Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   13  பிப்ரவரி 2020  
    பொதுக்காலம் 5 ஆம் வாரம்
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 ++என் உடன்படிக்கையை நீ மீறினதால், உன் அரசைக் கூறு கூறாக்குவோம். தாவீதின் பொருட்டு ஒரு கோத்திரத்தை உன் மகனுக்கு அளிப்போம்.

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 11: 4-13

அந்நாள்களில் சாலமோன் முதுமை அடைந்தபோது, அவருடைய மனைவியர் அவர் இதயத்தை வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றும்படி மாற்றிவிட்டனர். அதனால் அவர் உள்ளம் தம் தந்தை தாவீதின் உள்ளத்தைப்போல் கடவுளாகிய ஆண்டவருக்கு முற்றிலும் பணிந்திருக்கவில்லை. சாலமோன் சீதோனியரின் தேவதையான அஸ்தரேத்தையும் அம்மோனியரின் அருவருப்பான மில்கோமையும் வழிபடலானார். இவ்வாறு சாலமோன், ஆண்டவர் பார்வையில் தீயதெனப் பட்டதைச் செய்தார். தம் தந்தை தாவீது ஆண்டவரை முழுமையாகப் பின்பற்றியது போன்று அவர் செய்யவில்லை. சாலமோன் எருசலேமுக்கு எதிரில் இருந்த மலையில் மோவாபியரின் அருவருப்பான கெமோசுக்கும் அம்மோனியரின் அருவருப்பான மோலேக்குக்கும் தொழுகை மேடுகளைக் கட்டினார். இப்படியே தங்கள் தெய்வங்களுக்குத் தூபம் காட்டிப் பலியிடுவதற்காக, வேற்றினத்தாரான தம் மனைவியர் எல்லாருக்கும் சாலமோன் இவ்வாறு செய்து கொடுத்தார். ஆண்டவர் சாலமோன்மீது சினமுற்றார். ஏனெனில் தமக்கு இருமுறை காட்சியளித்திருந்த இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரிடமிருந்து அவர் இதயம் விலகிச் சென்றது. வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்ற வேண்டாம் என்று ஆண்டவர் அவருக்குக் கட்டளையிட்டிருந்தும், அக்கட்டளையை அவர் கடைப்பிடிக்கவில்லை. ஆகையால் ஆண்டவர் சாலமோனை நோக்கி, "நான் உன்னோடு செய்த உடன்படிக்கையையும், நான் உனக்கு விதித்த நியமங்களையும் மீறி, நீ இவ்வாறு நடந்துகொண்டதால் உன் அரசை உன்னிடமிருந்து பறித்து அதை உன் பணியாளனுக்குக் கொடுக்கப்போவது உறுதி. ஆயினும் உன் தந்தை தாவீதின் பொருட்டு, உன் காலத்தில் நான் இதைச் செய்யமாட்டேன். உன் மகன் கையினின்று அதைப் பறித்து விடுவேன். ஆயினும் அரசு முழுவதையும் பறித்துவிடாமல், என் அடியான் தாவீதின் பொருட்டும் நான் தேர்ந்து கொண்ட எருசலேமின் பொருட்டும் ஒரு குலத்தை உன் மகனிடம் விட்டுவைப்பேன்" என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 106: 3-4. 35-36. 37,40 (பல்லவி: 4a) Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவரே! உம் மக்கள்மீது இரக்கம் காட்டி என்னை நினைவுகூரும்!
3நீதிநெறி காப்போர் பேறுபெற்றோர்! எப்போதும் நேரியதே செய்வோர் பேறுபெற்றோர்!
4ஆண்டவரே! நீர் உம் மக்கள்மீது இரக்கம் காட்டும்போது என்னை நினைவுகூரும்! அவர்களை நீர் விடுவிக்கும்போது எனக்கும் துணை செய்யும்! - பல்லவி

35வேற்றினத்தாரோடு கலந்து உறவாடி, அவர்களின் வழக்கங்களைக் கற்றுக்கொண்டனர்;
36அவர்களின் தெய்வச் சிலைகளைத் தொழுதனர்; அவையே அவர்களுக்குக் கண்ணிகளாயின. - பல்லவி

37அவர்கள் தங்கள் புதல்வர், புதல்வியரைப் பேய்களுக்குப் பலியிட்டனர்;
40எனவே, ஆண்டவரின் சினம் அவர்தம் மக்களுக்கெதிராகப் பற்றியெரிந்தது; தமது உரிமைச் சொத்தை அவர் அருவருத்தார். - பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 (யாக் 1: 21)

அல்லேலூயா, அல்லேலூயா! உங்களிடம் மிகுந்துள்ள தீமையை அகற்றி, உங்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப் பணிவோடு ஏற்றுக்கொள்ளுங்கள். அதுவே உங்களை மீட்க வல்லது. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
++சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே! 

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 24-30

அக்காலத்தில் இயேசு புறப்பட்டுத் தீர் பகுதிக்குள் சென்றார். அங்கே அவர் ஒரு வீட்டிற்குள் போனார்; தாம் அங்கிருப்பது எவருக்கும் தெரியாதிருக்க வேண்டுமென்று விரும்பியும் அதை மறைக்க இயலவில்லை. உடனே பெண் ஒருவர் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு உள்ளே வந்து, அவர் காலில் விழுந்தார். அவருடைய மகளைத் தீய ஆவி பிடித்திருந்தது. அவர் ஒரு கிரேக்கப் பெண்; சிரிய பெனிசிய இனத்தைச் சேர்ந்தவர். அவர் தம் மகளிடமிருந்து பேயை ஓட்டிவிடுமாறு அவரை வேண்டினார். இயேசு அவரைப் பார்த்து, "முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல'' என்றார். அதற்கு அப்பெண், "ஆம் ஐயா, ஆனாலும் மேசையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்னுமே'' என்று பதிலளித்தார். அப்பொழுது இயேசு அவரிடம், "நீர் இப்படிச் சொன்னதால் போகலாம்; பேய் உம் மகளை விட்டு நீங்கிற்று'' என்றார். அப்பெண் தம் வீடு திரும்பியதும் தம் பிள்ளை கட்டிலில் படுத்திருக்கிறதையும் பேய் ஓடிவிட்டதையும் கண்டார்.


ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 1 அரசர்கள் 11: 4-13

ஆண்டவருக்குக் நம்பிக்குரியவராய் இல்லாமல்போன சாலமோன் அரசர்

நிகழ்வு

ஸ்காட்லாந்து நாட்டில் ஆடு மேய்க்கும் இளைஞன் ஒருவன் இருந்தான். அவனுக்கென்று சொந்த பந்தம் என்று யாரும் கிடையாது. அவனிடம் இருந்த நாய்தான் அவனுக்கென்று இருந்த ஒரே சொந்தமாக இருந்தது. அது அவன் எங்கு போனாலும் அவன்கூடவே போகும் வரும். அந்தளவுக்கு அந்த நாய் அவனுக்கு மிகவும் நம்பிக்கைக்குரியதாய் இருந்தது.

சில நாள்கள் கழித்து அந்த ஆடு மேய்க்கும் இளைஞன் திடீரென இறந்துபோனான். அவனுக்கு அறிமுகமான சிலர் இறந்த அவனுடைய உடலைக் கல்லறைக்குத் தூக்கிக்கொண்டு சென்று, அடக்கம் செய்துவிட்டுத் தங்களுடைய வீட்டிற்குத் திரும்பிச் சென்றார்கள்; ஆனால் அவனுடைய நாய் மட்டும் அங்கிருந்து அகலாமல், அவனது கல்லறைக்கு அருகிலேயே படுத்துக்கொண்டது. நாள்கள் மெல்ல உருண்டோடின. அந்த நாய் அங்கிருந்து அகலாமல் அப்படியே இருந்தது. ஒருசிலர் அந்த நாயைப் பார்த்துப் பரிதாபப்பட்டு ஒருசில நாள்கள் அதற்கு தண்ணீரும் உணவும் வைத்தார்கள். மற்ற நாள்கள் அது பட்டினியாகவே கிடந்தது. இப்படிப் பன்னிரண்டு ஆண்டுகள் தன் தலைவனுடைய கல்லறைக்கு அருகிலேயே படுத்துக்கிடந்த அந்த நாய் ஒருநாள் இறந்துபோனது. அதைப் பார்த்துவிட்டு ஒருசிலர் "இப்படியெல்லாம் ஒரு நாய் தன்னுடைய தலைவனுக்கு நம்பிக்கைக்குரியதாய் இருக்குமா...?" என்று வியந்து நின்றார்கள்.

தன் தலைவன் இறந்தபின்னும் அவனை விட்டு நீங்காமல், அவனோடு இருந்து, இறந்த இந்த நாய் நமது கவனத்திற்குரியதாக இருக்கின்றது. மனித வாழ்க்கையில் நமக்கு மேலே உள்ளவர்களுக்கு நம்பிக்கைக்குரியவராய் இருப்பது மிகவும் தேவையான ஒன்றாகும். நாம் நமக்கு மேலே உள்ளவர்களுக்கு அது அதிகாரியாக இருந்தாலும் சரி, ஆண்டவராக இருந்தாலும் சரி, நம்பிக்கைக்குரியவராய் இருந்தால், அதனால் நாம் நிறைய நன்மைகளைப் பெறலாம். அதே நேரத்தில் நம்பிக்கைக்குரியவராய் இல்லாமல் போகின்றபொழுது, மிகப்பெரிய இழப்பினைச் சந்திக்கின்றோம். இன்றைய முதல் வாசகம் ஆண்டவருக்கு நம்பிக்கைக்குரியவராய் இல்லாமல் போன சாலமோனைக் குறித்து எடுத்துச் சொல்கின்றது. சாலமோன், ஆண்டவருக்கு நம்பிக்கைக்குரியவராய் இல்லாமல் போனதால் என்ன நடந்தது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

ஆண்டவரை மறைந்து பிற தெய்வங்களை வழிபடத் தொடங்கிய சாலமோன் அரசர்

தாவீத்துக்குப் பின் இஸ்ரயேல் மக்களை ஆட்சி செய்த சாலமோன், தொடக்கத்தில் ஆண்டவருக்கு உகந்ததைச் செய்து, அவருடைய அன்பிற்கு உகந்தவராய் இருந்தார்; ஆனால் அவர் முதுமை அடைந்தபொழுது அவருடைய மனைவியரோ அவருடைய இதயத்தை பிற தெய்வங்களின் பால் திருப்பிவிட்டனர்.

சாலமோன் அரசரின் இதயம் பிற தெய்வங்களின் பால் திரும்பியதற்கு இரண்டு முக்கியமான காரணங்களைச் சொல்லலாம். ஒன்று, அவர் வேற்றினத்துப் பெண்களை மணந்துகொண்டது. ஆம் சாலமோன் எகிப்து மன்னனாகிய பார்வோனின் மகளை மணந்துகொண்டு அவனோடு உடன்படிக்கை செய்துகொண்டார் (1 அர 3:1) இரண்டாவது காரணம், சாலமோன் அரசர் குதிரைகளையும் கோவேறு கழுதைகளையும் விலைக்கு வாங்கிக்கொண்டது (1 அர 4: 26-28). சாலமோன் அரசர் குதிரைகளையும் கோவேறுக் கழுதைகளையும் விலைக்கு வாங்கியதால், அவற்றின்மீது அவர் நம்பிக்கை வைத்தாரே அன்றி, ஆண்டவர்மீது நம்பிக்கை வைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், அவை ஆண்டவர்மீது கொண்டிருந்த நம்பிக்கையைத் திசைதிருப்பிவிட்டன. (இச 7:4) இவ்வாறு அவர் கடவுளின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தார்.

ஆண்டவரோடு செய்துகொண்ட உடன்படிக்கையை மறக்கவேண்டாம்

இணைச்சட்ட நூல் 4: 23 இல் இவ்வாறு வாசிக்கின்றோம்: "உங்கள் கடவுளாகிய ஆண்டவரோடு செய்துகொண்ட உடன்படிக்கையை மறந்துவிடாதீர்கள். மேலும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் கட்டளையிட்டபடி எந்தவோர் உருவத்திலும் உங்களுக்கெனச் சிலைகளைச் செய்யாதபடி கவனமாய் இருங்கள்." சாலமோன் அரசர் வேற்றினத்துப் பெண்களை மணந்ததால், அவர்களுடைய தெய்வங்களான அஸ்தரேத்தையும் மில் கோமையும் வழிபட வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆண்டவராகிய கடவுள், "நானே இறைவன்; என்னையன்றி வேறு கடவுள் இல்லை" (எசா 46:9) என்று சொல்லி வந்தார்; ஆனால், சாலமோன் அரசர் உண்மைக் கடவுளை வழிபடுவதை விட்டுவிட்டு பிற தெய்வங்களை வழிபடத் தொடங்கியதால், இஸ்ரயேல் நாடு வடநாடு, தென்னாடு என்று இரண்டு நாடுகளாகப் பிரியும் நிலை ஏற்பட்டது. ஆம், நாம் கடவுளுக்கு உண்மையில்லாமல், அவருக்கு நம்பிக்கைக்குரியவர்களாய் இல்லாமல் இருக்கின்றபொழுது இதுபோன்று நிலைதான் ஏற்படும்.

சிந்தனை

"கடவுளின் திருவுளத்தை உளமார நிறைவேற்றுங்கள்" (எபே 6:6) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் கடவுளுக்கு நம்பிக்கைக்குரியவர்களாய் இருந்து, அவருடைய திருவுளத்தை உளமார நிறைவேற்றுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 மாற்கு 7: 12-30

"நீர் இப்படிச் சொன்னதால் போகலாம்; பேய் உம் மகளை விட்டு நீங்கிற்று"

நிகழ்வு

லியூ மில்லர் என்றொரு மனிதர் இருந்தார். கடவுள்மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருந்த அவர் திடீரென நோய்வாய்ப்பட்டு, உடல் எடையை இழக்கத் தொடங்கினார். எந்தளவுக்கு என்றால், 170 பவுண்டுகள் இருந்த அவருடைய உடலின் எடை 70 பவுண்டுகள் என்று ஆனது. மருத்துவர்கள் அவரைச் சோதித்துப் பார்த்துவிட்டு, பிழைப்பது மிகவும் கடினம் என்று சொல்லிவிட்டுச் சென்றார்கள்.

ஆனால், அவர் நம்பிக்கையை இழக்கவில்லை. "நம்புகிறவருக்கு எல்லாம் கூடும்" என்று இயேசு சொன்ன வார்த்தைகளை அவர் நினைவுகூர்ந்து, "நிச்சயம் நான் நலம்பெறுவேன்" என்று முழுமையாக நம்பினார். மட்டுமல்லாமல், தான் முழுமையாக நலம்பெற்ற பிறகு எப்படி நடப்பேன், ஓடுவேன் என்பதையெல்லாம்கூட அவர் கற்பனை செய்து பார்த்தார்.

ருசில மாதங்களில், அவரைக் கைவிட்ட மருத்துவர்களே வியக்கும் அளவுக்குக் அவர் முழுமையாக நலம்பெற்று, முன்னைய நிலைக்குத் திரும்பினார். ஆம். லியூ மில்லரின் நம்பிக்கை அவரைச் சாவிலிருந்து காப்பாற்றியது. லியூ மில்லரின் நம்பிக்கை அவரை எப்படிச் சாவிலிருந்து காப்பாற்றியதோ, அதுபோன்று இன்றைய நற்செய்தி வாசகத்தில் சிரிய பெனிசிய இனத்தைச் சார்ந்த பெண்மணியின் நம்பிக்கை அவருடைய மகளுக்குப் பேயிலிருந்து விடுதலை கிடைக்கச் செய்கின்றது. இதுகுறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

தனிமையை விரும்பிய இயேசு

நற்செய்தியில் இயேசு பிற இனத்தார் மிகுதியாக வாழ்ந்த தீர் பகுதிக்குள் செல்வதைக் குறித்து வாசிக்கின்றோம். இயேசு இங்கு எதற்காகச் சென்றார் என்று சிந்தித்துப் பார்ப்பது முன்னர், "தீர்" பகுதியைக் குறித்து சிறிது சிந்தித்துப் பார்ப்பது நல்லது.

தீர் பகுதியைக் குறித்து முதலில் சாமுவேல் இரண்டாம் நூலில் வாசிக்கின்றோம் (2 சாமு 5:11). துறைமுக நகரான இதனை ஆண்டுவந்த அரசன், தாவீது அரசரோடு நட்பு பாராட்டியதாக வாசிக்கின்றோம். ஆண்டுகள் மெல்ல உருண்டோட அது பகையாக மாறுகின்றது ( எசே 28: 1ff). எந்தளவுக்கு என்றால், இங்கிருந்த அரசன் எதிரி நாட்டவரால் எருசலேம் வீழ்த்தப்பட்டபொழுது மிகவும் மகிழ்ச்சியடைகின்றான். இதற்கு மிக முக்கியமான காரணம், தன்னுடைய வணிகம் செழிக்கும் என்பதால். இப்படிப்பட்ட ஒரு பகுதிக்குள்தான் இயேசு சிறிது தனித்திருக்க வேண்டும் நுழைகின்றார்.

தன்னுடைய மகளிடமிருந்து பேயை ஓட்டுமாறு வரும் சிரிய பெனிசியப் பெண்

தீர் பகுதிக்குள் சென்றால், தனித்திருக்கலாம் என்ற எண்ணத்தோடுதான் இயேசு அங்கு செல்கின்றார்; ஆனால் நடந்தது வேறொன்று. இயேசு அங்கு வந்திருக்கின்றார் என்று கேள்விப்பட்ட சிரிய பெனிசிய இனத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், தன்னுடைய மகளுக்குப் பிடித்திருக்கும் பேயை அவளிடமிருந்து ஓட்டுமாறு, அவருடைய காலில் விழுந்து கெஞ்சிக் கேட்கின்றார். இங்கு இயேசு, "முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல"" என்று சொல்லக்கூடிய வார்த்தைகள் மிகவும் கவனிக்கத்தக்கவை.

இயேசு எல்லாருமாக வந்தார் (திபா 22:27; எசா 56:7; மத் 28: 19); எனினும் வழிதவறி, சிதறுண்டு போன ஆடுகளான யூதர்களுக்கு முதன்மையான இடம் கொடுத்தார் (மத் 10: 6). இதை, "முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும்" என்ற வார்த்தைகளில் கண்டுகொள்ளலாம். மேலும் "பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல" என்பதை இயேசு அந்தப் பெண்மணியின் நம்பிக்கையைச் சோதித்துப் பார்ப்பதற்காகச் சொல்லியிருக்கலாம் என்றும் "நாய்க்குட்டிகள்" என்பதை தெருநாய்கள் அல்ல, வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் என்றும் சொல்லலாம். இதற்கு அந்தப் பெண்மணி என்ன மறுமொழி கூறுகின்றார் என்பதைக் குறித்துத் தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.

சிரிய பெனிசியப் பெண்மணியின் நம்பிக்கை

இயேசு தன்னிடம் "நான் யூதர்களுக்காகத்தான் வந்தேன்" என்றது சொன்னதாலேயோ, தன்னை "நாயென்று" சொன்னதாலேயோ அந்தப் பெண்மணி மனந்தளர்ந்து போய்விடவில்லை. மாறாக, மனவுறுதியோடு அல்லது நம்பிக்கையோடு அவர் இயேசுவிடம், நாய்க்குட்டிகள் சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்னுமே என்று சொல்லி இயேசுவை அசைத்துப் பார்க்கின்றார். இதனால் இயேசு அந்தப் பெண்மணியின் மகளிடமிருந்து பேயை ஓட்டுகின்றார்.

இங்கு நாம் ஓர் உண்மையை நம்முடைய கவனத்தில் இருத்தவேண்டும். அது என்னவெனில், பேய்பிடித்திருந்த அந்தச் சிறுமி அங்கு இல்லை. ஆனாலும் இயேசுவால் அவளிடமிருந்து பேயை விரட்டியடிக்க முடிகின்றது. இது இயேசு எந்தளவுக்கு வல்லமை நிறைந்தவராய் இருக்கின்றார் என்பதை நமக்கு எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது. ஆகையால், நாம் நற்செய்தியில் வருகின்ற பெண்மணியைப் போன்று இயேசுவிடம் நம்பிக்கை கொண்டிருந்தால், நம்மாலும் அவரிடமிருந்து நன்மைகளைப் பெற முடியும் என்பது உறுதி.

சிந்தனை

"அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய் (அதனை) எதிர்த்து நில்லுங்கள்" (1 பேது 5:9) என்பார் புனித பேதுரு. ஆகையால், நாம் ஆண்டவரிடம் அசையாத நம்பிக்கை கொண்டிருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!