Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   07  பிப்ரவரி 2020  
    பொதுக்காலம் 4 ஆம் வாரம்
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 ++தாவீது முழு உள்ளத்தோடு ஆண்டவரைப் புகழ்ந்தார்; தம்மைப் படைத்தவர்மீது அன்பு செலுத்தினார்.

சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 47: 2-11

நல்லுறவுப் பலியிலிருந்து கொழுப்பு பிரிக்கப்படுவதுபோல், இஸ்ரயேல் மக்களிடமிருந்து தாவீது தெரிந்துகொள்ளப்பெற்றார். வெள்ளாடுகளுடன் விளையாடுவது போலச் சிங்கங்களுடன் விளையாடினார்; செம்மறி ஆடுகளுடன் விளையாடுவது போலக் கரடிகளுடன் விளையாடினார். பெருமை பாராட்டிய கோலியாத்தை நோக்கி இளைஞர் தாவீது தம் கைகளை ஓங்கிக் கவண் கல்லை வீசியபோது ஓர் அரக்கனைக் கொல்லவில்லையா? அதனால் மக்களது இழிநிலையை அகற்றவில்லையா? வலிமைமிக்க மனிதனைப் போரில் கொன்று தம் மக்களின் வலிமையை உயர்த்த உன்னத இறைவனாகிய ஆண்டவரை அவர் துணைக்கு அழைத்தார்; ஆண்டவரும் அவருடைய வலக்கைக்கு வலிமையூட்டினார். இவ்வாறு அவர் முறியடித்த பத்தாயிரம் பேருக்காக மக்கள் அவரை மாட்சிமைப்படுத்தினர்; ஆண்டவருடைய ஆசிகளுக்காக அவரைப் புகழ்ந்தனர்; மாட்சியின் மணிமுடியை அவருக்குச் சூட்டினர். எப்புறமும் அவர் பகைவர்களைத் துடைத்தழித்தார்; எதிரிகளான பெலிஸ்தியரை அடக்கி ஒழித்தார்; அவர்களுடைய வலிமையை அறவே நசுக்கினார். தம் எல்லாச் செயல்களிலும் மாட்சியைச் சாற்றும் சொற்களால் உன்னத இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி செலுத்தினார்; தம் முழு உள்ளத்தோடும் புகழ்ப்பா இசைத்தார்; தம்மைப் படைத்தவர்மீது அன்பு செலுத்தினார். தங்களுடைய குரலால் இன்னிசை எழுப்பப் பாடகர்களைப் பலிபீடத்திற்குமுன் நிற்கச் செய்தார். திருவிழாக்களைச் சீரோடும் சிறப்போடும் கொண்டாடச் செய்தார்; ஆண்டவருடைய திருப்பெயரை அவர்கள் புகழ்ந்து பாடுவதால் திருவிடம் வைகறையிலிருந்து எதிரொலிக்கும்படி ஆண்டு முழுவதும் காலங்களைக் குறித்தார். ஆண்டவர் அவருடைய பாவங்களை நீக்கினார்; அவருடைய வலிமையை என்றென்றைக்கும் உயர்த்தினார்; மன்னர்களின் உடன்படிக்கையையும் இஸ்ரயேலில் மாட்சியின் அரியணையையும் அவருக்குக் கொடுத்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 18: 31. 47,50. 51 (பல்லவி: 46c) Mp3
=================================================================================

பல்லவி: என் மீட்பராம் கடவுள் மாட்சியுறுவாராக!

30இறைவனின் வழி நிறைவானது; ஆண்டவரின் வாக்கு நம்பத்தக்கது; அவரிடம் அடைக்கலம் புகும் அனைவர்க்கும் அவரே கேடயமாய் இருக்கின்றார். - பல்லவி

46ஆண்டவர் உண்மையாகவே வாழ்கின்றார்! என் கற்பாறையாம் அவர் போற்றப் பெறுவாராக! என் மீட்பராம் கடவுள் மாட்சியுறுவாராக! - பல்லவி

49ஆகவே, பிற இனத்தாரிடையே உம்மைப் போற்றுவேன்; உம் பெயருக்குப் புகழ்மாலை சாற்றுவேன். - பல்லவி

50தாம் ஏற்படுத்திய அரசருக்கு மாபெரும் வெற்றியை அளிப்பவர் அவர்; தாம் திருப்பொழிவு செய்த தாவீதுக்கும் அவர்தம் மரபினருக்கும் என்றென்றும் பேரன்பு காட்டுபவரும் அவரே. - பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
(லூக் 8: 15)

அல்லேலூயா, அல்லேலூயா! சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருபவர் பேறுபெற்றோர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
++நான் வெட்டச் செய்த யோவான் இவரே! இவர் உயிருடன் எழுப்பப்பட்டுவிட்டார்; ஓ

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 14-29


அக்காலத்தில் இயேசுவின் பெயர் எங்கும் பரவியது. ஏரோது அரசனும் அவரைப் பற்றிக் கேள்வியுற்றான். சிலர், "இறந்த திருமுழுக்கு யோவான் உயிருடன் எழுப்பப்பட்டுவிட்டார்; இதனால்தான் இந்த வல்ல செயல்கள் இவரால் ஆற்றப்படுகின்றன'' என்றனர். வேறு சிலர், "இவர் எலியா'' என்றனர். மற்றும் சிலர், "ஏனைய இறைவாக்கினரைப்போல் இவரும் ஓர் இறைவாக்கினரே'' என்றனர். இதைக் கேட்ட ஏரோது, "இவர் யோவானே. அவர் தலையை நான் வெட்டச் செய்தேன். ஆனால் அவர் உயிருடன் எழுப்பப்பட்டுவிட்டார்'' என்று கூறினான். இதே ஏரோது, தன் சகோதரனான பிலிப்பின் மனைவி ஏரோதியாவை மனைவியாக்கிக் கொண்டிருந்தான்; அவள் பொருட்டு ஆள் அனுப்பி யோவானைப் பிடித்துக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான். ஏனெனில் யோவான் ஏரோதிடம், "உம் சகோதரர் மனைவியை நீர் வைத்திருப்பது முறை அல்ல'' எனச் சொல்லி வந்தார். அப்போது ஏரோதியா அவர்மீது காழ்ப்புணர்வு கொண்டு, அவரைக் கொலை செய்ய விரும்பினாள்; ஆனால் அவளால் இயலவில்லை. ஏனெனில் யோவான் நேர்மையும் தூய்மையும் உள்ளவர் என்பதை ஏரோது அறிந்து அஞ்சி அவருக்குப் பாதுகாப்பு அளித்துவந்தான். அவர் சொல்லைக் கேட்டுமிகக் குழப்பமுற்ற போதிலும், அவருக்கு மனமுவந்து செவிசாய்த்தான். ஒரு நாள் ஏரோதியாவுக்கு நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்தது. ஏரோது தன் பிறந்த நாளில் அரசவையினருக்கும், ஆயிரத்தவர் தலைவர்களுக்கும் கலிலேய முதன்மைக் குடிமக்களுக்கும் ஒரு விருந்து படைத்தான். அப்போது ஏரோதியாவின் மகள் உள்ளே வந்து நடனமாடி ஏரோதையும் விருந்தினரையும் அகமகிழச் செய்தாள். அரசன் அச்சிறுமியிடம், "உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன்'' என்றான். "நீ என்னிடம் எது கேட்டாலும், ஏன் என் அரசில் பாதியையே கேட்டாலும் உனக்குத் தருகிறேன்'' என்றும் ஆணையிட்டுக் கூறினான். அவள் வெளியே சென்று, "நான் என்ன கேட்கலாம்?'' என்று தன் தாயை வினவினாள். அவள், "திருமுழுக்கு யோவானின் தலையைக் கேள்'' என்றாள். உடனே சிறுமி அரசனிடம் விரைந்து வந்து, "திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இப்போதே எனக்குக் கொடும்'' என்று கேட்டாள். இதைக் கேட்ட அரசன் மிக வருந்தினான். ஆனாலும் விருந்தினர் முன் தான் ஆணையிட்டதால் அவளுக்கு அதை மறுக்க விரும்பவில்லை. உடனே அரசன் ஒரு காவலனை அனுப்பி யோவானுடைய தலையைக் கொண்டு வருமாறு பணித்தான். அவன் சென்று சிறையில் அவருடைய தலையை வெட்டி, அதை ஒரு தட்டில் கொண்டு வந்து அச்சிறுமியிடம் கொடுக்க, அவளும் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள். இதைக் கேள்வியுற்ற யோவானுடைய சீடர்கள் வந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று ஒரு கல்லறையில் வைத்தார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 சீராக்கின் ஞானம் 47: 2-11

தாவீது தம் எல்லாச் செயல்களிலும் ஆண்டவருக்கு நன்றி செலுத்தினார்

நிகழ்வு


அருளும் அறிவழகனும் நல்ல நண்பர்கள். ஒருநாள் அறிவழகன் அருளைத் தன்னுடைய வீட்டிற்கு விருந்துக்கு அழைத்திருந்தார். அருளும் தன் நண்பருடைய அழைப்பினை ஏற்று அவருடைய வீட்டிற்குச் சென்றார். அறிவழகனின் வீட்டில் எல்லாரும் அருளை விழுந்து விழுந்து கவனித்தார்கள். குறிப்பாக எழுபது வயதுக்கும் மேலிருந்த அறிவழகனின் தாயார், சக்கர நாற்காலில் இருந்தபோதும், அருளுக்கு மிக அருகிலேயே இருந்து, அவரை மிகவும் கரிசனையோடு கவனித்துக் கொண்டார். இது அருளுக்கு மிகவும் பிடித்துப் போனது. விருந்து முடிந்து அருள், அறிவழகனின் வீட்டிலிருந்த எல்லாரிடமிருந்தும் விடைபெறுகின்ற நேரத்தில், அறிவழகனின் தாயார் அவரிடம் வந்து, "தம்பி! கொஞ்ச நேரம் வீட்டுக்குப் பின்னால் இருக்கின்ற தோட்டத்திற்கு வந்துவிட்டுப் போகமுடியுமா...?" என்றார். அருளும் அதற்குச் "சரி வருகிறேன்" என்று சொல்லிக்கொண்டு, அவர் பின்னால் சென்று தோட்டத்தை அடைந்தார்.

தோட்டத்தில் வண்ண வண்ணப் பூக்கள் பூத்திருந்தன... அவை பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தன. மட்டுமல்லாமல், தோட்டம் முழுவதும் மிகவும் அருமையாகப் பராமரிக்கப்பட்டிருந்தது. அதைப் பார்ப்பதற்கு மிகவும் இரம்மியமாக இருந்தது. அப்பொழுது அருள் அறிவழகனின் தாயாரிடம், "அம்மா! இந்தத் தோட்டத்தைப் பார்ப்பதற்கு அவ்வளவு அருமையாக இருக்கின்றது. இதனை நீங்கள்தான் பராமரிக்கிறீர்களா...?" என்றார். அதற்கு அந்தத் தாய், "நான் மட்டுமல்ல... என்னோடு சேர்ந்து ஆண்டவரும் பராமரிக்கின்றார்" என்றார். தன்னால்தான் எல்லாம் ஆனது என்று நினைக்காமல், ஆண்டவருடைய தயவால் இப்படி ஆனது என்பதுபோன்று அழிவழகனின் தாயார் பேசிய இவ்வார்த்தைகளை கேட்டு அருள் மிகவும் வியந்து நின்றார்.

இறைவனின் அருளாலும் தயவாலும்தான் நாம் இப்புவியில் இருக்கின்றோம்; இயங்குகின்றோம்; எல்லாவற்றையும் செய்துகொண்டிருக்கின்றோம். இந்த உண்மையைப் பலர் தங்களுடைய வாழ்க்கையில் உணர்வதே இல்லை. இப்படிப்பட்ட மனிதர்களுக்கு நடுவில், மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வருகின்ற அறிவழகனின் தாயார், தான் வளர்க்கின்ற தோட்டம் இறைவனின் அருளால்தான் அவ்வளவு அருமையாக இருக்கிறது என்று உணர்ந்து கூறுவது நமது கவனத்திற்கு உரியதாக இருக்கின்றது. இன்றைய முதல் வாசகத்தில், தாவீது அரசர் தம் எல்லாச் செயல்களிலும் மாட்சியைச் சாற்றும் சொற்களால் உன்னத இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி செலுத்தினார் என்று வாசிக்கின்றோம். அது எப்படி என்று இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

ஆடுமேய்பனாக இருந்து அரசராக உயர்த்தப்பட்ட தாவீது

சீராக்கின் ஞான நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், தாவீது அரசரைப் பற்றி மிகவும் இரத்தினச் சுருக்கமாக எடுத்துச் சொல்கின்றது. சீராக்கின் ஞான நூல் 44 ஆம் அதிகாரத்திலிருந்து 50 ஆம் அதிகாரம் வரை உள்ள பகுதியில், பழைய ஏற்பாட்டில் இடம்பெறுகின்ற ஒருசில முக்கியமான ஆளுமைகளைக் குறித்த குறிப்புகளை வாசிக்கின்றோம். சீராக்கின் ஞானநூல் 47 ஆம் அதிகாரத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகமோ தாவீது அரசரைக் குறித்துப் பதிவுசெய்கின்றது. இதன் முதற்பகுதி ஆடுமேய்க்கும் சிறுவனாக இருந்த தாவீது எப்படி இஸ்ரயேலின் அரசராக உயர்ந்தார். என்பதை எடுத்துக்கூறுகின்றது. தாவீது ஆண்டவர்மீதும் அவருடைய திருப்பெயரின்மீதும் (1 சாமு 17: 45) எப்பொழுதும் நம்பிக்கை வைத்து, அவருடைய நெஞ்சத்திற்கு நெருக்கமாக இருந்தார். அதனாலேயே ஆண்டவர் அவரை இஸ்ரயேலின் அரசராக உயர்த்தினார்.

பாவம் செய்த தாவீது

திருவிவிலியம் ஏனைய வராலாற்று நூல்கள் போன்று கிடையாது. வரலாற்று நூல்கள் ஓர் அரசன் செய்த சாதனைகளைப் பற்றியே எடுத்துச் சொல்லும்; அவன் செய்த தவறுகளை முற்றிலுமாக மறைத்துவிடும். திருவிவிலியமோ ஓர் அரசருடைய சாதனைகளை மட்டுமல்லாது தவறுகளை எடுத்துச் சொல்வதாக இருக்கின்றது. தாவீதின் வரலாற்றை வாசிக்கின்றபோது அது உண்மை என அறிந்துகொள்கிறோம். ஆண்டவரின் நெஞ்சத்துக்கு நெருக்கமாக இருந்த தாவீது உரியாவின் மனைவியோடு தவறு செய்தார். இதனால் கடவுளின் சினம் அவர்மேல் எழுந்தது. இதனால் தாவீது ஆண்டவரிடம் மன்னிப்புக் கேட்டார். ஆண்டவரும் அவருடைய குற்றங்களை மன்னித்து ஏற்றுக்கொண்டார்.

மீண்டுமாக உயர்த்தப்பட்ட தாவீது

இன்றைய முதல் வாசகத்தின் நிறைவுப்பகுதியில் தாவீது அரசர் ஆண்டவரால் மீண்டுமாக வலிமையோடு உயர்த்தப்பட்டதைக் குறித்து வாசிக்கின்றோம். தான் செய்த தவற்றிற்காக மிகவும் வருந்திய தாவீது, ஆண்டவருடைய உகந்தவற்றைச் செய்து, அவருக்கு உகந்த வழியில் நடக்கத் தொடங்கினார். இதனால் ஆண்டவர் அவரை எதிரிகளிடமிருந்து விடுவித்து, அவருக்கு எல்லா வளமும் நலமும் தந்தார். இவ்வாறு அவர் தம் எல்லாச் செயல்களிலும் மாட்சியைச் சாற்றும் சொற்களால் உன்னத கடவுளாகிய ஆண்டவருக்கு நன்றி செலுத்தினார்.

தாவீது அரசர் ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து, அவருடைய நெஞ்சத்துக்கு நெருக்கமாக இருந்து, அதன்மூலம் தன்னுடைய சொல்லாலும் செயலாலும் ஆண்டவருக்கு நன்றி செலுத்தியதுபோன்று நாமும் ஆண்டவருக்கு நன்றி செலுத்தவேண்டும். அதுதான் நம் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படும் மிகச் சிறப்பான அழைப்பு.

சிந்தனை

"நான் செய்யுமாறு நீர் என்னிடம் ஒப்படைத்திருந்த வேலையைச் செய்து முடித்து நான் உம்மை உலகில் மாட்சிப்படுத்தினேன்" (யோவா 17:4) என்பார் இயேசு. ஆகையால், நாம் இயேசுவைப் போன்று, தாவீது அரசரைப் போன்று கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் பணிகளைச் சிறப்புடன் செய்து கடவுளை மாட்சிப்படுவோம்; அவருக்கு நன்றி செலுத்துவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 மாற்கு 6: 14-29

"குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும்"

நிகழ்வு

பாலஸ்தீனில் தோன்றிய மிக முக்கியமான ஆளுமைகளுள் ஒருவர் "பிஞ்சாஸ் ரூடன்பெர்க்" (Pinchas Rutenberg) என்பவர். தான் மேற்கொண்ட அறிவார்ந்த நடவடிக்கைகளால் அந்நாட்டில் தொழிற்புரட்சி ஏற்படக் காரணமாக இருந்த இவர் மக்களால், "இரும்பு மனிதர்" என்ற அழைக்கப்பட்டார். இவரைக் குறித்துச் சொல்லப்படுகின்ற மிக முக்கியமான செய்தி, இவருடைய வெற்றுக் கையை யாரும் கண்ணால் கண்டதில்லை என்பதுதான். காரணம் இவர் தன்னுடைய கையில் எப்பொழுதும் ஓர் உறையை அணிந்திருப்பார். இதனாலேயே இவருடைய வெற்றுக்கையை யாரும் கண்ணால் கண்டதில்லை.

இதற்குப் பின்னால் ஓர் இரகசியம் இருக்கின்றது. அது என்னவெனில், 1905 ஆம் ரஷ்யாவைச் சார்ந்த கபோன் என்பவன் பாலதீனுக்குள் புகுந்து மக்களுக்கு இடையூறு செய்வதாகக் கேள்விப்பட்ட பிஞ்சாஸ் ரூடன்பெர்க் அவனைத் தன்னுடைய ஆள்களைக் கொண்டு இழுத்துவரச் சொன்னார். பின்னர் அவர் அவனுடைய கழுத்தை நெறித்துக் கொன்றுபோட்டார். அவர் அவனைக் கொன்றபின்தான் தெரிந்தது, அவன் ஒரு நிரபராதி என்று. இதனால் அவர் தன்னுடைய கையைப் பார்த்தபொழுதெல்லாம், இந்தக் கையால்தானே நிரபராதி ஒருவரைக் கொலைசெய்தேன்" என்று குற்ற உணர்ச்சியால் பெரிதும் வருந்தினார். இதனாலேயே அவர் தன்னுடைய கையை உறையை வைத்து மறைக்கத் தொடங்கினார்.

ஆம், குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும் என்று முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள்! பாலஸ்தீன நாட்டுத் தலைவர் பிஞ்சாஸ் ரூடன்பர்க் நிரபராதி ஒருவரைக் கொன்றதால், காலமெல்லாம் குற்ற உணர்ச்சியோடு இருந்ததைப் போன்று, ஆண்டவரின் அடியவரான திருமுழுக்கு யோவானை ஏரோது மன்னன் கொன்றுபோட்டதால் குற்றவுணர்ச்சியோடு இருக்கின்றான். நற்செய்தியில் இடம்பெறும் இந்த நிகழ்வு நமக்கு என்ன செய்தியை எடுத்துச் சொல்கின்றது என்பதை இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்ட ஏரோது மன்னன்

நேற்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு தன்னுடைய பன்னிரு திருத்தூதர்களைப் பணித்தளங்களுக்கு அனுப்பினதைக் குறித்து வாசித்திருப்போம். இயேசுவால் பணித்தளங்களுக்கு அனுப்பப்பட்ட அவருடைய சீடர்கள், அவர் தங்களுக்குப் பணித்தவாறு, நற்செய்தி அறிவித்து, பேய்களை ஓட்டிப் பிணிகளைக் போக்கினார்கள். இதனால் இயேசுவின் பெயர் எங்கும் பரவத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து மக்கள் இயேசுவைக் குறித்து பலவாறாகப் பேசிக்கொள்கின்றார்கள். ஆனால் ஏரோது மன்னனோ, நான்தான் அவருடைய தலையை வெட்டச் செய்தேனே! இப்பொழுது அவர் உயிருடன் எழுப்பப் பட்டுவிட்டாரே! என்று நிம்மதி இழக்கின்றான். ஆம், ஏரோது மன்னன் செய்த தவறு அவனுடைய மனத்தை விட்டு நீங்காமல், அவனை நிம்மதி இழக்கச் செய்கின்றது.

திருமுழுக்கு யோவானைக் கொன்றுபோட்ட ஏரோது மன்னன்

மாற்கு நற்செய்தியாளர், ஏரோது மன்னன் ஏன் நிம்மதி இழந்தான் என்பதற்கான காரணத்தை மிக விரிவாக விளக்குகின்றார். ஏரோது தன் சகோதரனான பிலிப்பின் மனைவியான எரோதியாவோடு வாழ்ந்துவந்தான். இது சட்டம்படி மிகப்பெரிய குற்றம் (லேவி 18: 16). எனவே, அந்நாள்களில் ஆண்டவரின் வார்த்தையை எடுத்துரைத்து வந்த திருமுழுக்கு யோவான், ஏரோதின் தவற்றைச் சுட்டிக்காட்டுகின்றார். ஆனால், ஏரோது மன்னனோ தன்னுடைய தவற்றிலிருந்து திருந்துவதற்குப் பதில், தவற்றைச் சுட்டிக்காட்டிய திருமுழுக்கு யோவனைச் சிறையில் அடைக்கின்றான். மட்டுமல்லாமல், ஏரோதியாவின் சொல்லைக் கேட்டு அவரைக் கொன்றுபோடுகின்றான்.

உறுதியோடு ஆண்டவரின் வாக்கை எடுத்துரைத்த திருமுழுக்கு யோவான்

தவற்றினைச் சுட்டிக்காட்டியதற்காக திருமுழுக்கு யோவான் கொல்லப்பட்டாலும், அவரிடம் இருந்த மனத்துணிவு, தவறு செய்தது அரசனேயானாலும், அதனை நேருக்கு நேர் சுட்டிக்காட்டிய நெஞ்சுரம் இவையாவும் நமது சிந்தனைக்குரியவையாக இருக்கின்றது.

திருமுழுக்கு யோவானுக்கு முன்பாக இருந்த ஒரு தீமை அல்லது அநீதி போன்று நமக்கு முன்பாகவும் இருக்கலாம். அதனை நாம் கண்டும் காணாமல் இருந்துவிடாமல், திருமுழுக்கு யோவானைப் போன்று நெஞ்சுரத்தோடும் மனத்துணிவோடும் எடுத்துரைப்பது நம்முடைய கடமையாக இருக்கின்றது. ஏனென்றால் இறைவாக்கினர் எரேமியா நூலில் இவ்வாறு வாசிக்கின்றோம்: "நான் கட்டளையிடும் அனைத்தையும் அவர்களிடம் சொல். அவர்கள் முன் கலக்கமுறாதே. இல்லையேல், அவர்கள் முன் உன்னைக் கலக்கமுறச் செய்வேன்." (எரே 1:17). ஆகையால், நாம் எத்தகைய இடர்வரினும் திருமுழுக்கு யோவானைப் போன்று ஆண்டவரின் வார்த்தையைத் துணிவோடு எடுத்துரைப்பது நம்முடைய கடமை என்று உணர்ந்து செயல்படவேண்டும்.

சிந்தனை

"உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருப்பேன்" (எரே 1: 19) என்பார் ஆண்டவர். ஆகையால், நாம் திருமுழுக்கு யோவானைப் போன்று மனத்துணிவோடும் நெஞ்சுரத்தோடும் ஆண்டவரின் வார்த்தையை எடுத்துரைப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!