|
|
14
பிப்ரவரி 2020 |
|
|
பொதுக்காலம்
5 ஆம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
++தாவீதின் குடும்பத்திலிருந்து இஸ்ரயேல் குலம் பிரிக்கப்பட்டது.
அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 11: 29-32; 12: 19
ஒரு
நாள் எரொபவாம் எருசலேமிலிருந்து வெளியே போனபோது, சீலோவைச்
சார்ந்த அகியா என்ற இறைவாக்கினர், அவனை வழியில் கண்டார். அவர்
புதுச் சால்வை ஒன்று அணிந்திருந்தார். இருவரும் வயல் வெளியே தனித்திருந்தனர்.
அப்பொழுது அகியா தாம் போர்த்தியிருந்த புதுச் சால்வையை எடுத்து
அதைப் பன்னிரு துண்டுகளாய்க் கிழித்தார். பிறகு அவர் எரொபவாமை
நோக்கிப் பின்வருமாறு கூறினார்: "இவற்றில் பத்துத் துண்டுகளை
உனக்கென எடுத்துக்கொள். ஏனெனில் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர்
உனக்கு இவ்வாறு கூறுகிறார்: "இதோ, நான் சாலமோன் கையினின்று அரசைப்
பறித்து, பத்துக் குலங்களை உனக்கு அளிக்கப் போகிறேன். ஆயினும்
என் ஊழியன் தாவீதை முன்னிட்டும், இஸ்ரயேலரின் நகர்கள் அனைத்திலிருந்தும்
நான் தேர்ந்துகொண்ட எருசலேம் நகரை முன்னிட்டும் ஒரு குலம் மட்டும்
அவன் கையில் இருக்கும்.' " தாவீதின் குடும்பத்துக்கு எதிராக
அன்று கிளர்ந்தெழுந்த இஸ்ரயேலர் இன்றுவரை அவ்வாறே இருக்கின்றனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 81: 10-11ab. 12-13. 14-15 (பல்லவி: 10a, 8c)
Mp3
=================================================================================
பதிலுரைப் பாடல்
திபா 81: 10-11ab. 12-13. 14-15 (பல்லவி: 10a, 8c)
பல்லவி: கடவுளாகிய ஆண்டவர் நானே; நீங்கள் எனக்குச்
செவிசாய்ப்பீர்.
9உங்களிடையே வேற்றுத் தெய்வம் இருத்தலாகாது; நீங்கள் அன்னிய
தெய்வத்தைத் தொழலாகாது.
10a
உங்களை எகிப்து நாட்டினின்று அழைத்து வந்த கடவுளாகிய ஆண்டவர்
நானே. - பல்லவி
11ஆனால் என் மக்கள் என் குரலுக்குச் செவிசாய்க்கவில்லை; இஸ்ரயேலர்
எனக்குப் பணியவில்லை.
12எனவே, அவர்கள் தங்கள் எண்ணங்களின்படியே நடக்குமாறு, அவர்களின்
கடின இதயங்களிடமும் அவர்களை விட்டு விட்டேன். - பல்லவி
13என் மக்கள் எனக்குச் செவிசாய்த்திருந்தால், இஸ்ரயேலர் நான்
காட்டிய வழியில் நடந்திருந்தால், எவ்வளவோ நலமாயிருந்திருக்கும்.
14நான் விரைவில் அவர்கள் எதிரிகளை அடக்குவேன், என் கை அவர்களின்
பகைவருக்கு எதிராகத் திரும்பும். - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி (திப 16: 14b)
அல்லேலூயா, அல்லேலூயா! உம் திருமகனின் சொற்களை எங்கள் மனத்தில்
இருத்தும்படி ஆண்டவரே, எங்கள் இதயத்தை திறந்தருளும். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
++காது கேளாதோர் கேட்கவும், பேச்சற்றோர் பேசவும், ஆண்டவர்
செய்கிறார்.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7:
31-37
இயேசு தீர் பகுதியை விட்டு, சீதோன் வழியாகச் சென்று தெக்கப்பொலி
பகுதி நடுவே வந்து, கலிலேயக் கடலை அடைந்தார். காது கேளாதவரும்
திக்கிப் பேசுபவருமான ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்து,
அவர்மீது கை வைத்துக் குணமாக்குமாறு அவரை வேண்டிக்கொண்டனர். இயேசு
அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று, தம் விரல்களை
அவர் காதுகளில் இட்டு, உமிழ் நீரால் அவர் நாவைத் தொட்டார்; பிறகு
வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி,
"எப்பத்தா" அதாவது `திறக்கப்படு' என்றார். உடனே அவருடைய காதுகள்
திறக்கப்பட்டன; நாவும் கட்டவிழ்ந்தது. அவர் தெளிவாகப்
பேசினார். இதை எவருக்கும் சொல்ல வேண்டாமென்று அவர்களுக்கு அவர்
கட்டளையிட்டார். அவரது கட்டளைக்கு நேர்மாறாக இன்னும்
மிகுதியாய் அவர்கள் அதை அறிவித்து வந்தார்கள். அவர்கள் அளவு
கடந்த வியப்பில் ஆழ்ந்தவர்களாய், "இவர் எத்துணை நன்றாக யாவற்றையும்
செய்து வருகிறார்! காது கேளாதோர் கேட்கவும் பேச்சற்றோர் பேசவும்
செய்கிறாரே!" என்று பேசிக்கொண்டார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
1 அரசர்கள் 11: 29-32; 12:19
உன்னைவிட்டு விலகாத ஆண்டவரை விட்டு விலகாதே நீ
நிகழ்வு
மிகப்பெரிய மறைப்பணியாளரான டேவிட் லிவிங்ஸ்டன் இறந்தபோது அவருடைய
உடலுக்கு மரியாதை செலுத்த பலர் வந்துபோய்க்கொண்டிருந்தார்கள்.
அவர்களோடு மிகவும் அழுக்குப் படிந்த உடையணிந்த ஒருவர் வந்தார்.
அவர் டேவிட் லிவிங்ஸ்டனின் உடலுக்கு மரியாதை செலுத்துவிட்டு
தேம்பித் தேம்பி அழுதார்.
அவரைப் பார்த்துவிட்டு டேவிட் லிவிங்ஸ்டனின் உறவினர்கள் அவரிடம்,
"நீங்கள் யார்? உங்களுக்கு இவரை எப்படித் தெரியும்? என்று
கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர் அவர்களிடம், "டேவிட் லிவிங்ஸ்டனும்
நாம் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். பிறகு இவர் ஆண்டவர் இயேசுவால்
தொடப்பட்டு, ஆப்பிரிக்காவிற்கு நற்செய்தி அறிவிக்கச் சென்று மிகப்பெரிய
மறைப்பணியாளரானார். நான்தான் ஆண்டவரை மறந்து போதைப் பழக்கத்திற்கு
அடிமையாகி, என்னுடைய வாழ்க்கையை இப்படிச் சீரழித்து
வைத்திருக்கின்றேன். ஒருவேளை நானும் இவரைப் போன்று ஆண்டவரைத்
தேடி, அவருடைய வழியில் நடந்திருந்தால், என்னுடைய வாழ்க்கை எப்படியோ
இருந்திருக்கும்" என்று வருத்ததோடு சொன்னார்.
மேலே உள்ள நிகழ்வில் வருகின்ற டேவிட் லிவிங்ஸ்டனின் வகுப்புத்
தோழரின் வாழ்க்கை நமக்கு ஓர் உண்மையை மிக ஆணித்தரமாக எடுத்துக்
கூறுகின்றது. அது என்னவெனில், நாம் ஆண்டவரை மறந்து, அவரை
விட்டு அகன்றுசென்றால், நம்முடைய வாழக்கை சீரழிந்துவிடும் என்பதாகும்.
அதே நேரத்தில் நாம் ஆண்டவரோடு ஒன்றித்திருந்து, அவருடைய
வழியில் நடந்தால், அவரது ஆசி மேலும் மேலும் நம்மில் தங்கும்.
இன்றைய முதல் வாசகம் சாலமோன் அரசர் ஆண்டவரை விட்டு விலகிச்
சென்றதால், என்ன நடந்தது என்பதைக் குறித்து எடுத்துச் சொல்கின்றது.
அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
ஆண்டவரை மறந்த சாலமோன் அரசர்
இஸ்ரயேல் மக்களை தாவீதுக்குப் பின் அரசாளத் தொடங்கிய சாலமோன்
அரசர் வேற்றினத்துப் பெண்களை மணந்தார். இதனால் அவர்கள் அவரைத்
தங்களுடைய தெய்வங்களை வழிபடச் செய்துசெய்துவிட்டார்கள். யாவே
இறைவன் இஸ்ரயேல் மக்களிடம், "நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; என்னைத்
தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது" (விப 20: 2-3) என்று
தன்னுடைய ஊழியர் மோசே வழியாக கட்டளை தந்தார். அந்தக் கட்டளையை
சாலமோன் அரசர் வசதியாக மறந்துவிட்டுப் பிற தேவைகளை வழிபடத் தொடங்கினார்.
இதனால் கடவுளின் சினம் அவர்மேல் எழ, "நான் உனக்கு விதித்த நியமங்களையும்
மீறி, நீ இவ்வாறு நடந்து கொண்டதால் உன் அரசை உன்னிடமிருந்து பறித்து
அதை உன் பணியாளனுக்குக் கொடுக்கப்போவது உறுதி" என்று
கூறுகின்றார்.
ஆண்டவர் சாலமோனிடம் சொன்னது நிறைவேறியதா என்பதைத் தொடர்ந்து
நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
எரொபவாம் வடநாட்டிற்கு அரசராதல்
ஆண்டவராகிய கடவுள் சாலமோன் அரசரிடம் சொன்னது நிறைவேறுகின்றது.
அதுதான் இன்றைய முதல் வாசகமாக அமைந்திருக்கின்றது. இன்றைய முதல்
வாசகத்தில் இறைவாக்கினர் அகியா தான் போர்த்தியிருந்த புதுச்
சால்வையை பன்னிரண்டு துண்டுகளாகக் கிழித்து, அவற்றில் பத்துத்
துண்டுகளை எரொபவாமிடம் கொடுத்து, ஆண்டவர் அவருக்குச் சொன்னதைச்
சொல்கின்றார். இந்த எரொபவாம் எப்ரோயிமைச் சார்ந்த நெபாற்று என்பவர்
மகன்; சாலமோன் அரசரின் பணியாளருள் ஒருவர். ஆற்றல்மிக்கவரும் செயல்
திறன்மிக்கவருமாய் இருந்த இவரை சாலமோன் அரசர் யோசேப்பின்
வீட்டிலிருந்து கட்டாய வேலைசெய்ய வந்தவர்களைக் கண்காணிக்குமாறு
சொல்லியிருந்தார். இப்படிப்பட்டவரைத் தான் ஆண்டவர் சாலமோனுக்குப்
பின் இஸ்ரயேல் மக்கள் அரசாளச் செய்கின்றார்.
ஆண்டவருக்கு உரியவற்றை நாடுவோம்
இன்றைய இறைவார்த்தையைக் கருத்தூன்றிப் படிக்கின்றபொழுது ஒரு
சிந்தனை மேலோங்கி வருகின்றது. அதுதான் நாம் ஆண்டவருக்கு உரியவற்றை
நாடவேண்டும் என்பதாகும். சாலமோன் அரசர் ஆண்டவருக்கு உகந்தவற்றை
நாடவில்லை; தேடவில்லை. அதனால் அவரிடமிருந்து அரசாட்சி பறிக்கப்பட்டு,
அவருடைய பணியாளர்களுள் ஒருவருக்குக் கொடுக்கப்பட்டது. அப்படியானால்
நாம் ஒவ்வொருவரும் ஆண்டவருக்கு உகந்தவற்றை நாடித் தேடவேண்டும்.
அப்பொழுதுதான் நாம் ஆண்டவரின் ஆசியைப் பெற்றுக்கொள்ளமுடியும்.
இறைவாக்கினர் ஆமோஸ் இவ்வாறு கூறுவார்: "ஆண்டவரைத் தேடுங்கள்;
நீங்கள் வாழ்வீர்கள்." (ஆமோ 5:4). ஆகையால், நாம் ஆண்டவரைத்
தேடி அவருடைய திருவுளத்தின் படி நடக்கும் மக்களாய் வாழ்வோம்.
சிந்தனை
"ஆகவே, அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும்
நாடுங்கள். அப்பொழுது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக்
கொடுக்கப்படும்" (மத் 6:33) என்பார் இயேசு. எனவே, நாம் கடவுளைத்
தேடி, அவருடைய திருவுளத்தின்படி நடக்கும் மக்களாவோம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மாற்கு 7: 31-37
"இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே
அழைத்துச் சென்றார்"
நிகழ்வு
அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியாவில் இருந்த ஒரு வசதியான குடும்பத்தில்
பிறந்தவர் கேத்ரின் ட்ரெக்சல் (Katherine Drexel) என்பவர்.
ஒருமுறை இவர் அமெரிக்காவில் உள்ள ஒரு சேரியின் வழியாகச்
சென்றுகொண்டிருக்கும்பொழுது அங்கிருந்த மக்களின் வாழ்க்கையைப்
பார்த்துவிட்டு மிகவும் அதிர்ந்துபோனார். காரணம் அந்த மக்களின்
வாழ்க்கை அவ்வளவு பரிதாபமாக இருந்தது. அப்பொழுது அவருக்குள் ஓர்
எண்ணம் தோன்றியது. "இந்த மக்களுடைய வாழக்கையை உயர்த்த இவர்களுக்காக
ஒரு சபையைத் தொடங்கினால் என்ன?" என்பதுதான் அந்த எண்ணம்.
உடனே இவர் மேலிடத்திலிருந்து உரிய அனுமதியைப் பெற்று, ஒரு சபையைத்
தொடங்கி, அந்த மக்களுக்காகத் தன்னுடைய வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்தார்.
இதனால் இவர் 2000 ஆம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலால்
புனிதையாக உயர்த்தப்பட்டார்.
புனித கேத்ரின் ட்ரெக்சல் சேரியில் வாழ்ந்த மக்கள்மீது மிகுந்த
அன்பும் பரிவும் கொண்டார். அதனால் அவர்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்து
அவர்களுடைய வாழ்வில் புது ஒளி ஏற்றினார். நற்செய்தியில் ஆண்டவர்
இயேசு காது கேளாதவரும் திக்கப் பேசுபவருமான ஒருவர்மீது பரிவுகொண்டு
அவருடைய வாழ்வில் புது ஒளியை ஏற்றி வைக்கின்றார். அது குறித்து
இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
மாற்கு நற்செய்தியில் மட்டும் இடம்பெறும் நிகழ்வு
நற்செய்தியில் இயேசு தீர், சீதோன் வழியாக தெக்கப்போலி வந்து கலிலியேக்
கடலை அடைகின்றார். அங்கு அவரிடம் சிலர், காதுகேளாதவரும்
திக்கிப்பேசுபவருமான ஒருவரைக் கொண்டுவந்து, அவரைத் தொட்டு நலப்படுத்துமாறு
கேட்கின்றார்கள். மாற்கு நற்செய்தியில் மட்டுமே இடம்பெறும் இந்த
நிகழ்வு நமக்கு ஒருசில உண்மைகளை மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றது.
அவை என்னென்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.
ஒவ்வொருவருக்கும் தனிக்கவனம் செலுத்தும் இயேசு
காதுகேளாதவரும் திக்கிப்பேசுபவருமான மனிதரை இயேசுவிடம் கொண்டுவருகின்ற
சிலர், அவரைத் தொட்டு நலப்படுத்துமாறு கேட்கின்றபோழுது, இயேசு
அவரைத் தனியாக அழைத்துக்கொண்டு போய் நலப்படுத்துகின்றார். இயேசு
ஏன் இவ்வாறு செய்தார் என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும்.
பொதுவாக மனிதர்கள் ஒரு பார்வையற்றவரையோ அல்லது கால் ஊனமுற்றவரையோ
கண்டால் அவர்மீது பரிதாபப்படுவார்கள் (!). சிலர் அதைக்கூடச்
செய்யமாட்டார்கள் என்பது இன்னும் கசப்பான உண்மை. ஆனால்,
காதுகேளாதவரின் நிலை இதைவிடக் கொடியது. ஏனென்றால் காதுகேளாதவரைக்
கண்டால், மக்கள் அவரைக் கேலி செய்வார்களே அன்றி, இரக்கப்பட
மாட்டார்கள். ஒருசில விதிவிலக்குகள் இருக்கலாம். இப்படிப்பட்ட
நிலைமைதான் கேளாதவர்களின் நிலைமை. இதை நன்கு உணர்ந்த இயேசு
காதுகேளாதவரும் திக்கிப்பேசுபவருமான மனிதரை எல்லாருக்கும்
முன்பாக வைத்து நலப்படுத்தாமல், அவரைத் தனியே அழைத்துச் சென்று
நலப்படுத்துகின்றார். இதுவே இயேசு ஒவ்வொருவர்மீதும் தனிக்கவனம்
செலுத்துகின்றார் என்பதற்குச் சான்றாக இருக்கின்றது.
காதுகேளாதவரும் திக்கிப்பேசுபவருமான மனிதரைத் தனியே அழைத்துச்
செல்லும் இயேசு அவருடைய காதுகளில் தம் விரலையிட்டு,
உமிழ்நீரால் அவருடைய நாவைத்தொட்டு, வானத்தை அண்ணார்ந்து
பார்த்து "எப்பத்தா" என்கின்றார். இதில் இயேசு செய்கின்ற
ஒவ்வொரு செயலும் கவனத்திற்குரியது. காதுகேளாதவரும்
திக்கிப்பேசுபவருமான மனிதரை இயேசுவிடம் கொண்டுவந்த மனிதர்கள்
கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப இயேசு தன்னுடைய விரலாலும் நாவாலும்
அவரைத் தொடுக்கின்றார். மட்டுமல்லாமல், வானத்தை அண்ணார்ந்து
பார்ப்பதன் மூலம் தந்தைக் கடவுளின் அருளையும் இரக்கத்தையும்
அவருக்காக வேண்டி, அவரை பேசவும் கேட்கவும் செய்கின்றார்.
இவ்வாறு இயேசு தன்னை பரிவன்புமிக்கவராக நிலைநிறுத்துகின்றார்.
எவருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்ட இயேசு
இயேசு காதுகேளாதவரும் திக்கிப்பேசுபவருமான மனிதரை
நலப்படுத்திவிட்டு, அவரிடம், "இதை எவருக்கும் சொல்லவேண்டாம்"
என்று கட்டளையிடுகின்றார். இயேசு அந்த மனிதரிடம் சொல்லவேண்டாம்
என்று கட்டளையிடுவது என்பது கண்டிப்பாய்ச் சொன்னார் என்ற
பொருளில் எடுத்துக் கொள்ளலாம். இயேசு அவரிடம் ஏன் அவ்வாறு
சொல்லவேண்டும் என்று தெரிந்துகொள்வது நல்லது.
ஒருவேளை அந்த மனிதர் மக்களிடம் சென்று நடந்தது அனைத்தையும்
சொன்னால், மக்கள் இயேசுவை வெறுமென அருமடையாளம்
நிகழ்த்துபவராகவே மட்டும் பார்க்கக்கூடும்.. அது தன்னுடைய
பணிக்கு மிகப்பெரிய தடையாக இருக்கும் என்பதாலேயே இயேசு அவரிடம்
அவ்வாறு சொல்கின்றார். ஆனால், இயேசு அவரிடம் சொன்னதற்கு மாறாக,
நடந்ததை அவர் எல்லாரிடமும் சொல்கின்றார். இதனால் இயேசு சற்றுத்
தனித்திருக்கும் நிலை ஏற்படுகின்றது.
இயேசு அருமடையாளங்கள் நிகழ்த்துபவர் மட்டுமல்ல; அவர் இறைமகன்,
மெசியா என்ற புரிதல் நமக்கு இருப்பது நல்லது.
சிந்தனை
"ஒருவர்க்கொருவர் அன்பும் கருணையும் காட்டுங்கள்" (செக் 7:9)
என்பார் இறைவாக்கினர் செக்கரியா. ஆகையால், நாம் இயேசுவைப்
போன்று எளியவர், வறியவர் ஆகியோரிடம் அன்பும் பரிவும்
காட்டுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|