|
|
20
பிப்ரவரி 2020 |
|
|
பொதுக்காலம்
6 ஆம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
++ஏழைகளைக் கடவுள் தேர்ந்துகொள்ளவில்லையா? நீங்களோ ஏழைகளை அவமதிக்கிறீர்கள்.
திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2:
1-9
என் சகோதரர் சகோதரிகளே, மாட்சிமிக்க நம் ஆண்டவர் இயேசு
கிறிஸ்துவினிடம் நம்பிக்கை கொண்டுள்ள நீங்கள் ஆள் பார்த்துச்
செயல்படாதீர்கள். பொன் மோதிரமும் பளபளப்பான ஆடையும் அணிந்த ஒருவரும்
அழுக்குக் கந்தை அணிந்த ஏழை ஒருவரும் உங்கள் தொழுகைக்கூடத்தினுள்
வருகிறார்கள் என வைத்துக்கொள்வோம். அப்பொழுது நீங்கள் பளபளப்பான
ஆடை அணிந்தவர்மீது தனிக்கவனம் செலுத்தி அவரைப் பார்த்து, "தயவுசெய்து
இங்கே அமருங்கள்" என்று சொல்கிறீர்கள். ஏழையிடமோ, "அங்கே
போய் நில்" என்றோ அல்லது "என் கால்பக்கம் தரையில் உட்கார்"
என்றோ சொல்கிறீர்கள். இவ்வாறு உங்களுக்குள்ளே வேறுபாடு காட்டி,
தீய எண்ணத்தோடு மதிப்பிடுகிறீர்கள் அல்லவா? என் அன்பார்ந்த சகோதரர்
சகோதரிகளே, நான் சொல்வதைக் கேளுங்கள்: உலகின் பார்வையில் ஏழைகளாய்
இருப்பவர்களை, நம்பிக்கையில் செல்வர்களாகவும் தம்மீது அன்பு
செலுத்துபவருக்கு வாக்களிக்கப்பட்ட அரசை உரிமைப்பேறாகப் பெறுபவர்களாகவும்
கடவுள் தேர்ந்துகொள்ளவில்லையா? நீங்களோ ஏழைகளை அவமதிக்கிறீர்கள்.
உங்களைக் கொடுமைப்படுத்தி நீதிமன்றத்துக்கு இழுத்துச் செல்வோர்
யார்? செல்வர் அல்லவா? கடவுள் உங்களுக்குக் கொடுத்துள்ள நற்பெயரைப்
பழிப்பவர்களும் அவர்களல்லவா? "உன்மீது நீ அன்புகூர்வது போல்
உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக!" என்னும் இறையாட்சியின்
சட்டம் மறைநூலில் உள்ளது. இதை நீங்கள் கடைப்பிடித்தால் நல்லது.
மாறாக, நீங்கள் ஆள் பார்த்துச் செயல்பட்டால் நீங்கள் செய்வது
பாவம்; நீங்கள் குற்றவாளிகள் என அச்சட்டமே உங்களுக்குத் தீர்ப்பளிக்கும்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-திபா 34: 2-3. 4-5. 6-7 (பல்லவி: 6a)
Mp3
=================================================================================
பதிலுரைப் பாடல்
திபா 34: 2-3. 4-5. 6-7 (பல்லவி: 6a)
பல்லவி: இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச்
செவிசாய்த்தார்.
1ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும்
என் நாவில் ஒலிக்கும்.
2நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக்
கேட்டு அக்களிப்பர். - பல்லவி
3என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க
மேன்மைப்படுத்துவோம்.
4துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்;
எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். - பல்லவி
5அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள்
முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.
6இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்;
அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். -
பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி (யோவா 6: 63c, 68c)
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே! நீர் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும்
ஆவியைக் கொடுக்கின்றன; நிலைவாழ்வும் அளிக்கின்றன. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நற்செய்தி வாசகம்
++"மெசியா'வாகிய மானிட மகன் பாடுகள் பட வேண்டும்.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 27-33
அக்காலத்தில் இயேசு தம் சீடருடன் பிலிப்புச் செசரியாவைச்
சார்ந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றார். வழியில் அவர் தம்
சீடரை நோக்கி, "நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?" என்று
கேட்டார். அதற்கு அவர்கள் அவரிடம், "சிலர் திருமுழுக்கு
யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் இறைவாக்கினருள்
ஒருவர் எனவும் சொல்கின்றனர்" என்றார்கள். "ஆனால் நீங்கள்
நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" என்று அவர் அவர்களைக் கேட்க,
பேதுரு மறுமொழியாக, "நீர் மெசியா" என்று உரைத்தார். தம்மைப்பற்றி
எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க்
கூறினார். "மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக்
குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக்
கொலை செய்யப்படவும் மூன்று நாள்களுக்குப்பின் உயிர்த்தெழவும்
வேண்டும்" என்று இயேசு அவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கினார்.
இதையெல்லாம் அவர் வெளிப்படையாகவே சொன்னார். பேதுரு அவரைத் தனியே
அழைத்துக் கடிந்துகொண்டார். ஆனால் இயேசு தம் சீடர்கள் பக்கம்
திரும்பிப் பார்த்துப் பேதுருவிடம், "என் கண் முன் நில்லாதே,
சாத்தானே. ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு
ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்" என்று கடிந்துகொண்டார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
யாக்கோபு 2: 1-9
"நீங்கள் ஆள்பார்த்துச் செயல்படாதீர்கள்"
நிகழ்வு
அது ஒரு பிரசித்தி பெற்ற வழிபாட்டுத்தலம். அதில்
சொற்பொழிவாற்றுவதற்கு சமய சொற்பொழிவாளர் ஒருவர் அழைப்புப்
பெற்றிருந்தார்.
குறிப்பிட்ட நாளில் அவரை வரவேற்பதற்காக மக்கள் எல்லாரும்
வழிபாட்டுத் தலத்திற்கு முன்பாகக் கூடியிருந்தார்கள். சமய
சொற்பொழிவாளர் வருவதற்குச் சற்றுக் கால தாமதமானது. இதற்கிடையில்
வழிபாட்டுத்தலத்தின் நுழைவாயிலுக்குப் பக்கத்தில் ஒருவர் மிகவும்
அழுகான உடையணிந்து கீழே படுத்துக்கிடந்தார். அவரை அந்நிலையில்
பார்த்த மக்கள், "இன்றைக்கு மிகப் பிரபல சமய சொற்பொழிவாளர் ஒருவர்
இங்கு வருகை தர இருக்கின்றார். அதனால் நீ இங்கிருந்து
போய்விடு" என்று விரட்டினார்கள். அவரும் அங்கிருந்து எழுந்து
சென்று சற்றுத்தள்ளிப் போய்ப் படுத்துக்கொண்டார்.
இதற்குப் பின்னும் மக்கள் சமயச் சொற்பொழிவாளருக்காகக்
காத்திருந்தார்கள்; ஆனால் அவர் வர இன்னும் காலம் தாழ்த்தியதால்,
எல்லாரும் வழிபாட்டுத்தளத்திற்குள் சென்று அமர்ந்துகொண்டார்கள்.
அப்பொழுது சமய சொற்பொழிவாளர் மேடையை நோக்கி வந்தார். அவரைப்
பார்த்த மக்கள் அப்படியே அதிர்ந்துபோய் நின்றார்கள். "இவர்
நுழைவாயிலருகே அழுக்குத் துணியோடு படுத்துக் கிடந்தவராயிற்றே...!
இவர் சமய சொற்பொழிவாளர் என்று தெரிந்திருந்தால் இவரிடம் மிகவும்
கடுமையாக நடந்திருக்கமாட்டோமே...!" என்று ஒருவரோடு ஒருவர் பேசத்
தொடங்கினார்கள்.
அப்பொழுது சமய சொற்பொழிவாளர் அவர்களைப் பார்த்து, "யாவரையும்
அவருடைய வெளித்தோற்றத்தைக் கொண்டு எடைபோடாதீர்கள். இதுதான்
நான் உங்களுக்குப் போதிக்க வந்த செய்தி" என்று தன்னுடைய உரையை
முடித்துக்கொண்டார். மக்கள் இதைக்கேட்டு வெட்கித் தலைகுனிந்து
நின்றார்கள்.
இந்த நிகழ்வில் வருகின்ற மக்களைப் போன்றுதான் நாமும் பலநேரங்களில்
ஒருவருடைய வெளியடையாளத்தைப் பார்த்து அவர் இன்னார், இப்படிப்பட்டவர்
என்று மதிப்பிடுகின்றோம். இது மிகப்பெரிய தவறு என்பதை மேலே உள்ள
நிகழ்வும் இன்றைய இறைவார்த்தையும் நமக்கு எடுத்துக்கூறுகின்றது.
இது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
உலகின் பார்வையில் ஏழைகளாக இருப்போர் நம்பிக்கையில் செல்வராக
இருக்கலாம்
புனித யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய
முதல் வாசகத்தில் அவர், யூதர்கள் தங்களுடைய தொழுகைக்கூடங்களில்
பொன், மோதிரம் மற்றும் பளபளப்பான ஆடையோடு வருவோருக்கு ஒரு மதிப்பும்,
வறிய நிலையில் வருவோருக்கு ஒரு மதிப்பும் கொடுத்து வந்ததைக் கடுமையாகக்
கண்டிக்கின்றார். இது குறித்து அவர் கூறும்பொழுது, உலகின்
பார்வையில் ஏழைகளாக இருப்போர், நம்பிக்கையில் செல்வராக இருக்கலாம்
என்று கூறுகின்றார். இது குறித்து நாம் சிறிது சிந்தித்துப்
பார்ப்பது நல்லது.
இயேசு ஆள்பார்த்துச் செயல்படாதவராக (மத் 22: 16) இருந்தார்.
அதனால் அவர் வரிதண்டுபவரான மத்தேயுவைத் தன்னுடைய சீடராகத்
தேர்ந்தேடுந்தார்; படிப்பறிவில்லாத பேதுரு, அந்திரேயா, யோவான்,
யாக்கோபு போன்றோரைத் தன் சீடர்களாகத் தேர்ந்தெடுத்தார். இயேசு
இவ்வாறு எல்லாத் தரப்பினரையும் தன் சீடராகத் தேர்ந்தெடுக்கக்
காரணம், அவர்கள் உலகின் பார்வையில் ஏழைகளாக இருந்தாலும், நம்பிக்கையில்
செல்வர்களாக இருந்தார்கள். எனவே இயேசு எப்படி ஆள்பார்த்துச் செயல்படாதவராக
இருந்தாரோ அதுபோல், ஒவ்வொருவரும் இருக்கவேண்டும் என்று
கூறுகின்றார் புனித யாக்கோபு
ஆள்பார்த்துச் செயல்படுவது பாவம்
ஆள்பார்த்துச் செயல்படுவது குறித்துப் பேசும் புனித யாக்கோபு,
அது பெரிய பாவம் என்று குறிப்பிடுகின்றார். ஏன் ஆள் பார்த்துச்
செயல்படுவது பாவம் அல்லது பெரிய குற்றம் எனத் தெரிந்துகொள்வது
நல்லது.
கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் புனித பவுல்,
"உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி
தங்கும் கோயில் என்று உங்களுக்குத் தெரியாத?" (1 கொரி 6: 19)
என்பார். ஒவ்வொருவரும் தூய ஆவி தங்கும் கோயில் என்றால், அவரைத்
தரக்குறைவாக நடத்தும்பொழுது, நாம் தூய ஆவியாரைத் தரக்குறைவாக
நடத்துகின்றோம் என்பதுதான் உண்மையாக இருக்கின்றது. எனவே, நாம்
ஆள்பார்த்துச் செயல்படாமல், கிறிஸ்து நம் ஒவ்வொருவரையும் அப்படியே
ஏற்றுக்கொண்டு அன்புசெய்தது போல், நாம் ஒவ்வொருவரும் ஒருவரை
அவர் இருக்கக்கூடிய நிலையிலேயே ஏற்றுக்கொண்டு அன்புசெய்யக் கற்றுக்கொள்வோம்.
சிந்தனை
"கடவுள் ஆள்பார்த்துச் செயல்படுவதில்லை என்பதை நீங்கள் அறிந்து
கொள்ளுங்கள்" (எபே 6:9) என்பார் பவுல். ஆகவே, கடவுள் ஆள்பார்த்துச்
செயல்படாதது போன்று நாமும் ஆள்பார்த்துச் செயல்படாமல், ஒருவரை
அவர் இருக்கின்ற நிலையில் அப்படியே ஏற்றுக்கொள்வோம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மாற்கு 8: 27-33
"மானிடமகன் பலவாறு துன்பப்படவும்..."
நிகழ்வு
ஒரு கிராமத்தில் கொல்லன் ஒருவர் இருந்தார். அவருக்குக் கடவுள்மீது
ஆழமான நம்பிக்கை உண்டு; ஆனால், அவர் தன்னுடைய வாழ்க்கையில்
துன்பங்களுக்கு மேல் துன்பங்களைச் சந்தித்து வந்தார். இந்நிலையில்
இவரைச் சந்திக்க நெருங்கிய நண்பர் ஒருவர் வந்தார். அவருக்குக்
கடவுள்மீது நம்பிக்கையே கிடையாது. அவர் இவரிடம், "நண்பா! உனக்குத்தான்
கடவுள்மீது ஆழமான நம்பிக்கை இருக்கின்றது அல்லவா? நீ ஏன் உனக்கு
வருகின்ற தொடர் துன்பங்களை நீ நம்புகின்ற கடவுளிடம் "அகற்றும்"
என்று சொல்லக்கூடாது" என்றார்.
"நண்பா! ஒன்று சொல்கின்றேன் கேள். பட்டறையில் வேலை பார்க்கும்
நான், ஒரு கருவியை உருவாக்குபொழுது அதற்கான இரும்பைத் தீயில்
போட்டு நன்றாகக் காயவைப்பேன். பின்னர் அதனை வெளியே எடுத்து,
பெரிய கம்பியால் ஓங்கி ஓங்கி அடிப்பேன். ஒருவேளை நான் அதனைக்
கம்பியால் அடிக்கின்றபொழுது, அது என்னுடைய விருப்பத்திற்கு ஏற்றாற்போல்
வளைந்துகொடுத்தது என்றால், அதிலிருந்து ஒரு நல்ல கருவியை உருவாக்குவேன்.
ஒருவேளை நான் அதைக் கம்பியால் அடிக்கின்றபொழுது, அது என்னுடைய
விருப்பத்திற்கு ஏற்றாற்போல் இல்லாமல், வளைந்துகொடுக்க மறுத்தாலோ
அல்லது உடைந்து போனாலோ அதனை கழித்துவிடுவேன். அதன்பிறகு அது
காய்லான் கடைக்குத்தான் செல்லும். இப்பொழுது நான் இறைவனிடம்
கேட்பதெல்லாம் "இறைவா! என்னுடைய வாழ்க்கையில் மேலும் மேலும்
துன்பங்களை அனுப்பும். அப்பொழுதுதான் நான் உறுதியடைவேன்; என்
வாழ்க்கை வளமையடையும். ஒருவேளை நீர் என்னுடைய வாழ்க்கையில்
துன்பங்களை அனுமதியாமல் விட்டுவிட்டால் நான் தளர்ந்துவிடுவேன்;
ஒன்றும் உதவாமல் போய்விடுவேன்" என்று சொல்லிவிட்டு அமைதியானார்
கொல்லன்.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த கொல்லனின் நண்பர், மனித
வாழ்க்கையில் துன்பங்கள் புறக்கணிக்கப்பட வேண்டியவை அல்ல, அவை
மகிழ்வோடு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவை என்ற உண்மையை உணர்ந்தார்.
இன்றைய நற்செய்தியில் இயேசு, "மானிடமகன் பலவாறு துன்பப்படவும்..."
என்று தன்னுடைய பாடுகளை முன்னறிவிக்கின்றார். இது குறித்து இப்பொழுது
நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
தன் பாடுகளை முன்னறிவித்த இயேசு
இன்றைய நற்செய்தி வாசகம் இரண்டு பகுதிகளை உள்ளடக்கி இருக்கின்றது.
முதற்பகுதி இயேசு தன்னை யாரென்று கேட்பதாகவும், இரண்டாவது பகுதி
தன்னுடைய பாடுகளை முன்னறிவிப்பதாகவும் இருக்கின்றது.
இயேசு தன்னுடைய சீடர்களிடம், மக்கள் என்னை யாரென்று
சொல்கின்றார்கள் என்று கேட்டுவிட்டு, நீங்கள் என்னை யாரென்று
சொல்கிறீர்கள் என்று கேட்கின்றபொழுது, சீமோன் பேதுரு, "நீர்
மெசியா" என்று சொல்கின்றார். உடனே இயேசு சீடர்களிடம் தம்மைக்
குறித்து யாரிடமும் சொல்லவேண்டாம் என்று சொல்லிவிட்டு, தம்
பாடுகளை முன்னறிவிக்கத் தொடங்கினார். இயேசு ஏன் தம்மைக்
குறித்து யாரிடமும் சொல்லவேண்டும் என்று சொன்னார்...? தன் பாடுகளைக்
குறித்து ஏன் அறிவிக்கத் தொடங்கினார்...? என்ற இரண்டு கேள்விகளுக்கான
விடையைத் தெரிந்துகொள்வது நல்லது.
யூதர்கள் பன்னெடுங்காலமாக தங்களுக்கென மெசியா வருவார்... அவர்
எல்லா நாடுகளையும் வெற்றிகொண்டுவிட்டு தங்களுக்கென ஓர் ஆட்சியை
நிறுவுவார் என்று நினைத்தார்கள். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும்
என்றால், யூதர்கள் மெசியாவை ஓர் அரசியல் மெசியாவாகவே
பார்த்தார்கள். அவர்கள் மெசியா என்பவர் "துன்புறும் ஊழியன்" (எசா
53) என்பதை மறந்துபோனார்கள். இதனால்தான் இயேசு சீடர்களிடம் தம்மைக்
குறித்து யாரிடமும் சொல்லவேண்டாம் என்று சொல்லவிட்டுத் தன்னுடைய
பாடுகளை முன்னறிவிக்கின்றார்.
பாடுகளே வேண்டாம் என்று சொன்ன பேதுரு
இயேசு தன்னுடைய பாடுகளை முன்னறித்தபொழுது, பேதுரு அவரைத் தனியே
அழைத்துக்கொண்டு போய்க் கடிந்துகொள்கின்றார். காரணம், மெசியா
என்பவர் ஆட்சி செலுத்துபவராக, அதிகாரம் செலுத்துபவராக இருப்பார்
என்ற புரிதல் பேதுருவுக்கு இருந்தது. இது இறைவனின் விருப்பத்திற்கு
எதிராக இருந்தது. எனவேதான் இயேசு அவரைப் பார்த்து, என் கண்முன்
நில்லாதே சாத்தானே என்று கூறுகின்றார்.
சில சமயங்களில் சாத்தான் நமக்குள் நுழைந்து, துன்பமே
வேண்டாம்.. மிகவும் இலகுவான வழியைத் தேர்ந்தெடு என்று
சொல்லும். உடனே நாம் சாத்தானின் குரலைக் கேட்டு, அதன்படி நடந்தோமெனில்,
நாம் ஒருபோதும் இறைவனுக்கு ஏற்புடையவர்களாக இருக்கமுடியாது.
எனவே, நாம் இறைவனுக்கு ஏற்புடையவர்களாக இருக்க இயேசுவைப்
போன்று பாடுகளையும் துன்பங்களையும் ஏற்றுக்கொள்வோம். அப்படி
நாம் செய்தால், நாம் இறைவனின் அன்பு மகனாக, மகளாக மாறுவோம் என்பது
உறுதி.
சிந்தனை
"என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர் பொருட்டு நான்
பூரிப்படைகிறேன்" (மத் 3:17) என்று தந்தைக் கடவுள் இயேசுவைப்
பார்த்துக் கூறுவார். இறைவன் நம்மையும் பார்த்து அவ்வாறு
சொல்ல, நாம் இயேசுவைப் போன்று துன்பங்களையும் பாடுகளையும்
ஏற்றுக்கொள்ளத் தயாராவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|