|
|
05
பிப்ரவரி 2020 |
|
|
பொதுக்காலம்
4 ஆம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
++பாவம் செய்தவன் நானல்லவோ? இம்மந்தை எக்குற்றம் செய்தது?
சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 24: 2,9-17
அந்நாள்களில்
தாவீது அரசர் யோவாபையும் அவரோடிருந்த படைத்தலைவர்களையும் அழைத்து,
"மக்கள் தொகை என்னவென்று நான் அறிய வேண்டும். நீங்கள் தாண் முதல்
பெயேர்செபா வரை அனைத்து இஸ்ரயேல் குலங்களிடையே சென்று வீரர்கள்
தொகையைக் கணக்கிடுங்கள்" என்றார். யோவாபு, வீரர்களின் தொகைக்
கணக்கை அரசரிடம் தந்தார். வாளை ஏந்தும் வீரர்கள் எண்ணூறு ஆயிரம்
பேர் இஸ்ரயேலிலும், ஐந்நூறு ஆயிரம் பேர் யூதாவிலும் இருந்தனர்.
வீரர்களின் தொகையைக் கணக்கெடுத்த பிறகு தாவீது மனம் வருந்தினார்.
"நான் மாபெரும் பாவம் செய்தேன்! ஆண்டவரே! உம் அடியானின் குற்றத்தை
மன்னித்தருளும்! ஏனெனில் நான் பெரும் மதியீனனாய் நடந்து
கொண்டேன்" என்று தாவீது ஆண்டவரிடம் மன்றாடினார். தாவீது
காலையில் எழுந்தார். தாவீதின் திருக்காட்சியாளராகிய இறைவாக்கினர்
காதிற்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது: "நீ சென்று இவ்வாறு
ஆண்டவர் கூறுவதாகத் தாவீதிடம் சொல்: "நான் உன்மீது மூன்று தண்டனைகளைக்
குறிப்பிடுகிறேன். நீ ஒன்றைத் தேர்ந்தெடு. அதன்படி நான்
செய்வேன்" ". காது தாவீதிடம் வந்து அவரிடம் பேசி வெளிப்படுத்தியது:
"உனது நாட்டில் ஏழு ஆண்டுகள் பஞ்சம் வரட்டுமா? உன் எதிரிகள் உன்னைப்
பின்தொடர, மூன்று மாதங்கள் நீ தப்பியோட வேண்டுமா? அல்லது உன்
நாட்டில் மூன்று நாள்கள் கொள்ளை நோய் ஏற்படலாமா? என்னை அனுப்பியவருக்கு
நான் என்ன மறுமொழி சொல்ல வேண்டும் என்று சிந்தித்து
முடிவுசெய்". "நான் மிகவும் மனவேதனையுற்றுள்ளேன். ஆண்டவரது
கையில் நாம் விழுவோம்; ஏனெனில் அவரது இரக்கம் பெரிது! மனிதரின்
கையில் விழ வேண்டாம்" என்று தாவீது கூறினார். ஆண்டவர் காலைமுதல்
குறித்த நேரம்வரை இஸ்ரயேலின் மீது கொள்ளைநோய் அனுப்பினார்.
தாண் முதல் பெயேர்செபாவரை எழுபதாயிரம் மக்கள் மாண்டனர். வானதூதர்
எருசலேமை அழிப்பதற்காக அதன்மீது தம் கையை ஓங்கினார். ஆண்டவர்
அத்தீமையைக் குறித்து மனம் வருந்தி மக்களை அழித்துக்கொண்டிருந்த
வானதூதரை நோக்கி, "போதும்! உன் கையைக் கீழே போடு" என்றார். அப்போது
ஆண்டவரின் தூதர், எபூசியன் அரவுனாவின் போரடிக்கும் களத்தருகே
இருந்தார். மக்களை அழித்துக்கொண்டிருந்த ஆண்டவரின் தூதரைத்
தாவீது கண்டபோது, அவர் ஆண்டவரை நோக்கி, "பாவம் செய்தவன் நானல்லவோ?
தீச்செயல் புரிந்தவன் நானல்லவோ? இம்மந்தை எக்குற்றம் செய்தது?
இப்போது உம் கை என்னையும் என் தந்தையின் வீட்டாரையும் வதைப்பதாக!"
என்று கூறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 32: 1-2. 5. 6. 7 (பல்லவி: 5b)
Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர்.
1எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம் மறைக்கப்பட்டதோ,
அவர் பேறுபெற்றவர்.
2ஆண்டவர் எந்த மனிதரின் தீச்செயலை எண்ணவில்லையோ, எவரது மனத்தில்
வஞ்சம் இல்லையோ, அவர் பேறுபெற்றவர். - பல்லவி
5"என் பாவத்தை உம்மிடம் அறிக்கையிட்டேன்; என் தீச்செயலை நான் மறைத்ததில்லை;
ஆண்டவரிடம் என் குற்றங்களை ஒப்புக் கொள்வேன்" என்று சொன்னேன்.
நீரும் என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர். - பல்லவி
6ஆகவே, துன்ப வேளையில் உம் அன்பர் அனைவரும் உம்மை நோக்கி மன்றாடுவர்;
பெருவெள்ளம் பாய்ந்து வந்தாலும் அவர்களை அது அணுகாது. - பல்லவி
7நீரே எனக்குப் புகலிடம்; இன்னலினின்று என்னை நீர்
பாதுகாக்கின்றீர்; உம் மீட்பினால் எழும் ஆரவாரம் என்னைச்
சூழ்ந்தொலிக்கச் செய்கின்றீர். - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
(யோவா
10: 27)
அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச்
செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப்
பின்தொடர்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
++சொந்த ஊரிலும் சுற்றத்திலும் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினருக்கு
மதிப்பு உண்டு.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6:
1-6
அக்காலத்தில் இயேசு தொழுகைக்கூடத் தலைவரின் வீட்டிலிருந்து
புறப்பட்டுத் தமது சொந்த ஊருக்கு வந்தார். அவருடைய சீடரும் அவரைப்
பின்தொடர்ந்தனர். ஓய்வுநாள் வந்தபோது அவர் தொழுகைக்கூடத்தில்
கற்பிக்கத் தொடங்கினார். அதைக் கேட்ட பலர் வியப்பில் ஆழ்ந்தனர்.
அவர்கள், "இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? என்னே இவருக்கு
அருளப்பட்டுள்ள ஞானம்! என்னே இவருடைய கைகளால் ஆகும் வல்ல செயல்கள்!
இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே,
யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள்
இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா?'' என்றார்கள். இவ்வாறு
அவரை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயங்கினார்கள். இயேசு அவர்களிடம்,
"சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும்
இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்'' என்றார். அங்கே உடல் நலமற்றோர்
சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர, வேறு வல்ல செயல்
எதையும் அவரால் செய்ய இயலவில்லை. அவர்களது நம்பிக்கையின்மையைக்
கண்டு அவர் வியப்புற்றார். அவர் சுற்றிலுமுள்ள ஊர்களுக்குச்
சென்று கற்பித்து வந்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
2 சாமுவேல் 24: 2, 9-17
அழிவே ஆணவத்துக்குப் பரிசு
நிகழ்வு
சாக்ரடீசின் சீடர் ஒருவர் ஒருநாள் அவரிடம், "ஐயா! நீங்கள் உங்களிடம்
சீடராகச் சேர வருபவர்களை, அருகே உள்ள குளத்திற்கு அழைத்துச்
சென்று, அதில் என்ன தெரிகின்றது என்று ஏன் கேட்கிறீர்கள்...?
அந்த இரகசியத்தை நான் தெரிந்துகொள்ளலாமா...?" என்றார்.
உடனே சாக்ரடீஸ் அவரிடம், "இதற்கு ஒரு முக்கியமான காரணமிருக்கின்றது.
நான் என்னிடம் சீடராகச் சேர வருபவர்களை, அருகே உள்ள குளத்திற்கு
அழைத்து, "இதில் என்ன தெரிகின்றது?" என்று கேட்க, அவர்கள்,
"மீன்கள் தெரிகின்றன... உள்ளே இருக்கும் பாசிகள் தெரிகின்றன..."
என்று சொன்னால், அவர்கள் எளிய மனத்தவர்களாக இருக்கின்றார்கள்...
அதனால் அவர்களுக்கு நான் எளிதாகக் கற்றுக்கொடுக்க முடியும் என்று
அவர்களை என்னுடைய சீடராக ஏற்றுக்கொள்வேன். ஒருவேளை நான்
கேட்கின்ற கேள்விக்கு அவர்கள், தங்களுடைய முகம் தெரிகின்றது என்று
பதில் சொன்னால், அவர்களை என்னுடைய சீடர்களாக ஏற்றுக்கொள்ளமாட்டேன்.
ஏனெனில், அப்படிப்பட்டவர்கள் ஆணவத்தால் நிரம்பி வழிகின்றவர்கள்.
அப்படிப்பட்டவர்களுக்குக் கற்றுக்கொடுப்பது அவ்வளவு எளிதான செயல்
கிடையாது. அதனாலேயே அவர்களை என்னுடைய சீடராக ஏற்றுக்கொள்ள
மாட்டேன்" என்றார்.
ஆம், ஆணவம் கொண்ட ஒருவர் சீடராக மட்டுமல்ல, இறைவனின் அன்புக்கும்
உகந்தவராகவும் இருக்க முடியாது. இன்றைய முதல் வாசகம் ஆணவத்தோடு
நடந்துகொண்ட தாவீதின் மேல் கடவுள் சினம் எப்படி வருகின்றது என்பதைக்
குறித்து எடுத்துச் சொல்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம்
சிந்தித்துப் பார்ப்போம்.
வீரர்களின் தொகையை கணக்கிட்ட தாவீது அரசர்
முதல் வாசகத்தில் தாவீது அரசர் யோவாபையும் அவரோடிருந்த படைத்தலைவர்களையும்
அழைத்து, அனைத்து இஸ்ரயேலின் குலங்களிடையே சென்று, வீரர்களின்
தொகையைக் கணக்கிடுமாறு சொல்கின்றார். மக்கள் தொகையை கணக்கிடவேண்டும்
என்று மோசே கூறியிருக்கின்றார் (விப 30: 11-16; எண் 3: 40-51).
அப்படியிருக்கையில் தாவீது மக்கள் தொகையைக் கணக்கிடுமாறு சொன்னது
தவறில்லையே... இதற்கு ஏன் கடவுள் சினம்கொண்டார்? என்று நமக்குத்
தோன்றலாம். உண்மையில் தாவீது அரசர், "தான் எவ்வளவு பெரிய ஆள்..."
"தன்னுடைய படைபலம் எவ்வளவு பெரியது..." என்பதைக் காட்டுவதற்காகவே
மக்கள் தொகையை அல்லது வீரர்களின் தொகையைக் கணக்கெடுக்கின்றார்.
இது கடவுளின் பார்வையில் தீயதெனப் படுகின்றது (1 குறி 21:7).
இதனால் கடவுளின் சினம் அவர்மேல் வருகின்றது
நீதிமொழிகள் நூல் 6: 16-17 இவ்வாறு கூறுகின்றது: "ஆண்டவர்
வெறுப்பை ஆறு. ஏழாவது ஒன்றும் அவரது வெறுப்புக்கு உரியது. அவை
இறுமாப்புள்ள பார்வை, பொய்யுரைக்கும் நாவு..." இங்கு நாம் கவனிக்கவேண்டியது,
ஆண்டவர் வெறுப்பவைகளில் முதன்மையாக வரக்கூடிய இறுமாப்புதான்.
ஆம், ஆண்டவருக்கு இறுமாப்பு அல்லது ஆணவம் என்பது பிடிக்கவே
பிடிக்காத ஒன்று. இறுமாப்பினால்தான் வானதூதர்கள் சாத்தான்களாக
ஆனார்கள்; இறுமாப்பினால்தான் பாபேல் கோபுரம் ஒன்றுமில்லாமல் போனது.
தாவீது அரசர் இறுமாப்போடு செயல்பட்டார். அதனால் அவர் கடவுளின்
சினத்திற்கு உள்ளானார்.
கடவுளின் மன்னிப்பை வேண்டி நின்ற தாவீது
தாவீது வீரர்களின் தொகையைக் கணக்கிட்ட உடன், ஆண்டவருக்கு எதிராக
மிகப்பெரிய குற்றம் செய்ததாக ஆண்டவரின் மன்னிப்பை வேண்டி
நிற்கின்றார். தாவீது அரசர் ஆண்டவரின்மீது நம்பிக்கை
வைத்திருந்தால், அவர் இப்படி வீரர்களின் தொகையைக் கணக்கிட்டிருக்கமாட்டார்.
ஆண்டவர்மீது நம்பிக்கை வைக்காததினாலேயே அவர் வீரர்களின்
தொகையைக் கணக்கிடுகின்றார். இதற்காக அவர் இறைவனின் மன்னிப்புக்
கேட்கின்றார்.
தாவீது ஆண்டவரிடம் "நான் மாபெரும் பாவம் செய்தேன்" என்று ஆறுமுறை
(2 சாமு 12:13, 24: 10, 17; திபா 41:4, 51:4. 1 குறி 21:8)
குறிப்பிடுகின்றார். இது குறித்து விவிலிய அறிஞர்கள் கூறுகின்றபொழுது,
தாவீது உரியாவின் மனைவியோடு செய்த தவற்றினை விடவும், வீரர்களின்
தொகையை கணக்கிட்டதைப் பெரிய தவறாக, அதனால் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டதாகச்
சொல்வார்கள். எவ்வாறெனில், தாவீது பத்சேபாவோடு தவறு செய்ததால்,
அவர்கள் இருவருக்கும் பிறந்த குழந்தையும் அவருடைய மூன்று மகன்கள்,
ஒரு மகள், அவருடைய வைப்பாட்டிகள் மட்டுமே பாதிக்கப்பட்டார்கள்.
ஆனால், தாவீது வீரர்களின் தொகையைக் கணக்கிட்டதால் எழுபதாயிரம்
பேர் கொள்ளை நோயினால் இறக்கின்றார்கள். இதனாலேயே தாவீது வீரர்களின்
தொகையைக் கணக்கிட்டது மிகப்பெரிய குற்றமாக இருக்கின்றது.
தாவீது செய்த இத்தவற்றிற்காக ஆண்டவரிடம் மன்னிப்புக்
கேட்கின்றார். ஆண்டவரும் அவரை மன்னிக்கின்றார். இங்கு நமக்கு
ஒரு கேள்வி எழலாம். அது என்னவெனில், தாவீது செய்த குற்றத்திற்காக
மக்கள் ஏன் கொல்லப்படவேண்டும் என்பதுதான் அந்தக் கேள்வி. இங்கு
கொல்லப்பட்ட அல்லது கொள்ளைநோயில் இறந்து போன எழுபதாயிரம்
பேரும் அப்சலோமோடு சேர்ந்துகொண்டு தாவீதை எதிர்த்தவர்கள்.
தன்னால் அருள்பொழிவு செய்யப்பட்டவர்களை எதிர்ப்பவர்களை கடவுள்
சும்மா விட்டுவிடுவாரா என்ன...? விடமாட்டார்தானே...? தன்னால்
அருள்பொழிவு செய்ய தாவீதை அந்த எழுபதாயிரம் பெரும்
எதிர்த்தார்கள். அதனால் இறந்துபோனார்கள். ஆண்டவர் தவறு
செய்கின்றவர்களை மன்னிக்கின்றவர்தான் (1 யோவா 1:9). ஆனால்,
தவற்றுக்கான தண்டனையை அவர் தராமல் போகார்.
ஆகையால், நாம் தாவீதைப் போன்று இறுமாப்போடு செயல்படாமல்,
மக்களைப் போன்று ஆண்டவரின் அடியார்களை எதிர்க்காமல் இருக்கக்
கற்றுக்கொள்வோம்.
சிந்தனை
"நன்மையை நாடுங்கள்; தீயைத் தேடாதீர்கள்" (ஆமோ 5: 14) என்பார்
இறைவாக்கினர் ஆமோஸ். ஆகையால், நாம் நம்மிடம் இருக்கும்
இறுமாப்பு, ஆண்டவரின் அடியாரோடு ஒத்துழையாமை ஆகியவற்றை
நம்மிடமிருந்து அகற்றி, நம்மை செய்யக் கற்றுக் கொள்வோம்.
அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மாற்கு 6: 1-6
புறக்கணிப்புகளைக் கடந்து முன்னுக்கு வருவோம்
நிகழ்வு
மேலை நாட்டில் ஒரு நாடக ஆசிரியர் இருந்தார். அவர் பல நல்ல
நாடகங்களை எழுதினார்; ஆனாலும் ஏனோ அவர் எழுதிய நாடகங்களைப்
பதிப்பிக்க எந்தவொரு பதிப்பகத்தாரும் முன் வரவில்லை. இதனால்
சாப்பிட்டிற்கே மிகவும் கஷ்டப்பட்ட அந்த நாடக ஆசிரியர்
மனமுடைந்து போய், தான் எழுதிய நாடகங்களை எல்லாம் ஒரு
மூட்டையில் வைத்துக் கட்டி, அதை ஒரு மளிகைக் கடைக்காரரிடம்
எடைக்கு எடை விற்றுவிட்டார். மளிகைக் கடைகாரரும் அவர் விற்ற
ஏட்டிலிருந்து ஒவ்வொரு பக்கமாகக் கிழித்து பொட்டலம் போடத்
தொடங்கினார்.
இதற்கிடையில் ஒருநாள் மளிகைக் கடைகாரர் அந்த ஏட்டிலிருந்து ஒரு
பக்கத்தைக் கிழித்துப் பொட்டலம் போடும்பொழுது, அதில்
எழுதப்பட்டிருந்ததைத் தற்செயலாக வாசிக்க நேர்ந்தது.
அப்பொழுதுதான் அவருக்குத் தெரிந்தது, இத்தனை நாள்களும் தான்
பொட்டலம் போடுவதற்குப் பயன்படுத்தியது, சாதாரண ஏடு கிடையாது;
அற்புதமான நாடகங்கள் அடங்கியிருக்கின்ற ஏடு என்று. உடனே அவர்
மிஞ்சிய ஏடுகளைச் சேகரித்துக் கொண்டு, ஒரு நல்ல
பதிப்பகத்தாரிடம் கொண்டுசென்று, அவற்றைப் பதிப்பிக்குமாறு
சிபாரிசு செய்தார். பதிப்பத்தாரும் அந்த ஏடுகளைப் படித்துப்
பார்த்துவிட்டு, "இவற்றைக் கட்டாயம் பதிப்பிக்கவேண்டும்" என்று
ஏடுகளில் இருந்த நாடகங்களை எல்லாம் பதிபித்தார்.
இதனால் அந்த நாடக ஆசிரியருக்குப் பெயரும் புகழும் செல்வமும்
கிடைத்தன. இப்படி மக்களால் தொடக்கத்தில் புறக்கணிக்கப்பட்டு,
பின்னாளில் மிகப்பெரிய நாடக ஆசிரியராக விளங்கியவர் வேறு
யாருமல்ல, இப்சன் என்பவரே ஆவார்.
நாடக ஆசிரியர் இப்சனைப் போன்றுதான் இன்றைக்கு எத்தனையோ
கலைஞர்கள், திறமைசாலிகள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றார்கள்.
இவர்கள் அனைவரும் எல்லாம் கைகூடி வருகின்றபொழுது, பேரும்
புகழும் பெறுவார்கள் என்பது உறுதி இன்றைய நற்செய்தி வாசகத்தில்
ஆண்டவர் இயேசு தன்னுடைய சொந்த ஊர் மக்களால்
புறக்கணிக்கப்படுவதைக் குறித்து வாசிக்கின்றோம். இயேசு தம்
சொந்த ஊரில் புறக்கணிக்கப்படுவது நமக்கு என்ன செய்தியை
எடுத்துச் சொல்கின்றது என்பதைக் குறித்து இப்பொழுது நாம்
சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசுவின் வெளியடையாளங்களைப் வைத்து மதிப்பிட்ட அவருடைய சொந்த
ஊர்மக்கள்
இயேசு கப்பர்நாகுமிலிருந்து தன் சொந்த ஊராகிய நாசரேத்துக்கு
வருகின்றார். அங்கு அவர் வழக்கம்போல் தொழுகைக் கூடத்திற்குச்
சென்று கற்பிக்கத் தொடங்கினார். இயேசுவின் போதனையைக் கேட்டு
வியப்பில் ஆழ்ந்த மக்கள் சிறிதுநேரத்திலேயே, "இவர் தச்சர்
அல்லவா! இவருடைய தாய் மரியா தானே!" என்று அவரை ஏற்றுக்கொள்ளத்
தயங்குகின்றார்கள்.
இயேசுவை அவருடைய சொந்த ஊர் மக்கள் புறக்கணித்ததற்கு மிக
முக்கியமான காரணம், அவருடைய வெளித்தோற்றம் மற்றும் அவருடைய
அருகாமையே என்று சொல்லலாம்.. மக்கள் இயேசுவை ஒரு சாதாரண
மனிதராக, மரியின் மைந்தராக, தங்களோடு பழகியவராகவே
பார்த்தார்கள். அதனால் அவர்கள் புலன்களுக்கு அப்பால் இருந்த
உண்மைகளைக் காணத் தவறியவர்களாகவும் அவரை இறைமகன் என
ஏற்றுக்கொள்ளத் தவறியவர்களாகவும் ஆனார்கள். இதனால் இயேசுவுக்கு
எந்தவோர் இழப்பும் ஏற்பட்டதா என்றால் நிச்சயமாக இல்லை
என்றுதான் சொல்லவேண்டும். ஆனால், மக்களுக்கு மிகப்பெரிய இழப்பு
ஏற்பட்டது. அது எப்படிப்பட்ட இழப்பு என்பதைத் தொடந்து நாம்
சிந்தித்துப் பார்ப்போம்.
நம்பிக்கையின்மையால் நலம்பெறாமை
இயேசுவின் சொந்த மக்கள் அவர்மீது நம்பிக்கை கொள்ளாமல், அவரை
ஏற்றுக்கொள்ளாமல் இருந்ததைக் கண்டு இயேசு வியப்புறுகின்றார்.
இதற்கு முந்தைய பகுதியில் (மாற் 5: 21-43) தொழுகைக்கூடத்
தலைவரான யாயிரும் பன்னிரு ஆண்டுகளாக இரத்தப்போக்கினால்
பாதிக்கப்பட்ட பெண்மணியும் இயேசுவின் மீது அசைக்க முடியாத
நம்பிக்கை கொண்டு இயேசுவிடமிருந்து ஆசியைப் பெறுவார்கள்.
ஆனால், இங்கு இயேசுவின் சொந்த ஊர்மக்கள் அவரிடம் நம்பிக்கை
கொள்ளாமல் இருக்கின்றார்கள். இதனால் இயேசு அங்கு உடல்நலமற்றோர்
சிலர்மேல் கைகளை வைத்து நலமாக்குவதைத் தவிர, வேறு வல்ல செயல்
எதையும் செய்ய இயலவில்லை என்று வாசிக்கின்றோம். ஆம், மக்களுடைய
நம்பிக்கையில்லாத தன்மை, அவரை வல்ல செயலைச் செய்யவிடாமல்
செய்துவிடுகின்றது.
அப்படியானால் நாம் இயேசுவிடமிருந்து நன்மைகளைப் பெற அவர்மீது
நம்பிக்கை கொண்டு வாழ்வது மிகவும் இன்றியமையாத ஒன்றாக
இருக்கின்றது. நாம் இயேசுவின்மீது நம்பிக்கை
கொண்டிருக்கின்றோமா? அல்லது அவருடைய சொந்த ஊர் மக்களைப் போன்று
அவரை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
"கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்திற்கு மூலைக்கல்
ஆயிற்று" (திபா 118: 22) என்கிறது இறைவார்த்தை. ஆகையால், நாம்
இயேசுவைப் போன்று மக்களால் புறக்கணிக்கப்பட்டாலும்,
மனம்தளர்ந்துவிடாமல், தொடர்ந்து முன்னேறிச் செல்வோம்.
அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|