Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   18  பிப்ரவரி 2020  
    பொதுக்காலம் 6 ஆம் வாரம்
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 ++கடவுள் எவரையும் சோதிப்பதில்லை.

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 12-18

அன்பிற்குரியவர்களே, சோதனையை மனவுறுதியுடன் தாங்குவோர் பேறுபெற்றோர். ஏனெனில், அவர்களது தகுதி மெய்ப்பிக்கப்படும்போது, தம்மீது அன்பு கொள்வோருக்குக் கடவுள் வாக்களித்த வாழ்வாகிய வெற்றி வாகையினை அவர்கள் பெறுவார்கள். சோதனை வரும்போது, `இச்சோதனை கடவுளிடமிருந்தே வருகிறது' என்று யாரும் சொல்லக் கூடாது. ஏனெனில் கடவுள் தீமையின் தூண்டுதலுக்கு உள்ளாவதில்லை. அவரும் எவரையும் சோதிப்பதில்லை. ஒவ்வொருவரும் தம் சொந்தத் தீய நாட்டத்தினாலே சோதிக்கப் படுகின்றனர். அது அவர்களைக் கவர்ந்து மயக்கித் தன் வயப்படுத்துகிறது. பின்னர் தீய நாட்டம் கருக்கொண்டு பாவத்தைப் பெற்றெடுக்கிறது. பாவம் முழு வளர்ச்சியடைந்து சாவை விளைவிக்கிறது. என் அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே, ஏமாந்துபோக வேண்டாம். நல்ல கொடைகள் அனைத்தும், நிறைவான வரம் எல்லாம், ஒளியின் பிறப்பிடமான விண்ணகத் தந்தையிடமிருந்தே வருகின்றன. அவரிடம் எவ்வகையான மாற்றமும் இல்லை; அவர் மாறிக்கொண்டிருக்கும் நிழல் அல்ல. தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகளாகும்படி உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர் விரும்பினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 94: 12-13a. 14-15. 18-19 (பல்லவி: 12a) Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவரே! நீர் கண்டித்து பயிற்றுவிப்போர் பேறுபெற்றோர்.

12ஆண்டவரே! நீர் கண்டித்து உம் திருச்சட்டத்தைப் பயிற்றுவிக்கும் மனிதர் பேறுபெற்றோர்;
13aஅவர்களின் துன்ப நாள்களில் அவர்களுக்கு அமைதி அளிப்பீர். - பல்லவி

14ஆண்டவர் தம் மக்களைத் தள்ளிவிடார்; தம் உரிமைச் சொத்தாம் அவர்களைக் கைவிடார்.
15தீர்ப்பு வழங்கும் முறையில் மீண்டும் நீதி நிலவும்; நேரிய மனத்தினர் அதன் வழி நடப்பர். - பல்லவி

18"என் அடி சறுக்குகின்றது" என்று நான் சொன்னபோது, ஆண்டவரே! உமது பேரன்பு என்னைத் தாங்கிற்று.
19என் மனத்தில் கவலைகள் பெருகும்போது, என் உள்ளத்தை உமது ஆறுதல் மகிழ்விக்கின்றது. - பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
(யோவா 14: 23)

அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்புகொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
++பரிசேயர், ஏரோதியர் ஆகியோரது புளிப்பு மாவைக் குறித்து மிகவும் கவனமாயிருங்கள்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 14-21

அக்காலத்தில் சீடர்கள் தங்களுக்குத் தேவையான அப்பங்களை எடுத்துச்செல்ல மறந்துவிட்டார்கள். படகில் அவர்களிடம் ஓர் அப்பம் மட்டுமே இருந்தது. அப்பொழுது இயேசு, "பரிசேயர், ஏரோதியர் ஆகியோரது புளிப்பு மாவைக் குறித்து மிகவும் கவனமாயிருங்கள்'' என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். அவர்களோ தங்களிடம் அப்பம் இல்லையே என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருந்தார்கள். இதை அறிந்த இயேசு அவர்களை நோக்கி, "நீங்கள் உங்களிடம் அப்பம் இல்லை என ஏன் பேசிக்கொள்கிறீர்கள்? இன்னுமா உணராமலும் புரிந்துகொள்ளாமலும் இருக்கிறீர்கள்? உங்கள் உள்ளம் மழுங்கியா போயிற்று? கண்ணிருந்தும் நீங்கள் காண்பதில்லையா? காதிருந்தும் நீங்கள் கேட்பதில்லையா? ஏன், உங்களுக்கு நினைவில்லையா? ஐந்து அப்பங்களை நான் ஐயாயிரம் பேருக்குப் பிட்டு அளித்தபோது, மீதியான துண்டுகளை எத்தனை கூடைகள் நிறைய எடுத்தீர்கள்?'' என்று அவர் கேட்க, அவர்கள், "பன்னிரண்டு'' என்றார்கள். "ஏழு அப்பங்களை நான் நாலாயிரம் பேருக்குப் பிட்டு அளித்தபோது மீதித் துண்டுகளை எத்தனை கூடைகள் நிறைய எடுத்தீர்கள்?'' என்று கேட்க, அவர்கள், "ஏழு'' என்றார்கள். மேலும் அவர் அவர்களை நோக்கி, "இன்னும் உங்களுக்குப் புரியவில்லையா?'' என்று கேட்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 யாக்கோபு 1: 12-18

"சோதனையை மனவுறுதியுடன் தாங்குவோர் பேறுபெற்றோர்"

நிகழ்வு


ஒருவர் ஒரு பெரிய கடை வைத்து வாணிபம் செய்துவந்தார். அவர் தன்னுடைய கடைக்குப் பின்னால் ஒரு சிறிய அறை கட்டி, அதில் தன்னுடைய வாழ்வில் ஒளியேற்றி வைத்த ஒரு புனிதமான குருவின் படத்தை மாட்டி வைத்திருந்தார்.

எப்பொழுதெல்லாம் அவருக்குத் சோதனைகள் வந்தனவோ, குறிப்பாக தன்னுடைய கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் அதிகமான இலாபம் வைத்துப் பொருள்களை விற்கவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டதோ அப்பொழுதெல்லாம் அவர் தன்னுடைய கடைக்குப் பின்னால் இருந்த அறைக்குச் சென்று, அங்கிருந்த குருவானவரின் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு, "சுவாமி! எனக்கு மிகப்பெரிய ஒரு சோதனை வந்திருக்கின்றது. இந்தச் சோதனையை என்னால் வெற்றிகொள்ளமுடியவில்லை. உங்களுடைய திருமுகத்தை ஒருமுறை பார்த்துவிட்டால் என்னால் சோதனையை வெற்றிக்கொள்ள முடியும். அதனால்தான் உங்களுடைய திருமுகத்தைக் காண இங்கு வந்திருக்கின்றேன்" என்று சொல்லிவிட்டு, கடைக்கு வந்த வாடிக்கையாளரிடம் நியாயமான இலாபம் வைத்து விற்பார்.

இந்த நிகழ்வில் வருகின்ற கடைக்காரர் தனக்கு வந்த சோதனையை தன்னுடைய வாழ்வில் ஒளியேற்றி வைத்த குருவானவரின் திருமுகத்தைப் பார்ப்பதன் மூலம் வெற்றிகொண்டார். நாம் நம்முடைய வாழ்வில் வரும் சோதனைகளை ஆண்டவரின் திருமுகத்தை ஒருமுறை பார்த்தோமெனில் வெற்றிகொள்ளலாம் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. இன்றைய முதல் வாசகம் சோதனையை மனவுறுதியுடன் தாங்குவோர் பேறுபெற்றோர் என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றது. அது எப்படி என்று இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

கடவுள் யாரையும் சோதிப்பதில்லை

ஒருசிலர் "கடவுள் என் வாழ்வில் சோதனைகளுக்கு மேல் சோதனைகளை அனுப்பிக்கொண்டிருக்கின்றார்" என்று சொல்லக் கேட்டிருப்போம். நாமும்கூட இவ்வார்த்தைகளைப் பலமுறை உச்சரித்திருப்போம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இன்றைய முதல் வாசகத்தில் புனித யாக்கோபு சொல்லக்கூடிய வார்த்தைகள் நமது கவனத்திற்கு உரியவையாக இருக்கின்றன. "சோதனை கடவுளிடமிருந்தே வருகின்றது என்று யாரும் சொல்லக்கூடாது. ஏனெனில் கடவுள் தீமையின் தூண்டுதலுக்கு உள்ளாவதில்லை. அவரும் எவரையும் சோதிப்பதில்லை" என்கின்றார் புனித யாக்கோபு.. இவர் சொல்லக்கூடிய இவ்வார்த்தைகளை நன்கு உணர்ந்துகொண்டோமென்றால், சோதனைகள் கடவுளிடமிருந்தே வருகின்றன என்று சொல்லிப் புலம்பிக்கொண்டிருக்க மாட்டோம்.

ஒவ்வொருவரும் தம் சொந்த தீய நாட்டத்தினாலேயே சோதிக்கப்படுகின்றனர்

சோதனைகள் கடவுளிடமிருந்து வருவதில்லை என்று சொன்ன புனித யாக்கோபு, அந்தச் சோதனைகள் எப்படி வருகின்றன என்ற தெளிவினையும் நமக்குத் தருகின்றார். ஆம். "ஒவ்வொருவரும் தம் சொந்த தீய நாட்டத்தினாலேயே சோதிக்கப்படுகின்றனர்" என்று கூறுவதன் மூலம், சோதனைகள் எப்படி வருகின்றன என்பதற்கான தெளிவினைப் புனித யாக்கோபு தருகின்றார். இந்த இடத்தில் ஒருவர் எப்படியெல்லாம் சோதனைக்கு ஆளாகின்றார் என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.

பொதுவாக சோதனைகள் எல்லாருக்கும் வரும். ஆண்டவர் இயேசுவுக்கே சோதனைகள் வந்தனவே! சோதனைக்கான விதையை ஆசை விதைக்கின்றது என்று சொல்லலாம். ஆசையால் நாம் ஏமாற்றப்படும்பொழுது, கடவுளின் கட்டளைகளை மீறுகின்றோம் அல்லது கீழ்ப்படியாமல் நடந்துகொள்கின்றோம். இதன்மூலம் நாம் சோதனைக்கு உட்பட்டு பாவம் செய்கின்றோம். இங்கு ஆதாமையும் ஏவாளையும் இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. பாம்பின் பசப்பு மொழியால் ஆதாமின் மனைவியின் உள்ளத்தில் ஓர் ஆசை பிறக்கின்றது. அந்த ஆசை அவருக்கு ஒருவிதமான மயக்கத்தை ஏற்படுத்த, அவர் ஏமாந்துபோகின்றார். பின்னர் கடவுளின் கட்டளையை மீறி பாவம் செய்கின்றார். ஆகவே, ஏவாளின் உள்ளத்தில் ஏற்பட்ட ஆசையே அவரையும் ஆதமையும் பாவம் செய்யத் தூண்டுகின்றது என்று உறுதியாகச் சொல்லலாம். அதனால்தான் "ஆசையே துன்பத்திற்குக் காரணம்" என்றும் "ஆசை அறுமின்" என்று சொல்கின்றார்கள்.

பாவத்துக்குக் கிடைக்கும் கூலி சாவு

ஒருவருக்கு வருகின்ற ஆசை அவரைச் சோதனையில் விழவைத்துப் பாவம் செய்யத் தூண்டுகின்றது என்று சிந்தித்துப் பார்த்தோம். இந்தப் பாவத்தினால் என்ன நடக்கின்றது என்பதைத் தெரிந்துகொள்வோம். புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் இவ்வாறு கூறுவார்: "பாவத்திற்குக் கிடைக்கும் கூலி சாவு." ஆம், நாம் நமக்கு வரும் சோதனைகளுக்கு உட்படும்போது சாவைத்தான் கூலியாகப் பெறுவோம். அதே நேரத்தில் நாம் நமக்கு வரும் சோதனைகளை மனவுறுதியுடன் தாங்கிக்கொண்டால், பேறுபெற்றோர் ஆவோம் என்பது உறுதி. ஆகையால், நாம் பேறுபெற்றோராக மாற நமக்கு வரும் சோதனைகளை மனவுறுதியோடு தாங்கிக்கொள்வோம்

சிந்தனை

"தாமே சோதனைக்கு உள்ளாகித் துன்பப்பட்டதனால் சோதிக்கப்படுவோருக்கு உதவி செய்ய அவர் வல்லவர்" (எபி 2: 18) என்பார் எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர். ஆகையால், நாம் நமக்கு வரும் சோதனைகளை மனவுறுதியுடன் தாங்குவோம். அதநேரத்தில் சோதனைகளை வெற்றிக்கொள்ள இறைவனின் அருளை வேண்டுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 மாற்கு 8: 14-21

நேர்மறை எண்ணத்தோடு வாழ்வோம்

நிகழ்வு

மிகப்பெரிய மறைப்பணியாளரான ஒய்ட்பீல்ட் என்பவர் ஒரு பொதுக்கூட்டத்தில், "கடவுள் தான் படைத்த அனைத்தையும் மிக நேர்த்தியாகப் படைத்திருக்கின்றார்" என்று பேசிக்கொண்டிருந்தார். அந்தக் கூட்டத்தில் கூன்விழுந்த மனிதர் ஒருவர் இருந்தார். அவர் மெல்ல எழுந்து, "கடவுள் தான் படைத்த அனைத்தையும் மிக நேர்த்தியாகப் படைத்திருக்கின்றார் என்று சொல்கின்றார்கள். அப்படியானால், கூன்விழுந்த நிலையில் இருக்கும் என்னை என்ன சொல்வீர்கள்?" என்றார்.

ஒய்ட்பீல்ட் சிறிதும் தாமதியில், "என்னுடைய வாழ்க்கையில் இவ்வளவு நேர்த்தியான கூன்விழுந்த மனிதரை நான் கண்டதில்லை. இதற்காகவே நீங்கள் இறைவனுக்கு நன்றி செலுத்தவேண்டும்" என்றார். இதைக் கேட்டு கூட்டம் கைகளைத் தட்டி ஆர்ப்பரிக்கத் தொடங்கியது.

மேலே உள்ள நிகழ்வில் வரும் மனிதர், தான் கூன் விழுந்த நிலையில் இருக்கின்றோமே என்று தன்னுடைய வாழ்க்கையை எதிர்மறையாக அணுகியபொழுது, மறைப்பணியாளரான ஒய்ட்பீல்ட் அவருடைய உடலில் இருந்த கூனை நேர்மறையாகப் பார்த்தது நமக்கு கவனித்திற்கு உரியதாக இருக்கின்றது. இன்றைய நற்செய்தியில் எதிர்மறையோடு இருந்த சீடர்களை நேர்மறையோடு இருக்க அழைப்புத் தருகின்றார். அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

சீடர்களின் எதிர்மறை எண்ணம்

நற்செய்தியில் இயேசு தன் சீடர்களிடம், "பரிசேயர், ஏரோதியர் ஆகியோரது புளிப்பு மாவைக் குறித்து மிகவும் கவனமாயிருங்கள்" என்று கூறுகின்றார். இதற்கு இயேசுவின் சீடர்கள் எப்படி எதிர்வினை ஆற்றினார்கள் என்று சிந்தித்துப் பார்ப்பது முன், "பரிசேயர், ஏரோதியர் ஆகியோரது புளிப்பு மாவு என்றால் என்ன?" என்று தெரிந்துகொள்வது நல்லது. பரிசேயர் மற்றும் ஏரோதியரின் புளிப்பு என்கிறபொழுது அவர்களுடைய உலகப் போக்கிலான வாழ்க்கை என்று எடுத்துக்கொள்ளலாம். இத்தகைய போக்கு அல்லது எண்ணம் அளவில் சிறிதாக இருந்தாலும்கூட, ஒட்டுமொத்த மனிதரையே சாய்த்துவிடும் (2 கொரி 13:5; கலா 5:9) என்பதால், அதைக் குறித்து மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்று சொல்கின்றார்; ஆனால், சீடர்களோ தாங்கள் அப்பம் கொண்டுவரவில்லை என்பதைத்தான் இயேசு மறைமுகமாகச் சாடுகின்றார் என்று தவறாக நினைக்கின்றார்கள்.

இங்கு நாம் கவனிக்கவேண்டிய ஒன்று, சீடர்களின் அவநம்பிக்கை அல்லது அவர்களுடைய எதிர்மறை எண்ணம்தான். அவர்கள் தங்களோடு இயேசு இருக்கின்றார் என்பதை மறந்துவிட்டு, அப்பமில்லையே என்ற எதிர்மறை எண்ணத்தோடு இருக்கின்றார்கள். இந்நிலையில்தான் இயேசு அவர்களுக்குச் சரியான விளக்கத்தைத் தருகின்றார்.

சீடர்களின் நம்பிக்கையின்மை

சீடர்கள் தங்களிடம் அப்பமில்லையே என்று கவலைப்பட்டதை அவர்களுடைய நம்பிக்கையின்மை என்றே சொல்லலாம். ஏனென்றால் இந்த நிகழ்வுக்கு முன்பாக இயேசு ஐந்து அப்பங்களைக் கொண்டு ஐயாயிரம் பேருக்கும், ஏழு அப்பங்களையும் சில மீன் துண்டுகளையும் கொண்டு நான்காம் பேருக்கு உணவளித்திருப்பார். ஒருவேளை இயேசுவின் சீடர்கள், குறைவானவற்றைக் கொண்டு நிறைவானவற்றை இயேசு செய்யக்கூடியவர் என்று நம்பியிருந்தால், இப்படியெல்லாம் நினைத்திருக்கமாட்டார்கள்; பேசியிருக்கவும் மாட்டார்கள். அவர்கள் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளாததால்தான், அவர் யாரென்று உணர்ந்துகொள்ளாததால்தான் இவ்வாறெல்லாம் எண்ணிக்கொள்கின்றார்கள். இதனால்தான் இயேசு அவர்களைப் பார்த்து, "உங்கள் உள்ளம் மழுங்கியா போயிற்று? கண்ணிருந்தும் காண்பதில்லையா...?" என்றெல்லாம் கேள்வி கேட்கின்றார்.

ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து, இந்த நொடியில் வாழ்

சீடர்கள் எதிர்மறை எண்ணத்தோடு, நம்பிக்கையின்றி இருப்பது, அதற்காக இயேசு அவர்களைக் கடிந்துகொள்வதும் நமக்கொரு முக்கியமான ஒரு செய்தியை எடுத்துச் சொல்கின்றது. அது என்னவெனில், கடவுள்மீது நம்பிக்கை வைத்து இந்த நொடியில் வாழவேண்டும் என்பதாகும். இயேசுவின் சீடர்கள் தங்களிடம் ஓர் அப்பம் மட்டும்தானே இருக்கின்றது! அடுத்து என்ன செய்வது என்று எதிர்காலத்தைப் பற்றி நினைத்துக் கவலைப்பட்டுக்கொண்டிருந்தார்கள். மட்டுமல்லால், ஆண்டவர்மீது நம்பிக்கையில்லாமல் இருந்தார்கள். ஒருவேளை அவர்கள் ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கை வைத்து, நிகழ்காலத்தில் வாழ்ந்திருந்தால் அவர்கள் இப்படியெல்லாம் கவலைப்பட்டுக்கொண்டிருக்கமாட்டார்கள்.

ஆகையால், நாம் சீடர்களைப் போன்று இல்லாமல், ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கை வைத்து, நிகழ்காலத்தில் வாழ்வோம். அதன்வழியாக இறைவன் தரும் நன்மைகளைப் பெற்றுக்கொள்வோம்.

சிந்தனை

"நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில் நாளைய கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும். அந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்" (மத் 6: 34) என்பார் இயேசு. ஆகையால், நாம் நாளைய நாளை நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல், ஆண்டவரின் பாதுகாப்பிலும் பராமரிப்பிலும் நம்பிக்கை வைத்து, நிகழ்காலத்தில் வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!