|
|
19
பிப்ரவரி 2020 |
|
|
பொதுக்காலம்
6 ஆம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
++இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இராமல், அதன்படி நடக்கிறவர்களாயும்
இருங்கள்.
திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்
1: 19-27 என் அன்பார்ந்த
சகோதரர் சகோதரிகளே, இதைத் தெரிந்து
கொள்ளுங்கள்: ஒவ்வொருவரும் கேட்பதில் வேகமும், பேசுவதிலும் சினங்கொள்வதிலும்
தாமதமும் காட்ட வேண்டும். ஏனெனில் மனிதரின் சினம் கடவுளுக்கு
ஏற்புடைய செயல்கள் நிறைவேறத் தடையாயிருக்கிறது. எனவே எல்லா வகையான
அழுக்கையும், உங்களிடம் மிகுந்துள்ள தீமையையும் அகற்றி, உங்கள்
உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப் பணிவோடு ஏற்றுக்கொள்ளுங்கள்.
அதுவே உங்களை மீட்க வல்லது. இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும்
இருந்து உங்களை ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். அதன்படி நடக்கிறவர்களாயும்
இருங்கள். ஏனென்றால் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடவாதோர், கண்ணாடியிலே
தம் முகத்தைப் பார்த்துவிட்டுச் சென்று உடனே தாம் எவ்வாறு இருந்தார்
என்பதை மறந்துவிடும் ஒரு மனிதருக்கு ஒப்பாவர். ஆனால் நிறைவான
விடுதலையளிக்கக்கூடிய சட்டத்தைக் கூர்ந்து கவனித்து அதைத் தொடர்ந்து
கற்போர் தாம் கேட்பதை மறந்து விடுவதில்லை; அவர்கள் அதற்கேற்ற
செயல்களைச் செய்வார்கள்; தம் செயல்களால் பேறுபெற்றவர் ஆவார்கள்.
தாம் சமயப் பற்றுடையோர் என எண்ணிக் கொண்டிருப்போர் தம் நாவை
அடக்காமல் இருப்பாரென்றால் தம்மையே ஏமாற்றிக்கொள்வர். இத்தகையோருடைய
சமயப் பற்று பயனற்றது. தந்தையாம் கடவுளின் பார்வையில் தூய்மையானதும்
மாசற்றதுமான சமய வாழ்வு எதுவெனில், துன்புறும் அனாதைகளையும்
கைம்பெண்களையும் கவனித்தலும் உலகத்தால் கறைபடாதபடி தம்மைக்
காத்துக்கொள்வதும் ஆகும்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 15: 2-3a. 3bc-4ab. 5 (பல்லவி: 1b)Mp3
=================================================================================
பதிலுரைப் பாடல்
திபா 15: 2-3a. 3bc-4ab. 5 (பல்லவி: 1b)
பல்லவி: ஆண்டவரே, உம் திருமலையில் குடியிருப்பவர் யார்?
2மாசற்றவராய் நடப்போரே! - இன்னோர் நேரியவற்றைச் செய்வர்; உளமார
உண்மை பேசுவர்;
3a
தம் நாவினால் புறங்கூறார். - பல்லவி
3bc
தம் தோழருக்குத் தீங்கிழையார்; தம் அடுத்தவரைப் பழித்துரையார்.
4abநெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்; ஆண்டவருக்கு அஞ்சுவோரை
உயர்வாக மதிப்பர். - பல்லவி
4cd
தமக்குத் துன்பம் வந்தாலும், கொடுத்த வாக்குறுதியை மீறார்.
5
தம் பணத்தை வட்டிக்குக் கொடார்; மாசற்றவருக்கு எதிராகக்
கையூட்டுப் பெறார்; - இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர்.
- பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி (எபே 1: 17-19 காண்க)
அல்லேலூயா, அல்லேலூயா! இறைவன் நம்மை அழைத்ததால் எத்தகைய எதிர்நோக்கு
ஏற்பட்டுள்ளது என்று நாம் அறிந்துகொள்ளும்படி, நம் ஆண்டவராகிய
இயேசு கிறிஸ்துவின் தந்தை நம் அகக் கண்களுக்கு ஒளி தருவாராக!
அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நற்செய்தி வாசகம்
++பார்வை பெற்றவர் அனைத்தையும் தெளிவாகக் கண்டார்.
மாற்கு எழுதிய
நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 22-26
அக்காலத்தில் இயேசுவும்
சீடர்களும் பெத்சாய்தா வந்தடைந்தார்கள். அப்பொழுது சிலர்
பார்வையற்ற ஒருவரை இயேசுவிடம் கொண்டுவந்து, அவரைத் தொடும்படி
வேண்டினர். அவர் பார்வையற்றவரது கையைப் பிடித்து ஊருக்கு
வெளியே அழைத்துச் சென்றார். அவருடைய விழிகளில் உமிழ்ந்து கைகளை
அவர்மேல் வைத்து, "ஏதாவது தெரிகிறதா?" என்று கேட்டார். அவர்
நிமிர்ந்து பார்த்து, "மனிதரைப் பார்க்கிறேன். அவர்கள் மரங்களைப்
போலத் தோன்றுகிறார்கள். ஆனால் நடக்கிறார்கள்" என்று சொன்னார்.
இயேசு மீண்டும் தம் கைகளை அவருடைய கண்களின்மீது வைத்தார். அப்போது
அவர் நலமடைந்து முழுப்பார்வை பெற்று அனைத்தையும் தெளிவாகக் கண்டார்.
இயேசு அவரிடம், "ஊரில் நுழைய வேண்டாம்" என்று கூறி அவரை அவருடைய
வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
யாக்கோபு 1: 19-27
"மனிதரின் சினம் கடவுளுக்கு ஏற்புடைய செயல்கள்
நிறைவேறத் தடையாயிருக்கின்றது"
நிகழ்வு
இளைஞன் ஒருவன் ஒருநாள் குருவானவர் ஒருவரிடம் ஓடிவந்தான்.
"சுவாமி! என்னுடைய நெருங்கிய நண்பனை கோபத்தில் கடுமையாகத்
திட்டிவிட்டேன். இப்பொழுது நான் செய்தது மிகப்பெரிய தவறு என்பதை
உணர்கின்றேன். உடனடியாக நான் அவனிடம் சென்று மன்னிப்புக்
கேட்டு, அவனிடம் சமரசமாகிவிடவா?" என்றான்.
குருவானவர் ஒருநிமிடம் யோசித்தார். பின்னர் அவர் அவனிடம்,
"தம்பி! நீ உன்னுடைய நண்பனைக் கடுமையாகத்
திட்டியிருக்கின்றாய். இப்பொழுது நீ அவனிடம் சென்று மன்னிப்புக்
கேட்டாய் என்றால், பதிலுக்கு அவன் உன்னைத் திட்டுவான். பிரச்சனை
பெரிதாகும். அதனால் கொஞ்ச நேரம் கழித்து அவனிடம் சென்று மன்னிப்புக்
கேள். அப்பொழுதுதான் அவனும் பொறுமையாக இருப்பான். நீ உன்னுடைய
தவற்றை அவனிடம் எடுத்துச் சொல்லி மன்னிப்புக் கேட்டாய் என்றால்,
அவனும் உன்னை மன்னித்து ஏற்றுக்கொள்வான்" என்றார்.
குருவானவர் சொன்னது போன்று, அந்த இளைஞன் சிறிதுநேரம் கழித்து,
தன்னுடைய நண்பனிடம் சென்று மன்னிப்புக் கேட்டான். நண்பனும் அவனை
மனதார மன்னித்து ஏற்றுக்கொண்டான்.
ஒருவரிடம் சினம் கொள்வது தவறுதான். ஆனாலும் சினம்கொண்ட பிறகு
எப்படி நாம் சமரசமாவது என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த
நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. இன்றைய முதல் வாசகம் சினத்தால்
விளையும் தீமைகளைக் குறித்து எடுத்துச் சொல்கின்றது. அது
குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
சினம்கொள்வதில் தாமதம் காட்டவேண்டும்
இன்றைய முதல் வாசகம் புனித யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து
எடுக்கப்பட்டிருக்கின்றது. இதன் முற்பகுதியில் அவர் சினம் கொள்ளவேண்டாம்
என்றும் சினத்தினால் ஏற்படும் கேடுகளையும் குறித்துப்
பேசுகின்றார்.
முதலில் அவர் சினம் கொள்வதில் ஏன் தாமதம் காட்டவேண்டும் என்று
கூறுகின்றார் என்று சிந்தித்துப் பார்ப்போம். அமெரிக்காவில்
தோன்றிய மிகப்பெரிய சிந்தனையாளரான தாமஸ் ஜெபர்சன் தன்னுடைய
"Rules of Living" என்ற நூலில் குறிப்பிடுகின்ற செய்தி ஒன்று.
உங்களுக்குச் சினம் வருகின்றதா ஒன்றிலிருந்து பத்து வரை எண்ணுங்கள்.
அப்பொழுதும் உங்களுடைய சினம் தணியாவிட்டால் நூறுவரை எண்ணத் தொடங்குங்கள்
என்பதாகும். தாமஸ் ஜெபர்சன் சொல்லக்கூடிய செய்தி மிகவும் கவனிக்கத்தக்கது.
சினம் வருகின்றபொழுது அதனை உடனடியாக வெளிப்படுத்திவிடாமல், தாமதப்படுத்தினால்
அதனால் நன்மை விளைவும் என்று அவர் கூறுகின்றார். புனித
யாக்கோபும் இதே செய்தியையைத்தான் நமக்கு எடுத்துக்
கூறுகின்றார்.
இது குறித்து அவர் கூறும்பொழுது, ஒவ்வொருவரும் கேட்பதில் வேகமும்
பேசுவதிலும் சினங்கொள்வதிலும் தாமதமும் காட்டவேண்டும் என்று
குறிப்பிடுகின்றார். ஏன் நாம் கேட்பதில் வேகமும் பேசுவதிலும்
சினங்கொள்வதிலும் தாமதம் காட்டவேண்டும் என்று தெரிந்துகொள்ளவேண்டும்.
கடவுள் நமக்கு இரண்டு காதுகளையும் ஒரு வாயினையும் தந்திருக்கின்றார்.
அதனால் நாம் இறைவனுடைய வார்த்தையையும் நல்ல வார்த்தைளையும்
கேட்பதில் வேகம் காட்டவேண்டும். கடவுள் நமக்கு ஒரே ஒரு
வாயினைத் தந்திருப்பதால், அதிலிருந்து நல்ல வார்த்தைகள் வரவேண்டுமே
ஒழிய, சினத்தில் வெளிப்படும் மற்றவரைக் காயப்படுத்தும்
வார்த்தைகள் வரக்கூடாது.
கடவுளின் விருப்பம் நிறைவேறத் தடையாக இருக்கும் மனிதரின் சினம்
சினம் கொள்வதில் தாமதம் காட்டவேண்டும் என்று குறிப்பிட்ட புனித
யாக்கோபு, அதற்கான காரணத்தையும் குறிப்பிடுகின்றார். அது என்ன
காரணமெனில் ஒருவர் சினம் கொள்கின்றபோது அவர் கடவுளுக்கு ஏற்புடைய
செயல் நடைபெறத் தடையாக இருக்கின்றார். அல்லது ஒருவருடைய சினம்
கடவுளுக்கு ஏற்புடைய செயல்கள் தடையாக அமைந்துவிடுகின்றது என்பதாகும்.
இங்கு நாம் மோசேயைக் குறித்துத் தெரிந்துகொள்வது நல்லது. ஆண்டவராகிய
கடவுள் மோசேயிடம் பாறையைக் கோலால் தட்டச் சொல்கின்றபொழுது, அவர்
ஒருமுறை தட்டுவதற்குப் பதில், மக்கள்மீது இருந்த சினத்தில் இரண்டுமுறை
தட்டுகின்றார். இதனால் கடவுளுக்கு மிக நெருங்கிய மோசே, வாக்களிக்கப்பட்ட
கானான் நாட்டிற்குள் போக முடியாமல் ஆகின்றது. இப்படிப் பலருடைய
சினம் அவர்களுடைய அழிவிற்குக் காரணமாக அமைந்துவிடுவதோடு மட்டுமல்லாமல்,
கடவுளுக்கு ஏற்புடைய செயல்கள் நடைபெறாமல் போவதற்கும் காரணமாக
அமைந்துவிடுகின்றது. ஆகையால், நாம் சினத்தைத் தவிர்த்து ஒருவர்
மற்றரிடம் அன்புகொண்டு வாழக் கற்றுக்கொள்வோம்.
சிந்தனை
"சினம் வருகின்றபொழுது ஒரு விநாடி பொறுமையாக இருந்தால், சினத்தினால்
ஏற்படும் பாதிப்பிலிருந்து வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கலாம்"
என்கிறது சீனப் பழமொழி. ஆகையால் நாம் நம்முடைய வாழ்வில் சினத்தைத்
தவிர்த்து அன்போடும் பொறுமையோடும் வாழ்வோம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மாற்கு 8: 22-26
"ஊரில் நுழைய வேண்டாம்"
நிகழ்வு
இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி. இவர்
பிரதமராக இருந்த நேரம் ஒருசில செய்தியாளர்கள் இவரைப் புகைப்படம்
எடுக்கவேண்டும் என்றும் இவரை நேர்காணல் செய்யவேண்டும் என்றும்
எவ்வளவோ முயற்சி செய்தார்கள், முடியவில்லை. அவர்கள் இவரிடத்தில்
நேரடியாக வந்து அனுமதி கேட்டபொழுதும், இவர் மறுத்துவிட்டார்.
அதற்கு இவர் சொன்ன காரணம் இதுதான்:
"உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் இரண்டுவிதமான கற்கள் பயன்படுத்தப்பட்டுக்
கட்டப்பட்டிருக்கின்றது. ஒன்று, அடித்தளம் கட்டப் பயன்படுத்தப்பட்ட
பாறாங்கல். இது வெளிப்பார்வைக்குத் தெரியாது. இரண்டு, அலங்காரத்திற்குப்
பயன்படுத்தப்பட்ட சலவைக்கல். இது மக்களுடைய பார்வைக்குத்
தெரியும்... என்னுடைய குரு "நீ பாறாங்கல்லைப் போன்று யாருடைய
பார்வைக்கும் தெரியாமல் மக்களுக்கு உதவி செய்யவேண்டுமே ஒழிய,
சலவைக்கல்லைப் போன்று எல்லாருக்கும் தெரிகின்ற மாதிரி உதவி
செய்யக்கூடாது" என்று சொல்லியிருக்கின்றார். அதனால்தான்
என்னைப் புகைப்படம் எடுக்கவோ, நேர்காணல் செய்யவோ, எந்தவொரு
விளம்பரமும் செய்யவோ வேண்டாம் என்று சொல்கிறேன்."
நம்முடைய நாட்டின் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி மேலே
சொன்ன வாரத்தைகள் நம்முடைய கவனத்திற்கு உரியவையாக இருக்கின்றன.
இன்றைய நற்செய்தியில் இயேசு பார்வையற்ற மனிதருக்குப்
பார்வையளித்துவிட்டு, "ஊரில் நுழையவேண்டாம்" என்று
கூறுகின்றார். இயேசு அந்த மனிதரிடம் கூறுகின்ற வார்த்தைகள்
நமக்கு என்ன செய்தியை எடுத்துச் சொல்கின்றன என்பதைக் குறித்து
இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
விளம்பரத்தை விரும்பாத இயேசு
மனிதர்களில் ஒருசிலர் இருக்கின்றார்கள். இவர்கள் ஒரு
குழல்விளக்கைக் கோயிலுக்கு நன்கொடையாகக் கொடுத்துவிட்டு,
பெரிதளவில் விளம்பரத்தைத் தேட விரும்புவார்கள்; தேடியும்
கொள்வார்கள். இன்னும் ஒருசிலர் இருக்கின்றார்கள். இவர்கள்
எதைச் செய்தாலும் மக்கள் தங்களைப் பார்க்கவேண்டும்,
பாராட்டவேண்டும் என்றே செய்வார்கள். இப்படிப்பட்ட மக்களுக்கு
நடுவில் முற்றிலும் வித்தியாசப்பட்டவராக இருக்கின்றார் இயேசு.
ஆம், இன்றைய நற்செய்தியில் இயேசு பார்க்வையற்ற மனிதருக்குப்
பார்வையளித்துவிட்டு, அவரிடம் இதை எல்லாரிடமும் போய்ச் சொல்
என்று சொல்லவில்லை. மாறாக, அவரிடம், "ஊருக்குள் நுழைய
வேண்டாம்" என்று சொல்கின்றார். இது நமக்கு இரண்டு உண்மைகளை
எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது. ஒன்று, இயேசு விளம்பரத்தையோ
அல்லது பெயரையும் புகழையும் விரும்பவில்லை என்பதாகும். இரண்டு,
ஒருவேளை பார்வையற்ற மனிதர் பார்வை பெற்ற பிறகு, தன்னைக்
குறித்து மக்களிடம் "தான் அருமடையாளங்களை நிகழத்தக்கூடியவர்"
என்று சொன்னால், அது தன்னுடைய பணிக்கு மிகப்பெரிய தடையாக
இருக்கும் என்பதாலும், தான் அருமடையாளங்களை நிகழ்த்துவதற்கு
மட்டும் வரவில்லை, மக்களுக்கு மீட்பை வழங்கவந்தேன் என்பதாலும்
அவரிடம் அவ்வாறு சொல்கின்றார்.
இயேசுவிடமிருந்து நலம்பெற நம்பிக்கையோடு நம்மை அவரிடம்
ஒப்படைக்கவேண்டும்
இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு எடுத்துரைக்கும் இரண்டாவது
முக்கியமான செய்தி, இறைவனிடமிருந்து நாம் நலம்பெறவேண்டும்
என்றால், நம்பிக்கையோடு நம்மை அவரிடம் ஒப்படைக்கவேண்டும்
என்பதாகும்.
நற்செய்தியில் இயேசுவும் அவருடைய சீடர்களும் பெத்சாய்தா
வருகின்றபொழுது, அவரிடம் ஒருசிலர் பார்வையற்ற மனிதரைக்
கொண்டுவந்து அவரைத் தொடும்படி வேண்டுகின்றார்கள். ஒருவேளை
அவர்கள், இயேசு பார்வையற்ற மனிதரைத் தொட்டால், அவருக்குப்
பார்வை கிடைக்கும் என்று நம்பியிருக்கவேண்டும். அதனாலேயே
அவர்கள் பார்வையற்ற மனிதரை இயேசுவிடம் கொண்டுவருகின்றார்கள்.
இன்னொரு செயலையும் நாம் தெரிந்துகொள்ளவேண்டும். அது
என்னவெனில், என்னதான் பார்வையற்ற மனிதருக்கு அறிமுகமான
மனிதர்கள் இயேசுவிடம் நம்பிக்கையோடு இருந்தாலும், பார்வையற்ற
மனிதர் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டிருப்பது மிகவும் தேவையான
ஒன்றாக இருக்கின்றது. நற்செய்தியில் வருகின்ற பார்வையற்ற
மனிதரை இயேசு கையைப் பிடித்து ஊருக்கு வெளியே அழைத்துச்
செல்கின்றபொழுது, அவர் இயேசுவிடம் நம்பிக்கைகொண்டு, அவரிடம்
தன்னை முற்றிலும் ஒப்படைத்து, அவர்பின் செல்கின்றார்.
அப்படியானால் அவர் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டிருந்தார், அந்த
நம்பிக்கையினால் அவர் பார்வைபெற்றார் என்பது உறுதியாகின்றது.
அடுத்ததாக, பார்வையற்ற மனிதர் உடனடியாகப் பார்வை பெறாமல்,
படிப்படியாகப் பார்வை பெற்றது என்ன செய்தியைத் தருகின்றது
என்பதையும் தெரிந்துகொள்ளவேண்டும். சில நேரங்களில் இறைவனிடம்
நாம் எடுத்து வைக்கும் மன்றாட்டு உடனடியாகக் கேட்கப்படாமல்
போகலாம். ஆனால், இறைவனின் திருவுளத்திற்கு ஏற்ப அது
அமைந்திருப்பின் நிச்சயம் கேட்கப்படும் என்பதை
உணர்ந்துகொள்ளலாம். மேலும் இந்த நிகழ்வு இயேசுவின் மீது
நம்பிக்கை கொள்ளாமல், கண்ணிருந்தும் குருடர்களாய்,
காதிருந்தும் செவிடர்களாய் இருந்த இயேசுவின் சீடர்களை,
அவர்மீது நம்பிக்கைக் கொள்ளத் தூண்டுவதாக இருக்கின்றது.
ஆகையால், நாம் இயேசுவிடமிருந்து நன்மைகளைப் பெற, அவரிடம்
நம்பிக்கை கொண்டு வாழ்வதற்கு முயற்சி செய்வோம்.
சிந்தனை
"நேர்மையுடன் நடக்கும் என் அடியார், நம்பிக்கையினால் வாழ்வு
அடைவார்" (எபி 10: 38) என்கிறது இறைவார்த்தை. ஆகையால், நாம்
இறைவனிடம் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|