Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   08  பிப்ரவரி 2020  
    பொதுக்காலம் 4 ஆம் வாரம்
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
++"உம் மக்களுக்கு நீதி வழங்க ஞானத்தை எனக்குத் தந்தருளும்'' எனச் சாலமோன் செபித்தார்.

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 3: 4-13

அந்நாள்களில் சாலமோன் அரசர் பலி செலுத்துமாறு கிபயோனுக்குச் சென்றார். அங்கேதான் மிக முக்கியமான தொழுகைமேடு இருந்தது. அங்கிருந்த பலிபீடத்தின் மேல்தான் சாலமோன் ஆயிரம் எரிபலிகளைச் செலுத்தியிருந்தார். அன்றிரவு கிபயோனில் ஆண்டவர் சாலமோனுக்குக் கனவில் தோன்றினார். "உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள்!" என்று கடவுள் கேட்டார். அதற்குச் சாலமோன், "உம் அடியாராகிய என் தந்தை தாவீது உமது பார்வையில் உண்மையுடனும் நீதியுடனும் நேரிய உள்ளத்துடனும் நடந்து கொண்டார். அதனால் நீர் அவருக்குப் பேரன்பு காட்டினீர். அந்தப் பேரன்பை அவருக்கு என்றும் காட்டி வந்து, இன்று அவரது அரியணையில் வீற்றிருக்கும் மகனை அவருக்குத் தந்தீர். என் கடவுளாகிய ஆண்டவரே, நீர் அடியேனை என் தந்தை தாவீதுக்குப் பதிலாக அரசனாக்கியுள்ளீர். நான் செய்வதறியாத சிறு பிள்ளை. இதோ! உமக்கென நீர் தெரிந்து கொண்ட திரளான மக்களிடையே அடியேன் இருக்கிறேன். அவர்கள் எண்ணிக் கணிக்க முடியாத மாபெரும் தொகையினர். எனவே, உம் மக்களுக்கு நீதி வழங்கவும் நன்மை தீமை பகுத்தறியவும் தேவையான ஞானம் நிறைந்த உள்ளத்தை அடியேனுக்குத் தந்தருளும்,. இல்லாவிடில், உமக்குரிய இம்மாபெரும் மக்கள் இனத்திற்கு நீதி வழங்க யாரால் இயலும்?" என்று கேட்டார். சாலமோன் இவ்வாறு கேட்டது ஆண்டவருக்கு உகந்ததாய் இருந்தது. கடவுள் அவரிடம், "நீடிய ஆயுளையோ, செல்வத்தையோ நீ கேட்கவில்லை. உன் எதிரிகளின் சாவையும் நீ விரும்பவில்லை. மாறாக, நீதி வழங்கத் தேவையான ஞானத்தை மட்டுமே கேட்டிருக்கிறாய். இதோ! நான் இப்பொழுது நீ கேட்டபடியே செய்கிறேன். உனக்கு நிகராக, உனக்கு முன்னே எவரும் இருந்ததில்லை. உனக்குப் பின்னே இருக்கப் போவதும் இல்லை. அந்த அளவுக்கு ஞானமும் பகுத்தறிவும் நிறைந்த உள்ளத்தை உனக்கு வழங்குகிறேன். இன்னும் நீ கேளாத செல்வத்தையும் புகழையும் உனக்குத் தருவேன். ஆகையால் உன் வாழ்நாள் முழுவதிலும் உனக்கு இணையான அரசன் எவனும் இரான்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 119: 9. 10. 11. 12. 13. 14 (பல்லவி: 12b)
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பித்தருளும்.

9இளைஞர் தம் நடத்தையை மாசற்றதாய்க் காத்துக் கொள்வது எவ்வாறு? உம் வாக்கைக் கடைப்பிடிப்பதால் அன்றோ?
10முழுமனத்தோடு நான் உம்மைத் தேடுகின்றேன்; உம் கட்டளைகளை விட்டு என்னை விலக விடாதேயும். - பல்லவி

11உமக்கெதிராய் நான் பாவம் செய்யாதவாறு உமது வாக்கை என் இதயத்தில் இருத்தியுள்ளேன்.
12ஆண்டவரே, நீர் போற்றுதற்கு உரியவர்; எனக்கு உம் விதி முறைகளைக் கற்பித்தருளும். - பல்லவி

13உம் வாயினின்று வரும் நீதித் தீர்ப்புகளை எல்லாம் என் இதழால் எடுத்துரைக்கின்றேன்.
14பெருஞ்செல்வத்தில் மகிழ்ச்சி அடைவதுபோல், நான் உம் ஒழுங்குமுறைகளின்படி நடப்பதில் மகிழ்ச்சியுறுகின்றேன். - பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி (யோவா 10: 27)

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
++மக்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்தார்கள். 

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 30-34

அக்காலத்தில் திருத்தூதர்கள் இயேசுவிடம் வந்து கூடித் தாங்கள் செய்தவை, கற்பித்தவை எல்லாம் அவருக்குத் தெரிவித்தார்கள். அவர் அவர்களிடம், "நீங்கள் பாலை நிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்'' என்றார். ஏனெனில் பலர் வருவதும் போவதுமாய் இருந்ததால், உண்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. அவ்வாறே அவர்கள் படகேறிப் பாலைநிலத்தில் உள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார்கள். அவர்கள் புறப்பட்டுப் போவதை மக்கள் பார்த்தார்கள். பலர் அவர்களை இன்னாரென்று தெரிந்துகொண்டு, எல்லா நகர்களிலிருந்தும் கால்நடையாகவே கூட்டமாய் ஓடி, அவர்களுக்கு முன் அங்கு வந்து சேர்ந்தனர். அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள்மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 1 அரசர்கள் 3: 4-13

"ஞானம் நிறைந்த உள்ளத்தை அடியேனுக்குத் தந்தருளும்"

நிகழ்வு

சில ஆண்டுகளுக்கு முன்பாக இளைஞன் ஒருவன், "கலிபோர்னியாப் பல்கலைக்கழத்தில் சேர்ந்தால், ஞானத்தைக் கற்றுக் கொள்ளலாம்" என்று நம்பிக்கையோடு அதில் சேர்ந்தான். பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பல மாதங்கள் ஆனபோகும், அவனுக்கு அங்கு யாரும் ஞானத்தைக் கற்றுத் தரவில்லை.

இதனால் அமைதியிழந்த அந்த இளைஞன் கலிபோர்னியாப் பல்கலைக்கழகம் மோசடி செய்துவிட்டதாக அதன்மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தான். வழக்கைக் கேள்விப்பட்ட நீதிபதி ஒரு நிமிடம் ஆடிப்போய்விட்டார். பின்னர் அவர் அந்த இளைஞனிடம், "ஞானத்தை யாராலும் கற்றுத் தரமுடியாது. அது மேலிருந்து அருளப்படவேண்டியது. இறைவன் ஒருவரால் மட்டுமே அதை ஒருவருக்குத் தரமுடியும். அதனால் நீ பல்கலைக்கழகத்தின்மீது குற்றச்சாட்டு பொய்யானது" என்று சொல்லி வழக்கை முடித்தார்.

ஆம், ஞானத்தை யாராலும் கற்றுத்தர முடியாது; இறைவனால் மட்டுமே வழங்க முடியும். இத்தகைய உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவராகிய கடவுள் சாலமோன் அரசருக்கு ஞானத்தை அளிப்பதைக் குறித்து வாசிக்கின்றோம். அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்தப் பார்ப்போம்.

ஆண்டவர்மீது அன்புகூர்ந்து அவருடைய நியமங்களின்படி நடந்த சாலமோன்

இன்றைய முதல் வாசகம், ஆண்டவராகிய கடவுள் சாலமோன் அரசருக்கு ஞானத்தை அருளியதைக் குறித்து எடுத்துச் சொல்கின்றது. ஆண்டவர் சாலமோனுக்கு ஞானத்தை அருளுவதற்குக் காரணமாக இருந்தது என்ன என்பதைத் தெரிந்துகொள்வது நல்லது.

தாவீது அரசர், தான் இறப்பதற்கு முன்பாக சாலமோனிடம், "உன் கடவுளாகிய ஆண்டவரின் ஆணைகளைக் கடைப்பிடி... நீ செய்யும் செயல்களிலும் செல்லும் இடங்களிலும் வெற்றி காண்பாய்" என்று கூறுவார் (1 அர 2:3). தன் தந்தை தாவீது சொன்னது போன்று சாலமோன் ஆண்டவர்மீது அன்புகூர்ந்து அவருடைய நியமங்களைத் தன்னுடைய வாழ்வில் கடைப்பிடித்து வந்தார் (1 அர 3:3). சாலமோன் ஆண்டவரைத் தன் வாழ்நாள் முழுவதும் அன்பு செய்து, அவருடைய நியமங்களின் படி நடந்து வந்தாரா என்றால், இல்லையென்றுதான் சொல்லவேண்டும்; ஆனால், அவர் தொடக்கத்தில் ஆண்டவர்மீது அன்புகூர்ந்து, அவருடைய நியமங்களின்படி நடந்து வந்தார். அதனால் ஆண்டவர் அவருக்கு ஞானத்தை அருளினார்.

ஆண்டவர் சாலமோனுக்கு ஞானத்தை அருளுதல்

சாலமோன் தன்மீது அன்புகூர்ந்து, தன்னுடைய நியமங்களைக் கடைப்பிடித்து வந்ததைப் பார்த்த ஆண்டவர் அவரிடம், "உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள்!" என்கின்றார். ஆண்டவர் தன்னிடம் இவ்வாறு சொன்னதும், சாலமோன் தனக்கு ஞானம் வேண்டும் என்று கேட்கவில்லை. மாறாக மூன்று செயல்களை அவர் நன்றியோடு நினைத்துப் பார்க்கின்றார். கடவுள், தன் தந்தை தாவீதுக்கு பேரன்பு காட்டியது... சாதாரண மனிதனாகிய தன்னை அவர் அரசனாக உயர்த்தியது... வரும்காலத்தில் அவர் தன்னை வழிநடத்தப் போவது ... ஆகிய மூன்று செயல்களுக்காக சாலமோன் ஆண்டவரை நன்றியோடு நினைத்துப் பார்க்கின்றார். அதன்பின்னரே அவர், "மக்களுக்கு நீதி வழங்கவும் நன்மை தீமை பகுத்தறியவும் தேவையான ஞானம் நிறைந்த உள்ளத்தை அடியேனுக்குத் தந்தருளும்" என்று கேட்கின்றார்.

சாலமோன் தன்னிடம் இவ்வாறு கேட்டது ஆண்டவருக்கு உகந்ததாக இருந்தது. அதனால் அவர் சாலமோன் தன்னிடம் கேட்டத்தை விடவும் மிகுதியாகத் தருகின்றார். சாலமோன் ஆண்டவரிடம் ஞானத்தைக் கேட்டதன் மூலம் ஞானம் எத்துணை முக்கியமானது...? இதனை நாம் பெற்றுக்கொள்ள என்ன செய்யவேண்டும்...? ஆகியவற்றைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்

ஆண்டவருடைய வழியில் நடந்தால் ஞானம் அருளப்படும்

சாலமோன் அரசர் ஆண்டவர்மீது அன்புகூர்ந்து, அவருடைய நியமங்களின் படி நடந்ததால், ஆண்டவர் அவருக்கு ஞானத்தையும் அதோடு மட்டுமல்லாமல் செல்வத்தையும் புகழையும் வழங்கினார் என்று நாம் சிந்தித்துப் பார்ப்போம். அப்படியானால் இறைவன் நமக்கு ஞானத்தை வழங்கவேண்டும் என்றால், நாம் ஆண்டவர்மீது அன்புகூர்ந்து, அவருடைய நியமங்களின்படி நடப்பது மிகவும் இன்றியமையாததாக இருக்கின்றது. பல நேரங்களில் நாம் ஆண்டவர்மீது அன்புகூராமலும் அவருடைய நியமங்கள், விதிமுறைகள், கட்டளைகளின் படி நடக்காமலும் இருந்துகொண்டு, அவர் நமக்கு ஞானத்தையும் ஏனைய ஆசிகளையும் வழங்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். இது மிகவும் தவறான ஓர் எண்ணமாகும். ஆகையால், நாம் ஆண்டவர்மீது அன்பு கூர்ந்து, அவருடைய நியமங்களின் நடப்பதற்கு முயற்சி செய்வோம்.

சிந்தனை

"ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்" (நீமொ 9:10) என்கிறது இறைவார்த்தை. ஆகையால், நாம் ஆண்டவரின் அச்சமும் அன்பும் கொண்டு அவருடைய கட்டளைகளின்படி நடப்போம். அதன்மூலம் ஞானமும் எல்லா ஆசியையும் நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 மாற்கு 6: 30-34

"சற்று ஓய்வெடுங்கள்"

நிகழ்வு

ஓர் ஊரில் இரண்டு விறகுவெட்டிகள் இருந்தார்கள். இவர்கள் இருவருக்குள்ளும் யார் அதிகமான விறகுகளை வெட்டுகிறார் என்ற போட்டி நிலவிக்கொண்டே இருந்தது. ஒருநாள் இவர்கள் இருவரும் ஊரில் இருந்த பெரியவர் ஒருவரைச் சந்தித்து, தங்களுடைய நிலைமை எடுத்துச் சொன்னார்கள். உடனே பெரியவர் அவர்களிடம், "நாளைய நாளில் ஊருக்கு வெளியே உள்ள காட்டில் உங்கள் இருவருக்கும் போட்டியை வைத்துக்கொள்வோம். போட்டியில் யார் மிகுதியான விறகுகளை வெட்டுகிறாரோ, அவரே பலசாலி" என்றார். விறகுவெட்டிகள் இருவரும் அதற்குச் சம்மதித்தார்கள்.

மறுநாள் காலையில் பெரியவர் முன்னிலையில் போட்டி தொடங்கியது. இருவரும் சற்று தள்ளித் தள்ளி விறகு வெட்டத் தொடங்கினார்கள். முதல் விறகுவெட்டி வேகவேகமாக விறகுகளை வெட்டத் தொடங்கினார். இரண்டாம் விறகுவெட்டி ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை சற்று ஓய்வெடுத்துக் கொண்டு விறகுகளை வெட்டினார். இதனால் முதல் விறகுவெட்டிக்கு, இரண்டாம் விறகுவெட்டியைவிட மிகுதியான விறகுவெட்டுவதாக எண்ணம் ஏற்பட்டது.

மாலை வேளையில் போட்டியை முன்னின்று நடத்திய பெரியவர் இரண்டு விறகுவெட்டிகளும் வெட்டிய விறகுகளை எண்ணத் தொடங்கினார். முடிவில் இரண்டாம் விறகுவெட்டி அதிகமான விறகுகளை வெட்டியதாக அறிவித்தார். இதனை முதல் விறகுவெட்டியால் நம்பி முடியவில்லை. அவர் இரண்டாம் விறகுவெட்டியிடம் சென்று, "நான்தான் அதிகமான நேரம் விறகுவெட்டினேன். நீ அவ்வப்பொழுது ஓய்திருந்தாய். அப்படியிருந்தும் உன்னால் எப்படி என்னைவிட மிகுதியான விறகுகளை வெட்ட முடிந்தது?" என்று கேட்டார்.

அதற்கு இரண்டாம் விறகுவெட்டி மிகப் பொறுமையாகப் பதில் சொன்னார்: "நீங்கள் வேலை பார்க்கும்பொழுது, நான் அவ்வப்பொழுது ஓய்திருந்தேன் என்றா நினைக்கிறீர்கள்...? இல்லை இல்லை. அந்த நேரத்தில் நான் என்னுடைய கோடாரியைக் கூர்மைப்படுத்திக் கொண்டிருந்தேன். நீங்கள் தொர்ந்து வேலை பார்த்ததால் உங்களுடைய கோடாரி மழுங்கி, மிகுதியான விறகுகளை வெட்ட முடியாமல் போனது. ஆனால் நான் என்னுடைய கோடாரியை அப்பொழுது கூர்மைப்படுத்தினேன். அதனால்தான் என்னால் மிகுதியான விறகுகளை வெட்ட முடிந்தது" என்றார்.

வேலை வேலை என்று இராமல் எவ்வளவு நேரம் உழைக்கவேண்டும், எவ்வளவு நேரம் ஓய்வெடுக்க வேண்டும் என்ற இரகசியம் தெரிந்தவர்கள் வாழ்வில் வெற்றிபெறுவார்கள் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. நற்செய்தியில் பணித்தளத்திற்கு சென்ற சீடர்கள் இயேசுவிடம் திரும்பி வருவதைக் குறித்து வாசிக்கின்றோம். இந்த நிகழ்வு நமக்கு என்ன செய்தியை எடுத்துச் சொல்கின்றது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

சீடர்களை ஓய்வெடுக்கச் சொன்ன இயேசு

இயேசுவால் பணித்தளங்களுக்கு அனுப்பப்பட்ட அவருடைய சீடர்கள், தங்களுக்குப் பணிக்கப்பட்ட பணிகளை முடித்துக்கொண்டு அவரிடம் திரும்பி வருகின்றார்கள். இயேசுவோ தன்னிடம் வந்த சீடர்களுக்கு மேலும் பணிகளைக் கொடுத்து, அவர்களைச் சோர்வடையச் செய்யாமல், அவர்களைத் தனிமையான ஓர் இடத்திற்கு அனுப்பி வைத்து, சற்று ஓய்வெடுக்குமாறு சொல்கின்றார்.

இன்றைக்கு ஒருசிலர் இருக்கிறார்கள். இவர்கள் எப்பொழுதும் வேலை வேலை என்று அலைந்து, கடைசியில் தங்களுடைய குடும்பத்தையும் நிம்மதியையும் ஏன், வாழ்வையுமே தொலைத்து நிற்பார்கள். இப்படிப்பட்டவர்கள் இயேசுவிடமிருந்து பாடம் கற்பது நல்லது. இயேசு அவ்வப்பொழுது ஓய்வெடுத்த்தார் அல்லது தந்தைக் கடவுளோடு நேரத்தைச் செலவழித்தார் (மாற் 1:35). மட்டுமல்லாமல் தன்னுடைய சீடர்களும் ஓய்வெடுத்துக் கொண்டு பணிசெய்ய அனுமதித்தார். எனவே நாம் இயேசுவிடமிருந்து இந்த வாழ்க்கைமுறையைக் கற்றுக்கொண்டு, அவ்வப்பொழுது ஓய்வெடுத்துக் கொண்டு பணிசெய்வது நல்லது. ஏனெனில் தொடர்ந்து பணிசெய்வதால் ஏற்படும் பலனைவிட அவ்வப்பொழுது ஓய்வெடுத்துக் கொண்டு பணிசெய்வது மிகுந்த பலனைக் கொடுக்கும்.

மக்கள்மீது பரிவுகொண்ட இயேசு

இயேசு தன்னுடைய சீடர்களைத் தனிமையான இடத்திற்குச் சென்று ஓய்வெடுக்கச் சொன்னதைத் தொடர்ந்து, அவர்கள் தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று ஓய்வெடுக்கத் தொடங்குகிறார்கள். இயேசுவும் அவர்களோடு இருக்கின்றார். இந்நிலையில் மக்கள் கூட்டம் அவர்கள் இருக்கின்ற செய்தியைக் கேள்விப்பட்டு அங்கு வருகின்றது.. இயேசு மக்கள்மீது பரிவுகொண்டு அவர்களுக்குப் பலவற்றைக் கற்பிக்கின்றார்.

இங்கு நாம் கவனிக்கவேண்டிய முக்கியமான செய்தி, ஓய்வெடுக்க வந்த இடத்தில் இயேசு மக்கள்மீது பரிவுகொண்டு, அவர்களுக்குக் கற்பித்ததுதான். இயேசுவுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது எவ்வளவு நேரம் ஓய்வெடுக்க வேண்டும், எவ்வளவு நேரம் மக்களுக்குப் பணிசெய்ய வேண்டும் என்று. அதனால்தான் அவர் மக்கள் ஆயனில்லாத ஆடுகளைப் போன்று இருந்ததைக் கண்டு அவர்கள்மீது பரிவுகொள்கின்றார். எனவே நாம் வேலை வேலை என்று இருந்துவிடாமல், ஓய்வெடுப்பதற்கும் சிறிது நேரம் ஒதுக்கி இறைப்பணியை இன்னும் சிறப்பாகச் செய்வோம்.

சிந்தனை

"காற்றைப் பிடிக்க முயல்வது போன்ற பயனற்ற உழைப்பு இரு கை நிறைய இருப்பதை விட, மன அமைதி ஒரு கையளவு இருப்பதே மேல்" (சஉ 4:6) என்கிறது இறைவார்த்தை. ஆகையால் நாம் எப்பொழுதும் வேலை வேலை என்று பயனற்ற விதமாய் உழைக்காமல், சற்று ஓய்வெடுத்து மன அமைதியோடு உழைத்து ஆண்டவருக்குப் பெருமை சேர்ப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!