Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   15  பிப்ரவரி 2020  
    பொதுக்காலம் 5 ஆம் வாரம்
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 ++எரொபவாம் இரு பொன் கன்றுக் குட்டிகளைச் செய்தான்.

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 12: 26-32; 13: 33-34

அந்நாள்களில் "இப்போதுள்ள நிலை நீடித்தால் அரசு தாவீதின் வீட்டுக்கே திரும்பிச் சென்றுவிடும். ஏனெனில், இம்மக்கள் எருசலேமில் உள்ள ஆண்டவரின் இல்லத்தில் பலிசெலுத்த இனிமேலும் போவார்களானால், அவர்களது உள்ளம் யூதாவின் அரசன் ரெகபெயாம் என்ற தங்கள் தலைவனை நாடும்; என்னைக் கொலை செய்துவிட்டு யூதாவின் அரசன் ரெகபெயாம் பக்கம் சேர்ந்து கொள்வார்கள் என்று தன் இதயத்தில் எரொபவாம் சொல்லிக் கொண்டான். இதைப் பற்றித் தீரச் சிந்தித்து, அவன் பொன்னால் இரு கன்றுக் குட்டிகளைச் செய்தான். மக்களை நோக்கி, "நீங்கள் எருசலேமுக்குப் போய் வருவது பெருந்தொல்லை அல்லவா! இஸ்ரயேலரே! இதோ, உங்களை எகிப்து நாட்டிலிருந்து மீட்டுவந்த உங்கள் தெய்வங்கள்! என்றான். இவற்றுள் ஒன்றைப் பெத்தேலிலும் மற்றொன்றைத் தாணிலும் வைத்தான். இச்செயல் பாவத்துக்குக் காரணமாயிற்று. ஏனெனில் மக்கள் கன்றுக் குட்டியை வணங்கத் தாண் வரையிலும் செல்லத் தொடங்கினர். மேலும் அவன் தொழுகை மேட்டுக் கோவில்கள் கட்டி, லேவியரல்லாத சாதாரண மக்களை அவற்றில் குருக்களாக நியமித்தான். அதுவுமின்றி, யூதாவின் விழாவுக்கு இணையாக, எட்டாம் மாதம் பதினைந்தாம் நாள் எரொபவாம் ஒரு விழாவை எற்படுத்திப் பலிபீடத்தின் மேல் பலியிட்டான். அவ்வாறே பெத்தேலிலும் தான் செய்து வைத்த கன்றுக் குட்டிகளுக்குப் பலியிட்டான். மேலும் தான் அமைத்திருந்த தொழுகை மேடுகளின் குருக்களைப் பெத்தேலில் பணி செய்யும்படி அமர்த்தினான். இவற்றின் பின்னும் எரொபவாம் தன் தீய வழியை விட்டு விலகாமல் சாதாரண மக்களைத் தொழுகை மேட்டுக் குருக்களாக அமர்த்தினான். யார் விரும்பினார்களோ, அவர்களை அவன் திருநிலைப்படுத்த, அவர்கள் தொழுகை மேட்டுக் குருக்கள் ஆயினர். இச்செயல் எரொபவாமின் வீடு பாவத்திற்கு உள்ளாவதற்கும் மண்ணிலிருந்து அழிந்தொழிந்து போவதற்கும் காரணமாயிற்று.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 106: 6-7ab. 19-20. 21-22 (பல்லவி: 4a) Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவரே! உம் மக்கள்மீது இரக்கம் காட்டி என்னை நினைவுகூரும்.

6எங்கள் மூதாதையரின் வழிநடந்து, நாங்களும் பாவம் செய்தோம்; குற்றம் புரிந்தோம்; தீமை செய்தோம்.
7a எங்கள் மூதாதையர் எகிப்தில் நீர் செய்த வியத்தகு செயல்களைப் பற்றிச் சிந்திக்கவில்லை. - பல்லவி

19 அவர்கள் ஓரேபில் ஒரு கன்றுக்குட்டியைச் செய்துகொண்டனர்; வார்ப்புச் சிலையை விழுந்து வணங்கினர்;
20 தங்கள் "மாட்சி'க்குப் பதிலாக, புல் தின்னும் காளையின் உருவத்தைச் செய்துகொண்டனர். - பல்லவி

21
தங்களை விடுவித்த இறைவனை மறந்தனர்; எகிப்தில் பெரியன புரிந்தவரை மறந்தனர்;
22
காம் நாட்டில் அவர் செய்த வியத்தகு செயல்களை மறந்தனர்; செங்கடலில் அவர் செய்த அச்சுறுத்தும் செயல்களையும் மறந்தனர். - பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி (மத் 4: 4b)

அல்லேலூயா, அல்லேலூயா! மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நற்செய்தி வாசகம்

++திரளான மக்கள் வயிறார உண்டார்கள். 


மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 1-10


அக்காலத்தில் மீண்டும் பெருந்திரளான மக்கள் கூடியிருந்தார்கள். உண்பதற்கு அவர்களிடம் ஒன்றுமில்லை. இயேசு தம் சீடரை வரவழைத்து அவர்களிடம், "நான் இம்மக்கள் கூட்டத்தின்மீது பரிவு கொள்கிறேன். ஏற்கெனவே மூன்று நாள்களாக இவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். உண்பதற்கும் இவர்களிடம் எதுவுமில்லை. நான் இவர்களைப் பட்டினியாக வீட்டிற்கு அனுப்பி விட்டால் வழியில் தளர்ச்சி அடைவார்கள். இவர்களுள் சிலர் நெடுந்தொலையிலிருந்து வந்துள்ளனர்" என்று கூறினார். அதற்கு அவருடைய சீடர்கள், "இப்பாலைநிலத்தில் இவர்களுக்குப் போதுமான உணவு அளிப்பது எப்படி?" என்று கேட்டார்கள். அப்போது அவர் அவர்களைப் பார்த்து, "உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன?" என்று கேட்டார். அவர்கள் "ஏழு" என்றார்கள். தரையில் அமர மக்களுக்கு அவர் கட்டளையிட்டார்; பின்பு அந்த ஏழு அப்பங்களையும் எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, பிட்டு, பரிமாறும்படி தம் சீடர்களிடம் கொடுக்க, அவர்களும் மக்களுக்கு அளித்தார்கள். சிறு மீன்கள் சிலவும் அவர்களிடம் இருந்தன. அவற்றின்மீது அவர் ஆசி கூறிப் பரிமாறச் சொன்னார். அவர்கள் வயிறார உண்டார்கள்; மீதியாய் இருந்த துண்டுகளை ஏழு கூடைகள் நிறைய எடுத்தார்கள். அங்கு இருந்தவர்கள் ஏறக்குறைய நாலாயிரம் பேர். பின்பு அவர் அவர்களை அனுப்பிவிட்டார்; உடனடியாகத் தம் சீடருடன் படகேறித் தல்மனுத்தா பகுதிக்குச் சென்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 1 அரசர்கள் 12: 26-32; 13: 33-34

ஆண்டவரில் நம்பிக்கை வைக்காத எரோபவாம்

நிகழ்வு

ஒருமுறை அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் பெரியவர் ஒருவர் ஒரு டாலருக்கு இருபது தங்கக்காசுகள் என்று கூவிக் கூவி விற்றார். யாரும் அவரைச் சீண்டவில்லை. ஒருசிலர் "இது பெரிய ஏமாற்று வேலையாக இருக்கும்" என்று சொல்லிக் கடந்துபோனார்கள். இன்னும் ஒருசிலர், "தங்கம் விற்கிற விலையில் யாராவது ஒரு டாலருக்கு இருபது தங்கக்காசுகளைத் தருவார்களா?" என்று சொல்லிக் கடந்து போனார்கள். இப்படியே நேரம் கடந்துபோனதேயன்றி யாரும் அந்தப் பெரியவரின் அருகில் செல்லவில்லை.

மாலை ஆறு மணியாவதற்கு ஐந்து மணித்துளிகளுக்கு முன்பாக பெண்ணொருத்தி பெரியவரிடம் வந்தார். அவர் சிறிது தயக்கத்தோடு ஒரு டாலரை அந்தப் பெரியவரிடம் கொடுத்து, இருபது தங்க நாணயங்களை வாங்கிக்கொண்டு சென்றார். வீட்டிற்குப் போகிற வழியில் "இந்தக் காலத்தில் யாராவது ஒரு டாலருக்கு இருபது தங்க நாணயங்களைத் தருவார்களாக...? சரி இந்த இருபது நாணயங்களும் பிள்ளைகளுக்கு விளையாட்டுப் பொருளாக இருந்துவிட்டுப் போகட்டும்" என்று நினைத்துக் கொண்டே போனாள்.

வீட்டிற்குப் போனபின்பு அவள் தன்னுடைய கணவரிடம் நடந்ததையெல்லாம் சொல்லி தான் வாங்கிவந்திருந்த நாணயங்களை அவரிடம் கொடுத்தாள். அவற்றை வாங்கிப் பற்களால் கடித்தும் சுரண்டியும் பார்த்த அவளுடைய கணவர், அந்த நாணயங்கள் எல்லாம் உண்மையில் தங்க நாணயங்கள்தான் என்பதை உறுதிப்படுத்தினார். இதற்குப் பின்பு அவர் தன்னுடைய மனைவியிடம், "அவர்தான் தங்கம் தங்கம் என்று கூவிக் கூவி விற்றுக்கின்றாரே, நீ கொஞ்சம் கூடுதலாகத்தான் வாங்கிக்கொண்டு வரவேண்டியதுதானே!" என்று கடிந்துகொண்டார். பின்னர் அவர் தன் மனைவியிடம், "சரி வா இப்பொழுது நாம் அவரிடம் சென்று, தேவையான மட்டும் தங்கக் காசுகளை வாங்கிக்கொண்டு வருவோம்" என்று சொல்லிவிட்டு தன் மனைவியை அந்தப் பெரியவர் இருந்த இடத்திற்கு அழைத்துக் கொண்டு போனார்.

அவர்கள் அங்கு சென்றநேரம் பெரியவர் அங்கு இல்லை. "மறுநாள் காலையில் வந்து பார்ப்போம்" என்று மறுநாள் காலையில் அவர்கள் இருவரும் வந்து பார்த்தார்கள். அப்பொழுதும் அவர் அங்கு இல்லை. இதற்கிடையில் நகரில் இருந்த மக்களுக்கு "பெரியவர் விற்றது உண்மையான தங்கக்காசுகள்தான்" என்ற உண்மை தெரிய வந்தது. இதனால் அந்தக் கணவனும் மனைவியும் மட்டுமல்லாது, நகரில் இருந்த அத்தனை பேரும், "நம்முடைய நம்பிக்கையின்மையால் இப்படி அநியாயமாகத் தங்கக் காசுகளை இழந்துவிட்டோமே!" என்று வருத்தப்பட்டார்கள்.

மனிதர்களாகிய நாம் நம்முடைய அவநம்பிக்கையால் அல்லது நம்பிக்கையின்மையால் மிகப்பெரிய இழப்பினைச் சந்திக்கின்றோம் என்ற செய்தியை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக் கூறுகின்றது. இன்றைய முதல் வாசகம், எரோபவாம் ஆண்டவர்மீது நம்பிக்கை வைக்காமல் நடந்ததால், என்ன ஆயிற்று என்பதைக் குறித்து எடுத்துச் சொல்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

ஆண்டவரை நம்பாமல் பிற தெய்வங்களை நம்பிய எரோபவாம்

அரசர்கள் முதல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் எரோபவாம், தென்னாட்டில் அரசராக இருந்த ரெகபெயாமிருந்து ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சி உண்மைக் கடவுளான யாவே கடவுள்மீது நம்பிக்கை வைக்காமல், எகிப்து தெய்வங்களின்மீது நம்பிக்கை வைத்து, அவற்றுக்குக் கோயில் கட்டுகின்றார்.

ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர் அபியா வழியாக எரோபவாமிடம், "நான் கட்டளையிடும் அனைத்தையும் நீ கேட்டு, என் வழியில் நடந்து எனக்கு ஏற்புடையதைச் செய்தால்.... நான் உன்னோடு இருந்து இஸ்ரயேலை உன்னிடம் ஒப்படைப்பேன் என்றார்(1அர 11:38). ஆனால் எரோபவாம் ஆண்டவர்மீது நம்பிக்கை வைக்காமல் எகிப்து தெய்வங்களின் நம்பிக்கை வைத்தார். அவர் மட்டுமல்லாமல் மக்களும் எகிப்து தெய்வங்களின்மீது நம்பிக்கை கொள்ள வைத்து, அழிவைத் தேடிக்கொண்டார்.

அழிவைத் தேடிக்கொண்ட எரோபவாம்

எரோபவாம் ஆண்டவர்மீது நம்பிக்கை வைக்காமல், எகிப்து தெய்வங்களின்மீது நம்பிக்கை வைத்ததால் அவருடைய குடும்பம் பாவத்திற்கு உள்ளாகி, மண்ணிலிருந்து அழிந்துபோனது. ஆம், ஆண்டவராகிய கடவுள் "உன் கடவுளாகிய ஆண்டவர் நானே; என்னைத் தவிர வேறு கடவுள் உனக்கு இல்லாமல் போவதாக" என்று மோசே வழியாகச் சொன்னார். ஆனால், எரோபவாம் உண்மைக் கடவுளை மறந்துவிட்டு, பிற தேவைகளை வழிபட்டு அழிவைத் தேடிக்கொண்டார். சில சமயங்களில் நம்முடைய நம்பிக்கையின்மையே நம்முடைய அழிவிற்குக் காரணமாக அமைந்துவிடுகின்றது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

சிந்தனை

"மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்" (திபா 118: 8) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நாம் ஆண்டவரிடம் நம்பிக்கை வைத்து, அவரிடம் தஞ்சம் புகுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 மாற்கு 8: 1-10

மக்கள்கூட்டத்தின்மீது பரிவுகொண்ட இயேசு

நிகழ்வு

முதல் உலகப்போர் முடிந்தபொழுது இரஷ்யாவில் பஞ்சமும் பட்டினியும் தலைவிரித்தாடின. இப்பிரச்சனையை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் அந்நாட்டு அரசாங்கம் குழம்பிப்போய் நின்றது.

இச்செய்தியைக் கேள்விப்பட்ட சேலத்தைச் சேர்ந்த கொடைவள்ளலாகிய விஜயராகவர் என்பவர், அண்டைநாடாக இருந்துகொண்டு, அந்நாட்டிற்கு ஒன்றும் செய்யாமல் இருப்பது மிகப்பெரிய குற்றம். ஆகையால், அந்நாட்டில் உள்ளவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று யோசிக்கத் தொடங்கினார். இறுதியில் அந்நாட்டு அரசாங்கத்திடம் அரிசி அனுப்பி வைப்பதென முடிவுசெய்தார். இதன்படி இவர் இரண்டு கப்பல்கள் நிறைய பர்மா அரசி மூட்டைகளை இரஷ்ய நாட்டு அரசாங்கத்திற்கு அனுப்பி வைப்பார்.

இந்திய நாட்டிலிருந்து இப்படியோர் உதவி வருமென சிறிதும் எதிரிபார்த்திராத இரஷ்ய நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் விஜயராகவருக்கு ஒரு நன்றிக்கடிதம் எழுதி அனுப்பி வைத்தார். அதில், "இரஷ்ய நாடு உங்களுக்கு எப்பொழுதும் நன்றிக்கடன்பட்டிருக்கின்றது" என்ற வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.

இரஷ்ய நாட்டவர் உணவின்றிப் பட்டினி கிடந்தபொழுது, அவர்களைப் பார்த்து, அவர்கள்மீது பரிவுகொண்ட கொடைவள்ளல் விஜயராகவரின் செயல் உண்மையில் நம்முடைய பாராட்டிற்கு உரியதாக இருக்கின்றது. நற்செய்தியில் ஆண்டவர் இயேசு நான்காயிரம் பேருக்கு உணவளிக்கின்ற ஒரு நிகழ்வினைக் குறித்து வாசிக்கின்றோம். இந்த நிகழ்வு நமக்கு என்ன செய்தியை எடுத்துச் சொல்கின்றது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
எல்லா மக்கள்மீதும் இரங்கும் இயேசு

இயேசுவின் செல்வாக்கு எங்கும் பரவியதால், அவருடைய போதனையைக் கேட்கவும் அவரிடமிருந்து நலம்பெறவும் பல்வேறு இடங்களிலிருந்து ஏராளமான மக்கள் அவரிடம் வந்தார்கள்; மூன்று நாள்கள் அவரோடு தங்கி இருந்தார்கள். இதனால் அவர்களிடமிருந்த உணவானது தீர்ந்துபோனது. இதைக் கண்ணுற்ற இயேசு அவர்கள்மீது பரிவுகொண்டு, அவர்களுக்கு உணவளிப்பதுதான் இன்றைய நற்செய்தி வாசகமாக இருக்கின்றது.

இங்கு நாம் கவனிக்கவேண்டியது, இயேசு செய்த இந்த அருமடையாளம் பிறவினத்து மக்கள் அதிகமாக வாழ்ந்த பகுதி என்பதுதான். மாற்கு நற்செய்தி ஆறாம் அதிகாரத்தில் இடம்பெறும் இயேசு "ஐயாயிரம் பேருக்கு" உணவளிக்கும் நிகழ்வு யூதர்களுடைய பகுதியில் நடந்தது; ஆனால், இன்றைய நற்செய்தியில் இடம்பெறுகின்ற இயேசு "நான்காயிரம் பேருக்கு" உணவளிக்கும் நிகழ்வானது பிறவினத்தார் பகுதியில் நடக்கின்றது. இதன்மூலம் இயேசு எல்லா மக்கள்மீதும் இரங்குகின்றவர், அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்கின்றவர் என்ற உண்மையானது நிரூபிக்கப்படுகின்றது.

திருப்பாடல் 145: 15 ல் இவ்வாறு வாசிக்கின்றோம்: "எல்லா உயிர்களின் கண்களும் உம்மையே நோக்குகின்றன. தக்கவேளையில் நீர் அவற்றிற்கு உணவளிக்கின்றீர். இவ்வார்த்தைகள் இயேசுவில் அப்படியே நிறைவேறுகின்றன.

சீடர்களின் நம்பிக்கையின்மை

இயேசு தன்னைத் தேடிவந்த மக்கள்கூட்டத்தின்மீது பரிவுகொண்டு அவர்களுக்கு உணவளிக்க நினைத்தார். இதுகுறித்து அவர் தன்னுடைய சீடர்களிடம் பேசுகின்றபொழுது, அவர்கள், "இப்பாலைநிலத்தில் இவர்களுக்குப் போதுமான உணவளிப்பது எப்படி? என்று தங்களுடைய இயலாமையை வெளிப்படுத்துகின்றார்கள். இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு, ஐயாயிரம் பேருக்கு உணவளித்ததை இவர்கள் கண்கூடாகக் கண்டிருந்தார்கள். அப்படியிருந்தும் இயேசுவின் மீது நம்பிக்கைகொள்ளாமல், தங்களின் இயலாமையை வெளிப்படுத்துகின்றார்கள். இயேசுவின் சீடர்களைப் போன்றுதான் நாமும் பலநேரங்களில் இறைவன் நம்முடைய வாழ்வில் செய்த பல்வேறு அற்புதங்களைக் கண்டும் அவர்மீது நம்பிக்கை கொள்ளாமல் இருக்கின்றோம். இந்நிலையை நம்மிடமிருந்து தவிர்ப்பது நல்லது.

இயேசுவின் பரிவு

சீடர்கள் தங்களால் ஒன்றும் செய்யமுடியாது என்று இருக்கையில், மக்கள்மீது பரிவுகொண்டிருந்த, அவர்களுக்கு உணவுகொடுக்காமல் விட்டால், வழியிலேயே மயங்கி விழுந்துவிடுவார்கள் என்று நினைத்த இயேசு, அவர்களிடமிருந்த ஏழு அப்பங்களையும் சில மீன்துண்டுகளையும் கொண்டு நான்காயிரம் பேருக்கு உணவளிக்கின்றார். இதில் முக்கியமான ஓர் உண்மை இருக்கின்றது. அது என்னவெனில், மக்கள்மீது பரிவுகொண்டு, அவர்களுக்கு உணவளிக்க விரும்பி இயேசு, ஏழு அப்பங்களையும் சில மீண்டுகளையும் பெற்றுக்கொண்டு அவற்றின்மீது ஆசி, தன் சீடர்கள் வழியாக மக்களுக்குக் கொடுக்கின்றார் என்பதுதான். அப்படியானால், இறைவன நம் ஒவ்வொருவருக்கும் கொடுத்திருக்கின்ற கொடைகளை சீடர்களைப் போன்று மக்களுக்குப் பகிர்ந்துகொடுக்கவேண்டும். இதை நம் ஒவ்வொருடைய கடமை என்று உணர்ந்து செயல்பட்டால், இல்லாமை என்பது இல்லாமல் போகும் என்பது உறுதி.

சிந்தனை

"ஆண்டவர் மிகுந்த பரிவுள்ளமும் இரக்கமும் கொண்டவர்" (யாக் 5:11 என்பார் புனித யாக்கோபு. ஆகையால், நாம் இயேசுவைப் போன்று தேவையில் உள்ள மக்கள்மீது பரிவும் இரக்கமும் கொண்டு வாழ்வோம். நம்மிடமிருப்பதைப் பகிர்ந்து கொடுப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!