|
|
21
பிப்ரவரி 2020 |
|
|
பொதுக்காலம்
6 ஆம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
உயிர் இல்லாத உடல் போல, செயல் இல்லாத நம்பிக்கையும் செத்ததே.
திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2:
14-24, 26
என் சகோதரர் சகோதரிகளே, தம்மிடம் நம்பிக்கை உண்டு எனச்
சொல்லும் ஒருவர் அதைச் செயல்களிலே காட்டாவிட்டால், அதனால் பயன்
என்ன? அந்த நம்பிக்கை அவரை மீட்க முடியுமா? ஒரு சகோதரன் அல்லது
ஒரு சகோதரி போதிய உடையும் அன்றாட உணவும் இல்லாதிருக்கும்போது,
அவர்கள் உடலுக்குத் தேவையானவை எவற்றையும் கொடாமல் உங்களுள் ஒருவர்
அவர்களைப் பார்த்து, "நலமே சென்று வாருங்கள்; குளிர்காய்ந்து
கொள்ளுங்கள்; பசியாற்றிக்கொள்ளுங்கள்" என்பாரென்றால், அதனால்
பயன் என்ன? அதைப் போலவே, நம்பிக்கையும் செயல் வடிவம்
பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாய் இருக்கும். ஆனால்,
"ஒருவரிடம் நம்பிக்கை இருப்பதுபோல இன்னொருவரிடம் செயல்கள் இருக்கின்றன"
என யாராவது சொல்லலாம். அதற்கு என் பதில்: செயல்கள் இன்றி எவ்வாறு
நம்பிக்கை கொண்டிருக்க முடியும் எனக் காட்டுங்கள். நானோ என் செயல்களின்
அடிப்படையில் நான் கொண்டுள்ள நம்பிக்கையை உங்களுக்குக்
காட்டுகிறேன். கடவுள் ஒருவரே என்பதை நீங்கள் நம்புகிறீர்கள்;
நல்லதுதான். பேய்களுங்கூட அவ்வாறு நம்பி அச்சத்தால் நடுங்குகின்றன.
அறிவிலிகளே, செயலற்ற நம்பிக்கை பயனற்றது என நான் எடுத்துக்காட்ட
வேண்டுமா? நம் மூதாதையாகிய ஆபிரகாமைப் பாருங்கள். தம் மகன் ஈசாக்கைப்
பீடத்தின்மேல் பலிகொடுத்தபோது அவர் செய்த செயல்களினால் அல்லவோ
கடவுளுக்கு ஏற்புடையவரானார்? அவரது நம்பிக்கையும் செயல்களும்
இணைந்து செயல்பட்டன என்றும், செயல்கள் நம்பிக்கையை நிறைவுபெறச்
செய்தன என்றும் இதிலிருந்து புலப்படுகிறது அல்லவா? "ஆபிரகாம்
ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக்
கருதினார்" என்னும் மறைநூல் வாக்கு இவ்வாறு நிறைவேறியது.
மேலும் அவர் கடவுளின் நண்பர் என்றும் பெயர் பெற்றார். எனவே மனிதர்
நம்பிக்கையினால் மட்டுமல்ல, செயல்களினாலும் கடவுளுக்கு ஏற்புடையவராகின்றனர்
எனத் தெரிகிறது. உயிர் இல்லாத உடல் போல, செயல்கள் இல்லாத நம்பிக்கையும்
செத்ததே.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 112: 1-2. 3-4. 5-6 (பல்லவி: 1a)
Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர். அல்லது: அல்லேலூயா.
1ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்; அவர்தம் கட்டளைகளில்
அவர்கள் பெருமகிழ்வு அடைவர்.
2அவர்களது வழிமரபு பூவுலகில் வலிமைமிக்கதாய் இருக்கும்;
நேர்மையுள்ளோரின் தலைமுறை ஆசிபெறும். - பல்லவி
3சொத்தும் செல்வமும் அவர்களது இல்லத்தில் தங்கும்; அவர்களது
நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்.
4இருளில் ஒளியென அவர்கள் நேர்மையுள்ளவரிடையே மிளிர்வர்; அருளும்
இரக்கமும் நீதியும் உள்ளோராய் இருப்பர். - பல்லவி
5மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்; அவர்கள் தம்
அலுவல்களில் நீதியுடன் செயல்படுவர்.
6எந்நாளும் அவர்கள் அசைவுறார்; நேர்மையுள்ளோர் மக்கள் மனத்தில்
என்றும் வாழ்வர். - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி (யோவா 15: 15b)
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: உங்களை நான் நண்பர்கள்
என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும்
உங்களுக்கு அறிவித்தேன். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழப்பவர்,
அதைக் காத்துக்கொள்வர்.
✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 34- 9: 1
அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தையும் சீடரையும் தம்மிடம்
வரவழைத்து, "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து,
தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில்
தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்து
விடுவார்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை
இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார். ஒருவர் உலகம் முழுவதையும்
தமதாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பார் எனில் அவருக்குக்
கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக்
கொடுப்பார்? பாவத்தில் உழலும் இவ்விபசாரத் தலைமுறையினருள், என்னைக்
குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் வெட்கப்படும் ஒவ்வொருவரையும்
பற்றி மானிட மகனும் தம்முடைய தந்தையின் மாட்சியோடு தூய வானதூதருடன்
வரும்போது வெட்கப் படுவார்" என்றார். மேலும் அவர் அவர்களிடம்,
"இங்கே இருப்பவர்களுள் சிலர் இறையாட்சி வல்லமையோடு வந்துள்ளதைக்
காண்பதற்குமுன் சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச்
சொல்கிறேன்" என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
யாக்கோபு 2: 14-24
"நம்பிக்கை செயல்வடிவம் பெறாவிட்டால் தன்னிலேயே உயிரற்றதாகிவிடும்"
நிகழ்வு
பெரியவர் ஒருவர் இருந்தார். அவருக்கு மிகவும் கம்மியான
விலையில் ஒரு கைக்கடிகாரம் வாங்கவேண்டும் என்று ஆசை. அதனால்
அவர் கடைத்தெருவிற்குச் சென்று மிகவும் கம்மியான விலையில் ஒரு
கைக்கடிகாரம் வாங்கி அணிந்துகொண்டார்.
கைக்கடிகாரம் மிகவும் குறைவான விலையில் இருந்ததனாலோ என்னவோ, அது
அடிக்கடி பழுதானது. அதனால் பெரியவர் கடிகாரம் வாங்கிய அதே கடைக்குச்
சென்று அதனைப் பழுது பார்த்தார். இப்படியே பல நாள்கள் நடந்துகொண்டிருந்தது.
ஒருநாள் கைக்காரம் மிகவும் பழுதானது. பெரியவர் அந்தக் கைகாரத்தை
எடுத்துக்கொண்டு, கடைக்காரரிடம் கொடுத்து, பழுது பார்க்கச்
சொன்னபொழுது, அவர் பெரியவரிடம், "ஐயா! நான் இந்தக் கைக்கடிகாரத்தைப்
பழுது பார்க்கின்றேன்; ஆனால், இந்தக் கைக்கடிகாரத்தைப் பழுதுபார்ப்பதற்கு
ஆகும் செலவு, இதன் உண்மையான விலையைவிட இரண்டு மடங்கு ஆகும்...
இதற்கு நீங்கள் புதுக் கைக்கடிகாரமே வாங்கிக்கொள்ளலாம்" என்றார்.
பெரியவர் ஒருவினாடி அதிர்ந்துபோய் நின்றார். "நான் என்னுடைய பழைய
கைக்கடிகாரத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கின்றேன்.
ஆனாலும் விலை மிகவும் குறைவான, மலிவான ஒரு கைக்கடிகாரத்தில் நம்பிக்கை
வைத்து என்ன பயன்...? என்னுடைய நம்பிக்கை ஒரு தரமான கடிகாரத்தின்மீது
இல்லையே! என்னுடைய நம்பிக்கை செயலில் வெளிப்படவில்லையே" என்று
சொல்லி மிகவும் வருத்தப்பட்டார்.
இந்த நிகழ்வில் வருகின்ற பெரியவரிடம் நம்பிக்கை மட்டுமே இருந்தது.
அதற்குண்டான செயல் அவரிடம் இல்லை. இன்றும் ஒருசிலர் இறைவனிடம்
நம்பிக்கை இருப்பதாகச் சொல்லிக்கொண்டு, அந்த நம்பிக்கையைச் செயலில்
வெளிப்படுத்தாமல் இருக்கின்றார்கள். இத்தகைய நம்பிக்கை உயிரற்றது
என்பதுதான் உண்மை. இன்றைய முதல் வாசகம் எது உயிருள்ள நம்பிக்கை
என்ற கேள்விக்கு விடையாக இருக்கின்றது. நாம் அது குறித்து இப்பொழுது
சிந்தித்துப் பார்ப்போம்.
ஆண்டவரே ஆண்டவரே எனச் சொல்வது மட்டும் நம்பிக்கை இல்லை
புனித யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய
முதல் வாசகத்தில் அவர், நம்முடைய நம்பிக்கை எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும்
என்பதைக் குறித்துப் பேசுகின்றார். அப்படிப் பேசுகின்றபொழுது
அவர் மூன்றுவிதமான நம்பிக்கையைக் குறித்துப் பேசுகின்றார். இப்பொழுது
இந்த மூன்றுவிதமான நம்பிக்கையையும் குறித்து சற்று ஆழமாகச்
சிந்தித்துப் பார்ப்போம்.
முதலில் அவர் பேசக்கூடிய நம்பிக்கை வெறும் வழிபாட்டோடு
முடிந்துவிடக்கூடிய நம்பிக்கை. இந்த மாதிரியான நம்பிக்கை
கொண்டிருப்போர் திருவழிபாட்டில் கலந்துகொள்வதற்கும் பக்தி முயற்சிகளில்
கலந்துகொள்வதற்கும் மிகுந்த அக்கறை காட்டுவார்கள்; ஆனால், தங்களோடு
இருக்கின்ற வறியோரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாட்டார்கள்.
இயேசுவின் சொற்களில் சொல்லவேண்டும் என்றால், இவர்கள் ஆண்டவரே
ஆண்டவரே என்று சொல்ல மட்டும்தான் செய்வார்கள்... ஆண்டவரின் என்ன
சொன்னாரோ, அதைத் தங்களுடைய வாழ்வில் காட்ட மாட்டார்கள். இப்படிப்பட்டோரின்
நம்பிக்கை எப்படி உயர்ந்ததாக இருக்கமுடியும்...?
பேய்களும் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டிருக்கின்றன
புனித யாக்கோபு சொல்லக்கூடிய இரண்டாவதுவிதமான நம்பிக்கை,
சாத்தான்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை. சாத்தான்கள் அல்லது
பேய்கள் ஆண்டவர் நல்லவர் என்று நம்புகின்றன. இதற்கான தெளிவினை
நற்செய்தியில் ஒருசில இடங்களில் வாசிக்கின்றோம் (மாற் 3:
11-12). பேய்கள் ஆண்டவர் நல்லவர் என நம்பினாலும், அவற்றின் செயல்கள்
கடவுளுக்கு உகந்தவையாக இல்லை. இதனால் அவை கொண்டிருக்கும் நம்பிக்கையும்
கடவுளுக்கு ஏற்றதாக இருக்காது.
நம்பிக்கை செயலில் வெளிப்படவேண்டும்
புனித யாக்கோபு மூன்றாவதாக ஒரு நம்பிக்கையைக் குறித்துப்
பேசுகின்றார். அதுதான் செயலில் வெளிப்படுகின்ற நம்பிக்கை. இதற்காக
அவர் இருவரை எடுத்துக்காட்டாகச் சொல்கின்றார். ஒருவர் ஆபிரகாம்,
இன்னொருவர் இராகாபு. ஆபிரகாம் ஆண்டவர்மீது நம்பிக்கை
கொண்டிருந்தார். அந்த நம்பிக்கையின் அடையாளமாகத் தன் மகன் ஈசாக்கைப்
பலிகொடுக்க முன்வந்தார். அடுத்ததாக விலைமகளான இராகாபு தூதர்களை
வரவேற்று வேறு வழியாக அனுப்பி வைத்தார். இது அவர் ஆண்டவர்மீது
நம்பிக்கை கொண்டதன் அடையாளமாக இருக்கின்றது. இவ்வாறு ஆபிரகாமும்
இராகாவும் ஆண்டவர்மீது கொண்டிருந்த நம்பிக்கைக்குச் செயல் வடிவம்
கொடுத்து, அவருக்கு உகந்தவர்களானார்கள். நாமும் ஆண்டவர்மீது
கொண்டிருக்கும் நம்பிக்கைக்குச் செயல்வடிவம் கொடுத்தால் அவருக்கு
ஏற்புடையவர்கள் ஆவோம் என்பது உறுதி.
சிந்தனை
"நம்பிக்கையினாலன்றி எவரும் கடவுளுக்கு உகந்தவராக இருக்க
முடியாது (எபி 11:6) என்பார் எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர்.
ஆகையால், நாம் இறைவனிடம் பெயரளவுக்கு நம்பிக்கை கொண்டிருக்காமல்,
செயலில் வெளிப்படுகின்ற நம்பிக்கை கொள்வோம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மாற்கு 8: 34-9:1
"தம் வாழ்வையே இழப்பாரெனில்..."
நிகழ்வு
கல்லறைத் தோட்டத்தில் வேலைபார்த்து வந்த ஒருவர், தன்னுடைய
வேலையை முடித்துவிட்டு வெளியே வந்தார். அப்பொழுது நான்கு சக்கர
வண்டியில் வந்த ஒருவர், வண்டியிலிருந்து கீழே இறங்கி, " ஐயா!
என்னுடைய வண்டி பஞ்சராகிவிட்டது. பக்கத்தில் ஏதாவது மெக்கானிக்
ஷாப் இருக்கின்றதா...?" என்றார். "இன்னும் இரண்டு மைல் தூரம்
நடந்துசென்றால் ஒரு மெக்கானிக் ஷாப் இருக்கின்றது" என்றார்
பெரியவர்.
"என்ன! இன்னும் இரண்டு மைல் தூரம் நடந்து செல்லவேண்டுமா...?
என்னுடைய வாழ்வில் நூறு அடிகூட .எடுத்து வைத்ததில்லை...
எல்லாவற்றிற்கும் கார்தான். என்னுடைய வீட்டில் ஆறு கார்கள்
இருக்கின்றன" என்றார் வண்டியில் வந்தவர். "வீட்டில் ஆறு
கார்கள் இருக்கின்றனவா...? நீங்கள் என்ன அவ்வளவு பெரிய
பணக்காரரா...?" என்று ஆச்சரியத்தோடு கேட்டார் பெரியவர்.
"பின்ன! என்னுடைய வீட்டைச் சுற்றிப் பார்க்கவே ஒரு மணிநேரம்
ஆகும். இது மாதிரி ஆறு வீடுகள் இருக்கின்றன. ஆயிரத்துக்கும்
மேற்பட்ட பணியாளர்கள் என்னிடத்தில் வேலை பார்க்கின்றார்கள்.
மூன்று பெட்ரோல் நிலையங்கள், பத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள்
ஓடுகின்றன. இப்பொழுது புரிகின்றதா நான் எவ்வளவு ஆள் என்று"
என்று சொல்லி முடித்தார் வண்டியில் வந்தவர்.
பெரியவர் அவரை வைத்த கண் வாங்காமல் பார்த்தார். பிறகு அவர்
அந்த செல்வந்தரிடம், "ஐயா! உங்களிடம் நான் ஒன்றைக் கேட்டால்,
நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள்தானே...?" என்றார்.
"என்ன என்று கேளும். தவறாக எடுக்கமாட்டேன்" என்று செல்வந்தவர்
சொன்னதும், பெரியவர் அவரிடம், "ஐயா! ஒருவேளை நீங்கள் மட்டும்
எனக்கு முன்பாக இறந்தீர்கள் எனில், உங்களுடைய கல்லறையைத்
தோண்டுவதற்கான பாக்கியத்தை எனக்குத் தருவீர்களா...?" என்றார்.
"கல்லறைக்குழியைத் தோண்டுவதில் என்ன பாக்கியம் இருக்கின்றது"
என்று செல்வந்தர் சொன்னதும், பெரியவர், "அது வேறொன்றுமில்லை
ஐயா. உங்களுடைய அருமை பெருமை அறிந்தவன் நான். அதனால் உங்களுடைய
அந்தஸ்திற்கு ஏற்றாற்போல் குழி தோண்டுவேன்" என்றார்.
செல்வந்தர் ஒரு வினாடி யோசிக்கத் தொடங்கினார். பின்னர் அவர்
பெரியவரிடம், "சவக்குழியில் என்ன அந்தஸ்து
வேண்டிக்கிடக்கின்றது!" என்றார்.
"ஐயா! இப்பொழுது சொன்னீர்களே! இதுதான் உண்மை. ஒருவர் வசதி
வாய்ந்தவர் என்பதற்காக அவருக்குப் பெரிய குழியோ, ஒருவர் வசதி
குறைந்தவர் என்பதற்காக அவருக்குச் சிறிய குழியோ தோண்டுவதில்லை.
எல்லாருக்கும் ஒரே மாதிரிக் குழிதான். ஆறடி நீளம், இரண்டடி
அகலம்தான்" என்றார் பெரியவர். இதைக் கேட்ட செல்வந்தவர் எதுவும்
பேச முடியாதவராய் நின்றார்.
ஆமாம், ஒரு மனிதர் பணம், பொருள், புகழ் என அத்தனையும்
சம்பாதித்துவிட்டு தன்னுடைய வாழ்வை இழப்பாரெனில், அதனால்
அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? ஒரு பயனும் இல்லை என்பதுதான்
மறுக்க முடியாத உண்மை. இன்றைய வாசகம் உலக வாழ்க்கையின்
நிலையாமையையும் இயேசுவின் வழியில் நடக்கின்ற ஒருவர் என்ன
செய்யவேண்டும் என்பதையும் எடுத்துக்கூறுகின்றது. இந்த
இரண்டையும் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
உலக வாழ்க்கையின் நிலையாமை
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு தன்னைப் பின்பற்றி வருகின்றவர்கள்
எப்படி இருக்கவேண்டும் என்பதைக் குறித்துப் பேசுகின்றார். அது
குறித்துச் சிந்தித்துப் பார்ப்பது முன்னால், இந்த உலக
வாழ்க்கையின் அல்லது உலக இன்பத்தின் நிலையாமைக் குறித்துத்
தெரிந்துகொள்வோம். இன்றைக்கு எத்தனையோ மனிதர்கள் பணத்தையும்
பொருளையும் சேர்ப்பதற்கும், பெயரையும் புகழையும் அடைவதற்கும்
எவ்வளவோ போராடி உழைக்கின்றார்கள். இவர்கள் எல்லாவற்றையும்
சேர்த்தபின்பு அல்லது அடைந்தபின்பு வாழ்நாளே
முடிந்துபோய்விடுகின்றது. இப்படி எல்லாவற்றையும் சேர்த்தபின்பு
வாழ்வைத் தொலைவிட்டால், அதனால் பயன் கிடைக்கும் என்ற
கேள்வியைத்தான் இயேசு கேட்கின்றார். இது மிகவும் சிந்தித்துப்
பார்க்கவேண்டிய ஒரு கேள்வியாக இருக்கின்றது.
இயேசுவின் சீடராக இருக்க ஒருவர் என்ன செய்யவேண்டும்?
உலக வாழ்க்கை அல்லது உலக இன்பத்தின் நிலையாமை அறிந்துகொண்ட
பின்னணியில், இயேசுவின் சீடராக இருக்க ஒருவர் என்ன
செய்யவேண்டும் எனத் தெரிந்துகொள்வது நல்லது. இயேசு
கூறுகின்றார், "என்னைப் பின்பற்ற எவரும் தன்னலம் துறந்து, தம்
சிலுவையைத் தூக்கிக்கொண்டு, என்னைப் பின்பற்றவேண்டும்." ஆம்,
இயேசுவின் சீடராக இருக்கின்ற ஒருவர் தன்னலத்தைத் துறத்தல், தம்
சிலுவையைத் தூக்கிச் செல்தல், இயேசுவைப் பின்தொடர்தல் என்ற
மூன்று செயல்களைச் செய்யவேண்டும். இவற்றை ஒருவர் தன்னுடைய
வாழ்வில் கடைப்பிடித்தால் அவர் இயேசுவின் சீடராக இருப்பார்
என்பது உறுதி. நாம் இயேசுவின் உண்மையான சீடர்களாக
இருக்கின்றோமா? அல்லது உலகப் போக்கின் படி வாழ்கின்றோமா?
சிந்திப்போம்.
சிந்தனை
"ஆகவே, அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு
ஏற்புடையவற்றையும் நாடுகள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச்
சேர்த்துக் கொடுக்கப்ப்டும் (மத் 6: 33) என்பார் இயேசு.
ஆகையால், நாம் உலகப் போக்கிலான வாழ்க்கை வாழ்வதை விடுத்து,
இயேசுவின் உண்மையான சீடர்களாக வாழ முற்படுவோம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|