Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   12  பிப்ரவரி 2020  
    பொதுக்காலம் 5 ஆம் வாரம்
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 ++சேபா நாட்டு அரசி சாலமோனின் ஞானத்தைப் பற்றிக் கேள்வியுற்றார்.

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 10: 1-10


அந்நாள்களில் ஆண்டவரின் பெயரை முன்னிட்டு, சாலமோன் அடைந்திருந்த புகழைப் பற்றிச் சேபா நாட்டு அரசி கேள்வியுற்றுக் கடினமான கேள்விகள் மூலம் அவரைச் சோதிக்க வந்தார். அவர் பரிவாரங்களோடும், நறுமணப் பொருள், மிகுதியான பொன், விலையுயர்ந்த கற்கள் ஆகியவற்றைச் சுமந்துவந்த ஒட்டகங்களோடும் எருசலேமுக்கு வந்து சேர்ந்தார். அவர் சாலமோனிடம் தம் மனத்திலிருந்த கேள்விகள் அனைத்தையும் வெளிப்படுத்தினார். சாலமோன் அவருடைய கேள்விகளுக்கெல்லாம் விடை கூறினார். அவர் கேட்டவற்றுள் பதிலளிக்க இயலாதபடி எதுவும் அரசருக்குப் புதிராகத் தோன்றவில்லை. சேபாவின் அரசி, சாலமோனுக்கு இருந்த பல்வகை ஞானம், அவர் கட்டியிருந்த அரண்மனை, அவர் உண்டு வந்த உணவு வகைகள், அவருடைய அலுவலரின் வரிசைகள், பணியாளர்களின் சுறுசுறுப்பு, அவர்களுடைய சீருடை, பானம் பரிமாறுவோரின் திறமை, ஆண்டவரின் இல்லத்தில் அவர் செலுத்திய எரிபலிகள் ஆகியவற்றைக் கண்டு பேச்சற்றுப் போனார். அவர் அரசரை நோக்கிக் கூறியது: "உம்முடைய செயல்களையும் ஞானத்தையும் பற்றி என் நாட்டில் நான் கேள்விப்பட்டது உண்மையே எனத் தெரிகிறது. நான் இங்கு வந்து அவற்றை நேரில் காணும் வரை, அச்செய்திகளை நம்பவில்லை. இப்பொழுதோ, இங்குள்ளவற்றுள் பாதியைக் கூட அவர்கள் எனக்குச் சொல்லவில்லை என அறிகிறேன். உண்மையில் நான் கேள்விப்பட்டதை விட, உம் ஞானமும் செல்வமும் மிகுதியாய் இருக்கின்றன. உம்முடைய மனைவியர் நற்பேறு பெற்றோர்! எப்போதும் உமக்குப் பணிபுரிந்து உம்முடைய ஞானம் நிறைந்த மொழிகளைக் கேட்கும் உம்முடைய பணியாளரும் நற்பேறு பெற்றவரே! உம்மீது பரிவு கொண்டு உம்மை இஸ்ரயேலின் அரியணையில் அமர்த்திய உம் கடவுளாகிய ஆண்டவர் போற்றி! போற்றி! ஆண்டவர் இஸ்ரயேலின் மீது என்றென்றும் அன்பு கொண்டுள்ளதால், அவர்களுக்கு நீதி நியாயம் வழங்க உம்மை அரசராக ஏற்படுத்தியுள்ளார்." அவர் ஏறத்தாழ நாலாயிரத்து எண்ணூறு கிலோ பொன், ஏராளமான நறுமணப் பொருள்கள், விலையுயர்ந்த கற்கள் ஆகியவற்றை அரசருக்கு அளித்தார். சேபாவின் அரசியிடமிருந்து வந்தது போல, அத்துணை நறுமணப் பொருள்கள் அரசர் சாலமோனுக்கு அதன் பிறகு வந்ததே இல்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 37: 5-6. 30-31. 39-40 (பல்லவி: 30a) Mp3
=================================================================================
பல்லவி: நேர்மையாளரின் வாய் ஞானத்தை அறிவிக்கும்.
5உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு; அவரையே நம்பியிரு; அவரே உன் சார்பில் செயலாற்றுவார்.
6உன் நேர்மையைக் கதிரொளி போலும், உன் நாணயத்தை நண்பகல் போலும் அவர் விளங்கச் செய்வார். - பல்லவி

30நேர்மையாளரின் வாய் ஞானத்தை அறிவிக்கும்; அவர்கள் நா நீதிநெறியை எடுத்துரைக்கும்.
31கடவுளின் திருச்சட்டம் அவர்களது உள்ளத்தில் இருக்கின்றது; அவர்களின் கால்கள் சறுக்குவதில்லை. - பல்லவி

39நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்து வருகின்றது, நெருக்கடியான நேரத்தில்அவர்களுக்கு வலிமையும் அவரே.
40ஆண்டவர் துணைநின்று அவர்களை விடுவிக்கின்றார்; பொல்லாரிடமிருந்து அவர்களை விடுவிக்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகுந்ததால், அவர்களை மீட்கின்றார். - பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 (யோவா 17: 17b, 17a)

அல்லேலூயா, அல்லேலூயா! உமது வார்த்தையே உண்மை. உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
++மனிதரின் உள்ளத்திலிருந்து வருவதே அவரைத் தீட்டுப்படுத்தும். 

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 14-23

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தை மீண்டும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை நோக்கி, "நான் சொல்வதை அனைவரும் கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள். வெளியேயிருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை. மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப்படுத்தும். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்'' என்று கூறினார். அவர் மக்கள் கூட்டத்தை விட்டு வீட்டிற்குள் வந்தபோது அவருடைய சீடர் அவரிடம் இந்த உவமையைப் பற்றிக் கேட்க, அவர் அவர்களிடம், "நீங்களுமா இந்த அளவுக்குப் புரிந்துகொள்ளாமல் இருக்கிறீர்கள்? வெளியேயிருந்து மனிதருக்குள்ளே செல்லும் எதுவும் அவர்களைத் தீட்டுப்படுத்த முடியாது என உங்களுக்குத் தெரியாதா? ஏனென்றால், அது அவர்களுடைய உள்ளத்தில் நுழையாமல் வயிற்றுக்குச் சென்று கழிப்பிடத்திற்குப் போய்விடுகிறது'' என்றார். இவ்வாறு அவர் எல்லா உணவுப் பொருள்களும் தூயன என்று குறிப்பிட்டார். மேலும், "மனிதருக்கு உள்ளேயிருந்து வருவதே அவர்களைத் தீட்டுப்படுத்தும். ஏனெனில் மனித உள்ளத்திலிருந்தே பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் வெளிவருகின்றன. தீயனவாகிய இவை அனைத்தும் உள்ளத்திலிருந்து வந்து மனிதரைத் தீட்டுப்படுத்துகின்றன'' என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 1 அரசர்கள் 10: 1-10

சாலமோனின் ஞானத்தைக் கண்டு பேச்சற்றுப்போன சேபா நாட்டு அரசி

நிகழ்வு

முன்பொரு காலத்தில் அரசர் ஒருவர் இருந்தார். அவருக்குச் சதுரங்க விளையாட்டு விளையாடுவது என்றால் அவ்வளவு விருப்பம். அவர் தன்னுடைய நாட்டு மக்களிடம், "யார் வேண்டுமானாலும், என்னோடு போட்டி போடலாம். போட்டியில் என்னை வெல்வோருக்கு அவர் கேட்டதைத் தருவேன்" என்று வாக்குறுதி அளித்தார்.

இதற்குப் பின்பு பலர் அவரிடம் வந்து அவரோடு சதுரங்க விளயாட்டு விளையாடினார்கள்; ஆனால், யாராலும் அவரைப் போட்டியில் வெற்றிகொள்ள முடியவில்லை. இந்நிலையில் அவரைச் சந்திக்க ஞானி ஒருவர் வந்தார். அரசர் அவரிடம், "என்னோடு சதுரங்க விளையாட்டு விளையாட வருகின்றீர்களா...? போட்டியில் என்னை வென்றால், நீங்கள் என்னிடம் என்ன கேட்டாலும் தருகிறேன் அதே நேரத்தில் நான் போட்டியில் வெற்றிபெற்றால் நீங்கள் எதுவும் எனக்குத் தரவேண்டாம்" என்றார். அரசர் சொன்ன விதிமுறைக்குக் கட்டுப்பட்டு ஞானி அரசரோடு விளையாடத் தொடங்கினார்.

போட்டி தொடங்கிய சிறிதுநேரத்திலேயே ஞானி அரசரை மிக இலகுவாக வெற்றிகொண்டார். அரசர் ஒரு வினாடி ஆடிப்போய்விட்டார். பின்னர் அரசர் அந்த ஞானியிடம், "போட்டியில் நான் தோற்றுவிட்டதால், நீங்கள் என்னிடம் கேட்டதைத் தருவதுதான் முறை. இப்பொழுது நீங்கள் என்னிடம் என்ன கேட்கவேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதை என்னிடம் கேட்கலாம்" என்றார். அரசர் இவ்வார்த்தைகளை சிறிது அச்சத்தோடுதான் ஞானியிடம் சொன்னார். உடனே ஞானி அரசரிடம், "அரசே நான் பெரிதாக எதையும் கேட்க விரும்பவில்லை. இதோ நாம் சதுரங்கம் விளையாடிய சதுரங்கப் பலகையில், முதல் கட்டத்தில் ஒரு நெல்மணி, இரண்டாவது கட்டத்தில் அதனுடைய இரண்டு மடங்கு நெல்மணி, மூன்றாவது கட்டத்தில் அதனுடைய இரண்டுமடங்கு நெல்மணி என்று எனக்குத் தந்தால் போதும்" என்றார்.

"ஓ இவ்வளவுதானா...! இதோ தருகின்றேன்" என்று சொல்லிவிட்டு, அரசர் தன்னுடைய பணியாளர் ஒருவரை அழைத்து, களஞ்சியத்திலிருந்து ஒரு மூட்டை நெல்மணியைக் கொண்டுவரச் சொல்லி, சதுரங்கப் பலகையில் முதல் கட்டத்தில் ஒன்று, இரண்டாவது கட்டத்தில் இரண்டு, மூன்றாவது கட்டத்தில் நான்கு, நான்காவது கட்டத்தில் எட்டு, ஐந்தாவது கட்டத்தில் பதினாறு, ஆறாவது கட்டத்தில் முப்பது இரண்டு என்று இரண்டு மடங்காக வைத்துக்கொண்டே வந்தார். இருபத்து ஒன்றாவது கட்டத்திற்கு வந்தபொழுது பத்து இலட்சத்தும் மேலான நெல்மணிகளை வைக்கவேண்டி வந்தது. முப்பத்து ஒன்றாவது கட்டத்திற்கு வந்தபொழுது கோடிக்கும் மேல் நெல்மணிகளை வைக்கவேண்டி வந்தது. இதற்குப் பிறகு பல கட்டங்கள் இருந்தன.

அப்பொழுது அரசர் யோசிக்கத் தொடங்கினார்: "இப்படியே நாம் இருமடங்கு நெல்மணிகளை வைத்துக்கொண்டே போனால் களஞ்சியத்தில் இருக்கின்ற தானியமெல்லாம் காலியாகிவிடும். அதனால் ஞானியிடம் மன்னிப்புக் கேட்பதைத் தவிர வழியில்லை" என்று ஞானியிடம், "சுவாமி! என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். விபரீதம் புரியாமல் வாக்குறுதி கொடுத்துவிட்டேன். இப்பொழுது அதை நிறைவேற்ற முடியாத பாவியாக நிற்கின்றேன்... உண்மையில் நீங்கள் மிகப்பெரிய ஞானி. உங்களுக்கு முன்னால் நான் ஒன்றுமில்லை" என்று சொல்லி, அவரிடம் மன்னிப்புக் கேட்டு, அவருக்குப் பரிசுகள் பல தந்து அனுப்பி வைத்தார்.

ஞானத்தோடு செயல்படக்கூடியவர்களுக்கு எங்கும் எதிலும் வெற்றிதான். அதைத்தான் இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இன்றைய முதல் வாசகத்தில் சாலமோன் அரசரின் ஞானத்தைக் கண்டு சேபா நாடு அரசி வியப்பதைக் குறித்து வாசிக்கின்றோம். அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

சாலமோனின் ஞானத்தைச் சோதிக்க வந்த சேபா நாட்டு அரசி

சாலமோன் அரசர் ஆண்டவரின் பெயரை முன்னிட்டு பெரும் புகழை அடைந்தார். அது குறித்துக் கேள்விப்பட்ட சேபா நாட்டு அரசி அவரைச் சோதிக்க வருகின்றார். சேபா என்பது தென்மேற்கு அரேபியாவில் உள்ள ஒரு நாடு (எசா 60:6; எரே 6:20; எசே 38:13). இந்நாட்டிலிருந்து வரும் அரசி, சாலமோன் அரசரிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டு, அவருடைய திறமையைச் சோதிக்கின்றார். சாலமோன் அரசரோ அவர் கேட்ட எல்லாக் கேள்விகளுக்கும் மிகச் சிறப்பான முறையில் பதிலளித்து, அவரை வியக்க வைக்கின்றார். ஆண்டவர் ஒருவருக்கு ஞானத்தை அளித்திருக்கும்பொழுது (1 அர 3: 4-13) அவரை யாராலும் வெற்றிகொள்ள முடியுமா? என்ன?. முடியாதுதானே...! சாலமோனின் வாழ்க்கையில் இதுதான் நடந்தது.

சாலமோனை விடப் பெரியவர் இயேசு

சாலமோனின் ஞானத்தைக் குறித்துக் கேள்விப்பட்டு சேபா நாடு அரசி அவரைப் பார்க்க வருவது நமக்கு முக்கியமான ஒரு செய்தியைச் எடுத்துச் சொல்கின்றது. அச்செய்தியை இயேசுவே நற்செய்தியில் கூறுகின்றார் (மத் 12: 39-42) ஆம், சாலமோன் ஞானத்தைக் கேள்விப்பட்டு எங்கோ இருந்த சேபா நாட்டு அரசி அவரைப் பார்க்க வந்தார். ஆனால், நாம் நம்மோடு இருக்கும் இயேசுவின் மகத்துவத்தை உணராமலேயே இருக்கின்றோம். இந்நிலையை நம்முடைய வாழ்விலிருந்து மாற்றி, இயேசுவின் மகத்துவத்தை உணர்ந்தவர்களாய், அவருடைய வழியில் நடக்கக் கற்றுக்கொள்வோம்.

சிந்தனை

"ஞானம் கடவுளின் ஆற்றலிலிருந்து புறப்படும் ஆவி" (சாஞா 7:25) என்கிறது சாலமோனின் ஞான நூல். ஆகையால், நமக்கு ஞானத்தைத் தரும் இறைவனுக்கு உகந்த வழியில் நாம் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 மாற்கு 7: 14-23

"தீயனவாகிய இவை அனைத்தும் உள்ளத்திலிருந்து வந்து மனிதரைத் தீட்டுப்படுத்துகின்றன"

நிகழ்வு

குருவானவர் ஒருவர் சிறுவன் ஒருவனிடம் "புனிதம் என்றால் என்ன?" என்றார். சிறுவன் சிறிதும் தாமதியாமல், "புனிதம் என்றால் உள்ளுக்குள் தூய்மையாக இருப்பது" என்று சொல்லிவிட்டு அமைதியானான்!

புனிதம் என்பதற்கு இதைவிட சிறப்பாகப் பதில் சொல்ல முடியுமா என்ன! இன்றைய நற்செய்தி வாசகம் அகத்தூய்மையைக் குறித்துப் பேசுகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

கடவுளால் படைக்கப்பட்ட அனைத்தும் தூய்மையானவை

இன்றைய நற்செய்தி வாசகம் நேற்றைய நற்செய்தி வாசகத்தின் தொடர்ச்சியாக இருக்கின்றது. நேற்றைய நற்செய்தியில் இயேசுவின் சீடர்கள் கைகளைக் கழுவாமல் உண்டதால் பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் அவர்கள் மூதாதையர் மரபை மீறிவிட்டதாகக் குற்றம் சுமத்துவார்கள். இந்நிலையில்தான் இயேசு மக்களிடம் தூய்மை என்பது எது? என்பதற்குப் பதில் தருகின்றார்.

யூதர்கள் அதிலும் குறிப்பாக பரிசேயர்கள் கடைத்தெருவிலிருந்து பொருள்களை வாங்குகின்றபொழுதும் பாத்திரங்களைப் பயன்படுத்துகின்றபொழுதும் தூய்மையாக இருக்கவேண்டும் என்பதற்காக அவற்றைக் கழுவினார்கள். மட்டுமல்லாமல், பன்றி உட்பட ஒருசில உயிரினங்களும் யூதரல்லாத பிற இனத்தவரும் தீட்டானவர்கள் என்ற நினைப்பில் இருந்தார்கள். இயேசுவின் சீடர்களும்கூட இதற்கு விதிவிலக்கு அல்ல. காரணம், திருத்தூதர்களின் தலைவரான புனித பேதுரு "தீட்டானதும் தூய்மையற்றதுமான எதுவும் ஒருபோதும் என் வாய்க்குள் சென்றதில்லை" (திப 11: 8) என்று சொல்வார். இப்படியிருக்கையில் இயேசு, வெளியே இருந்து மனிதருக்கு உள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக்கூடியது ஒன்று இல்லை என்று குறிப்பிடுக்கின்றார். அப்படியானால் கடவுளால் படைக்கப்பட்ட அல்லது மனிதன் உட்கொள்ளும் உணவு அவனைத் தீட்டுப்படுத்தாது என்று உறுதியாகச் சொல்லலாம்.

இன்றைக்கு ஒருசிலர் இவை இவையெல்லாம் தீட்டானவை, மனிதர்களில் ஒருசிலர்கூட தீட்டானவர்கள் என்ற எண்ணத்தோடு வாழ்ந்துகொண்டிருக்கின்றார். இவர்கள் தங்களுடைய சீழ் படிந்த சிந்தனையிலிருந்து வெளியே வந்து, ஆண்டவர் இயேசு போதிக்கின்ற போதனையை உட்வாங்கிக்கொண்டு ஆண்டவருக்கு ஏற்ற வாழ்க்கை வாழ்வது நல்லது.

மனிதர்களுடைய உள்ளத்து எண்ணங்களே தீட்டானவை

"வெளியேயிருந்து மனிதர்களுக்குள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை" என்று குறிப்பிட்ட இயேசு, தொடர்ந்து குறிப்பிடும் வார்த்தைகள்தான், "மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப்படுத்தும்" என்பதாகும். காரணம், மனிதருடைய உள்ளத்திலிருந்துதான், பரத்தமை, களவு, கொலை... ஆகியவற்றைச் செய்யத்தூண்டும் தீய எண்ணங்கள் வெளிவருகின்றன. அவ்வாறெனில், புறக்காரணிகளால் ஒரு மனிதன் ஒருபோதும் தீட்டாவதில்லை; அகக்காரணிகள் அல்லது உள்ளத்தில் எழுகின்ற எண்ணங்களால்தான் அவன் தீட்டாகின்றான் என்பது உண்மையாகின்றது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நம்முடைய உள்ளம் தூய்மையானதாக இருக்க நாம் என்ன செய்யவேண்டும் என்பதை நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.

இறைவார்த்தையை உள்ளத்தில் இருத்திச் சிந்திப்போம்

வழக்கமாக ஓரிடத்தில், ஓர் அறையில் இருள் மண்டிக்கிடக்கின்றது என்றால், அங்கு விளக்கேற்றி வைப்போம். அதுபோன்று நம்முடைய உள்ளத்தில் எழுகின்ற தீய எண்ணங்களால் ஒட்டுமொத்த உடலும் தீட்டாவதால், அதைத் தூய்மையாக வைத்திருக்க இறைவார்த்தை என்னும் ஓளியை (திபா 119:105) அதில் ஏற்றி வைக்கவேண்டும். அன்னை மரியா இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கின்றார். அவர் நிகழ்ந்தவற்றை, இறைத்திருவுளத்தை, இறைவார்த்தையைத் தன்னுடைய உள்ளத்தில் இருத்திச் சிந்தித்து வந்தார் (லூக் 2: 19). நாமும் இறைவார்த்தையை நம்முடைய உள்ளத்தில் இருத்திச் சிந்தித்து வந்தால், அதன்படி நடந்தால் நம்முடைய உள்ளம் மட்டுமல்ல, நம்முடைய வாழ்வே தூயதாக இருக்கும் என்பது உறுதி.

பெரும்பாலான நேரங்களில் நாம் புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வதற்கு நிறைய மெனக்கெடுக்கின்றோம். புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வதற்கு மெனக்கெடுவ்து நல்லதுதான். அதைவிடவும் முக்கியமானது அகத்தைத் தூய்மையாக வைத்திருப்பது. ஏனென்றால், உள்ளத்தின் நிறைவுதான் வாய் பேசும்; உள்ளம் நன்றாக இருக்கின்றபொழுதுதான் எல்லாம் நன்றாக இருக்கும்.

எனவே, "உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை தீர்த்து" என்ற ஐயன் திருவுள்ளுவரின் வாக்கிற்கிணங்க நாம் உயர்வானதை எண்ணி, உயர்வான வாழ்க்கை வாழ்வோம்.

சிந்தனை

"நெறிகெட்ட எண்ணம் மனிதரைக் கடவுளிடமிருந்து பிரித்துவிடும்" (சாஞா 1:3) என்கிறது சாலமோனின் ஞான நூல். ஆகையால், நாம் நெறிகெட்ட எண்ணங்களை அல்ல, நல்ல எண்ணங்களைக் கொண்டிருப்போம். அதனால் நம்முடைய உட்புறத்தைத் தூய்மையாக்கி, கடவுளுக்கு உகந்தவர்களாகி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!