Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   10  பிப்ரவரி 2020  
    பொதுக்காலம் 5 ஆம் வாரம்
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 உடன்படிக்கைப் பேழையைத் திருத்தூயகத்தில் வைத்தனர்; ஆண்டவரின் மாட்சி கோவிலை நிரப்பிற்று.

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 8: 1-7, 9-13

அந்நாள்களில் சாலமோன் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைத் தாவீதின் நகர் சீயோனினின்று கொண்டுவர விரும்பினார். அதற்காக அவர் இஸ்ரயேலின் பெரியோரையும் எல்லாக் குலத்தலைவர்களையும் இஸ்ரயேல் மக்களின் மூதாதையர் வீட்டுத் தலைவர்களையும் எருசலேமிற்குத் தம்மிடம் வரும்படி அழைத்தார். அதற்கிணங்க, அவர்கள் அனைவரும் ஏழாம் மாதமாகிய "ஏத்தானிம்"மாதத்தின் பண்டிகையின்போது, அரசர் சாலமோன் முன் கூடினர். இஸ்ரயேலின் பெரியோர் அனைவரும் வந்தனர். குருக்கள் பேழையைத் தூக்கிக் கொண்டனர். ஆண்டவரின் பேழை, சந்திப்புக் கூடாரம், கூடாரத்தின் தூய கலன்கள் அனைத்தையும் குருக்களும் லேவியரும் சுமந்துசென்றனர். அரசர் சாலமோனும், அவரிடம் வந்து குழுமிய இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும், எண்ணவோ கணக்கிடவோ முடியாத அளவு திரளான ஆடுகளையும் மாடுகளையும் பேழைக்கு முன்னால் பலியிட்டனர். பின்னர், குருக்கள் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைக் கோவில் கருவறையாகிய திருத்தூயகத்தில் அதற்குரிய இடத்தில் கெருபுகளின் இறக்கைகளின் கீழே கொண்டு வந்து வைத்தனர். அக்கெருபுகள் பேழை இருக்கும் இடத்தில் தங்கள் இரண்டு இறக்கைகளையும் விரித்து, பேழையையும், அதன் தண்டுகளையும் மூடியவாறு இருந்தன. இரு கற்பலகைகளைத் தவிர வேறொன்றும் பேழைக்குள் இல்லை. இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிய பொழுது அவர்களோடு உடன்படிக்கை செய்துகொண்ட ஓரேபு மலையில் மோசே அதற்குள் வைத்தவை அவை. குருக்கள் தூயகத்தினின்று வெளியே வருகையில் ஒரு மேகம் ஆண்டவரின் இல்லத்தை நிரப்பிற்று. அம்மேகத் தின் பொருட்டு குருக்கள் திருப்பணி புரிய அங்கு நிற்க இயலவில்லை. ஏனெனில் ஆண்டவரின் மாட்சி அவர் இல்லத்தை நிரப்பிற்று. அப்பொழுது சாலமோன், "ஆண்டவரே! நீர் கரிய மேகத்தில் உறைவதாகக் கூறினீர். நீர் என்றென்றும் தங்கி வாழ உயர் இல்லம் ஒன்றை உமக்காக நான் கட்டியுள்ளேன்" என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 132: 6-7. 8-10 (பல்லவி: 8) Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவரே! உம் உறைவிடத்திற்கு வல்லமையோடு எழுந்தருளும்.

6திருப்பேழை எப்ராத்தாவில் இருப்பதாய்க் கேள்விப்பட்டோம்; வனவெளியில் அதைக் கண்டுபிடித்தோம்.
7"அவரது உறைவிடத்திற்குச் செல்வோம்! வாருங்கள்; அவரது திருவடிதாங்கிமுன் வீழ்ந்து பணிவோம்!" - பல்லவி

8ஆண்டவரே! நீர் உமது வல்லமை விளங்கும் பேழையுடன் உமது உறைவிடத்திற்கு எழுந்தருள்வீராக!
9உம் குருக்கள் நீதியை ஆடையென அணிவார்களாக! உம் அன்பர்கள் அக்களிப்பார்களாக!
10நீர் திருப்பொழிவு செய்த அரசரை, உம் ஊழியராகிய தாவீதின் பொருட்டுப் புறக்கணியாதேயும். - பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 (மத் 4: 23)

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
++இயேசுவைத் தொட்ட அனைவரும் நலமடைந்தனர். 

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 53-56

இயேசுவும் அவருடைய சீடர்களும் மறு கரைக்குச் சென்று கெனசரேத்துப் பகுதியை அடைந்து படகைக் கட்டி நிறுத்தினார்கள். அவர்கள் படகை விட்டு இறங்கிய உடனே, மக்கள் இயேசுவை இன்னார் என்று கண்டுணர்ந்து, அச்சுற்றுப்பகுதி எங்கும் ஓடிச் சென்று, அவர் இருப்பதாகக் கேள்விப்பட்ட இடங்களுக்கெல்லாம் நோயாளர்களைப் படுக்கையில் கொண்டு வரத் தொடங்கினார்கள். மேலும் அவர் சென்ற ஊர்கள், நகர்கள், பட்டிகள் அனைத்திலும் உடல் நலம் குன்றியோரைப் பொது இடங்களில் கிடத்தி, அவருடைய மேலுடையின் ஓரத்தையாவது அவர்கள் தொட அனுமதிக்குமாறு அவரை வேண்டினார்கள். அவரைத் தொட்ட அனைவரும் நலமடைந்தனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 1 அரசர்கள் 8: 1-7, 9-13

"ஆண்டவரின் மாட்சி அவர் இல்லத்தை நிரப்பிற்று"


நிகழ்வு


அது ஒரு பழமையான பங்கு. அந்தப் பங்கில் வயதான குருவானவர் ஒருவர் பங்குத்தந்தையாக இருந்தார். அவர் மிகவும் உண்மையாகவும் நேர்மையாகவும் தவறு செய்பவர்களிடம் அவர்களுடைய தவறுகளை நேருக்கு நேர் சுட்டுக் காட்டுபவராகவும் இருந்ததால், ஒருசிலருக்கு அவரைப் பிடிக்கவே இல்லை. இதற்காக அவர் தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ளவில்லை,

இதற்கிடையில் அவரைப் பிடிக்காத "ஒருசிலர்"அவரை மனம்நோகச் செய்யவேண்டும் என்பதற்காக, அவர் திருப்பலி நிறைவேற்றிக்கொண்டிருக்கையில், கோயிலைவிட்டு வெளியே எழுந்து சென்றனர். இதைக் கவனித்துகொண்டே வந்த அவர் ஒருநாள், "இங்குள்ள ஒருசிலர் என்னை மனம்நோகச் செய்யவேண்டும் என்பதற்காக நான் திருப்பலி நிறைவேற்றிக்கொண்டிருக்கும்பொழுதே, கோயிலைவிட்டு எழுந்து வெளியே செல்கின்றார்கள். இது எப்படி இருக்கின்றது என்றால், ஒரு மரத்திலிருந்து பட்டுப்போன இல்லை கீழே விழுவது போன்று இருக்கின்றது. பட்டுப்போன இலை மரத்திலிருந்து கீழே விழுவதால் மரத்திற்கு எந்தவோர் இழப்புமில்லை. இலைக்குத்தான் பெரிய இழப்பே. அதுபோன்றுதான் நான் திருப்பலி நிறைவேற்றிக்கொண்டிருக்கையில் பாதியில் எழுந்து போகின்றவர்களால் எனக்கு எந்தவோர் இழப்பும் இல்லை. உன்னத பலியில் கலந்துகொள்ளாமல் போவதால் அவர்களுக்குத்தான் பெரிய இழப்பு" என்றார்.

இந்த நிகழ்வில் வருகின்ற "ஒருசிலரைப் போன்றுதான் பலர் குருவானவரை மனம் நோகச் செய்யவேண்டும் என்பதற்காக கோயிலையும் அதில் உறைந்திருக்கும் ஆண்டவரையும் அவமதிக்கின்றார்கள். இவர்கள் பரிதாபாத்திற்கு உரியவர்கள். இவர்கள் தங்களுடைய தவற்றினை உணர்ந்து, ஆண்டவர் உறைந்திருக்கும் திருக்கோயிலுக்கு உரிய முக்கியத்துவம் வாழ்வது நல்லது. இன்றைய முதல் வாசகம், ஆண்டவரின் மாட்சி எருசலேம் திருக்கோயிலை நிரப்புவதைக் குறித்து வாசிக்கின்றோம். அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைத் திருத்தூயகத்திற்குக் கொண்டுவரல்

முதல் வாசகத்தில், சாலமோன் அரசர் இஸ்ரயேலின் பெரியோர், எல்லாக் குலத்தலைவர்கள், இஸ்ரயேல் மக்களின் மூதாதையர், வீட்டுத் தலைவர்கள் ஆகியோரோடு சேர்ந்து, உடன்படிக்கைப் பேழையை தாவீதின் நகர் சீயோனின்று திருத்தூயகத்திற்குக் கொண்டு வருகின்றார்கள். உடன்படிக்கைப் பேழை ஆண்டவரின் உடனிருப்பை இஸ்ரயேல் மக்களுக்கு உணர்த்தியது. அது திருத்தூயகத்திற்குக் கொண்டு வரப்படுவதற்கு முன்பாக அதற்கென நிறுவப்பட்டிருந்த கூடாரத்தில் வைக்கப்பட்டிருந்தது (2 சாமு 6:17). எருசலேம் திருக்கோயில் கட்டி முடிக்கப்பட்டதும், சாலமோன் அரசர் மற்றவர்களோடு சேர்ந்து உடன்படிக்கைப் பேழையைக் கொண்டு திருத்தூயகத்தில் வைக்கின்றார். இதனால் என்ன நடந்தது என்பதைத் தொடர்ந்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

ஆண்டவரின் மாட்சி அவர் இல்லத்தை நிரப்புதல்

சாலமோன் அரசர் குருக்கள் மற்றும் லேயர்களின் உதவியுடன் உடன்படிக்கைப் பேழையை திருத்தூயகத்திற்குள் கொண்டுவந்து வைத்துவிட்டு வெளியே சென்றபிறகு, ஒரு மேகம் வந்து ஆண்டவரின் இல்லத்தை நிரப்புகின்றது. திருவிவிலியத்தில் மேகம் கடவுளின் உடனுறைதலை பிரசன்னத்தை (விப 19:9) எடுத்துரைக்கும் ஒன்றாக இருக்கின்றது. இன்றைய முதல் வாசகத்தில், மேகம் ஆண்டவரின் இல்லத்தை நிரப்பிற்று என்றால், ஆண்டவர் தன்னுடைய இல்லத்தை தனது உடனுறைதலால் நிரப்பினார் என்று பொருள் எடுத்துக் கொள்ளாமல், இப்படி ஆண்டவரின் உடனுறைததால், அவருடைய மாட்சியால் நிரப்பட்ட எருசலேம் திருக்கோயிலிலிருந்து, இஸ்ரயேல் மக்கள் தவறு செய்கின்றபோது ஆண்டவரின் உடனுறைதலும் மாட்சியும் வெளியே செல்லும் (எசே 8: 1-4, 9:3, 10:4, 18-19, 11: 22-23) உள்ளே வரும் (எசே 43: 1-5). மீண்டுமாக வெளியே செல்லும். இதன்பிறகு இயேசுவின் வடிவில் அது இப்புவிக்கு வரும் (யோவா 1:14). இப்படி ஆண்டவரின் மாட்சி உள்ளே போகுவதும் வெளியே வருவதற்குமான காரணம் ஒன்றே ஒன்றுதான். அதுதான் மக்கள் செய்த தவறு.

இந்த நேரத்திலும் இப்புவியிலும் நம்மிடத்திலும் ஆண்டவரின் அருளும் மாட்சியும் தங்கவேண்டும் என்றால், அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் எனத் தெரிந்துகொள்வது நல்லது.

ஆண்டவர் நமக்குள் குடிகொள்ள நாம் என்ன செய்யவேண்டும்?

ஆண்டவரின் மாட்சியும் அருளும் அவருடைய உடனிருப்பும் நம்மோடு இருப்பதற்கு இயேசு சொல்லக்கூடிய மிக முக்கியமான செய்தி, கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்வதாகும். நற்செய்தியில் இயேசு இவ்வாறு கூறுவார்: "என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து குடிகொள்வோம்" (யோவா 14: 23). ஆகையால், இறைவன் நம்மோடு உடனிருக்க, நாம் அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்க முயற்சி செய்வோம்.

சிந்தனை

"இதோ உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" (மத் 28: 20) என்பார் இயேசு. ஆகையால், நாம் கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் கட்டளைகளின் படி நடப்போம். அதன்மூலம் அவருடைய உடனிருப்பையும் அருளையும் நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 
மாற்கு 6: 53-56

"அவரைத் தொட்ட அனைவரும் நலமடைந்தனர்"


நிகழ்வு

பிரபல மருத்துவர் நார்மன் லோப்சென்ஸ் (Dr. Norman Lobsenz) எழுதிய ஒரு கட்டுரை "The Loving Message of Touch"என்பதாகும். இக்கட்டுரையில் இவர், மனிதர்களுடைய வாழ்வில் தொடுதல் எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது என்பதைக் குறிப்பிடுகின்றார்.

"எந்தக் குழந்தை தன்னுடைய பெற்றோரின் தொடுதலிலும் அரவணைப்பிலும் அவர்களுடைய உடல்கள் தரும் கதகதப்பிலும் வளர்கின்றதோ, அந்தக் குழந்தை ஆரோக்கியமாகவும் அறிவுத்திறனோடும் இருக்கின்றது. மேலும் அந்தக் குழந்தை மற்ற குழந்தைகளைவிட வேகமாக வளர்கின்றது, நடக்கின்றது, இன்னும் பல்வேறு விதங்களில் சிறந்து விளங்குகின்றது."

மருத்துவர் நார்மன் லோப்சென்ஸ் சொல்லக்கூடிய இந்தச் செய்திகள் நமக்கு முக்கியமான ஓர் உண்மையை எடுத்துச் சொல்கின்றன. அது என்னவெனில், மனிதர்களின் தொடுதலுக்கே இவ்வளவு ஆற்றலும் வல்லமையும் இருக்கின்றபொழுது, கடவுளின் ஆண்டவர் இயேசுவின் தொடுதலுக்கு எவ்வளவு வல்லமை இருக்கும் என்பதுதான். ஆம். இன்றைய நற்செய்தியில் இயேசுவைத் தொட்ட அனைவரும் நலமாடைந்தார்கள் என்று வாசிக்கின்றோம். இது குறித்து நாம் இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசுவை இன்னாரெனக் கண்டுகொண்ட மக்கள்

நற்செய்தியில் இயேசு மறுகரைக்குச் சென்று, கெனசரேத்துப் பகுதியை அடைய, மக்கள் அவரை இன்னாரெனக் கண்டுகொண்டு அவரிடம் நோயாளர்களைப் படுக்கையில் கொண்டு வருவதைக் குறித்து வாசிக்கின்றோம். மறுகரையில் இருந்த கெனசரேத்துக்கு இயேசு அவ்வளவாகச் சென்றதில்லை. ஆனாலும், மக்கள் அவரை இன்னாரெனக் கண்டுகொள்கின்றார்கள். இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பதை அறிந்துகொள்வது நல்லது.

தூய ஆவியாரால் நிரப்பப்பட்ட இயேசு சென்ற இடங்களிலெல்லாம் நன்மை செய்துகொண்டே சென்றார் (திப 10:38) குறிப்பாக அவர் பார்வையற்றவர்களுக்குப் பார்வையும் காத்துகேளாதவர்களுக்கு கேட்கும் திறனும் உடல் நலமற்றவர்களுக்கு நலமும் இன்னும் பல்வேறு நன்மைகளையெல்லாம் மக்களுக்குச் செய்துவந்தார். இச்செய்தி மறுகரைப் பக்கமாக இருந்த கெனசரேத்தில் இருந்த மக்களுக்கும் தெரியவந்திருக்கும். இதனால் அவர்கள் நோயாளர்களைப் படுக்கையில் வைத்துக் கொண்டு இயேசுவிடம் வருகின்றார்கள்.

இன்றைய நற்செய்தியில் மக்கள் அவரை "இன்னாரெனக்" கண்டுகொண்டார்கள் என்று வாசிக்கின்றோம். ஒருவேளை அவர்கள் "இயேசுவை இறைமகன்"எனக் கண்டுகொண்டார்களா? என்பது கேள்விக்குறிதான். இன்றைக்கு இருக்கின்ற ஒருசில கிறிஸ்தவர்களைப் போன்று அன்றைக்கு இருந்தவர்கள் இயேசுவை அற்புதங்களையும் அருமடையாளங்களையும் நிகழ்த்துபவராகப் புரிந்துகொண்டிருக்கவேண்டும். அதனால் அவர்கள் நோயாளர்களை இயேசுவிடம் கொண்டு வருகின்றார்கள். நாம் இயேசுவை வெறுமனே அதிசயங்களையும் அற்புதங்களையும் நிகழ்த்துபவராக மட்டும் புரிந்துகொள்ளாமல், அவரை இறைமகனாக, மெசியாவாகப் புரிந்துகொள்ளும் நிலைக்கு உயரவேண்டும்.

இயேசுவைத் தொட்டு மக்கள் நலமடைந்தவர்கள்

நான்கு நற்செய்தி நூல்களும் இயேசுவால் தொடப்பட்டு நலமாடைந்தவர்களையும் இயேசுவைத் தொட்டு நலமடைந்தவர்களை எடுத்துக்கூறுகின்றன. இன்றைய நற்செய்தி வாசகமோ, இயேசுவை, அவருடைய மேலுடையைத் தொட்டு நலமடைந்தவர்களைக் குறித்து எடுத்துச் சொல்கின்றது. இயேசுவின் மேலுடையைத் தொட்டால் நலம் கிடைக்கும் என்பதை கெனசரேத்து பகுதியில் இருந்தவர்கள், பன்னிரு ஆண்டுகளாக இரத்தப்போக்கினால் பாதிக்கப்பட்ட பெண்மணி இயேசுவின் மேலுடையைத் தொட்டு நலம்பெற்ற நிகழ்விலிருந்து (மாற் 5: 27-29) அறிந்திருக்கலாம் என்று உறுதியாகச் சொல்லலாம். எனவே, அவர்கள் பல்வேறு இடங்களிலிருந்த உடல்நலம் குன்றிய மக்களை இயேசு நடந்து சென்ற பாதையில் கிடத்தி, அவர்கள் அவருடைய மேலுடையின் ஓரத்தையாவது தொட அவரை வேண்டுகிறார்கள். அவர்கள் வேண்டிக்கொண்டதற்கு இயேசு இணங்க, அவர்கள் அவரைத் தொடுகின்றார்கள். அவரைத் தொட்ட அனைவரும் நலமடைகின்றார்கள். இதன்மூலம் இயேசு தான் வல்லமை நிறைந்தவர் என்பதை நிரூபிக்கின்றார்.

இயேசுவை, அவருடைய மேலுடைத் தொட்டால் நலம் கிடைக்கும் என்று மக்கள் நிச்சயமாக நம்பியிருக்கவேண்டும். அந்த நம்பிக்கையே அவர்களுக்கு நலமளிப்பதாக இருக்கின்றது. இயேசுவின் வாழ்வில் நடந்த இந்த நிகழ்வு போன்று புனித பவுலின் வாழ்விலும் நடக்கின்றது. "பவுலின் உடலில் பட்ட கைக்குட்டைகளையும் துண்டுகளையும் கொண்டு வந்து நோயுற்றோர்மீது வைத்ததும் பிணிகள் அவர்களை விட்டு நீங்கும்; பொல்லாத ஆவிகளும் வெளியேறும் (திப 19: 11-12) என்று திருத்தூதர் பணிகள் நூல் எடுத்துக் கூறுகின்றது. இது புனித பவுல் இறைவல்லமையைப் பெற்றிருந்தார் என்ற உண்மையை நமக்கு எடுத்துக்கின்றது.

ஆகவே, மக்கள் இயேசுவின்மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருந்ததைப் போன்று, நாமும் அவரிடம் ஆழமான நம்பிக்கை கொண்டு, அவருடைய அருளை நிறைவாகப் பெறுவோம்.

சிந்தனை

"நம்பினோர் ஆற்றலில் சிறந்தோங்குவர்"(1 மக் 2:61) என்கிறது மக்கபேயர் முதல் நூல், ஆகையால், நாம் இயேசுவிடம் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!