|
|
07
பிப்ரவரி 2020 |
|
|
பொதுக்காலம்
4 ஆம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
++உலகப் போக்குப்படி நானும் சாகப்போகிறேன். சாலமோனே! நீ
நெஞ்சுறுதியுடன் இரு.
அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 2:
1-4,10-12
தாவீதின் இறுதி நாள் நெருங்கினபோது அவர் தம் மகன் சாலமோனுக்குப்
பணித்துக் கூறியது இதுவே: "அனைத்துலகும் போகும் வழியே நானும்
போகிறேன். நீ நெஞ்சுறுதியும் வீரமும் கொண்டவனாய் இரு. உன் கடவுளாகிய
ஆண்டவரின் ஆணைகளைக் கடைப்பிடி. அவர் காட்டும் வழியில் நட.
மோசேயின் சட்டநூலில் எழுதப்பட்டுள்ள கடவுளுடைய நியமங்கள்,
விதிமுறைகள், நீதிச் சட்டங்கள், ஒழுங்குமுறைகள் ஆகியவற்றைக் கடைப்பிடி.
இப்படிச் செய்தால், நீ செய்யும் காரியங்களிலும் செல்லும் இடங்களிலும்
வெற்றி காண்பாய். ஏனெனில் ஆண்டவர் என்னை நோக்கி, "உன் மைந்தர்கள்
தங்கள் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் என் முன்னிலையில்
உண்மையுடன் நடப்பார்களானால், இஸ்ரயேலின் அரியணையில் அமர்வதற்கேற்ற
ஒருவன் அவர்களுள் இல்லாமல் போவதில்லை" என்று எனக்குக் கொடுத்த
வாக்கு அப்போதுதான் நிலைத்திருக்கும்." பின்னர் தாவீது தம்
மூதாதையருடன் துயில் கொண்டு, தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டார்.
தாவீது இஸ்ரயேலின்மீது ஆட்சி செலுத்திய காலம் நாற்பது ஆண்டுகள்.
அவர் எபிரோனில் ஏழு ஆண்டுகளும் எருசலேமில் முப்பத்து மூன்று ஆண்டுகளும்
ஆட்சி செலுத்தினார். சாலமோன் தம் தந்தை தாவீதின் அரியணையில்
அமர்ந்தார். அவருடைய ஆட்சி உறுதியாக நிலைநாட்டப்பட்டது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
1 குறி 29: 10b. 11ab. 11cd-12a. 12bcd (பல்லவி: 12b)
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, அனைத்தையும் ஆள்பவர் நீரே.
10bஎங்கள் மூதாதை இஸ்ரயேலின் ஆண்டவரே, நீர் என்றென்றும் வாழ்த்தப்
பெறுவீராக! - பல்லவி
11abஆண்டவரே, பெருமையும் வலிமையும் மாட்சியும் வெற்றியும்
மேன்மையும் உமக்கே உரியன. ஏனெனில் விண்ணுலகிலும் மண்ணுலகிலும்
இருக்கும் அனைத்தும் உம்முடையவை. - பல்லவி
11cdஆண்டவரே, ஆட்சியும் உம்முடையதே. நீர் யாவருக்கும் தலைவராய்
உயர்த்தப் பெற்றுள்ளீர்.
12aசெல்வமும் மாட்சியும் உம்மிடமிருந்தே வருகின்றன. - பல்லவி
12bcdநீரே அனைத்தையும் ஆள்பவர். ஆற்றலும் வலிமையும் உம் கையில்
உள்ளன. எவரையும் பெருமைப்படுத்துவதும் வலியவராக்குவதும் உம்
கையில் உள்ளன. - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
(மாற் 1: 15)
அல்லேலூயா, அல்லேலூயா! காலம் நிறைவேறிவிட்டது, இறையாட்சி
நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள், என்கிறார்
ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இயேசு பன்னிருவரையும் அனுப்பினார்.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து
வாசகம் 6: 7-13
அக்காலத்தில் இயேசு பன்னிருவரையும் தம்மிடம்
வரவழைத்து, அவர்களை இருவர் இருவராக அனுப்பத் தொடங்கினார். அவர்களுக்குத்
தீய ஆவிகள் மீது அதிகாரமும் அளித்தார். மேலும், "பயணத்திற்குக்
கைத்தடி தவிர உணவு, பை, இடைக்கச்சையில் செப்புக் காசு முதலிய
வேறு எதையும் நீங்கள் எடுத்துக்கொண்டு போக வேண்டாம். ஆனால்
மிதியடி போட்டுக்கொள்ளலாம்; அணிந்திருக்கும் அங்கி ஒன்றே
போதும்'' என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். மேலும் அவர்,
"நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டுக்குள் சென்றால், அங்கிருந்து
புறப்படும்வரை அவ்வீட்டிலேயே தங்கியிருங்கள். உங்களை எந்த ஊராவது
ஏற்றுக்கொள்ளாமலோ உங்களுக்குச் செவிசாய்க்காமலோ போனால் அங்கிருந்து
வெளியேறும்பொழுது, உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள்.
இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும்'' என்று அவர்களுக்குக்
கூறினார். அப்படியே அவர்கள் புறப்பட்டுச் சென்று மக்கள் மனம்
மாறவேண்டும் என்று பறைசாற்றினார்கள்; பல பேய்களை ஓட்டினார்கள்;
உடல் நலமற்றோர் பலரை எண்ணெய் பூசிக் குணப்படுத்தினார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
1 அரசர்கள் 2: 1-4, 10-12
கடவுளுடைய நியமங்கள், விதிமுறைகள் ஆகியவற்றைக் கடைப்பிடி
நிகழ்வு
அரபுக் குதிரைகளுக்கு எப்பொழுதும் தனி மதிப்பு உண்டு. அதற்கு
மிக முக்கியமான காரணம், அவை வளர்க்கப்படும் விதம்தான்.
அரபுக் குதிரைகளை வளர்க்கின்றவர்கள் அவற்றுக்குப் பல நாள்கள்
தண்ணீர் கொடுக்காமல் வைத்திருப்பர். திடீரென்று ஒருநாள் அவற்றை
ஒரு குளத்தின் அருகே கொண்டு செல்வார்கள். தண்ணீரைப் பார்த்ததும்,
அவை துள்ளிக்குதித்து ஓடும். தண்ணீருக்கு அருகே அவை தங்களுடைய
வாயை கொண்டுசெல்லக்கூடியபொழுது அவற்றைப் பயிற்றுவிக்கக் கூடியவர்கள்
விசிலை எடுத்து ஊதுவர். எந்தக் குதிரையெல்லாம் பயிற்சியாளர்களின்
ஆணைக்குக் கீழ்ப்படிந்து தண்ணீர் குடிக்காமல் அப்படியே இருக்குமோ,
அவற்றுக்கெல்லாம் அவர்கள் நிரப்பத் தண்ணீர் தருவார்கள். அதே நேரத்தில்
எந்தக் குதிரையெல்லாம் பயிற்சியாளர்களின் ஆணைக்குக் கீழ்ப்படியாமல்
தண்ணீர் குடிக்குமோ அவற்றையெல்லாம் தங்களுடைய பயிற்சித் தளத்திலிருந்து
துரத்தி விடுவர்.
இதில் வியப்பு என்னவென்றால், பயிற்சியாளர்களின் விசில் சத்தம்
கேட்டதும், எல்லாக் குதிரைகளும் தண்ணீர் குடிக்காமல் அப்படியே
இருக்கும். இவ்வாறு பயிற்சியாளர்களின் ஆணைக்கும் பின்னாளில்
அவற்றை விலை வாங்கக் கூடியவர்களின் ஆணைக்கும் அப்படியே கட்டுப்பட்டு
நடப்பதால்தான் அந்த அரபுக் குதிரைகளுக்குத் தனி மதிப்பிருக்கின்றது.
குதிரைகளைப் பயிற்றுவிப்பவர்கள் அவற்றுக்குத் தண்ணீர் தராமல்
இருக்கப்போவதில்லை. ஆண்டவரும் அப்படியே. ஆண்டவர் அவருடைய
பிள்ளைகளாகிய நாம் மடிந்துபோகவேண்டும் என்று ஒருபோதும்
விரும்புவதில்லை. அப்படியிருக்கையில் நாம் ஆண்டவரின் வார்த்தைகளுக்கு,
அவருடைய நியமங்களுக்கும் விதிமுறைகளுக்கும் கீழ்ப்படிந்து நடந்தால்,
நம்முடைய வாழ்க்கையில் எல்லாவிதமான ஆசியும் பெருகும் என்பது உறுதி.
இன்றைய முதல் வாசகம் இறைவனுக்குக் கீழ்ப்படிந்து நடந்தால், எத்தகைய
ஆசியை ஒருவர் பெற்றுக்கொள்ளலாம் என்பதைக் குறித்து எடுத்துச்
சொல்கின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப்
பார்ப்போம்.
தாவீதின் இறுதி வார்த்தைகள்
இன்றைய முதல் வாசகம், தாவீது அரசர் தன் மகன் சாலமோனிடம்
பேசுகின்ற இறுதி வார்த்தைகளைப் பதிவுசெய்கின்றது. பொதுவாக ஒருவர்
இறக்கும் தருவாயில் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் முக்கியத்துவம்
வாய்ந்ததாக இருக்கும். திருவிவிலியத்திலும் இதற்குப் பல்வேறு
சான்றுகள் இருக்கின்றன. யாக்கோபு (தொநூ 49), மோசே (இச 33)
யோசுவா (யோசு 23: 1-24:27) ஆகியோருடைய இறுதி வார்த்தைகள் அவ்வளவு
முக்கியத்துவம் வாய்ந்தவை. அந்த வரிசையில் தாவீது அரசரின்
வார்த்தைகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன.
தாவீது அரசர் தன்னுடைய இறுதிநாள் நெருங்கி வந்தபொழுது தன் மகன்
சாலமோனிடம் என்ன பேசினார் என்பதைக் குறித்து இப்பொழுது நாம்
சிந்தித்துப் பார்ப்போம்.
ஆண்டவரின் நியமங்களைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் ஆசி
தாவீது அரசர் தன் மகன் சாலமோனிடம் சொன்ன இரண்டு முக்கியமான
செய்திகளைச் சொல்கின்றது. அதில் முதலாவது, "நெஞ்சுறுதியும் வீரமும்
கொண்டனாய் இரு" என்பதாகும். தாவீது அரசர் சாலமோனிடம் இவ்வாறு
சொல்லக் காரணம், சாலமோன் மிகவும் பாதுகாப்பான சூழலில் வளர்ந்துவர்...
இனிமேல் சவால்களையும் எதிர்ப்புகளையும் சந்திக்க நேரிடும் என்பதால்.
தாவீது சாலமோனிடம் சொன்ன இரண்டாவது முக்கியமான செய்தி, "உன்
கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளைக் கடைப்பிடி. அவர் காட்டும்
வழியில் நட..."என்பதாகும். தாவீது அரசர் ஆண்டவரின் நெஞ்சத்திற்கு
நெருக்கமானவராக இருந்தார்; அவருடைய வார்த்தைகளுக்கு எப்பொழுதும்
அவர் கீழ்ப்படிந்து நடந்தார். அதனால்தான் ஆண்டவர் அவரோடு எப்பொழுதும்
இருந்தார். இதனை நன்கு உணர்ந்த தாவீது, தன் மகன் சாலமோனும் அவ்வாறு
நடக்கவேண்டும் என்று பணிக்கின்றார். சாலமோன் ஆண்டவரின் கட்டளைகளைக்
கடைப்பிடித்து வாழ்கின்றபொழுது ஆண்டவர் அவர் செய்யக்கூடிய எல்லாச்
செயல்களிலும் வெற்றியைத் தருவார்... அவருடைய வழிமரபில் அரசர்
தொடர்ந்து இருந்துகொண்டே இருப்பார் என்று கூறுகின்றார்.
தாவீது சொன்னபடி, சாலமோன் ஆண்டவரின் கட்டளைகளைக் கடைப்பிடித்து
வாழ்ந்தாரா என்றால் இல்லையென்றுதான் சொல்லவேண்டும். அவர் உண்மைக்
கடவுளை மறந்துவிட்டு பிற தெய்வங்களை வழிபடத் தொடங்கினார். ஆனால்,
நாம் அவ்வாறு இல்லாமல், ஆண்டவரின் கட்டளைகளைக் கடைப்பிடித்து
வாழவேண்டும். அப்படி நாம் வாழ்ந்தால், ஆண்டவரின் அருளை நிச்சயம்
பெறுவோம் என்பது உறுதி.
சிந்தனை
"இறைவார்த்தையைக் கேட்கின்றவர்களாக மட்டும் இருந்து உங்களை
நீங்கள் ஏமாற்றிக் கொள்ளவேண்டாம். அதன்படி நடக்கிறவர்களாகவும்
இருங்கள்" (யாக் 1:22) என்பார் புனித யாக்கோபு. ஆகையால், நாம்
இறைவனின் வார்த்தைகளைக் கேட்டு, அதன்படி நடப்போம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மாற்கு 6: 7-13
"அவர்களை அனுப்பத் தொடங்கினார்"
நிகழ்வு
சில ஆண்டுகளுக்கு முன்பாக "London Times" என்ற பத்திரிகையில்
வெளிவந்த ஒரு விளம்பரம். "ஆபத்தான பயணத்திற்கு ஆள்கள் தேவை.
குறைந்த ஊதியம், கடுமையான குளிர். பல மாதங்கள் இருட்டிலேயே இருக்கவேண்டும்.
எப்பொழுது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படலாம். திரும்பி வருவது
சந்தேகம்தான். ஒருவேளை பயணம் வெற்றிகரமாக முடிந்தால் பெயரும்
புகழும் கிடைக்கும். இதற்கு விரும்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்."
இந்த விளம்பரத்தைப் பலர் வியப்பாகப் பார்த்தார்கள். ஆனாலும் ஐயாயிரத்தும்
மேற்பட்டோர் இதற்கு விண்ணப்பித்தார்கள். இந்த ஐயாயிரம் பேரில்
தகுதியான 27 பேரை மட்டும் தேர்ந்தெடுத்து, அந்த 27 பேரையும்
சர் எர்னெஸ்ட் ஷக்லேடன் தன்னோடு கூட்டிக்கொண்டு தென்
துருவத்தில் பயணம் செய்து, ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். பல
மாதங்கள் தொடர்ந்த இந்தப் பயணம் வெற்றியோடு முடிந்தது. இதனால்
சர் எர்னெஸ்ட் ஷக்லேடனோடு பயணம் செய்த அந்த 27 பேருக்குப்
பெயரும் புகழும் கிடைத்தன.
சர் எர்னெஸ்ட் ஷக்லேடன், 27 பேரோடு சேர்ந்து தென் துருவத்தை
நோக்கி மேற்கொண்ட பயணம் எப்படிச் சவால்கள் நிறைந்தவையாக
இருந்ததோ, அதுபோன்றுதான் சீடத்துவ வாழ்வும் பணியும் சவால்கள்
நிறைந்தவை. இன்றைய நற்செய்தியில் இயேசு தன்னுடைய பன்னிரு
சீடர்களைப் பணித்தளத்திற்கு அனுப்புவதைக் குறித்து
வாசிக்கின்றோம். இயேசு தாம் சீடர்களைப் பணித்தளங்களுக்கு
அனுப்புகின்றபொழுது அவரளுக்குக் கொடுக்கக்கூடிய அறிவுரைகள்
என்ன? பணித்தளங்களில் அவர்கள் சந்திக்க இருந்த சவால்கள் என்ன?
நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் எப்படி இயேசுவின் சீடர்களாக
இருந்து பணிசெய்வது? ஆகியவற்றைக் குறித்து இப்பொழுது நாம்
சிந்தித்துப் பார்ப்போம்.
அனுப்பப்பட்ட திருத்தூதர்கள்
நற்செய்தியில் இயேசு பன்னிரு திருத்தூதர்களைப்
பணித்தளங்களுக்கு அனுப்புவதைக் குறித்து வாசிக்கின்றோம்.
திருத்தூதர்கள் என்றாலே அனுப்பப்படுகின்றவர்கள்தானே! இயேசு
பன்னிரு திருதூதர்களைப் பணித்தளங்களுக்கு
அனுப்புகின்றகின்றபோது சாதாரணமாக அனுப்பிவிடவில்லை. தீய
ஆவிகளின்மீது அதிகாரம் கொடுத்து, உடல் நலம் குன்றியவர்களை
நலப்படுத்துவதற்கான வல்லமையைக் கொடுத்து இருவர் இருவராக
அனுப்புகின்றார்.
ஆண்டவரை நம்பிப் பணிசெய்யவேண்டும்
இயேசு தன்னுடைய சீடர்களைப் பணித்தளங்களுக்கு
அனுப்புகின்றபொழுது, அவர்களுக்கு அவர் சொல்லக்கூடிய
அறிவுரைகளும் மிகவும் கவனிக்கத்தக்கவையாக இருக்கின்றன.
குறிப்பாக அவர்கள் எவற்றையெல்லாம் எடுத்துக்கொண்டு
போகவேண்டும்... எவற்றையெல்லாம் எடுத்துக்கொண்டு போகவேண்டாம்
என்பதைக் குறித்து இயேசு சொல்லக்கூடிய வார்த்தைகள் மிகவும்
சிந்தித்துப் பார்க்கப்பட வேண்டியவையாக இருக்கின்றன.
இயேசு தன் சீடர்களிடம், "பணத்திற்குக் கைத்தடி தவிர உணவு, பை,
இடைக்கச்சையில் செப்புக் காசு முதலிய வேறு எதையும் நீங்கள்
எடுத்துக்கொண்டு போகவேண்டாம்" என்று சொல்வதில் மூன்று
முக்கியமான உண்மைகள் அடங்கியிருக்கின்றன. அதில் முதலாவது,
இயேசுவின் போதனையை அவருடைய சீடர்கள் வழியாகக்
கேட்கக்கூடியவர்கள், இயேசு தங்களுக்கு செல்வத்தைத்
தரப்போகிறார் என்ற தவறான புரிதலுக்கு வந்துவிடக்கூடாது
என்பதாகும். பலருக்கு இயேசுவின் போதனையைக் கேட்பதாலும் அவரைப்
பின்பற்றி நடப்பதாலும் வளமையான வாழ்வு கிடைத்துவிடும் என்ற
எண்ணம் இருக்கின்றது. இது ஒரு தவறான புரிதலாகும்.
இரண்டாவது, இயேசுவின் சீடர்கள் இறைவனை நம்பிப் பணிசெய்ய
வேண்டுமே ஒழிய, பொருள்களையோ அல்லது பணத்தையோ நம்பிப்
பணிசெய்யக்கூடாது என்பதாகும். பழங்காலத்தில்
(இன்றைக்கும்கூடத்தான்) பிச்சைக்காரர்கள் பிச்சை எடுக்கச்
செல்கின்றபொழுது, தங்களோடு பையையும் எடுத்துச் செல்வார்கள்.
அதற்கு முக்கியமான காரணம், பிச்சையாக கிடைப்பவற்றைக்
அள்ளிக்கொண்டுவருவதற்குத்தான். இயேசுவின் சீடர்கள் அவர்களைப்
போன்று இருக்கக்கூடாது, அவர்கள் இறைவனை நம்பிப் பணிசெய்ய
வேண்டும் என்பதற்குதான் இயேசு எதையும் எடுத்துக்கொண்டு
போகவேண்டாம் என்று கூறுகின்றார்.
மூன்றாவது, இயேசுவின் சீடர்கள் யாரிடம் பணிசெய்கின்றார்களோ,
அவர்கள் அவர்களைப் பார்த்துக்கொள்ளவேண்டும். இதைத்தான் இயேசு
வேலையாள் தம் உணவுக்கு உரிமை உடையவரே" (மத் 10: 10) என்று
கூறுகின்றார். அப்படியானால், இறையடியார்களை இறைமக்கள்
கவனித்துக்கொள்ளவேண்டும் என்பது மிகவும் இன்றியமையாத கடமையாக
இருக்கின்றது.
சீடத்துவ வாழ்வில் சவால்கள் நிச்சயம் உண்டு
இயேசு பன்னிரு திருத்தூதர்களைப் பணித்தளங்களுக்கு
அனுப்புகின்றபொழுது, இன்னொரு முக்கிய செய்தியையும்
சொல்கின்றார். அது என்னவெனில், "உங்களை எந்த ஊராவது
ஏற்றுக்கொள்ளாமல் போனால்... உங்கள் கால்களில் படிந்துள்ள
தூசியை உதறிவிடுங்கள்" என்பதாகும். வழக்கமாக யூதர்கள் பிற
இனத்து மக்களுடைய பகுதியைக் கடந்துவிட்டு, தங்களுடைய
பகுதிக்குள் வருகின்றபொழுது, தங்களுடைய கால்களில் தூசியை
உதறுவார்கள். ஆனால், இயேசு தன்னுடைய சீடர்களிடம் யாரெல்லாம்
உங்களை ஏற்றுக்கொள்ளவில்லையோ அவர்களுடைய ஊரை விட்டு வெளியே
வருகின்றபொழுது, உங்களுடைய கால்களில் படிந்துள்ள தூசியை
உதறிவிடுங்கள் என்கின்றார். இதனால் அந்த ஊர் தண்டனைக்குரியதாக
இருக்கின்றது.
ஆகையால், இயேசுவின் சீடர்களாக இருந்து அவருடைய வார்த்தையை
அறிவிப்பதும் அறிவிக்கப்பட்ட வார்த்தையின்படி நடப்பதும்
நம்முடைய இருபெரும் கடமை என்பதை உணர்ந்து இயேசுவின் உண்மையான
சீடர்களாக வாழ முயற்சி செய்வோம்.
சிந்தனை
"கடவுளுக்கு உன்னிடத்தில் இருப்பவனவற்றுள் சிறந்ததைக்
கொடுத்துவிடு, அதுவும் இப்போதே கொடுத்துவிடு" என்பார் ரால்ப்.
டபில்யூ சோக்மன் என்ற அறிஞர். ஆகையால், நாம் கடவுளுக்கு
நம்மிடத்தில் இருப்பவனவற்றுள் சிறந்தவற்றை ஏன், நம்மையே
அவருக்குக் கொடுத்து அவருடைய பணியைச் சிறப்பாகச் செய்வோம்.
அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|