|
|
17
பிப்ரவரி 2020 |
|
|
பொதுக்காலம்
6 ஆம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
மரியின் ஊழியர் சபையை
நிறுவிய எழுவர்
=================================================================================
உங்கள் நம்பிக்கை சோதிக்கப்படும்போது, மனவுறுதி உண்டாகும். அப்போது
நீங்கள் நிறைவுள்ளவர்களாய் இருப்பீர்கள்.
திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1:
1-11
சிதறுண்டு வாழும் பன்னிரு குலத்தினருக்கு, கடவுளுக்கும் ஆண்டவராகிய
இயேசு கிறிஸ்துவுக்கும் பணியாளனாகிய யாக்கோபு வாழ்த்துக் கூறி
எழுதுவது: என் சகோதரர் சகோதரிகளே, பல வகையான சோதனைகளுக்கு உள்ளாகும்போது
நீங்கள் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில்
கொண்டிருங்கள். உங்கள் நம்பிக்கை சோதிக்கப்படும்போது மனவுறுதி
உண்டாகும் என்பது உங்களுக்குத் தெரியும். உங்கள் மனவுறுதி
நிறைவான செயல்களால் விளங்கட்டும். அப்பொழுது எக்குறையுமின்றி
முற்றும் நிறைவுள்ளவர்களாய் இருப்பீர்கள். உங்களிடையே குறைவான
ஞானம் கொண்டிருப்போர் கடவுளிடத்தில் கேட்கட்டும்; அப்பொழுது
அவரும் ஞானத்தைக் கொடுப்பார். அவர் முகம் கோணாமல் தாராளமாய் எல்லாருக்கும்
கொடுப்பவர். ஆனால் நம்பிக்கையோடு, ஐயப்பாடின்றிக் கேட்க
வேண்டும். ஐயப்பாடு கொள்பவர்கள் காற்றினால் அலைக்கழிக்கப்படும்
கடல் அலையைப் போன்றவர்கள். எனவே இத்தகைய இரு மனமுள்ள, நிலையற்ற
போக்குடையவர்கள் ஆண்டவரிடம் ஏதாவது பெற முடியும் என
நினைக்காதிருக்கட்டும். தாழ்நிலையில் உள்ள சகோதரர் சகோதரிகள்
தாங்கள் உயர்வு பெறும்போது மகிழ்ச்சி அடைவார்களாக! செல்வச்
செழிப்பில் இருப்பவர்கள் தாங்கள் தாழ்நிலை அடையும்போதும் மகிழ்ச்சியாய்
இருப்பார்களாக! ஏனெனில் செல்வர்கள் புல்வெளிப் பூவைப் போல மறைந்தொழிவார்கள்.
கதிரவன் எழ, வெயில் ஏறிப் புல் உலர்ந்துபோம். அதன் பூ வதங்கி
விழும்; அதன் அழகிய தோற்றமும் அழிந்துவிடும். அவ்வாறே செல்வரும்
தம் அலுவல்களில் ஈடுபடும்போதே அழிவுறுவர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 119: 67. 68. 71. 72. 75. 76 (பல்லவி: 77a)
Mp3
=================================================================================
பல்லவி: நான் பிழைத்திருக்கும்படி உமது இரக்கம் ஆண்டவரே,
கிடைப்பதாக.
67நீர் என்னைத் தண்டிக்குமுன்பு நான் தவறிழைத்தேன்; ஆனால், இப்போது
உம் வாக்கைக் கடைப்பிடிக்கின்றேன்.
68நீர் நல்லவர்! நன்மையே செய்பவர்; எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பியும்.
- பல்லவி
71எனக்குத் துன்பம் விளைந்தது என் நன்மைக்காகவே; அதனால், உம்
விதிமுறைகளை நான் கற்றுக்கொண்டேன்.
72நீர் திருவாய் மலர்ந்த சட்டம், ஆயிரக்கணக்கான பொன், வெள்ளிக்
காசுகளைவிட எனக்கு மேலானது. - பல்லவி
75ஆண்டவரே! உம் நீதித் தீர்ப்புகள் நேரியவை என அறிவேன்; நீர் என்னைச்
சிறுமைப்படுத்தியது சரியே.
76எனக்கு ஆறுதலளிக்குமாறு உமது பேரன்பு எனக்குக் கிடைக்கட்டும்;
உம் ஊழியனுக்கு வாக்குறுதி அளித்தீர் அன்றோ! - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
(யோவா 14: 6)
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: வழியும் உண்மையும்
வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
++இந்தத் தலைமுறையினர் அடையாளம் கேட்பதேன்?
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து
வாசகம் 8: 11-13
அக்காலத்தில் பரிசேயர் வந்து இயேசுவோடு வாதாடத்
தொடங்கினர்; வானத்திலிருந்து அடையாளம் ஒன்றைக் காட்டும்படி அவரைச்
சோதித்தனர். அவர் பெருமூச்சுவிட்டு, ``இந்தத் தலைமுறையினர் அடையாளம்
கேட்பதேன்? இத்தலைமுறையினருக்கு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது
என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார். அவர்களை
விட்டு அகன்று மீண்டும் படகேறி அவர் மறு கரைக்குச் சென்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
யாக்கோபு 1: 1-11
"துன்பம் வரும் வேளையில சிரிங்க"
நிகழ்வு
ஓர் ஊரில் கிறிஸ்தவ இளைஞன் ஒருவன் இருந்தான். ஒருநாள் அவனுக்கு
ஒரு கனவு வந்தது. அந்தக் கனவில் அவன் ஒரு கண்ணாடிப்
பெட்டிக்குள் இருப்பது போன்றும் குட்டிச் சாத்தான் அவனைத் தங்களுடைய
கைகளில் இருந்த கொடிய ஆயுதங்களைக் கொண்டு தாக்குவது போன்று இருந்தது.
என்னதான் குட்டிச் சாத்தான்கள் அவனைக் கொடிய ஆயுதங்களைக்
கொண்டு தாக்க முற்பட்டபோதும், அது அவனுக்கு எந்தப்
பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அப்பொழுது அவன் இயேசு சொன்ன இவ்வார்த்தைகளை
நினைவில் கொண்டான். "உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு. எனினும்
துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றிகொண்டுவிட்டேன்."
இவ்வார்த்தைகளை அவன் நினைவில் கொண்டதும், ஆறுதல் அடைந்தான்.
ஆம், இயேசு இவ்வுலகை வெற்றிகொண்டுவிட்டபடியால் நாம் எந்தவொரு
சோதனையையும் துன்பத்தையும் கண்டு அஞ்சத் தேவையில்லை. மாறாக அவற்றை
மகிழ்வோடு எதிர்கொள்வோம் என்ற உண்மையை எடுத்துச்சொல்லும் இந்த
நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. இன்றைய முதல் வாசகம், நம்முடைய
வாழ்வில் சோதனை வருகின்றபொழுது, அதனை நாம் எவ்வாறு எதிர்கொள்ளவேண்டும்
என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றது. அது குறித்து இப்பொழுது
நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
சோதனையின்பொழுது மகிழ்ச்சியாக இருக்கவேண்டும்
பொதுவாக நம்முடைய வாழ்வில் சோதனைகள் வருகின்றபொழுது ஒன்று, கடவுளைப்
பழித்துக் கொண்டிருப்போம். இல்லையென்றால், "எல்லாம் நம்முடைய
விதி" என்று சொல்லி அழுது புலம்பிக் கொண்டிருப்போம்; ஆனால்,
புனித யாக்கோபு நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய வாசகத்தில்,
அதன் ஆசிரியர், "பல வகையான சோதனைகளுக்கு உள்ளாகும்போது நீங்கள்
மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதைக் கொண்டிருங்கள்" என்று
கூறுகின்றார். உண்மையில், பல வகையான சோதனைகளுக்கு நாம் உள்ளாகும்போது,
நம்மால் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா? மிகவும் சிந்தித்துப்
பார்க்கவேண்டிய ஒரு கேள்வியாக இருக்கின்றது. புனித யாக்கோபு
சொல்வதுபோல் சோதனை வேளையில் நாம் மகிழ்ச்சியாக இருக்க என்ன
செய்யவேண்டும் என்பதைத் தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.
மனவுறுதியோடு இருக்கவேண்டும்
நம்முடைய வாழ்வில் சோதனைகள் வருகின்றபோது அல்லது நம்பிக்கை
சோதிக்கப்படும்பொழுது அச்சோதனையில் வீழ்ந்து விடாமல் அப்படியே
இருந்தால், மனவுறுதி உண்டாகும். அந்த மனவுறுதியே நாம் மகிழ்ச்சியாக
இருப்பதற்குக் காரணமாக அமைந்துவிடும் என்கின்றார் புனித
யாக்கோபு. இக்கருத்தினை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்வதற்கு
புனித பேதுரு தன்னுடைய முதல் திருமுகத்தில் சொல்கின்ற வார்த்தைகளையும்
இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. "இப்போது சிறிது காலம்
நீங்கள் பல்வகைச் சோதனைகளால் துயருற வேண்டியிருப்பினும், அந்நாளிலே
பேருவகை கொள்வீர்கள்" (1 பேது 1:6) என்பார் புனித பேதுரு. பல்வேறு
சோதனைகளால் நாம் துயருற நேரிடலாம். அது இயற்கை. ஆனால், அப்படியே
சோதனைகளைச் சந்திக்கின்றபொழுது ஒருபோதும் மனம்தளர்ந்து போய்விடக்கூடாது.
ஒருவேளை நாம் மனம்தளர்ந்து போய்விட்டால் நாம் சோதனையில் விழுவதற்கு
வாய்ப்பிருக்கின்றது. மாறாக, நாம் மனவுறுதியோடு இருந்தால், சோதனைகளை
எளிதாக வெற்றிகொள்ளலாம். ஆகவே, நாம் நம்முடைய வாழ்க்கையில் மனவுறுதியோடு
இருப்பது மிகவும் தேவையான ஒன்றாக இருக்கின்றது.
ஞானத்தைக் கேட்போம்
இன்றைய முதல் வாசகத்தில் புனித யாக்கோபு இன்னொரு முக்கியமான
செய்தியைச் சொல்கின்றார். அது என்னவெனில், குறைவான ஞானமுடையோர்
ஞானத்தை இறைவனிடம் கேட்கவேண்டும் என்பதாகும். பலர் சோதனையை எதிர்கொள்ள
முடியாதவர்களாக, அதில் வீழ்கின்றவர்களாக இருக்கின்றார்கள். இப்படிப்பட்டோர்
மனவுறுதியோடு இருக்கவேண்டும் என்று மேலே நாம் சிந்தித்துப்
பார்த்தோம். இந்த மனவுறுதி நமக்கு வேண்டும் என்றால், அதற்கு ஞானமானது
தேவைப்படுகின்றது. அதனால்தான் புனித யாக்கோபு, குறைவான ஞானமுடையோர்
ஞானத்தை இறைவனிடம் கேட்கவேண்டும் என்றும் அப்படிக் கேட்கின்றபோது
முழு நம்பிக்கையோடு கேட்கவேண்டும் என்றும் கூறுகின்றார்.
ஆதலால் நாம் நம்முடைய வாழ்வில் சோதனைகள் வருகின்றபொழுது அவற்றை
மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளக் கற்றுக்கொள்வோம். நாம் நமக்கு வருகின்ற
சோதனைகளை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கின்றபோது மனம் உறுதியடைகின்றது.
அதனாலேயே நம்முடைய வாழ்வில் இறைவனுடைய அருள் நிறைவாகத் தங்குகின்றது.
சிந்தனை
"இறுதிவரை மனவுறுதியோடு இருப்பவரே மீட்புப் பெறுவர்" (மத்
24:13) என்பார் இயேசு. ஆகையால், நாம் நம்முடைய வாழ்வில் எத்தனை
சோதனைகளும் துன்பங்களும் வந்தாலும், இறுதிவரை மனவுறுதியோடு இருந்து
ஆண்டவருக்குச் சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மாற்கு 8: 11-13
"இத்தலைமுறையினருக்கு அடையாளம் எதுவும்
கொடுக்கப்படமாட்டாது"
நிகழ்வு
ஹாட்ரியன் என்றொரு மன்னன் இருந்தான். அவனுக்குக் கடவுள் நம்பிக்கையே
கிடையாது. ஒருநாள் அவன் யூத இரபியான யோசுவாவிடம் சென்று,
"நீங்கள் கடவுளிடம் பேசுவதாகச் சொல்கிறீர்கள்; ஆனால் அவர் எங்கே
இருக்கின்றார் என்று சொல்லமாட்டேன் என்கிறீர்கள். ஒருவேளை அவர்
இருக்கின்றார் என்றால், எனக்குக் காட்டுங்கள்" என்றார். அதற்கு
இரபி யோசுவா, "அதெல்லாம் முடியாது" என்று பதிலுரைத்தார்.
"கடவுளைக் காணமுடியாதா...? அப்படியானால், காணமுடியாத கடவுளை
நான் எப்படி நம்புவது...?" என்றான் ஹட்ரியான். இரபி யோசுவா ஒரு
வினாடி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். பின்னர் அவர் மன்னனை
அறையைவிட்டு வெளியே அழைத்துக்கொண்டு சென்று, சூரியனைப் பார்க்கச்
சொன்னார். அதுவோ நண்பகல் வேளை. சூரியனைப் பார்க்க முயன்ற
ஹாட்ரியனால் அதைப் பார்க்கவில்லை. அதனால் அவன் இரபி யோசுவாவிடம்,
"என்னால் பார்க்கமுடியவில்லை" என்றான். அப்பொழுது இரபி யோசுவா
அவனிடம், "படைப்புப் பொருளையே பார்க்கமுடியாத உன்னால், படைத்தவனை
எப்படிப் பார்க்க முடியும்?" என்றார். ஹட்ரியன் எதுவும் பேசமுடியாமல்
வாயடைத்து நின்றான்.
கடவுளைக் காணவேண்டும் என்று கேட்ட ஹட்ரியன் என்ற மன்னனுக்கு
இரபி யோசுவா தக்க பதில் தந்தது போன்று, இன்றைய நற்செய்தியில்
அடையாளம் வேண்டும் என்று பரிசேயர்களுக்கு இயேசு தக்க பதில் தருகின்றார்.
அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்தப் பார்ப்போம்.
ஏன் அடையாளம் கேட்டார்கள்?
இயேசுவின் செல்வாக்கு நாளொன்று மேனியும் பொழுதொரு வண்ணமுமாய்
வளர்ந்து வந்தது. இதைக் கேள்விப்பட்ட "பொறாமை மிகுந்த" பரிசேயர்கள்
அவரை வீழ்த்தவேண்டும் என்ற எண்ணத்தோடு இயேசுவிடம் வந்து,
வானிலிருந்து அடையாளம் ஒன்றைக் காட்டவேண்டும் என்று
கேட்கின்றார்கள். இயேசு அவர்களுக்கு என்ன மறுமொழி கூறினார் என்று
சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்பு, எந்த அடிப்படையில்
பரிசேயர்கள் இயேசுவிடம் அடையாளம் ஒன்றைக் காட்டுமாறு
கேட்டார்கள் எனத் தெரிந்துகொள்வது நல்லது.
இணைச்சட்ட நூல் 13: 1-3, 18: 18-22 இல் இவ்வாறு
வாசிக்கின்றோம். "உங்களிடையே ஓர் இறைவாக்கினனோ அல்லது கனவு
காண்பவனோ தோன்றி, அடையாளம் காட்டுகின்றேன் என்று சொன்னால்,
உடனே அவனை நம்பிவிடவேண்டாம். ஏனெனில் அவன் உங்களை
வேற்றுதெய்வங்களை வழிபடத் தூண்டுவான்."
மேல்கண்ட இறைவார்த்தையின் அடிப்படையில் பரிசேயர்கள் இயேசுவிடம்
அடையாளம் கேட்டிருக்கலாம்; ஆனால், சாதாரண மக்கள் இயேசுவை
இறைவாக்கினராக, தாவீதின் மகனாக, மெசியாவாக
ஏற்றுக்கொண்டிருந்தார்கள். அப்படியிருக்கையில் பரிசேயர்கள்
இயேசுவிடம் அடையாளம் கேட்டதுதான் மிகவும் வியப்பாக
இருக்கின்றது. ஒருவேளை இயேசுவால் அடையாளம் தரமுடியாத
பட்சத்தில் அவர் இறைவாக்கினர் கிடையாது என்ற செய்தியை
மக்களிடம் பரப்பலாம் என்ற எண்ணத்தில் பரிசேயர்கள் இயேசுவிடம்
அடையாளம் கேட்டிருக்கலாம் என்று சொல்லலாம்.
இயேசு தந்த அடையாளம்
வானத்திலிருந்து அடையாளம் ஒன்றைக் காட்டும் என்று பரிசேயர்கள்
இயேசுவிடம் கேட்டபொழுது, இயேசு பெருமூச்சு விட்டு, இத்தீய
தலைமுறையினருக்கு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது என்று
உறுதியாகச் சொல்கின்றார். மத்தேயு நற்செய்தியில், பரிசேயர்கள்
அடையாளம் கேட்டபொழுது, இயேசு யோனாவை அடையாளமாகத் தருவார் (மத்
16:4); ஆனால், மாற்கு நற்செய்தி நூலிலிருந்து எடுக்கப்பட்ட
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு எந்த அடையாளமும் தரப்பட
மாட்டாது என்று உறுதியாகக் கூறுகின்றார். இதற்கு முக்கியமான
காரணம், இந்த நிகழ்விற்கு முன்பு இயேசு எத்தனையோ வல்ல
செயல்களையும் அருமடையாளங்களையும் செய்திருப்பார். அவற்றைக்
கண்டு, சாதாரண மக்கள் இயேசுவின் நம்பிக்கை கொண்டார்கள். இந்தப்
பரிசேயர்கள்தான் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளாமல், அவரைச்
சோதித்துப் பார்க்கின்றார்கள். இதனாலேயே இயேசு அவர்களிடம்
அடையாளம் எதுவும் தரப்படமாட்டது என்று கூறுகின்றார்.
இயேசுவைத் தயக்கமின்றி ஏற்றுக்கொள்ளவேண்டும்
பரிசேயர்களுக்கு இயேசு அளித்த பதில் நமக்கொரு முக்கியமான
செய்தியை எடுத்துச் சொல்கின்றது. அது என்னவெனில், இயேசுவைத்
தயக்கமின்றி ஏற்றுக்கொள்ளவேண்டும்... அவரை நம்பவேண்டும்
என்பதாகும். பரிசேயர்களுக்கு இயேசுவின் நம்பிக்கை இல்லை.
அதனால் அவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை; ஆனால் நாம்
அப்படியிருக்கக்கூடாது. ஏனெனில், எபிரேயர் திருமுகத்தின்
ஆசிரியர் கூறுவதுபோல், "நம்பிக்கையினாலன்றி எவரும் கடவுளுக்கு
ஏற்புடையவர் ஆகமுடியாது" (எபி 11:6). ஆகையால், நாம் இயேசுவை
நம்புவோம். அவரைத் தயக்கமின்றி ஏற்றுக்கொள்வோம்.
சிந்தனை
"இயேசுவே இறைமகன் என ஏற்று அறிக்கையிடுவோரோடு கடவுள்
இணைந்திருக்கின்றார்; அவரோடு கடவுளும் இணைந்திருக்கின்றார்" (1
யோவா 4: 15) என்பார் புனித யோவான். ஆகையால், நாம் இயேசுவே
இறைமகன் என ஏற்றுக்கொண்டு அவரோடு இணைந்திருப்போம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மரியின் ஊழியர் சபையை நிறுவிய எழுவர் (பிப்ரவரி 17)
இயேசு அங்கிருந்து சென்றபோது மத்தேயு என்பவர் சுங்கச்
சாவடியில் அமர்ந்திருப்பதைக் கண்டார்; அவரிடம்,
"என்னைப்
பின்பற்றி வா" என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச்
சென்றார். (மத் 9:9)
வாழ்க்கை வரலாறு
பதிமூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இத்தாலியில் உள்ள
பிளாரென்ஸ் நகரில் மக்கள் கடவுளை மறந்து தங்களுடைய மனம்போன
போக்கில், உலகு சார்ந்த வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தார்கள்.
இவர்களுக்கு மத்தியில் கடவுள்மீது நம்பிக்கை கொண்ட எழுவர்
இருந்தனர். அவர்கள் எழுவரும் மரியன்னையின் மீது மிகுந்த
பக்திகொண்டு வாழ்ந்து வந்தார். 1233 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15 ஆம்
நாள், அதாவது மரியன்னையின் விண்ணேற்புப் பெருவிழா அன்று, மரியா
இவர்களுக்குக் காட்சி கொடுத்து இறைப்பணி செய்ய அழைத்தார். இந்த
ஏழுபேரும் இறைப்பணி செய்வதற்கு ஆர்வமாய் இருந்தார்கள். ஆனால்,
இவர்களில் நான்கு பேர் அருட்சாதனம்
முடித்திருந்தார்கள். மற்ற
மூன்று பேர் மணமுடிக்காமல் இருந்தார்கள். எனவே, இந்த நான்கு
பேரும் குடும்பத்தை ஓரளவு கரையேற்றி வைத்துவிட்டு, ஒரு
குறிப்பிட்ட நாளில் துறவு வாழ்க்கையை மேற்கொண்டார்கள்.
துறவு வாழ்க்கையை மேற்கொண்ட பிறகு இவர்கள் எழுவரும் பிளாரென்ஸ்
நகருக்கு வெளியே இருந்த லா கார்மார்சியா என்னும் இடத்தில்
வந்து தங்கி, அங்கே ஜெபத்திலும் தவத்திலும்
நிலைத்திருந்தார்கள். இதற்கிடையில் இவர்கள் இருக்கின்ற
இடத்தைக் கேள்விப்பட்ட பொதுமக்கள் இவர்களை வந்து சந்திப்பதும்
போவதுமாய் இருந்தார்கள். இது இவர்களுடைய ஜெப வாழ்விற்கு பெரிய
இடையூறாக இருக்க, இவர்கள் மொந்தே செனாரியோ என்னும் பாலைவனப்
பகுதிக்குச் சென்று, அங்கே ஓர் ஆலயம் எழுப்பி, அங்கே ஜெபித்து
வந்தார்கள். ஆனால், செய்தி அறிந்து மக்கள் அங்கேயும் சென்று,
அவர்களுக்கு இடையூறாக இருந்தார்கள். இதனால் அவர்கள் என்ன
செய்வதென்றே தெரியாமல் விழித்தார்கள். வந்தவர்களில் ஒருசிலர்
தாங்களும் அவர்களோடு இணைந்து துறவு வாழ்க்கை வாழ
ஆசைப்படுகின்றோம் என்று சொன்னபோது, அவர்கள் அதுவெல்லாம்
வேண்டாம் என்று சொல்லி மறுத்துவிட்டார்கள். இதற்கிடையில்
ஆயர்களான அற்றிங்கோ, கஸ்டிக்லியோன் எழுவரையும் சந்தித்து
ஊக்கப்படுத்தினார்கள்.
இது நடந்து ஒருசில நாட்கள் கழித்து, மரியன்னை மீண்டுமாக
அவர்களுக்கு காட்சி தந்தார். அவருடைய கையில் கருப்பு நிற ஆடை
இருந்தது. அவரோடு ஒரு வானதூதரும் காட்சி தந்தார். அவருடைய
கையில் சுருளேடு ஒன்று இருந்தது அதில் ஏழு பேருடைய பெயர்களும்
பொறிக்கப்பட்டிருந்தன. அப்போது மரியன்னை அவர்களிடம்,
"நான்
உங்களை என்னுடைய ஊழியர்களாகத் தேர்ந்துகொண்டேன். இந்த கருப்பு
நிற ஆடைதான் உங்களுடைய உடையாக இருக்கும். அதே நேரத்தில்
நீங்கள் தூய அகுஸ்தினாரின் ஒழுக்க நெறிகளை கடைப்பிடித்து
வாழுங்கள்" என்று சொல்லி மறைந்துவிட்டார். அதற்குப் பிறகு
அவர்கள் எழுவரும் மரியின் ஊழியர் என்றே அழைக்கப்பட்டனர்.
நாட்கள் செல்லச் செல்லச் அவர்கள் ஏழுபேரும் ஜெபத்திலும்
தவத்திலும் மேலும் மேலும் உறுதியானார்கள். அதே நேரத்தில்
அவர்களுடைய சபை மேலும் மேலும் வளர்ச்சி அடைந்தது. அந்த
ஏழுபேரும் ஒருவர் பின் ஒருவராக சபைத் தலைவராகிய, சபையை
வளர்ச்சிப் பாதையில் வழிநடத்திச் சென்றார்கள். அந்த எழுவரின்
பெயர்கள் முறையே, போன்பிலியுஸ், அலெக்சிஸ், அமதேயுஸ், ஹக்,
சொஸ்தேனஸ், மநேதுஸ் மற்றும் போனகுந்தா. இவ்வாறு சபை நாளொரு
மேனியும் பொழுதொரு வண்ணமாய் வளர்ந்துவர, 1304 ஆம் ஆண்டு,
அப்போது திருத்தந்தையாக இருந்த 11 ஆம் ஆசிர்வாதப்பர் இதனை
அதிகாரப்பூர்வமாக அங்கிகரித்தார். |
|