனைக்கும் சாத்தானுக்கும் செவிமடுக்காமல், இயேசுவுக்கு
மட்டுமே செவிமடுத்து, அவர் வழியில் நடக்க ஒவ்வொருவருக்கும்
அழைப்புத் தருகின்றன.. நாம் இயேசுவின் குரலுக்குச் செவிமடுத்து
வாழ்கின்றோமா? சிந்தித்துப் பார்ப்போம்.
சிந்தனை
"உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுத்தால், இந்த
ஆசிகளெல்லாம் உன்மேல் வந்து, உன்னில் தங்கும்" (இச 28:2)
என்கிறது இரைவார்த்தை. ஆகையால், நாம் கடவுளின் குரலுக்குச்
செவிகொடுத்து, அதன்படி வாழ்வோம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
பேதுருவின் தலைமைப்பீடம்
இன்று திருஅவையானது பேதுருவின் தலைமைப்பீட விழாவை
நினைவுகூர்ந்து கொண்டாடுகிறது.
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து பேதுருவிடம், உன் பெயர்
பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்.
பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. விண்ணரசின்
திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது
விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது
விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்" என்கிறார் (மத் 16:18,19).
இவ்வாறு சொல்வதன் வழியாக இயேசு பேதுருவைத் திருச்சபையின்
தலைவராக ஏற்படுத்துகிறார். அதனடிப்படையில் பேதுருவின் தலைப்பீட
விழாவை நாம் கொண்டாடுகின்றோம்.
கி.பி. 354 ஆம் ஆண்டிலிருந்து இவ்விழாவானது கொண்டாடப்பட்டு
வருகிறது. இந்த நாளில் நாம் பேதுருவின் தலைமைத்துவத்தை
சிறப்பாக நினைவுகூர்ந்து பார்க்கிறோம். அதோடு குருத்துவத்தின்
மேன்மைகளை உணர்ந்து பெருமைப்படுத்த நாம் அழைக்கப்படுகிறோம்.
ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புப் பிறகு பேதுருதான் திருச்சபையின்
தலைவராக இருந்து, அதனை கட்டிக்காத்தார் என்று சொன்னால்
மிகையாகது. பெந்தேகோஸ்தே நாளில் பேதுருதான் யூதர்களுக்கும்,
ஆட்சியாளர்களுக்கும் முன்பாக எழுந்து நின்று இயேசுவைப் பற்றி
உரையாற்றுகிறார். ஒரு சாதாரண, படிக்காத, பாரமராக இருந்த பேதுரு
இப்படித் துணிவுடன் மக்களுக்கு முன்பாக பேசுகிறார் என்றால் அது
கடவுளின் அருளால் அன்றி, வேறொன்றும் இல்லை.
மேலும் விவிலியத்தை நாம் ஆழமாகப் படிக்கும்போது பேதுரு ஆண்டவர்
இயேசுவைப் போற்று செயல்பட்டார் என்ற உண்மையை நாம்
உணர்த்துகொள்ளலாம். இயேசு கால் ஊனமுற்றவரைக் குணப்படுத்தியது
போன்று, பேதுருவும் கால் ஊனமுற்றவரைக் குணப்படுத்துகிறார் (திப
3:6). இயேசுவின் ஆடையின் விளிம்பைத் தொட்டவர்கள் நலமடைந்தது
போன்று, பேதுரு வீதிகளில் நடக்கின்றபோது, அவரது
நிழல்பட்டவர்கள் குணமடைந்தார்கள் (திப 5:15). இயேசு
இறந்தவர்களை உயிர்பித்ததுபோன்று பேதுருவும் தப்பித்தா என்ற
பெண்ணை உயிர்ப்பிக்கின்றார். இவ்வாறு பேதுரு ஆண்டவர் இயேசுவின்
பதிலாளாக, அவருடைய பிரதிநிதியாகச் செயல்படுகின்றார்.
பேதுருவின் தலைமைப்பீட விழாவைக் கொண்டாடும் இந்த வேளையில்
இன்றைய நாளில் நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் நமக்கு என்ன
செய்தியைத் தருகிறது என்று சிந்தித்துப் பார்ப்போம்.
முதலாவதாக இன்றைய முதல் வாசகத்தில் நாம் படிக்கக்கேட்பது
போன்று கடவுளின் மந்தையைப் பேணிப் பாதுகாக்கவேண்டும். கடவுளின்
மந்தையைப் பேணிக் காப்பது நமது தலையாய கடமையும்கூட. ஆண்டவர்
இயேசு உயிர்த்தபின்பு தன்னுடைய சீடர்களுக்கு மூன்றாம் முறையாக
காட்சியளிக்கும்போது பேதுருவைப் பார்த்துச் சொல்வார், "என்
ஆடுகளைப் பேணி வளர்" என்று. (யோவான் 21) ஆம், பேதுரு ஆண்டவர்
இயேசு, தனக்குக் கொடுத்த அழைப்பின் பேரில் தொடக்கத்
திருச்சபையை சிறப்பாகப் பேணி வளர்த்தார். திருச்சபை பல்வேறு
துன்பங்களையும், இன்னல்களையும் சந்தித்தபோது பேதுரு உடனிருந்து
அதனை பேணி வளர்த்தார்.
இன்றைய வாசகங்கள் தரும் இரண்டாவது பாடம். மந்தைக்கு,
மக்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்பதே ஆகும். பேதுரு
எழுதிய முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்
வாசகத்தில் நாம் படிக்கின்றோம், "உங்களிடம்
ஒப்படைக்கப்பட்டவர்களை அடக்கி ஆளாமல், மந்தைக்கு முன்மாதிரியாக
இருங்கள்" என்று.
ஆகவே, நாம் ஒவ்வொருவரும், குறிப்பாக தலைமைப் பொறுப்பில்
இருக்கும் ஒவ்வொருவரும் பிறருக்கு முன்மாதிரியான வாழ்க்கை
வாழ்ந்து காட்டவேண்டும்.
நம்முடைய இந்தியத் திருநாட்டின் முன்னாள் பிரதம மந்திரியாக
இருந்தவர் லால் பகதூர் சாஸ்திரி. தன்னுடைய நேர்மையான
வாழ்வுக்கும், முன்மாதிரியான வாழ்வுக்கும் எடுத்துக்காட்டாக
விளங்கியவர். ஒருநாள் அவருடைய மகன் அவரிடம் ஒரு கடிதத்தைக்
கொண்டுவந்து, "அப்பா! எனக்கு ஒரு பெரிய நிறுவனத்தில் அதிகச்
சம்பளத்துடன் வேலை கிடைத்திருக்கிறது" என்று சொன்னான்.
அதற்கு லால் பகதூர் சாஸ்திரி அந்தக் கடிதத்தைப்
பார்த்துவிட்டுச் சொன்னார், "கடிதத்தைப் பார்க்கும்போது இந்த
வேலையானது உன்னுடைய திறமையின் அடிப்படையில் கொடுக்கப்படவில்லை,
மாறாக உன்னுடைய தந்தை அதாவது நான் இந்தியப் பிரதமராக
இருக்கிறேன் என்பதற்காகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. உண்மையைச்
சொன்னால் இந்த வேலைக்கு நீ தகுதியற்றவன். ஆதலால் இந்த வேலையை
நீ திருப்பிக் கொடுத்துவிடு, ஏனென்றால் இதைப் பார்க்கும்
மக்கள், இவன் தன்னுடைய மகனுக்கு, தந்து அதிகாரத்தைப்
பயன்படுத்தி பெரிய நிறுவனத்தில் வேலை வாங்கியிருக்கிறான் என்று
சொல்வார்கள். அந்த அவச் சொல் எனக்குத் தேவையில்லை" என்று
சொல்லி தன்னுடைய மகனைத் திருப்பி அனுப்பிவிட்டார்.
ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் ஒருபோதும் நேர்மை தவறி
நடக்கக்கூடாது என்ற உண்மையை இந்த நிகழ்வானது நமக்குச்
சுட்டிக்காட்டுகிறது. பேதுரு தன்னுடைய அழைப்புக்கு முன்பாக
எப்படி இருந்தாலும், அழைப்புப் பின் முன்மாதிரியான ஒரு தலைவராக
இருந்தார். தலைவர் என்பவர் சுயலமற்றவராக இருக்கவேண்டும்
என்பார் பிளாட்டோ என்ற அறிஞர்.
ஆகவே, பேதுருவின் தலைமைப்பீட விழாவைக் கொண்டாடும் நாம்
நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களை நமது முன்மாதிரியான வாழ்வால்
பேணிக் காப்போம். அதன் வழியாக இறையருள் பெறுவோம். Fr. Maria
Antony, Palayamkottai.
|
|