|
|
11
பிப்ரவரி 2020 |
|
|
பொதுக்காலம்
5 ஆம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
++"மக்களின் மன்றாட்டைக் கேட்டருளும்படி என் பெயர் இக்கோவிலில்
விளங்கும்."
அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 8: 22-23,
27-30
அந்நாள்களில் சாலமோன் ஆண்டவரின் பலிபீடத்தை நோக்கி
நின்றுகொண்டு, இஸ்ரயேல் சபையார் அனைவர் முன்னிலையில் வானத்திற்கு
நேரே தம் கைகளை உயர்த்தி மன்றாடியது: "இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே!
மேலே விண்ணிலும் கீழே மண்ணிலும் உம்மைப் போன்ற வேறு கடவுள்
யாரும் இல்லை. உமது முன்னிலையில் முழு உள்ளத்தோடு உமக்குக்
கீழ்ப்படிந்து நடக்கும் உம்முடைய அடியார்க்கு உமது உடன்படிக்கையின்படி
தவறாது பேரன்பு காட்டி வருகிறீர். கடவுள் உண்மையில் இந்த மண்ணுலகில்
தங்கியிருப்பாரா? வானமும் வான மண்டலங்களும் உம்மைக் கொள்ள இயலாதிருக்க,
நான் கட்டியுள்ள இக்கோவில் எப்படி உம்மைக் கொள்ளும்? என் கடவுளாகிய
ஆண்டவரே! உம் அடியான் செய்கிற வேண்டுதலையும் விண்ணப்பத்தையும்
கேட்டருளும்; உம் அடியான் இன்று உம் முன்னிலையில் எழுப்பும்
கூக்குரலுக்கும் செய்யும் வேண்டுதலுக்கும் செவிசாய்த்தருளும்!
"என் பெயர் இவ்விடத்தில் விளங்கும்" என்று இக்கோவிலைப்பற்றி
நீர் சொல்லியிருக்கிறீர்! இவ்விடத்தில் உம் அடியான் செய்யும்
வேண்டுதலைக் கேட்டருள்வதற்காக, இரவும் பகலும் உமது கண்கள் இதனை
நோக்கி இருப்பனவாக! உம் அடியானின் விண்ணப்பத்திற்கும் இவ்விடத்தை
நோக்கிச் செய்கிற உம் மக்கள் இஸ்ரயேலர் வேண்டுதலுக்கும்
செவிசாய்ப்பீராக! உமது உறைவிடமாகிய விண்ணகத்திலிருந்து கேட்டு
அருள்வீராக! கேட்டு மன்னிப்பு அருள்வீராக!''
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 84: 3. 4. 5,10. 11 (பல்லவி: 1)
Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவரே! உமது உறைவிடம் எத்துணை அருமையானது!
2என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது;
என் உள்ளமும் உடலும் என்றுமுள இறைவனை மகிழ்ச்சியுடன் பாடுகின்றது.
3படைகளின் ஆண்டவரே! என் அரசரே! என் கடவுளே! உமது பீடங்களில் அடைக்கலான்
குருவிக்கு வீடு கிடைத்துள்ளது; தங்கள் குஞ்சுகளை வைத்திருப்பதற்குச்
சிட்டுக் குருவிகளுக்குக் கூடும் கிடைத்துள்ளது. - பல்லவி
4உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறு பெற்றோர்; அவர்கள் எந்நாளும்
உம்மைப் புகழ்ந்து கொண்டேயிருப்பார்கள்.
9எங்கள் கேடயமாகிய கடவுளே, கண்ணோக்கும்! நீர் திருப்பொழிவு செய்தவரின்
முகத்தைக் கனிவுடன் பாரும்! - பல்லவி
10வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாள்களினும் உம் கோவில் முற்றங்களில்
தங்கும் ஒரு நாளே மேலானது; பொல்லாரின் கூடாரங்களில் குடியிருப்பதினும்,
என் கடவுளது இல்லத்தின் வாயிற்காவலனாய் இருப்பதே இனிமையானது. -
பல்லவி
11ஏனெனில், கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கதிரவனும் கேடயமுமாய் இருக்கின்றார்;
ஆண்டவர் அருளையும் மேன்மையையும் அளிப்பார்; மாசற்றவர்களாய் நடப்பவர்களுக்கு
நன்மையானவற்றை வழங்குவார். - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
(திபா 119: 4a, 36a)
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, நீர் உம் நியமங்களைத் தந்தீர்;
உம் ஒழுங்கு முறைகளில் என் இதயம் நாட்டங்கொள்ளச் செய்யும். அல்லேலூயா.
================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
++நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றுகிறீர்கள்.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 1-13
ஒரு நாள்
பரிசேயரும் எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர் சிலரும்
இயேசுவிடம் வந்து கூடினர். அவருடைய சீடருள் சிலர் தீட்டான, அதாவது,
கழுவாத கைகளால் உண்பதை அவர்கள் கண்டார்கள். பரிசேயரும், ஏன் யூதர்
அனைவருமே, தம் மூதாதையர் மரபைப் பின்பற்றிக் கைகளை முறைப்படி
கழுவாமல் உண்பதில்லை; சந்தையிலிருந்து வாங்கியவற்றைக் கழுவிய
பின்னரே உண்பர். அவ்வாறே கிண்ணங்கள், பரணிகள், செம்புகள் ஆகியவற்றைக்
கழுவுதல் போன்று அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மரபுகள் இன்னும்
பல இருந்தன. ஆகவே பரிசேயரும் மறைநூல் அறிஞரும் அவரை நோக்கி, `"உம்
சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால் உணவு அருந்துவதேன்?''
என்று கேட்டனர். அதற்கு அவர், `"வெளிவேடக்காரர்களாகிய உங்களைப்
பற்றி எசாயா பொருத்தமாக இறைவாக்கு உரைத்திருக்கிறார். "இம்மக்கள்
உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்; இவர்கள் உள்ளமோ என்னைவிட்டு
வெகு தொலையில் இருக்கிறது. மனிதக் கட்டளைகளைக் கோட்பாடுகளாகக்
கற்பிக்கின்றனர். இவர்கள் என்னை வழிபடுவது வீண்' என்று அவர் எழுதியுள்ளார்.
நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி
வருகிறவர்கள்'' என்று அவர்களிடம் கூறினார். மேலும் அவர், `"உங்கள்
மரபை நிலைநாட்டக் கடவுளின் கட்டளைகளை வெகு திறமையாகப் புறக்கணித்துவிட்டீர்கள்.
"உன் தந்தையையும் தாயையும் மதித்து நட' என்றும் "தந்தையையோ
தாயையோ சபிப்போர் கொல்லப்பட வேண்டும்' என்றும் மோசே உரைத்திருக்கிறார்
அல்லவா! ஆனால் ஒருவர் தம் தாயையோ தந்தையையோ பார்த்து, "நான்
உமக்குத் தரக் கடமைப்பட்டிருக்கிறது "கொர்பான்' ஆயிற்று; அதாவது
"கடவுளுக்குக் காணிக்கையாயிற்று' என்றால், அதன்பின் அவர் தம்
தாய் தந்தைக்கு எந்த உதவியும் செய்ய நீங்கள் அனுமதிப்பதில்லை.
இவ்வாறு நீங்கள் பெற்றுக் கொண்ட மரபின் பொருட்டுக் கடவுளின்
வார்த்தையைப் பயனற்றதாக்கி விடுகிறீர்கள். இதுபோல நீங்கள் பலவற்றைச்
செய்கிறீர்கள்'' என்று அவர்களிடம் கூறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
1 அரசர்கள் 8: 22-23, 27-30
"உம் அடியான் செய்கின்ற வேண்டுதலையும் விண்ணப்பத்தையும் கேட்டருளும்"
நிகழ்வு
ஒரு சிறுநகரில் மூதாட்டி ஒருத்தி இருந்தாள். அவளுடைய
வீட்டிற்குப் பக்கத்தில் இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் அந்த
மூதாட்டிக்கு என்னென்ன உதவிகள் தேவைப்பட்டனவோ அத்தனையையும்
செய்து தந்தான். இதனால் அவள் அந்த இளைஞனைக் குறித்து மிகவும்
மகிழ்ச்சியடைந்தாள்.
ஒருநாள் அவள் அந்த இளைஞனிடம், "தம்பி! உன்னை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன்...
அது எப்படி நான் உன்னிடம் கேட்கின்ற உதவிகளையெல்லாம் எனக்குச்
செய்து தரமுடிகின்றது...?" என்றாள். அதற்கு அந்த இளைஞன்,
"சிறுவயதில் என்னுடைய பெற்றோர் என்னை ஒவ்வொரு ஞாயிறுக்கிழமைத்
திருப்பலிக்கும் தவறாமல் கூட்டிக்கொண்டு போவர். கோயிலில் அவர்கள்
இறைவனிடம் வேண்டுகின்றபொழுது, நான் அவர்களின் வாயையே
பார்த்துக்கொண்டிருப்பேன். ஒருநாள் அவர்கள் என்னிடம், "எதற்காக
நீ எங்களுடைய வாயையே பார்த்துக்கொண்டிருக்கிறாய்...? இறைவனிடத்தில்
உனக்கு என்ன வேண்டுமோ அதைக் கேள். அவர் உனக்குத் தருவார்" என்று
சொன்னார்கள். எனக்கு எல்லாருக்கும் உதவி செய்யக்கூடிய நல்ல
பிள்ளையாக நான் வளரவேண்டும் என்று ஆசை. அதனால் நான் "கடவுளே!
நான் எல்லாருக்கும் உதவி செய்யக்கூடிய நல்ல பிள்ளையாக வளரவேண்டும்"
என்று தொடர்ந்து வேண்டி வந்தேன். அதனால்தான் நான் இன்றைக்கு இப்படி
இருக்கிறேன்" என்றான்.
அவன் இவ்வாறு சொன்னதைக் கேட்டு மிகவும் மகிழ்ந்த மூதாட்டி, அவன்
திக்குமுக்காடும் அளவுக்கு நிறைய பணம் அவனுக்குத் தந்தார்.
இறைவனிடம் உறைந்திருக்கும் திருக்கோயிலில் நாம் நம்முடைய
வேண்டுதலை எடுத்துச் சொல்லி மன்றாடுகின்றபொழுது, அந்த வேண்டுதல்
நிறைவேறும் என்ற உண்மையை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.
இன்றைய முதல் வாசகமும் நமக்கு இதே செய்தியைத்தான் எடுத்துக்கூறுகின்றது.
நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
இறைவனிடம் மன்றாடிய சாலமோன்
அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில்,
சாலமோன் அரசர் ஆண்டவரின் பலிபீடத்தை நோக்கி நின்றுகொண்டு, வானத்திற்கு
நேரே தம் கைகளை உயர்த்தி மன்றாடுகின்றார். அவர் ஆண்டவரிடம் மன்றாடுகின்ற
மன்றாட்டினை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். முதல் பகுதியில்
அவர் இறைவனை நன்றியோடு நினைத்துப் பார்க்கின்றார். இரண்டாவது
பகுதியில், அவர் இறைவன் மக்கள் செய்யும் வேண்டுதல்களையும் விண்ணப்பங்களையும்
கேட்கவேண்டும் என்று மன்றாடுகின்றார். இந்த இரண்டையும்
குறித்து சிறிது சிந்தித்துப் பார்ப்போம்.
ஆண்டவருக்கென எருசலேமில் திருக்கோயிலைக் கட்டிய சாலமோன் அரசர்
ஆண்டவரின் பலிபீடத்திற்கு முன்பாக நின்றுகொண்டு, யாரெல்லாம் ஆண்டவருக்குக்
கீழ்ப்படிந்து நடந்து வருகின்றார்களோ, அவர்களுக்கு ஆண்டவர் பேரன்பு
காட்டி வருவதை நன்றியோடு நினைத்துப் பார்க்கின்றார்.
முதுபெரும் தந்தை ஆபிரகாம் தொடங்கி, தாவீது அரசர் வரை பலர் ஆண்டவருக்குக்
கீழ்ப்படிந்து நடந்தார்கள். அதனால் ஆண்டவரின் பேரன்பு அவர்களுக்குக்
கிடைத்தது என்பதை நினைவுகூரும் சாலமோன் அரசர், நாம் ஆண்டவருக்குக்
கீழ்ப்படிந்து நடந்தால், அவருடைய பேரன்பு நமக்குக் கிடைக்கும்
என்பதை மறைமுகமாக எடுத்துக்கூறுகின்றார்.
மன்றாடுகின்றவர்களின் மன்றாடாட்டைக் கேட்கவேண்டும் என்று மன்றாடிய
சாலமோன்
சாலமோன் அரசர் ஆண்டவர்முன் மன்றாடுகின்றபோது, அவருடைய மன்றாட்டின்
இரண்டாவது பகுதியாக வருவது, யாரெல்லாம் ஆண்டவரை நோக்கி அவருடைய
இல்லத்தில் மன்றாடுகின்றார்களோ, அவர்களுடைய மன்றாட்டை இறைவன்
கேட்கவேண்டும் என்பதாகும். இதில் சாலமோன் அரசர் ஆண்டவரிடம் எடுத்து
வைக்கக்கூடிய இரண்டு கருத்துகளை நாம் நம்முடைய கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஒன்று, ஆண்டவரின் பார்வை அல்லது அவருடைய கண்கள் எப்பொழுதும்
அவருடைய உறைவிடத்தில் இருக்கவேண்டும் என்பதாகும். இரண்டு, மக்கள்
இறைவனின் உறைவிடத்தை நோக்கி எழுப்புகின்ற வேண்டுதலுக்கு அவர்
செவி சாய்க்கவேண்டும் என்பதாகும். இவ்வாறு இறைவனின் கண்களும்
அவருடைய செவிகளும் அவருடைய உடனுறைதலும் எருசலேம்
திருக்கோயிலில் இருக்கவேண்டும் என்று அவர் மன்றாடுகின்றார்.
சாலமோன் அரசர் இறைவனிடம் மன்றாடுகின்ற மன்றாட்டில் மேலும் ஓர்
உண்மை ஓங்கி நிற்கின்றது. அது என்னவென்றால், மக்கள் எங்கிருந்து
எருசலேம் திருக்கோயிலை நோக்கி மன்றாடினாலும், அவர்களுடைய மன்றாட்டை
இறைவன் கேட்கவேண்டும் என்பதாகும். அப்படியானாலும் யூதர்கள் மட்டுமல்லாது,
பிற இனத்தார் இறைவனின் திருவுறைவிடத்தை நோக்கி மன்றாடினாலும்,
இறைவன் அவர்களுடைய மன்றாட்டைக் கேட்பார் என்பது உறுதியாகின்றது.
ஆகையால், இறைவன் நம்முடைய மன்றாட்டைக் கேட்பார் என்ற உறுதியான
நம்பிக்கையோடு அவருடைய இல்லத்தில் மன்றாடுவோம்.
சிந்தனை
"என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைமன்றாட்டின்
வீடு என அழைக்கப்படும்" (எசா 56:7) என்கிறது இறைவார்த்தை. ஆகையால்,
நாம் அனைவருக்கும் உரிய ஆண்டவரின் இல்லத்தில் நம்பிக்கையோடு மன்றாடுவோம்.
அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மாற்கு 7: 1-13
"இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்..."
நிகழ்வு
இளைஞன் ஒருவன் இருந்தான். ஒருநாள் அவன் தன்னுடைய இரு சக்கர வண்டியில்
வேகமாகச் சென்றுகொண்டிருந்தான். இடையில், ஒரு திருப்பத்தில் எதிரில்
வந்த ஒரு சுமையுந்து அவன்மீது மோதிவிட, அவனுடைய உடலில் பலத்த
காயங்கள் ஏற்பட்டன. அடிபட்டுக் கிடந்த அந்த இளைஞனை அக்கம் பக்கத்திலிருந்தவர்கள்தான்
தூக்கிக்கொண்டு மருத்துவ மனையில் சேர்த்தார்கள். மருத்துவ மனையில்
அவனுக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டதன் பயனாக அவன் உயிர்பிழைத்தான்.
இதற்கு நடுவில் அந்த இளைஞனுடைய நெஞ்சில் "ஜீசஸ்" என்று ஆங்கிலத்தில்
பச்சை குத்தியிருந்ததைப் பார்த்த மருத்துவர், உதவிக்கு இருந்த
கிறிஸ்தவ சமயத்தைச் சார்ந்த செவிலியரிடம், "இந்த இளைஞன் ஓர் உண்மையான
கிறிஸ்தவனாக இருக்கவேண்டும்" என்றார். இதற்கு அந்த செவிலியர்
"நெஞ்சில் ஜீசஸ் என்று பச்சை குத்துவதைவிடவும், அவருடைய போதனையின்படி
வாழ்ந்திருந்தால், இவன் உண்மையான கிறிஸ்தவனாக இருந்திருப்பான்.
இல்லையென்றால், இவன் பெயருக்குத்தான் கிறிஸ்தவன்" என்றார்.
ஒருசிலர் உண்மையான கிறிஸ்தவர்களாக இருக்கையில், பலர் பெயருக்கு
கிறிஸ்தவர்களாக அல்லது வெளிவேடத்தனமான வாழ்க்கை வாழ்வது மிகவும்
வருத்தத்திற்கு உரியதாக இருக்கின்றது. நற்செய்தியில் ஆண்டவர்
இயேசு பரிசேயர் மற்றும் மறைநூல் அறிஞர்களின் வெளிவேடத்தைப்
போட்டு உடைக்கின்றார். அது குறித்து இப்பொழுது நாம்
சிந்தித்துப் பார்ப்போம்.
கைகழுவாததைப் பெரிதுபடுத்திய பரிசேயர்கள்
ஆண்டவராகிய இயேசு, இறைவார்த்தையை எடுத்துரைத்து, மக்கள் நடுவில்
இருந்த நோயாளர்களைக் குணப்படுத்தி வந்தார். இதனால் மக்கள் நடுவில்
அவருக்கு மிகுந்த செல்வாக்கு ஏற்பட்டது. இது குறித்துக்
கேள்விப்பட்ட பரிசேயர்கள் மற்றும் எருசலேமிலிருந்து வந்திருந்த
மறைநூல் அறிஞர்கள் இயேசுவை எப்படியாவது வீழ்த்தவேண்டும் என்று
அவரிடம் வருகின்றார்கள். இந்நிலையில் இயேசுவின் சீடர்கள் கைகழுவாமல்
உண்பதைப் பார்த்துவிட்டு, அவர்கள் மூதாதையரின் மரபை மீறிவிட்டதாக
இயேசுவிடம் வாக்குவாதம் செய்கின்றார்கள். இதற்கு இயேசு என்ன பதிலளித்தார்
என்று சிந்தித்துப் பார்ப்பது முன்பு, சீடர்கள் மீறிவிட்டதாக
சொல்லப்படும் மூதாதையர் மரபு என்ன என்று தெரிந்துகொள்வது நல்லது.
"கழுவுவதற்கு ஒரு வெண்கல நீர்த்தொட்டியை அதற்கான வெண்கல
ஆதாரத்தோடு செய்... இதிலிருந்து தங்கள் கைகளையும் கால்களையும்
கழுவவேண்டும்..." என்று விடுதலைப் பயண நூல் 30: 17-21 இல்
வாசிக்கின்றோம். இதன்படி இஸ்ரேயல் மக்கள் அதிலும் குறிப்பாக
ஆரோனின் மக்கள் சந்திப்புக் கூடாரத்திற்குள் நுழைந்து,
ஆண்டவருக்கென நெருப்புப் பலியினைச் சுட்டெரிக்கும் பணியினைச்
செய்யும்பொழுது தங்களுடைய கைகளையும் கால்களையும் கழுவப்
பணிக்கப்பட்டார்கள். ஆனால், பரிசேயர்கள் இதனை காலப்போக்கில்
சாப்பிடுவதற்கு முன்பும் பாத்திரங்களைப் பயன்படுத்தும்பொழுதும்
கடைத்தெருவிலிருந்து பொருள்களை வாங்கி வருகின்றபொழுதும்
கைகளையும் பொருள்களையும் கழுவவேண்டும் என்று போதித்தார்கள்.
இதைக்கூட தூய்மை கருதி ஏற்றுக்கொள்ளலாம். கை கழுவாததை
மிகப்பெரிய குற்றமாக அவர்கள் சொன்னதைத்தான் ஏற்றுக்கொள்ள
முடியாது. இதனால் இயேசு அவர்களிடம் இறைவாக்கினர் எசாயா நூலில்
இடம்பெறும் வார்த்தைகளை (எசா 29: 13) மேற்கோள் காட்டி,
கடுமையாகச் சாடுகின்றார்.
கடவுளின் கட்டளையைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, மூதாதையர்
மரபுக்கு முதலிடம்
இயேசு, பரிசேயர்களையும் மறைநூல் அறிஞர்களையும் தன்னுடைய
சீடர்கள் கைகழுவாமல் உண்டதைப் பெரிதுபடுத்தியதற்காகச்
சாடியதோடு மட்டுமல்லாமல், அவர்கள் கடவுளின் கட்டளையைப்
பின்னுக்குத் தள்ளிவிட்டு, மூதாதையர் மரபுக்கு முன்னுரிமை
கொடுத்ததற்காகவும் கடுமையாகச் சாடுகின்றார்.
"உன் தந்தையையும் தாயையும் மதித்து நட" (விப 20:12) என்பது
கடவுளின் சட்டம். இதை அவர்கள் வசதியாக மறந்துவிட்டு,
கடவுளுக்குக் "கொர்பான்" செலுத்தியவர், தாய் தந்தைக்கு எந்தவித
உதவியும் செய்யத் தேவையில்லை என்ற மூதாதையர் மரபை
முன்னிலைப்படுத்தினார்கள் அல்லது தூக்கிப்பிடித்தார்கள்.
இதனாலும் இயேசு அவர்களைக் கடுமையாகச் சாடுகின்றார்.
பரிசேயர்கள் ஊருக்கு முன் நல்லவர்கள் போல்
காட்டிக்கொண்டார்கள். ஆனால், உண்மையில் அவர்கள் உள்ளுக்குள்
அன்பில்லாமல் இருந்தார்கள். நாம் உள்ளும் புறமும் உண்மையாக
இருந்து, அன்பின் வழியில் நடக்கின்றோமா? சிந்தித்துப்
பார்ப்போம்.
சிந்தனை
ஆசிரியர் ஒருவர் தன்னுடைய மாணவர்களிடம், "வெளிவேடம் என்றால்
என்ன?" என்று கேட்டார். அதற்கு ஒரு மாணவன் எழுந்து, "தாமதமாக
வரும் ஒரு மாணவன், ஆசிரியர் தன்னை எதுவும் செய்துவிடக்கூடாது
என்பதற்காகச் சிரித்துக்கொண்டே வருவதற்குப் பெயர்தான்
வெளிவேடம்" என்றான். ஆம், உண்மையான இருக்கின்ற யாரும்
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசமாட்டார். எனவே, நாம்
நம்மிடமிருந்து வெளிவேடத்தனத்தை அகற்றி, வாழ்வு தரும் கடவுளின்
கட்டளைகளின்படி நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|